'என்ன சொல்ற குமரன்? பைய பையன்னா என்ன அருத்தம்?'
'அதுவா? மெதுவா மெதுவான்னு சொன்னேன்.'
'அப்படி சொல்லு. அப்படி சொல்லியிருந்தா தெளிவா புரியும்ல. உங்க ஊரு பேச்சுவழக்கா அது?'
'அப்பிடியும் சொல்லலாம். எங்க ஊருல மட்டும் இல்லை. தெக்கால எல்லா ஊருலயும் அப்படி சொல்லுவாய்ங்க.'
'இப்படி வட்டார மொழியில பேசுனா எனக்கெல்லாம் புரியறதில்லை.'
'இது வட்டார மொழின்னு சொல்ல முடியாது கண்ணா. உனக்குத் தெரியலைன்னு சொல்லு. இது சங்ககாலத்துல இருந்து இருக்கிறத் தமிழ்ச் சொல் தான்.'
'இதான கூடாது. நானும் பொறந்ததுல இருந்து தமிழ்நாட்டுல தான் இருக்கேன். தமிழ்ச் சொல்ன்னா நான் கேள்விபடாமலா இருப்பேன்? நீ வீட்டுலயே தமிழ் பேசறதில்லை. நீ எல்லாம் எனக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்க வந்துட்ட.'
'யப்பா. அந்த விவகாரத்துக்கே போவேணாம். வீட்டுல வேற மொழி பேசினாலும் எனக்குத் தமிழ் தெரியுமா தெரியாதாங்கற ஆராய்ச்சியெல்லாம் அப்புறம் செஞ்சுக்கலாம். 'பைய'ங்கற சொல் பழைய தமிழ்ச்சொல்ங்கறத மட்டும் சொல்லிக்கிறேன்.'
'சரி. சொல்லேன் கேட்டுக்கறேன்.'
'குறுந்தொகைன்னு ஒரு பழைய சங்ககால இலக்கியம் இருக்கு. இதுல ஒவ்வொரு திணையிலையும் ஒரு தொடர் பாடலா பாடியிருக்காங்க. அதுல பாலைத்திணையில பாலைக்கலி பாடிய பெருங்கொடுங்கோன்ங்கறவர் சொல்றதக் கேளு
செவ்விய தீவிய சொல்லி அவற்றொடு
பைய முயங்கிய அஞ்ஞான்று...
நல்லதும் தீயதும் சொல்லி அவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டே மெதுவாக, இளைப்பாறுதலாக, மென்மையாக அணைத்து மகிழ்ந்திருந்த அந்தப் பொழுதில்...'
'ம்ம்ம். நல்லா தான் சொல்லியிருக்காரு. பைய முயங்கியன்னா மென்மையா அணைத்துன்னு பொருளா? அருமை. அருமை.'
'ஆமாம் கண்ணா. பையங்கற சொல் அருமையாத் தான் தென்படுது. சிறப்பான சொல். பார்ப்பதற்கும் அரிய சொல்.'
'ஒரே ஒரு எடுத்துக்காட்டு சொன்னா போதுமா? இன்னும் ரெண்டு மூனு எடுத்துவுடு.'
'சரி. ஒவ்வொன்னா சொல்றேன் கேளு.
அசையியற்கு உண்டு ஆண்டோர் எ ஏர் யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.
யாரு இவ்வளவு அழகா பாடியிருப்பாரு சொல்லு? நம்ம ஐயன் தான். இன்பத்துப்பால்ல குறிப்பறிதல் அதிகாரத்துல வரும். பொருளை நம்ம திருக்குறள் வாத்தியார் மயிலை மன்னாருக்கிட்ட கேட்டுக்கிட்டு எஸ்.கே. வந்து சொல்றேன்னு சொல்லியிருக்காரு.'
'மயிலை மன்னாரா? படா குஜாலான பேர்வழியாச்சே அவரு.'
'கண்ணா. இப்ப நீ பேசின பாரு. அது தான் வட்டார வழக்கு. நான் சொன்னதை வட்டார வழக்குன்னு சொல்லிட்டு நீயே வட்டார மொழியில பேசறியே?'
'ஹிஹி. மயிலை மன்னாருன்னவுடனே அந்த பாசை தானா வந்துருதுப்பா. என்ன பண்றது?'.
'சரி. சரி. அடுத்த எடுத்துக்காட்டுக்கு போவோம். எனக்கு நேரமாவுது.
நாம படிச்சோமே கிருஷ்ணன்கோவில்; அது பக்கத்துல இருக்கிற வில்லிபுத்தூருல பொறந்த நம்ம அக்கா கோதை சொன்னது தான் உனக்கும் தெரியுமே.
பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி
இதுக்குப் பொருளை இராகவன் பதிவுல போயி பாத்துக்க வேண்டியது தான்.
அடுத்து நம்ம பேயாழ்வார் சொல்லுறதைக் கேளு.
பாலனாய் ஆலிலைமேல் பைய உலகெல்லாம்
மேலொரு நாள் உண்டவனே மெய்ம்மையே - மாலவ
மந்திரத்தால் மாநீர்க் கடல் கடைந்து வான் அமுதம்
அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ அன்று.
வெண்பா தான். பதம் பிரிச்சுப் போட்டதால இலக்கணம் சரியில்லாதது போல நம்ம கொத்தனாருக்குத் தோணலாம்.'
'நீ பதம் பிரிச்சுச் சொன்னதுனால பாதி புரிஞ்சிப் போச்சு. இன்னொரு தடவை நிறுத்தி நிதானமா சொன்னேன்னு வையி. முழுசாப் புரிஞ்சிரும்'.
'சரி. இன்னொரு தடவை சொல்றேன். பொருள் என்னன்னு சொல்லு.
பாலனாய் ஆலிலைமேல் பைய உலகெல்லாம்
மேலொரு நாள் உண்டவனே மெய்ம்மையே - மாலவ
மந்திரத்தால் மாநீர்க் கடல் கடைந்து வான் அமுதம்
அந்தரத்தார்க்கு ஈந்தாய் நீ அன்று.'
'பொருள் சொல்றேன் கேட்டுக்க.
சின்னப் பையனைப் போல ஆலமரத்து இலையில மெதுவா, இளைப்பாறுதலா, தூங்கிக்கிட்டே உலகமெல்லாம் அன்னைக்கி ஒரு நாள் உண்டவனே! உண்மையானவனே! மகாலக்ஷ்மியோட புருஷனே! மந்தர மலையை மத்தா வச்சுக்கிட்டு பாற்கடலைக் கடைஞ்சு வான் அமுதத்தை தேவர்களுக்கு அன்று நீ தந்தாய். பொருள் சரியா இருக்கா?'
'கண்ணபிரான் சொன்னா சரியா இல்லாம எப்படி? பாலன்னா சின்ன பையன் தான். ஆனா இங்கே குழந்தைன்னு சொன்னா பொருந்தி வரும். மத்தபடி கலக்கலா பொருள் சொல்லிட்ட'
'சரி. அடுத்த எடுத்துக்காட்டு எங்கே?'
'இதோ இன்னொரு பாசுரம். இது நம்ம திருட்டுப்பயலே ஆழ்வார் பாடுனது'.
'திருட்டுப் பயலே ஆழ்வாரா? யாருப்பா அது?'
'நம்மை திருமங்கையாழ்வார் தான்'.
'ஓ. அவரா? அவர் திருட்டுப்பயலே தான். பாசுரத்தைச் சொல்லு'
'கண்ணும் சுழன்று பீளையோடு ஈளை வந்து ஏங்கினால்
பண்ணின் மொழியார் பைய நடமின் என்னாத முன்
விண்ணும் மலையும் வேதமும் வேள்வியும் ஆயினான்
நண்ணும் நறையூர் நாம் தொழுதும் எழு நெஞ்சமே'.
'நில்லு நில்லு நில்லு. இந்தப் பாசுரத்தையும் பதம் பிரிச்சுத் தானே சொன்ன?'
'ஆமாம்'.
'ஆனா எனக்குப் புரியலையே'.
'எப்படி புரியும்? புரியாதுல்ல. நாம எப்பவும் பேசிக்கிட்டு இருப்போமே அதைப் பத்தி தான் ஆழ்வாரும் சொல்றார். நான் சொல்றதுக்கு சாதகமா அவர் சொல்றதால உனக்குப் புரிய மாட்டேங்குது.'
'அப்படியா? அப்படி என்ன சொல்றாரு ஆழ்வார்?'
'சாமியைச் சின்ன வயசுல இருந்தே கும்புட்டுக்கோங்க. வயசான பின்னாடி உடல் உபத்திரவம் தாங்க முடியாம சாமி கும்புட முடியாதுன்னு சொல்றாரு'.
'அதானா? கடைசி காலத்துல சாமியைக் கும்புட்டுக்கலாம். இப்ப எதுக்குன்னு நான் கேட்டுக்கிட்டு இருப்பேனே. அதைச் சொல்றியா?'
'ஆமாம். ஆழ்வார் என்ன சொல்றார் பாத்தியா?
கண் பார்வையும் கெட்டுப் போயி, கண்ணுல பீளை, வாயில நுரை எல்லாம் தள்ளி கஷ்டப்படறப்ப, பேசுறாங்களா பாடுறாங்களான்னு தெரியாத அளவுல இனிமையான குரல் கொண்ட சின்னப் பொண்ணுங்க, தாத்தா மெதுவா நடங்கன்னு சொல்றதுக்கு முன்னாடி, இந்த ஆகாயம், மலை, வேதம், வேள்வின்னு எல்லாமே ஆன பெருமாள் இருக்கும் திருநறையூர் சென்று அவனைக் கும்புடலாம். எழுந்து வா என் நெஞ்சமேங்கறார்'.
'நல்ல பாட்டு தான்பூ. இன்னிக்கே நானும் கோவிலுக்குப் போவேன் போலிருக்கே.'
'கோவிலுக்குத் தான் போகணும்ன்னு இல்லை கண்ணன். இங்கன இருந்தே சாமி கும்புடலாம்'.
'ஆமாமா.'
'அம்புட்டுத் தான் எடுத்துக்காட்டுகள் எல்லாம்'.
'நல்ல எடுத்துக்காட்டுகள்.
அப்புறம்... தொடக்கத்துல திணைன்னு ஒன்னு சொன்னீயே. அப்படின்னா என்ன?'
'அதுவா? அது வந்து... எனக்கு ஓரளவு தெரியும். ஆனா தெளிவா தெரியாது. கொஞ்சம் இரு. இராம.கி ஐயாகிட்ட போயி கேட்டுக்கிட்டு வந்து சொல்றேன்'.
'அப்படி சொல்லு. என்னமோ பெரிய தமிழ் அறிவாளி மாதிரி பேசுன? அப்பப்ப இப்படி தட்டி வச்சாத் தான் சரிப்படும்'.
'ஹிஹி'.
இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் 14 பிப்ரவரி 2007 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
ReplyDelete44 கருத்துக்கள்:
ஜோ / Joe said...
குமரன்,
அருமையான பதிவு!
எங்கள் ஊரில் 'பைய' என்பது மிகச் சாதாரணமாக புழங்கும் வார்த்தை .
February 14, 2007 10:06 AM
--
இலவசக்கொத்தனார் said...
புரியுமோ புரியாதோன்னு பைய பதுங்கி வந்தா நம்மூர் பாசயத்தான் பேசி இருக்கீக. நம்மளை வேற நடுவுல வம்புக்கிழுத்து இருக்கீக!
நல்லா இருங்கடே!
February 14, 2007 10:10 AM
--
குறும்பன் said...
" மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு ..." அப்படிங்கறத "பைய பைய ஒரு காதல் பாட்டு" அப்படின்னு பாடியிருந்தா பொருள் புரிந்து இருக்கும் :-)) தைய தையன்னு பாட்டு எழுதரப்போ பைய பையன்னு தூய தமிழில் எழுதலாம்.
எங்கப்பக்கம் "பைய" என்ற சொல் புழக்கத்தில் இல்லை, வணிகம் பொருட்டு மதுரை, நெல்லை பக்கம் சென்று வரும் எனது சொந்தக்காரர் ஒரு முறை "பைய போ" என்று சொன்னதும் நான் விழித்ததும் இப்போ நினைவுக்கு வருது.
February 14, 2007 10:17 AM
--
SK said...
படிச்சிட்டு 'பைய' போயிறலாம்னு பார்த்தா என்னையுமில்லை இழுத்துட்டீங்க ஆட்டையில !
'பைய' அப்பிடியே மயிலை மன்னாரையும் சேர்த்து!
மன்னாரிடம் நீங்க சொன்ன குறளுக்குப் பொருள் கேட்டேன்.
அவன் சொன்னது இதுதான்!
"இப்ப ஒரு பையனும்,பொண்ணும் காதலிக்கறாங்க!
அவ கோயிலுக்கு போற டயமாப் பார்த்து இவனும் அங்கே நடையை வுடறான்.
கோயில்லியா ஒரே கூட்டம்.
இவனும் லுக்கு மேல லுக்கா வுடறான்.
அது இவனை பாத்த மாரியே காட்டிக்கலை!
கூட அதோட அப்பா அம்மா வேற!
இவனா, சாயந்தரம் மீட் பண்ற டயத்துக்கு அது கரீட்டா வந்துருமான்னு அதுகிட்ட தெரிஞ்சுக்கணும்னு துடிக்கறான்.
டக்குன்னு அது தலையை நிமிந்து இவனைப் பாக்குது!
இம்மா நேரமும் அவன் இருக்கறது தெரிஞ்சும் தெர்யாத மாரி ஒரு பாவ்லா காட்டிக்கினு இருந்திருக்கு!
இவன் அது தன்னைப் பாக்காதான்னுதானே காத்துக்கினு இருக்கான்!
ஒடனே 'இன்னா வருவியா?'ன்ற மாரி ஒரு புருவத்தை ஒசத்துறான்.
அது இவனைப் பாத்து பைய..... அதாம்ப்பா....மெல்லிசா ஒரு சிரிப்பு சிரிக்குது!
அது போறும் இவனுக்கு!
ஆயிரம் அர்த்தம் புரியுது இவனுக்கு அந்த ஒத்தை சிரிப்புல!
இதைத்தான் ஐயன் இந்தக் குறள்ல அளகாச் சொல்லியிருக்காரு.
இத்தையே என்னோட "காதலர் தினப் பரிசா" நம்ம மதுரைத் தம்பி மூலமா அல்லாருக்கும் சொல்லிடு!"
எனச் சொல்லிவிட்டு மன்னார் பைய நடையைக் கட்டிவிட்டான்!
February 14, 2007 10:51 AM
--
நாமக்கல் சிபி said...
குமரன்,
இந்த "பைய பைய" என்ற சொல் தொடர்பாக ஒரு நகைச்சுவையான சம்பவம் ஒன்றைச் சொல்வார்கள்.
இது போல் தென் மாவட்டம் ஒன்றிலிருந்து வந்திருந்த பயணி ஒருவர் சென்னை பேருந்தில் பயணச்சீட்டு பெற நடத்துனரிடம் பணத்தைக் கொடுக்கிறார். பயணச்சீடைக் கொடுத்த நடத்துனர் "சில்லறை இல்லை, அப்புறம் தருகிறேன்" என்று சொல்ல பயணியும் அதை ஒப்புக் கொள்ளும் விதமாக "அதனாலென்ன பைய கொடுங்க" என்று கூறுகிறார்.
உடனே நடத்துனரோ "நான் சொல்றேனில்ல சில்லறை இல்லைன்னு, நம்பிக்கை இல்லாம பைய குடுக்கச் சொன்னா எப்படி?" ன்னு கேக்குறார்.
February 14, 2007 10:53 AM
--
பாலராஜன்கீதா said...
"பையவே சென்று பாண்டியனைப் பற்றுக" என்றுகூட ஒரு வரி நினைவிற்கு வருகிறது. (தேவாரமா திருவாசகமா ?)
February 14, 2007 11:00 AM
--
Vajra said...
தமிழ்மணத்தை விட்டு bye bye ன்னு போனீங்க.
பைய பைய வந்துட்டீங்க. (இல்ல மொதவே வந்துட்டீங்களா, எனக்குத் தான் தெரியாதா ?)
February 14, 2007 11:11 AM
---
குமரன் (Kumaran) said...
வஜ்ரா. நல்ல கேள்வி. இன்னும் தமிழ்மணத்திற்கு Bye Bye தான். Bye சொல்லிட்டுப் போறப்ப சொன்னதை திரும்பவும் இங்கே கொடுக்கிறேன்.
//
என் வலைப்பூக்களில் இருவகை இருக்கிறது. கூட்டு வலைப்பூக்கள், தனி வலைப்பூக்கள். தனி வலைப்பூக்கள் எல்லாவற்றிலும் தமிழ்மணப்பட்டையை எடுத்துவிட முடிவு செய்திருக்கிறேன். கூட்டு வலைப்பூக்களைப் பற்றி அந்த வலைப்பூ அன்பர்கள் எல்லோரிடமும் பேசி அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி செய்ய முடிவு செய்திருக்கிறேன். அதனால் சில கூட்டு வலைப்பூக்கள் தமிழ்மணத்தில் இருக்கும். அதன் மூலம் எனது சில பதிவுகளும் தமிழ்மணத்தில் தெரியலாம்.
//
அப்ப சொன்ன மாதிரி கூட்டுப் பதிவுகள் என் பெயருல தமிழ்மணத்துல வந்துக்கிட்டு தான் இருக்கும். இருக்கு. :-)
February 14, 2007 11:30 AM
--
நாமக்கல் சிபி said...
கூட்டு வலைப்பதிவுகளில் இருந்து குமரனை நாங்கள் விடுவிப்பதாக இல்லை!
February 14, 2007 11:36 AM
--
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
அன்புக் குமரா!
இந்த "பைய" எனும் சொல் ஈழத்தில் புழக்கத்தில் இதேகருத்தில் புழக்கத்தில் இருக்கிறது.
"பஞ்சியைப் பார்க்காமல் "பையப் பையப்" கடைக்குப் போயிட்டுவா?; எனும் போது மெதுவாக எனும் கருத்திலே உபயோகிப்பார்கள்.
இச் சொல் இலக்கியத்தில் இருந்திருக் கென்பது பதிவைப் படித்தே! தெரிந்தது. "பையவே சென்று பாண்டியர்க்காகவே! என்பதே! இது வரை அறிந்திருந்தேன்.
நன்றி
February 14, 2007 11:52 AM
--
இராம் said...
குமரன்,
நம்மூருலே சாதாரணமா பேசுறப்பவே 'பையவே வா' 'பையவே பார்த்து போ' ன்னு சொல்லுவாய்ங்கே.....
அந்த 'பைய' பத்தி சங்ககாலத்து பாட்டுலே எழுதி இருக்காங்களா??
அதுதானே சங்கம் வைத்து தமிழ் வளர்ந்த ஊருன்னா சும்மாவா???
:))
February 14, 2007 12:05 PM
--
இராம் said...
//அசையியற்கு உண்டு ஆண்டோர் எ ஏர் யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.
"இப்ப ஒரு பையனும்,பொண்ணும் காதலிக்கறாங்க!
அவ கோயிலுக்கு போற டயமாப் பார்த்து இவனும் அங்கே நடையை வுடறான்.
கோயில்லியா ஒரே கூட்டம்.
இவனும் லுக்கு மேல லுக்கா வுடறான்.
அது இவனை பாத்த மாரியே காட்டிக்கலை!
கூட அதோட அப்பா அம்மா வேற!
இவனா, சாயந்தரம் மீட் பண்ற டயத்துக்கு அது கரீட்டா வந்துருமான்னு அதுகிட்ட தெரிஞ்சுக்கணும்னு துடிக்கறான்.
டக்குன்னு அது தலையை நிமிந்து இவனைப் பாக்குது!
இம்மா நேரமும் அவன் இருக்கறது தெரிஞ்சும் தெர்யாத மாரி ஒரு பாவ்லா காட்டிக்கினு இருந்திருக்கு!
இவன் அது தன்னைப் பாக்காதான்னுதானே காத்துக்கினு இருக்கான்!
ஒடனே 'இன்னா வருவியா?'ன்ற மாரி ஒரு புருவத்தை ஒசத்துறான்.
அது இவனைப் பாத்து பைய..... அதாம்ப்பா....மெல்லிசா ஒரு சிரிப்பு சிரிக்குது!
அது போறும் இவனுக்கு!
ஆயிரம் அர்த்தம் புரியுது இவனுக்கு அந்த ஒத்தை சிரிப்புல!"//
மன்னாரு,
குறளை படிச்சிட்டு லேசா புரியாத மாதிரி இருந்துச்சு, அப்பிடியே பதிவே படிச்சு முடிச்சுட்டு பின்னூட்ட பகுதிக்கு வந்த ஒன்னோட விளக்கம் சூப்பரு நைனா.....
நான் சொன்னமாதிரி முக்கு டீ கடையிலே பீடிகட்டு வாங்கிட்டியா நைனா??? :)))
February 14, 2007 12:17 PM
--
ரவிசங்கர் said...
எங்க ஊர் புதுக்கோட்டை பக்கம் பைய-ங்கிறது இன்னைக்கு தினமும் புழங்குற சொல். கோவை பக்கமும் இருக்கு. இதுக்கெல்லாம் விளக்குற அளவுக்கு தமிழ் வழக்கிழந்துடுச்சான்னு நினைச்சேன். ஆனா, தமிழ்நாட்டின் சில பகுதிகள்ல இது அறியப்படாத சொல்ங்கிறதும் இலக்கியத்தில் இவ்வளவு இடத்தில் வருதுங்கிறதும் தெரியாத செய்தி. அருமையான எடுத்துக்காட்டுக்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுப் பழமை வாய்ந்த சொற்கள் இன்றும் புழங்கும்போது தமிழ் மீதான காதல் அதிகரிக்கிறது. தொடர்ந்து சொற்களை தர வாழ்த்துக்கள்
February 14, 2007 12:47 PM
--
G.Ragavan said...
எங்கூர்ப்பக்கம் இன்னமும் பையதான்.
"ஏல பையப் போல" என்று இன்றும் சொல்லக் கேட்கலாம். எனக்கும் பைய என்பது மிகப் பிடிக்கும். என்னுடைய வாயிலும் அடிக்கடி வரும் சொல்தான்.
அருட்பெருங்கோவிடம் பேசிக் கொண்டிருந்தேன். இந்த பைய பற்றிப் பேச்சு வந்தது. பேச்சுவாக்கில் நான் பைய என்று சொல்லியிருந்தேன். உடனே அவர் ஒரு கதை சொன்னார்.
பேருந்தில் மிச்சச் சில்லரையை நடத்துனரிடம் ஒருவர் கேட்டிருக்கிறார். பையத் தருகிறேன் என்று அவரும் சொல்லியிருக்கிறார். கொஞ்ச நேரம் கழித்துச் சில்லரை கேட்டவர் நடத்துனரின் பையக் கேட்டாராம். :-)))))
பைய, மெதுவா எல்லாம் இருக்கட்டும். மெல்ல மெள்ள எது சரி? மெல்ல என்றால் மெல்லுதலையும் குறிக்கலாம். மெள்ள என்று சொல்வதுதான் சரியா? இதற்கு எதுவும் இலக்கிய ஆதாரம்?
மெள்ள மெள்ள அருகில் வந்து மென்மையான கைகள் பட்டு என்று பாட்டும் உண்டே.
February 14, 2007 12:47 PM
---
குமரன் (Kumaran) said...
ஆமாம் ஜோ. எனக்குத் தான் தெரியுமே. :-)
ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க. வாங்க. வாங்க. நன்றி.
February 14, 2007 12:53 PM
--
குமரன் (Kumaran) said...
இந்த மாதிரி தான் எழுதணும்னு கட்டளை போட்டவுகளை இன்னும் காணோம். திருக்கோவிலூர்காரவுக அவுக. அவுகளும் வந்து சொன்னா நல்லா இருக்கும் கொத்ஸ்.
நீங்க இந்தப் பதிவுக்கு மட்டுமா? எல்லாப் பதிவுக்கும் இப்படித் தான் பைய பதுங்கிப் பதுங்கிப் போறீங்கன்னு சொல்றாகளே. உண்மையா?
February 14, 2007 12:55 PM
--
குமரன் (Kumaran) said...
குறும்பன்.
சரியா சொன்னீங்க. தையதைய்யதைய்யதைய்யாதைய்யான்னு ஒரு பாட்டு இருக்குல்ல?! நீங்க சொன்ன மாதிரி பையபைய்யபைய்ய்ன்னு எழுதியிருக்கலாம் தான். நீங்களோ நானோ சினிமாக்கு பாட்டெழுதினா அப்பிடியே எழுதிருவோம்.
உங்கப்பக்கம் எந்தப்பக்கம்? பைய நெறைய பேருக்கு தெரிஞ்சிருக்கும்ன்னு தான் நெனைச்சேன். உங்களுக்கும் அண்மையில தான் அறிமுகமா?
February 14, 2007 12:58 PM
--
அரவிந்தன் நீலகண்டன் said...
'பைய' பின்னாடி இவ்வளவா விசயத்தையும் போட்டு அசத்திட்டீங்க. நம்மூர்காரங்க காலர தூக்கிவிட்டுட்டு நடக்கலாம் போல.
February 14, 2007 1:01 PM
---
குமரன் (Kumaran) said...
வாங்க எஸ்.கே. அதுக்குள்ளே மயிலைக்குப் போயிட்டு வந்துட்டீங்களா? வாயுவேகம் மனோவேகம் தான் போங்க. :-)
எப்பவும் போல படிச்சுட்டுப் பைய போயிடலாம்னு பாத்தீங்களா?! அதுக்குத்தானே கொக்கி போட்டேன். நீங்கள் மரியாதையா மன்னாருக்கிட்ட கேட்டு விளக்கம் சொல்லிட்டீங்க.
மன்னாரு மன்னாரு தான். நம்மால இப்படியெல்லாம் விளக்கம் தரமுடியுமா? எல்லாம் தானா வரணும். நமக்கு மண்டையில இருக்கிறது அம்புட்டுதான்.
ரொம்ப நன்றி எஸ்.கே. ந்ம்ம நன்றியை மன்னாருக்கிட்டயும் தொலைபேசி சொல்லிடுங்க.
February 14, 2007 1:03 PM
--
குமரன் (Kumaran) said...
நல்ல நகைச்சுவை சிபி.
பாருங்க நீங்க சொன்னதையே இராகவனும் சொல்லியிருக்காரு. பின்னூட்டங்களை எல்லாம் படிக்க மாட்டாரா அவரு? :-) ஆனா என்ன அவர் நீங்க சொன்ன கதையை அப்படியே தோசையைத் திருப்பிப் போட்ட மாதிரி திருப்பிப் போட்டுட்டாரு. :-)
February 14, 2007 1:07 PM
---
குமரன் (Kumaran) said...
பாலராஜன்கீதா. நீங்க சொல்றது தேவாரம் தான். திருஞானசம்பந்தப் பெருமான் தங்கியிருந்த திருமடத்திற்கு வைத்த தீ வெப்பு நோயாக சமணர்களுடன் சேர்ந்திருந்த பாண்டியனுக்குச் சென்று அடையட்டும் என்று பாடும் பாடலில் வருவதென்று நினைக்கிறேன்.
இங்கே காட்டுன எடுத்துக்காட்டெல்லாம் கூகிளார் தந்தவை தான். தேவார எடுத்துக்காட்டுகளும் தந்தார். ஆனால் அவை எல்லாமே திஸ்கியில் இருந்ததால என்னால படிக்க முடியலை. அப்படி விட்டுப் போன எடுத்துக் காட்டை நீங்களும் யோகன் ஐயாவும் எடுத்துக் கொடுத்திட்டீங்க. நன்றி.
February 14, 2007 1:10 PM
---
குமரன் (Kumaran) said...
நன்றி யோகன் ஐயா. 'பஞ்சியைப் பார்க்காமல்' என்றால் என்ன பொருள்? எனக்குப் புரியவில்லை.
February 14, 2007 1:11 PM
---
சிவபாலன் said...
குமரன் சார்,
நல்ல பதிவு!!
February 14, 2007 1:14 PM
---
குமரன் (Kumaran) said...
ஆமாம் இராம். ரொம்ப இயல்பா நம்ம ஊருல சொல்லுவாங்க. ஆனால் இந்த சொல் தெரியாதவங்களும் இருந்தாங்க. அதான் பைய அதைப் பத்தி எழுதலாம்னு எழுதிட்டேன்.
February 14, 2007 1:14 PM
--
குமரன் (Kumaran) said...
இரவிசங்கர். நீங்க சரியாத் தான் நினைச்சிருக்கீங்க. நானும் தொடக்கத்தில் 'பைய' பத்தி எழுதுறதான்னு கொஞ்சம் தயங்கினேன். அப்புறம் கூகிளாரைக் கேட்டவுடன் எடுத்துக்காட்டுகள் அடுக்கினார். சரி எழுதுவோம்ன்னு எழுதிட்டேன். நீங்க சொன்ன மாதிரி தான் எனக்கும் தோணிச்சு.
February 14, 2007 1:15 PM
---
குமரன் (Kumaran) said...
இராகவன். நல்ல கதையை சொன்னீங்க போங்க. சிபியும் நீங்களும் ஒரே கதையை ரெண்டு மாதிரி சொல்லியிருக்கீங்க. :-)
உங்க திருப்பாவை விளக்கப் பதிவுல பைய பத்தி ரொம்ப உருகி எழுதியிருந்தது ஒரு வருடத்துக்கு முன்னாடி படிச்சது நினைவுக்கு வருது.
மெல்ல, மெள்ள எனக்கும் கொஞ்சம் குழப்பம் தான். திருப்பாவையில மெள்ளன்னு தான் கோதை சொல்லியிருக்காங்க.
http://iniyathu.blogspot.com/2005/12/blog-post_20.html
February 14, 2007 1:18 PM
--
குமரன் (Kumaran) said...
பொண்ணுங்க என்ன செய்யிறது அரவிந்தன் நீலகண்டன்? காலர் இருக்கிற சட்டை போட்ட ஆண் சிங்கங்கள் காலரைத் தூக்கிவிட்டுக்கலாம். பொண்ணுங்க? :-)
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி அரவிந்தன்.
உங்கள் அண்மைக்கால பதிவுகளை எல்லாம் படிக்கிறேன். நன்றாக இருக்கின்றன.
February 14, 2007 1:20 PM
--
குமரன் (Kumaran) said...
நன்றி சிவபாலன்.
February 14, 2007 1:21 PM
--
பத்மா அர்விந்த் said...
அருமையான விளக்கம். நன்றி எஸ்கேவிற்கும்.
February 14, 2007 3:24 PM
---
குமரன் (Kumaran) said...
நன்றி பத்மா. நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களை என் பதிவில் பார்க்கிறேன். :-)
February 14, 2007 3:44 PM
---
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
குமரா!
"பஞ்சியை பார்க்காமல்"..என்பதை;களைப்பு,சோர்வு என்று கொள்ளலாம்.
February 14, 2007 4:00 PM
---
வல்லிசிம்ஹன் said...
பைய என்பது பழகின சொல்தானே.
பயலே பையப்போ என்று யாரோ சொல்வது கேட்கிறது.
நல்ல சொல் பதிவு.
February 14, 2007 7:23 PM
---
வடுவூர் குமார் said...
"பைய பைய" ஏதோ சின்ன பதிவா இருக்கும் பார்த்தா,போட்ட பின்னூட்டங்களிலும் பல விஷயங்கள் தெரியவந்தது.
உ-ம். கன்டெக்டர் சிரிப்பு.
இதையெல்லாம் "பஞ்சியை பார்க்காமல்" படித்துமுடித்தேன்.
நான் வளர்ந்த கிராமங்களில் "பைய" வழக்கிலேயே இருந்தது.என்ன! இப்ப யாரும் அவதானிப்பதாக தெரியவில்லை.
February 14, 2007 11:07 PM
--
ramachandranusha said...
குமரன் ஆச்சரியமாய் இருக்கு, நான் பல முறை சென்னைத்தமிழில் இந்த பைய போ( ரிக்ஷாக்காரர் மொழி) கேட்டுருக்கேன். ஏதோ உருது கலப்படம்ன்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன். சென்னைவாசிகள் ஹெல்ப் ப்ளீஸ். சென்னை மொழி வித்தகர்களான நாராயண், ஐகாரஸ் பிரகாஷ், ஆசாத் எங்க இருக்கீங்க?
February 15, 2007 1:42 AM
--
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ராகவா!
மெல்லப்போ! மெல்லப்போ! மெல்லிடையாளே! மெல்லப்போ!
எனும் பாடலும் உண்டு. கவியரசர் பாடலென நினைக்கிறேன்.
February 15, 2007 3:48 AM
---
சிவமுருகன் said...
அண்ணா,
ஒரு கொசுவர்த்தி சுருள் :) (தமிழ்ல்ல ப்ளாஷ் பேக்)
ஒரு தடவை நான் இரண்டாவது படிக்கும் போது நாங்கள் எல்லாம் சற்று சத்தமாக ஒரே குரலாக ஒரு வரலாற்று கேள்வியின் பதிலை மனப்பாடம் செய்து கொண்டிருந்தோம், ஆசிரியைக்கு சற்று தமாஷ் குணம் அதிகம். அடுத்த வகுப்பிலிருந்து ஒரு மாணவி வந்து "மிஸ் கொஞ்சம் பைய சொல்லச்சொல்லி பவாணி மிஸ் சொல்ல சொன்னாங்க" என்று சொல்ல, ஒரு கணம் திரும்பி பார்த்த நம்ம ப்ரேமா மிஸ்ஸோ (வரலாறு ஆசிரியை) இங்க பையங்க யாருமில்லைனு போய் சொல்லுனு சொன்னாங்க, நம்ம கிளாஸே சிரிக்க அவளும் பயந்து பயந்து அவரிடம் போய் மிஸ் மிஸ் அங்க பையங்களே இல்லை மிஸ் சொல்ல சொன்னாங்க மிஸ் என்று உளறி வைக்க அவரும் ஏதோ உளறினாளோ என்று சத்தம் போட்டு உட்காரவைக்க எல்லா ஆரவாரம் அடங்க அரை மணி நேரமானது.
பிறகு அதை பற்றிய பேச்சுக்கள் குறைய ஒரு வாரம் வரையானது. இவையெல்லாம் மனதை விட்டு நீங்காத நினைவுகள். அசைபோட வைத்தமைக்கு மிக்க நன்றி.
February 15, 2007 4:16 AM
--
குமரன் (Kumaran) said...
சொன்ன முறையை வைத்து அந்தப் பொருளைத் தான் எடுத்துக் கொண்டேன் யோகன் ஐயா. தெளிவு படுத்தியதற்கு நன்றி.
February 15, 2007 8:35 AM
--
குமரன் (Kumaran) said...
நன்றி வல்லியம்மா. பலருக்கும் பழகிய சொல் தான்.
February 15, 2007 8:36 AM
--
குமரன் (Kumaran) said...
வடுவூர் குமார். பஞ்சியைப் பார்க்காமல் பைய பைய முழுப் பதிவையும் பின்னூட்டங்களைப் படித்ததற்கு நன்றி. :-)
அவதானித்தல் என்றால் கவனித்தல். புழங்குதல் என்றால் பயன்படுத்துதல். நீங்கள் இப்ப யாரும் புழங்குவதாகத் தெரியவில்லை என்று சொல்ல நினைத்தீர்களா?
February 15, 2007 8:39 AM
--
குமரன் (Kumaran) said...
உஷா. சென்னைப்பக்கம் உள்ளவர்களுக்குத் தான் இந்த சொல் தெரியாமல் இருந்தது/இருக்கிறது. உங்கள் ரிக்சாக்காரர் தென் மாவட்டங்களில் இருந்து வந்திருப்பாரோ?
தமிழக வாழ்க்கை எப்படி இருக்கிறது?
February 15, 2007 8:41 AM
--
குமரன் (Kumaran) said...
இராகவன்/யோகன் ஐயா. நான் தேடிப்பார்த்ததில் இலக்கியங்களில் மெல்ல, மெள்ள இரண்டுமே இருக்கின்றன. கருப்பு, கறுப்பு போன்றது போலும் இது. சொல்லறிஞர்களிடம் கேட்க வேண்டும். இல்லையேல் நாமே இன்னும் கொஞ்சம் ஆராய்ச்சி செய்ய வேண்டும். கட்டாயம் யாராவது இதனைப் பற்றி ஏற்கனவே சிந்தித்து எழுதியிருப்பார்கள். தேடிப்பார்க்கலாம்.
February 15, 2007 8:44 AM
--
இலவசக்கொத்தனார் said...
//அவதானித்தல் என்றால் கவனித்தல். புழங்குதல் என்றால் பயன்படுத்துதல்.//
அவர் பாவிப்பது எனச் சொல்ல வந்திருப்பார் என நினைக்கிறேன்.
February 15, 2007 8:58 AM
--
திரு said...
குமரன்,
"பைய தின்னா பனையையும் தின்னலாம்" எங்கூரு மொழி வழக்கு.
:))
February 21, 2007 3:58 PM
--
குமரன் (Kumaran) said...
திரு,
குந்தித் தின்றால் குன்றும் மாளும் என்பார்களே அது போல் இருக்கிறது நீங்கள் சொன்னது. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. :-)
February 21, 2007 5:29 PM
நீங்க வெரசா வெரசா எழுதுறீக; நான் பைய பைய படிக்கிறேன்... :)
ReplyDeleteநீங்களா பைய பைய படிக்கிறீங்க? நீங்க எவ்வளவோ வெரசா படிச்சுப் பின்னூட்டம் போட்டுர்றீங்க. நான் தான் பைய வந்து பதில் சொல்றேன். :-)
ReplyDeleteவலப்பக்கம் பாசுர விளக்கங்கள் இருக்கின்றன. படிக்கிறீர்களா அக்கா?
//வலப்பக்கம் பாசுர விளக்கங்கள் இருக்கின்றன. படிக்கிறீர்களா அக்கா?//
ReplyDeleteம்.. படிக்கிறேனே, பைய பைய... :))
நன்றி அக்கா. இப்போது இட்டிருக்கும் பாசுரத்திலும் பைய இருக்கிறது பார்த்தீர்களா? :-)
ReplyDelete'நபர்', 'வேடிக்கை', 'வாடிக்கை', 'நடவடிக்கை' - இவை எல்லாம் தமிழ்ச் சொற்களா? -
ReplyDeleteகுமரனாரே !
தாம் தங்கியிருந்த திருமடத்திற்குச் சமணர்கள் நெருப்பிடவே
ஞான சம்பந்தப்பெருமான் தன்னாட்டில் பஞ்ச மாபாதகங்களுக்கு
இடமளித்த பாண்டிய மன்னனை ஒறுக்கும் பொருட்டு "பையவே சென்று பாண்டியர்க்காகவே" என்று பாட, அத்தீ சூலை நோயாக மாறிப் பாண்டியனைப் பற்றியது.
'பைய' எனும் சொல் தென் மாவட்டங்களில் இன்றும் வழக்கில் உள்ளது.
'நபர்', 'வேடிக்கை', 'வாடிக்கை', 'நடவடிக்கை' - இவை எல்லாம் தமிழ்ச் சொற்களா? -
ReplyDeleteகுமரனாரே !
தாம் தங்கியிருந்த திருமடத்திற்குச் சமணர்கள் நெருப்பிடவே
ஞான சம்பந்தப்பெருமான் தன்னாட்டில் பஞ்ச மாபாதகங்களுக்கு
இடமளித்த பாண்டிய மன்னனை ஒறுக்கும் பொருட்டு "பையவே சென்று பாண்டியர்க்காகவே" என்று பாட, அத்தீ சூலை நோயாக மாறிப் பாண்டியனைப் பற்றியது.
'பைய' எனும் சொல் தென் மாவட்டங்களில் இன்றும் வழக்கில் உள்ளது.
வேடிக்கை, வாடிக்கை, நடவடிக்கை இவை தமிழ் தான் தேவராஜரே. நபரும் அப்படித் தான் என்று நினைக்கிறேன். ஆனால் உறுதியாகத் தெரியவில்லை.
ReplyDeleteசம்பந்தப் பெருமானின் பதிகத்தில் வரும் 'பைய' நினைவில் இருக்கிறது ஐயா. நன்றிகள்.