மதியம் சாப்பிட்டு விட்டு திண்ணையில் உட்கார்ந்து டொண்டக்க டொண்டக்க என்று கொட்டடித்துக் கொண்டிருந்தார் கவுண்டமணி. அந்தப் பக்கமாக அவசரமாக ஓடி வந்த செந்திலை நிறுத்தினார்.
"டேய் நாதஸ். எங்கடா வேகாத வெயில்ல வெந்த வெந்தயமா ஓடுற? இங்க வந்து நான் நலந்தானா வாசிக்கிறதக் கேளுடா...."
படக்கென நின்று மூச்சு விட்டபடியே பேசுகிறார் செந்தில். "அண்ணே, முக்கியமான வேலையாப் போறேன். தடுக்காதீங்கண்ணே!"
"(சத்தமாக) ஆமா.....இவரு புருனே சுல்தானு. தங்கத்தக் கொட்டி வெக்க எடமில்லாம தேனிக்குப் பக்கத்துல இருவது ஏக்கரா நெலம் வாங்கப் போறாரு. நில்றா....கிட்டக்க வா மகனே மொதல்ல."
பக்கத்தில் போகிறார். "வந்துட்ட்ட்டெண்ணே"
"(மெதுவாக) ஆமா..இவரு பெரிய அப்துல் கலாம். வந்ததும் வரவேற்கனுமாக்கும். (சாதாரணமாக) இப்பிடி வேர்க்க விறுவிறுக்க எங்க ஓடுற?"
தபதபவென இன்னும் மூச்சு வாங்கிக் கொண்டே..."அது வந்துண்ணே...அருணா....கொடி..."
"என்னதுதுதுதுதுது! அருணாவா? யாரு வெள்ளாவிக்குத் துணியெடுக்க வருவாளே அந்தக் கொடியிடை அருணாவா?" கவுண்டரின் பேச்சிலும் முகத்திலும் மலர்ச்சி தெரிகிறது.
"ஐயோ...ஏந்தா இப்பிடி இருக்கீங்களோ" தலையில் அடித்துக் கொள்கிறார் செந்தில். "அருணாக்கொடிண்ணே அருணாக்கொடி. இடுப்புல கட்டுற கருப்புக் கயிறுண்ணே."
கவுண்டரின் மூஞ்சி மாறுகிறது. நா தழதழத்துக் கொண்டே "ஏண்டா! இடுப்புல கட்டுற கயித்துக்குப் பேரு அருணாக்கொடியாடா? போன வாரம் இப்பிடித்தான் அந்த நோஞ்சா மூஞ்சி முருகேசு வந்து அண்ணாக் கயிறு வாங்கப் போறேன்னு சொன்னான். கட்சியில எதுவும் சேந்துட்டியா கண்ணான்னு கேட்டா ஒரு மாதிரி பாத்துட்டுப் போறான். வேண்டாம்டா...விட்டுருங்கடா!"
மிடுக்காக விரலை உயர்த்திச் சொல்கிறார் செந்தில். "அண்ணே நீங்க ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கனும். அருணாக்கொடியும் அண்ணாக்கயிறும் ஒன்னுதாண்ணே. இந்த அடிப்படை அறிவு கூட இல்லையேண்ணே. எப்படிப் பொழைக்கப் போறீங்களோ?"
"என்னது அடிப்படையா? அதெல்லாம் ஒனக்குத்தானடா பூந்தி வாயா! எனக்கேதுடா அடிப்படையும் சொறிப்படையும்! ஏதோ இந்த மேளம் இருக்கக்கண்டு பொழச்சுக்கிறேன்."
"சரிண்ணே...நீங்க இதையே டொக்கு டொக்குன்னு தட்டுங்க. நான் போய் அருணாக்கொடி வாங்கீயாரேன்."
சற்று ஆத்திரத்தோடு. "டேய் நில்லு. திரும்ப இன்னொருவாட்டி அருணாக்கொடி அண்ணாக்கயிறுன்னு ஒளறுன நாக்க அறுத்து எலிக்குப் போட்டுருவேன். அது அரைஞாண் கொடி அல்லது அரைஞாண் கயிறு. புரிஞ்சதா?"
"அண்ணே. அதை அருணாக்கொடின்னும் சொல்லலாம். அண்ணாக்கயிறுன்னும் சொல்லலாம். நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்னே." சொல்லி விட்டுக் கெக்கே பெக்கே எனச் சிரிக்கிறார் செந்தில். கவுண்டர் கடுகடுப்பாகிறார். செந்தில் தோளில் கை வைத்து உட்கார வைக்கிறார்.
"நாதஸ். இந்த அண்ணாக் கயிறு, தங்கச்சிக் கயிறு, தம்பிக் கயிறு எல்லாத்தையும் விட்டுரு. நான் நல்லாச் சொல்றேன் கேட்டுக்க. அரைனா இடுப்பு. எங்க சொல்லு."
"ஐயோ அண்ணே. அரைன்னா இடுப்பா..ஹெக்ஹெக்ஹெக். அரைன்னா அரையறுதுன்னே. அதுல நீங்க எஸ்பேட்டாச்சே. அரைன்னா அரையறுது. அறையின்னா ரூம்புன்னே."
"அடேஏஏஏஏஏஏய். வாய மூடு. இதுக்கு மேல ஏதாவது பேசுன.......(கோவத்தைக் கட்டுப்படுத்துகிறார்.) இங்க பாருப்பா. சுந்தரரு என்ன சொல்லீருக்காரு?"
"என்ன சொல்லீருக்காரு?"
"பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கிசைத்துன்னு சிவபெருமானைப் பத்திப் பாடியிருக்காரு."
"அண்ணே ஒரு சந்தேகம்னே. சிவபெருமான் புலித்தொலியக் கொண்டு யாரண்ணே அரஞ்சாரு?"
"இப்ப நாந்தான் ஒன்ன அரையப் போறேன். முழுசாக் கேளுடா முள்ளங்கி மூக்கா. பொன்னார் மேனியன்னா....தங்கம் போல பளபளன்னு இருந்தாராம் சிவன். புலித்தோலை அரைக்கிசைத்துன்னா...இடுப்புல புலித்தோலைக் கட்டியிருந்தாராம். இசைத்துன்னா கட்டிக்கிறதுன்னும் சொல்லலாம். அதுல வர்ர அரைக்கு இடுப்புன்னு பொருள். அப்படி இருப்புல கட்டுற கயித்துக்குத்தான் அரைஞாண்னு பேரு. பின்னூட்டங்கள மொதல்ல படி. அதுல ஜெயஸ்ரீ ஞாண்னா கயிறுன்னு அழகா எடுத்துச் சொல்லீருக்காங்க பாரு. இடுப்புக்கான கயிறு அரைஞாண். புரிஞ்சதா?"
தலையை ஆட்டுகிறார் செந்தில். "புரிஞ்சிருச்சின்னே. நீங்க தெய்வம்னே. இந்தத் தமிழு எங்கிருந்துண்ணே வந்துச்சு."
கவுண்டரின் முகம் பெருமிதப்படுகிறது. "டேய். அதெல்லாம் மதுரைல இருந்து நேரா டாக்சி வச்சிக்கிட்டு வர்ரது. நான் என்ன மெயில்ல ஜிரா சொல்றதக் கேட்டா தெரிஞ்சிக்கிறேன். தானா வர்ரது. போறது. ஹெ ஹெ ஹெஹ்ஹஹே."
"சரின்னே நான் கடைக்குப் போயி அரைஞாண் வாங்கியாந்துர்ரெண்ணே." கையசைத்து விடை கொடுக்கிறார் கவுண்டமணி.
சிறிது நேரம் கழித்து செந்திலை ஒரு கூட்டமே துரத்திக் கொண்டு வருகிறது. தலை தெறிக்க ஓடுகிறார் செந்தில். துரத்தியோடும் ஒருவனை நிறுத்திக் கேட்கிறார். "ஏம்ப்பா இப்பிடி அவனத் தொரத்துறீங்க?"
"அந்தக் கொடுமைய....இவன் கடைக்குப் போயி அரைஞாண்னு என்னவோ ஒரு கயிறக் கேட்டிருக்கான். கடையில இருந்த பெருசு...இவன் ஏதோ சூனியம் வெக்க கயிறு கேக்குறான்னு ஊரக் கூட்டீட்டாரு. அப்புறந்தான் தெரிஞ்சது அவன் கேட்டது அருணாக்கொடின்னு. அத ஏன்டா அரைஞான் கயிறுன்னு சொல்றன்னு கேட்டா.....தெனாவெட்டா அது தமிழு. மதுரைல இருந்து டாக்சி வெச்சிக்கிட்டு வந்ததுன்னு சொல்றான். அதான்ன தொரத்துறோம்." சொல்லி விட்டு ஓடுகிறார் துரத்துகிறார். கவுண்டமணி முகத்தை ஒரு பக்கமாக இழுத்தாற்போல வைத்துக் கொள்கிறார்.
அன்புடன்,
கோ.இராகவன்
இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் நண்பர் இராகவனால் 9 பிப்ரவரி 2007 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
ReplyDelete32 கருத்துக்கள்: சென்ஷி said...
நாங்க எப்படி சொல்றது....
:))))
February 09, 2007 6:56 AM
G.Ragavan said...
// சென்ஷி said...
நாங்க எப்படி சொல்றது....
:)))) //
என்னங்க இது இப்பிடிக் கேட்டுட்டீங்க! அதான் கவுண்டமணி தெள்ளத் தெளிவாச் சொல்லீருக்காரே. அப்படியே சொல்லுங்க. ஆனா மதுரைல இருந்து டாக்சீல வந்ததுன்னு மட்டும் சொல்லாதீங்க. :-)
February 09, 2007 7:11 AM
கல்வெட்டு (எ) பலூன் மாமா said...
ராகவன்,
ஞான் என்றால் உடம்பு என்றும் ஒரு அர்த்தம் உண்டென்று நினைக்கிறேன்.
அரை+ஞான்=அரைஞான்
உடம்பை இரண்டாக பிரிப்பதால் வந்த பெயர் ?
February 09, 2007 7:21 AM
ஜி said...
ஞான் என்றால் அளவுன்ல நெனச்சேன்...
கவுண்டர், செந்தில்ல வச்சி தமிழ் கத்துக் கொடுக்குறீங்க... சூப்பரான நவீன யுத்தி டூ டீச் டமில்....
காமெடி நல்லா இருந்தது ஜிரா...
February 09, 2007 9:45 AM
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ராகவா!
சிரித்தேன். நாங்களும் அறுணாக் கொடியெனத்தான் கூறுவோம். இப்போ யார் இதெல்லாம் கட்டுராங்க?,
February 09, 2007 12:02 PM
நியோ / neo said...
ஜிரா!
நம்ம மக்கள் இம்மாதிரி சொல்லாராய்ச்சிக் கட்டுரைகளை 'மொக்கை'னு சொல்லிடுவாங்கனு - நல்லா தேன் (நகைச்சுவை) குழைத்துத் தந்துள்ளீர்கள். பாராட்டுகள்! தேன் இனிக்கிறது :)
February 09, 2007 1:44 PM
G.Ragavan said...
// கல்வெட்டு (எ) பலூன் மாமா said...
ராகவன்,
ஞான் என்றால் உடம்பு என்றும் ஒரு அர்த்தம் உண்டென்று நினைக்கிறேன்.
அரை+ஞான்=அரைஞான்
உடம்பை இரண்டாக பிரிப்பதால் வந்த பெயர் ? //
கல்வெட்டு...இதைக் கொஞ்சம் விசாரித்துச் சொல்கிறேன். கூடிய விரைவில்.
February 10, 2007 2:29 AM
G.Ragavan said...
// ஜி said...
ஞான் என்றால் அளவுன்ல நெனச்சேன்...
கவுண்டர், செந்தில்ல வச்சி தமிழ் கத்துக் கொடுக்குறீங்க... சூப்பரான நவீன யுத்தி டூ டீச் டமில்.... //
இது வெட்டி கிட்ட இருந்து சுட்டது. :-) ஆகையால காப்பி எங்கிட்ட. ரைட் அவர் கிட்ட :-))
// காமெடி நல்லா இருந்தது ஜிரா... //
நன்றி ஜி.
February 10, 2007 2:31 AM
G.Ragavan said...
// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ராகவா!
சிரித்தேன். நாங்களும் அறுணாக் கொடியெனத்தான் கூறுவோம். இப்போ யார் இதெல்லாம் கட்டுராங்க?, //
உண்மைதான் ஐயா. இப்பொழுது குழந்தைகளுக்கு மட்டும் கட்டுகிறார்கள். வளரவளர பழக்கம் குறைந்து போகிறது. கோமணம் கட்டிய காலகட்டத்தில் அரைஞான் கயிறு பயனுள்ளதாக இருந்திருக்கும். Pantaloon, vest and brief போடும் இந்தக் காலத்தில் அரைஞான் கயிறுக்கு எதுவும் பலனிருக்கிறதா என்று தெரியவில்லை.
February 10, 2007 2:34 AM
G.Ragavan said...
// நியோ / neo said...
ஜிரா!
நம்ம மக்கள் இம்மாதிரி சொல்லாராய்ச்சிக் கட்டுரைகளை 'மொக்கை'னு சொல்லிடுவாங்கனு - நல்லா தேன் (நகைச்சுவை) குழைத்துத் தந்துள்ளீர்கள். பாராட்டுகள்! தேன் இனிக்கிறது :) //
உண்மைதான் நியோ. செய்தியைக் கொண்டு செல்ல வேண்டும். இது சற்று எளிய வழி. ஆகையால் இதைத் தேர்ந்தெடுத்தேன். கொஞ்சம் நகைச்சுவை + கொஞ்சம் தகவல். இதற்குக் கவுண்டமணியும் செந்திலும் சம்பளம் கேட்க மாட்டார்கள் என நினைக்கிறேன். :-)
February 10, 2007 2:36 AM
தெனாலி said...
சுப்பரப்பு.. நல்லா சிரிச்சாச்சு..
February 10, 2007 3:53 AM
தங்கவேல் said...
ஜி. ரா. நான் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை விட்டபோது மறந்தது இந்த அரைஞாண் கயிறு கட்டும் பழக்கம்.
February 10, 2007 4:25 AM
G.Ragavan said...
// தெனாலி said...
சுப்பரப்பு.. நல்லா சிரிச்சாச்சு.. //
வாங்க தெனாலி. சிரிக்கவும் சிந்திக்கவும் சொல்லிக் குடுத்தா நல்லதுதானேன்னுதான் இந்த மாதிரி பதிவு. :-)
February 10, 2007 8:00 AM
G.Ragavan said...
// தங்கவேல் said...
ஜி. ரா. நான் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை விட்டபோது மறந்தது இந்த அரைஞாண் கயிறு கட்டும் பழக்கம். //
எண்ணெய் தேச்சிக் குளிக்கிறது...நானும் அத விட்டாச்சு. தலையில இருந்து கால் வரைக்கும் எண்ணெயத் தேச்சுக்கிட்டு கொஞ்ச நேரம் அப்படியே விட்டுட்டு சீவக்காயைத் தேச்சுக் குளிச்சா....ஒடம்பு குளுகுளுந்து குளுந்து போகும். அப்படியே மதியம் கோழிக் கொழம்பு ஊத்தி...சரி. சரி. இது சொல்லொரு சொல் பதிவு. இதெல்லாம் கூடாது.
February 10, 2007 8:02 AM
இலவசக்கொத்தனார் said...
அரை என்றால் பாதி. உடம்பின் சரிபாதியில் இருப்பதால்தான் அரை என இடுப்பைச் சொல்கிறோமா?
ஞான் என்பதற்கு மேல் விளக்கம் தாருங்களேன்.
February 10, 2007 8:31 AM
ஜெயஸ்ரீ said...
ஞாண் என்றால் கயிறு என்று பொருள். அருணாக்கயிறு (அரை ஞாண் கயிறு) . ஞாண் கயறு என்பது நடுcenter, உச்சிtop போல .... )))
அரைஞாண் என்பதே போதுமானது...
February 10, 2007 10:12 AM
G.Ragavan said...
// ஜெயஸ்ரீ said...
ஞாண் என்றால் கயிறு என்று பொருள். அருணாக்கயிறு (அரை ஞாண் கயிறு) . ஞாண் கயறு என்பது நடுcenter, உச்சிtop போல .... )))
அரைஞாண் என்பதே போதுமானது... //
ஆகா. ஜெயஸ்ரீ சரியாச் சொன்னீங்க. மேல கல்வெட்டு ஞானுக்கு வெளக்கம் கேக்கும் போது தேடத் தொடங்குனதுதான். வேலை நெறைய இருந்ததால முடிக்கலை. நீங்க திருத்துனதும் தெரிஞ்சிருச்சு. ஜெயஸ்ரீ வாழ்க.
மக்களே அரைஞான்னு சொல்லாதீங்க. அரைஞாண்னு சொல்லுங்க. சரியா? யாரும் தொரத்த மாட்டாங்க.
February 10, 2007 10:35 AM
இலவசக்கொத்தனார் said...
ஞாண் அப்படின்னா கயிறா?
வில்லின் நாண் எனக் கயிறு போன்ற நரம்பைச் சொல்கிறோமே. அந்த நாணுக்கும் இந்த ஞாணுக்கும் எதாவது தொடர்பு உண்டா?
February 10, 2007 11:35 AM
ஜெயஸ்ரீ said...
ஞாண் என்ற சொல் கயிறு வில்லின் நாண் இவை இரண்டையும் குறிக்கும்
"கை புனை வல் வில் ஞாண் உளர்தீயே " - கலித்தொகை
இங்கே ஞாண் - வில்லின் நாண்
நுண் ஞாண் வலையின் பரதவர் -ஐந்திணை
இங்கே ஞாண் - நால், கயிறு
பொன்னரைஞாணும் பூந்துகிலாடையும் வண்ணமருங்கில் வளர்ந்தழகெறிப்ப - வினாயகர் அகவல்
பொன்னரைஞாண் - பொன்னாலாகிய அரைஞாண்
இன்றும் சிறு குழந்தைகளுக்கு தங்கத்தால் அரைஞாண் அணிவிப்பது வழக்கமாக உள்ளது.
February 10, 2007 12:54 PM
கோவி.கண்ணன் said...
ஜிரா,
அரைஞான் பற்றிய என் அரைஞானத்தை அருணாகொடி அணிந்து முழுமை பெற்றேன் !
:)
February 10, 2007 12:58 PM
இலவசக்கொத்தனார் said...
விளக்கங்கள் எல்லாம் சரிதான். எதற்காக அரைஞாண்? அது பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்.
February 10, 2007 6:02 PM
துளசி கோபால் said...
ராகவன்,
அதி சூப்பர்!
நல்லாச் சிரிச்சேன்.
கொத்ஸ்,
என்ன............//எதற்காக அரைஞாண்? //
பண்டையத்தமிழர்கள் உடையில் ................
வேணாம்ப்பா. அப்புறம் நான் எதாவது சொல்லப்போக
இந்த டீச்சரு பார்த்தியான்னு பேரு வந்துரும்.
February 10, 2007 7:35 PM
குறும்பன் said...
இராகவன் அருமையாக சுவையாக இருந்தது பதிவு அதற்கு காரணம் கவுண்டர் செந்தில் தான் என்பதை சொல்லவும் வேண்டுமோ? தொடரட்டும் இந்த பாணி.
இ.கோ - அரைஞான் எதற்கு என்றால் கோவணம் கட்டிக்கொள்ள, வேட்டி அவிழாமல் இருக்க அரைஞானை பயன்படுத்தலாம் எனக்கு தெரிந்தது இவ்வளவு தான்.
February 10, 2007 10:31 PM
வல்லிசிம்ஹன் said...
ஒரு சாண் வயிற்றுக்கு அரைஞாண்
ஆதாரமாக இருந்திருக்கும்.
தங்க அரைஞாண் போடுவது வழக்கம். பெண்குழந்தைக்கு அதையே கழுத்துக்கு ஆரமாகப் பின்னாளில் சூட்டிவிடுவார்கள்.
கயிறு போடுவதால் காற்று அண்டாது என்றும் நம்பிக்கை.
இப்போது ஸ்டெம்செல் வந்து இருக்கு.
அப்போதே குழந்தையின் தொப்புள் கொடியிலிருந்து சிறு பாகத்தைத் தாயத்து போல் வெள்ளியில் செய்து குழந்தை பிறந்த ஏழாம் நாள் கட்டும் வழக்கம்.
நம்ம ஊரு ஒட்டியாணம், பெல்ட் இதுதான் என்று நினைக்கிறேன்.
February 11, 2007 6:11 AM
Hariharan # 26491540 said...
//எதற்காக அரைஞாண்? அது பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்.//
கொத்ஸ்,
அரைஞாண் ஆண்களால் மட்டுமே அணியப்படுவது. கோவணம்/லங்கோடு வாகாக கீழே அவிழ்ந்து விழுந்துவிடாமல் கட்டுவதற்காக உறுதுணையாக இருக்கவேண்டி உதவிடும் டூல்.
கோடுபோட்ட அண்டிராயர் (அண்டர்வேர்) வந்ததும் அதன்
இன் பில்ட் நாடா அரைஞாணை அடையாளம் மறைய வைத்தது.
விஐபி /டான் டெக்ஸ்/வைகிங் /ஆனந்த் எலாஸ்டிக் பின்னலாடை உள்ளாடைகள் அரைஞாண் கயிறு அப்படின்னா என்ன? என்று கேட்க வைத்திருக்கிறது.
அரைஞாண் என்பது எக்ஸ்டிங்ட் ஆன விஷயம்!
February 11, 2007 6:18 AM
இலவசக்கொத்தனார் said...
எனக்குப் பதில் சொன்ன எல்லாருக்கும் நன்றி. அந்த காலத்து உபயோகங்கள் எனக்குத் தெரிந்தே இருந்தது. இன்றும் இதற்கான அவசியம் என்ன என்பதுதான் நான் கேட்க வந்தது.
ஹரிஹரன், எக்ஸைடிங்கான விஷயம் அப்படின்னு சொல்லிட்டு ஒண்ணும் சொல்லாம போன எப்படி? :)
February 11, 2007 7:00 AM
அருட்பெருங்கோ said...
ராகவன்,
அரைஞாண் விளக்கம் அருமையா இருக்கு... பதிவுல மட்டுமில்லாம பின்னூட்டங்கள்லயும் பல செய்திகள்!!!
வாழ்த்துக்கள்!!!
February 11, 2007 7:17 AM
தம்பி said...
கைலி, வேட்டி, டவுசர், லங்கோட் போன்ற உடுப்புகள் அவுந்து உழுந்துடாம இருக்கறதுக்குதான் அர்னா கயிறுன்னு (எங்கூருல இப்படிதான்)நினைச்சிட்டு இருந்தேன்.
February 11, 2007 8:39 AM
Hariharan # 26491540 said...
//ஹரிஹரன், எக்ஸைடிங்கான விஷயம் அப்படின்னு சொல்லிட்டு ஒண்ணும் சொல்லாம போன எப்படி? :)//
கொத்ஸ்,
எக்ஸ்டிங்ட் (Extinct)ஆன விஷயம்னா எக்ஸைட்டிங் விஷயம் சொல்லலையேன்னா எப்படி?
பழுதான அரைஞாண் பாதியிலே அறுந்து தெறிச்சா எக்ஸைட்டிங்காகவோ / எக்ஸார்சிஸ்டாகவோ தோணலாம் பார்வையாளர் யார் என்பதைப் பொறுத்தது.
எக்ஸார்சிஸ்டா இருந்தா தெறிச்சு ஓடவேண்டியிருக்கும்
வயக்காட்டு வேலையில அரைஞாண் தெரிப்பது எக்ஸைட்டிங்கா இருந்து இருந்து தான் இந்தியா 120 கோடி மக்கள் தொகை ஆகிப்போச்சே!
போதும்யா எக்ஸைட்டிங்... எக்ஸார்சிஸ்டா இருக்கு:-((
February 12, 2007 1:50 AM
ரவிசங்கர் said...
பார்க்க - தமிழ் விக்கிபீடியா கட்டுரை - அரைஞாண்
March 21, 2007 5:21 PM
வெற்றி said...
இராகவன்,
நல்ல பதிவு. சொல்லியுள்ள விதம் வாசிக்கும் போது வாய்விட்டுச் சிரிக்க வைக்கிறது.
இப்ப நினத்தால் சிரிப்பு வருகிறது. நான் அயினாக் கொடி என்று தான் இதைச் சொல்லித் திரிந்தேன்.
இப்பதான் இச் சொல்லின் உண்மையான மூலத்தை அறிந்து கொண்டேன். மிக்க நன்றிகள்.
March 21, 2007 7:47 PM
தென்றல் said...
நல்ல அருமையான் பதிவு, ராகவன்!
கவுண்டரும் செந்திலும் இப்படி 'விவரமா' பேசினாதான் நம்ம மக்கள் 'எங்கேயோ' போயிருப்பாங்களே...!!
/கேட்டா.....தெனாவெட்டா அது தமிழு. மதுரைல இருந்து டாக்சி வெச்சிக்கிட்டு வந்ததுன்னு சொல்றான்./
இது..கலக்கல்..!
March 21, 2007 9:08 PM
ஜிரா, நீங்க ஜோரா கவுண்டமணி செந்திலுக்கு வசனம் எழுதலாம் போல இருக்கே! :) நல்லா சிரிக்க வச்சீங்க :)) அப்பப்ப டாக்ஸி வச்சுகிட்டு வந்து எங்களுக்கும் தமிழ் கத்துக்குடுங்க! மிக்க நன்றி!
ReplyDeleteஇதை இப்போது இட்ட குமரா, உங்களுக்கும் நன்றி!
எனக்கெல்லாம் எப்ப படிச்சாலும் சிரிச்சுக்கிட்டே தான் இருப்பேன் அக்கா. அம்புட்டு நல்லா எழுதுவாரு இராகவரு. இப்ப அம்புலிமாமா கதை எழுதிக்கிட்டு இருக்காரு. படிக்கிறீங்கல்ல?
ReplyDeleteசாருவின் கண்ணில் மாட்டிய அருணாவே!
ReplyDeleteஇன்னும் பல நூற்றாண்டு இரு! :))
http://www.vikatan.com/av/2010/oct/13102010/av0901.asp
குமரன் பார்த்தீங்களா,
சாருவைப் பொறுத்தவரை ஆழ்வாருக்கே அருணாக்கொடி தான் வழிகாட்டுது! :)))
இதைத் தான் சாரு சொல்லி இருக்காரு! பதிவை விட நல்லாவே காமெடி பண்ணி இருக்காரு! :)
ReplyDelete-----------------------------
காலடியில் மசாஜ் செய்துகொள்ளும்போது லங்கோடு கட்டிக்கொள்ள வசதியாக அரைஞாண் கட்ட வேண்டியிருக்குமே என்று பயந்துகொண்டு இருந்தேன். நவீன காலத்தில் காணாமல் போன விஷயங்கள் லங்கோடும் அரைஞாணும். அரை என்றால் இடுப்பு. ஞாண் என்றால் கயிறு. ஆனாலும், ஏன் அரைஞாண் கயிறு என்கிறார்கள் என்று நெட்டில் தேடினேன். மதுரைக்காரர் மருதன் ஓர் அருமையான வலைப்பூ வைத்துக்கொண்டு தமிழ் வளர்க்கிறார். அமெரிக்காவின் மின்னசோட்டா நகரில் இருந்துகொண்டு திருமுருகாற்றுப் படையில் இருந்து திவ்யப் பிரபந்தம் வரை அட்டகாசமான தமிழில் அலசுகிறார். அரைஞாண் கயிறுக்கு - ஸாரி - அரைஞாணுக்கு கவுண்டமணியும் செந்திலும் பேசிக்கொள்வது மாதிரி ஒரு விளக்கம். படித்து இன்புறுங்கள்: http://koodal1.blogspot.com காலடி வந்ததும் என் அரைஞாண் பிரச்னை தீர்ந்தது. அவர்கள் கொடுக்கும் லங்கோடு கூடவே அரைஞாணும் இருந்தது. மசாஜ் செய்தவர் என் தொழிலைக் கேட்டார். சொன்னேன். அவரால் நம்ப முடியவில்லை. கேரளத்தில் எழுத்தாளர் என்றால் எப்படி இருப்பார்கள் என்று சொன்னார். நீண்ட முடி, தாடி, ஜிப்பா, பீடி, சமயத்தில் கஞ்சா. இதுதான் மலையாள எழுத்தாளரின் அடையாளம். நானோ மொட்டையில் இருந்தேன். எப்படி நம்புவார்?
:-)
ReplyDelete