நண்பர் 1: 'நீங்க நல்ல அதிர்ஷ்டக்காரருங்க. பல இலக்கியங்கள் படிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கே'.
நண்பர் 2: 'நீங்களும் என்ன குறைவு? உங்களுக்குத் தெரிஞ்ச அளவு எனக்கு இலக்கியங்கள் தெரியாதே'
'ஹ. எப்பவும் இப்படியே சொல்லிக்கிட்டு இருங்க.
உங்களை ஒன்று கேட்கணும்ன்னு நினைச்சேன். அதிர்ஷ்டத்தை எப்படி தமிழ்ல சொல்றது?'
'நான் வழக்கமா நல்வினைப்பயன்னு எழுதுறேன்'
'நல்வினைப்பயனா? ஓரளவு பொருந்தி வருது. ஆனால் அதுவும் முழுக்கப் பொருந்துற மாதிரி தோணலையே'
'நாம் செய்த நல்லது, தீயது இவற்றின் படி தானே பயன்களும் ஏற்படுகின்றன. அதிருஷ்டம் என்பது நாம் செய்த நல்வினைகளின் பயன் தானே. அப்ப நல்வினைப்பயன் என்று சொன்னால் தவறில்லையே'
'இல்லை நண்பரே. இதனைவிட நல்ல சொல் இருக்கும். தேடிப்பார்க்க வேண்டும்'
***
சில நாட்கள் கழித்து...
'நண்பரே. அன்று அதிர்ஷ்டத்தைப் பற்றி கேட்டீர்களே. நல்லூழ் என்ற சொல் பொருந்துமா?'
'நல்லூழ்... ம்ம்ம். கொஞ்சம் நெருங்கி வருகிறது. ஆனால் ஊழ் என்றால் என்ன என்று தெரியுமா?'
'ஊழ் என்றால் ஊழ்வினை தானே'
'அப்படி நினைப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் ஊழ் என்றால் நியதி என்றும் 'முன்பே கட்டப்பட்ட ஒரு ஒழுங்கு' என்றும் பொருள் உண்டு'
'ஆமாம் ஆமாம். மரத்தடியிலும் வளவிலும் படித்திருக்கிறேன்'
'அப்படி பார்க்கும் போது நல்வினைப்பயன் என்று அதிர்ஷ்டத்தைச் சொல்வதா நல்லூழ் என்று சொல்வதா என்பது கேள்வியே'
'ம்ம்ம். நான் வளவுல போய் கேட்டுப் பாக்குறேன். அவரும் நம்ம வீட்டுக்கு அடிக்கடி வர்றாராம். அதனால் நான் கேக்காமலேயே அவர் நாம பேசறத வச்சே தெளிவா சொல்லிடுவாரு. நம்ம வள்ளுவரும் ஊழ் பத்தி ஒரு அதிகாரமே சொல்லியிருக்காராமே. நீங்களும் உங்க நண்பர்கிட்ட கேட்டு அந்த அதிகாரத்தைப் பத்தி எழுதுங்களேன். அப்படியே கபாலியை நான் கேட்டதாவும் சொல்லிடுங்க'
இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் 16 மார்ச் 2007 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
ReplyDelete33 கருத்துக்கள்:
வல்லிசிம்ஹன் said...
வினைப்பயன்,ஊழ்,விதி இதெல்லாம்
கர்மம் என்று அடங்கும் என்றுதான் நினைத்தேன் குமரன்.
இதில் நல்லதும் உண்டு,
என்று உங்கள் பதிவைப் பார்த்துத் தெளிகிறேன்.
நல்லூழ் இருந்தால் நல்ல பதிவுகள் கண்ணில் படும்:-)
March 16, 2007 7:01 AM
மதுரையம்பதி said...
கபாலியா?...தெரியலையே?
நம்ம மயிலை மன்னாருக்கும் தெரிந்திருக்குமே?
March 16, 2007 8:05 AM
குமரன் (Kumaran) said...
வல்லியம்மா. கர்மா என்பதில் நல்லதும் உண்டு; தீயதும் உண்டு தானே. அது போல் நல்லூழும் உண்டு. :-)
March 16, 2007 8:13 AM
குமரன் (Kumaran) said...
அடடா. மயிலைன்னவுடனே கபாலின்னு சொல்லிட்டேன். மன்னாரு கோவிச்சுக்கமாட்டாருன்னு நெனைக்கிறேன். திருத்துனதுக்கு நன்றி மௌலி ஐயா.
March 16, 2007 8:14 AM
`மழை` ஷ்ரேயா(Shreya) said...
அதே மரத்தடி ஆக்கத்தில் ஆகுழ் என்றும் சொல்லப்படுகிறது. நல்லூழை விடச் சுருக்கமாயும் இருக்கிறது.
இங்கே எதிர்பாராப் பேறு என்று முன்வைக்கப்பட்டது.
March 16, 2007 9:51 AM
கோவி.கண்ணன் said...
கும்ரன்,
தமிழர்கள் "எதிர்பாராத வரவை" நம்பி இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். அதானல் தான் தமிழ்சொற்களில் தேவை இல்லாமல் போய்விட்டது போல் தெரிகிறது.
:)
வேறு சொல் இருக்கும், அல்லது வேர்சொல் இருக்கும். இராமகி ஐயாதான் விளக்கனும். எனது வேண்டுகோள் கூட.
இதே போல் *ரசனை* என்ற சொல்லுக்கு ஒத்த பொருளுடைய தமிழ் சொல்லையும் பரிந்துரைக்க வேண்டுகிறேன்
March 16, 2007 10:10 AM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி
என்று வள்ளுவரும் அதிருஷ்டம், துரதிருஷ்டம் பற்றிச் சொல்கிறார்.
அதிருஷ்டம் = ஆகூழ்
துர் அதிருஷ்டம் = போகூழ்
நல்வினைப்பயன், தீவினைப்பயன் என்று சொல்லலாம் தான். ஆனால் சில சமயம் தீவினைகள் புரிந்தாலும், சிலருக்கு அதிர்ஷ்டக் காற்று அடிக்கிறது என்று சொல்லக் கேட்டிருக்கிறோம்.
எனவே ஆகூழ், போகூழ் என்பது அதைவிட ஏற்புடையதாக உள்ளது. எளிமை கருதி நல்லூழ், தீயூழ் என்று சொல்வதும் அழகாகத் தான் உள்ளது குமரன்.
மேலும் தமிழுக்கே உரிய ழகரம் இருப்பதும் சொல்லுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.
March 16, 2007 10:19 AM
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
குமரன்
இன்னொன்று கவனித்தீர்களா?
அபிராமி பட்டரும் நல்லூழ் என்பதைப் பதினாறு பேறுகளில் ஒன்றாகக் குறிப்பிட்டுப் பாடுகிறார்.
அகிலமதில் நோயின்மை கல்வி தனதானியம்
அழகுபுகழ் பெருமை இளமை
அறிவுசந்தானம்
வலிதுணிவு வாழ்நாள் வெற்றி
ஆகு நல்லூழ் நுகர்ச்சி
தொகைதரும் பதினாறு பேறும் தந்தருளி நீ
சுகானந்த வாழ் வளிப்பாய்
மகவுநான் நீதாய் அளிக்கொணாதோ? மகிமைவளர் திருக்கடவூரில் வாழ்வாமி
சுபநேமி புகழ்நாமி சிவசாமி மகிழ்வாமி அபிராமி உமையே!
March 16, 2007 10:28 AM
குமரன் (Kumaran) said...
சரியா சொன்னீங்க ஷ்ரேயா. ஆகூழ், போகூழ், நல்லூழ், இழவூழ் என்று பல ஊழ்களை வள்ளுவர் சொல்லியிருக்கிறார் என்று அந்த ஆக்கத்தில் இருப்பதைப் பார்த்துத் தான் திருக்குறள் விளக்கம் கேட்டிருக்கிறேன். மயிலை மன்னாரோட நண்பர் இன்னும் இந்த இடுகையைப் பாக்கலை போலிருக்கு. மன்னாருக்கிட்ட கேட்ட விட்டு விளாசிடுவாருல்ல. :-)
எனக்கு மறதி கொஞ்சம் மிகுதி. நீங்களும் இதே கேள்வியை இதே பதிவுல வேற இடுகையில கேட்டிருக்கீங்க. அதுக்கு பதிலும் வந்திருக்கு. ஆனா நான் மறந்துட்டேன் பாருங்க. எதிர்பாராத பேறு என்பதை விட ஆகூழும், நல்லூழும் நன்றாக இருப்பதாகத் தோன்றுகிறது.
March 16, 2007 11:20 AM
குமரன் (Kumaran) said...
கண்ணன் அண்ணா. நீங்க பழந்தமிழர்கள் பற்றி சொல்றீங்களா? இருக்கலாம். இந்தக் காலத் தமிழர்களுக்கு அதிர்ஷ்டமும் யோகமும் தானே உயிர்மூச்சு. (தமிழர்களுக்கு மட்டும் இல்லை; எல்லாருக்கும்) :-) அதனால் தான் ஊழைக் கெட்டதாக்கி அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் புழங்கத் தொடங்கிவிட்டார்கள். :-)
ஆகூழ், நல்லூழ் போன்றவற்றைச் சொல்லலாம் என்று பரிந்துரைகள் வந்திருக்கின்றன பாருங்கள். இராம.கி. ஐயாவும் இவற்றையே பரிந்துரைப்பார் என்று எண்ணுகிறேன். திருக்குறள் விளக்கம் வந்தாலும் புரியும்.
உங்கள் இரசனையைப் பற்றி மற்றவர் சொல்லட்டும். என் சொற்றொகைத் தேடற்கருவி இப்போது வேலை செய்யவில்லை. :-)
March 16, 2007 11:24 AM
SP.VR.சுப்பையா said...
அதிர்ஷ்டம்: (பெயர்ச்சொல்) எப்படி, எதனால் என்று
விளக்க முடியாதபடி திடீரென்று ஒருவருக்குக்
கிடைக்கும் வாய்ப்பான நன்மை ; யோகம்
good fortune, good luck. சாதாரண ஆளாக இருந்தவருக்கு
இப்படியொரு அதிர்ஷ்டம், இன்று அவர் ஒரு கோடீஸ்வரர்.
அவனுடைய அதிர்ஷ்டம் படித்து முடிதவுடனேயே
வேலை கிடைத்து விட்டது.
--------------------------------------------
கடவுள் வாழத்து,
அதற்கு அடுததபடியாக வான்சிறப்பு
(மழையின் மகத்துவம்)
அதற்கு அடுத்தபடியாக
நீத்தார் பெருமை
(ஆசைகளைத் துறந்தவர்களின் மேன்மை)
என்று ஒரு ஒழுங்கில் அறத்துப்பாலை
வடிவமைத்த வள்ளுவர் பெருந்தகை
கடைசி அதிகாரமாக
ஊழ்வினையை (Destiny)
வைத்ததற்குக் காரணம்
மனித வாழ்வு ஊழ்வினைப் படிதான்
(விதிக்கப்பெற்ற விதிப்படிதான்)
நடக்கும் என்பதை வலியுறுத்தத்தான்
ஊழ்வினை அதிகாரத்தில் உள்ள
இரண்டு முத்தாய்ப்பான குறள்கள்
-----------------------------------------------------------------
"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது"
(குறள் எண் 377)
அவரவர்க்கு வகுத்த வகைப்படி அல்லாமல்
கோடிக்கணக்கில் பொருளை வருந்திச் சேர்த்தவர்க்கும்
அப்பொருளால இன்பம் நுகர்தல் இயலாது!
------------------------------------------------------------------
"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் நுறும்"
(குறள் எண் 380)
ஊழைப்போல மிகுந்த் வலிமையுள்ளவை
வேறு எவை உள்ளன? அதை விலக்குவதற்கு
வேறு வழியை ஆராய்ந்து எண்ணினாலும் அது
அவழியையே தனக்கும் வழியாகி முந்திக் கொண்டு வந்து நிற்கும்!
Nothing is stronger than destiny
--------------------------------------------
SP.VR.சுப்பையா
March 16, 2007 12:15 PM
ஓகை said...
This post has been removed by the author.
March 16, 2007 1:26 PM
ஓகை said...
எதிர்பாராமல் நடக்கும் நல்ல செயல் அல்லது எதிர்பாராமல் கிடைக்கும் நல்ல பயன் - இவற்றை அதிர்ஷ்டம் என்று சொல்கிறார்கள். இதற்கு நல்லூழ், ஆகூழ் இவை சரியான சொற்கள். இவற்றுடன் நற்சுழி என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆனால் இச்சொற்கள் பாமரர்க்கோ அல்லது பேச்சு வழக்கிற்கோ வருமென்று கருத என்னால் இயலவில்லை. அவ்வாறான பொருத்தமான சொல்லும் தெரியவில்லை. பலரும் அதிர்ஷ்டம் என்று சொல்வதை யோகம் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். நல்லகாலம் அல்லது நல்லகாலமாய் என்று பேசவும் கேட்டிருக்கிறேன்.
March 16, 2007 1:38 PM
"வற்றாயிருப்பு" சுந்தர் said...
மதுரை பெரியார் நிலையத்தின் முகப்புக் கடைகளில் கேஏஎஸ் சேகரின் லாட்டரிக் கடைக்குப் பக்கத்தில் 'நல்லூழ் உணவகம்' என்ற உணவகம் இருந்தது. இப்போதும் இருக்கிறதா என்று தெரியவில்லை. Lucky Restaurant-என்பது போல் ஆங்கிலத்திலும் எழுதி வைத்திருந்த நினைவு.
March 16, 2007 1:52 PM
சிவபாலன் said...
நல்ல சொல்.
அறியத்தந்தமைக்கு நன்றி..
March 16, 2007 2:33 PM
வெற்றி said...
குமரன்,
வணக்கம். கன காலத்துக்குப் பிறகு தமிழ்மணப் பக்கம் வந்ததும் இப் பதிவைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி. படித்த உடனேயே பின்னூட்டம் எழுத முயற்சித்தேன். ஆனால் என் Blogger கணக்ககின் இரகசியச் சொல்[password] மறந்து விட்டேன். நிற்க.
வழமைபோல் அருமையான பதிவு குமரன். பதிவுக்கு மிக்க நன்றி.
குமரன், நீங்கள் அதிருஷ்டம் எனச் சொல்வது அதிஷ்டம் எனப்படும் சொல்லைத் தான் என நம்புகிறேன்.
என் புரிதல் சரியாயின், ஈழத்திலை எங்கடை ஊரிலை அதிஷ்டம் எனும் சொல்லை யோகம் என்று சொல்வார்கள். யோகம் தமிழ்ச் சொல்லா நான் அறியேன்.
எங்கடை ஊரிலை சிலருக்கு யோகலட்சுமி, யோகராணி, யோகேஸ்வரன், யோகநாதன் என பெயர்களும் உண்டு.
சில எடுத்துக்காட்டுகள்:
"உனக்கு நல்ல யோக திசைதான்"
"உன்ரை மனிசீன்ரை யோகம் உனக்கு நல்ல வேலை கிடைச்சிருக்கு"
இந்த யோகம் எண்ட சொல்லை கவியரசரும் ஒரு பாடலில் அதிஸ்டம் எனும் பொருளில் புழங்கியுள்ளைதை நினைவூட்ட விரும்புகிறேன்.
அதிசய ராகம் எனும் பாடலில்,
"அந்தத் தேவதை கிடைத்தால் அது என் யோகம்" என்ற வரிதான் அது.
குமரன், நீங்கள் சொல்ல வந்த சொல்லைப் பிழையாக விளங்கிக் கொண்டு தவறான கருத்துக்களைச் சொல்லியிருந்தால் பொறுத்தருள்க.
March 16, 2007 4:01 PM
ரவிசங்கர் said...
நல்லூழ் இது வரை அறியாத சொல். நன்றி. நல்லூழ் உணவகம் என்று ஒன்று இருந்தது ஆச்சரியப்படுத்தும் செய்தி. ஆனால், விதி, சுழி (destiny, fate) என்பதைத் தாண்டி இல்லை அவற்றுக்குத் தொடர்பு இல்லாமல் luck என்னும் சொல் சில பயன்படுகிறது. எல்லா உரையாடலையும் முடித்து google i am feeling lucky buttonஐ தமிழில் எப்படிச் சொல்வது என்று யாராச்சும் சொன்னா தேவலை :)
நல்லூழ் நல்ல சொல் என்றாலும் பேச்சு வழக்குக்கு வருவது சிரமம். கிராமங்களில் "அவனுக்கு சுழி இல்லைடா" என்று கூறுவார்கள். இதுவே "அவனுக்கு அதிர்ஷ்டம் இல்லடா" என்று சொல்வதற்கு நெருக்கமாகத் தோன்றுகிறது. இல்லை, பேச்சு வழக்கில் வேறு சொற்கள் இருந்ததா என்றும் அறிய வேண்டும். சொல் ஒரு சொல்லில் பேச்சு வழக்கில் அருகி வரும் சொற்கள், பேச்சு வழக்குக்கு வரக்கூடிய சொற்களை பரிந்துரைத்தால் நன்று
March 16, 2007 6:42 PM
SK said...
இந்த ஸொல்லை எடுத்துக் கொண்டு மன்னரிடம் போனேன்!
அதிர்ஷ்டம் என்பதற்கு வள்ளுவர் என்ன ஸொல்லியிருக்கிறார் எனக் கேட்டேன்.
அவன் ஸொன்னது இதுதான்!
" அதிருஸ்டம்னா இன்னா?
ஒனக்கு நல்ல நேரம்னு அர்த்தம்!
ஆரோ, அது கடவுளோ, இல்லை வேறு எதனாச்சுமோ, ஏதோ ஒண்ணு அதோட பார்வையை உங்கிட்ட வீசியிருக்குன்னு அர்த்தம்.
இதுக்கு ஐயன் ஸொல்ற வார்த்தை இன்னான்னா, ஆகூழ்னு நம்ம ரவித்தம்பி ஸொன்னதுதான்!
ஆனாக்காண்டியும், இதுக்கு நேரான பொருள் வேணும்னா, நீ அபிராமி பட்டர்கிட்டதான் போவணும்!
கடைக்கண்களேன்னு ஒரு அருமையான ஸொல்லைக் கொடுத்திருக்காரு!
இந்தக் கடைக்கண்கள் தான் ஒர்த்தனுக்கு எது வேணுமோ அதைக் கொடுக்குது.
திருஸ்டம்னா கண்பார்வை.
அதிருஸ்டம்னா எதிர்பாராம வர்ற பார்வை!
அதான் கடைக்கண்ணால பாக்கறது
ஆனாலும், கடைக்கண்கள் சரியா வரலை.
அது நேரடியா அதிருஸ்டத்தைக் காட்டலை.
அப்போ இதுக்கு இன்னாபேரு?
ஆனாக்க இது விதியால வர்றதில்லை!
அதனால ஆகூழ் கூட சரியா வராது!
இப்போ இன்னா பண்ணலாம்?
பாக்கியம்!!
இது வடசொல்லுன்னு பலர் கருதலாம்.
ஆனால் இது தூய தமிழ்ச்சொல்!
இலக்கியம் போல பாக்கியம்!
பா என பாம்பேயில் வர்றது போல ஸொல்லாம, பாலுன்றது மாரி ஸொல்லிப் பாரு!
எல்லாரும் எளுதினாலும் எதனாச்சும் ஒண்ணுதான் எலக்கியம் ஆவுது!
அது போல, ஏதோ ஒண்ணு பாக்கும் போது, கிடைப்பது பாக்கியம்!
இத்தை நம்ம ஐயனும் ஒரு குறள்ல வெச்சிருக்காரு!
"அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால். 1141.
மத்தவங்கள்லாம் எங்களோட தொடர்பை அறிஞ்சு கன்னாபின்னான்னு பேசறதால என்னோட உசுரு நிலைச்சு நிக்குது.
அவங்கள்லாம் அப்பிடி பேசறதுதான் என்னோட அதிர்ஸ்டம்னு,
ஆருக்கும் தெரியலை!
இல்லேன்னா நான் செத்தே போயிருப்பேன்!
இப்பிடி அவனோட பளகறதை மத்தவங்க தூத்தறதையும் ஒரு பாக்கியமா, அதிர்ஸ்டமா கருதற வார்த்தைதான் சரிய வரும்னு நான் நினைக்கிறேன்!"
இதுதான் அவன் ஸொன்னது!
அதிர்ர்ஷ்டம்= பாக்கியம்
March 16, 2007 7:48 PM
SK said...
சரியா, சரிய அல்ல!
எ.பி.
March 16, 2007 7:49 PM
ஓகை said...
//Nothing is stronger than destiny//
ஆசிரியரே, திருவள்ளுவரை நம்பி நீர் மோசம் போய்விட்டீர். முதலில் அப்படித்தான் சொன்னார். அதாவது 'ஊழிற் பெருவலி யாவுள?...' என்று. ஆனால் அதிகாரங்கள் வளர வளர 62வது அதிகாரத்தில் (முயற்சி உடைமை) உங்களை கை விட்டு விட்டார்.
முதலில்,
'தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்'
என்று சொன்னவர் அடுத்த குறளில் தெளிவாகக் கூறுகிறார்,
'ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.'
Nothing is stronger than destiny- இதை வலியுறுத்த திருவள்ளுவர் பயன்படமாட்டார்.
March 16, 2007 9:40 PM
Voice on Wings said...
பலரும் குறிப்பிட்டிருப்பது போல் 'யோகம்' என்பதே பொருத்தமான சொல்லாகப் படுகிறது.
நடைமுறையில் / பேச்சுத்தமிழில் உள்ள சொற்களாகப் பரிந்துரைப்பது அவை மேலும் தயக்கமின்றி பயன்படுத்தப்படுவதற்கு வழி வகுக்கும்.
March 16, 2007 10:13 PM
G.Ragavan said...
நல்லதொரு ஆய்வு குமரன். அதிர்ஷ்டம் என்பதற்கு வேறொரு சொல்லைக் கேள்விப்பட்ட நினைவு. வயதாகிவிட்டது பாருங்கள். சட்டென்று நினைவிற்கு வரமாட்டேன் என்கிறது.
ஆகூழ் என்ற சொல்லும் நல்லூழ் என்ற சொல்லும் பொருத்தமே. பாருங்கள். எத்தனை பாட்டுகள். எத்தனை எடுத்துக்காட்டுகள்.
இன்னொன்று துரதிருஷ்டம் என்பதற்கு இன்னொரு சொல் இருக்கிறது. கேடு. செவ்வியான் கேடும் நினைக்கப்படும். ஆனால் அதே குறளில் கேடிற்கு எதிர்ப்பதமாக வரும் ஆக்கம் அதிர்ஷ்டத்திற்குப் பொருந்தாது என்றே தோன்றுகிறது.
March 16, 2007 10:37 PM
Anonymous said...
சொல் ஒரு சொல்லில் ஸொல்லா? ஸொல்தான் சரியா? அல்லது சொல் சரியா..
ஏனென்றால் SK போன்ற தமிழாலளர்களே இப்படி பயன்படுத்துவதால் குழப்ப மாக இருக்கிறது.
விளக்கினால் நன்று
March 16, 2007 10:39 PM
வெற்றி said...
SK ஐயா,
/* அதிர்ர்ஷ்டம்= பாக்கியம் */
நீங்கள் குறிப்பிட்டுள்ள பாக்கியம் எனும் சொல் எல்லாச் சந்தர்ப்பத்திலும் அதிஸ்டம் எனும் பொருளில் தான் வரும் என்பதில் எனக்கு ஐயமுண்டு.
எம்மூரில் இந்த பாக்கியம் எனும் சொல் புண்ணியம் எனும் அர்த்தத்திலும் சிலவேளைகளில் புழங்கப்படுவதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
எடுத்துக்காட்டுகள்:-
அவன் பாக்கியசாலி[அதிஸ்டக்காரன்].
நான் செய்த பாக்கியம்[புண்ணியம்]
March 16, 2007 11:57 PM
SP.VR.சுப்பையா said...
///ஓகை அவரகள் சொல்லியது: ஆசிரியரே, திருவள்ளுவரை நம்பி நீர் மோசம் போய்விட்டீர். முதலில் அப்படித்தான் சொன்னார். அதாவது 'ஊழிற் பெருவலி யாவுள?...' என்று. ஆனால் அதிகாரங்கள் வளர வளர 62வது அதிகாரத்தில் (முயற்சி உடைமை) உங்களை கை விட்டு விட்டார். ///
திருவள்ளுவரை நம்பி யாராவது மோசம் போவார்களா என்ன?
அவர் என்ன அரசியல்வாதியா - மோசம் செய்வதற்கு?
இதுவே மன்னர்காலம் என்றால் திருவள்ளுவரை பழித்தற்கு
இந்நேரம் உங்களளைக் கொண்டுபோய் விசாரணை மணடபத்தில்
நிறுத்தியிருப்பேன்:-))))
திருவள்ளுவரைவிடப் பெரிய கில்லாடி ஒருவர்
முயற்சியைப் பற்றி சொல்லிவைத்து விட்டுப்
போயிருக்கிறார்!
Actions are in your hand: Not the results!
- பகவத் கீதை
சில சோம்பேறி ஆசாமிகள் விதியின் மேல் பழியைப்
போட்டுவிட்டு விதிப்படி நடக்கட்டும் என்று சொல்லி
விட்டு, வீட்டுத் திண்ணையில் முடங்கி விடக்கூடாது
என்று தான் முயற்சியுடைமை அதிகாரத்தை எழுதினார்
வள்ளுவர் பெருந்தகை.
தட்டிக் கொடுத்து வேலை வாங்குவதற்காக!
எங்கே சுற்றினாலும் ரங்கனிடம்தான் வரவேண்டும்
என்பார்கள்.
எல்லாம் விதிப்படிதான் முடியும்.
விதியை மதியால் வெல்வதுகூட, அப்படிப்பட்ட மதியை
உனக்கு விதி கொடுத்து வைத்திருந்தால்தான் உன்னால்
சில சமயங்களில் வெல்ல முடியும். அதுவும் விதிக்கப்பட்டதுதான் என்று கவியரசர் கண்ணதாசன் அவர்கள் அர்த்தமுள்ள
இந்து மதத்தில் எழுதிவைத்திருக்கிறார்.
படித்துப் பாருங்கள் நண்பரே!
March 17, 2007 12:40 AM
குறும்பன் said...
"அதிஷ்டம் அடிச்சிச்சு lottery ல 183 million கிடைச்சது" என்பதை
" பாக்கியம் அடிச்சிச்சு lottery ல 183 million கிடைச்சது " என்று சொன்னா நல்லாயிருக்காதே :-)
நக்கல் பேர்வழிகள் ஏன் கோமதி அடிச்சா பரிசு விழாதா? கோகிலா அடிச்சா பரிசு விழாதா? என்பார்கள் :-)) அதாவது வெற்றி சொன்னது போல் பாக்கியம் எனும் சொல் எல்லா இடங்களிலும் அதிஷ்டம் எனும் பொருள் கொடுக்குமா என்பது ஐயமே.
ஆகூழ், நல்லூழ், சுழி பொருத்தமாக தோன்றுகிறது. பாக்கியத்தையும் இடத்திற்கு தகுந்தாற் போல் பயன்படுத்தலாம்.
/ஆனால் சில சமயம் தீவினைகள் புரிந்தாலும், சிலருக்கு அதிர்ஷ்டக் காற்று அடிக்கிறது என்று சொல்லக் கேட்டிருக்கிறோம்.
/
எல்லாம் போன பிறப்பில் அல்லது முன்னோர்கள் செய்த புண்ணியம்.
March 17, 2007 11:27 AM
SK said...
அதையே கொஞ்சம் மாற்றி இப்படிச் சொல்லிப் பாருங்களேன்!
"லாட்டரியில் எனக்கு 183 மில்லியன் கிடைத்தது என் பாக்கியம்.[அதிர்ஷ்டம்]"
முற்பிறப்பில் செய்த அல்லது முன்னோர் செய்த புண்ணியம்தான் நம் பாக்கியம்!
:))
March 17, 2007 12:22 PM
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
இதைப் புழங்கலாம். "அவனுக்கு நல்லூழ் (அதிஸ்டம்) இருந்தால் பிழைப்பான்" நல்லாத் தான் இருக்கிறது.
March 17, 2007 4:00 PM
இராம.கி said...
அதிட்டம் பற்றிய இடுகையைப் படித்தேன். இங்கு பலரும் கூறிய நல்லூழ், ஆகூழ், புண்ணியம், பாக்கியம், (இன்னும் பலர் சொல்லாத நற்பேறு) போன்ற மாற்றுச் சொற்களைப் பற்றி நான் இங்கு சொல்ல வரவில்லை. அதிட்டத்தோடு மட்டுமே தற்போதைக்கு நின்று கொள்கிறேன்.
அதற்கு முன்னால் ஊழ் பற்றிய கருத்து முரணை மாற்று முகத்தான், ஒரு கருத்தைச் சொல்ல வேண்டும். ஊழ் என்பது determinancy. அது முன்னால் ஏற்பட்ட நிலை. given, a priori, condition. This word does not talk about the right and wrongness of the actions performed. ஊழ் என்பது வெறுமே இயற்கையை மாந்தன் அவதானிப்பதிலேயே புரிந்துவிடும். இலக்கியப் பதிவுகளின் படி பார்த்தால், ஊழ் என்னும் கோட்பாட்டை ஆழ்ந்து உரைத்தவன் தமிழன் தான். ஊழைப் பற்றிய ஒரு சிறப்பான பாடல் நாமெல்லோரும் அறிந்த கணியன் பூங்குன்றனாரின் 192- ஆம் புறநானூற்றுப் பாடல் ஆகும்.
யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
தீதும், நன்றும், பிறர் தர வாரா;
நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
வானம் தண் துளி தலைஇ ஆனாது,
கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!
இதைப் பற்றி பெரிய விளக்கமாய் எழுதலாம் என்றாலும், சுருக்கமாய் இங்கு சொல்லுகிறேன். இது போன்ற மெய்யியற் பாட்டுக்கள் சங்க இலக்கியத்தில் ஓரளவு இருக்கின்றன; தமிழரின் அடிப்படைப் புரிதலையும் உணர்த்துகின்றன. இதில் வியப்பு என்னவென்றால், நம்மில் பலரும் இந்தப் புரிதலை இன்றும் கொண்டிருக்கிறோம். தமிழருக்கு இது இயல்பாய் வருவதொன்று.
"எல்லா ஊரும் எங்கள் ஊர்தான்; எல்லோரும் எங்கள் உறவுகள் தான்; தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை; துன்பமும், அதன் தீர்வும் கூட அதுபோல் தான். செத்துப் போவது ஒன்றும் புதியது இல்லை. வாழ்க்கை இனியது என்று சொல்லி மகிழ்ச்சிப் படுவதும் இல்லை. மாறி, வாழ்க்கையில் இருந்து விலகி ஏற்கும் துறவு கொடியது என்று சொல்லுவதும் இல்லை;
வானம், மின்னல் வெட்டும் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய, கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு இறங்கி, பெருகி வரும் யாற்று நீரில் சிக்கி, அதன் தடத்திலே போகும் புனையைப் போல, அரிய உயிரியக்கம் ஆனது முன்னால் இட்ட முறைவழியே போகத் தான் செய்யும் (நியதி வழிப் படும்) என்று வாழ்க்கையின் திறம் அறிந்தவர்கள் சொல்லுவார்கள்.
அந்த காட்சியில் நாங்கள் தெளிந்தோம் ஆகையால், பெரியவர்களைக் கண்டு வியத்தலும் இல்லை; சிறியவர்களை இகழ்தல் அதனிலும் இல்லை." [இங்கே காட்சி என்பது ஞானம் என்பதற்கான மாற்றுச் சொல்; இதைத் தரிசனம் என்றும் வடமொழி நூல்கள் கூறும். (தரிசனம் என்பது கூடத் தெரியனம் தான். தெரியனம்>தரிசனம்; தீவம் காட்டியதில் சாமித் தெரியனம் நன்றாய்க் கிடைத்ததா? - தீவம் காட்டியதில் சாமி நல்லாத் தெரிஞ்சுதா?) தமிழுக்கும் வடமொழிக்கும் உள்ள இருதடப் போக்கை அறியாமல், அதை ஏற்காமல், எல்லாவற்றையும் மேலிருந்து பள்ளம் - வடமொழியில் இருந்து தமிழ் - என்ற ஒரு திசைப் போக்கையே சொல்லிக் கொண்டிராமல், வெறுமே வேதம், வேதம் என்று பாராயணம் பண்ணிக் கொண்டிராமல், பார்த்தால் ஒழிய, இந்திய மெய்யியலை நாம் ஒழுங்காகப் புரிந்து கொள்ள முடியாது. - இராம.கி.]
எல்லோரும் இந்தப் புறநானூற்றுப் பாடலின் முதல் வரியை மட்டுமே நினைவில் வைத்துக் கொண்டு "தமிழன் பார்த்தாயா, எப்படிச் சொன்னான், ஆத்தி, உசத்தி" என்று அமைந்து விடுகிறோம். அது சரியில்லை; முழுப்பாடலையும் நாம் ஆழ்ந்து படிப்பதில்லை. (உஷா கொஞ்சம் விதிவிலக்குப் போலிருக்கிறது; பாட்டின் இறுதியில் வரும் இரு வரிகளை தன் நுனிப்புல் வலைப்பதிவில் மேற்கோளிட்டுக் காட்டுகிறார்.)
மேலே உள்ள பாட்டில் "முறைவழிப் படும்" என்று சொல்லுகிறது பாருங்கள், அதில் வரும் முறை என்பதில் தான் நியதி, ஊழ் ஆகிய செய்திகள் அடங்கியிருக்கின்றன. இந்திய மெய்யியலில், முறை, நியதி, ஊழ் என்னும் சொற்கள் பெரிதும் பேசப்பட்டிருக்கின்றன. "காகித ஓடம் கடல் அலை மீது போவது போலே மூவரும் போவோம்" என்ற திரைப்பாட்டு உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா? அந்தப் பாட்டிலும் ஊழ் பேசப் படுகிறது.
"காட்டாறு ஓடுற ஓட்டத்தில், நாம் என்ன செய்யமுடியும்? முயற்சி செய்யலாம்; ஆனால் ஓரளவுக்குத் தான். அதனால், உன்னை நிரம்பவும் பெரிதாக நினைத்துக் கொள்ளாதே! இயற்கைக்கு முன்னால் நீ ஒரு சுண்டைக் காய்" என்று ஆற்றுப் படுத்துவதாய் இந்த ஊழ்க் கோட்பாடு நமக்குச் சொல்லுகிறது. If you go by dielectical materialism, "a priori order - ஊழ்" indicates the struggle of human beings against the nature.
ஊழுக்கு மாறான ஊழ்வினை என்பது வேறு ஒன்றைச் சொல்லுகிறது. "இந்தப் பிறப்பில் நல்லது செய்தால், அதை யாரோ ஒருவர் வரவு செலவுக் கணக்கு வைத்துக் கூட்டிக் கழித்து, நிகர வருமானத்தைத் தேர்ந்து உங்களோடு அடுத்த பிறவிக்கு "இருப்பு இவ்வளவு" என்று அனுப்பி விடுவதாகப் புரிந்து கொள்ளுவது ஊழ்வினை. இதிலும் வெவ்வேறு சமயங்களும், நம்பா மதங்களும் மாறுபடும். சொல்க்கம் (சொர்க்கம்), நிரயம் (நரகம்) போன்ற கருத்துக்களும் கூட இந்த ஊழ்வினையோடு தொடர்பு கொண்டவை. ஊழ்வினை பற்றி எழுத வேண்டுமானால், உலகாய்தம், ஆசீவகம், செயினம், புத்தம், மீமாஞ்சை, ஆதிசங்கரரின் மாயாவாத வேதநெறியான அல்லிருமை (அல்+துவைதம் = அத்துவைதம்), சிவனெறிக் கொண்முடிவு (சைவ சித்தாந்தம்), போன்ற மெய்யியல் கருத்தீடுகளுக்குள் போக வேண்டும்; அது ஒரு நீண்ட கட்டுரையே ஆகிவிடும். எனவே தவிர்க்கிறேன்.
முற்பிறப்பில் செய்த வினைகள் இந்தப் பிறப்பில் ஊழ்த்து வந்து நல்லது கெட்டது செய்யும் என்ற கருத்தெல்லாம் வள்ளுவரில் கிடையாது. அப்படிச் சொல்லுபவர்கள் மீள்பார்வை செய்வது நல்லது. வள்ளுவர் ஊழ் பற்றிப் பேசுகிறாரே ஒழிய, ஊழ்வினை பற்றிப் பேசுவதே இல்லை. நம்முடைய கருத்தை அவர்மேல் ஏற்றக் கூடாது. ஆனால் "ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்" என்று சிலப்பதிகாரம் பேசும். "எந்தப் பொருளில், என்ன விளக்கத்தில் சிலம்பு பேசுகிறது?" என்பது இன்னொரு பெரிய ஆய்வு.
சுருக்கமாய்ச் சொன்னால், தமிழரில் பலரும், ஊழுக்கும் ஊழ்வினைக்கும் வேறுபாடு தெரியாமல் குழம்பிக் கொள்கிறார்கள்.
இனி அதிட்டத்திற்குள் போவோமா?
தமிழில் அடுதல் என்பது சார்தல், சேர்தல் என்ற பொருளைத் தரும் வினைச் சொல். அள் என்னும் வேர். நெருங்குதல் என்ற பொருளுடையது. அட்டுதல் என்பது பிணைத்தல், ஒட்டுதல் என்ற பொருளில் பிறவினையைக் காட்டும். இதே போல அடுத்தல் என்பதும் பிறவினைச் சொல் தான். அடுத்தது = next என்ற பொருளில் சொல்லுகிறோமே, அதைக் கவனியுங்கள். ஒன்றன் பின் ஒன்றாய் அடுத்து இருப்பது அடுக்கு என்றாகும்.
நம் உடம்பை அட்டி, அரத்தம் உறிஞ்சும் புழு அட்டைப் புழு ஆகும். பொத்தகத்தின் இரு மருங்கும் அட்டித்து (ஒட்டி) இருக்கும் கனத்த தாள் அட்டை. அடுத்து என்ற சொல் மென்மேல் என்ற பொருளையும் கொண்டுவந்து தரும். (தென்கிழக்கு ஆசியாவிற்குக் கொண்டுவிற்கப் போன தமிழர் எல்லோரும்) கடைகளில் (அது எதுவாய் இருந்தாலும்) நமக்கு உதவியாய் இருப்பவரை (assistant) அடுத்தாள் என்று சொல்லுவார்கள். அடுத்தேறு என்ற சொல் மிகை என்ற பொருளில் திருவாய்மொழி ஈடு, முப்பத்தாறாயிரப்படி 3,8,9 -இல் "அடுத்தேறாக வந்த கரத்தைக் கழித்து" என்று பயிலப் பட்டிருக்கிறது.
அடுத்தலின் திரிவான அடர்த்தல் என்ற சொல் செறிதல் என்ற பொருளில் ஆளப் பட்டிருக்கிறது. நாங்கள் எல்லாம் பள்ளியில் படித்த போது, அடர்த்தி என்ற சொல் என்ற சொல் density என்பதற்கு இணையாய்ப் பயன்படுத்தப் பட்டது. (இன்றைக்கு திண்ணிமை என்றே நான் புழங்குகிறேன். திணித்தது திண்மம் - denser substance is solid. At the same time solidity is more than density. திண்மத்தனம் என்பது திண்ணிமையைக் காட்டிலும் பெரியது.) (செறிவு என்பதைக் concentration என்பதற்கு இணையாய்ப் பயன்படுத்துகிறோம்.) மேலே சொன்ன தென்கிழக்கு ஆசியாவிற்குக் கொண்டுவிற்கப் போன தமிழர் கடைகளில் அடத்தி என்ற சொல் wholesaler என்பதற்கு இணையாய்ப் பயன்படுத்தப் பட்டது. அடத்தியிடம் பொருளை வாங்கிச் சில்லரை வணிகர்கள் வாய்பகரம் (=வியாபாரம் = trade) செய்கிறார்கள்.
சேர்ப்பு என்ற பொருள் நாளா வட்டத்தில் பெரியது என்ற பொருளையும் கொடுக்கும். அட்டக் கரி, அட்டக் கருப்பு என்ற சொற்கள், அடர்ந்த கருப்பு நிறம் என்ற பொருளில் நாட்டுப்புறங்களில் பயன்படுத்துவதை ஓர்ந்து பாருங்கள். "பெருந்தொல்லை" என்ற பொருளில் பயன்படும் அட்டகாசம் என்ற சொல்லையும் இங்கு எண்ணிப் பார்க்கலாம். மொத்தமாகத் தெரிவு செய்த வரியை (total tax) அடந்தேற்றம் என்று (அடந்து தெரிந்தது) சொல்லும் பழக்கமும் ஒரு காலத்தில் இருந்திருக்கிறது. இன்றைக்கு மொத்தவரி என்றே சொல்லி விடுகிறோம்.
"வந்து சேர்ந்தது" என்பதை அடைதல் என்று சொல்லுகிறோம். அடைதலின் பிறவினையாய் அடைச்சுதல் - சேர்ப்பித்தல் என்பதும் சொல்லாட்சி கொண்டிருக்கிறது. வேறு பெயரில் அழைக்காமல், கடலை அடையும் ஒரு குறு ஆற்றை அடையாறு என்றே இங்கு சென்னையில் அழைக்கிறோம். அடைத்தல் என்பது நியமித்தல், விதித்தல் என்ற பொருளும் கொள்ளும். அடைமானம் என்ற சொல் வாங்கிய கடனுக்கு மாறாக நியமித்தது, விதித்தது என்றே பொருள் கொள்ளும். பல பருப்புக்களையும் அரிசியையும் சேர்த்து அரைத்து மாவாக்கிச் சுடும் பண்டத்திற்கு அடை என்றே பெயர் உண்டு. (சிவகங்கை, புதுக் கோட்டை மாவட்டங்களில் பெரிதும் விரும்பப் படும் காலை உணவு. "எங்கோ ஒரு ஒழுக்கு (leak) ஏற்படுகிறது, அந்த ஒழுக்கை அடைக்கிறோம். அது அடைப்பு என்று ஆகிறது". மூடுதல், பொருத்துதல் என்ற பொருளும் வந்து சேர்கிறது.
அடைதலின் இன்னொரு திரிவாய் அடைசுதல் என்ற சொல் நெருங்குதல், அளவுக்கு அதிகமாகச் சேர்தல், பொருந்துதல் என்ற பொருட்பாடுகளில் ஆளப்பட்டிருக்கிறது. "என்ன இது, வீடெல்லாம் ஒரே அடைசலாய்க் கிடக்கிறது?" என்பது சிவகங்கை வழக்கு. நாட்டியத்தில் காட்டும் வெவ்வேறு கைப்பொருத்துகளை, அடைவு என்றே சொல்லுகிறோம். சிலபோது இது அடவு என்றும் எழுதப் படுகிறது. அடவுகள் தெரியாமல் நாட்டியம் கற்க முடியாது. இப்படி, வெவ்வேறு பொருத்தங்கள், விதவிதமாய் அமைவதால் (arrangement) அடவு என்ற சொல்லையே இன்று design என்ற சொல்லிற்கு இணையாய்ப் பொறியியலில் பயன்படுத்துகிறோம்." மேலை மொழியிலும் arrangement என்ற கருத்துத் தான் design என்ற சொல் எழக் காரணமாய் இருந்தது. இளமைக் காலத்தில், நான் ஒரு அடவுப் பொறிஞனாய் இருந்தேன் - I was a design engineer in my younger days".
முன்னே சொன்னது போல் டகரவொலி தகரமாய்த் திரிவது தமிழில் உள்ள பழக்கம்; குறிப்பாக வடபுலத்தில் இது இன்னும் விரிவான பழக்கம். இரண்டு துண்டை ஒன்றாய்ப் பொருத்தித் தைத்தலை அத்துதல் என்று வின்சுலோ அகரமுதலி குறிக்கும். "அத்தும் பொல்லமும் தைத்தல் துன்னம்" என்று பிங்கலம் 2302 குறிக்கும். அத்து என்ற சாரியை கூட சேர்ந்த என்ற பொருளைத் தமிழில் குறிக்கும். "காமத்துப் பகை" (குறுந்: 257) "அங்கண் வானத்து அணிநிலா விரிக்கும்" (சில. 4, 3) போன்ற சொல்லாட்சிகள் தமிழில் கணக்கற்று உண்டு. "வானம் என்பதைச் சேர்ந்த அணி நிலா" என்ற கருத்தை ஆழ்ந்து புரிந்து கொண்டால் அத்து என்பது எவ்வளவு தூரம் தமிழ் வழக்கைச் சேர்ந்தது என்பது புரியும். "அந்தத் தோட்டத்து மாம்பழம்" என்னும் போது, தோட்டமும் மாம்பழமும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தவை என்பது புலப்படும். ஆங்கிலத்தில் and என்று சொல்லுவதும் add என்று சொல்லுவதும் ஒரே பொருள் தான். மற்ற மேலை மொழிகளிலும் இது போன்ற சொல்லிணையைக் காண முடியும். இங்கும் தமிழில் அதே பொருள் அடுத்தல் / அத்து என்பதில் வருவதை எண்ணிப் பாருங்கள்.
இனி இரு பிறப்பியாய் அத்தியந்தம் என்ற சொல் "முற்று முழுமையாக, மிகவும்" என்ற பொருட்பாடுகளைக் காட்டும். அத்தித்தல்>அதித்தல் என்பது சிறத்தல், மிகுதல் என்ற பொருட்பாடுகளை உணர்த்தும். அதிகம் என்ற பெயர்ச்சொல் மிகுதி என்ற பொருளைச் சுட்டும். காளமேகப் புலவரின் வேடிக்கையான பாட்டு அதிகம் என்ற சொல்லை ஆளும் விதத்தைப் படியுங்கள்.
கண்ணபுர மாலே கடவுளிலும் நீ அதிகம்
உன்னிலுமோ யான் அதிகம் ஒன்றுகேள் - முன்னமே
உன்பிறப்போ பத்தாம் உயர்சிவனுக்கு ஒன்றுமிலை
என்பிறப்பெண் ணத்தொலையா தே.
அதி என்ற முன்னொட்டு மிகுதி, அப்பால், மேல், மேன்மை என்பவற்றை உணர்த்தி வடமொழியில் பயிலும். நான் அறிந்தவரை பாணினியின் தாதுபாடத்தில் அதி என்பதற்கு எந்த வேர்ச்சொல்லையும் காட்டவில்லை. மோனியர் வில்லியம்சே கூட, இதை முன்னொட்டு என்று சொல்லி, அதன் ஊற்றுகை (origin) ஏதென்று சொல்லுவதில்லை. (ஆனாலும் அதிர்ஷ்டம் என்ற வடமொழித் தோற்றம் கொண்ட சொல்லை வடமொழிச் சொல் என்றே பலரும் எழுதி வருகிறார்கள். எனக்குப் புரியவில்லை. நான் எதைக் கவனிக்க மறந்தேன் என்று அறிந்தவர்கள் கூறினால் திருத்திக் கொள்ளுவேன். (பல சொற்களை இது போல வெறும் நம்பிக்கையில் வடமொழி என்று சொல்லும் பழக்கம் அதிகமாகவே இருக்கிறது. அதிர்ஷ்டம் என்ற தோற்றத்தைக் கண்டு மருண்டு போனால் எப்படி? உண்மையில் அதிட்டியது அதிட்டு>அதிட்டம். இருட்டியது இருட்டைப் போல் என்று புரிந்து கொள்ளுங்கள். அதிட்டம் என்பது வடமொழியிற் போகும் போது, அதிஷ்டம்>அதிர்ஷ்டம் என்று பலுக்கப்படும் ஒரே காரணத்தால் அது வடமொழியாகி விடாது.) குறளுக்கு உரைசொன்ன பரிமேலழகர் "அதி என்பது மிகுதிப் பொருளதோர் வடமொழி இடைச்சொல்" என்று சொன்னதால் அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டுமா, என்ன?
அதிகத்திற்கு இன்னொரு வலுவான பொருள் உண்டு. "அதிகம்...... பொலிவின் பெயரெனப் புகன்றனர்" என்று திவாகரம் 1672 பயிலும். பொலிவு என்பது சற்று வெளிறிய மஞ்சள் ஓடிய, பொன் நிறம். பொலிவு - அதிகம் நிறைந்தவன் அதிகன்>அதியன். அதிகனின் மகன் அதிகமான்.
தமிழ் மூவேந்தர் மூவரும் அவர்களின் குடியினர் பூசிக் கொண்ட நிறங்களாலே அறியப் பெற்றிருக்கிறார்கள். (அவர்களின் இயற்கை நிறம் கருப்புத் தான்.) தமிழரின் நெடுநாளைய உறவினரான ஆத்திரேலியப் பழங்குடியினரும் அவர்கள் பூசிக் கொள்ளும் நிறங்களினால், அவர்கள் சூடிக் கொள்ளும் அடையாளங்களினால் அறியப் படுகிறார்கள். சாம்பல் (=பாண்டு. பால் நிறம் பாண்டு.) பூசியவர் பாண்டியர் (தமிழரின் திருநீற்றுப் பழக்கம் இந்தக் குடியிடம் இருந்து வந்திருக்கலாம்.)
மஞ்சள் கலந்த சிவப்பு நிறம் பூசியவர் கோழியர் (=சோழியர்). குங்குமச் செந்தூரம் இன்றும் தமிழரிடம் விரவிக் கிடக்கிறது.
சார்ந்தது சார்ந்தனம்>சந்தனம். சார கந்தகம் என்பதும் சந்தனத்தையே குறிக்கும். சாரம் = சந்தனம்; சாரத்தில் சகரம் குறைந்த சொல்லான ஆரமும் சந்தனத்தையே குறிக்கும் சாரர்>சேரர் என்போர் சந்தனம் பூசிய இனக்குழுக்கள் ஆவர். இன்றைக்கும் மலையாளத்தில் சந்தனத்தின் முகன்மை புலப்படும்.
திருநீறு, குங்குமம், சந்தனம் எனப் பலவும் விலங்காண்டி நிலையில் வெவ்வேறு தமிழ் இனக்குழுவினர் அணிந்திருந்த இனவேறுபாட்டு அடையாளங்களே.
அதே நோக்கில் மஞ்சள் - பொன் - பொலிவு - நிறம் அணிந்திருந்த இனக்குழுவினர் அதிகர் என்ற இனக்குழுவாய் இருந்திருக்கலாம். மோரியர் காலத்திருந்தே மூவேந்தரோடு அதிகர் ஒருங்கு வைத்து எண்ணப் பட்டதும் இங்கு ஓர்ந்து பார்க்க வேண்டிய ஒன்று. அதிகம் என்ற சொல்லின் தமிழ்மை நன்கு புலப்படும்.
அதிகாலை என்ற சொல் காலைக்கு முந்திய பருவத்தைக் குறிப்பதையும் எண்ணிப் பார்த்தால் அதித்தல் என்ற வினைச்சொல்லின் ஆழம் புரியும். அதித்த நிலையை உருவாக்குதலை அதிகரித்தல் என்று சொல்லுவதும் சேர்ந்து பார்க்க வேண்டிய ஒன்றாகும். அன்றாட நிலைக்கு மேற்பட்டு அதிகம் செய்தது அதிசெய்யம்>அதிசயம் என்றே ஆகி வியப்பு, சிறப்பு என்ற சொற்களைக் குறிப்பது அதி என்ற முன்னொட்டோ டு சேர்ந்தது தான்.
நான் புரிந்து கொண்டவரை அதிட்டம் என்பது பெரும்பாலும் தமிழாய் இருக்கவே வாய்ப்பு உண்டு. அதற்கான முகன்மையான குறிப்புக்கள் அத்து என்ற சாரியைப் பொருள், அடுத்தல் என்ற வினைச்சொல், அதிகன் என்ற குடியினரின் பெயர் ஆகியவை ஆகும்.
அன்புடன்,
இராம.கி.
(luck என்ற ஆங்கிலச் சொல்லைப் பற்றி இங்கு பேசுவதைத் தவிர்க்கிறேன். அதற்கும், அதை ஒட்டிய மேலைச் சொற்களுக்கும் ஊற்றுகை தெரியாதென்றே அகரமுதலிகள் குறிக்கின்றன. ஊழைப் பற்றிப் பேசும்போது அதைப் பார்க்கலாம்.)
March 18, 2007 5:53 AM
குமரன் (Kumaran) said...
இராம.கி. ஐயா. இவ்வளவு விரிவான பின்னூட்டம் இட்டு, பலமுறைப் படித்துப் புரிந்து கொள்ளும்படி செய்துவிட்டீர்கள். :-) இந்தப் பின்னூட்டத்தில் இருப்பதையே வைத்துக் கொண்டே சொல் ஒரு சொல்லில் பல இடுகைகள் இடலாம் போலிருக்கிறது. எனக்குப் புரிந்த அளவிற்கு அவற்றை எடுத்தும் இடுகிறோம். நீங்கள் சொன்னதை நாங்களும் மறுமுறை சொன்னால் மனத்தில் இன்னும் நன்றாகப் பதியும். மிக்க நன்றி ஐயா.
March 22, 2007 1:37 PM
குமரன் (Kumaran) said...
வாத்தியார் ஐயா. நீங்களும் மற்றவர்களும் நல்ல திருக்குறட்பாக்களாக இட்டு மகிழ்வூட்டுகிறீர்கள். மிக்க நன்றி.
March 23, 2007 8:31 PM
குமரன் (Kumaran) said...
ஓகை ஐயா. நல்லூழ், ஆகூழ், போகூழ், நற்சுழி போன்ற சொற்களை பாமரர்களோ இல்லை பேச்சு வழக்கிலோ கொண்டு வரவேண்டியத் தேவையில்லை. நம்மைப் போன்றவர்கள் எழுத்தில் கொண்டு வந்தாலே போதும். ரொம்ப நல்லது. பல பழந்தமிழ்ச்சொற்களும் அப்படித் தான் என்று நினைக்கிறேன். கற்றவர்கள் எழுத்துத்தமிழில் பல பழந்தமிழ்ச்சொற்களைப் பயன்படுத்தினாலே என்னைப் போன்றவர்களுக்கு பல சொற்களுக்குப் பொருள் சொல்ல வேண்டிய வேலை இல்லாமல் போய்விடுமே. :-)
March 23, 2007 8:37 PM
பழூர் கார்த்தி said...
மிகவும் அருமையான பதிவு, மிக்க நன்றி குமரன் உங்களுக்கும், பின்னூட்டமிட்ட அனைவருக்கும்!!
<<>>
நிறைய டுபாக்கூர் பதிவுகள் மத்தியில் இம்மாதிரி பதிவுகளும் வருவது ஆரோக்கியமானது !!
July 25, 2007 3:59 AM
உங்கள் பதிவுகளைப் படிக்கும்படி ஏற்பட்டதற்கு நல்லூழே காரணம். நன்றி குமரா!
ReplyDeleteநன்றி கவிநயா அக்கா.
ReplyDeleteஐயா யோகம் என்ற சொல்லுக்கு நிகறான தமிழ் சொல் எது
ReplyDeleteவடமொழியில் யோகம் என்னும் சொல் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பொருளில் அமைகிறது. பிறவி நூல் தொடர்பான இடங்களில் ஊழ் என்னும் பொருள். கீதை போன்ற நூல்களில் ஆன்மிக வழி என்ற பொருள். இன்னும் பிற இடங்களில் இணைவு என்ற பொருள் தரும். இன்னும் பல பொருள் உள.
ReplyDelete