கவுண்டமணி அன்று பள்ளிக்கூடத்திற்கு ஆய்வாளராக வந்திருக்கிறார். தலைமை ஆசிரியர் உசிலைமணி அவரை வரவேற்று ஒவ்வொரு வகுப்பாக அழைத்துச் செல்கையில் செந்தில் தமிழ்ப்பாடம் எடுக்கும் வகுப்பிற்குள் நுழைகிறார்கள்.
"ஆய்வாளர் ஐயா! இவர்தான் தமிழாசிரியர் கொண்டல்நாதர். இவர் தமிழ்ப் பாடம் எடுத்தார்னா நூத்துக்கு நூறுதான். இதுவரைக்கும் ஒருத்தர் கூட பெயில் ஆனதில்லை. ஹிஹ்ஹிஹ்ஹி"
கவுண்டர் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். "ஓ! தமிழ் ஆசிரியர்! (செந்திலோடு கை குலுக்குகிறார்.) கொண்டல்! பேரே நல்ல தமிழ்ப் பேர். ஒங்களப் பத்தி தலைமை ஆசிரியர் ரொம்ப நல்லபடி சொல்லீருக்காரு. அதுனால......ஒங்கள நான் பாராட்டுறேன்."
செந்தில் முகமெல்லாம் புன்னகையுடன். "நன்றி ஐயா! நான் உ.வே.சா கிட்ட தமிழ் படிச்சவன். அதுனாலதான் இப்பிடி. என்னோட பெருமைய நானே சொல்லக் கூடாது. இருந்தாலும்....."
கவுண்டர் இன்னும் வியக்கிறார். "உ.வே.சா? You mean தமிழ்த் தாத்தா? நீங்க ரொம்பப் பெரியவர். சரி.இன்னைக்கு என்ன பாடம்? எதுவும் கேள்வி கேக்கலாமா?"
"நீங்க கேளுங்க ஐயா. பசங்க நல்லா பதில் சொல்வாங்க. இன்னைக்குக் காளமேகப் பாடல்தான் பாடம்." பெருமையோடு சொல்கிறார்.
"ஓ! காளமேகம்!" கவுண்டமணி ஒரு மாணவரை எழுப்பி, "தம்பி! இன்னைக்குச் சொல்லிக் கொடுத்த பாட்டு ஒனக்குத் தெரியுமா? எங்க ஒரு வரி சொல்லு."
"செருப்புக்கு வீரரைச் சென்றுழக்கும் வேலன்-னு தொடங்குற பாடல் ஐயா."
"செருப்பு? என்ன செய்யுள் இது?" செந்திலை நோக்கி. "ஐயா, தமிழ்க் கடலே. இந்த வரி சரிதானா? என்ன பொருள்னு சொல்லுங்களேன். பையன் எதோ செருப்பு பருப்புன்னு சொல்றானே?"
செந்தில் மிகப் பெருமையுடன். "சொல்றேன் ஐயா. சொல்றேன். செருப்புக்கு வீரரைன்னா கல்யாண வீட்டுல செருப்பு திருடுற வீரன் ஒழக்கு மாதிரி இருந்தாலும்னு பொருள்."
வியப்படைகிறார் கவுண்டர். "என்ன கொடுமை சரவணன் இது? காளமேகப் புலவர் காலத்துலயே கல்யாண வீட்டுல செருப்பு திருடீருக்காங்களா? சேச்சே! நம்ப முடியலையே. நீங்க உ.வே.சா கிட்டயெல்லாம் படிச்சிருக்கீங்க. சரியாத்தான் சொல்வீங்க.." தலையை ஆட்டி அலுத்துக் கொள்கிறார்.
"இல்லை ஐயா. அந்தப் பாட்டுக்குப் பொருள் வேற." பாடலைச் சொன்ன மாணவன் படக்கென்று சொல்கிறான்.
கவுண்டமணி பொங்கி எழுகிறார். "என்னது பொருள் வேறயா? இவர யாருன்னு நெனச்ச? தமிழ்ப் பெரியதாத்தா மீனாட்சி சுந்தரம் பிள்ளை கிட்ட பாடம் படிச்ச தமிழ்த்தாத்தா உ.வே.சா கிட்ட பாடம் படிச்சவரு. பாரதியார் பாரதிதானோட விவாதம் செஞ்சு தமிழ் இலக்கணத்துக்கெல்லாம் சிக்கெடுத்தவரு. ஆத்திச்சூடி எழுதும் போது...கால நீட்டி உக்கார்ரதால ஔவையாருக்கு விழுந்த சுளுக்கத் தமிழ்ப் பாட்டுப் பாடியே சரி செஞ்சவரு. நீ எட்டாப்பு படிக்கிற சின்னப் பையன். ஒனக்கென்ன தெரியும். எங்க? தெரிஞ்சதச் சொல்லு பாக்கலாம்?"
"அதாவதுங்க..செருன்னா போர்க்களம். செருப்புக்கு அப்படீன்னா செருவுக்குள்ள புகுகின்றன்னு பொருள். செருப்புக்கு வீரரைன்னு சொன்னா போர்க்களத்துக்குள்ள புகுகின்ற வீரன்னு பொருள். அப்படிப்பட்ட வீரனைச் சென்று உழக்கும் வேலன். அதாவது முருகப் பெருமானோட போருக்குப் போகிற வீரர்களை வெல்லும் முருகன் அப்படீன்னு பொருள். அதுவுமில்லாம முழுப்பாட்டையும் சொல்றேன் கேளுங்க.
செருப்புக்கு வீரரைச் சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனைப் புல்ல
மருப்புக்குத் தண்டேன் பொழிந்த
திருத்தாமரை மேல் வீற்றிருக்கும் வண்டே விளக்குமாறே
காளமேகத்திடம் செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடிக்குமாறு முருகனைப் பற்றிப் பாடச் சொன்ன பொழுது பாடிய பாடல்."
யோசிக்கிறார் கவுண்டமணி. "சரி. ஆனா விளக்குமாறுன்னு வருதே? அதுக்கு என்ன பொருள்?"
"அதாவது திருத்தாமரை மேல் வீற்றிருக்கும் வண்டை விளக்குமாறு கேட்கிறார்."
"வண்டு கிட்ட விளக்குமாறு ஏன் கேக்குறாரு? கடைல கிடைல வாங்குறது."
"விளக்குமாறுன்னா விளக்கிச் சொல்லுமாறு கேட்பது. இதுதாங்க இந்தப் பாட்டுக்கு உண்மையான பொருள்"
செந்தில் சிரித்துக்கொண்டே, "பாத்தீங்களா ஐயா. பையன் எப்படி பதில் சொன்னான்னு. அவன் வாயால வரனும்னுதான் நான் வேணுக்குன்னே தப்பாச் சொன்னேன். ஹி ஹி ஹி."
கவுண்டமணிக்குப் புரிந்து போகிறது. கிண்டலோடு "ஓ அப்படீங்களா ஐயா? நீங்க சொன்னா சரிதாங்க ஐயா. நீங்க எப்பேர்ப்பட்டவர். நல்லவர். வல்லவர். தமிழ் மொழியையே செம்புத் தண்ணீல கல்ல்ல்லக்கிக் குடிச்சவர். இப்பப் பாருங்க. இந்தப் பையன நான் எப்படி மாட்டுறேன்னு." அந்த மாணவனைப் பார்த்து, "தம்பி. இந்தப் பாட்டுக்கு நல்லா விளக்கம் சொல்லீட்ட. அது சரீன்னு ஒங்க தமிழ் ஆசிரியரே ஒத்துக்கிட்டாரு. அதுவுமில்லாம இவரு பாடம் எடுத்தா வகுப்புல (ஒவ்வொரு மாணவனாகக் காட்டி) நீதான் பாரதியாரு. அவந்தான் பாரதிதாசன். இந்தப் பையந்தான் இளங்கோவடிகள். அந்தப் பொண்ணுதான் கோதை ஆண்டாள். இந்தப் பொண்ணுதான் சௌந்தரா கைலாசம். ஆகையால இன்னொரு கேள்வி. செருன்னா போர்க்களம்னு சொன்ன. சரி. இந்தச் செரு வர்ர வேறொரு செய்யுள் சொல்லு பாக்கலாம்."
"சொல்றேன் ஐயா. முருகனைப் பத்திச் சொல்லும் போது செருவில் ஒருவன்னு நக்கீரர் சொல்லீருக்காரு ஐயா."
"ஓ! நக்கீரர். அதாவது திருவிளையாடல் படத்துல நடிகர் திலகம் கூட நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றமேன்னு சண்டை போட்டவரு." செந்திலை நோக்கி, "தமிழ் ஐயா, இந்த வரியைப் பத்தி நீங்க என்ன சொல்றீங்க?"
செந்தில் லேசாகக் கனைத்துக் கொண்டு, "ஐயா, இந்தப் பாட்டில் பிழை இருக்கிறது."
கவுண்டர் வியப்பது போல நடித்து ஒரு கையைத் தூக்கிக் கொண்டு சொல்கிறார். "ஓ! பரமசிவம் பாட்டுல பிழை இருக்குன்னு சொன்ன நக்கீரர் பாட்டுலயே நீங்க பிழை கண்டு பிடிச்சிருக்கீங்க. நீங்க ரொம்பப் பெரியவராத்தான் இருக்கனும். உ.வே.சா கிட்ட படிச்சிருக்கீங்களே. அப்ப ஒங்களுக்கு கி.வா.ஜா, வாரியார் எல்லாரையும்...."
"ஓ! நல்லாத் தெரியுமே? வாரியாருக்கு வெண்பா எழுதக் கத்துக்குடுத்ததே நாந்தான். கி.வா.ஜாவுக்குச் சிலேடையா பேசச் சொல்லிக் குடுத்ததே நாந்தான். அது மட்டுமில்ல.....கவிமணி, தமிழ்த்தாய் வாழ்த்து எழுதுன மனோண்மணீயம் சுந்தரம் பிள்ளை, உவமைக் கவிஞர் சுரதா....ஏன் இப்ப இருக்குற அப்துல்ரகுமான் வரைக்கும் என் கிட்ட படிச்சவங்கதான். இன்னொன்னு சொல்றேன். மெல்லிசை மன்னர் கிட்டப் பேசி தமிழ்த் தாய் வாழ்த்துப் பாட டி.எம்.சௌந்தரராஜனுக்கும் பி.சுசீலாவுக்கும் வாய்ப்பு வாங்கிக் குடுத்ததே நாந்தான்."
செந்திலின் தோளில் கை வைக்கிறார் கவுண்டமணி. "ஆமாமா! நீங்க கத்துக்குடுத்துதான் அவங்க ரொம்ப முன்னேறிட்டாங்க. ஆனா பாருங்க. நீங்க மட்டும் ஆசிரியராவே இன்னமும் இருக்கீங்க. சரி...அதென்னவோ பிழைன்னு சொன்னீங்களே. அது என்ன?"
"செருவில் ஒருவ அப்படீன்னு பையன் சொன்னான். அது தப்பு. செருகு வில் உருவன்னு வந்திருக்கனும். நக்கீரர் ஓலைல எழுதும் போது தப்பா எழுதீட்டாரு."
"ஓ! நக்கீரர் கோழி கிறுக்குறாப்புல கிறுக்கி தப்பா எழுதீட்டாருன்னு சொல்றீங்க. சரி. இருக்கட்டும்." மாணவனை நோக்கி, "தம்பி,இந்த வரிக்கு நீ விளக்கம் சொல்லு."
"செருவில் ஒருவ அப்படீன்னா போர்க்களத்தில் தனியாக நிற்பவன்னு பொருள். அதாவது இறைவனை எதிர்த்து யாரும் போரிட முடியாதுங்குறதுதான் உட்பொருள். தமிழ் ஐயா சொல்றது போல செருகிய வில் உருவறது கிடையாது."
செந்திலின் கழுத்தில் இருக்கும் துண்டைப் பிடித்து இழுக்கிறார். "ஐயா. தமிழ் ஆசிரியரே. உ.வே.சா இருந்தது எப்ப? நீங்க பொறந்தது எப்ப? எங்கிட்டயே காது குத்துறீங்களே. செருன்னு ஒரு சொல். அதுக்குப் பொருள் தெரியலை. ஒங்களப் பத்தித் தலைமை ஆசிரியர் ரொம்ம்ம்ம்பப் புகழ்றாரு. அதெப்படி ஒங்க வகுப்புல மட்டும் எல்லாரும் நல்ல மதிப்பெண் வாங்குறாங்க?"
மாணவன் குட்டை உடைக்கிறான். "ஐயா. இவரு எப்பவும் ஒழுங்காவே பாடம் சொல்லித்தர மாட்டாரு. பாதி நேரம் வகுப்புல தூக்கம்தான். இன்னைக்கு நீங்க இருக்கிறதால தூங்காம இருக்காரு. இவரு சொல்லித்தர மாட்டாருன்னு தெரிஞ்சதால நாங்களே படிச்சிக்கிறோம். அதனாலதான் எல்லாருக்கும் நல்ல மதிப்பெண் கிடைக்குது."
"அப்படிச் சொல்லுடா தம்பி." செந்திலைப் பார்த்து, "இனிமே இந்த வகுப்புல நீதான் மாணவன். (மேசையைக் காட்டி) இனிமே இங்க நிக்கக் கூடாது. (மாணவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தைக் காட்டி) அங்கதான் உக்காரனும். புரிஞ்சதா?"
போலியான பணிவோடு, "புரிஞ்சது ஐயா."
"ரொம்ப நல்லது. எங்க செருன்னா என்னன்னு சொல்லு பாக்கலாம்."
"செருன்னா போர்க்களம் ஐயா."
கிண்டல் சிரிப்போடு. "இது..இது...இது நல்ல பிள்ளைக்கு அடையாளம். இப்பிடிப் பொருள் சொல்றத விட்டுட்டு செருப்புக்கு அலையக் கூடாது.புரிஞ்சதா?"
"புரிஞ்சது ஐயா."
"நல்லது." மாணவர்களை நோக்கி, "எங்க ஒவ்வொருத்தரும் வேறெந்த நூல்ல செருவைப் பத்திப் படிச்சிருக்கீங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம்."
அன்புடன்,
கோ.இராகவன்
இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய நம் அருமை அண்ணன் திரு. கோ. இராகவன் அவர்களால் 21 மார்ச் 2007 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
ReplyDelete20 கருத்துக்கள்:
SP.VR. சுப்பையா said...
செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்
- குறள் எண் 569
போர் வருவதற்கு முன்பே தனக்குப் பாதுகாப்பாக
ஒரு அரண் செய்து கொள்ளாத அரசன்,
போர் வந்த போது தனக்குப் பாதுகாப்பு
இல்லாமையால் அஞ்சி விரந்து கெடுவான்
March 21, 2007 7:58 AM
--
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ராகவா!
நகைச்சுவையுடன் புரியவைத்துள்ளீர்கள்; இனிமேல் வரும் பின்னூட்டங்களில் மேலும் உதாரணங்களை எதிர்பார்க்கிறேன்.
March 21, 2007 8:36 AM
--
Anonymous said...
Anna ..........Arumai....
Arumaiyilum Arumai..
March 21, 2007 8:52 AM
--
Kovai Mani - கோவை மணி said...
அழகான, அருமையான பதிவு.
மெல்லிய நகைச்சுவை கலந்து சிறப்பாக உள்ளது.
March 21, 2007 10:55 AM
--
Anonymous said...
Thalayanangalathu "seru" vendra pandian nedunchezhian - Title of a Pandian King
Sorry for not in Tamil.
Thanks
Sathya
March 21, 2007 11:01 AM
---
கோவி.கண்ணன் said...
ஜிரா
செருப்பில் தொடங்கி விளக்கமாறு என்று சுவைபட எழுதிய காளமேகப் புலவர் நாகையைச் சேர்ந்தவர். அவர்பற்றி பல சுவையான கதைகளை கேள்விப் பட்டு இருக்கிறேன்.
செந்தில் - கவுண்டர் வழி செருவை நகைச்சுவையுடன் விளக்கியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள்
March 21, 2007 11:02 AM
--
வெற்றி said...
இராகவன்,
சில சங்கதிகளைக் சொல்லிற மாதிரிச் சொன்னால் தான் அனைவரையும் சென்றடையும். அந்த வகையில் மிகவும் நகைச்சுவை ததும்ப பழங்கால இலக்கியச் சொல்லை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். மிகவும் இரசித்துப் படித்தேன்.
செரு , இச் சொல் நான் இதுவரை அறிந்திராத சொல். பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.
ஒரு சின்னக் கேள்வி. செருக்கு எனும் சொல் கேள்விப்பட்டிருப்பீர்கள். இச் செருக்கு எனும் சொல் இறுமாப்பு, தலைக்கனம் என்ற பொருட்களில் நம்மூரில் புழங்கப்படும் சொல். இந்தச் செருக்கு எனும் சொல்லுக்கும் செருவுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? அல்லது இவையிரண்டும் எத் தொடர்பும் இல்லாத இரு வேறு சொற்களா?
மிக்க நன்றி
March 21, 2007 11:43 AM
---
G.Ragavan said...
// SP.VR. சுப்பையா said...
செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்
- குறள் எண் 569
போர் வருவதற்கு முன்பே தனக்குப் பாதுகாப்பாக
ஒரு அரண் செய்து கொள்ளாத அரசன்,
போர் வந்த போது தனக்குப் பாதுகாப்பு
இல்லாமையால் அஞ்சி விரந்து கெடுவான் //
மிகச்சரியாக ஒரு பாடலைச் சொன்னீர்கள் ஐயா. மிக அழகான குறள். அதற்குப் பொருத்தமாக ஒரு அழகான விளக்கமும் கூட. மிக அருமை.
March 21, 2007 11:44 AM
--
G.Ragavan said...
// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ராகவா!
நகைச்சுவையுடன் புரியவைத்துள்ளீர்கள்; இனிமேல் வரும் பின்னூட்டங்களில் மேலும் உதாரணங்களை எதிர்பார்க்கிறேன். //
நானும் எதிர்பார்க்கிறேன் ஐயா. மக்கள் பழைய பாடல்களில் இருந்து எடுத்துக்காட்டுகளைச் சொல்வது நமக்கும் புதிய தகவல்களைக் கொடுக்கிறது.
March 21, 2007 11:46 AM
--
G.Ragavan said...
// Anonymous said...
Anna ..........Arumai....
Arumaiyilum Arumai.. //
என்னை அண்ணா என்றழைத்த உடன்பிறப்பே! பாராட்டுக்கு நன்றி. தம்பி என்றழைப்பேனா? தங்கை என்றழைப்பேனா?
// Kovai Mani - கோவை மணி said...
அழகான, அருமையான பதிவு.
மெல்லிய நகைச்சுவை கலந்து சிறப்பாக உள்ளது. //
நன்றி கோவை மணி. இப்பொழுது செரு என்பது எல்லாருக்கும் புரிந்திருக்கும் அல்லவா. அதற்காகத்தான் இப்படி எழுதுவது.
March 21, 2007 11:47 AM
--
G.Ragavan said...
// Anonymous said...
Thalayanangalathu "seru" vendra pandian nedunchezhian - Title of a Pandian King
Sorry for not in Tamil.
Thanks
Sathya //
ரொம்பச் சரி சத்யா. தலையாணங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். ஆகா! எப்படி மறந்தேன் இந்தப் பெயரை. அன்னைக்குச் செரு என்றால் என்ன என்று தெரியாமல் இருந்தேன். இன்று தெரிந்து விட்டது.
// கோவி.கண்ணன் said...
ஜிரா
செருப்பில் தொடங்கி விளக்கமாறு என்று சுவைபட எழுதிய காளமேகப் புலவர் நாகையைச் சேர்ந்தவர். அவர்பற்றி பல சுவையான கதைகளை கேள்விப் பட்டு இருக்கிறேன். //
இல்லை கோவி. காவி நாகையைச் சேர்ந்தவர் இல்லை. திருவரங்கத்தில் பிறந்த வைணவர். அவர் சைவராக மதம் மாறியவர். அதை வைத்து நகைச்சுவையாக நான் எழுதிய கதை இங்கே. http://gragavan.blogspot.com/2005/07/blog-post.html
// செந்தில் - கவுண்டர் வழி செருவை நகைச்சுவையுடன் விளக்கியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள் //
நன்றி கோவி. நீங்களும் குமரனும் மாற்றுச் சொல் அறிமுகம் கொடுக்கின்றீர்கள். அந்தத் தொண்டுக்கு நடுவில் சில பழைய சொற்களை மீண்டும் அறிமுகப்படுத்துகிறேன்.
March 21, 2007 11:52 AM
--
SK said...
... பொரு தவரைச் *செரு* வென்றும். இலங் கருவிய வரை நீந்திச். ...--- “மதுரைக்காஞ்சி”...
*செரு* மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்! 30. இருவர் தாதை! இலங்கு பூண் மாஅல்! தெருள நின்... --- “பரிபாடல்”
. ... துணை வேண்டாச் *செரு* வென்றிப், புலவு வாள் புலர் சாந்தின். முருகன்...—“ புறநானூறு ”
, ... சிந்தச் *செரு* வென்று தன் ஆணை செலுத்தும் ஆற்றால். கந்தப் பொழில் சூழ் மதுரா புரி காவல் ... --- “பெரிய புராணம்”
... சான்ற அரதன மணியும் வேந்தன் செறுநர் வாள் ஊற்றம் இன்றிச் *செரு* மகட்கு அன்பன் ஆவ...----- “திருவிளையாடல் புராணம்”
March 21, 2007 12:12 PM
--
வெற்றி said...
SK ஐயா,
பல பழங்காலப் பாடல்களை எடுத்துரைத்திருக்கிறீர்கள். அதற்கான விளக்கங்களையும் தந்தால் என் போன்ற தமிழ்ப் பாமரர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.
மிக்க நன்றி.
March 21, 2007 1:55 PM
--
Anonymous said...
Pathu pattu:
செரு தொலைத்து ஒன்னா தெவ்வர் உலைவிடத்து ஒழித்த விசும்பு செல் இவுளியொடு பசு படை தரீஇ - தம்முடன் வந்து
March 21, 2007 2:49 PM
--
ரவிசங்கர் said...
கவுண்டமணி - செந்தில் வழித் தமிழ் சொல்லித் தரும் பிடித்திருக்கிறது. தொடர வாழ்த்துக்கள். 12ஆம் வகுப்பு வரை தமிழ்ப் பாடத்தைக் கவனித்துப் படித்து இருந்தாலே இந்த செரு என்று சொல் நினைவுக்கு வந்துவிடும் :) !!
March 21, 2007 3:06 PM
--
G.Ragavan said...
// வெற்றி said...
இராகவன்,
சில சங்கதிகளைக் சொல்லிற மாதிரிச் சொன்னால் தான் அனைவரையும் சென்றடையும். அந்த வகையில் மிகவும் நகைச்சுவை ததும்ப பழங்கால இலக்கியச் சொல்லை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். மிகவும் இரசித்துப் படித்தேன். //
நன்றி வெற்றி.
// செரு , இச் சொல் நான் இதுவரை அறிந்திராத சொல். பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.
ஒரு சின்னக் கேள்வி. செருக்கு எனும் சொல் கேள்விப்பட்டிருப்பீர்கள். இச் செருக்கு எனும் சொல் இறுமாப்பு, தலைக்கனம் என்ற பொருட்களில் நம்மூரில் புழங்கப்படும் சொல். இந்தச் செருக்கு எனும் சொல்லுக்கும் செருவுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? அல்லது இவையிரண்டும் எத் தொடர்பும் இல்லாத இரு வேறு சொற்களா?
மிக்க நன்றி //
நல்ல கேள்வி வெற்றி. ஆனால் விடை எனக்குத் தெரியாது. ஆனால் செரு என்பது போர்க்களம் என்றால் செருக்கு என்பது போர்க்குணம். அப்படி ஒற்றுமை இருக்கலாம். இராம.கி ஐயாவிடம் கேட்டால் தெரியும்.
March 22, 2007 2:04 PM
--
G.Ragavan said...
// SK said...
... பொரு தவரைச் *செரு* வென்றும். இலங் கருவிய வரை நீந்திச். ...--- “மதுரைக்காஞ்சி”...
*செரு* மேம்பட்ட செயிர் தீர் அண்ணல்! 30. இருவர் தாதை! இலங்கு பூண் மாஅல்! தெருள நின்... --- “பரிபாடல்”
. ... துணை வேண்டாச் *செரு* வென்றிப், புலவு வாள் புலர் சாந்தின். முருகன்...—“ புறநானூறு ”
, ... சிந்தச் *செரு* வென்று தன் ஆணை செலுத்தும் ஆற்றால். கந்தப் பொழில் சூழ் மதுரா புரி காவல் ... --- “பெரிய புராணம்”
... சான்ற அரதன மணியும் வேந்தன் செறுநர் வாள் ஊற்றம் இன்றிச் *செரு* மகட்கு அன்பன் ஆவ...----- “திருவிளையாடல் புராணம்” //
SK, அஞ்சு முகந்தோன்றின் ஆறுமுகம் தோன்றும் என்று சொல்வதுதானே. அது போல ஒரு செரு கேட்டதற்கு இத்தனை செருக்களைக் கொடுத்திருக்கின்றீர்கள். மிக்க நன்றி. வெற்றியின் கோரிக்கைதான் என்னுடையதும். அந்த செருக்களைச் சுவைபட விளக்குங்களேன். காத்திருக்கிறோம்.
March 22, 2007 2:06 PM
--
G.Ragavan said...
// Anonymous said...
Pathu pattu:
செரு தொலைத்து ஒன்னா தெவ்வர் உலைவிடத்து ஒழித்த விசும்பு செல் இவுளியொடு பசு படை தரீஇ - தம்முடன் வந்து //
அனானி, இவ்வளவு அருமையான செய்யுளைச் சொல்லியிருக்கின்றீர்கள். விளக்கும் சொன்னால் இன்னும் மகிழ்வோம்.
// ரவிசங்கர் said...
கவுண்டமணி - செந்தில் வழித் தமிழ் சொல்லித் தரும் பிடித்திருக்கிறது. தொடர வாழ்த்துக்கள். 12ஆம் வகுப்பு வரை தமிழ்ப் பாடத்தைக் கவனித்துப் படித்து இருந்தாலே இந்த செரு என்று சொல் நினைவுக்கு வந்துவிடும் :) !! //
மிகச்சரியாகச் சொன்னீர்கள் ரவிசங்கர். கொஞ்சம் ஒழுங்காகப் படித்திருந்தாலே செரு போன்ற சொற்கள் நினைவில் இருக்கும். உண்மைதான்.
March 22, 2007 2:08 PM
--
குமரன் (Kumaran) said...
செருக்கு² (p. 1606) [ cerukku² ] n cerukku . < செருக்கு¹-. [K. sok ku.] 1. [K. seḍaku.] Haughtiness, pride, arrogance, self-conceit; அகந்தை. செருநர் செருக் கறுக்கு மெஃகு (குறள், 759). 2. Exultation, elation; மகிழ்ச்சி. செருக்கொடு நின்ற காலை (பொருந. 89). 3. Daring, intrepidity, courage, as of an army; ஆண்மை. படைச்செருக்கு (குறள், 78, அதி.). 4. Infatuation; intoxication; மயக் கம். யானென தென்னுஞ் செருக்கறுப்பான் (குறள், 346). 5. Wealth; செல்வம். விறலீனும் . . . வேண்டாமை யென்னுஞ் செருக்கு (குறள், 18). 6. Luxury, indulgence, as in bringing up a child; செல்லம். செருக்காய் வளர்ந்த பிள்ளை. Loc.
March 22, 2007 2:18 PM
--
cheena (சீனா) said...
kumaran ,
I need urgently the tcontact details such as email / cell number / land lien number etc of Mr.Gnanavettiyan. If possible mail me . cheenakay@gmail.com
anbuLLa Ayya ( Mr.Gnanavettiyan )
Our Friend Mr.Bhuhari ( from Oraththanadu - Now in Canada ) wants to contact you urgently. Would you mind giving your address / cell number / land line number etc
Regards
cheena
June 09, 2008 6:45 AM
நன்று ஒரு புதிய தமிழ் சொல் அறிந்துகொண்டேன்.
ReplyDeleteஆஹா, மாணவர்கள்னா இப்படில்ல இருக்கணும்! நல்ல பதிவுக்கு நன்றி!
ReplyDeleteமகிழ்ச்சி மங்களூர் சிவா. :)
ReplyDeleteஇப்படி மாணவர்கள் அமைவது கொடுப்பினை தானே கவிநயா அக்கா. :-)
ReplyDelete