ஒரு சிறுவன் இருந்தான். பெரிய கோவக்காரன். எப்போது சினம் கொண்டாலும் சினம் வரச் செய்தவரைத் திட்டித் தீர்த்துவிடுவான். அவன் தந்தை ஒரு நாள் அந்தச் சிறுவனை அழைத்து ஒரு பை நிறைய ஆணிகளைக் கொடுத்து 'தம்பி. இனி மேல் ஒவ்வொரு முறை நீ யாரையாவது கோவித்து சுடுவார்த்தைகள் சொல்லும் போதெல்லாம் நம் வீட்டு வேலியில் இந்தப் பையிலிருந்து ஒரு ஆணியை எடுத்து அறைய வேண்டும். தொடர்ந்து ஒரு மாதம் ஒரு ஆணியையும் அறையாமல் இருந்தால் அப்போது எனக்கு வந்து சொல்' என்று சொன்னார். பையனும் அப்படியே செய்து வந்தான்.
முதல் நாள் வேலியில் 37 ஆணிகள் இருந்தன. மறு நாள் அந்த எண்ணிக்கை குறைந்தது. நாட்கள் செல்ல செல்ல ஆணியை அறைவதை விட சினத்தை அடக்குவதும் சினம் கொள்ளாமல் இருப்பதும் பையனுக்கு எளிதாக இருந்தது. சில வாரங்களில் சினம் கொள்வதே இல்லாத நாட்களும் வந்தன. ஆணிகளை அறைவதும் நின்றது. ஒரு மாதம் எந்த ஆணியும் அறையாமல் நாட்கள் சென்ற பின் தன் தந்தையிடம் பையன் சென்று சொன்னான். மிக்க மகிழ்ந்த அந்தத் தந்தை 'மகனே. இப்போது உனக்குப் புதிய வேலை. நீ அறைந்த ஆணிகளை எல்லாம் பிடுங்கு. எல்லா ஆணிகளும் பிடுங்கிய பின் வந்து சொல்' என்றார். ஆணிகளை அறைவதை விட அதைப் பிடுங்குவது பெரும் வேலையாக இருந்தது. எல்லா ஆணிகளையும் பிடுங்கிய பின் தந்தையிடம் வந்து சொன்னான் சிறுவன். தந்தை அவனை அழைத்துக் கொண்டு வேலி அருகில் சென்று 'பார்த்தாயா. நீ எல்லா ஆணிகளையும் பிடுங்கி விட்டாய். ஆனாலும் ஒவ்வொரு ஆணி இருந்த இடத்திலும் ஒரு துளை இருப்பதைப் பார். இந்த துளைகள் அவ்வளவு விரைவில் மறையாது. நீ சினம் கொண்டு சுடு சொற்கள் சொல்வது இந்த வேலியில் ஆணிகளை அறைவது போலத் தான். எவ்வளவு தான் ஆணிகளை அறைந்த பின் அவற்றை நீக்குவது போல் மன்னிப்பு கேட்டாலும் இந்த வேலியில் இருக்கும் துளைகளைப் போல் சினத்தினால் ஏற்பட்ட வடுக்கள் என்றுமே மனத்தில் இருக்கும். இதை நினைவில் வைத்துக் கொள்'.
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.
***
இந்த இடுகை 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் 4 நவம்பர் 2007 அன்று இடப்பட்டத்து. இந்த இடுகையுடன் 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் இருந்த எல்லா இடுகைகளும் கூடலுக்கு நகர்த்தப்பட்டுவிட்டன. 'சின்ன சின்ன கதைகள்' பதிவு மூடப்படுகிறது.
இந்த இடுகை 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் 4 நவம்பர் 2007 அன்று இடப்பட்டத்து. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
ReplyDelete17 comments:
கோவி.கண்ணன் said...
//ஆணிகளை அறைவதை விட அதைப் பிடுங்குவது பெரும் வேலையாக இருந்தது.//
குமரன்,
'ஆணி பிடுங்குவது' பற்றி அவ்வப்போது கும்மி நண்பர்கள் தலைப்பாக வைப்பாங்க...இன்னிக்குத்தான் அதன் உண்மையான பொருள் தெரிந்தது.
:)
November 04, 2007 6:37 PM
--
குமரன் (Kumaran) said...
கும்மி நண்பர்கள் மட்டுமில்லை கோவி.கண்ணன். கும்மாத நண்பர்களும் அதனைச் சொல்லிக் கேட்டிருக்கேன். இந்த கதையை எழுதும் போது எனக்கும் 'அடடா. இதுக்கு பொருள் இது தானா?'ன்னு தோணிச்சு. :-)
ஆணி புடுங்குறது ரொம்பக் கஷ்டம் தான் போல இருக்கு.
November 05, 2007 6:41 AM
--
இலவசக்கொத்தனார் said...
தெரிஞ்ச கதைதான். ஆனா சொன்ன முறை அருமை. ஆணி புடுங்குறதுன்னா இப்படி ஒரு பொருளா? :)
November 05, 2007 8:35 PM
--
சிவமுருகன் said...
அண்ணா,
நான் கூட ஆணி பிடுங்குவதுன்னா, வேலை பார்ப்பது என்று எண்ணியிருந்தேன்.
//ஒவ்வொரு ஆணி இருந்த இடத்திலும் ஒரு துளை இருப்பதைப் பார்.//
தவறு செய்வது மனிதத்தனம், மண்ணிப்பது தெய்வத்தனம் என்பார்கள், அவ்வாறு மண்ணித்தாலும் அதன் வடு உள்ளாறாது என்று ஏழாம் வகுப்பில் தமிழாசிரியர் "தமிழரசி" அவர்கள் சொன்னது இன்றும் நினைவுள்ளது.
November 05, 2007 9:55 PM
--
கீதா சாம்பசிவம் said...
அருமையான கதை, பக்தியிலா, சக்தியிலா? தெரியலை, படிக்கும்போதே நினைச்சேன், ஆனாலும் இவ்வளவு பொறுமையும் தேவைதான்.
November 06, 2007 12:41 AM
--
இலவசக்கொத்தனார் said...
சிவமுருகன், எவ்வளவு தரம் மன்னித்தாலும் அது மன்னிப்பதே! அது மண்ணிப்பது ஆகாது. :))
November 06, 2007 7:15 AM
--
கோவி.கண்ணன் said...
சுட்ட புண்ணாக இருந்தாலும் நல்ல மனசு உள்ளவங்களுக்கு தழும்பு கூட இருக்காது, மனக்களிம்பு அதையெல்லாம் முற்றிலும் அழித்துவிடும். சாமியார் - தேள் கதைதான் கொட்டுவது தேளின் குணம், காப்பற்றுவது நல்மனதின் குணம் என்றிருப்பார்கள். சுட்டவர்கள் மனசாட்சி உடையவர்களாக இருந்தால் அவர்களுக்குத்தான் சூடுவைத்தோம் என்ற உறுத்தல் இருக்கும். அப்படி நல்ல மனசு இல்லாதர்கள் எப்போதுமே சூடு போட்டு விடுவதற்கே விரும்புவர்.
November 06, 2007 8:38 AM
--
குமரன் (Kumaran) said...
நன்றி கொத்ஸ். இந்தக் கதை எழுதுற வரைக்கும் இந்த 'ஆணி புடுங்குறது'க்கு இப்படி ஒரு பொருள் இருக்கிறது எனக்கும் தெரியாது. :-)
November 06, 2007 11:27 AM
--
குமரன் (Kumaran) said...
கீதாம்மா. பக்தியிலா சக்தியிலான்னு படிச்சா ஒன்னும் புரியலை. அப்புறம் தான் 'குமுதம் பக்தி'யையும் 'சக்தி விகடனை'யும் அப்படி சொல்லியிருக்கீங்கன்னு புரிஞ்சது. :-) நான் ரெண்டுலயும் இந்தக் கதையைப் படிக்கலை. இணையத்துல ஆங்கிலத்துல படிச்சேன்.
இவ்வளவு பொறுமை தேவை தான். இருக்க மாட்டேங்குதே?! அதான் கதை சொல்லி நமக்கு நாமே உறுதிப்படுத்திக்கிறேன். :-)
November 06, 2007 11:33 AM
--
குமரன் (Kumaran) said...
சிவமுருகன். Testing மக்கள் Bug Fixingஐத் தான் ஆணி புடுங்குவது என்று சொல்கிறார்கள் என்று புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறேன். எல்லா வேலையும் ஆணி பிடுங்குவது ஆகாது.
மன்னிப்பது கட்டாயம் தெய்வத் தன்மை தான். மன்னித்து மறப்பது அதையும் விடப் பெரியது. மன்னித்துவிட்டு ஆனால் அந்த தவற்றை மறக்காமல் இருந்தால் அந்த வடு தீரவில்லை என்பது பொருள். அதனால் தான் 'மன்னிப்போம் மறப்போம்' என்று சொன்னார்களோ? :-)
November 06, 2007 11:34 AM
--
குமரன் (Kumaran) said...
நல்ல கருத்தைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள் கோவி.கண்ணன். நன்றி.
November 06, 2007 11:35 AM
--
Baby Pavan said...
குமரன் (Kumaran) மாமா என் அப்பா கிட்ட படிக்க சொல்லி கதை கேட்டுக்கரென்....இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
November 08, 2007 1:59 AM
--
குமரன் (Kumaran) said...
ஆகா. கட்டாயமா. பவன் கண்ணு. உனக்கும் உங்க அப்பா அம்மாவிற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
November 08, 2007 7:49 AM
--
மதுமிதா said...
குமரன் முன்பே வாசித்த கதையிது. ஆனால் சொன்ன விதம் நன்றாக இருந்தது.
இது போன்ற கதைகளை முன்பு பள்ளியில் மாரல் வகுப்பு என்று வைத்து மாணவர்களுக்கு கற்றுத்தருவார்கள். குழந்தைப் பருவத்திலேயே மனதில் ஆழமாகப் பதியவும் செய்யும். மதிப்பெண் நோக்கிய கல்வி ஆரம்பித்ததும் இவையெல்லாம் மறக்கடிக்கப்பட்டுவிட்டன.
December 18, 2007 9:32 AM
--
புரட்சி தமிழன் said...
ஆணி புடுங்கறத்து ப்ரண்ட்ஸ் என்ற திரைபடத்துல இருந்து தான் அனைவரும் சொல்வழக்காக பயன்படுத்துகிறார்கள். அதுக்குள்ள கும்மி அடிச்சி அதனோட வரலாற்றையே மாத்திடீங்களேப்பா.
December 19, 2007 5:53 AM
--
குமரன் (Kumaran) said...
நாங்கள் படிக்கும் போதும் மதிப்பெண் நோக்கிய கல்வி வந்துவிட்டது மதுமிதா அக்கா. ஆனாலும் எங்களுக்கும் இந்த வகுப்பு இருந்தது ஆரம்பப்பள்ளியில் (நர்சரி பள்ளி).
நட்சத்திர வார வேலைப்பளுவிலும் இங்கே வந்து படித்துப் பின்னூட்டம் இட்டதற்கு நன்றி அக்கா.
December 22, 2007 8:06 AM
--
குமரன் (Kumaran) said...
ப்ரண்ட்ஸ் படத்தை சன் தொலைக்காட்சியில் இரண்டு முறை அண்மையில் பார்த்தேனே புரட்சி தமிழரே. கவனிக்காமல் விட்டுவிட்டேன். எனக்கு இந்த வார்த்தைப்பயன்பாடு தெரிந்தது வலைப்பதிவுகளில் தான். :-)
December 22, 2007 8:08 AM
முன்பு படித்த கதைதான் என்றாலும் நினைவைப் புதிப்பித்துக் கொண்டேன் குமரனாரே! நன்றி!
ReplyDeleteநன்றி வாத்தியார் ஐயா.
ReplyDelete