Wednesday, April 02, 2008

போகும் போது அழகா? வரும் போது அழகா?

ஒரு முறை ஒரு அறிவாளியின் வீட்டிற்கு இரு தேவதைகள் வந்தார்கள். அந்த அறிவாளி அவர்களைப் பார்த்துத் திகைத்த போது அவர்கள் தங்களை செல்வத்தின் அதிதேவதையாகவும் வறுமையின் அதிதேவதையாகவும் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். அந்த அறிஞர் இருவரையும் வணங்கி அவர்கள் வந்த காரணத்தை வினவினார். அவர்களும் 'அறிஞரே. உங்கள் அறிவுத்திறனைப் பற்றி வெகுவாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். எங்களில் யார் அழகு என்று நீங்கள் சொல்லிக் கேட்க விரும்பி வந்திருக்கிறோம்' என்றார்கள். அறிஞரோ அடடா மாட்டிக் கொண்டோமே என்று திகைத்தார். வறுமைத்தேவதையை அழகில்லை என்றால் அவள் கோவித்துக் கொண்டுவிடுவாள். செல்வத்திருமகளை அழகில்லை என்றால் அவள் அவரை விட்டுச் சென்றுவிடுவாள். இரண்டுமே நடக்கக் கூடாது. என்ன செய்வது என்று சிந்தித்தார்.

சிந்தித்தவருக்கு ஒரு நல்ல யோசனை தோன்றியது. இருவரையும் நோக்கி வாசல் வரை நடந்து காண்பியுங்கள் என்றார். இருவரும் நடந்தார்கள்.

செல்வத்தின் அதிதேவதையிடம் 'அம்மா. நீங்கள் வரும் போது அழகாக இருக்கிறீர்கள்' என்று சொல்லிவிட்டு வறுமையின் அதிதேவதையிடம் 'அமாம். நீங்கள் போகும் போது அழகாக இருக்கிறீர்கள்' என்று சொன்னார். அவர்களும் அவர் பார்க்கும் போது அழகாக இருக்க செல்வத்தின் அதி தேவதை அவரை நோக்கி வந்து கொண்டும் வறுமையின் அதிதேவதை அவரிடம் இருந்து விலகிச் சென்று கொண்டும் இருந்தார்கள்.

***

இந்த இடுகை 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் 20 ஜூலை 2007 அன்று இடப்பட்டது.

1 comment:

  1. இந்த இடுகை 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் 20 ஜூலை 2007 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

    7 comments:

    kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    அதான் தலைப்பிலேயே விடையைச் சொல்லிட்டீங்களே குமரன்!

    நான் ஏதோ முன்னழகு, பின்னழகு-ன்னு சொல்லப் போறீங்களோன்னு ஓடியாந்தேன்! :-))

    July 21, 2007 10:23 PM
    --

    குமரன் (Kumaran) said...
    அட ஆமாம். :-)

    July 21, 2007 10:28 PM
    --

    குமரன் (Kumaran) said...
    இரவிசங்கர். கதையை முழுதாக எழுதிவிட்டேன்.

    August 11, 2007 2:32 PM
    --

    மாசிலா said...
    கதை நல்ல இருக்குதுங்க குமரன்.
    நன்றிங்க.

    August 11, 2007 4:49 PM
    --

    வெற்றி said...
    குமரன்,
    நல்ல அருமையான கதை.

    எங்களூரில் ஒரு முதுமொழி சொல்வார்கள். "எல்லாம் வாயாலை வாறது" என்று. அதாவது நாம் நிலைமை அறிந்து இக் கதையில் வந்த அறிவாளி போல சமயோசிதமாகப் பதில் சொல்ல வேணும் என்ற பொருளில்.

    ஆக்கமும் கேடும் அதனால் வருவதால்
    காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு

    எனும் குறளில் இருந்து இம் முதுமொழி வந்திருக்கலாம் என நினைக்கிறேன்.

    இக் கதையில் வரும் அறிவாளியைப் போல , உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக யோசித்துக் கதைக்க வேணும் என்று நானும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். :-))

    August 11, 2007 8:49 PM
    --

    குமரன் (Kumaran) said...
    உண்மை வெற்றி. சொற்கள் செம்மையானால் எண்ணமும் செம்மைப்படும். எண்ணம் செம்மையானால் எல்லாம் செம்மையுறும். இல்லையா? சமயோசிதமாகப் பேசுவதாக எண்ணிக்கொண்டுப் பிறர் நலத்திற்கு இடையூறான தன்னலத்தை ஓம்பும் சொல்லைப் பெரியோர் ஒத்துக் கொள்வதில்லை; அது முத்லில் நன்மை தருவதாகத் தோற்றம் கொடுத்துப் பின்னர் தீமையைக் கொடுக்கும். பிறர் நலத்திற்கு இடையூறு இல்லாத தன்னலத்திற்காகப் பேசும் சொற்கள் தான் உட்பட எல்லோருக்கும் நன்மை தரும்.

    அருமையாகச் சொன்னீர்கள். உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக யோசித்துக் கதைக்க வேண்டும் என்று. நேற்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசிவிட்டு இன்று நாம் சொன்னதற்கு எதிராக நாமே நடந்து கொண்டு சொல்லச் சொல்லின்றி வாயடைத்து எத்தனை முறை நின்றிருப்போம். :-)

    August 11, 2007 9:01 PM
    --

    குமரன் (Kumaran) said...
    நன்றி மாசிலா. எல்லோருக்கும் மாசிலா மனமும் சொல்லும் அமைய இறைவன் அருள் புரியட்டும்.

    August 11, 2007 9:01 PM

    ReplyDelete