Tuesday, April 22, 2008

அன்பே அன்பே கொல்லாதே!

எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல் இது. திரைப்படத்தில் இந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதமும் மிக நன்றாக இருக்கும்.

திரைப்படம்: ஜீன்ஸ்
வெளிவந்த வருடம்: 1998
இயற்றியவர்: கவிப்பேரரசு வைரமுத்து
பாடியவர்கள்: அனுராதா ச்ரிராம், ஹரிஹரன்
இசையமைப்பாளர்: ஏ.ஆர். ரஹ்மான்

அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணைக் கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே (அன்பே)

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி
மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச்
சிற்பிகள் செதுக்கிய உருவமடி
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து
என்னை வதைப்பது கொடுமையடி (அன்பே)



கொடுத்து வைத்தப் பூவே பூவே
அவள் கூந்தல் மணம் சொல்வாயா
கொடுத்து வைத்த நதியே நதியே
அவள் குளித்தச் சுகம் சொல்வாயா
கொடுத்து வைத்தக் கொலுசே
கால் அழகைச் சொல்வாயா
கொடுத்து வைத்த மணியே
மார் அழகைச் சொல்வாயா

அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி
அங்கே உனக்கொரு வீடு செய்வேன்
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு
உயிருக்கு உயிரால் உறையிடுவேன்


மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து
மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்
தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது
நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்
பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக
பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்
தேவதை குளித்த துளிகளை அள்ளித்
தீர்த்தம் என்றே நான் குடிப்பேன் (அன்பே)

1 comment:

  1. இந்தப் பாடல் 22 அக்டோபர் 2006 அன்று 'கேட்டதில் பிடித்தது' பதிவில் இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

    28 comments:

    Sivabalan said...
    சூப்பர் பாடல்..

    இங்கே கொடுத்தமைக்கு நன்றி

    Sunday, October 22, 2006 8:31:00 PM
    --

    கோவி.கண்ணன் [GK] said...
    //பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
    அடடா பிரம்மன் கஞ்சனடி
    சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
    //
    குமரன் !

    இவ்வளவு அழகாக வர்ணனை செய்த கவிஞர் அடுத்த ஒரு படத்தில் ஐஸ்வரியாவை கவிழ்த்துவிட்டார்.

    'பல உலக அழகில் சேர்ந்து, உனக்கு
    பாதம் கழுவலாம் -

    என்ன சொல்லப் போகிறாய்' என்று தபுவைப் பார்த்து கதாநாயகன் (அஜித்) பாடுவதாக ஐஸ்வரியாவும் சேர்ந்து நடித்த மற்றொரு படத்தில் எழுதியிருப்பார்.

    Sunday, October 22, 2006 8:33:00 PM
    --

    Chandravathanaa said...
    nice one

    Sunday, October 22, 2006 10:53:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    நன்றி சிவபாலன்.

    Monday, October 23, 2006 5:42:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    ஆகா. கோவி.கண்ணன் ஐயா. எத்தனையோ முறை அந்தப் பாடலைக் கேட்டிருக்கிறேனே. ஒரு முறை கூட நீங்கள் சொன்ன பொருள் தோன்றவில்லையே?! உண்மை தான் கவிஞர் ஐஸ்வர்யாவை கவிழ்த்துதான் விட்டிருக்கிறார்.

    அது சரி. எனக்குப் பிடித்தப் பாடல் என்று தானே இதனை இட்டிருக்கிறேன். இந்தப் பாடலை நான் பாடும் போது ஐஸ்வர்யாவை நோக்கித் தான் பாடவேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லையே?! என் பார்வைக்கு உலக அழகியாய் தெரியும் யாரை நோக்கியும் பாடலாமே?! :-)

    Monday, October 23, 2006 5:44:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    நன்றி சந்திரவதனா அக்கா.

    Monday, October 23, 2006 5:44:00 AM
    --

    செந்தில் குமரன் said...
    கேட்டுக் கேட்டு மனப்பாடம் ஆகி விட்ட வரிகள் சரியாக எழுதி இருக்கிறீர்களா என்றுதான் வார்த்தைகளை மேய்ந்தேன். எங்கோ கொண்டு சென்று விட்டது. கொடுத்ததற்கு நன்றி.

    Monday, October 23, 2006 6:54:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    குமரன் எண்ணம். சொற்களை மாற்றாமல் சரியாகக் கொடுத்திருக்கிறேனா என்று சொல்லாமல் சென்றுவிட்டீர்கள். சரியாகக் கொடுத்திருக்கிறேனா? எனக்கும் முழுதும் மனப்பாடம் ஆன பாடல் செந்தில் குமரன். இதோ அதோ என்று இந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்த நாட்கள் போய் எட்டு வருடங்கள் இன்றோடு ஆகிவிட்டது. :-)

    Monday, October 23, 2006 9:16:00 AM
    --

    சிவமுருகன் said...
    //

    அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி
    அங்கே உனக்கொரு வீடு செய்வேன்
    உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு
    உயிருக்கு உயிரால் உறையிடுவேன்

    //
    இவ்வரிகள் ஒரு தனி அப்ளாஸ்.

    இவ்வளவு அழகாக வர்ணனை.

    நல்ல பாடல், இப்பாடல் வரிகள் எந்த பெண்ணிற்க்கும் சரியாக வரும் என்று கவிஞரே சொன்னார், (காதலுக்கு கண்ணில்லை :-) ). இப்பாடல் காட்சிகள் மிகவும் அருமையாக இருக்கும்.

    Wednesday, October 25, 2006 6:27:00 AM
    --

    இலவசக்கொத்தனார் said...
    //ஒரு முறை கூட நீங்கள் சொன்ன பொருள் தோன்றவில்லையே?! //

    அட அதாங்க அந்த பாட்டின் ஹைலைட்டே. படம் வந்த போது ரொம்ப பேசப்பட்டதாச்சே...

    Wednesday, October 25, 2006 6:55:00 AM
    --

    வல்லிசிம்ஹன் said...
    குமரன் எட்டு வருடங்களா ஆகிவிட்டன?
    படம், பாடல், ஐஸ்வர்யா ராய் எல்லாமே ஒரு மந்திரவாதியின் உலகிற்குப் போனது போல்
    இருந்தது கொஞ்ச நேரத்துக்கு. அப்புறம் வழக்கம் போல் ஆகிவிட்டது. பாடலுக்கு நன்றி.

    Wednesday, October 25, 2006 7:57:00 AM
    --

    G.Ragavan said...
    இந்தப் படத்தில் எனக்கு இந்தப் பாடலை விட மற்ற பாடல்கள் எல்லாம் மிகவும் பிடிக்கும்.

    இந்தக் குடிக்காதே...கொல்லாதே..தின்னாதே...கடிக்காதே இதெல்லாம் வைரமுத்து ஸ்பெஷல்.

    இந்தப் பாடலில்......தேவதை குளித்த துளிகளை அள்ளித் தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்......இந்த வரிகளைக் கேட்கையில்...அடடா! தேவதை சோப்புப் போட்டுக் குளிக்கிறதில்லை போல...இல்லைன்னா...அவ்வளவு சோப்பக் குடிச்சதுக்கு வயித்தக் கலக்கியிருக்க வேண்டாமான்னு தோணும்.

    Wednesday, October 25, 2006 12:14:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    நன்றி சிவமுருகன்.

    Thursday, October 26, 2006 6:28:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    கொத்ஸ். படம் வந்தப்ப பேசப்பட்டதா? நான் இங்க வந்துட்டதால தெரியலை போல இருக்கு.

    Thursday, October 26, 2006 6:29:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    ஆமாம் வல்லியம்மா. எட்டுவருடங்கள் ஆகிவிட்டன. சரியாகச் சொன்னீர்கள். மந்திர உலகத்திற்குப் போனது போல் தான் ஒவ்வொரு முறையும் இந்தப் பாடலைப் பார்க்கும் போதும் கேட்கும் போதும் பாடும் போதும் தோன்றுகிறது. :-) நல்ல இசை. நல்ல வரிகள்.

    Thursday, October 26, 2006 6:30:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    இராகவன். இந்தப் படத்தின் மற்ற பாடல்களும் (ஒளியும் ஒலியும்) விரைவில் இந்த வலைப்பூவில் வரும். :-)

    விடுகதை மட்டுமில்லை இராகவன். கவிதையையும் அனுபவிக்கணும். ஆராயக் கூடாது. விட்டா 'தேன் வந்து பாயுது காதினிலே'ன்னா ஐயையோ எறும்பு மொய்க்குமேம்பீங்க போலிருக்கே? :-)

    Thursday, October 26, 2006 6:32:00 AM
    --

    சிவமுருகன் said...
    //(ஒளியும் ஒலியும்) //

    ஒளியும் ஒலியும் ?

    or

    ஒளி யும் ஒலி யும் ?

    Thursday, October 26, 2006 7:05:00 AM
    --

    ramachandranusha said...
    குமரன், இரண்டு வருடங்கள் இருக்கும், ஒரு நாள் ஜெ டீவியில் ரம்யாகிருஷ்ணனின் ஆரம்ப காலப்படம். ர.கி சைட்
    போசில் நின்றிருக்க, அவர் அழகை வில்லன் மனோகர் இதே "பிரம்மா கஞ்சன், வள்ளல்" என்ற வசனம் பேசியதும், ஜீன்ஸ்லில் வைர வரிகள் ஞாபகத்துக்கு வந்தன. படத்தின் பெயர் நினைவில்லை, ர.கி இரட்டை வேடம், ஹிரோ நாகேஷ் பையன்.

    Saturday, October 28, 2006 3:44:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    ஆமாம் சிவமுருகன். 'ஒளி'யும் 'ஒலி'யும் தான். :)

    Sunday, October 29, 2006 7:11:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    நீங்க சொல்றது எந்த படம்ன்னு எனக்கும் தெரியவில்லை உஷா.

    Sunday, October 29, 2006 7:12:00 AM
    --

    சிவமுருகன் said...
    அண்ணா,
    //"ஆமாம் சிவமுருகன். 'ஒளி'யும் 'ஒலி'யும் தான். :)" //

    ஒலிக்கான சுட்டி வந்து விட்டது ஒளிக்கான சுட்டியை இடவும் :).

    Sunday, October 29, 2006 7:41:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    சிவமுருகன். இந்தப் பாடலுக்கு ஒளிச்சுட்டி கிடைக்கவில்லை. அடுத்தப் பாடலில் இருந்து ஒளிச் சுட்டியையும் கொடுக்கிறேன்.

    Monday, October 30, 2006 2:34:00 PM
    --

    Anonymous said...
    // சிவமுருகன். இந்தப் பாடலுக்கு ஒளிச்சுட்டி கிடைக்கவில்லை. அடுத்தப் பாடலில் இருந்து ஒளிச் சுட்டியையும் கொடுக்கிறேன். //

    ஒளியும்(n.) ஒளியும்(v.)
    :-)))

    Monday, October 30, 2006 3:05:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    ஆமாம் பெயர் சொல்லாத நண்பரே. எனக்கும் சிவமுருகனின் கேள்வியைப் பார்த்தவுடன் வினைச்சொல்லாகவும் ஒளியும் என்பதை நோக்கலாம் என்று தோன்றியது. :-)

    Tuesday, October 31, 2006 8:56:00 AM
    --

    Johan-Paris said...
    குமரா!
    பாடல் வந்த காலங்களில் ரசித்தபாடல்.வரிகளில் கவிநயமுண்டு.
    யோகன் பாரிஸ்

    Tuesday, October 31, 2006 4:47:00 PM
    --

    ரியல் எஸ்டேட் புரொக்கர் said...
    //அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி
    அங்கே உனக்கொரு வீடு செய்வேன்//

    சிங்கிள் பெட் ரூம், டபுள் ரூம் ஃபிளாட்ஸ் ஃபார் சேல்ஸ்.

    காண்டாக்ட்.

    குமரன் ரியல் எஸ்டேட்ஸ்.

    Wednesday, November 01, 2006 11:10:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    நன்றி யோகன் ஐயா. ஆமாம் ஐயா பாடல் வரிகளில் நல்ல கவிநயம் உண்டு.

    Friday, November 03, 2006 12:54:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    ரியல் எஸ்டேட் ப்ரோக்கரே. நிறுவனத்தின் பெயர் தவறு ஐயா. வைரமுத்து ரியல் எஸ்டேட்ஸ் என்றிருக்க வேண்டும். :-)

    Wednesday, November 08, 2006 1:22:00 PM

    ReplyDelete