சுழி என்ற சொல்லை zero என்ற சொல்லுக்கு பரிந்துரைக்கிறேன்.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். பிள்ளையார் சுழியுடன் எழுத்தைத் தொடங்குவது பலரின் மரபு. ஆனால் எண்களோ சுழியிலிருந்தே தொடங்குகின்றன. zero, சைபர், பூஜ்ஜியம், சூன்யம் என்று பல பெயர்களில் நாம் இந்த எண்ணைக் கூறுகிறோம். இந்த எண்ணுக்கு சுழி என்கிற அழகான பெயர் இருக்கிறது. சுழி என்ற சொல்லை இவ்வெண்ணுக்குப் பதிலாக எழுதுவதையோ அல்லது பேசுவதையோ நாம் இன்னும் தொடங்கவில்லை. பல தமிழறிஞர்களாலும், விக்கியிலும், அகராதிகளிலும் zero என்பதற்கு சுழி அல்லது சுழியம் என்றே குறிக்கப் பெற்றிருக்கிறது. இராம கி ஐயா அவர்கள் பல பதிவுகளில் இச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். எடுத்துக்காட்டாக ஒரு சுட்டி. நான் என்னுடைய தனித்தமிழ் பேசும் ஒரு நண்பருடனும் மேலும் பல நேரங்களிலும் இச்சொல்லையே பாவிக்கிறேன்.
சரியாகப் படிக்காவிட்டால் ஆசிரியர் சுழி மதிப்பெண் கொடுப்பார் என்பதை 'ஆசிரியர் சுழித்துவிடுவார்' என்று கூறுவர் பாமரர். இவ்வகையில் பாமரரிடம் இச்சொல் வினைச்சொல்லாகப் பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால் பொதுவாக இந்த எண்ணைச் சொல்வதற்கு சைபர் என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். சிலர் இதைத் தமிழில் சொல்ல வேண்டும் என்று விரும்பி மிகுந்த சிரமத்துடன் பூஜ்ஜியம் என்று உரைப்பார்கள். முன்பே இப்பதிவுகளில் குறித்தாற்போல் கிரந்த எழுத்து உச்சரிப்பு தமிழர்க்கு அந்நியமானதென்பதால் பூஜ்ஜியத்தை பூச்சியம் என்றும் zero என்பதை ஜீரோ என்றும் சீரோ என்றும் அல்லது வடிவேலு வழக்கில் ச்சீரொ என்றும் பல்விதமாக உச்சரிப்பார்கள். ஆனால் சுழி என்பது எளிதும் சிறிதுமான சொல். இச்சொல் நேரடியாக அவ்வெண்ணின் வடிவத்தைக் குறிக்கிறது. ழகர உச்சரிப்பு சரியாக வராதவர்கள் சுலி என்று உச்சரித்தாலும் எனக்கு அது உடன்பாடே. ஏனெனில் சுலி என்றொரு தமிழ்ச்சொல் இருப்பதாகத் தெரியவில்லை. குழப்பத்திற்கு வழியில்லை.
சுழி என்பதுடன் இந்த எண்ணை சுழியம் என்றும் சொல்லலாம். சுழியம் என்ற பெயரில் தலையில் அணியும் நகை ஒன்று உண்டு. சுழியம் என்றபெயரில் ஒரு திண்பண்டமும் உண்டு. இது சுழியன் என்றும் அழைக்கப்படும். தீப ஒளித்திருநாளில் பெரும்பாலான தமிழர் வீடுகளில் இத்திண்பண்டம் செய்யப்படும். இவற்றுடன் சுழி எண்ணையும் சிற்ப்பாகக் கூறவேண்டிய இடங்களில் சுழியம் என்று நாம் கூறத் தொடங்கலாம். காட்டாக வெப்பயியக்கவியலில் சுழியமென்றால் அது நேரடியாக absolute zeroவைக் குறிக்க வல்லது.
கருவிகளில் zero error எனப்படுவது சுழிப்பிழை என்று சிறப்பாக மொழியாக்கம் பெற்றிருக்கிறது. அமாவசையை நாம் சுழிப்பிறை என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும். சுழிமதி என்றும் அழைக்கலாம். தொலைபேசி எண் அல்லது இது போன்ற எண்களைச் சொல்லுகையில் தமிழில் சொல்ல விரும்பும்போதோ அல்லது தமிழ் மட்டுமே அறிந்தோரிடம் சொல்லும் போதிலோ மற்ற எண்களை எளிதாகச் சொல்லிவிட்டு சுழி வரும்போது இடறுவது வழக்கம். இது போன்ற சுழல்களில் சுழி என்ற சொல் அழகாகப் பொருந்திவரும். நான் உணர்ந்து மகிழ்ந்திருக்கிறேன். நீங்களும் சொல்லிப் பாருங்கள். மகிழுங்கள்.
எல்லோரிடமும் எண்கள் இனி சுழியுடன் தொடங்கட்டுமாக!
எழுதியவர்: ஓகை நடராஜன்.
இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் ஓகை நடராஜன் ஐயா 8 ஏப்ரல் 2007 அன்று இட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
ReplyDelete15 கருத்துக்கள்:
VSK said...
நிலவிலா வானம் என்பதே அமாவாஸ்யை.
சுழி மொழியே!
:)
April 08, 2007 8:30 PM
--
கோவி.கண்ணன் said...
ஓகை ஐயா,
அருமையான இடுகை,
மூணு சுழி 'ண' இரண்டு சுழி 'ன' என்று சொல்லும் போது தயங்காமல் சுழியைப் பயன்படுத்துகிறோம், எண்களைக் குறித்து சொல்லும் போதுதான் சுழியின் பயன்பாடு இல்லாமல் போகிறது, தலையில் 3 சுழி, இரண்டு சுழிக்கு எதேதோ பலன்கள் உண்டாம் :)
எழுத்தில் (ண,ன) இருக்கும் சுழி எண்ணில் இல்லாமல் போனது எண்ணிற்கு சுழி சரியில்லாமல் போனதாலோ தெரியவில்லை.
இனிமேல் சரி படுத்துவோம்.
April 08, 2007 8:33 PM
--
வி. ஜெ. சந்திரன் said...
வணக்கம்
தங்கள் பதிவு பலரையும் சென்றடையும் என்பதில் சந்தேகமில்லை.
சுழி எனும் அடியை கொண்ட சுழியம் எனும் சொல் ஈழத்தமிழ் மக்களால் ஐரோப்பா/ கனடா, மற்றும் ஈழத்தில் நடாத்தப்படும் வானொலிகளில் ஏற்கனவே வந்து விட்டது.
http://snegethyj.blogspot.com/2007/03/blog-post_25.html
April 08, 2007 8:50 PM
--
இலவசக்கொத்தனார் said...
//இனிமேல் சரி படுத்துவோம்.//
ரொம்பப் படுத்தாதீங்க. சரிப் படுத்திடுங்க!! :))
சுழி என்றால் நன்றாகத்தான் இருக்கு. ஆற்றில் இருக்கும் சுழியில் அகப்பட்டால் நம்மை இழுத்துவிடும். அதுபோல் இந்த சுழியிலும் நாம் அனைவரும் இழு படலாம்.
சுழிப்பிறை ரொம்பவே அழகா இருக்கு.
April 08, 2007 9:26 PM
--
வெற்றி said...
ஏன் பூச்சியம் என்ற சொல் தமிழ்ச் சொல் இல்லையா?
April 08, 2007 10:35 PM
--
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//கருவிகளில் zero error எனப்படுவது சுழிப்பிழை என்று சிறப்பாக மொழியாக்கம் பெற்றிருக்கிறது//
அருமையான ஒப்பு நோக்கு ஓகை ஐயா!
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முன்பெல்லாம் சென்னை 600008 என்பதை ஆறு பூஜ்யம் பூஜ்யம் பூஜ்யம்....என்று படிக்கும் போது அடச்சே என்று இருக்கும்! :-)
இப்போது சற்று ஆறுதல்; ஆறு லட்சத்து எட்டு என்கிறார்கள்!
இனி சுழியைப் பரவலாகப் பயன்படுத்தலாம்!
April 08, 2007 10:58 PM
--
G.Ragavan said...
மிகவும் அருமையான பதிவு ஓகை. சுழி என்ற தலைப்பைப் பார்த்ததும் நினைவில் ஓடியவை. ஆசிரியர் சுழிப்பது, சுழியில் அகப்படல், தலைச்சுழிகள். நீங்களும் மற்றவர்களும் ஏற்கனவே சொல்லிவிட்டீர்கள்.
சுழி என்பது வடிவாகுபெயர். சுழிக்கப்பட்டிருப்பதால் சுழி. ஆகையால் பூச்சியத்திற்குச் சுழி என அழைத்தல் சிறப்பே.
ஆனால் சுழிப்பிறை என்பது நிலவிலி நிலையைக் குறிக்கும் என்று நான் எண்ணவில்லை. வட்டமான பிறை என்பதே சுழிப்பிறை என்றாகும். இதற்கு வேறு பெயர் தேடுதல் நன்று என்று தோன்றுகிறது.
April 08, 2007 11:44 PM
--
செந்தழல் ரவி said...
பூச்சியம் என்ற சொல்லை ஏன் பயன்படுத்தலாகாது ?
சென்னை தொலைக்காட்சியிலே கூட அப்படித்தானே சொல்கிறார்கள் ?
April 09, 2007 12:50 AM
--
SP.VR. சுப்பையா said...
அவனுக்கு சுழி சரியில்லை என்பார்கள்
வாழ்க்கை பூஜ்ஜியத்திலிரூந்து துவங்குவதால் , துவக்கமே சரியில்லை என்பதை அவனுக்கு சுழி சரியில்லை என்பார்கள். சுழி என்பது இங்கு தலையெழுத்து என்ற பொருளில் வரும்!சுழிக்கு அப்படியும் ஒரு பொருள் உண்டு!
April 09, 2007 1:13 AM
--
ஓகை said...
// நிலவிலா வானம் என்பதே அமாவாஸ்யை//
வீயெஸ்கே, அமாவாஸ்யைக்கு நிலவிலா வானம் என்பதுதான் மொழிபெயர்ப்பு என்றால் அமாவஸ்யை என்ற சொல் சரியான பொருளைத் தரவில்லை என்றே எண்ண வேண்டியிருக்கிறது. ஏனெனில் உண்மையில் நிலவிலா வானம் என்பது தவறல்லவா! நாம் காணமுடியாத நிலவு சுழிப்பிறை அன்றும் கூட வானத்தில் தானே இருந்துகொண்டிருக்கிறது.
April 09, 2007 12:00 PM
--
ஓகை said...
கோவி.கண்ணன், வி.ஜெ.சந்திரன், இலவச கொத்தனார், கண்ணபிரான் ஆகியோருக்கு என் நன்றி.
வி.ஜெ.சந்திரன் நீங்கள் கொடுத்த சுட்டிக்கு நன்றி.
April 09, 2007 12:04 PM
--
ஓகை said...
வெற்றி, செந்தழல் ரவி,
பூஜ்ஜியம் என்பதே பூச்சியம் என்று சொல்லப்படுகிறது. இதில் வரும் கிரந்த எழுத்துக்களால் இச்சொல் வடமொழி என்றே ஊகிக்கிறேன். அறிந்தவர் யாரேனும் தெளிவு படுத்தவேண்டும். மேலும் இச்சொல்லை பாமரர் புழங்குவதில்லை. அது என் ஊகத்தை மேலும் வலுவாக்குகிறது..
April 09, 2007 12:12 PM
--
ஓகை said...
ராகவன்,
// ஆனால் சுழிப்பிறை என்பது நிலவிலி நிலையைக் குறிக்கும் என்று நான் எண்ணவில்லை. //
சரிதான். சுழிப்பிறை நிலவிலி நிலையைக் குறிக்கவில்லை. நிலவிலி நிலை என்பது நம் புவிக்கு என்று இருந்திருக்கிறது? என்றுமே இருந்ததில்லை.
//வட்டமான பிறை என்பதே சுழிப்பிறை என்றாகும்.//
இது தவறாகும். பிறை என்பது நிலவின் நாம் காணும் பகுதியைக் குறிக்கும். முழுப்பிறை என்பது முழுநிலவு என்பதில் எனக்கு உடன்பாடில்லை.
அவ்வாறு நிலவின் நாம் காணும் பகுதியைக் குறிக்கும் பிறை என்ற சொல்லுடன் எண்ணிக்கை சேரும்போது அது காணும் பகுதியின் அளவைக் குறிக்கிறது. காட்டாக முதற்பிறை, மூன்றாம்பிறை. ஆகவே சுழிப்பிறை முதற்பிறைக்கு முன் பிறை என்று சொல்லலாமல்லவா?
April 09, 2007 12:24 PM
--
VSK said...
வானத்தில் நிலவு இருக்கிறதா இல்லையா என்பதல்லவே கேள்வி.
வளர்ந்து முழுமதியாகி வானத்தை நிறைத்துப், பின்னர் படிப்படியாகத் தேய்ந்து ஒருநாள் வானில் நிலவு தென்படாமல் போகிறது.
ஆனால், உங்கள் கூற்றுப்படி, எல்லா நாட்களிலும் நிலவு முழுமையாகத்தானே இருக்கிறது!
இதனைக் குறிக்கும் வகையிலேதான், பௌர்ணமி, அமாவாஸ்யை, எனச் சொல்லி வைத்தனர்.
அதேநோக்கில் பார்க்கும் போது, முழுமதி, நிறைமதி, பிறைமதி, நிலவிலா வானம் என்பவை தக்க பொருள் தரும் என்பது என் எண்ணம்.
சுழி என்றால் வட்டம். வட்டமதி என்பது முழுநிலவையும் இணைத்துக் குழப்ப நேரலாம்.
சுழிமதி என "O" போடுகையில் நான் ஒரு முழுநிலவையே பார்க்கிறேன்.... உள்ளில் தெரியும் ஒளி கண்டு!
"கருமதி", "கருப்பு நிலா" எனச் சொல்லலாம்.[மதி இருக்கிறது; ஆனால் நமக்குத்தான் கருப்பாகத் தெரிகிறது என்னும் பொருளில்]
நன்றி, ஓகையாரே!.
April 09, 2007 12:27 PM
--
குறும்பன் said...
இந்த "சுழி"க்கு நல்ல சுழி இருந்துச்சுன்னா இது எல்லோராலயும் புழங்கப்படும். :-)))
எல்லோரும் புழங்கி இச்"சுழி"க்கு நல்ல சுழி ஏற்படுத்துவோம்.
April 20, 2007 9:51 PM
சுழியம் என்ற சொல் அண்மையில் வந்த எவனோ ஒருவன் திரைப் படத்தில் பாவிக்கப் பட்டிருக்கிறது. நவீன பாரதியாக ரௌத்திரம் நடத்தியிருந்தார் கதை நாயகன் அதில்.
ReplyDeleteநான் அந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை செயபால். பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் இதனை நினைவில் வைத்திருந்து கவனிக்க வேணும்.
ReplyDeleteபூர்ணம்
ReplyDelete