தங்க நாணை பாரியிடமிருந்து பரிசிலாகப் பெற்ற கதையை விறலி சொல்லச் சொல்ல அங்கவை, சங்கவை இருவர் கண்களிலிருந்தும் கண்ணீர் பெருக்கெடுக்கத் தொடங்கிவிட்டன. இன்றும் முழுநிலவு காய்கிறது. அன்றைக்கும் முழு நிலவு காய்ந்ததே. சோகமான குரலில் அங்கவை ஒரு பாட்டைப் பாடத் தொடங்கினாள். அவளுடைய பாடலுக்கு ஏற்ப பாணரும் விறலியும் தத்தமது யாழ்களை மீட்டத் தொடங்கினர்.
"அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்
எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார்"
இதற்கு மேல் அங்கவையால் பாட இயலவில்லை. சங்கவை தொடர்ந்தாள்.
"இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவின்
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே"
இந்தப் பெண்களின் உணர்வுகள் இந்தப் பாடலில் பெருக்கெடுத்ததால் இந்தப் பாடல் பல்லாயிரம் வருடங்கள் மக்கள் நினைவில் நிலை நின்று பாரியின் புகழையும் பாரி மகளிரின் இழப்பையும் கூறி நிற்கும் என்று கபிலருக்குத் தோன்றியது. தன்னுடைய கவிதைகளிலும் உணர்வுகள் வெளிப்படுவதுண்டு. ஆனால் தனது புலமையின் விளைவாக அந்த உணர்வுகள் உவமைகள் என்னும் அணிகளைக் கொண்டே வெளிப்படுவதால் வருங்காலம் பாடல்களில் இருக்கும் உணர்வுகளை விட உவமைகளையே நினைவில் நிறுத்தும். உவமைகளைச் சுவைக்கத் தொடங்கிய உடனேயே அந்த உவமைகளைச் சொன்னவர் யார்; அந்த உவமைகள் வெளிப்படுத்திய உணர்வுகள் என்ன என்பவை மறந்து போகத் தொடங்கி அந்த உவமைகளை மட்டும் நினைவில் நிறுத்தி அவற்றைத் தாங்களும் எடுத்தாளத் தொடங்குவார்கள். அப்படி எல்லாம் நிகழும் போது முதல் கவிதை மறந்து போகும். தன் கவிதைகளுக்கு நேரக்கூடிய இவை இந்தப் பெண்கள் பாடிய இந்தக் கவிதைக்கு நேராது என்று கபிலருக்குத் தோன்றியது. ஒப்புமைக்காக மூன்றே பொருட்களை எடுத்துக் கொண்டு தங்கள் உள்ளக் குமுறல்களையும் கையறு நிலையையும் இந்தப் பெண்கள் மிக அழகாகச் சொல்லிவிட்டார்கள். எந்த வித உவமைகளும் இல்லை; அலங்காரங்களும் இல்லை. இப்படிப்பட்ட நேரடியான உணர்வுகள் மிகும் பாடல்கள் மக்கள் மனத்தில் நீங்காத இடம் கொண்டு நிலைத்து நிற்கும் தானே.
தந்தையாரின் இறப்பால் மனம் மிக நொந்து வருந்தும் இளம்பெண்கள் இருவரையும் விறலி அணைத்துக் கொண்டு தேற்றினாள். எத்தனை தான் தேற்றினாலும் மறைந்துவிடக்கூடிய இழப்பா அது? மறந்துவிடவும் முடியுமா? ஆனாலும் மூத்தவள் ஒருத்தியின் அணைப்பு கொஞ்சம் மன அமைதியைக் கொடுத்ததென்னவோ உண்மை. மாண்டவர் மீள்வரோ என்றெல்லாம் அறிவு சான்ற மூத்தோர் எத்தனை சொன்னாலும் ஆதரவுடன் ஒருவர் அணைத்துக் கொண்டு தேற்றும் போது கிடைக்கும் அமைதி அந்த அறிவுரைகளில் கிடைப்பதில்லையே. உணர்வுகள் மிஞ்சும் போது அறிவுரைகளால் அவற்றை ஓரளவிற்குத் தான் அமைதிபடுத்த முடிகின்றது.
நிலவொளியில் அமர்ந்து வெகு நேரம் பாரியின் பெருமைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர் ஐவரும். பேசியும் அழுதும் களைத்து ஒவ்வொருவராக நிலா முற்றத்திலேயே உறங்கத் தொடங்கிவிட்டனர். கபிலரும் பாணரும் ஒவ்வொருவர் மேலும் ஒரு போர்வையைச் சாற்றிவிட்டுத் தாங்களும் படுத்து உறங்கத் தொடங்கினர். இன்றைக்கு தன் மனத்தை உருக்கிப் பல பாடல்களைப் பெற்ற பறம்பு மலையை இனி வாழ்நாளில் எப்போது காணப்போகிறோமோ என்று எண்ணிக் கொண்டே உறங்கிப் போனார் கபிலர். நாளை முழுவதும் பறம்பு நாடு தன்னிடம் பல பாடல்களைப் பெறப் போகிறது என்பதை அறியாமல் போனார் அவர்.
***
"இந்த பறம்பு நாடு இது வரை பெற்றிருந்த பேறு தான் என்னே? எத்தனை கொடிய அறிகுறிகள் தோன்றினாலும் உங்கள் தந்தை செங்கோல் வழுவாது ஆண்டிருந்ததால் எந்தக் குறையும் இன்றி இருந்ததே. இனி என்னாகுமோ?"
"பெரியப்பா. கொடிய அறிகுறிகள் என்று சொன்னீர்களே. அவை என்ன? நாங்கள் கண்டதில்லையே?"
"சங்கவை. நீ பிறந்த பின்னரும் அந்த அறிகுறிகள் தோன்றியுள்ளன. ஆனால் அவற்றின் பாதிப்பு பறம்பு நாட்டிற்கு இல்லாமல் போனதால் உனக்கு அவை தெரியவில்லை. கருநிறம் கொண்ட கோள்மீனான காரியாம் சனி புகையுடன் வானில் தோன்றுவதும் புகையை வாலாகக் கொண்ட தூமகேது வானில் தோன்றுவதும் தெற்கு திசையில் வெள்ளி தோன்றுவதும் நாட்டிற்குக் கேட்டை விளைவிக்கும் அறிகுறிகள். பாரியின் ஆட்சியில் பறம்பு நாடு இருந்த போது பல முறை அவை தோன்றியிருக்கின்றன. ஆனால் அவனுடைய செங்கோல் திறம்பாமை அந்த அறிகுறிகளின் பாதிப்பில் இருந்து நாட்டைக் காப்பாற்றிவிட்டன".
"நீங்கள் சொன்ன இந்த அறிகுறிகளால் என்ன விதமான பாதிப்புகள் ஏற்படும் பெரியப்பா?"
"மழை பொய்த்துப் போகும். அதனால் வயல் வெளிகளில் பயிர் விளைவது குன்றும். புல்லும் முளைக்காத நிலை தோன்றும். அழகிய கன்றினை ஈன்ற பசுக்கள் தின்று இளைப்பாறப் புற்களும் இல்லாமல் துயருறும். இவை பொதுவாகத் தோன்றக்கூடிய பாதிப்புகள். இவற்றை எல்லாம் விட மன்னவன் இறந்துபட நேரிடும் என்பதே பெரும்பாதிப்பு"
"இவ்வளவு கொடிய பாதிப்புகள் ஏற்படாமல் மன்னவனது செங்கோல் தடுத்ததா? அது எப்படி பெரியப்பா?"
"முறையோடு மன்னவன் ஆண்டு வந்தால் அந்த நாட்டில் சான்றோர்கள் வாழ விரும்பி வந்து கூடுவார்கள். சான்றோர் ஒருவர் இருந்தாலே அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்று கேட்டிருப்பீர்களே. உன் தந்தையை அண்டி வாழ சான்றோர் பலரும் வரும் போது இந்த இயற்கைக் குறிகளால் என்ன செய்ய முடியும்? செங்கோல் வளையாமையால் சான்றோர் மிகுந்தனர். சான்றோர் மிகுந்ததால் மழை பொய்க்கவில்லை
மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்
வயலகம் நிறையப் புதற்பூ மலர
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க்கண்
ஆமா நெடுநிரை நன்புல் ஆரக்
கோல் செம்மையில் சான்றோர் பல்கிப்
பெயல் பிழைப்பறியாப் புன்புலத்ததுவே
பிள்ளை வெருகின் முள்ளெயிறு புரையப்
பாசிலை முல்லை முகைக்கும்
ஆய்தொடி அரிவையர் தந்தை நாடே"
***
பாடற்குறிப்புகள்:
1. அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின் என்று தொடங்கும் பாடல் புறநானூறு 112ம் பாடல். பாரி மகளிர் பாடியது.
திணை: பொதுவியல்; துறை: கையறுநிலை.
பொழிப்புரை: அன்றொரு நாள் முழுநிலவில் எங்கள் தந்தையையும் நாங்கள் பெற்றிருந்தோம் எங்கள் குன்றத்தையும் பிறர் அடையவில்லை. இன்று இந்த முழுநிலவு நாளில் வென்று பகைவரை வீசி எறியும் முரசினைக் கொண்ட வேந்தர்கள் எங்கள் குன்றை அடைந்தார் எங்கள் தந்தையையும் நாங்கள் இழந்தோமே.
2. மைம்மீன் என்று தொடங்கும் பாடல் புறநானூறு 117ம் பாடல். பறம்பு நாட்டைக் கபிலர் பாடியது.
திணை: பொதுவியல்; துறை: கையறுநிலை.
பொழிப்புரை: கரிய நிற கோள் மீனான காரி புகையுடன் கூடித் தோன்றினாலும், தூமகேதுவான புகைக்கொடி தோன்றினாலும், தெற்கு திசை ஓரமாக வெள்ளி ஓடினாலும், வயலகம் நிறைய புதற்பூவாகிய நெல் விளையும்; வீட்டில் முதல் மகவை ஈன்ற அழகிய கண்களையுடைய பசுவின் கூட்டம் புற்களை ஆர உண்ணும்; பாரியின் செங்கோல் செம்மையால் சான்றோர்கள் பல்குவர். அதனால் மழை பொய்க்காத பெருமை கொண்ட நாடு இது. இளம்பூனையின் முற்களைப் போன்ற பற்களை ஒத்த முல்லைப் பூவினை சூடிய வளையல்கள் அணிந்த பாரிமகளிரின் தந்தை நாடு இனி பாரியின்றி என்ன பாடுபடுமோ?
'கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும் விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்' என்று இந்த மூன்று காரணங்களையும் சிலப்பதிகாரத்திலும் காணலாம்.
'முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்' என்ற குறளையும் 'ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர் காவலன் காவானெனின்' என்ற குறளையும் இங்கே ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
மிக அழகான நடை. நல்ல தமிழ் அறிமுகம். ரசித்துப் படித்தேன்.
ReplyDelete//கருநிறம் கொண்ட கோள்மீனான காரியாம் சனி புகையுடன் வானில் தோன்றுவதும் புகையை வாலாகக் கொண்ட தூமகேது வானில் தோன்றுவதும் தெற்கு திசையில் வெள்ளி தோன்றுவதும் நாட்டிற்குக் கேட்டை விளைவிக்கும் அறிகுறிகள்//
ReplyDeleteகுமரா!
இவை நம்பிக்கைக்குரிய செய்திகளா??
தூமகேது தமிழ்ச் சொல்லா??
பாரி வள்ளல் செல்வங்களைக் கண்டது
ReplyDeleteஅருமை.குமரன் எளிய தமிழ் நடை ரசிக்கும்படி இருக்கிறது.
யோகன் கேட்கும் கேள்விகளின் பதிலுக்குக் காத்து இருக்கிறேன்.
வழக்கமான பாராட்டுகளுக்கும் வழக்கமான இரசித்துப் படித்தேனுக்கும் எனது வழக்கமான நன்றிகள் இராகவன். :-)
ReplyDeleteயோகன் ஐயா.
ReplyDeleteஉங்களது முதல் கேள்வி புரியவில்லை. இரண்டாவது கேள்விக்குப் பதில் உறுதியாகத் தெரியவில்லை. புரிந்தவரையிலும் தெரிந்தவரையிலும் பதில் சொல்லியிருக்கிறேன்.
1. இவை நம்பிக்கைக்குரிய செய்திகளா?
இந்தக் கேள்விக்குப் பல விதமான பதில்கள் தோன்றுகின்றன. ஒவ்வொன்றையும் தருகிறேன்.
நம்பிக்கையின் பாற்பட்டவையே இந்த செய்திகள். காரி புகைதலும், வால்நட்சத்திரம் தோன்றுவதும், தென்றிசையில் வெள்ளி எழுதலும் நாட்டிற்கும் நாட்டை ஆள்பவர்களுக்கும் கெடுதல் என்ற நம்பிக்கைகளைப் பற்றிய செய்திகள் இவை. இன்றைக்கும் தூமகேதுவாம் வால்நட்சத்திரம் தோன்றினால் நாட்டை ஆள்பவர் இறப்பார்கள் என்றொரு நம்பிக்கை பாரதத்தில் இருப்பதை அறிவேன். இந்திரா அம்மையார் இறந்த போதும் எம்.ஜி.ஆர் இறந்த போதும் அப்படி ஒரு பேச்சு எழுந்தது.
இன்றைக்கும் நாம் நம்பக்கூடியவையா இந்த செய்திகள் என்றால் அது அவரவர் நிலையைப் பொறுத்தது. இவை மூட நம்பிக்கைகள் என்று வகைப்படுத்தக் கூடியவை தான்.
இப்படி மூட நம்பிக்கைகள் என்று வகைபடுத்தக் கூடியவை சங்க இலக்கியத்தில் இருந்திருக்கிறதா என்றால் ஆமாம் இருந்திருக்கிறது. அதற்கு சான்றுகள் கபிலரின் இந்தப் பாடலும் அதே போன்ற சொற்றொடரைக் கொண்ட சிலப்பதிகார வரிகளும். மேலும் சில தொடர்புடைய செய்திகளும் தமிழ் இலக்கியங்களில் இருக்கின்றன. வேண்டுமென்றால் எடுத்துத் தருகிறேன்.
இந்த நம்பிக்கைகள் பழந்தமிழருக்கு உரியனவா வடவர் கொண்டு வந்தவையா என்றால் அதற்குத் தகுந்த தரவுகளை நான் இன்னும் காணேன். நான் கண்டு இங்கே தந்தவை எல்லாம் சங்க கால தமிழரிடையே இந்த நம்பிக்கைகள் இருந்திருக்கின்றன என்பதைக் காட்டும் தரவுகளை மட்டுமே. உவமைகளாக அவை எடுத்து வைக்கப்படுவதைப் பார்த்தால் அவை மக்கள் நடுவே நன்கு ஊறிய நம்பிக்கைகளாகத் தான் தோன்றுகின்றன. சிலம்பிலும் புறநானூறிலும் ஏறக்குறைய ஒரே மாதிரி சொற்றொடர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கண்டாலும் ஏதோ பழமொழியை அப்படியே பாட்டில் எடுத்து ஆண்டார்களோ என்று தோன்றுகிறது. பழமொழி என்றால் அது மக்கள் நடுவில் ஆழமாக இருக்கும் நம்பிக்கைகள்/வழக்கங்கள் போன்றவைகளைக் காட்டுபவை தானே.
அற்றைத் தமிழருக்கு இந்த நம்பிக்கைகள் இருந்ததால் இற்றைத் தமிழர்கள் அப்படியே அவற்றை நம்ப வேண்டிய கட்டாயம் இல்லை. இன்று நாம் நம்ப மறுப்பதால் அற்றைத் தமிழருக்கும் அந்த நம்பிக்கைகள் இல்லாமல் இருந்தது என்று வலுவில் நிலை நாட்ட வேண்டிய கட்டாயமும் இல்லை. நல்லதெல்லாம் இங்கே நிலை கொண்டிருந்தது; அல்லதெல்லாம் வெளியிலிருந்து வந்தது என்று எண்ணுவது ஏரணத்திற்கு ஒவ்வாது.
இங்கே சொன்னவை எல்லாம் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதிலாக அமைந்ததா இல்லையா என்று தெரியவில்லை ஐயா. நீங்கள் கேட்ட கேள்விக்கும் அதன் தொடர்பாக என் மனத்தில் தோன்றிய தொடர் கேள்விகளுக்கும் இங்கே பதில் சொல்லியிருக்கிறேன். அவ்வளவு தான்.
2. தூமகேது தமிழ்ச்சொல்லா?
தூமகேது என்ற சொல் வடசொல்லைப் போல் தான் தோன்றமளிக்கிறது. வடமொழி நூற்களில் அந்தச் சொல் பயின்று வருவதை அறிவேன். தூமம் என்ற சொல் வடமொழியில் புகையையும் கேது என்ற சொல் கொடியையும் குறிக்கும். 'தூமந்தோன்றினும்' என்று இந்த புறநானூற்றுப் பாடலும் 'தூமக்கொடியும் சுடர்த்தோரணங்களும்' என்று மணிமேகலையும் 'புகைக்கொடி தோன்றினும்' என்று சிலப்பதிகாரமும் சொல்வதைப் பார்த்தால் தூமம், கேது போன்ற வடசொற்கள் தமிழில் பயிலத் தொடங்கிவிட்ட காலம் என்று தோன்றுகிறது (அவை வடசொற்களாக இருந்தால்). சொற்பிறப்புகளை அறியாததால் தூமகேது என்பது தமிழ்ச் சொல்லா, வடசொல்லா, இருபிறப்பியா என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் பொருள் பொருத்தத்தில் தூமகேது/தூமக்கொடி/புகைக்கொடி போன்ற சொற்கள் அதே பொருளில் பயின்று வந்துள்ளதைக் காண்கிறேன்.
இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்பதற்கு நன்றிகள் யோகன் ஐயா. முன்பே பல முறை சொன்னது போல் இப்படிப்பட்ட செய்திகள் பல இந்தத் தொடர் முழுவதிலும் இருக்கின்றன. சில நேரங்களில் மட்டுமே நீங்கள் கேட்டது போல் கேள்விகள் வந்து அவற்றை விளக்கும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. மற்ற நேரங்களில் தரவுகளின் அடிப்படையில் நான் சொல்லிவந்தவை ஊமைகளாக அந்த அந்தப் பகுதிகளில் காத்திருக்கின்றன. :-)
பாராட்டுகளுக்கு நன்றிகள் வல்லியம்மா. என்னால் இயன்றவரையில் யோகன் ஐயாவின் கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறேன்.
ReplyDelete//இவை மூட நம்பிக்கைகள் என்று வகைப்படுத்தக் கூடியவை தான்.
ReplyDeleteஇப்படி மூட நம்பிக்கைகள் என்று வகைபடுத்தக் கூடியவை சங்க இலக்கியத்தில் இருந்திருக்கிறதா என்றால் ஆமாம் இருந்திருக்கிறது.//
வான சாஸ்த்திரம் மூட நம்பிக்கை என்றால் இவையும் மூட நம்பிக்கையே..:)
வான சாஸ்திரம் என்று சோதிடத்தை சொல்கிறீர்களா மௌலி. அப்படி என்றால் நீங்கள் சொல்வது சரி தான். மனிதன் பாதி மிருகம் பாதி என்று சொல்வது போல் வானசாஸ்திரம்/சோதிடம் அறிவியல் பாதி கலை பாதி என்பது என் எண்ணம். :-)
ReplyDeleteஅழகிய தமிழ் நடை..நல்ல பாடல்கள்..பொழிப்புரையுடன் நன்கு ரசிக்க முடிந்தது..வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி பாசமலர்.
ReplyDeleteஇந்த வாரம் வேலை அதிகமாக இருந்ததால் அடுத்த பகுதியை எழுத முடியவில்லை. அடுத்த வாரம் முதல் செவ்வாய் கிழமைகளில் ஒவ்வொரு பகுதியாக எழுதலாம் என்று எண்ணுகிறேன்.