Thursday, April 03, 2008

துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ ...

பாவேந்தர் பாரதிதாசனாரின் பாடல் இது. இதனைப் படித்திருக்கிறேன். ஏதோ ஒரு பழைய திரைப்படத்திலும் கேட்டிருக்கிறேன். அண்மையில் வலையில் மேய்ந்து கொண்டிருந்த போது கர்நாடக இசை வடிவில் இந்தப் பாடலை இருவர் பாடியிருப்பதைப் பார்த்தேன். அருமையாக இருக்கின்றன. அவற்றை இங்கே கேளுங்கள்.

இயற்றியவர்: பாவேந்தர் பாரதிதாசன்
தலைப்பு: பெற்றோர் ஆவல்
பாடியவர்கள்: நித்யச்ரீ, சுதா இரகுநாதன்
இராகம்: தேஷ்
தாளம்: ஆதி, ஏகம்.

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்கமாட் டாயா? -- எமக்
கின்பம் சேர்க்கமாட் டாயா? -- நல்
அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ
அல்லல் நீக்கமாட் டாயா? -- கண்ணே
அல்லல் நீக்கமாட் டாயா? துன்பம்...

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வில் உணர்வு சேர்க்க -- எம்
வாழ்வில் உணர்வு சேர்க்க -- நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்டமாட் டாயா? -- கண்ணே
ஆடிக் காட்டமாட் டாயா? துன்பம்...

அறமி தென்றும்யாம் மறமி தென்றுமே
அறிகி லாத போது -- யாம்
அறிகி லாத போது -- தமிழ்
இறைவ னாரின் திருக்குறளிலே ஒருசொல்
இயம்பிக் காட்டமாட் டாயா? -- நீ
இயம்பிக் காட்டமாட் டாயா? துன்பம்...

புறம் இதென்றும் நல்லகம் இதென்றுமே
புலவர் கண்ட நூலின் -- தமிழ்ப்
புலவர் கண்ட நூலின் -- நல்
திறமை காட்டி உனை ஈன்ற எம் உயிர்ச்
செல்வம் ஆகமாட் டாயா? -- தமிழ்ச்
செல்வம் ஆகமாட் டாயா? துன்பம்...

இந்தப் பாடலுக்குப் பொருள் விளக்கம் சொல்லவேண்டுமா என்று தெரியவில்லை. ஒரு வேளை சொற்களைக் கொஞ்சம் மாற்றி எழுதினால் இன்னும் நன்றாகப் புரியுமோ என்று தோன்றுவதால் அதனைச் செய்கிறேன். ஏதேனும் கேள்வி இருந்தால் கேளுங்கள். பதில் தெரிந்தால் சொல்கிறேன்.

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? எமக்கு இன்பம் சேர்க்க மாட்டாயா? தமிழில் பாடி நீ நல் அன்பிலா நெஞ்சில் அல்லல் நீக்க மாட்டாயா? கண்ணே அல்லல் நீக்க மாட்டாயா?

வன்பும் எளிமையும் (வன்மையும் ஏழ்மையும்) சூழும் நாட்டிலே வாழ்வில் உணர்வு சேர்க்க எம் வாழ்வில் உணர்வு சேர்க்க நீ அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால் ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே ஆடிக் காட்ட மாட்டாயா?

அறம் இதென்றும் யாம் மறம் (அறமல்லது) இதென்றுமே அறிகிலாத போது யாம் அறிகிலாத போது தமிழ் இறைவனாரின் திருக்குறளிலே ஒரு சொல் இயம்பிக் காட்ட மாட்டாயா? நீ இயம்பிக் காட்ட மாட்டாயா?

புறம் இதென்றும் நல் அகம் இதென்றுமே (புறநானூறு, அகநானூறு) புலவர் கண்ட நூலின் தமிழ்ப் புலவர் கண்ட நூலின் நல் திறமை காட்டி உனை ஈன்ற எம் உயிர்ச் செல்வம் ஆக மாட்டாயா? தமிழ்ச் செல்வம் ஆகமாட்டாயா?

***

இந்த இடுகை 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 6 ஜூன் 2006 அன்று இடப்பட்டது.

16 comments:

  1. இந்த இடுகை 'கேட்டதில் பிடித்தது' பதிவில் 6 ஜூன் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

    78 comments:

    Kanags said...
    அருமையான பாடலின் அந்தத் தொடுப்புகளுக்கு நன்றி. ஓர் இரவில் இடம்பெற்ற அந்தப் பழைய பாடலை இங்கு தரவிறக்கலாம்.

    Tuesday, June 06, 2006 6:23:00 AM
    --

    சிவமுருகன் said...
    அண்ணா,
    நல்ல பாடல்.
    நானும் ஒரு படத்தில் கேட்டுள்ளேன்.

    Tuesday, June 06, 2006 6:28:00 AM
    --

    sivagnanamji(#16342789) said...
    "ஓர் இரவு" திரைப்படம். அண்ணா,கதை வசனம்;ஏவிஎம் தயாரிப்பு
    முதல் 2 பத்திகள்[6+6 வரிகள்]மட்டுமே படத்தில் இடம்பெறும்

    பாரதியாரின் மணைவியார் மரணப்படுக்கையில் இருந்தபொழுது
    இப்பாடலைப் பாடச்சொல்லிக் கேட்டாராம்

    Tuesday, June 06, 2006 6:32:00 AM
    --

    இலவசக்கொத்தனார் said...
    அருமையான பாடல் குமரன். இந்த நல்ல வேலையை உயரே வையுங்கள். :)

    Tuesday, June 06, 2006 6:41:00 AM
    --

    G.Ragavan said...
    ஆகா...மிகவும் அருமையான பாடல். எத்தனை அழகான தமிழ். அமிழ்து தானென்று சொல்லாமல் சொல்கிறதே.

    இந்தப் பாடலை இரவு கேட்டுவிட்டு பின்னூட்டம் இடுகிறேன்.

    Tuesday, June 06, 2006 6:44:00 AM
    --

    நாமக்கல் சிபி said...
    நல்ல பாடல் குமரன்.
    ஏதோ ஒரு படத்தில் கொஞ்சம் கேட்டிருந்தாலும், முழுமையாய் இப்போதுதான் படித்தேன்.

    நன்று. நன்றி.

    Tuesday, June 06, 2006 7:14:00 AM
    --

    Dubukku said...
    என்னுடைய பேவரிட் பாட்டு இது. தேஷ் ராகம் ரொம்பவும் பிடிக்கும். சுட்டிக்கு நன்றி.

    Tuesday, June 06, 2006 7:53:00 AM
    --

    மதுமிதா said...
    முழு பாடலும் அருமையான பாடல் குமரன்
    நன்றி

    பாடல் இங்கே கேட்கவில்லை

    Tuesday, June 06, 2006 8:05:00 AM
    --

    johan -paris said...
    குமரன்!
    மிக இனிய பாடலொன்று! பாரதிதாசரின் கவி வளத்துக்குச் சான்று!! இளைய தலைமுறையினரின் குரலில் இப்பேதே!!! கேட்டேன்.
    நன்றி
    யோகன் பாரிஸ்

    Tuesday, June 06, 2006 8:29:00 AM
    --

    rakkatchi said...
    INTHA PADALAI KETKUMBOTHU NAAN ENNAIYE MARANDU VIDUKIREN

    Tuesday, June 06, 2006 9:06:00 AM
    --

    வெற்றி said...
    குமரன்,
    வணக்கம்.
    ஆகா! பாவேந்தரின் அருமையான பாடலைத் தந்தமைக்கு நன்றிகள். மனதிற்கு இதம் தரும் பாடல் மட்டுமல்ல, ஆறுதல் அளிக்கும் பாடலும் கூட.

    நன்றி.

    அன்புடன்,
    வெற்றி

    Tuesday, June 06, 2006 9:09:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    //இந்த நல்ல வேலையை உயரே வையுங்கள். :)
    //

    என்ன சொல்றீங்கன்னு புரியலையே கொத்ஸ்? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க.

    Tuesday, June 06, 2006 9:46:00 AM
    --

    நாமக்கல் சிபி said...
    //இந்த நல்ல வேலையை உயரே வையுங்கள். :)
    //

    புரியவில்லையா குமரன்,

    கீப் இட் அப் திஸ் குட் வொர்க் என்பதைத்தான் தமிழில் சொல்கிறார் கொத்ஸ்!

    Tuesday, June 06, 2006 9:55:00 AM
    --

    SK said...
    நல்ல பாடல்!

    அடுத்து, பாவேந்தரின்,

    'தலை வாரிப் பூச்சூட்டி உன்னை
    பாடசாலைக்குப் போவென்று
    சொன்னாள் உன் அன்னை"

    பாடலைப் போடுங்கள்!

    இ.ந.வே.உ.வை!!

    Tuesday, June 06, 2006 10:02:00 AM
    --

    ramachandranusha said...
    குமரன், பாடலுக்கு வாயசைத்தவர்கள் ராகினி (பத்மினி சகோதரி) மற்றும் நாகேஸ்வர ராவ்காரூ.

    Tuesday, June 06, 2006 10:22:00 AM
    --

    மலைநாடான் said...
    ஆஹா!
    என்ன சுகம். இதுவரையில் திரையிசைப்பாடலைத்தான் கேட்டிருக்கின்றேன். இந்த இருவித்தகிகளின் குரலிலும் இன்றுதான் கேட்டுள்ளேன்.
    நன்றி குமாரா!

    Tuesday, June 06, 2006 10:58:00 AM
    --

    G.Ragavan said...
    நற்கருப்பஞ்சாற்றிலே தேன் கலந்து ஊன் கலந்து உவட்டாமல் உண்ட கதை சொல்வார் அப்பரடிகள். அந்தச் சுவையை இன்று இந்தப் பாடலில் கண்டேன்.

    தமிழின் செறிவும் அழகும் வளமும் நிறைந்த பாவேந்தரின் இந்தப் பாடலை கர்நாடக இசையில் கேட்க எத்தனை சுகமாக இருக்கிறது. எந்த இசையிலும் தமிழ் ஏறி அமரும் என்பது எவ்வளவு உண்மை.

    நல்ல தமிழைச் செவியால் நுகரும் இன்பம் நீடிக்காதா....என்னைப் பீடிக்காதா...

    Tuesday, June 06, 2006 11:46:00 AM
    --

    G.Ragavan said...
    SK, தலைவாரிப் பூச்சூடிப் பாடலை எழுதியவர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள். மிகவும் எளிமையானவை அவரது கவிதைகள். அவைகளை இசைக் கோர்வையாய்க் கேட்க எனக்கும் ஆவல்தான். வலைப்பூக்களில் இசைத்திறம் பயின்றவர் இல்லையா? எனது ஆசையை நிறைவேற்றலாகாதா? இசை வல்லாளர்களே....இந்தக் கோரிக்கைக்கும் கொஞ்சம் செவி குடுங்களேன்.

    Tuesday, June 06, 2006 11:50:00 AM
    --

    ஓகை said...
    குமரன்,
    படத்தில் பாடலுக்கு வாயசைத்தவர் ராஹினி இல்லை. அவர் லலிதா. இவர் பத்மினியின் மூத்த சகோதரி. ராஹினி பத்மினியின் இளைய சகோதரி.
    ராஹினி பாரதிதாசனின் இன்னொரு பாடலுக்கு 'கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி' படத்தில் வாயசைத்திருக்கிறார். அந்தப் பாடல் 'வெண்ணிலாவும் வானும் போல' என்று தொடங்கும். எம்மெல்வி அவர்கள் பாடியது. மிக அருமையான பாடல். முடிந்தால் அதையும் போடுங்கள்

    ஓகை நடராஜன்.

    Tuesday, June 06, 2006 12:38:00 PM
    --

    Vishvesh said...
    A good song. Your choice of songs are very nice, Kumaran. The cine version is well-known among old song lovers.

    I liked the version by Nithyashree, though Sudha Raghunathan's voice sounded sweeter. Maybe it is due to the thavil and the nagaswaram background in the former. Very few singers prefer to sing with these accompaniments !

    Tuesday, June 06, 2006 12:52:00 PM
    --

    SK said...
    நீங்கள் கூறியது சரிதான், ராகவன்.
    நன்றி.
    என்னிடம் இப்பாடலின் இசைக்கோர்வை இருக்கிறது.
    வலையேற்ற முயற்சிக்கிறேன்!

    Tuesday, June 06, 2006 3:28:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    ஓர் இரவு திரைப்படப் பாடல் சுட்டிக்கு நன்றி கனக்ஸ்.

    Tuesday, June 06, 2006 10:44:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    ஆமாம் சிவமுருகன். 'ஓர் இரவு' திரைப்படத்தில் வந்த பாடல் தான்.

    Tuesday, June 06, 2006 10:44:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    சிவஞானம்ஜி, பாரதியாரின் மனைவியார் இந்தப் பாடலைக் கேட்டாரா? வியப்பான செய்தி. :-) பாரதியார் பாடல் எத்தனையோ இருக்க பாரதிதாசனாரின் பாடலை அவர் கேட்டார் என்றால் அது இந்தப் பாடலுக்கு மிகச் சிறப்பு.

    Tuesday, June 06, 2006 10:46:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    நன்றி கொத்ஸ். இந்த மாதிரி ஆங்கில பழமொழிகளை எல்லாம் அப்படியே தமிழுக்கு மொழிபெயர்த்து ஏன் என் தலையை பிய்த்துக் கொள்ள வைக்கிறீர்கள்? நல்லவேளை சிபி இது என்ன என்று சொன்னார். :-)

    Tuesday, June 06, 2006 10:47:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    ஆமாம் இராகவன். அருமையான பாடல். ஏதோ ஒரு இனம் தெரியாத மகிழ்ச்சி இந்தப் பாடலைக் கேட்கும் போது தோன்றுகிறது. இந்தப் பாடலை இசை இல்லாமல் சொல்லிப் பார்த்தாலும் தமிழின் இனிமை இந்தப் பாடலில் மிக நன்றாக வெளிப்படுவதைப் பார்க்கலாம்.

    Tuesday, June 06, 2006 10:48:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    நன்றி சிபி.

    Tuesday, June 06, 2006 10:49:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    எனக்கு இராகம் தாளம் தெரியாது டுபுக்கு. எந்த எந்தப் பாடல் கேட்பதற்குப் பிடிக்கிறதோ அதனை எல்லாம் இங்கு இடுகிறேன். உங்களுக்கு மிகப்பிடித்த பாடலும் இராகமுமா. ரொம்ப மகிழ்ச்சி. பதிவைப் படிச்சு பாடலைக் கேட்டுப் பின்னூட்டமும் போட்டதற்கு நன்றி. அடிக்கடி வாங்க.

    கொத்ஸுக்கு வகுப்புத் தோழரா நீங்க? கொத்ஸ் உங்களைப் பத்திச் சொன்னதைப் படிச்ச மாதிரி நினைவு. ஆனா என்ன சொன்னார்ன்னு சரியா நினைவில்லை.

    Tuesday, June 06, 2006 10:51:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    நன்றி மதுமிதா அக்கா. மைக்ரோசாப்ட் ப்ளேயரோ ரியல் ப்ளேயரோ உங்கள் கணினியில் இருந்தால் இந்தப் பாடலைக் கேட்கலாம்.

    Tuesday, June 06, 2006 10:52:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    ஆமாம் யோகன் ஐயா. பாரதிதாசனாரின் கவித்திறனுக்கு நல்ல சான்று இந்தப் பாடல். மிக்க நன்றி.

    Tuesday, June 06, 2006 10:53:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    ஆமாம் இராக்சசி. நீங்கள் சொன்ன மாதிரி ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி இந்தப் பாடலைக் கேட்கும் போது தோன்றுகிறது. பாடலைக் கேட்டு ரசித்ததற்கு மிக்க நன்றி.

    Tuesday, June 06, 2006 10:54:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    நன்றி வெற்றி. பாவேந்தர் என்று சும்மாவா அவரைச் சொன்னார்கள்??!!

    Tuesday, June 06, 2006 10:55:00 PM

    --
    குமரன் (Kumaran) said...
    கொத்ஸ் சொன்னதை மொழிபெயர்த்து எனக்குப் புரிகிற மாதிரி சொன்னதற்கு நன்றி சிபி.

    Tuesday, June 06, 2006 10:56:00 PM

    --
    குமரன் (Kumaran) said...
    எஸ்.கே. நன்றி. இ.ந.வே.உ.வை என்றால் என்ன?

    Tuesday, June 06, 2006 10:56:00 PM

    --
    குமரன் (Kumaran) said...
    அப்பாடா. பயப்படாம உள்ள வந்து பாட்டு கேட்டீங்களா உஷா. பாடலுக்கு வாய் அசைத்தவர்களைப் பற்றி சொன்னதற்கு நன்றி. :-)

    Tuesday, June 06, 2006 10:57:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    ஆமாம் மலைநாடான். திரையிசைப் பாடலைவிட இந்த வித்தகிகள் பாடுவது நன்றாக இருப்பது போல் தோன்றுகிறது எனக்கு.

    Tuesday, June 06, 2006 10:58:00 PM
    --
    குமரன் (Kumaran) said...
    //நற்கருப்பஞ்சாற்றிலே தேன் கலந்து ஊன் கலந்து உவட்டாமல் உண்ட கதை சொல்வார் அப்பரடிகள்//

    இராகவன். அப்பரடிகளா சொன்னார் 'ஊன்கலந்து' என்று? சொல்லியிருக்கலாம். சைவர்கள் அப்போது அசைவர்கள் போலும்.

    //எந்த இசையிலும் தமிழ் ஏறி அமரும் என்பது எவ்வளவு உண்மை.
    //

    கர்நாடக இசை தமிழுக்கு அந்நியம் இல்லையே இராகவன். இந்தப் பாடல் கர்நாடக இசையில் ஏறி அமர்வது மிக இயற்கை தானே?!

    Tuesday, June 06, 2006 11:01:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    ஓகை நடராஜன். தகவலுக்கு நன்றி. 'வெண்ணிலாவும் வானும் போல' பாடலைத் தேடிப் பார்க்கிறேன். கிடைத்தால் இடுகிறேன்.

    Tuesday, June 06, 2006 11:02:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    பாராட்டுக்கு மிக்க நன்றி விஸ்வேஷ். இருவரின் பாடலைப் பற்றிய உங்கள் கருத்தே என் கருத்தும். நித்யச்ரீ பாடியது இனிமையாக இருந்தது; பக்கவாத்தியங்களே அந்த இனிமைக்கு முக்கிய காரணம். சுதா இரகுநாதன் பாடியது கொஞ்சம் ஆரவாரமாகவும் உச்சரிப்பு பிழைகளும் உள்ளதாய் தோன்றியது; ஆனால் அவர் குரல் நித்யச்ரீயின் குரலை விட இனிமையாக இருந்தது. தவிலும் நாதஸ்வரமும் பக்கவாத்தியமாய் கொண்டு கர்நாடக இசைப் பாடல் அமைவது அருமை தான்.

    Tuesday, June 06, 2006 11:04:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    எஸ்.கே. விரைவில் கவிமணி அவர்களின் பாடல்களை வலையேற்றுங்கள். எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    Tuesday, June 06, 2006 11:05:00 PM
    --

    வெற்றி said...
    அன்பின் இராகவன்,

    //தலைவாரிப் பூச்சூடிப் பாடலை எழுதியவர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்கள். மிகவும் எளிமையானவை அவரது கவிதைகள். அவைகளை இசைக் கோர்வையாய்க் கேட்க எனக்கும் ஆவல்தான். //

    இப் பாடல் musicindiaonline.com ல் உள்ளது. நீங்கள் கேட்டு மகிழலாம்.
    musicindiaonline.com ல் கர்நாடக சங்கீதத் தலைப்பின் கீழ் சென்று,
    சீர்காழி கோ.சிதம்பரம் அவர்களின் பெயரைக் கிளிக் செய்யுங்கள். எங்கேயோ நடந்த இசைக்கச்சேரி ஒன்றில் வையித்தியர் சீர்காழி. கோ.சிதம்பரம் அவர்கள் பாடிய இப் பாடலை musicindiaonline.com வைத்திருக்கிறார்கள்.

    நன்றிகள்.

    அன்புடன்
    வெற்றி

    Wednesday, June 07, 2006 12:17:00 AM
    --

    வெற்றி said...
    அன்பின் குமரன்,
    ஒரு சின்னக் கேள்வி.

    //வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
    வாழ்வில் உணர்வு சேர்க்க//

    வன்பும் எனும் சொல்லின் பொருள் என்ன என்று தயவுசெய்து சொல்ல முடியுமா? நான் இச் சொல்லை இது வரை கேள்விப்பட்டதே இல்லை.

    நன்றிகள்.

    அன்புடன்
    வெற்றி

    Wednesday, June 07, 2006 12:22:00 AM
    --

    இலவசக்கொத்தனார் said...
    கும்ஸ்,

    ஆங்கிலத்தில் Keep up this good workன்னு சொன்னா திட்டுவீங்களேன்னு தமிழ்ப் 'படுத்தி'னேன். :)

    அதை நம்ம எஸ்.கே. 'இந்த நல்ல வேலையை உயரே வையுங்கள்' ரொம்ப பெருசா இருக்குன்னு 'இ.ந.வே.உ.வை' அப்படின்னு சுருக்கிட்டாரு. நீங்க அதையுன் என்னன்னு கேட்கறீங்க!

    என்ன ஆச்சு உங்களுக்கு?!!

    டுபுக்கு நம்ம ஸ்கூல் ஜூனியர். இப்போ லண்டனில் இருக்கார்.

    Wednesday, June 07, 2006 6:35:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    கொத்ஸ், நீங்களும் எஸ்.கே.யும் ரொம்பப் படுத்துறீங்க. இப்பத் தான் டா வின்சி கோட் நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். படித்து முடித்தப் பின்னால் நீங்கள் இப்படிப் போடும் புதிர்களைப் புரிந்து கொள்வேனோ என்னவோ? :-)

    இ.ந.வே.உ.வை.

    Wednesday, June 07, 2006 6:58:00 AM
    --

    SK said...
    //வன்பும் எனும் சொல்லின் பொருள் என்ன என்று தயவுசெய்து சொல்ல முடியுமா? //

    வெற்றி,

    அது 'வன்பு' அல்ல; 'பண்பு' என்பது என் எண்ணம்.

    அப்புறம், ஏங்க, டாக்டர் பட்டத்தை 'வயித்தியர்'னு தமிழ்ப் படுத்தி படுத்தறீங்க?!!

    'முனைவர்', 'அறிஞர்' இப்படி ஏதாவது சொல்லலாமே!



    //கொத்ஸ், நீங்களும் எஸ்.கே.யும் ரொம்பப் படுத்துறீங்க.//


    நாங்க படுத்தறோமோ?!
    ஏங்க இப்படி வெள்ளந்தியா இருக்கீங்க?

    Wednesday, June 07, 2006 7:29:00 AM
    --

    sivagnanamji(#16342789) said...
    ராமச்சந்திர உஷா தகவல் தவறு
    பாடல் காட்சியில் தோன்றுவோர்
    நாகேஸ்வரராவும் லலிதா வும்

    Wednesday, June 07, 2006 7:33:00 AM
    --

    sivagnanamji(#16342789) said...
    குமரன்
    இது உறுதி செய்யபட்ட தகவல்;
    தங்கம்மாள்பாரதி கூறியது.
    பிற்காலத்தில் பாரதிதாசனுக்கு இது பெருமை சேர்ப்ப்தாகக் கருதிய சில புறம்போக்குகள் இதை மறைக்க
    முயன்றன.
    பாவேந்தர் பற்றி உவமைக்கவிஞர்
    சுரதா[அண்மையில் முதல் அமைச்சரிடம் நிதி உதவி பெற்றவர்]
    அவர்களிடமிருந்து அறியலாம்

    Wednesday, June 07, 2006 7:47:00 AM
    --

    வெற்றி said...
    SK அய்யா,
    வணக்கம்.

    //அது 'வன்பு' அல்ல; 'பண்பு' என்பது என் எண்ணம்.//

    மிக்க நன்றி.
    ஆனால் பாடலிலும் வன்பு எனத் தான் உச்சரிக்கிறார்கள்.

    //அப்புறம், ஏங்க, டாக்டர் பட்டத்தை 'வயித்தியர்'னு தமிழ்ப் படுத்தி படுத்தறீங்க?!!
    'முனைவர்', 'அறிஞர்' இப்படி ஏதாவது சொல்லலாமே!//

    SK அய்யா, நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் நான் வையித்தியர் எனக் குறிப்பிட்டது , திரு. கோ.சிதம்பரம் அவர்கள் மருத்துவர் என்பதால். உண்மையில் அவர் முனைவர் அல்ல.
    அவருக்கு யாராவது டாக்டர் பட்டம் கொடுத்தார்காளா என்பதும் எனக்கு நினைவில்லை. வையித்தியராகத் தொழில் புரியும் திரு.கோ.சிதம்பரம் அவர்கள், அவ்வப்போது சில கர்நாடக சங்கீதக் கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். இரு மாதங்களுக்கு முன்னர் கனடாவில் சில கச்சேரிகளில் பாடினார். ஆக நான் சொன்ன வையித்தியர் என்பது, முனைவர் என்பதை அல்ல மருத்துவர் என்பதை என பணிவன்புடன் சொல்லிக் கொள்கிறேன்.

    நன்றி.

    அன்புடன்
    வெற்றி

    Wednesday, June 07, 2006 9:49:00 AM
    --

    SK said...
    மன்னிக்க வேண்டுகிறேன்!
    வெற்றி!

    Wednesday, June 07, 2006 10:15:00 AM
    --

    SK said...
    வன்பு என்பது 'வலிமை' என்ற பொருளில் வரும்.
    பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர்[சிபி அல்ல!], இன்னும் கம்பன் கூடப் பயன்படுத்திய சொல் இது.

    இங்கே சுட்டவும்.


    http://tamil-swicki.eurekster.com/%25E0%25AE%25B5%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581/

    Wednesday, June 07, 2006 10:47:00 AM
    --

    SK said...
    வன்பு என்பது 'வலிமை' என்ற பொருளில் வரும்.
    பாரதியார், பாரதிதாசன், நாமக்கல் கவிஞர்[சிபி அல்ல!], இன்னும் கம்பன் கூடப் பயன்படுத்திய சொல் இது.

    இங்கே சுட்டவும்.


    http://tamil-swicki.eurekster.com/%25E0%25AE%25B5%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AF%2581/

    Wednesday, June 07, 2006 10:52:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    வெற்றி, கவிமணி அவர்களின் பாடலை மருத்துவர் சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் பாடிய பாட்டின் சுட்டியைத் தந்ததற்கு நன்றி. ஒரு முறை அந்தப் பாடலைக் கேட்டேன். இன்னொரு முறை கேட்கவேண்டும்.

    Wednesday, June 07, 2006 2:01:00 PM
    --

    நாமக்கல் சிபி said...
    //கொத்ஸ், நீங்களும் எஸ்.கே.யும் ரொம்பப் படுத்துறீங்க.//

    அடப்பாவமே! பச்சைப் புள்ளையை ஏங்க இப்படி (கொடுமைப்) படுத்துறீங்க?

    Thursday, June 08, 2006 12:58:00 AM
    --

    வெற்றி said...
    SK அய்யா,
    //மன்னிக்க வேண்டுகிறேன்//

    என்னய்யா இது? யார் யாரிடம் மன்னிப்புக் கேட்பது. நீங்கள் எனது குரு மாதிரி. உங்களிடமும், குமரன், இராகவன் போன்றவர்களிடமிருந்துதான் நான் தமிழ் கற்றுக்கொண்டிருக்கிறேன்.


    அய்யா, வன்பு என்ற சொல்லுக்கு பொருள் உரைத்தமைக்கு நன்றிகள்.
    சில வாரங்களுக்கு முன் நியோ அவர்கள் ஓர் இணையத்தள அகராதிகளின் முகவரி தந்தார்கள். அவர் தந்த தளத்தில் சென்னைப் பல்கலைக்கழக தமிழகராதிக்கு இணைப்பு இருந்ததௌ. அங்கு வன்பு எனும் சொல்லுக்கு அளிக்கப்பட்ட விளக்கததை கீழே வெட்டி ஒட்டி உள்ளேன்.
    நன்றி.

    வற்பு (p. 3558) [ vaṟpu ] n vaṟpu . < வன்பு. [K. balpu.] 1. Firmness, hardness; உறுதிப்பாடு. 2. Strength; வலிமை. அரக்கர் தலைவன்றன் வற்பார் திரடோள் (திவ். பெரியதி. 5, 1, 4).

    ----------------------------
    வன்பு (p. 3563) [ vaṉpu ] n vaṉpu . < id. [K. balpu.] 1. Strength, firmness; வலிமை. தடுத்தேன் வன்பால் (ஞானவா. புசுண். 99). 2. Hardness, as of heart; கடினத்தன்மை. வன்பியா முன்பாற் கண் டோம் (அரிச். பு. சூழ்வி. 36). 3. Thought, attention; கருத்து. (W.) 4. cf. வள்பு. Strap, as of leather; தோல் முதலியவற்றின் வார். (சங். அக.)
    ------------------------
    வன்புல் (p. 3563) [ vaṉpul ] n vaṉ-pul . < id. + புல்¹. Endo genous plant; புறக்காழுள்ள மரம் செடி முதலியன. (திவா.)
    -------------------------
    வன்புலம் (p. 3563) [ vaṉpulam ] n vaṉ-pulam . < id. +. 1. Hard soil; வலிய நிலம். வன்புலந் தழீஇ (பதிற்றுப். 75, 8). 2. Hilly tract; குறிஞ்சிநிலம். வன்புலக் கேளிர்க்கு (புறநா. 42). 3. Jungle tract; முல்லை நிலம். வன்புல மிறந்த பின்றை (பெரும்பாண். 26).
    --------------------------
    வன்புறு-த்தல் (p. 3563) [ vaṉpuṟu-ttal ] 11 v. tr vaṉpuṟu. < வன்பு + உறு²-. (Akap.) To assure, comfort, as the lover his beloved; தலைவியைத் தலைவன் ஆற்று வித்தல். கிழவன் வன்புறுத்தல்லது சேறலில்லை (தொல். பொ. 184).
    -----------------------------
    வன்புறை (p. 3563) [ vaṉpuṟai ] n vaṉpuṟai . < வன்புறு-. 1. (Akap.) Assurance, comfort, given by a lover to his beloved; தலைவியைத் தலைவன் ஆற்றி வற்புறுத் துகை. வன்புறை குறித்தல் (தொல். பொ. 185). 2. (Akap.) Theme in which the heroine is com forted by her companions and friends, during her separation from the hero; தலைவன் பிரிவின் கண் வாயில்கள் தலைவியை ஆற்றுவித்தலைக் கூறும் அகத்துறை. (இறை. 53.) 3. Assurer, comforter; வற்புறுத்திச் சொல்பவன். வன்புறையாகிய வயந்தகற் குணர்த்த (பெருங். வத்தவ. 6, 1).
    ---------------------------------
    வன்புறையெதிரழிதல் (p. 3564) [ vaṉpuṟaiyetiraẕital ] n vaṉpuṟai-y-etir aḻital . < வன்புறை +. (Akap.) Theme describing the sufferings of a heroine in her loneliness after her lover has consoled and left her; தலை வன் ஆற்றுவித்துப் பிரிந்தபின் தனிமையால் தலைவி வருந்துதலைக் கூறும் அகத்துறை. வன்புறை யெதி ரழிந்தாட்குத் தோழி . . . கூறியது (கலித். 28, துறை).

    அகமடல் (p. 007) [ akamaṭal ] n aka-maṭal . < அகம் +. Lath; பாளை. அகமடல் வதிந்த வன்புபுரி பேடை (பெருங். மகத. 4, 47).
    -------------------------------
    வன்பா-தல் (p. 409) [ vaṉpā-tal ] 11 v. intr vaṉpā. < வன்பு +. To become hard; கடினமாதல். வன்பாயிருப்பது பிறி தில்லை (குறள், 163, மணக்.).

    Thursday, June 08, 2006 1:14:00 AM
    வெற்றி said...
    //வெற்றி, கவிமணி அவர்களின் பாடலை மருத்துவர் சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் பாடிய பாட்டின் சுட்டியைத் தந்ததற்கு நன்றி//

    குமரன், you are very welcome.
    [இதை எப்படித் தமிழில் சொல்வது என்று தெரியாததனால் ஆங்கிலத்தில் எழுதி உள்ளேன். தயவுசெய்து மன்னித்தருள்க.]

    Thursday, June 08, 2006 1:16:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    வெற்றி. வன்பு என்னும் சொல்லை நானும் இதற்கு முன் கேள்விப்பட்டதில்லை. இந்தப் பாடலில் வன்பு என்று வந்திருப்பது 'வம்பு', 'வன்முறை', 'வன்மை' போன்றும் 'அன்பு' என்பதற்கு எதிர்ப்பதமாகவும் இருக்கலாம் என்று பாட்டில் பொருளொடு இயைந்துத் தோன்றியதால் அந்த மூன்று பொருள்களில் நடுவான 'வன்மை' என்பதனைப் பதிவில் சொன்னேன். உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்துவிட்டு பதில் சொல்ல நேரம் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் நீங்களும் எஸ்.கே.யும் 'வன்பு' என்ற சொல் எங்கெங்கு பயன்பட்டுள்ளது, யார் யார் பாவித்திருக்கிறார்கள், அதன் அகராதிப் பொருள் என்ன என்பதெல்லாம் சொல்லிவிட்டீர்கள். மிக்க நன்றி. எல்லாப் பொருளும் வன்மை, வலிமை என்ற பொருளில் இருப்பதைப் பார்த்து எனக்கும் மகிழ்ச்சி.

    இதே அடியில் எளிமை என்ற சொல்லும் இருக்கிறது. ஆனால் அது எதிர்மறைப் பொருளில் பாவிக்கப் பட்டுள்ளது. எளிமை என்னும் சொல் தற்போது நேர்மறைப் பொருளில் மட்டுமே வழங்கப்படுவது உங்களுக்குத் தெரியும். அதனால் அந்தச் சொல்லும் என்ன சொல்கிறது என்று எண்ணிப் பார்த்து அதற்கு 'ஏழ்மை' என்ற பொருளைப் பதிவினில் சொன்னேன்.

    Thursday, June 08, 2006 6:22:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    எஸ்.கே. பாடலில் இருப்பது 'வன்பு' தான். பாடியவர்களும் வன்பு என்றே பாடியிருக்கின்றனர். இந்தப் பாடல் ப்ராஜெக்ட் மதுரை வலைப்பக்கத்திலும் இருக்கிறது. அங்கும் வன்பு என்றே சொல்லியிருக்கிறார்கள்.

    வெற்றி ஏற்கனவே சொல்லிவிட்டார். ஆனாலும் இந்தக் குழப்பம் பல நேரம் எனக்கும் வருவதுண்டு என்பதால் சொல்கிறேன். சிவசிதம்பரம் உண்மையில் மருத்துவரே. அதனால் அவரை வைத்தியர் என்று சொன்னது பொருத்தமே. அவர் முனைவர் பட்டம் பெற்றவர் இல்லை.

    Thursday, June 08, 2006 6:25:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    எஸ்.கே.

    //நாங்க படுத்தறோமோ?!
    ஏங்க இப்படி வெள்ளந்தியா இருக்கீங்க?
    //

    எப்பவுமே நான் வெள்ளந்தியா இருந்ததில்லை. ஆனால் ரெண்டு மூனு நாளா வெள்ளந்தியா இருக்கேன் போல இருக்கு. அதனால தான் புரியலை.

    உங்கள் படுத்தலைத் தொடருங்கள் என்று கேட்டுக் கொள்ளவே இ.ந.வே.உ.வை என்றும் சொன்னேன். :-)

    Thursday, June 08, 2006 6:26:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    சிவஞானம்ஜி. நீங்கள் முதலில் சொல்லும் போதே அது உறுதியானச் செய்தி தான் என்று நான் ஏற்றுக் கொண்டேன். ஆனாலும் பாரதியெனும் இமயத்தின் மனைவியார் மரணப்படுக்கையில் பாரதிதாசனாரின் பாடலை விரும்பிக் கேட்டார் என்றால் அது பாரதி தாசனாருக்குப் பெரும் ஏற்றம் என்பதே நான் சொல்ல விழைந்தது. இந்தச் செய்தியைச் சிலர் மறைக்க முயன்றிருப்பர் என்பதும் நம்பக் கூடியதே.

    கவிஞர் சுரதாவும் அந்தப் பரம்பரையில் வந்தவர் தானே. பாரதிக்குத் தாசன் கனக.சுப்புரத்தினமாகிய பாரதிதாசன். சுப்புரத்தினத்திற்குத் தாசன் சுப்புரத்தினதாசன் (சுரதா).

    இவர்களைப் பார்த்து பள்ளி, கல்லூரிக் காலத்தில் நான் கவிதைகளை எழுதும்போது சுதா (சுரேந்திர தாசன் - சுரேந்திரன் எனது ஆசிரியர்) என்ற பெயரில் எழுதிக் கொண்டிருந்தேன். :-)

    Thursday, June 08, 2006 6:31:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    எஸ்.கே. நீங்கள் தந்தச் சுட்டியில் சென்றுப் பார்த்தேன். அருமையான தகவல். தேடிப் பார்த்துச் சொன்னதற்கு மிக்க நன்றி. கம்பனிலிருந்து பலரும் இந்த 'வன்பு' என்றச் சொல்லைப் பாவித்திருக்கிறார்கள் என்பது நல்ல செய்தி.

    Thursday, June 08, 2006 6:33:00 AM
    --

    குமரன் (Kumaran) said...
    //குமரன், you are very welcome.
    [இதை எப்படித் தமிழில் சொல்வது என்று தெரியாததனால் ஆங்கிலத்தில் எழுதி உள்ளேன். தயவுசெய்து மன்னித்தருள்க.]
    //

    வெற்றி. இந்த மாதிரி உதவியை எந்த நேரமும் நான் செய்யத் தயார். நீங்கள் எப்போது வேண்டுமானால் கேட்கலாம் என்று சொல்லத் தான் 'You are Welcom' என்றும் 'Anytime' என்றும் இல்லை சுருக்கமாக 'Welcome' என்றும் இவர்கள் சொல்கிறார்கள். அதனால் அந்தப் பொருளில் வரும்படி தமிழில் நாம் சொல்லலாம்.

    Thursday, June 08, 2006 10:22:00 AM
    --

    நாமக்கல் சிபி said...
    //நீங்கள் எப்போது வேண்டுமானால் கேட்கலாம்//

    இதனை நண்பர் எஸ்.கே அவர்கள்
    நீ.எ.வே.கே என்று குறிப்பிடுவார்.

    Sunday, June 11, 2006 9:36:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    சிபி. அந்த மாதிரி எஸ்.கே. சொல்லியிருந்தா எனக்கு நிச்சயமா புரிஞ்சிருக்காது. ஆனா என்ன? நான் கேள்வி கேட்டா வந்து பதில் சொல்லத் தான் நீங்க இருக்கீங்களே!! :-)

    Monday, June 12, 2006 12:11:00 PM
    --

    SK said...
    சொ.செ.சூ.வை., நா.சி??

    Monday, June 12, 2006 1:25:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    சொ.செ.சூ.வை., நா.சி??

    அப்படின்னா என்ன சிபி?

    Monday, June 12, 2006 1:29:00 PM
    --

    இலவசக்கொத்தனார் said...
    அவர் சொல்வது

    சொந்த செலவில் சூனியம் வைப்பதுதானே, நாமக்கல் சிபி?

    என்னங்க இன்னும் விஷயம் புரியாத ஆளா இருக்கீங்களே.

    Monday, June 12, 2006 2:30:00 PM
    --

    SK said...
    :))))))))))

    Monday, June 12, 2006 3:08:00 PM
    --

    பொன்ஸ்~~Poorna said...
    இப்படி பழைய பாட்டா போட்டுபுட்டு இதுல வச்சி சொல்லாராய்ச்சி செஞ்சா நானெல்லாம் எப்படிப் படிக்கிறது?!!! ஏதோ இன்னிக்கு இது ஏன் இத்தனை தடவை மறுமொழியிடப் பட்ட இடுகைகள்ல வருதுன்னு யோசிச்சதுனால போச்சு.. இல்லைன்னா என் கண்ணுல பட்டிருக்குமா?

    வன்பு என்ற வார்த்தையும் அதன் பொருள் விளக்கமும் அருமை.. வெற்றி, எஸ்கே, உங்களுக்கு என் நன்றிகள் :)
    வன்பு என்பது வலிமைன்னு தான் நானும் கேள்விப்பட்டிருக்கேன். "வன்பாற்கண் வற்றல் மரம்"னு திருக்குறள்ல கூட வருமே..

    //நற்கருப்பஞ்சாற்றிலே தேன் கலந்து ஊன் கலந்து உவட்டாமல் உண்ட கதை சொல்வார் அப்பரடிகள்//
    இதுல ஊண் கலந்து என்பது, ஊனும் உயிரும் எனப்படும், மனமும் உடலும் ஒன்று பட்டு அப்படி ஏதாவது பொருள் வருமா? ஊண் என்பதை அசைவம் என்று கொள்ள மனம் வரவில்லை அதுவும் அப்பரா அசைவர்?? அத்தோட, கருப்பஞ்சாற்றில் ஊண் கலந்தா காம்பினேஷன் வேற வொர்க் அவுட் ஆகுமான்னு ஒரு சந்தேகம்!! ;)

    Monday, June 12, 2006 3:38:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    பொன்ஸ். பழைய பாடலா இது? காலத்தால் அழியாத கவிஞனின் பாடல் இது. கர்நாடக இசையில் வந்த பாடல். :-)

    பழைய பாட்டாப் போட்டாலும் உள்ள வந்து பாத்துக்கிட்டே இருக்கணும்ங்க. அப்பத் தானே சொல்லாராய்ச்சி செஞ்சா உடனே கலந்துக்க முடியும். இப்ப பாருங்க வந்து உங்க கருத்தைச் சொல்றதுக்கான வாய்ப்பு ஏறக்குறைய இல்லாமப் போச்சு. :-) சரி சரி. கடைசியில வந்து சொல்லிட்டீங்க. மகிழ்ச்சி.

    சும்மா காசை (அதாங்க பொற்காசை) கரியாக்குறதுலேயே இருந்தா எப்படி? :-)

    இராகவன் சொன்ன அப்பரின் வரிகளில் வரும் ஊண் என்பது அசைவமாகத் தான் இருக்கும் என்று நினைக்கிறேன். உங்களால அப்பர் அப்படிச் சொல்லியிருப்பார் என்று ஏற்றுக்கொள்ள முடியலைன்னா ஊண் என்பதற்கு இன்னொரு பொருளான உணவு என்ற பொருளை எடுத்துக்கிட்டீங்கன்னா போதுமே. ஆனால் இந்தக் கேள்வியை இராகவனிடம் கேட்டேன். ஆளைக் காணோம் இன்னும் பதில் சொல்றதுக்கு.

    Monday, June 12, 2006 4:29:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    //"கொழுவிடை குருதியொடு விரவிய" நெல்லும் மலரும் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் நக்கீரர் காலத்துப் பிரசாதங்கள்.
    //

    Quote from what Ragavan said in this posting

    http://dravidatamils.blogspot.com/2006/06/blog-post_12.html

    Monday, June 12, 2006 4:30:00 PM
    --

    Anonymous said...
    அன்பர் பொன்சுக்கு!
    ஊன் என்றால் உடம்பு;இறைச்சி என்பது பொருள்; மணிவாசகர் "ஊனினையுருக்கி உள்ளோளி பெருக்கி" என்பதன் கருத்தைக் கவனிக்கவும்
    ஊண் என்றால் உணவு என்பது பொருள் ஔவையார் ஆத்திசூடியில் "மிகுதூண் விரும்பேல்" என்கிறார்;அதன் பொருள் அளவுக்கதிகமான உணவை உண்ண விரும்பாதே! அத்துடன் ஒரு சொல்லாடல் கேள்விப்பட்டிருப்பீர்கள் "அவன் ஊண் ;உறக்கம் இன்றி உழைத்து;முன்னேறினான்.
    யோகன் பாரிஸ்

    Monday, June 12, 2006 4:37:00 PM
    --

    பொன்ஸ்~~Poorna said...
    கரெக்டு தான் குமரன்.. காசைத் தான் 'கரி'யாக்கிட்டோமே.

    நீங்க சொன்னது தான் சரி போலிருக்கு... ஊணுக்கு அர்த்தம் அந்தக் கறிதானோ என்னவோ ...

    Monday, June 12, 2006 5:09:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    யோகன் ஐயா, ஊன், ஊண் இவற்றிற்கு இடையே ஆன வேறுபாட்டைச் சொன்னதற்கு மிக்க நன்றி. எப்படியோ அப்பரின் வரிகளைப் படிக்கும் போது சரியான பொருள் கொண்டுவிட்டு பின்னர் பொன்ஸுக்குப் பதில் சொல்லும் போது ஊண் என்பதற்கான பொருளைச் சொல்லியிருக்கிறேன். இந்த இரண்டு சுழி, மூன்று சுழி இதுவரை மனதில் பதியவில்லை என்பதைத் தான் இது காட்டுகிறது. :-)

    Monday, June 12, 2006 6:37:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    பொன்ஸ். அப்ப உங்க ஐயம் தீர்ந்தது. என் ஐயம் தான் தீரவில்லை. என் ஐ இராகவன் எப்போது கருணை கொண்டு என் ஐயத்தைத் தீர்க்கப் போகிறாரோ?

    Monday, June 12, 2006 6:38:00 PM
    --
    நாமக்கல் சிபி said...
    //சொந்த செலவில் சூனியம் வைப்பதுதானே, நாமக்கல் சிபி?
    //

    நான் வர தாமதமானாலும் கொத்ஸ் வந்து விளக்கி விடுவார் குமரன்!

    Monday, June 12, 2006 9:18:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    சிபி, எஸ்.கே., கொத்ஸ்., ஏதோ மும்மூர்த்திகள் மூன்று பேரும் மாத்தி மாத்தி வந்து சொன்னாப் போதும் எனக்கு. :-)

    Monday, June 12, 2006 10:08:00 PM
    --

    கைப்புள்ள said...
    அருமையான பாடல். படிக்கும் போதே இனித்தது தீந்தமிழ்.

    இதே போல "தமிழுக்கும் அமுதென்று பேர்" என்ற பாடலும் பி.சுசிலா அவர்களின் குரலில் செவிக்கு விருந்தாக அமையும்.

    இன்று தான் பார்த்தேன்.

    Saturday, November 25, 2006 11:43:00 PM
    --

    குமரன் (Kumaran) said...
    ஆமாம் மோகனா. :-)

    இது அருமையான பாடல் தான். விரைவில் தமிழுக்கும் அமுதென்று பேர் பாடலையும் இடுகிறேன்.

    Thursday, November 30, 2006 3:13:00 PM

    ReplyDelete
  2. குமரன்,
    என்.எஸ்.ராஜேஸ்வரி பாடிய பாட்டு. காட்சியில் லலிதாவும் ஏ.நாகேஸ்வர ராவும். படம்- ஓர் இரவு.
    வெண்ணிலாவும் வானும் போலே பாட்டு ஓகை சொன்னது போல் எம்.எல்.வி இல்லை, ராதா ஜெயலக்ஷ்மி.
    அருமையான பாடல்களை நினைவூட்டியதற்கு ந்ன்றி
    சகாதேவன்

    ReplyDelete
  3. தகவல்களுக்கு மிக்க நன்றி சகாதேவன்.

    ReplyDelete
  4. இந்தப் பாடலை இங்கு இட்டதற்கு நன்றி.
    "நல் அன்பிலாநெஞ்சில் தமிழில் பாடி நீ அல்லல் தீர்க்க மாட்ட்டாயா?"

    என்பதன் கருத்து என்ன என்று தயவு செய்து சொல்ல முடியுமா?

    ReplyDelete
  5. Atpu,

    அந்த வரி நேரடிப் பொருளில் தானே இருக்கிறது? தமிழில் பாடி நல்ல அன்பு இல்லாத நெஞ்சில் இருக்கும் துன்பங்களை/அல்லல்களை நீக்குவாய் என்று சொல்வது போல் கேட்கிறார் பாவேந்தர்.

    ReplyDelete
  6. Thank you. This song provided a wonderful experience. "Anbila nenjil tamizhaip paadi" seems to imply that Tamil could make loveless, suffering hearts melt with love.

    ReplyDelete
  7. சரியாகச் சொன்னீர்கள் பெருந்தேவி மிக்க நன்றி. காஞ்சிபுரத்தாரா நீங்கள்? பெருந்தேவித் தாயாரை உங்கள் பெயர் நினைவூட்டிவிட்டது.

    ReplyDelete
  8. இந்த பாடலில் யார் யாருக்கு இவ் வேண்டுகோளை விடுவிக்கின்றார்
    பதில் தாருங்கள்

    ReplyDelete
  9. நீங்களே சொல்லுங்கள் சுவாதி.

    ReplyDelete
  10. தெரியவில்லை அதான் உங்களை கேற்கின்றேன்
    பாரதிதாசன் இந்த வேண்டுகோளை ஒரு பெண்ணுக்கு விடுக்கின்றாரா?
    அல்லது பெற்றோர் அவர்களின் பெண் குழந்தைக்கு இதை கூருகின்றார்களா?

    ReplyDelete
  11. ஒரு நல்ல கவிதை என்றாலே அதனை பலவகையாகவும் எடுத்துக்கொண்டு அனுபவிக்கமுடியும் என்று தானே பொருள். இந்தக் கவிதையும் அப்படியே என்று நினைக்கிறேன். கவிஞர் எப்படி எழுதினார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் நீங்கள் சொன்னவகையில் எல்லாம் அதனை புரிந்து கொள்ளலாம் என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  12. ஓர் இரவு படத்தில் அருமையான பாடல் இப்பாட்டின் இசை அமைப்பாளர் திரு ஆர். சுதர்ஸனம் அவர்கள். மாஸ்டர் என்று அழைக்கப்படுபவர். திரு ஸ்வாதி அவர்கள் 3rd Oct 2011ல் அருமையான ஒரு கேள்வியை கேட்டார் :
    தெரியவில்லை அதான் உங்களை கேற்கின்றேன்
    பாரதிதாசன் இந்த வேண்டுகோளை ஒரு பெண்ணுக்கு விடுக்கின்றாரா?
    அல்லது பெற்றோர் அவர்களின் பெண் குழந்தைக்கு இதை கூருகின்றார்களா?

    திரு சுதர்ஸனம் அவர்கள் இப்பாடலைப் பற்றி கூறியது நினைவுக்கு வந்தது. ’அருமையான தாலாட்டு பாட்டை இப்படி அருமையாக இசை அமைத்து ஆனால் காட்சி...’ என்று திரு பாரதிதாசன் அவர்கள் பாடலின் இசையை பாராட்டியதாக சொல்லியுள்ளார்.

    gk kaushik

    ReplyDelete
  13. ஞானவ புசுண்.. என்ற நூலின் முழு பெயர் என்ன?

    ReplyDelete
  14. அனைத்து இடுகைகளும் சிறப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.இந்த பாடல் சில இடங்களில் கண் கலங்க வைத்து விடுகிறது.நான் இதை என் பேத்திக்கு(அவள் சிறுமி ஆனதும். இப்போது குழந்தையாக இருக்கிறாள்) நான் பாட எண்ணியுள்ளேன்.

    ReplyDelete