சாகித்ய அகாடமியின் இந்த வருட சௌராஷ்ட்ர மொழிக்கான 'பாஷா சம்மான்' விருது ரூ. 50,000 திரு. கே.ஆர். சேதுராமன், திரு. தாடா. சுப்ரமணியன் இருவருக்கும் வழங்கப்படுவதாக் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்திய நாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வருடம் தான் முதன்முறையாக சாகித்ய அகாடமி சௌராஷ்ட்ர மொழியை ஒரு தனி மொழியாக ஏற்றுக் கொண்டு இந்த விருதினை வழங்குகிறது. இது சௌராஷ்ட்ர மொழி அறிஞர்களுக்குப் பேருவகை தருகின்றதாக அறிகிறேன்.
திரு.தாடா சுப்ரமணியன் சௌராஷ்ட்ர கம்பன் என்று புகழப்படுபவர். சௌராஷ்ட்ர ராமாயணு, சௌராஷ்ட்ர திருக்குறள், மாய் பாஷா பக்தி (தாய் மொழி பக்தி), சௌராஷ்ட்ரி ரூபு லக்ஷன் (சௌராஷ்ட்ர இலக்கணம்) போன்ற நூல்களை இயற்றியவர்.
திரு. கே.ஆர். சேதுராமன் சௌராஷ்ட்ரம் - தமிழ் - ஆங்கிலம் அகராதி, சௌராஷ்ட்ரர் வரலாறு போன்ற நூல்களை எழுதியவர்.
எந்த நூல்களுக்காக இவர்கள் இருவருக்கும் இந்த விருது வழங்கப்பட்டது என்ற செய்தி எனக்கு இன்னும் தெரியவில்லை.
Atlast sourashtra language got recognition.Good news.sourashtra மொழியின் வரலாறு பற்றி ஒரு பதிவு இடுஙகலேன் குமரன்
ReplyDeleteகுமரன்,
ReplyDeleteஇப்பின்னூட்டம் பதிவுக்குத் துளியும் தொடர்பில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள்.
அறிய வேணும் எனும் ஆவலில் கேட்கிறேன்.தப்பாக நினைக்காதீர்கள்.
1.இந்தியாவில் குத்துமதிப்பாக எவ்வளவு சௌராஷ்ட்ர மக்கள் இருக்கிறார்கள்?
2.சௌராஷ்ட்ர மக்கள் இந்தியாவின் எப் பகுதியில் அதிகமாக வாழ்கிறார்கள்?
3.இவர்கள் மற்றைய பல இன மக்களைப் போல ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பைப் [பூர்வீக மண்] கொண்டுள்ளனரா? எடுத்துக்காட்டாக தமிழர்கள் தமிழகத்தில் வசிப்பது போல, பஞ்சாபி மக்கள் பஞ்சாப்பில் வாழ்வது போல?
4. சௌராஷ்ட்ர மொழி எவ்வளவு தொன்மை வாய்ந்தது?
5.சௌராஷ்ட்ர மொழி தென்னிந்திய மொழிகளை ஒத்ததா அல்லது வட இந்திய மொழிகளை ஒத்ததா?
6.ஆட்சேபனை இல்லையெனின் சௌராஷ்ட்ர மக்களின் வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்ல முடியுமா?
7.சௌராஷ்ட்ர மக்கள் தாம் வாழும் பகுதிகளுக்கு ஏற்ப அப் பகுதிப் பெயர்களையே சூட்டுவார்களா? இதை ஏன் கேட்கிறேன் என்றால் எனக்கு மராத்தி, டெல்லி போன்ற இடங்களில் இருந்து வந்த சில சௌராஷ்ட்ர நண்பர்கள் இருந்தனர் [பல்கலைக் கழகத்தில்] அவர்களின் பெயர் வட இந்தியப் பெயர்கள் போலவே இருந்தது. ஆனால் உங்களின் பெயர், மற்றும் நீங்கள் இப்பதிவில் குறிப்பிட்டவர்களின் பெயர்கள் தென்னிந்தியப் பெயர்களை ஒத்திருக்கிறது. அதனால்தான் கேட்டேன்.
8. "இந்திய நாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வருடம் தான் முதன்முறையாக சாகித்ய அகாடமி சௌராஷ்ட்ர மொழியை ஒரு தனி மொழியாக ஏற்றுக் கொண்டு இந்த விருதினை வழங்குகிறது."
அப்படியானல் இதுவரை செளராஷ்ட்ர மொழியை வேறு மொழிகளின் பிரிவாக நிர்ணயித்து இருந்தனரோ?!
குமரன்,இறுதியாக, இது கேள்வியல்ல. ஒரு அன்பு வேண்டுகோள். நேரம் கிடைக்கும் போது செளராஷ்ட்ர மொழியில் கதைத்து[பேசி] ஒலிப்பதிவாக இட முடியுமா? அதன் மூலம் செளராஷ்ட்ர மொழியின் உச்சரிப்புகள், இன்ன பிற சங்கதிகளை அறியக் கூடியதாக இருக்கும்.
நன்றி.
நன்றி சதுக்கபூதம். சௌராஷ்ட்ர மொழியின் வரலாறு ஓரளவிற்கு (சில இடங்களில் ஊகமாக) தான் தெரிகிறது. ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆராய்ச்சிகளும் பெரும் அளவில் நடக்கவில்லை. அதனால் இந்த நேரத்தில் நான் ஏதாவது சொன்னால் அது முழுக்க முழுக்க என் புரிதல் மட்டுமே ஆக இருக்கும். முடியும் போது எழுதுகிறேன்.
ReplyDeleteவெற்றி,
ReplyDeleteஉங்கள் கேள்விகளுக்கு நான் அறிந்த வரையில் விடை சொல்கிறேன்.
1. தமிழகத்தில் குறைந்தது 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை சௌராஷ்ட்ரர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் மதுரை, சேலம், பரமக்குடி, திருச்சி, கோவை, பாளையங்கோட்டை, கும்பகோணம், சென்னை போன்ற பல ஊர்களிலும் கருநாடகத்தில் பெங்களூருவிலும் ஆந்திரத்தில் திருப்பதியிலும் சௌராஷ்ட்ரர்கள் வாழ்கிறார்கள். குஜராத்தின் சௌராஷ்ட்ர மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
2. தமிழகத்திலும், குஜராத்திலும். தமிழகத்தில் இருப்பவர்கள் பேசும் மொழியை சௌராஷ்ட்ரம் என்று கூறிக் கொள்கிறார்கள். குஜராத்தில் இருப்பவர்கள் குஜராத்தி பேசுகிறார்கள்; சௌராஷ்ட்ரம் பேசுவதில்லை. அதனால் பெரும்பான்மையாய் 'வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில்' தான் வசிக்கிறார்கள் என்று சொல்லலாம்.
3. குஜராத்தில் சோமநாதபுரத்தைச் சுற்றிய சௌராஷ்ட்ர மாவட்டத்தைப் பூர்விகம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
4. அறிஞர்கள் நடுவே 'செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட சமஸ்கிருதம்' பேசப்பட்ட போது வடநாட்டில் பிராகிருத மொழிகள் மக்கள் இடையே பேசப்பட்டன. அந்த பிராகிருத மொழிகளில் 'சௌரசேனி' என்றொரு மொழி இருந்திருக்கிறது. அதுவே சௌராஷ்ட்ரம் என்று சில அறிஞர்கள் கருதுகிறார்கள். அது உண்மை என்றால் சௌராஷ்ட்ரம் வடமொழிக்கும் முந்தைய காலத்தையோ சமகாலத்தையோ சேர்ந்ததாக இருக்க வேண்டும்.
5. ஐயமின்றி சௌராஷ்ட்ரம் வட இந்திய மொழிகளை ஒத்ததே. தற்போது நாங்கள் வீட்டில் பேசும் மொழியில் மிகுதியாகத் தெலுங்கும் தமிழும் கலந்திருந்தாலும் அடிப்படையில் சௌராஷ்ட்ரம் மராத்தியையே ஒத்திருக்கிறது. குஜராத்தி சௌரசேனிக்குப் பின்னர் எழுந்த மொழி என்று நினைக்கிறேன். சௌராஷ்ட்ரத்திற்கும் குஜராத்திக்கும் சில ஒற்றுமைகளே இருக்கின்றன.
6. கஜினி முகம்மது சோமநாதபுரத்தைத் தாக்கிய போது பல குடும்பங்கள் தெற்கு நோக்கி வந்ததாக வாய்மொழி வரலாறு சொல்கிறது. அப்படி வந்தவர்கள் கொஞ்சம் காலம் விஜயநகரப் பேரரசில் தங்கியிருந்துவிட்டு நாயக்க மன்னர்களின் காலத்தில் தமிழகத்திற்கு வந்ததாக அந்த வாய்மொழி வரலாறு கூறுகிறது. ஆராய்ச்சியாளர்கள் யாரும் இந்த வாய்மொழி வரலாற்றை இன்னும் மறுக்கவில்லை. ஆனால் இவர்கள் தமிழகத்திற்கு வேறு வழியிலும் வந்திருப்பதற்கு தரவுகளைத் தருகிறார்கள். வணிகத்திற்காக சிறிது காலம் சூரத்தில் தங்கிவிட்டுப் பின்னர் பெங்களூருவில் தங்கி கருநாடக வழியாக தமிழகத்திற்கு வந்ததாகவும் சொல்கிறார்கள். விரிவாகப் பின்னர் எழுதுகிறேன். நேரமும் வாய்ப்பும் கிடைத்தால்.
7. தமிழகத்தில் வாழும் சௌராஷ்ட்ரர்கள் தமிழ்ப் பெயர்களையே சூட்டுகிறார்கள். தெலுங்கு போல் ஒலிக்கும் பெயர்கள் என் தாத்தா தலைமுறையில் சிலருக்கு இருந்திருக்கிறது. ஆனால் என் தந்தையார் பெயரும் என் பெயரும் தமிழ்ப் பெயர்களே. தமிழகத்தில் மற்றவரைப் போல் சௌராஷ்ட்ரர்களும் இப்போது பெரும்பாலும் ஷ், ஸ், போன்ற ஒலிகள் மிகும் பொருளில்லாப் பெயர்களை வைக்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில் தமிழர்களில் சிலர் தமிழ்ப் பெயர்களைத் தேடி வைப்பது போல் இவர்களும் தமிழ்ப்பெயர்களைத் தேடி வைக்கிறார்கள். என் மக்கள் இருவரின் பெயர்களும் உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சலில் நண்பர்களுக்குத் தெரிவித்தேன். வெளிப்படையாக இணையத்தில் சொல்ல விருப்பமில்லை - பாதுகாப்பு காரணங்களுக்காக.
நீங்கள் சொல்லும் மராத்தி, டெல்லி சௌராஷ்ட்ர நண்பர்கள் சௌராஷ்ட்ர மாவட்டத்தைச் சேர்ந்த குஜராத்தியராக இருப்பார்கள். அவர்களுக்கும் எங்களுக்கும் இப்போது எந்தத் தொடர்பும் இல்லை. தொடர்பு ஏற்படுத்த மொழி அளவிலும் ஒற்றுமை இல்லாததால் முயற்சிகள் அவ்வளவாக வெற்றியடைவதும் இல்லை.
8. இதுவரை இப்படி ஒரு மொழி இருக்கிறது என்ற அறிதலையே (Recognition) சாகித்ய அகாடமி காட்டியதில்லை. இப்போது தான் சௌராஷ்ட்ரத்தையும் ஒரு மொழியாக ஏற்றுக் கொண்டு அதற்கும் விருது வழங்கியிருக்கிறது.
வெற்றி, உங்கள் அன்பு வேண்டுகோளை நிறைவேற்ற நான் கதைத்து ஒலிப்பதிவாக இட வேண்டியதில்லை. தமிழைத் தெள்ளத் தெளிவாக உச்சரித்து தமிழர் மனத்தில் எல்லாம் நீங்கா இடம் கொண்ட சௌராஷ்ட்ரன் டி.எம்.எஸ். பல சௌராஷ்ட்ர பாடல்களைப் பாடியிருக்கிறார். நானும் சிவமுருகனும் அவற்றில் சிலவற்றை வலையேற்றியிருக்கிறோம். எங்கள் 'மதுரையின் ஜோதி' கூட்டு வலைப்பதிவைப் பாருங்கள். அங்கே டி.எம்.எஸ். பாடிய சௌராஷ்ட்ரப் பாடல்களைக் கேட்கலாம்.
வெற்றி கேட்ட கேள்விகளுக்கு மட்டுமே விடைகளைச் சுருக்கமாகக் கூறியிருக்கிறேன். அவற்றில் சௌராஷ்ட்ரத்தைப் பற்றி முழுதாகச் சொல்லிவிடவில்லை. சொல்லவும் இயலாது.
ReplyDeletehttp://solorusol.blogspot.com/2007/02/blog-post_17.html
ReplyDeletehttp://solorusol.blogspot.com/2007/02/blog-post_21.html
வெற்றி, நீங்கள் கேட்ட கேள்விகளுக்குத் தொடர்புடைய பற்றியங்கள் (விஷயங்கள்) இந்த இரு இடுகைகளில் பேசப்பட்டிருக்கின்றன. நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள்.
குமரன்,
ReplyDeleteஇவ்வளவு சுறுக்காக சுடச் சுட பதிலளித்தமைக்கு மிக்க நன்றி.
உண்மைதான் குமரன். எந்த ஒரு இனத்தின் வரலாற்றையும் ஒரு சிறிய பின்னூட்டத்தில் எழுதிவிட முடியாது. இருப்பினும் உங்களின் பதில்கள் மூலம் பல தகவல்கள் கிடைத்தது.
மீண்டும் நன்றிகள் குமரன்.
/* தமிழைத் தெள்ளத் தெளிவாக உச்சரித்து தமிழர் மனத்தில் எல்லாம் நீங்கா இடம் கொண்ட சௌராஷ்ட்ரன் டி.எம்.எஸ். பல சௌராஷ்ட்ர பாடல்களைப் பாடியிருக்கிறார். நானும் சிவமுருகனும் அவற்றில் சிலவற்றை வலையேற்றியிருக்கிறோம். எங்கள் 'மதுரையின் ஜோதி' கூட்டு வலைப்பதிவைப் பாருங்கள். அங்கே டி.எம்.எஸ். பாடிய சௌராஷ்ட்ரப் பாடல்களைக் கேட்கலாம்.*/
ReplyDeleteகுமரன், மிக்க நன்றி. சீர்காழி கோவிந்தராஜன், செளந்தரராஜன் போன்ற மேதைகள் தமிழை உச்சரித்து பாடுவது ... வார்த்தைகளல் வர்ணிக்க முடியாது.
சொன்னால் நம்புவீர்களோ தெரியாது, தமிழ் மணத்தில் இணையும் வரை செளந்தரராஜன் அவர்கள் தமிழர் என்றுதான் எண்ணியிருந்தேன்.
நிச்சயம் நீங்கள் குறிப்பிட்ட தளத்திற்குச் சென்று பாடல்களைக் கேட்டுப் பார்க்கிறேன். மிக்க நன்றி குமரன்.
குமரன்,
ReplyDeleteசாகித்ய அகாடெமி விருது பெற்ற செளராஷ்டிர அறிஞர்களுக்கு வாழ்த்துக்கள். அண்மையில் தான் பின்னனிபாடல்களின் இமயம் பாடகர் டி.எம்.செளந்தர்ராஜனும் செளராஷ்டிரர் என்பதை அறிந்தேன். செளராஷ்டிர மக்கள் எந்த மண்ணில் வாழ்ந்தாலும் அம்மண்ணின் மைந்தர்களாக மாறி அம்மண்ணனையும் பெருமை படுத்தி போற்றுகிறார்கள் என்பதற்கு டி.எம்.எஸ் போன்றவர்களும், நீங்களும் கூட சாட்சி என்பது செளராஷ்டிர மக்களை நினைத்தால் ஏற்படும் பெருமைகுறியவையே. நீங்களும் உங்கள் மைந்தருக்கு தமிழ் பெயரை சூட்டியிருக்கிறீர்களை இங்கு நினைவு படுத்திக் கொள்கிறேன்.
எனக்கும் நிறைய செளராஷ்டிர நெருங்கிய நண்பர்கள் உண்டு. அவர்களே சொல்லாமல் பிறர் சொல்லித்தான் அவர்கள் செளராஷ்டிரர்கள் என்பது தெரியவந்தது அந்த அளவுக்கு ஒன்றி பழகுபவர்கள்.
செளராஷ்டிர பாஷை எனது நண்பர்கள் சிலர் பேசும் போது புழக்கம் குறைந்ததாலோ நிறைய தமிழ் கலந்து பேசுவார்கள். குறிப்பாக தமிழ் வார நாட்களின் கிழமைகளை அப்படியே பயன்படுத்த்வார்கள்.
எந்த மொழியும் அழிவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் வடமொழி மொழியாளர்கள் பிறர் மொழியை அழித்தால் தான் வாழ முடியும் என்றும், பேசும் மொழியில் உயர்வு தாழ்வு பற்றி வெளிப்படையாக பேசும் போது எதிர்பதற்காகவே சில சமயம் கடிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
அன்புக் குமரன்!
ReplyDeleteவிருது கொடுத்து இவ்விரு அறிஞர்களையும் பெருமைப்படுத்திய அகாடமிக்கு நன்றி!
வெற்றியின் கேள்வியூடு பல ஐயங்கள் தீர்ந்தது.
உங்கள் தமிழ்ப்பற்று அலாதியானதே!!
//கஜினி முகம்மது சோமநாதபுரத்தைத் தாக்கிய போது பல குடும்பங்கள் தெற்கு நோக்கி வந்ததாக வாய்மொழி வரலாறு சொல்கிறது. அப்படி வந்தவர்கள் கொஞ்சம் காலம் விஜயநகரப் பேரரசில் தங்கியிருந்துவிட்டு நாயக்க மன்னர்களின் காலத்தில் தமிழகத்திற்கு வந்ததாக அந்த வாய்மொழி வரலாறு கூறுகிறது. ஆராய்ச்சியாளர்கள் யாரும் இந்த வாய்மொழி வரலாற்றை இன்னும் மறுக்கவில்லை//
ReplyDeleteகுமரன் ,
உங்களுக்கு தெரிந்த அளவிற்கு சவுராஷ்டிர வரலாறு எனக்கு தெரியாது என்ற போதும் , ஒரு சிறு விளக்கம்.
கஜினி முகம்மது படை எடுத்த காலம் கி.பி1001-1026, விஜய நகரப்பேரரசு தோன்றிய காலமே கி.பி 1336 ல் தான்.
கஜினி முகம்மது படை எடுத்த போது விஜய நகர பேரரசு எல்லாம் தோன்றி இருக்கவில்லை ,அக்காலத்தில் மகாராஷ்டிராவில் உள்ள கல்யாண் வரைக்கும் மொத்த தக்காணத்தை ஆட்சி செய்தவர்கள் சோழர்கள். உண்மையில் கஜினி முகம்மது குஜராத்தில் உள்ள சோம்நாத்திற்கு பிறகு தெற்கே அல்லது மகாராஷ்டிரா பக்கம் கூட வரவில்லை காரணம் அப்போதைய சோழர்கள் பலமான அரசை நிறுவி இருந்தார்கள்.
அப்பொழுதே கூட சவுராஷ்டிரர்கள் தமிழகம் வந்து இருக்கலாம் , ஆனால் அதிகமான சவுராஷ்டிரர்களை தமிழகம் கொண்டு வந்தது மராட்டிய மன்னர் சிவாஜி தான் , தஞ்சை மதுரை , சேலம் , பகுதிகளில் அதிகம் இருக்க காரணம் சிவாஜி கைப்பற்றிய போது அப்பகுதிகளில் அவர்களை குடியேற்றினார்.
அதே போல நாயக்கர்கள் காலத்திலும் அதிகம் வந்தார்கள்.சிவாஜிக்கும் ,கிருஷ்ண தேவ ராயருக்கும் ஒரு 50 ஆண்டுகள் தான் இடை வெளி இருக்கும்.சிவாஜிக்கு கொஞ்சம் முந்தைய காலம்.
குமரபன், சௌராஷ்ட்ர சௌராஷ்ட்ர பேச்சுக்கும் (ஒலி, இலக்கணம்) , தமிழ்நாடு சௌராஷ்ட்ர பேச்சுக்கும் ரொம்ப வித்தியாசம் உண்டா? அதாவது அங்கிருந்து வந்தவரின் பேச்சை நீங்கள் தடையின்றி புரிந்து, அவரிடம் பேசுவீர்களா?
ReplyDeleteமுன்னதிற்க்கும் பின்னதிற்க்கும் 400-500 ஆண்டு இடைவெளி உண்டு. மொழிகள் காலப்போக்கில் மாறுகிரன. ஒரே மொழி இரு இடங்களின் சம்பந்தம், போக்குவரவு இல்லமல் வளர்ந்தால் மிகவும் வேறாக தோன்றலாம். அப்ப்டித்தான் தமிழ்நாட்டு மராட்டியும், மராட்டிய மராட்டியும் என கேள்விபட்டுள்ளேன்.
நன்றி வெற்றி. 'மதுரையின் ஜோதி' பதிவில் சௌராஷ்ட்ரப் பாடல்கள் கேட்கும் போது ஏதாவது ஐயம் வந்தால் அங்கேயே கேளுங்கள்.
ReplyDeleteகோவி.கண்ணன்.
ReplyDeleteநீங்கள் சொல்வது போல் எனக்கும் பல முறை நடந்திருக்கிறது. என்னுடன் பழகும் தமிழர்கள் எல்லோருக்கும் தொடக்கத்தில் நான் மதுரைக்காரன், தமிழ் இலக்கியம் அறிந்தவன், தமிழார்வம் கொண்டவன், தெய்வ பக்தி கொண்டவன் என்பவை தெரிந்திருக்கும். அவர்கள் அப்படியே பழகி வரும் போது என்றாவது ஒரு நாள் நான் என் வீட்டிலுள்ளோரிடம் தொலைபேசியிலோ நேரிலோ சௌராஷ்ட்ரத்தில் பேசும் போது தான் நான் வேறு மொழி பேசுபவன் என்று தெரிந்து வியப்படைந்து கேட்பார்கள். அப்போது தான் நான் சௌராஷ்ட்ரன் என்று அறிவார்கள். இது மதுரைக்காரர்களைத் தவிர்த்து மற்றவர்களிடம் பெற்ற அனுபவம். மதுரைக்காரர்கள் பழகிய இரண்டு நாட்களுக்குள் நான் சௌராஷ்ட்ரன் என்று கண்டுபிடித்துவிடுவார்கள். :-) பிறந்ததில் இருந்து பழகிக் கொண்டு இருக்கிறோம் அல்லவா? எளிதாக அடையாளம் கண்டுகொள்கிறார்கள் என்று நினைக்கிறேன். :-)
சௌராஷ்ட்ரர்கள் பெரிதும் தமிழ் கலந்து பேசுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன கோவி.கண்ணன். தமிழர்களுடன் அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை, பல சொற்களுக்குச் சௌராஷ்ட்ர சொற்களை மறந்துவிட்டது என்று பல காரணங்களைச் சொல்லலாம். சொல் ஒரு சொல் பதிவில் இரு இடுகைகளில் இவற்றைப் பேசியிருக்கிறேன்.
வார நாட்களுக்கு சௌராஷ்ட்ரத்தில் பெயர் உண்டு. பழக்கத்தின் காரணமாகவும் எளிதாக இருப்பதாலும் நானும் பல முறை ஐதார், சொமார், மொங்க்ளார், புவ்தார், பெஸ்தார், சுக்ரார், சென்மார் போன்ற சௌராஷ்ட்ர வார நாட்களின் பெயர்களைச் சொல்லாமல் ஞாயித்துக் கிழமை ... சனிக்கிழமை என்றோ சன்டே ... சாட்டர்டே என்றோ சொல்லியிருக்கிறேன். இப்போது என் மகள் எங்களைத் திருத்துகிறாள். அவள் எப்போதாவது ட்யூஸ்டே என்று சொல்லும் போது நான் மொங்க்ளார் என்று சொல் என்று சொல்வேன். நாங்கள் அப்படித் தவறி தமிழ்ச் சொற்களையோ ஆங்கிலச் சொற்களையோ சௌராஷ்ட்ரம் பேசும் போது சொன்னால் அவள் எங்களைக் கடிந்து கொண்டு திருத்துகிறாள். :-) பல நேரங்களில் அவளுக்குத் தெரியாமல் 'இதற்கு சௌராஷ்ட்ர சொல் என்ன?' என்று கேட்கும் போது தகுந்த சௌராஷ்ட்ர சொற்கள் தெரியாமல் தமிழ்ச்சொற்களைச் சொல்லி மழுப்புவதுண்டு. ஆனால் பெரும்பாலும் மாட்டிக் கொள்வேன். :-) சன் டிவியில் அந்தச் சொல்லைக் கேட்டுவிட்டு 'அப்பா. நீங்கள் அந்தச் சொல் சௌராஷ்ட்ரம் என்று சொன்னீர்கள். தமிழிலும் வருகிறதே?!' என்று கேட்டு மடக்குகிறாள்.
நீங்கள் வடமொழியினைக் கடிந்து கொள்வதில் எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை கோவி.கண்ணன். வடமொழியாளர்கள் சொல்லும் கருத்துகளுக்கு உங்கள் கருத்துகளைச் சொல்கிறீர்கள். அவ்வளவு தானே. மொழிகளில் ஏற்றத் தாழ்வு சொல்வது யாரும் செய்யக் கூடாதது தான். நம் தாயைப் புகழ மற்றவர் தாயைக் கேவலமாகப் பேசக் கூடாது. அதே நேரத்தில் நம் தாயை மற்றவர் பழிக்கப் பார்த்துக் கொண்டும் இருக்கக் கூடாது.
//உங்கள் தமிழ்ப்பற்று அலாதியானதே!!//
ReplyDeleteசுருக்கமாகச் சொல்லிப் புரியவைப்பதில் வள்ளுவரைப் போல் ஆகிவிட்டீர்கள் யோகன் ஐயா. :-) மிக்க மகிழ்ச்சி. தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி.
வவ்வால்.
ReplyDeleteசதுக்கபூதத்திற்குச் சொன்ன பின்னூட்ட விடையைப் பாருங்கள். ஆராய்ச்சிகள் நடக்கவில்லை. அப்படி நடந்த ஆராய்ச்சிகளும் பலவற்றை இன்னும் தெளிவு படுத்தவில்லை.
அதனால் எனக்கும் சௌராஷ்ட்ர வரலாறு நன்கு தெரியும் என்று சொல்லயியலாது.
கஜினி முகம்மது படையெடுப்பின் போது கிளம்பியவர்கள் நடுவே பல இடங்களில் தங்கித் தான் ஆந்திரத்திற்கு வந்திருப்பார்கள். அவர்களின் வாய்மொழி வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளையும் இடங்களையும் மட்டுமே நினைவில் இருத்தியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். வாய்மொழி வரலாறுகள் எல்லாம் நல்லவற்றை மட்டும் தானே நினைவில் இருத்திக் கொள்ளும்.
மராட்டியர் படையெடுப்பின் போது மராட்டியர்கள் நீங்கள் சொன்ன பகுதிகளில் முக்கியமாகத் தஞ்சையில் வந்து குடியேறியதற்கு வாய்ப்புகள் அதிகம். எனக்குத் தெரிந்து தஞ்சையில் சௌராஷ்ட்ரர் இல்லை. (இல்லவே இல்லை என்று அறுதியிடவில்லை. நான் அறியேன் என்று சொல்கிறேன்). சௌராஷ்ட்ரரையும் மஹாராஷ்ட்ரரையும் குழப்பிக் கொள்வது இன்றும் கூட நடக்கிறது. அந்த வகையில் யாராவது சௌராஷ்ட்ரர்களை மராத்தியர்களுடன் குழப்பிக் கொண்டு அந்தச் செய்தியைச் சொல்லியிருக்கலாம். உண்மையாக இருக்கவும் வாய்ப்புண்டு. தரவுகளைக் கண்டால் தெரியும்.
பட்டுநூல்காரர்களான சௌராஷ்ட்ரர்கள் அவர்களின் நெசவுத் திறனுக்காக மதுரைக்கு அழைத்து வரப்பட்டதாகவும் பின்னர் அவர்கள் தமிழகத்தின் மற்ற நகரங்களுக்கு குடியேறினதாகவும் சௌராஷ்ட்ரர் சொல்லிக் கொள்ளும் வரலாறு சொல்கிறது.
திரு. V.
ReplyDeleteசௌராஷ்ட்ர மாவட்டத்தில் வாழும் மக்கள் சௌராஷ்ட்ரம் பேசவில்லை; குஜராத்தி தான் பேசுகின்றனர். அதனால் அவர்கள் பேசும் பேச்சிற்கும் தமிழக சௌராஷ்ட்ரர் பேசும் பேச்சிற்கும் தொடர்பே இல்லாமல் இருக்கிறது. நான் முன்பு சொன்னது போல் மராத்தி கொஞ்சம் ஒத்துப் போகிறது. இந்த மராத்தியுடன் ஒத்துப் போவதும் நான் சில பாம்பேவாலாக்களுடன் பேசி அறிந்து கொண்டது தான். ஆய்வுகள் செய்து வந்த முடிவில்லை.
நீங்கள் சொன்னது போல் காலப்போக்கில் மொழிகள் மாற்றம் அடைவது இயற்கை. அதுவும் தொடர்பு அறுந்த நிலையில் பெரும் மாற்றம் அடைகின்றன. தமிழில் பல வட்டார வழக்குகள் இருப்பது போல் தமிழக சௌராஷ்ட்ரத்திலும் மதுரை வழக்கு, பரமகுடி வழக்கு, திண்டுக்கல் வழக்கு, இராமநாதபுரம் வழக்கு, பாளையங்கோட்டை வழக்கு, சேலம் வழக்கு என்று இருக்கிறது. கூர்ந்து கேட்டால் ஒழிய மற்ற வட்டாரத்தாரின் பல சொற்களையும் பலுக்கல்களையும் புரிந்து கொள்வது ஒவ்வொரு வட்டார்த்தாருக்கும் கடினம். அதற்கு நீங்கள் சொன்ன கொடுக்கல் வாங்கல்களும் ஒரு காரணம். சென்ற நூற்றாண்டு வரை ஒரு ஊர்க்காரர் மற்ற ஊர்க்காரர்களுக்குப் பெண் கொடுக்க மாட்டார்கள். இப்போது மாறி வருகிறது.
http://en.wikipedia.org/wiki/Saurashtra_language
ReplyDeleteவெற்றி, இந்த விக்கிபீடியா பக்கத்தில் சௌராஷ்ட்ரர்களைப் பற்றிய தகவல்கள் இருக்கின்றன.
ஈன்ற பொழுதிற் பேருவக்கும் தம்மகனைச்
ReplyDeleteசான்றோன் எனக் கேட்ட தாய்!
இது தாய்க்கு மட்டும் தானா?
தாய் மொழிக்கும் அல்லவா!
சான்றோன் மொழி எனக் கேட்ட தாய் மொழி
என்னும் போதே உவகை தானே குமரன்! வாழ்த்துக்கள் திரு.தாடா சுப்ரமணியன் அவர்கட்கும், திரு. கே.ஆர். சேதுராமன் அவர்கட்கும்!
விருது பெற்ற அறிஞர்களுக்கு வாழ்த்துக்கள்....
ReplyDeleteசாகித்ய அகடமி இப்போதாவது கண் விழித்ததே....
பழக இனிமையான பல நண்பர்கள் எனக்கு இந்த சமூகத்தில் உண்டு. நான் பேராசிரியர் தா.கு.சுப்ரமணியன் அவர்களிடம் பயின்றவன். அவரது தமிழ் மற்றும் வடமொழி ஆற்றலில் வியந்திருக்கிறேன்.
Thiru Maduraiambadhi,
ReplyDeleteDr. Tha.Ku. Subramanian is different from Mr. Thada Subramanian, the awardee. Of course, Both are good friends.
Kumaran, It is good that the queries brought forth information about our history and language.
I hope you remember my wish that you should get the Sahitya Academy Award. You may give some time to translate your Tamil writings to Sourashtram.
Sri O.S. Subramaniam is drafting a English-Sourashtra dictionary giving Sourashtra words from different regions of South India. I am adding the words from Kumbakonam.
K.V.Pathy.
வவ்வால்,
ReplyDeleteதஞ்சாவூரிலும் சௌராஷ்ட்ரர்கள் இருப்பதாக விக்கிபீடியா சொல்கிறது. அதனால் நான் இல்லை என்று சொன்னதைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். :-)
ஆனால் விக்கிபீடியாவும் சௌராஷ்ட்ரர்களையும் மராத்தியர்களையும் குழப்பிக் கொள்வதைப் பற்றிச் சொல்லியிருக்கிறது. அதனை நான் திரும்பப் பெறவில்லை. :-)
நீங்க என்ன சொல்லவர்றீங்கன்னு புரிஞ்ச மாதிரி இருந்தாலும் புரியலை. ஆனாலும் ஒரு நன்றி சொல்லிக்கிறேன் இரவிசங்கர். :-)
ReplyDeleteநன்றி மௌலி. சாகித்ய அகாடமியின் மேல் குறை சொல்ல முடியாது என்று நினைக்கிறேன். முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; இன்று தான் பலன் கிடைத்தது என்று சொல்லலாம்.
ReplyDeleteபேராசிரியர் தா.கு. சுப்ரமணியனின் பட்டிமண்டபப் பேச்சுகளைக் கேட்டிருக்கிறேன் மௌலி. நீங்கள் அவர் மாணவரா? மகிழ்ச்சி. ஆமாம். தமிழிலும் வடமொழியிலும் வல்லவர் அவர்.
பதி ஐயா.
ReplyDeleteதிரு. தாடா. சுப்ரமணியன் அவர்களின் பெயர் மௌலிக்கு திரு. தா.கு. சுப்ரமணியன் அவர்களை நினைவுபடுத்திவிட்டது என்று நினைக்கிறேன். அதனால் தான் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அவருக்கு இரு சுப்ரமணியன்கள் இடையே குழப்பம் இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் நான் மிக அண்மைக்காலம் வரை குழம்பிக் கொண்டு தான் இருந்தேன். சிவமுருகன் தான் என் குழப்பத்தை நீக்கினார். :-)
ஆமாம் ஐயா. நண்பர்களின் கேள்விகள் பல செய்திகளைச் சொல்ல வாய்ப்பளித்தது மகிழ்ச்சியே.
ஐயா, நீங்கள் என் மேல் உள்ள அன்பினால் அகாடமி விருது எனக்குக் கிடைக்கும் என்று சொல்கிறீர்கள். ஆனால் நான் தான் உங்கள் பேச்சைக் கேட்காமல் இருக்கிறேன். தமிழ் இலக்கியம், வரலாறு என்று பெரும்பொழுதைச் செலவிடும் நான், நீங்கள் ஒவ்வொரு முறையும் வந்து சொல்வது போல், நம் தாய்மொழிக்கும் அதில் பாதியாவது நேரம் செலவிடவேண்டும். 5% கூட செய்வதில்லை. வெட்கமாகத் தான் இருக்கிறது. மன்னிக்கவும்.
திரு. ஓ.எஸ்.எஸ். அவர்களின் அகராதி முயற்சியைப் பற்றி தெரியும் ஐயா. தங்கள் பங்கைப் பற்றியும் சொல்லியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்.
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteவவ்வால்,
தஞ்சாவூரிலும் சௌராஷ்ட்ரர்கள் இருப்பதாக விக்கிபீடியா சொல்கிறது. அதனால் நான் இல்லை என்று சொன்னதைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். :-)
//
எனது நண்பர்கள் தஞ்சாவூரை சேர்ந்தவர்கள் தான். அவர்கள் வீட்டில் ஒரு நாள் தங்கி இருக்கிறேன்.
:)
Really enjoyed this blog post discussing about this year Shakitya Akademi Bhasha samman awards and facts on our history.
ReplyDeleteI like to let everyone know how much efforts were required to get this credits from Sahitya Akademi.
And I am very proud, my father Shri K.R.Krishnamachary has taken repeatitive efforts for the past 15 years for this recognition. And achievement is made possible with the help of Palani MP Shri Palani MP S.K. Karvendhan who is a non Sourashtrian. Only he who has taken the request directly to the Akademi. People would have known this fact through Sourashtra Journals. He has lot of interest in our language and spends his good time for the language and writings of Nadana Gopala Nayagi Swamigal.
My father is a inspiration for me. He has achieved another thing too. Again it is also because of his repeatative efforts. All India radio and Doordharshan has accepted to relay Sourashtra Programmes. They have allocated particular time frame specially for us.
Sourashtra artists can earn credits and sanmanams. As they have accepted first programme with Sourashtra songs has been telecasted a month ago.
For both of the above achievements, everyone has to understand that they require lot of communication. Writing writing writing lot of letters written in this context including the letter to the President of India.
My father personally feels these are his lifetime milestones which he wanted to do for his mother language.
Just I wanted to share everyone the efforts behind this year Sahitya Akademi Bhasha Samman Awards to our language literature.
குமரன். சாகித்ய அகாதமி பரிசு பெற்ற "காதுகள்" நாவலை எழுதிய எம்.வி.வெங்கட்ராம், கும்பகோணம்/ தஞ்சையை சேர்ந்த செளரஷ்டிடர். நாவல் படித்திருக்கிறீர்களா?
ReplyDeleteஇன்னும் ஒரு சந்தேகம். செளரஷ்ட்ர மொழிக்கு லிபி உண்டா இல்லையா?
avO Lokanathan. thumi avi comment sodayo jukku sonthOs.
ReplyDeleteஉங்கள் தந்தையாரின் முயற்சிகளைப் பற்றி சௌராஷ்ட்ரா கல்சர் மடற்குழுவில் வரும் மின்னஞ்சல்களால் அறிந்துள்ளேன். ஆனால் இவ்வளவு தெளிவாகத் தெரியாது. தங்கள் தந்தையாரின் முயற்சிகளுக்கு என் மரியாதையுடன் கூடிய வணக்கங்கள். 15 வருடங்கள் சென்றதா இந்த முயற்சியில்? இந்த வருடம் உங்கள் தந்தையார் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பார் என்று எண்ணுகிறேன். 15 வருட உழைப்பு பயன் தந்துவிட்டது இந்த வருடம்.
பழனி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கார்வேந்தன் அவர்களின் உதவிகளைப் பற்றியும் படித்திருக்கிறேன். பாராட்டப்பட வேண்டியவர். நன்றிக்குரியவர்.
வானொலியிலும் தொலைக்காட்சியிலும் சௌராஷ்ட்ர நிகழ்ச்சிகள் வருவது பற்றியும் அறிந்தேன். அமெரிக்காவில் தற்போது வசிப்பதால் அந்த நிகழ்ச்சிகளைப் பார்க்கவும் கேட்கவும் இயலவில்லை.
இந்தச் செய்திகளைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.
நடன கோபால நாயகி சுவாமிகளின் பாடல்களைப் பொருளுடன் சிவமுருகனும் நானும் இன்னொரு வலைப்பதிவில் எழுதிக் கொண்டு வருகிறோம். நேரம் கிடைக்கும் போது அந்த வலைப்பதிவையும் பாருங்கள். இயன்றால் தங்கள் பங்களிப்பையும் தாருங்கள்.
http://nadanagopalanayaki.blogspot.com/
உஷா.
ReplyDeleteதிரு. எம். வி. வெங்கட்ராம் அவர்களைப் பற்றி கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் 'காதுகள்' நாவலைப் படித்ததில்லை.
சௌராஷ்ட்ர மொழிக்கு எழுத்து (லிபி) இருக்கிறது. ஆனால் அறிந்தவர்கள் மிகக் குறைவே. சிவமுருகன் பதிவுகளில் அந்த எழுத்துகளைப் பார்க்கலாம்.
இராமராய் என்பவர் அந்த சௌராஷ்ட்ர எழுத்தை மீட்டெடுத்தார். அதனால் அதனை இராமராய் லிபி என்று குறிப்பவர்களும் உண்டு.
தேவநாகரி லிபியா இராமராய் லிபியா எது சௌராஷ்ட்ரத்திற்குச் சரி என்று ஒரு விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. தேவநாகரி ஏற்கனவே பலருக்குத் தெரியும்; இராமராய் எழுத்துகளை இனி மேல் தான் படிக்க வேண்டும் என்று தேவநாகரியை ஆதரிப்பவர்கள் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தேவநாகரி பலருக்குத் தெரியும் என்று எப்படி சொல்ல முடியும்? அது மட்டும் இல்லாமல் சௌராஷ்ட்ரத்தில் இருக்கும் சில பலுக்கல்களுக்கு தகுந்த எழுத்து தேவநாகரியில் இல்லை. அதனால் இராமராய் எழுத்தே சௌராஷ்ட்ரத்திற்குச் சரி என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். இப்படி விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது என்னைப் போன்றவர்கள் ஆங்கில (ரோமன்) எழுத்துகளைப் பயன்படுத்தி சௌராஷ்ட்ரத்தில் எழுதிக் கொண்டிருக்கிறோம். :-) மேலே லோகநாதனுக்கும் இரு வரிகள் எழுதியிருக்கிறேன் பாருங்கள்.
பரிசு பெற்ற அறிஞர் இருவருக்கும் சௌராஷ்டிர மொழிக்கும் என்னுடைய உளமார்ந்த வாழ்த்துகள். உங்கள் பெருமை எனக்குப் புரிகிறது.
ReplyDeleteகுமரன், எனக்கு ஒரு ஐயம், பரிசு பெற்றவர் இருவரும் பயன்படுத்திய எழுத்துரு என்ன?
நன்றி இராகவன். நல்ல கேள்வி கேட்டீர்கள். எந்த எழுத்துருவைப் பயன்படுத்தினார்கள் என்று தெரியவில்லை. எனக்குத் தெரிந்து இராமராய் எழுத்துருவிற்கு எழுத்தாளர்கள் நடுவில் நல்ல வரவேற்பு இருக்கிறது; அந்த வகையில் இவர்கள் இருவரும் இராமராய் எழுத்துருவைப் பயன்படுத்தியிருப்பார்கள் என்று எண்ணுகிறேன்.
ReplyDeleteலோகநாதன். எந்த எழுத்துருவை (லிபியை) இந்த இரு அறிஞர்களும் பயன்படுத்துகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா ?
லோகநாதன். இன்னொரு கேள்வி. இவர்கள் இருவருக்கும் எந்த நூலிற்காக இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது என்று தெரியுமா?
ReplyDeleteமுதலில் இவ்விருவரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
ReplyDeleteஎல்லா பின்னூட்டங்களிலும் பல விஷயங்கள் சொல்லியுள்ளீர்கள். மிக்க நன்றி.
இரு அறிஞர்களில் ஒருவரை மற்றவர் மிஞ்சும் அளவுக்கு சாதனை செய்தவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
திரு. கே.ஆர். சேதுராமன் - தமிழகத்தில் சௌராஷ்ட்ரர் வரலாறு என்ற ஒரு சாதனை புத்தகமும் மற்றும் பல புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.
திரு. தாடா. சுப்ரமணியன், சௌராஷ்ட்ரா மொழி ஆசிரியர். தமிழிலும் சௌராஷ்ட்ரத்திலும் எண்ணற்ற பல புத்தகங்கள் எழுதியுள்ளார். அதில் தாய்மொழிக்கு தலையானதாக சொல்லபடுவது சௌராஷ்ட்ர பாடமாலா (சௌராஷ்ட்ர லிபி, மற்றும் தமிழ் எழுத்துக்களில்), சௌராஷ்ட்ர வ்யாகரணு(இலக்கணம்), சௌராஷ்ட்ரா ராமாயணு (தமிழ் எழுத்துகளில்).
//எனக்குத் தெரிந்து இராமராய் எழுத்துருவிற்கு எழுத்தாளர்கள் நடுவில் நல்ல வரவேற்பு இருக்கிறது//
ReplyDeleteபுதுமைக்கு என்றுமே ஒரு வரவேற்பு இருக்க தானே செய்கிறது. அதுவும் பழமையில் இருந்துவந்த ஒரு புதுமைக்கு இருப்பதில் ஐயமில்லை.
This Year Sahitya Akademi awardees have been selected for the following their books
ReplyDelete1. Sourashtra Ramayan - Shri Thada Subrmanian
2. Sourashtra Agarathi - Shri K.R. Sethuraman
You can also view Dinamani News (3rd Page) on 19th September 2007.
Go for Archives
http://www.dinamani.com/epaper/
Kumaran,
ReplyDeleteI have already a reader of your blog posts of Nadana Gopala Nayagi Songs. I have shown it my father too. He was really interested to this generation of people writing posts on Nayagi swamigal.
My father is a writer from his young age. He has written 5 books. And continously keeps writing articles in the news paper. Most of his articles are based on songs of Nadana Gopala Nayagi Swamigal.
Myself and my brother are insisting him to come to the medium of Internet. And I have shown the blogs of yourself and Sivamurugan as examples. He has seen how it reaches to people. My father asked me to convey his regards and valthukkal for your writings and efforts.
Being in the busy life of software i could not add comments earlier. And today i am doing it.
Regarding the script used by the awardees, both have used Tamil with numbers (-2,3,4.)
ReplyDeleteIt may be of interest that earlier Telugu script was being used. Walajahpet Venkataramana Bhagavathar was the chief disciple of Sadguru Thyagaraja and he wrote down all the compositions of his Guru. But for him we would not have these kritis. He also composed his own kritis in Sourashtram in Telugu script.
The Rama Rai script is being popularised by the journal Bhashabhimani for the past 50 years. Also recently another magazie, 'Jeeg' has been started for this purpose. (There are no magazines in Devanagari script).
K.V.Pathy.
சிவமுருகன். வேலைப்பளு அதிகமா? ரொம்ப நாட்களாகக் காணவில்லை?! இந்த இடுகைக்குக் கட்டாயம் பின்னூட்டம் இடுவீர்கள் என்று எண்ணியிருந்தேன். காலம் தாழ்த்தவும் ஐயம் வந்தது. இதோ பின்னூட்டிவிட்டீர்கள். :-)
ReplyDeleteதிரு.கே.ஆர். சேதுராமன் அவர்கள் எழுதிய 'தமிழகத்தில் சௌராஷ்ட்ரர் வரலாறு' புத்தகம் எங்கே கிடைக்கும்?
திரு.தாடா.சுப்ரமணியன் எழுதிய சௌராஷ்ட்ர பாடமாலாவை இணையத்தில் பார்த்திருக்கிறேன். சௌராஷ்ட்ர இலக்கணத்தையும் சௌராஷ்ட்ர இராமாயணத்தையும் முடியும் போது படிக்க வேண்டும்.
ஆமாம் சிவமுருகன். இராமராய் எழுத்து பழமையில் இருந்து வந்த புதுமை என்பதால் தான் மீட்டெடுக்கப்பட்ட எழுத்துரு என்றேன்.
விருது பெற்ற நூற்களைப் பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி லோகநாதன்.
ReplyDeleteஉங்கள் தந்தையாரின் ஆசிகளுக்கு மிக்க நன்றி லோகநாதன். சிவமுருகனும் அடியேனும் செய்யும் இந்தச் சிறிய தொண்டில் பிழைகள் ஏதும் இருந்தால் நீங்களும் உங்கள் தந்தையாரும் சுட்டிக் காட்டவேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
தங்கள் தந்தையார் இணையத்தில் எழுதத் தொடங்கினால் அது உலகெங்கும் வாழும் சௌராஷ்ட்ர இளைஞர்கள் அனைவருக்கும் பேருதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவர் தமிழில் எழுதினால் சௌராஷ்ட்ர இளைஞர்களுக்கு மட்டுமின்றி அனைத்துத் தமிழ் அறிந்தவருக்கும் உதவியாக இருக்கும். நாங்களும் வேண்டிக் கொண்டோம் என்று உங்கள் அப்பாவிடம் சொல்லுங்கள்.
மீண்டும் வந்து விடைகள் சொல்லியதற்கு நன்றி.
பதி ஐயா,
ReplyDeleteசிவமுருகனும் 'மதுரையின் ஜோதி' பதிவில் அப்படித் தான் எழுதுகிறார் (தமிழில் - 2, 3,4 என்ற எண்களுடன்). அது படிப்பதற்கு எளிதில்லாத முறை என்றாலும் பழக்கம் இருப்பவர்களால் படிக்க முடியும்.
தெலுங்கு எழுத்துகள் முன்பு புழங்கின என்று அறிவேன்.
வாலாஜாபேட்டை வேங்கடரமண பாகவதரைப் பற்றி மேல்விவரங்கள் அறிந்து அவரைப்பற்றிய தொடர் கட்டுரைகள் எழுத வேண்டும் என்றொரு ஆவல் இருக்கிறது. இணையத்தில் தேடிப் பார்க்கிறேன். உங்களுக்குத் தெரிந்த தகவல்களை அடியேனுக்குச் சொல்லுங்கள்.
பாஷாபிமானி மாத இதழையும் ஜீக் மாதம் இருமுறை இதழையும் படித்திருக்கிறேன். ஜீக் இதழை அதனை பதிப்பவர் சிறிது நாட்கள் அமெரிக்காவிற்கும் அனுப்பிக் கொண்டிருந்தார். அண்மைக்காலமாக வருவதில்லை. எனக்குத் தெரிந்து பதிக்கப்பட்டவற்றில் தமிழ் எழுத்துருவையும் இராமராய் எழுத்துருவையும் பயன்படுத்தவற்றையே பார்த்திருக்கிறேன். தேவநாகரியில் இருக்கும் எந்த சௌராஷ்ட்ர நூலையும் பார்த்ததில்லை. உரோமன் எழுத்துருவை இணையத்தில் எழுதுபவர் மட்டுமே புழங்குகிறோம்.
Dear Kumaran,
ReplyDeleteThe book-(in Tamil)-about the life story and compositions of Walajapet/Ayyampet Sri Venkataramana Bhagavathar and four other mahans born at Ayyampettai has been published by
Sri M.R.G. Govindaraja Bhagavathar,
15/6, kizhmelpudutheru,
Ayyampettai-614 201,
Thanjavur District.
(phone 04374-240422).
K.V.Pathy.
இதுவரை தெரியாத விஷயங்களை இந்த பதிவின் மூலம் அறிந்துகொண்டேன்....நன்றி குமரன்..
ReplyDeleteதகவலுக்கு நன்றி பதி ஐயா.
ReplyDeleteநன்றி செந்தழல் இரவி.
ReplyDeleteசௌராட்டிர மொழியை பற்றியும், அந்த இன மக்களைப் பற்றியும் அ(ரி)றிய தகவல்களை தந்ததால் நன்றி!!
ReplyDeleteநன்றி ஜகதீஸ்வரன்.
ReplyDeleteசௌராட்டிர சமூக மக்களின் வரலாறு அறிய, சாகித்திய அகாதமி விருது பெற்ற குட்டின். திரு. கே. ஆர். சேதுராமன் அவர்கள் எழுதிய, சௌராட்டிர:முழு வரலாறு, மூன்றாம் பதிப்பு, 2008 ஐ படித்தால் நன்கு புரியும். அல்லது தமிழ் விக்கிபீடியாவில், சௌராட்டிரர் எனும் தலைப்பில் உள்ள [[http://ta.wikipedia.org/s/2pdv]] கட்டுரையும், சௌராட்டிர தேசம் எனும் கட்டுரையும் [[http://ta.wikipedia.org/s/30r4]] படித்தால் சௌராட்டிரர் சமூக மக்களின் பண்பாடு, நாகரீகம், மொழி, கலை, இலக்கியம், வரலாறு, கல்வி, தொழில், கோத்திரங்கள் & குடும்பப் பெயர்கள் போன்ற செய்திகள் அறியலாம்.
ReplyDeleteகசினி முகமது சௌராட்டிர தேசத்தை 1025ல் சூறையாடிய பின், பெரும்பாலான சௌராட்டிர மக்கள், தற்போதைய மகாராட்டிர மாநிலத்தில் உள்ள தேவகிரியில், யாதவ மன்னர்கள் ஆண்ட அரசில் குடியேறி 300 ஆண்டுகள் வாழ்ந்தனர். பின்பு அலாவுதீன் கில்சி காலத்தில், அவரின் தளபதி மாலிக் கபூர் தேவகிரியை 1307 ல் கைப்பற்றிய பின்பு, சௌராட்டிரர்கள் விஜயநகரப் பேரரசில் குடியேறி 1675 வரை வாழ்ந்தனர். பின்னர் பாமினி சுல்தான்கள் விஜயநகரப் பேரரசை வென்ற பின், சௌராஷ்டிர சமூக மக்கள் தமிழ்நாட்டில், தெலுங்கு மன்னர்கள் ஆண்ட பகுதிகளில் குடியேறி வாழ்கிறார்கள். சௌராட்டிரர்கள் பேசும் மொழி, சமஸ்கிருத மொழியின் பேச்சு மொழியான சௌரசேனி மொழியாகும். தற்போது அனைத்து இந்திய மொழிகளிலும் ஆங்கிலம், உருது போன்ற பிற மொழி கலப்பு எற்பட்டது போல், சௌராஷ்டிர மொழியிலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழி கலப்பு அதிகமாக உள்ளது.
ReplyDeleteThanks Krishnamoorthy sir!
ReplyDeleteஅன்புள்ள திரு குமரன் அவர்களுக்கு,
ReplyDeleteகே.ஆர்.சேதுராமன் எழுதிய தமிழகத்தில் செளராஷ்டிரர் வரலாறு என்ற புத்தகம் எந்த பதிப்பகத்தில் கிடைக்கிறது. சூளைமேடு முகவரி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. புத்தக கண்காட்சிக்கு சென்னை செல்கிறேன். அவரிடம் பேசி வாங்க முடியும் என நினைக்கிறேன். அவரின் தொலைபேசி எண் கிடைக்குமா?
நன்றி.
This comment has been removed by the author.
ReplyDelete