Wednesday, September 19, 2007

புகை சூழ்ந்த நெருப்பு, தூசு படிந்த கண்ணாடி, கருப்பையில் குழந்தை


கீதை காட்டும் உவமைகள் இவை. இறைவன் எல்லார் உள்ளேயும் இருக்கிறான் என்று ஆன்மிகம் சொல்கிறதே. அது ஏன் எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரிவதில்லை? இந்தக் கேள்விக்குக் கண்ணன் சொல்லும் பதிலில் இந்த உவமைகள் வருகின்றன.

கருப்பையில் இருக்கும் குழந்தையை அவ்வளவு எளிதாகக் காண முடிவதில்லை. சிலருடைய நிலையும் இப்படித் தான் இருக்கிறது. அவர்களின் மனத்தில் சூழ்ந்திருக்கும் அறியாமையும் இருளும் அவர்களால் இறைவனின் இருப்பைக் கொஞ்சம் கூட உணரவிடாமல் செய்கிறது. கருவிலிருந்து குழந்தை வெளிவர எவ்வளவு கஷ்டப்படுமோ அவ்வளவு முயற்சி எடுத்தால் தான் அவர்களால் இறைவனிருப்பை அறிய முடிகின்றது.

கண்ணாடியில் படிந்திருக்கும் தூசி கண்ணாடியின் இருப்பை மறைப்பதில்லை. ஆனால் கண்ணாடியின் பயன் தூசியால் காணாமல் போய்விடுகின்றது. சிலர் நிலை இது போலத் தான் இருக்கிறது. அவர்களின் மனத்தில் சூழ்ந்திருக்கும் அறியாமை கண்ணாடியின் மேல் உள்ள தூசியைப் போல் இறைவனின் இருப்பைச் சிறிதே காட்டினாலும் அதனால் பயன் இல்லாமல் செய்து விடுகிறது. சிறிதே முயற்சியுடைய ஆன்மிகச் சாதனைகளைச் செய்தவுடன் இந்த தூசி எளிதாகத் துடைக்கப்பட்டு கண்ணாடி மீண்டும் பயன்படுவது போல் இறைவனின் இருப்பும் தெளிவாகத் தென்பட்டு அதனால் பயனும் பெருகுகிறது.

நெருப்பைச் சூழ்ந்த புகை நெருப்பின் இருப்பை உறுதி செய்கிறது. சிறிதே விசிறியவுடன் அந்த புகை விலகி நெருப்பு மிக நன்றாகத் தெரிகிறது. அது போல் சிலருக்கு சற்றே முயற்சி செய்தவுடன் இறையுணர்வு பல்கிப் பெருகி நிற்கிறது.

பெரும்பான்மையான மக்கள் முதல் நிலையிலும், சில ஆன்மிகவாதிகள் இரண்டாம் நிலையையும், மிகச்சிலரே மூன்றாம் நிலையிலும் இருக்கிறார்கள் போலும். ஏனெனில் முதல் வகையினரை எல்லா இடங்களிலும் காண முடிகிறது. இரண்டாம் நிலையினரில் ஒன்றிரண்டு பேர்கள் எப்போதாவது கண்ணில் படுகின்றனர். மூன்றாம் நிலையினரைக் காண்பது அரிதிலும் அரிது என்று கண்ணனே சொல்கிறான் (வாஸுதேவ ஸர்வம் இதி ஸ் மஹாத்மா ஸுதுர்லப - இறைவனே இங்கு எல்லாம் என்று உணர்ந்து அதன் படி செயல்களைச் செய்யும் மஹாத்மா கிடைப்பதற்கு மிக மிக அரிதானவர்கள்); அது போல் நம் கண்களிலும் அப்படிப்பட்டவர் படுவதில்லை.

தூமேன வ்ரியதே அக்னிர் யதா தர்ஸோ மலேன ச
யதோல்பேனவ்ரிதோ கர்ப்ப: ததா தேனேதம் வ்ருதம் (கீதை 3:38)


தூமேன வ்ரியதே அக்னிர் - (எப்படி) நெருப்பு புகையால் சூழப்பட்டிருக்கிறதோ

யதா தர்ஸோ மலேன ச - எப்படி கண்ணாடி தூசியால் (மூடப்பட்டிருக்கிறதோ)


யதோல்பேனவ்ரிதோ கர்ப்ப: - எப்படி உயிர் கருப்பையால் மூடப்பட்டிருக்கிறதோ

ததா தேன இதம் வ்ருதம் - அது போல் அவனும் இங்கே மூடப்பட்டிருக்கிறான்.

18 comments:

  1. குமரன்

    நல்ல உதாரணங்கள்.இறைவன் இருப்பதை உணரத்தான் முடியுமே தவிர நிருபிக்கவோ மறுப்பதோ இயலாது.ஒருவரை கடைத்தேற்ற இறைவன் முடிவு செய்தபின் அவரை தன்னை அறிய வைக்கிறான்.அந்த ப்ராசஸை விரைவுபடுத்துவதும், மட்டுபடுத்துவதும் நாம் செய்யும் நல்வினை மற்றும் தீவினையின் பலனை பொறுத்தது- இது எனது கருத்தாகும்

    ReplyDelete
  2. //கருப்பையில் இருக்கும் குழந்தையை அவ்வளவு எளிதாகக் காண முடிவதில்லை. சிலருடைய நிலையும் இப்படித் தான் இருக்கிறது.
    //

    புரியாத ஒன்றை விளக்க முற்படும் போது உவமை தேவைப்படுகிறது. தத்துவங்களை விளக்கும் போது ஏற்படும் (சட்ட ?) சிக்கல்களை தவிர்ப்பதற்கு உவமானம் பெரிதும் பயன்படுகிறது. காரியத்திற்காக காரணமா ? காரணத்திற்காக காரியமா ? என்பது போல் காரணம் வேறு செயல்(காரியம்) வேறாக பார்க்கும் போது குழப்பம் ஏற்படுவது இயல்பு. ஆனால் காரணமும் காரியமும் ஒன்றை ஒன்று சேர்ந்தே / சார்ந்தே இருப்பது அல்லது ஒன்றே என்பதை கண்டு கொண்டால் குழப்பம் ஏற்படாது. கோட்பாடுகளை விளக்க எடுத்துக் கொள்ளும் உவமானங்களை வைத்து அவற்றை ஏற்றுக் கொள்ளாதவர்களை ஒப்பிட்டால் அது அபத்தம் தான். :))

    தத்துவங்களை விளக்க முற்பட்டதில் ஏற்பட்டவை உருவ வழிபாடுகள் என்பதை மறுக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். முடிவில் மறைந்து போனவை தத்துவங்களே. தத்துவமா ? உருவமா ? எது உண்மை ?

    தத்துவம் சாராத மதங்கள் காட்டும் கொள்கைகள் காலத்தில் மாறவில்லை. ஆனால் தத்துவங்களைக் கொண்ட மதங்கள் அவற்றிற்கு உருவம் கொடுத்துவிட்டதால் இயல்பை தொலைத்து மதங்களில் ஒன்றாக மாறிப்போனது.

    //
    கருவிலிருந்து குழந்தை வெளிவர எவ்வளவு கஷ்டப்படுமோ அவ்வளவு முயற்சி எடுத்தால் தான் அவர்களால் இறைவனிருப்பை அறிய முடிகின்றது.
    //
    மிகவும் கடினப்பட்டு ஒன்றை அறிந்து கொள்வது இம்மைக்கு பலனளிக்கலாம் என்பது நம்பிக்கைத் தானே. அதைவிடுத்து வாழ்வு அறவியல் பற்றி அறிந்து கொண்டு ஒழுகுதல் எல்லோருக்கும் நன்மை என்பது என்கருத்து.

    எதுவும் பின்னூட்டம் போட வேண்டாம் என்று நினைத்தாலும் முடியவில்லை...... :)))

    ReplyDelete
  3. தூசி படிந்திருக்கும் கண்ணாடியை துடைக்க முயற்சிக்கிறேன்.
    அருமையான விளக்கம்.

    ReplyDelete
  4. //அது போல் நம் கண்களிலும் அப்படிப்பட்டவர் படுவதில்லை//

    சரியாப் போச்சு போங்க!
    சரி, யாருமே நம் கண்ணில் பட வில்லையா? நாமே நம் கண்ணில் பட்டுக் கொள்வோம்! கண்ணாடி முன் நின்று! :-)))

    அழகான கீதை முத்துக்கள் குமரன்!
    கோவி ஐயா! இங்கு அபத்தமும் இல்லை! குழப்பமும் இல்லை! காரணமாகவும் கர்த்தாவாகவும் இருப்பவன் அவனே என்ற தெளிவு தான் தேவை! இந்த உவமைகள் எல்லாம், ஏற்றுக் கொள்ளாதவர்களை ஒப்பிட அல்ல! முதலில் அது தெளிய வேண்டும்! இந்த உவமைகள் அடைவது பற்றியும், அதற்கான தடைகள், வழிகள் பற்றியும் தான் சொல்கிறது!

    கருப்பையில் இருக்கும் குழந்தையை அவ்வளவு எளிதாகக் காண முடிவதில்லை என்பதை இக்காலத்து ultrasound ஸ்கேனிங் கொண்டு பார்த்தால் அபத்தமாகத் தெரியலாம்! ஆனால் அதில் கூட முற்றிலும் முழுமையாகத் தெரிய இயலாது என்பது தான் மருத்துவம். குணங்களும் உயிரோட்டமும் தெரியலாம். அதில் கூட உள்ளிருக்கும் குழந்தை ஒத்துழைத்தால் தான் அதன் பாலும் தெரிய ஏதுவாகும்! :-)

    மற்ற எல்லாம் தெரிந்து விட்டால் பேறு கால ஆர்வமும் துடிப்பும் குறுகுறுப்பும் மனித சமூகத்துக்கு இந்த நூற்றாண்டிலும் ஏன் இருக்க வேண்டும்? இது பொது உவமையே!
    கர்ப்பம் மறுபிறவி போல என்ற நோக்கில் மட்டும் கொண்டு சொல்லப்பட்ட உவமை!

    அப்படிப் பார்த்தால் தற்காலத்தில் இருக்கும் மின்விசிறியைக் கூட உவமை ஆக்கலாம்! எங்கும் இருக்கும் காற்று கண்ணுக்குத் தெரியாது! மின்விசிறியைப் போட்டா மட்டும் ஆகா அதில் இருந்து காற்று வருதே-ன்னு சொல்வதைப் போல!

    உவமைகளில் வார்த்தை, அதன் ஆசிரியர் காட்டும் தொடர்புடைய பொருளில் காண்பது தான் சிறப்பு!

    //தத்துவங்களை விளக்க முற்பட்டதில் ஏற்பட்டவை உருவ வழிபாடுகள் என்பதை மறுக்க மாட்டீர்கள்//

    மறுக்கிறேன்!
    உருவ வழிபாடுகள் தத்துவத்தை விளக்க மட்டும் ஏற்பட்டவை அல்ல! மனிதனுக்கு இறைவனைக் காட்ட ஏற்பட்டவையும் தான்!
    மறுபடியும் அதே மின்விசிறி உவமை தான்!

    மின்விசிறி காற்று இருக்கு என்று காட்டவோ, மின்சாரம் இருக்குன்னு காட்டவோ ஏற்பட்டது அல்ல! பயனாளிகளுக்குக் காற்றைக் கொடுக்க ஏற்பட்டவை! அதே தான்! :-)

    ReplyDelete
  5. ந்நல்ல பதிவு குமரன்.நன்றி!

    இந்த உவமைகளை எளிமைப் படுத்திப் பாமரனுக்கும் புரியும் வண்ணாம் பாலில் உள்ள தயிர், வெண்ணை என்ற உவமையை வைத்து திரு.ஏபி.நாகராஜன் அவர்கள் அற்புதமாக, இறைவனை உணர்வதற்குத் தன் படம் ஒன்றில் விளக்கம் சொன்னார்

    ReplyDelete
  6. நன்றி செல்வன்.

    1. இறைவனை உணர முடியும். இருப்பதை உறுதிப்படுத்தவோ இல்லாததை உறுதிப்படுத்தவோ இயலாது.

    2. இறைவன் அருள்செய்த பின்னரே இறைவனை அறியும் ஆவலும் முயற்சியும் அறிதலும் நிகழ்கின்றன.

    இந்த இரண்டு கருத்துகளில் ஒப்புதல் உண்டு.

    3. நாம் செய்த நல்வினைத் தீவினைப் பயன்கள் இறையறிதல் என்னும் நிகழ்வினை விரைவுபடுத்துகிறது/மட்டுபடுத்துகிறது.

    இந்தக் கருத்தில் முழு ஒப்புதல் இல்லை. வினைப்பயன்களின் வலிமையை மறுக்காத அதே நேரத்தில் நம் வினைப்பயன்கள் இறையருளை மிஞ்சியவை என்பதை மறுக்க விரும்புகிறேன். இறையருள் வினையின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பது என் துணிபு.

    ReplyDelete
  7. கோவி.கண்ணன்.

    புரியாத ஒன்றைப் புரிய வைப்பதற்குத் தெரிந்த ஒன்றைச் சொல்வது உவமை. சரி. அப்படித் தான் உவமையணியின் இலக்கணம் சொல்கிறது.

    தத்துவங்களை விளக்க உவமைகள் பெரிதும் பயன்படுகின்றன. அதுவும் சரி. அப்படித் தான் பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

    காரியத்தால் காரணமும் காரணத்தால் காரியமும் என்ற சுழற்சியும் ஓரளவிற்குப் புரிகிறது. ஆனால் என்ன சொல்லவருகிறீர்கள் என்று புரியவில்லை.

    இந்த இடுகையில் இறை நம்பிக்கை இல்லாதவர்களைப் பற்றி எந்த விளக்கமும் தரப்படவில்லை. அப்படி உங்களுக்குத் தோன்றியிருந்தால் அந்த அபத்தத்தைத் தோன்ற வைத்ததற்கு மன்னிக்கவும். கீதையும் இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இந்த உவமைகளைக் கூறவில்லை.

    உருவ வழிபாட்டின் பயன், நோக்கம் மிக விரிவானது. தத்துவ விளக்கங்களும் அந்த நோக்கம், பயன்களின் ஒரு பகுதி என்பதை மறுக்கவில்லை. ஆனால் தத்துவ விளக்கங்கள் மட்டுமே உருவ வழிபாட்டின் நோக்கம். பயன் என்பதை மறுக்கிறேன்.

    தத்துவங்கள் மறைந்து போகவில்லை. போயிருந்தால் நீங்களும் நானும் தத்துவங்களைப் படிக்கவோ பேசவோ சிந்திக்கவோ இயலாமல் போயிருக்கும். உருவ வழிபாட்டால் தத்துவங்கள் மறைந்து போனதாக நீங்கள் எண்ணுகிறீர்கள். உருவ வழிபாட்டால் தான் அவை விளக்கும் தத்துவங்கள் இன்னும் மக்கள் நடுவில் நிற்கின்றன என்று அடியேன் நினைக்கிறேன்.

    தத்துவமும் உருவமும் இரண்டுமே உண்மை என்பதே அடியார்களின் அனுபூதி. தத்துவம் உயர்ந்தது, தத்துவ விசாரணை உயர்ந்தது, உருவ வழிபாடு தாழ்ந்தது என்ற கருத்தும் இருக்கிறது. தத்துவக் குப்பையை மறந்து உருவத்தில் பக்தி வைப்பது சிறந்தது என்ற கருத்தும் இருக்கிறது. இரண்டுமே பெரியவர்கள் சொன்னது தான். அவரவர் அனுபவத்திற்கும் அறிவிற்கும் எது சரி என்று படுகிறதோ அதனை எடுத்துக் கொள்ள வேண்டியது தான்.

    //மிகவும் கடினப்பட்டு ஒன்றை அறிந்து கொள்வது இம்மைக்கு பலனளிக்கலாம் என்பது நம்பிக்கைத் தானே. //

    இது புரியவில்லை.

    //அதைவிடுத்து வாழ்வு அறவியல் பற்றி அறிந்து கொண்டு ஒழுகுதல் எல்லோருக்கும் நன்மை என்பது என்கருத்து.//

    நல்ல கருத்து.

    ReplyDelete
  8. //எதுவும் பின்னூட்டம் போட வேண்டாம் என்று நினைத்தாலும் முடியவில்லை...... :)))
    //

    இப்படி எனக்கும் அடிக்கடி தோன்றுவதுண்டு. இடுகையில் சொல்லப்பட்டிருப்பது உவகையை அளித்தால் உடனே பின்னூட்டம் இட்டுவிடுவேன். கொஞ்சம் நெருடினாலோ சூடேற்றினாலோ அந்த இடுகைக்குப் பின்னூட்டமாய் சொல்ல நினைப்பதை எழுதிச் சேமித்துக் கொள்வேன். உடனே இடுவதில்லை. நான்கைந்து பின்னூட்டங்கள் அந்த இடுகையின் பொருளினை ஒட்டியோ பாராட்டியோ வந்த பின்னர் சேமித்தது அப்போதும் சரியான கருத்து போல் தோன்றினால் அப்போது அந்த பின்னூட்டத்தை இடுவேன். அப்படிக் காத்திருக்கும் நேரத்தில் நாம் சொல்ல நினைத்ததை இன்னும் நன்றாக வேறொருவர் வந்து சொல்லியிருப்பதையும் கண்டிருக்கிறேன்; இடுகையைத் தவறாக முதலில் புரிந்து கொண்டேன் என்பதையும் கண்டிருக்கிறேன்; இடுகையில் சொல்லாத விளக்கத்தை பதிவர் பின்னர் யாருக்கோ சொல்லும் பின்னூட்ட பதிலில் விளக்கியிருப்பதையும் அது நம் கருத்துடன் ஒத்துப்போவதையும் கண்டிருக்கிறேன்; இப்படி எல்லாம் நிகழும் போது பின்னூட்டத்தை இடாமல் விட்டிருகிறேன். அதற்குத் தேவையில்லாமல் போனதால். :-)

    பொதிவான (positive) கருத்துகள் என்றால் தயங்காமல் உடனே இடுவதையும் நொகையான (negative) கருத்துகள் என்றால் கொஞ்சம் தாமதிப்பதையும் மூன்று நான்கு வாரங்களாகச் செய்து வருகிறேன். மன அமைதி கெடாமல் இருக்கிறது.

    ReplyDelete
  9. குமரன்

    உருவ வழிபாடு என்ற சொற்றொடரே முதலில் தவறானது. கோயிலுக்கும் பவுத்த விகாரத்துக்கும் போகும் யாரும் வெறும் உருவங்களை வழிபடுவதில்லை. இறைவனை தான் வழிபடுகின்றனர்.

    "தூணிலுமிருப்பான்,துரும்பிலிருமிருப்பான்" என சொல்லப்படுபவன் இறைவன்."இறைவன் இல்லாத இடமே இல்லை" எனும்போது அந்த இறைவன் சிலைக்குள்ளும் தான் இருக்கிறான்,துவைக்கும் கல்லுக்குள்ளும் தான் இருக்கிறான். துவைக்கும் கல்லில் இறையை காணும் ஞானியரின் மனபக்குவம் நமக்கு வந்தால் நாம் கோயில் சிலையையும்,துவைக்கும் கல்லையும் ஒன்றாக தான் கருதுவோம்.ஆனால் அந்த மனபக்குவம் நமக்கு வரவில்லையே?அதற்குதான் முதலில் சிலையினுள் கடவுளை காண்க என்பது.

    "எங்கும் இருக்கும் ஆண்டவன் இங்கும் இருக்கிறான்.அவனை நீ இங்கு கண்டால் பிறகு எங்கும் காண்பாய்" என்பதுதான் தத்துவம். கண்ணபிரான் சொல்வதுபோல் எங்குமிருக்கும் காற்றை ஒரு இடத்தில் திரட்டி தருபவை தான் மின்விசிறிகள். எங்குமிருக்கும் ஆண்டவனை சிலையின் வடிவில் காண செய்பவைதான் கோயில்கள்.

    ReplyDelete
  10. செல்வன். நீங்கள் உருவ வழிபாடு என்ற சொற்றொடரை Idolatry (worshiping the object itself as God instead of worshiping it as a symbol of God) என்ற பொருளில் கொண்டு இங்கே விளக்கம் சொல்லியிருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். நான் சொல்வது சகார உபாசனை/சகுண உபாசனை என்று வடமொழியில் சொல்லப்படுவதை. சகார உபாசனை என்பது நீங்கள் சொல்லும் உருவமுள்ள இறைவனை வணங்குவது தான்.

    மற்றபடி நீங்கள் சொன்ன விளக்கங்கள் அனைத்தும் எனக்கு உவப்பானவையே. மறுப்பில்லை.

    உருவவழிபாட்டின் பயன்/நோக்கம் விரிவானது என்று மேலேயும் குறிப்பிட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  11. //தத்துவக் குப்பையை மறந்து உருவத்தில் பக்தி வைப்பது சிறந்தது என்ற கருத்தும் இருக்கிறது. //

    அடியேன் மனம் இந்தக் கருத்தின் பக்கம் சார்புடையதாக இருக்கின்றது என்று எண்ணுகிறேன்.

    ReplyDelete
  12. நல்ல பதிவு....இந்த மாதிரியான பதிவுகளை தங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறேன் குமரன்

    ReplyDelete
  13. + போட்டாச்சு!

    ReplyDelete
  14. நன்றி குமார். ஆன்மிகச் சாதனைகள் தொடரட்டும். இறையருள் வளரட்டும்.

    ReplyDelete
  15. //நாமே நம் கண்ணில் பட்டுக் கொள்வோம்! கண்ணாடி முன் நின்று! //

    என்னை மட்டுமே கண்ணாடியில் பாத்ததால நீங்க இருக்கிறதையே கவனிக்கலை இரவிசங்கர். உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே என்றிருக்கும் இரவிசங்கர் கண்ணபிரான் இருக்க என் கண்களில் தென்படாமல் போனதற்குக் காரணம் கண்ணில் இருக்கும் தூசி இல்லை இல்லை துரும்பு இல்லை இல்லை உத்தரமே காரணம். :-)

    கருப்பையில் குழந்தை என்னும் போது ஸ்கேனிங்க் பற்றியெல்லாம் எனக்குத் தோன்றவில்லை பார்த்தீர்களா? அங்கு தான் நீங்களும் உங்கள் ஜனரஞ்சக எழுத்துகளும் நிற்கின்றன. :-)

    மின்விசிறி உவமையை வேறெங்கோ கூட படித்த மாதிரி இருக்கிறது. எங்கேன்னு சொல்றீங்களா? :-)

    உருவ வழிபாடு - மின்விசிறி; தத்துவங்கள் - மின்சாரம்; இறையனுபவம் - பயனாளிகளுக்கு காற்று. ஆகா. எம்புட்டு நல்லா பொருந்திச் சொல்றீங்க?! நன்றி நன்றி.

    ReplyDelete
  16. நன்றி வாத்தியார் ஐயா.

    எளிமையான காலத்திற்கேற்ற உவமைகள் எப்போதும் நல்லதுங்க ஐயா. பாலில் உள்ள தயிர், வெண்ணை உவமையை நானும் திரைப்படத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் எந்தத் திரைப்படம் என்று நினைவிற்கு வரவில்லை. திருமால் பெருமையா?

    ReplyDelete
  17. நன்றி மௌலி. தங்கள் விருப்பம் போல் இப்படிப்பட்ட இடுகைகள் நிறைய எழுத இறையருள் முன்னிற்கட்டும்.

    ReplyDelete