Saturday, September 22, 2007

திருவள்ளுவர் போல் புலவருண்டோ? திருக்குறள் போல் நூலுமுண்டோ?


திருவள்ளுவமாலை என்றொரு நூல் இருக்கிறது. திருக்குறளின் பெருமைகளையும் திருவள்ளுவரின் பெருமைகளையும் பலவாறாக சங்கப் புலவர்கள் பலரும் பாடித் தொகுக்கப்பட்டத் தொகுப்பு நூல் இது. இந்த நூலிலிருந்து மூன்று பாடல்களை இங்கே பார்க்கலாம்.

புலவர் திருவள்ளுவர் அன்றிப் பூமேல்
சிலவர் புலவர் எனச் செப்பல் - நிலவு
பிறங்கொளி மாலைக்கும் பெயர் மாலை மற்றும்
கறங்கிருள் மாலைக்கும் பெயர்


பூமியில் மேல் புலவர் திருவள்ளுவரைத் தவிர்த்துப் பிறரைப் புலவர் என்று கூறுவது எப்படி இருக்கின்றது தெரியுமா? முழு நிலவு ஒளிவீசி நிற்கும் மாலை நேரத்திற்கும் 'மாலை' என்று பெயரிட்டுவிட்டு நிலவில்லாமல் இருள் கவிந்திருக்கும் மாலைக்கும் அதே பெயர் வைப்பது போன்றது. (இங்கே மாலை என்றது இரவினை).

மாலும் குறளாய் வளர்ந்து இரண்டு மாணடியால்
ஞாலம் முழுதும் நயந்து அளந்தான் - வாலறிவின்
வள்ளுவரும் தம் குறள்வெண்பா அடியால் வையத்தார்
உள்ளுவ எல்லாம் அளந்தார் ஓர்ந்து


திருமாலும் குள்ளவுருவாய் முதலில் தோன்றிப் பின்னர் திரிவிக்கிரமனாய் வளர்ந்து இரண்டு பெரும் அடிகளால் உலகம் முழுவதையும் நன்றாக அளந்தான். கூரிய அறிவுடைய திருவள்ளுவரும் தம் குறள் வெண்பா அடிகளால் உலகத்தார் எண்ணும் எல்லாவற்றையும் ஆராய்ந்து அளர்ந்தார்.

இங்கே எடுத்துக் கொண்ட உவமை பல நிலைகளிலும் பொருந்துகின்றது. திருமாலை திருவள்ளுவருக்கு உவமையாகச் சொல்கிறார். குறள் வெண்பாக்களுக்கு திருமாலின் குறள் உருவம் (குள்ள வாமன உருவம்) உவமை. திருக்குறள் வெண்பாக்களின் பொருள் விரிவிற்கு திருமாலின் வளர்ந்த திரிவிக்கிரம உருவம் உவமை. குறள் வெண்பாவின் இரண்டு அடிகளுக்கு (சிலர் ஒன்றரை அடிகள் என்றும் ஒன்றே முக்கால் அடிகளென்றும் தவறாகக் கூறுவார்கள்) திருமாலின் இரண்டு பெரும் திருவடிகள் உவமை. உலகத்தார் எண்ணுவதெல்லாம் ஆராய்ந்து அளித்ததற்கு திருமால் உலகமெல்லாம் அளந்தது உவமை.

'திருமால் தாயதெல்லாம்' என்று திருக்குறள் சொல்லும் குறளப்பன் திருக்கதை (வாமன திரிவிக்கிரம அவதாரக் கதை) திருக்குறள் காலமாம் சங்கம் மருவிய காலத்திலும் அனைவரும் பெரிதும் அறிந்த ஒன்றாக இருந்தது என்பது இந்தக் கதையை திருவள்ளுவரும் திருக்குறளைப் புகழும் இந்தப் புலவரும் உவமையாகச் சொல்லியிருப்பதில் இருந்து தெரிகிறது.

தினையளவு போதாச் சிறு புன்னீர் நீண்ட
பனையளவு காட்டும் படிமத்தால் - மனையளகு
வள்ளைக்கு உறங்கும் வளநாட வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பா விரி


தினையளவே இருக்கும் சிறிய நீர்த்துளியானது நீண்ட பனையின் அளவையும் படிமத்தால் காட்டும். வீட்டில் வாழும் கோழிகள் எல்லாம் பெண்கள் நெல்குத்தும் போது பாடும் வள்ளைப்பாட்டின் இசைக்கு உறங்கும் வளம் கொண்ட நாட்டை உடையவனே, திருவள்ளுவனாரின் வெண்பாவினால் செய்யப்பட்டத் திருக்குறளின் பொருள் விரிவு அது போல இருக்கிறது.

தினையளவு நீர்த்துளியில் பனையளவு தெரியும். எவ்வளவு நல்ல உவமை இது!! இதனை விட எளிதாக குறள் வெண்பாவின் பொருள் விரிவினைச் சொல்ல முடியாது.

22 comments:

  1. தகவலுக்கு நன்றி குமரன். தற்போது திருவள்ளுவர் பற்றி பெரிய விவாதம் தொடங்கி உள்ளது. அவர் எந்த கல்லூரியில் படித்தார் என்று? தங்களுக்கு அது பற்றி எந்த தகவலும் தெரியுமா?

    ReplyDelete
  2. குமரன்,
    என்ன ஆச்சரியம். இன்று பின்னேரம் தான் [சாயுங்காலம்--இப்படித்தான் தமிழகத்தில் மாலை நேரத்தைச் சொல்வார்கள், இல்லையா?] திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் எழுதிய "திருக்குறள்" எனும் கட்டுரையை வாசித்தேன்.

    இப்போது உங்களின் இப்பதிவு. வாரியாரும் பல புலவர்களின் பாட்டுக்களை எடுத்தாண்டிருந்தார்.

    நல்ல பதிவு. இன்னும் தொடருங்கள்.

    ReplyDelete
  3. நான் இந்தியாவிலிருந்து வரும் போது எந்த சாமி படமும் கொண்டு வரல. திருக்குறள் மட்டும் தான் எடுத்துட்டு வந்தேன். என் டெஸ்க்ல எப்பவுமே திருக்குறள் இருக்கும்...

    திருக்குறளுக்காகவே தமிழனாக பிறந்ததில் பெருமையடைகிறேன்...

    ReplyDelete
  4. ஒவ்வொரு நாளும் எழுந்த உடன் கடவுள் முன்பு குறளைப்படிப்பது எனது வழக்கம்.


    என்னைப்பொருத்தவரை குறள் என்பது
    பகவத்கீதை, குரான், பைப்பிள் போன்றது.


    நல்ல பதிவு.

    ReplyDelete
  5. அன்புக் குமரா!
    இந்நூல் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன்.ஆனால் படிக்கக் கிடைக்கவில்லை.
    திருமாலுடன்,திருக்குறளை ஒப்பிடுவது மிகப் பொருத்தம்.
    //தினையளவு நீர்த்துளியில் பனையளவு தெரியும். எவ்வளவு நல்ல உவமை இது!! //

    என்ன? கூர்மையான அவதானிப்பு
    அருமை.
    நன்றி

    ReplyDelete
  6. சதுக்கபூதம், இந்த இடுகையை இரு நாட்களுக்கு முன்னரே எழுதிச் சேமித்து வைத்திருந்தேன். நேற்று நீங்கள் சொன்ன கேள்வி எழுந்தது என்று தெரிந்த பின் இடுகையை வெளியிடத் தயங்கிப் பின்னரே வெளியிட்டேன். எதற்காகத் தயங்கினேனோ அதுவே உங்கள் மூலமாக முதல் பின்னூட்டமாக வருகிறது. என்ன சொல்ல? :-)

    உங்கள் கேள்விகளுக்கு எனக்கு விடை தெரியுமா தெரியாதா என்றே எனக்குத் தெரியாது. :-)

    ReplyDelete
  7. வெற்றி, மாலை நேரத்தை பின்னேரம் என்றும் தமிழகத்தில் சொல்வதுண்டு. சாயங்காலம் பெரும்பான்மையினர் சொல்வது. நகரங்களில் வாழ்பவர்கள் இரண்டையும் சொல்வதில்லை - அவர்கள் சொல்வது 'ஈவினிங்'. :-) :-(

    வாரியார் சுவாமிகளும் திருவள்ளுவ மாலையிலிருந்து பாடல்களை எடுத்துச் சொல்லியிருந்தாரா? இணையத்தில் திருவள்ளுவ மாலையைத் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்ல. தமிழ் இணையப் பல்கலைக்கழக நூலகத்தில் தேவநேயப் பாவாணரின் திருப்புகழ் உரையின் முன்னுரையில் அவர் திருவள்ளுவ மாலையின் பல பாடல்களை எடுத்துச் சொல்லியிருக்கிறார். அவற்றில் மூன்றினை இங்கே இட்டேன்.

    ReplyDelete
  8. பாலாஜி. டெஸ்க்ல திருக்குறள் எப்பவும் வச்சிருக்கீங்க சரி. எப்பவாவது படிப்பீங்களா? :-) சும்மா. தமாசு.

    யாமறிந்த புலவரிலேன்னு பாட்டுக்கொரு புலவரும் சொல்லியிருக்கிறாரே.

    ReplyDelete
  9. கடவுள் முன்பு திருக்குறள். மிக நல்ல பழக்கம் திகழ்மிளிர். இது வரை எனக்குத் தோன்றாதது இது.

    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  10. யோகன் ஐயா. முன்பு ஒரு திருக்குறள் புத்தகத்தில் திருவள்ளுவ மாலை பாடல்களை எல்லாம் படித்திருக்கிறேன். இப்போது அந்த புத்தகம் மதுரையில் இருக்கிறது என்று நினைக்கிறேன். இணையத்தில் தேடிய போது எனக்குக் கிடைக்கவில்லை.

    இன்னும் சில பாடல்கள் தேவநேயப்பாவாணர் எடுத்துச் சொல்லியிருக்கிறார். இனி வரும் இடுகைகளில் அவற்றை எடுத்து இடுகிறேன்.

    திருமாலுடன் திருக்குறளை மட்டுமில்லை; அதன் ஆசிரியரையும் ஒப்பிட்டிருக்கிறார். தினையளவு நீரில் பனையளவு தெரியும் உவமை என்னையும் மிகவும் கவர்ந்தது. கூர்மையான அவதானம் என்று எனக்கும் தோன்றியது.

    ReplyDelete
  11. //பிறங்கொளி மாலைக்கும் பெயர் மாலை//

    அட
    திருவள்ளுவ மாலையில், மாலையும் வந்து விட்டது பாருங்கள் உவமையாய்!

    வள்ளுவர்-வாமனர் நல்ல ஒப்புமை!
    குறள்=குள்ள/சிறிய என்ற பொருளில் எப்படிப் பயின்று வருகுது பாருங்கள்!
    திருக்குறளான்=திருவை மார்பில் தாங்கிய குறளான்
    திருக்குறளான்=திருக்குறளை இயற்றிய வள்ளுவர்!

    ஒப்புமை சொல், பொருள் இரண்டிலுமே அழகாய் வருகிறது!
    தினையளவு நீரில் பனையளவு பிம்பம் தெரிவதும் ஆழ்ந்த ஒப்புமை!

    திருவள்ளுவ மாலையில் ஒவ்வொரு பாடலிலும் பாடியவர் பெயர் குறிக்கப்பட்டுள்ளதா குமரன்?

    ReplyDelete
  12. இரவிசங்கர்,

    மதுரையில் வீட்டில் இருக்கும் திருக்குறள் புத்தகத்தில் இருக்கும் திருவள்ளுவ மாலை பாடல்களின் கீழ் ஒவ்வொரு பாடலையும் பாடியவர் பெயர் இருந்தது. இணையத்தில் தேடினேன் கிடைக்கவில்லை. தேவநேயப் பாவாணரும் பாடல்களை மட்டுமே சொல்லியிருக்கிறார். நக்கீரர் பாடிய பாடலை மட்டும் பாடியவர் பெயரையும் குறித்துச் சொல்லியிருக்கிறார். நக்கீரரின் பாடல் பின்னர் இடுகிறேன்.

    ஆமாம் இரவிசங்கர். அந்த மாலையும் இந்த மாலையும் வெவ்வேறு பொருள் என்றாலும் ஒரே சொல் தான். :-)

    உவமைகள் மூலம் தானே எல்லாவற்றையும் விளக்கலாம். நல்ல உவமைகள் இந்த நூல் முழுவதும்.

    ReplyDelete
  13. /* திருவள்ளுவ மாலையில் ஒவ்வொரு பாடலிலும் பாடியவர் பெயர் குறிக்கப்பட்டுள்ளதா குமரன்?*/

    ரவிசங்கர்,
    என்னிடம் உள்ள திருக்குறள் தெளிவுரைப் புத்தகம் மு.வரதராசனார் அவர்களால் எழுதப்பட்டது. அப் புத்தகத்தில் திருவள்ளுவ மாலை எனும் தலைப்பில் பல புலவர்கள் குறள் பற்றிச் சொன்ன பாடல்களையும் அப் பாடல்களின் கீழ் பாடலை ஆக்கியவர்களின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப் புத்தகத்தில் ஆக 9 பாடல்களே உள்ளது. ஆனால் இப் புத்தகத்தில் சொல்லியிருக்காத பாடல்கள் சிலவற்றைத் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் தனது திருக்குறள் எனும் கட்டுரையில் எடுத்தாண்டிருக்கிறர்.

    வரும் வார இறுதியில் நேரம் கிடைத்தால் வாரியார் சுவாமிகளின் திருக்குறள் எனும் கட்டுரையை பதிவேற்றுகிறேன். நல்ல அருமையான் கட்டுரை.

    ReplyDelete
  14. நல்ல தகவல், ஒப்புமை அருமை.அறியத்தந்தமைக்கு நன்றி குமரன்.

    ReplyDelete
  15. வெற்றி, நீங்கள் சொல்லும் மு.வ. அவர்களின் திருக்குறள் தெளிவுரை புத்தகத்தைத் தான் முன்பும் குறிப்பிட்டேன். இந்த இடுகையில் இருக்கும் பாடல்கள் யார் யார் எழுதியது என்று சொல்லுங்கள்.

    வாரியார் சுவாமிகள் எல்லா புலவர்களின் பெயர்களையும் சொல்கிறாரா?

    வார இறுதியில் நேரம் ஏற்படுத்திக் கொண்டு சுவாமிகளின் கட்டுரையை இடுமாறு கேட்டுக் கொள்கிறேன். :-)

    ReplyDelete
  16. திருக்குறளைப் புகழ்வதில் புலவர்களுக்கிடையில் போட்டிதான்.

    அந்தக்காலத்து ஔவையார் ஒருத்தர்

    கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகுத்திக்
    குறுகத் தறித்த குறள்-னு சொன்னா...

    இடைக்காடர் சும்மாயிருக்காம

    அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகுத்திக்
    குறுகத் தறித்த குறள்-னு சொல்லீட்டாரு :))))))))))))))

    ReplyDelete
  17. நீங்க சொன்ன இரண்டு பாட்டுகளையும் படிச்சிருக்கேன் இராகவன். குறுகத் தரித்த குறள் என்பதில் தான் எத்தனை உண்மை.

    ReplyDelete
  18. குமரன்,
    முன்பே படித்துவிட்டேன்... பின்னூட்டம் போட சோம்பல்.
    :))

    திருவள்ளுவர் பெருமைக்குறியவராக இருப்பதால் தான், சமணமும், பெளத்தமும் தங்கள் சமயத்தினர் என்று சொல்லி சான்றுகள் தருகிறார்கள்.

    நீங்கள் நண்பர் பானுகுமார் பதிவில் படித்திருப்பீர்கள். 'மலர் மிசை ஏகினான்' என்ற சொல்லை வைத்து 'அமணர்' என்னும் சமணக்கடவுளை சிலப்பதிக்காரத்தில் அதே பொருளில் போற்றியிருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

    நான் படித்த சீனிவெங்கடசாமி போன்ற ஆய்வாளர்கள் சிலர் புத்தர் புத்தநிலையை அடைந்த போது அவருடைய பாதம் தரையில் படமால் மலரால் தாங்கப்பட்டதாக சொல்லப்பட்ட பவுத்தம் தழுவிய சொல்லாக 'மலர்மிசை ஏகினான்' ஏன்ற சொல்லை திருவள்ளுவர் புத்தரைக் குறித்து வைத்திருப்பதாக எழுதி இருக்கின்றனர்

    அதுபோல் 'அறவழி அந்தணன்' என்ற சொல்லும் புத்தரை குறித்தது என்கின்றனர்.

    திருவள்ளுவத்தில் இறைவன், கடவுள், தெய்வம் போன்றவைகள் வேறு வேறு பொருள் பொதிந்தவை.

    இறைவான் என்றால் அனைவரும் வணங்கும் ஒரே பரம்பொருள்.

    தெய்வம் - என்றால் முன்னோர்கள், முனிவர்கள்.

    கடவுள் - இறைவனுக்கு அடுத்த நிலையில் இருப்பதாக சொல்லப்படும் தேவர்கள் / தேவ தூதர்க்கள்
    என்று பொருளாம்.

    "தெய்வம் தொழா அன் இல்லாள் தான் தொழுவான் பெய்யென பெய்யும் மழை"

    இங்கே தெய்வம் என்பதற்கு பொருள் முனிவர் அல்லது முன்னோர்கள்.

    ReplyDelete
  19. கோவி.கண்ணன். நீங்களே பின்னூட்டம் போடச் சோம்பல் என்று சொன்னால் எப்படி? :-) முதல் ஆளாக பல இடங்களில் பின்னூட்டம் போடுபவராயிற்றே!

    திருவள்ளுவர் பெருமைக்குரியவர் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. சமணமும் பௌத்தமும் மட்டுமின்றி எல்லா சமயத்தவர்களும் திருவள்ளுவர் தங்கள் சமயக்கருத்துகளையே சொல்கிறார் என்று சான்றுகள் காட்டுகிறார்கள். சைவமும் வைணவமும் தரும் சான்றுகளைப் படித்திருக்கிறேன். கிறிஸ்தவம் தரும் சான்றுகளைப் படித்திருக்கிறேன் - ஏசு நாதரின் வாழ்க்கைக்குச் சான்று உரைத்தவர்கள் (Apostles) தான் சான்றோர் என்று அழைக்கப்பட்டு அவர் பெருமை திருக்குறளில் பேசப்பட்டிருக்கிறது என்ற கருத்து இன்றும் நினைவில் இருக்கிறது.
    நண்பர் பானுகுமார் பதிவில் வரும் ஒவ்வொரு இடுகையையும் ஆர்வத்துடன் படிப்பவன் நான். அண்மைக்காலமாக அவர் நிறைய எழுதவில்லை. மலர் மிசை ஏகினான், அறவாழி அந்தணன் போன்ற சொற்றொடருக்கு எல்லா சமயங்களும் என்ன பொருள் சொல்கின்றன என்று படித்திருக்கிறேன். எல்லாமே அந்த அந்த சமயத்தவருக்குச் சரியான பொருளாக இருக்கவும் கண்டிருக்கிறேன். அப்படி பல படியாகப் பொருள் சொல்லக்கூடிய வகையில் திருக்குறளை எழுதிய வள்ளுவர் மெச்சத்தகுந்தவர் தான்.

    இறைவன், தெய்வம், கடவுள் - இம்மூன்று சொற்களுக்கும் உள்ள வேறுபாட்டினைச் சொல்லும் விளக்கத்தை இப்போது தான் முதன்முறையாகப் படிக்கிறேன். நீங்கள் எங்கே படித்தீர்கள் இந்த விளக்கத்தை? மற்ற தரவுகளும் இருக்கிறதா, அல்லது இது சமயவாணர்கள் சொல்லும் கருத்தா என்று பார்க்கவேண்டும். சமய வாணர் சொல்லும் கருத்து என்றால் அந்தச் சமயத்தில் மட்டுமே பொருந்தும் கருத்தாக இருக்க பெரும் வாய்ப்புண்டு.

    ReplyDelete
  20. //இறைவன், தெய்வம், கடவுள் - இம்மூன்று சொற்களுக்கும் உள்ள வேறுபாட்டினைச் சொல்லும் விளக்கத்தை இப்போது தான் முதன்முறையாகப் படிக்கிறேன். நீங்கள் எங்கே படித்தீர்கள் இந்த விளக்கத்தை? மற்ற தரவுகளும் இருக்கிறதா, அல்லது இது சமயவாணர்கள் சொல்லும் கருத்தா என்று பார்க்கவேண்டும்.//

    சங்க இலக்கியங்களிலிருந்தும், திருகுறளில் இருந்தும் நிறைய எ.கா இருக்கிறது. இது சைவ சித்தாந்த கருத்து, ஸ்கேன் செய்து உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புகிறேன். 2 - 3 நாள் ஆகும் !

    ReplyDelete
  21. நன்றி கோவி.கண்ணன். சைவ சிந்தாந்த அடிப்படை என்றால் இராகவனுக்கும் அனுப்பலாம்.

    ReplyDelete