Friday, July 13, 2007
மோனத்திருக்கும் முழுவெண்மேனியான்
சிவபெருமான் சிவப்பா வெளுப்பா? சிவந்தவன் என்ற பொருளில் தான் சிவன் என்று பெயர் வந்தது என்று சொல்லுவார்கள். ஆனால் அவன் நிறத்தை வெள்ளை என்பாரும் உளர். நம் இராகவன் பாரதியாரின் ஆத்திச்சூடியில் வரும் கடவுள் வணக்கத்தை அவருடைய பதிவில் இட்டிருக்கிறார். அந்தக் கடவுள் வணக்கத்தில் விரிசடைக்கடவுளை முதலில் சொல்லும் போது 'மோனத்திருக்கும் முழுவெண்மேனியான்' என்கிறார். தென்னகத்தில் சிவபெருமானின் நிறம் சிவப்பு என்பார்கள்; வடக்கில் தான் அவருக்கு நிறம் வெண்மை. அதுவும் வெண்பளிங்கில் அவருடைய திருவுருவம் பல திருக்கோவில்களில் இருக்கும். பாரதியார் இங்கே முழுவெண்மேனியான் என்பதைப் பார்த்தால் இந்தப் பாடலை காசியில் அவர் வாழ்ந்தபோது எழுதியிருக்கவேண்டும் அல்லது காசியில் பார்த்ததின் தாக்கம் தமிழகம் வந்த பிறகும் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
ஒரு முறை வாரியார் சுவாமிகளிடம் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது. நம்மவர் பெருமானின் நிறம் சிவப்பு என்னும் போது வடவர் அது வெளுப்பு என்கிறார்களே என்று. அதற்கு அடிகள் சொன்ன பதில்: நாம் நெருப்பின் உருவைக் காண்கிறோம்; அவர்கள் நீறு பூத்த நெருப்பாகக் காண்கிறார்கள். எப்படி? நல்ல விளக்கம் தானே?! :-) அவர்கள் வெளியிலேயே நின்று விட்டார்கள்; நாம் கொஞ்சம் ஊதி உள் நுழைந்து பார்த்திருக்கிறோம். :-)
நீறு பூத்த நெருப்பு என்பதிலும் ஒரு அழகு இருக்கிறது பாருங்கள். நீறு பூத்த நெருப்பு என்பது நேரடிப் பொருள்; திருநீறு பூசிய சிவந்த திருமேனி என்பது இன்னொரு பொருள்.
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
முழுவெண்மேனியன் என்பதற்கு திருபூசிய மேனி என்றுதான் பொருள் கொண்டேன். அப்படித்தான் கொள்ள வேண்டும். வாரியாரின் விளக்கமும் அருமை. நல்லதொரு பதிவு.
ReplyDelete//வடக்கில் தான் அவருக்கு நிறம் வெண்மை. //
ReplyDeleteவடக்கில் எல்லா மூர்த்திகளும் பளிங்கு கல்லில் செய்யப்படுவதால், வெள்ளையாகத்தான் இருக்கும். சிவன் மட்டும் வெள்ளையாக இருப்பதில்லை!
ஜீவா. சரியாகச் சொல்லவில்லை என்று நினைக்கிறேன். வடக்கில் சிவபெருமான் வெண்ணிறம் கொண்டவராகத் தான் சொல்லப்படுகிறார். ஓவியங்களும் அப்படியே வரையப்படுகின்றன. வெண்பளிங்கு என்பதல் வெள்ளை என்று சொல்லவில்லை. வெண்பளிங்கில் எல்லாருடைய சிலையும் (மகாவீரர், கண்ணன், ராதை என்று பலர்) வடக்கே இருக்கிறது என்று தெரியும். ஆனால் கண்ணன் வடக்கிலும் கருநிறம் கொண்டவன் தான்; ஆனால் சிவபெருமானுக்கு வெண்ணிறம் சொல்வார்கள்.
ReplyDeleteநீங்கள் சொல்வது போல் தான் விளக்கம் கொள்ளவேண்டும் என்றால் வாரியார் சுவாமிகளே சொல்லியிருப்பாரே இராகவன். வடக்கில் வெண்ணிறமும் தெற்கில் செந்நிறமும் சிவனுக்குச் சொல்லப்படுகிறது என்பது அறிந்ததால் தான் அப்படி பொருள் சொன்னார் அடிகள்.
ReplyDeleteவாரியார் விளக்கம் மிக அருமை!
ReplyDeleteநாம் கொஞ்சம் ஊதி உள் நுழைந்து பார்த்திருக்கிறோம் என்ற குமரனின் மேல் விளக்கம் அருமையோ அருமை! :-)
பனித்த சடையும், "பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்" அல்லவா குமரன்?
பவளச் சிவப்பின் மேல் பால் வெண்ணீறு இரண்டின் வெளுப்பும் சேர்ந்தால் எப்படி இருக்கும்! மேலும் இமயத்தின் பனியெல்லாம் அவன் மேனி மீது அல்லவா பிரதிபலிக்கிறது!
அதனால் தான் போலும் வடக்கே வெண்மை!
தென்னாட்டிலும் திரு "வெண்" காடன் அல்லவா அவன்!
தென்னாடுடைய சிவனே என்பதால், தென்னாடு சொன்ன சிவப்பே உவப்பு!:-)
வாரியார் ஸ்வாமிகளின் சொல்லாற்றலை தந்தமைக்கு நன்றி.....தங்களது கூற்றும் அருமை...
ReplyDeleteசோமன்/சுந்தரன் சிவந்த வடிவானவன்....ருத்ர ரூபத்தில் அவன் நீல மேக ஸ்யாமளன்...சதாசிவ ரூபமோ வெண்மை........இப்படித்தான் உபநிஷதம் சொல்லியிருப்பதாக அறிகிறேன்....
பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறு... மிகப் பொருத்தமான எடுத்துக்காட்டு இரவிசங்கர். மிக்க நன்றி.
ReplyDeleteஉபனிடதம் சொன்னதைச் சொன்னதற்கு நன்றி மௌலி ஐயா.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஉத்தமன் எங்கும் முகக்கும் பெருங்கடல்
ReplyDeleteநித்திலச் சோதியன் நீலக் கருமையன்
எத்தனைக் காலமும் எண்ணுவர் ஈசனைச்
சித்தர் அமரர்கள் தேர்ந்தறி யாரே
-திருமந்திரம்
இங்கு நித்திலச் சோதியன் நீலக் கருமையன் என்பதற்கு உடலில் ஒரு பாதி முத்துப்போல் ஒளிவீசும் வெண்மையும் மற்றொரு பாதி நீலக் கருமை (உமையின் நிறம்) யும் உடையவன் என்று பொருள் வருகிறது.
சதாசிவ ரூபம் வெண்மை நிறமானதாகக் கொள்ளப்படுகிறது.
ஆகா. நித்திலச் சோதியன். முத்து போன்ற ஒளியுடையவன். தமிழும் அவனை வெண்ணிறம் கொண்டவன் என்று சொல்கிறதா? மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி ஜெயஸ்ரீ.
ReplyDelete