Sunday, April 22, 2007

சித்திரை திருவாதிரை

திருவாதிரைத் திருநாள் என்று மார்கழியில் வரும் திருவாதிரைத் திருநாளைக் கொண்டாடுவார்கள். அன்று தான் ஆடல் வல்லானின் அருந்தரிசனம் தில்லைமாநகரில் கிடைக்கிறது. சித்திரையில் வரும் திருவாதிரை நாளும் சிறந்த நாள். இந்து மதத்தின் முப்பெரும் ஆசாரியர்களில் முதல் இருவரும் அவதரித்தத் திருநாள் இது. முதல் ஆசாரியரும் அத்வைத தத்துவத்தை நிலை நாட்டியவரும் ஆன ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதரும் இரண்டாவது ஆசாரியரும் ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயத்தையும் விசிஷ்டாத்வைத தத்துவத்தை நிலை நாட்டியவரும் ஆன உடையவர் ஸ்ரீ இராமானுஜரும் தோன்றிய புனித நாள் இது.



விதிதாகில சாஸ்த்ர சுதா ஜலதே
மஹிதோபநிஷத் கதிதார்த்தநிதே
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம் (தோடகாஷ்டகம் 1)

அனைத்து சாஸ்திரங்களின் நுண்பொருட்கள் என்னும் பெருங்கடலை நன்கு அறிந்தவரே! மிகப்பெரும் உபநிஷதங்கள் என்னும் பெரும்நிதியை வெளிப்படுத்தியவரே! என்னுடைய இதயத்தில் குற்றமற்ற உங்கள் திருவடிகளை என்றும் நினைத்திருக்கிறேன். ஆதி சங்கர குருவே. நீங்களே எனக்குக் கதி. நான் உங்கள் அடைக்கலம்.

கருணாவருணாலய பாலயமாம்
பவ சாகர துக்க விதூன ஹ்ருதம்
ரசயாகில தர்சன தத்வவிதம்
பவ சங்கர தேசிக மே சரணம் (தோடகாஷ்டகம் 2)

கருணைக்கடலே! என்னைக் காப்பாற்றுங்கள்! சம்சாரக்கடலின் வெப்பத்தால் என் இதயம் துவண்டு போய் உள்ளது. அனைத்துத் தத்துவங்களையும் அறிந்து கொள்ளும் படி செய்யுங்கள்! ஆதி சங்கர குருவே! நீங்களே எனக்குக் கதி. நான் உங்கள் அடைக்கலம்.

இந்த தோடகாஷ்டகம் முழுப்பாடலையும் திருமதி. எம்.எஸ். அவர்களின் குரலில் கேட்க இங்கே அழுத்துங்கள்.

***



யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்ம ருக்ம
வ்யாமோஹதஸ்ததிராணி த்ருணாய மேனே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ:
ராமாநுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே
(தனியன்)

அச்சுதனின் திருவடித் தாமரைகளை என்றும் தம் திருமனத்தில் நிலையாகக் கொண்டிருப்பவரும் அந்தத் திருவடித் தாமரைகளைத் தவிர்த்து மற்றிருக்கும் எல்லாவற்றையும் புல்லாக மதிப்பவரும் அடியேனின் ஆசாரியனும் அனைத்து நற்குணங்கள் நிரம்பியவரும் கருணைக்கடலும் ஆன இராமானுஜரின் திருவடிகளுக்கே அடைக்கலமாக என்னை அளிக்கிறேன்.

பூமன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பாமன்னு மாறன் அடி பணிந்துய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த இராமானுஜன் சரணாரவிந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே (இராமானுஜ நூற்றந்தாதி 1)


தாமரைப்பூவில் வாழும் திருமகள் என்றும் நிலையாகப் பொருந்திய மார்பினை உடைய திருமாலவனின் புகழ்களை பல்லாயிரம் பாக்களால் பாடிய மாறன் சடகோபனாம் நம்மாழ்வாரின் திருவடிகளைப் பணிந்து உய்ந்தவர் - பல கலைகளும் வல்லவர்கள் என்றும் மண்ணில் நிலைத்திருக்கும் வண்ணம் தோன்றிய இராமானுஜரின் திருவடித் தாமரைகளில் நாம் என்றும் நிலையாக இருந்து நல்வாழ்வு பெற நெஞ்சமே நீயும் நானுமாக அவர் திருநாமங்களைச் சொல்லுவோம்.

16 comments:

  1. உடலென்னும் உடையுடுத்து
    உலகென்னும் பள்ளிக்கு
    அனுப்பிய தாயே
    உடலில் இருக்கும் போதே
    உண்மையை உணர்த்திடு தாயே!
    என்று குருவையும் அன்னையையும்
    பிரார்த்திகிறேன் அனைவருக்காகவும்.

    ReplyDelete
  2. சித்திரைத் திருவாதிரைக்குத் தான் எத்தனை மகிமை.

    சைவமும் வைணவமும் இணையவே
    இரு முனிகளும் ஒரே நாளில் தோன்றினரோ.
    அவரவர்களுக்கு உண்டான தோத்திரத் துதியும் இட்டுச் சிறப்பு செய்து விட்டீர்கள்.
    நன்றி குமரன்.

    ReplyDelete
  3. குமரன்,

    பதிவுக்கு நன்றி...தோடகாஷ்டம் முழுவதும் விளக்கத்துடன் பதிவிடுங்கள்....

    மெளலி...

    ReplyDelete
  4. //நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே//

    திருவரங்கத்து அமுதனாரின் இராமானுச நூற்றந்தாதியில் இருந்து இட்டமைக்கு நன்றி குமரன்!.
    இரு பெரும் ஆச்சாரியர்கள் ஒரே திருநாளில் அவதாரம் செய்ததால், இது பெரும் நாள் அல்லவா?

    இராமானுசரின் பரமபதித்த (மறைவு) நாளும் இதே சித்திரைத் திருவாதிரை தான்! பிரபாவதி வருடம் 60 ஆண்டு சுழற்சியை, இரு முறை பூரணமாகக் கண்டவர் இராமானுசர்!
    சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே!

    ReplyDelete
  5. //பவ சங்கர தேசிக மே சரணம்//

    "பஜ" சங்கர தேசிக மே சரணம்
    என்று வரவேண்டும் குமரன்.
    எதற்கும் இன்னொரு முறை பார்த்து விடுகிறேன்!

    ஆதி சங்கரருக்கு தேசிகர் என்று சிறப்புப் பெயரா? என்னவொரு ஒற்றுமை!

    ReplyDelete
  6. இன்று என்து பிறந்தநாள்...அதுவும் என் நட்சதிரம்கூட..திருவாதிரை..இதன் மகிமை இப்பத்தான் எனக்கு தெரிந்தது.. நன்றி.

    ReplyDelete
  7. எல்லோருக்காகவும் குருவையும் அன்னையையும் வேண்டிய அன்பு நண்பரே. மிக்க நன்றி.

    ReplyDelete
  8. ஆமாம் அம்மா. இருவரும் ஒரே நாளில் ஒரே நாட்காட்டியில் (நட்சத்திரத்தில்) தோன்றியது தற்செயலானது இல்லை தான் போலும். அத்வைத தத்துவத்தை மீண்டும் நிலைநாட்ட சங்கரர் அவதரித்தார். அதனை விரித்து வேத வேதாந்தங்களுக்கெல்லாம் ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் மூலம் விளக்கம் சொல்லி இருமொழி வேதங்களையும் நிலைநாட்ட ஆதிசேஷ அவதாரமாக இலக்ஷ்மண முனி தோன்றினார்.

    ReplyDelete
  9. ஆகட்டும் மௌலி ஐயா. தோடகாஷ்டகம் முழுவதையும் விரைவில் இடுகிறேன்.

    ReplyDelete
  10. ஆமாம் இரவிசங்கர். இரண்டு ஆசாரியர்களும் ஒரே நாளில் அவதரித்து இந்த நாளின் பெருமையைக் கூட்டிவிட்டனர்.

    இராமனுசர் திருநாட்டிற்கு எழுந்தருளிய திருநாளும் இன்றே என்பதை உங்கள் இடுகை கண்டே அறிந்தேன்.

    ReplyDelete
  11. இரவிசங்கர். பவ சங்கர் தேசிக மே சரணம் என்பதே சரி. 'சங்கர தேசிக! மே சரணம் பவ - சங்கர குருவே! எனக்கு கதியாக இருங்கள்' என்று கூட்டிப் பொருள் கொள்ள வேண்டும்.

    தேசிகர் என்றால் குரு என்று பொருள். சைவ சிந்தாந்தத்தில் பெரும்பாலான குருமகாசன்னிதானங்களுக்கு தேசிகர் என்றே பெயர் முடிவதைக் கண்டிருக்கலாம். பழம் என்பது வாழைப்பழத்திற்கே ஆனது போல் தேசிகர் என்பது வேதாந்த தேசிகரையே குறிக்கும் பெயர் ஆகிவிட்டது.

    ReplyDelete
  12. மிக்க மகிழ்ச்சி அரவிந்தன். பிறந்த நாள் நல்வாழ்த்துகள். எல்லா நலமும் பெற்று வாழ இறைவன் திருவருள் நிலை நிற்கட்டும்.

    ReplyDelete
  13. பதிவுக்கு நன்றி குமரன். எவ்வளவு மகிமை பொருந்திய நாள் இது !!

    ஞானசம்பந்தர் அவதரித்ததும், அம்மையால் ஞானப்பால் ஊட்டப்பெற்றதும் கூட திருவாதிரை நட்சத்திரத்தில்தான்.

    சேக்கிழாரும் தில்லையில் சித்திரைத் திருவாதிரை அன்று திருத்தொண்டர் புராண அரங்கேற்றம் துவங்கி அடுத்த வருடம் சித்திரைத் திருவாதிரை அன்று நிறைவு செய்தார்.

    எம்.எஸ் குரலில் தோடகாஷ்டகம் கேட்டிருக்கிறீர்களா?

    ReplyDelete
  14. மேலதிகத் தகவல்களுக்கு மிக்க நன்றி ஜெயஸ்ரீ. காழிப்பிள்ளையார் அவதரித்ததும் அன்னையிடம் ஞானப்பால் அருந்தியதும் திருவாதிரைத் திருநாளில் என்பதும் சேக்கிழார் பெருமான் தொண்டர் தம் பெருமை சொல்லத் தொடங்கியதும் இந்த நன்னாளில் தான் என்பதும் இன்று அறிந்து கொண்டேன்.

    எம்.எஸ். பாடியதைக் கேட்டுக் கொண்டே தான் இந்த இடுகையை எழுதினேன். அந்தப் பாடலையும் இடுகையில் இப்போது இணைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  15. சைவ ஜோதியும் வைணவஜோதியும் ஆதிரையில் பிறந்தது நட்சத்திரத்திற்கே சிறப்பானது! இருபெரும் குருமுனிகளை இன்று பதிவிலிட்டு ஆராதித்துவிட்டீர்கள் குமரன் ..
    ஷைலஜா

    ReplyDelete
  16. ஆமாம் சைலஜா. இன்றைக்கு இராமானுஜ நூற்றந்தாதி சொன்னீர்களா? இல்லையென்றால் இந்த இடுகையில் இருப்பதைப் படித்திருப்பீர்கள். இல்லையா?

    ReplyDelete