Wednesday, April 11, 2007

முருகும் குழகும் அழகு

அழகினைப் பற்றி எழுத தம்பி இராமச்சந்திரமூர்த்தியும் அண்ணன் கோவி.கண்ணனும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள். பாருங்கள் பொருத்தத்தை. அழகு என்றாலே நினைவிற்கு வருபவர்கள் முருகனும், கண்ணனும், இராமனும். முருகு என்றாலே அழகு என்று பொருள். குழைவான அழகிற்கு கண்ணன். கம்பீரமான அழகிற்கு இராமன். அழகன் முருகன் பெயர் கொண்ட அடியவனை கம்பீர அழகன் இராமனும் குழகன் கண்ணனும் அழைத்திருக்கிறார்கள். நான் இராகவனையும் இரவிசங்கரையும் சங்கரகுமாரையும் அழைக்கிறேன்.

அழகில்லாத இடமும் உண்டோ? கடினமான சூழலிலும் எங்கோ மறைந்திருக்கும் ஆனால் நம் கண்ணெதிரிலேயே இருக்கும் அழகினைக் கண்டு கொண்டால் அந்தக் கடினச் சூழலைத் தாண்டுவது எளிதாகுமே.

மேகமில்லா வானம் அழகு. வெண் முகில்களுடன் கூடிய வானமும் அழகு. கார் மேகங்களைக் கண்டால் மயிலாருக்கு கோலாகலம்.

கொளுத்தும் வெயிலில் சோலை அழகு.

மழை பொழிந்த பின் மாலை வெயிலில் பச்சை இலைகளுடன் கூடிய மரங்கள் அழகு.

உடலை முழுதும் மூடிய பின்னும் தங்கள் அழகு நன்கு தெரியும் வண்ணம் கண்ணைக் கவரும் (கவர்ச்சிகரமான இல்லை) ஆடை அணியும் இளம் பெண்கள் அழகு.

நேர்த்தியான ஆடை அணிந்த ஆடவர் அழகு.

நிறைய கேள்விகள் கேட்டு அனைத்தையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் கொண்ட குழந்தைகள் அழகு.

அவர்களிடம் நாம் தொடர்ந்து கேள்விகள் கேட்டுக் கொண்டே செல்ல அவர்கள் அறிந்தவரை விடை சொல்லிக் கொண்டே வரும் குழந்தைகள் அழகு.

கூட்டமாகப் பறந்து செல்லும் பறவைகள் அழகு.

மலர்ந்து மணம் வீசும் வண்ண மலர்கள் ஒவ்வொன்றும் அழகு.

சிறு குழந்தைகள் வரையும் கிறுக்கல் ஓவியங்கள் அழகு.

மழலை அழகு.

மழலை மாறிய பின் மழலையை நினைவில் வைத்திருந்து 'நான் முன்பு அப்படிச் சொல்வேன். இப்போது சரியாகச் சொல்கிறேன்' என்று குழந்தைகள் சொல்லும் போது அழகு.

அன்பும் பண்பும் நிறைந்தவர் அனைவரும் அழகு.

21 comments:

  1. //சிறு குழந்தைகள் வரையும் கிறுக்கல் ஓவியங்கள் அழகு.//

    குமரன்,

    அருமை... யாரும் சொல்லாதது.

    இது,
    கட்டுரையா ? அல்லது வைரமுத்து பாணி உரைநடை கவிதையா ?

    நன்றாக வந்திருக்கு !!!

    ReplyDelete
  2. உங்க பதிவு ரொம்ப எளிமையா ரெண்டு ரெண்டு வரியா இருந்ததால படிக்கும்போது கண்ணுக்கு மை அழகு பாட்டுதான் ஞாபகத்துக்கு வந்தது!

    ReplyDelete
  3. //மழை பொழிந்த பின் மாலை வெயிலில் பச்சை இலைகளுடன் கூடிய மரங்கள் அழகு.//
    அதோட மண்வாசனையும் சேர்ந்த அடிச்சுக்க முடியாத அழகுதான்..

    இந்தப்பதிவுல எல்லாமே அழகா இருக்கு. எளிமையும் அழகுதானில்லையா??

    ReplyDelete
  4. குமரன் கட்டும் உரை அழகு.
    சிறார் மழலையில் திளைப்பது அழகு.
    நீங்கள் ரசிக்கும் உலகமும் அழகு.
    வாசிக்கக் கிடைத்த பதிவும் அழகு.

    ReplyDelete
  5. //மேகமில்லா வானம் அழகு. வெண் முகில்களுடன் கூடிய வானமும் அழகு. கார் மேகங்களைக் கண்டால் மயிலாருக்கு கோலாகலம். //
    என்ன சொல்றீங்க? வானத்தில மேகம் இருந்தாலும் அழகு; இல்லாவிடினும் அழகுன்னு சொல்லுறீங்களா?

    //மழை பொழிந்த பின் மாலை வெயிலில் பச்சை இலைகளுடன் கூடிய மரங்கள் அழகு.//
    தூசி போய் ஒரு பளபளப்பு இருக்குமே...

    //சிறு குழந்தைகள் வரையும் கிறுக்கல் ஓவியங்கள் அழகு.
    //
    அருமை. அதில் அவர்களின் கற்பனையும் சேர்ந்து இருக்குமே...

    ReplyDelete
  6. கண்ணன் அண்ணா. வசன கவிதை என்றே நினைத்துக் கொள்ளலாம். ஆனால் அது பாரதியின் பாணி - வைரமுத்துவும் அப்படி எழுதியிருக்கிறார். :-)

    பாராட்டிற்கு நன்றி. நீட்டி முழக்கத் தேவையில்லாத தலைப்பு. அதனால் சிறு சிறு சொற்றொடர்களால் சொல்லி நிறுத்திவிட்டேன்.

    ReplyDelete
  7. கொத்ஸ். உங்களுக்கும் வைரமுத்து பாடல் வரிகள் நினைவிற்கு வந்ததா? அப்படின்னா வைரமுத்துவின் தாக்கம் இந்த இடுகையை எழுதும் போது இருந்திருக்கலாம். :-)

    எளிமையா இருந்தா டக்குன்னு படிச்சு டக்குன்னு பின்னூட்டமும் போட்டுறலாம் இல்லை. எனக்கும் அப்படி நிறைய தடவை ஆகியிருக்கு.

    ReplyDelete
  8. இராம்ஸ். நீங்க எல்லாம் நம்ம பதிவு பக்கம் வந்து வருடக்கணக்குல ஆகியிருக்கும். இன்னைக்கு அதிசயமா வந்திருக்கீங்க? வாங்க வாங்க.

    ஓ. உங்களையும் எளிமை தான் கவர்ந்ததா? :-)

    ReplyDelete
  9. வல்லி அம்மா. எளிமை எளிமைன்னு ரெண்டு பேர் மேல சொல்லியிருக்காங்க. உங்க பின்னூட்டம் தான் இருக்கிறதுலேயே எளிமையா இருக்கு. நன்றி அம்மா.

    ReplyDelete
  10. காட்டாறு,

    எனக்கு மேகமில்லா வானம் பிடிக்கும்; ஆங்காங்கே பஞ்சுப்பொதிகளைப் போல் இருக்கும் வெண்மேகங்கள் இருக்கும் வானமும் பிடிக்கும். மழைமேகங்கள் சூழ்ந்திருக்கும் வானம் அவ்வளவாகப் பிடிப்பதில்லை - அதனால் அதனை மயிலாருக்கு அனுப்பிவிட்டேன். :-)

    மேகமில்லா வானத்தைக் காணும் போது மனத்தில் இருக்கும் எண்ணங்கள் எல்லாம் நீங்கி ஒரு அமைதி சூழ்கிறது. பஞ்சுப்பொதிகளைக் காணும் போது கவிதைகள் ஊற்றெடுக்கின்றன.

    கார்மேகத்தைக் கண்டால் கண்ணன் நினைவு பலருக்கும் வருவதாக ஆழ்வார்களும் கவிஞர்களும் எழுதியிருக்கிறார்கள். ஆனால் எனக்கு நீல வானத்தைப் பார்க்கும் போது தான் அவன் நினைவு வருகிறது.

    மழை பொழுந்த பின் வெயிலில் தெரியும் இலைகளில் தூசி போய் பளபளப்பு வருகிறதா என்று தெரியவில்லை; ஆனால் அந்த ஈரத்தில் வெயில் பட்டு இலைகளின் பச்சைநிறம் இன்னும் பளபளக்கும்; கண்ணைப் பறிக்கும். அது பிடிக்கிறது. அதனைக் கண்டு மனம் துள்ளும்.

    குழந்தைகள் கிறுக்கல் ஓவியங்களில் அவர்கள் கற்பனை நிறைய இருக்கும். பல முறை அவர்களிடமே இது என்ன அது என்ன என்று கேட்டு அவர்கள் அது என்ன என்று சொல்லும் போது வியப்பாக இருக்கும். அவர்கள் எவ்வளவு கூர்மையாகக் கவனிக்கிறார்கள்; என்னவெல்லாம் அவர்களாகவே கற்றுக் கொள்கிறார்கள் என்பதெல்லாம் அறிய அது ஒரு நல்ல வாய்ப்பு.

    இடுகையை எளிதாக இட்டு பின்னூட்டத்தைப் பெரிதாக இட்டுவிட்டேன். :-)

    ReplyDelete
  11. இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேன். வண்ணங்களில் பச்சை அழகு. எனக்கு பச்சை நிறம் பிடிக்கும் என்பதை என் நான்கு வயது மகள் ஒரு வருடத்திற்கு முன்பு கண்டுபிடித்துச் சொன்னாள். அதற்குப் பிறகு நானும் பார்க்கிறேன். என் தொடர்புள்ள பல இடங்களில் பச்சை இருக்கிறது. :-)

    வளமோடும் நலமோடும் இருப்பது பிடிக்கிறது போலும்.

    ReplyDelete
  12. அழகு. அழகு பற்றிச் சொல்லும் எளிமையான உங்கள் பதிவும் அழகு. பச்சை வண்ணம் உங்களைக் கவர்ந்ததில்லை. அந்த வண்ண மாமலைபோல் மேனி கொண்ட பவழ வாய்க் கமலச் செங்கன் அச்சுதனை அமரர் ஏறை ஆயர்தம் கொழுத்தை சிந்தித்துக்கொண்டிருக்கையில் எப்படிப் பிடிக்காமற் போகும்!

    என்னையும் அழைத்தமைக்கு நன்றி. விரைவில் பதிவிடுகிறேன்.

    ReplyDelete
  13. ஒற்றைச் சொல்லில் அழகை அழகாகச் சொன்னதற்கு நன்றி மங்கை. :-)

    கோயம்பத்தூர்க்காரங்க ரொம்ப பேசுவாங்கன்னு சொல்வாங்க. நீங்க அப்படி இல்லையா? :-)

    ReplyDelete
  14. எளிமை எல்லோருக்கும் பிடிக்கும் போல. இனிமே எளிமையா இருக்க முயற்சி பண்ண வேண்டியது தான். சரி தானே இராகவன்? :-)

    ReplyDelete
  15. //கம்பீர அழகன் இராமனும்//


    நல்ல ஜோக் ததா.... :)

    //உடலை முழுதும் மூடிய பின்னும் தங்கள் அழகு நன்கு தெரியும் வண்ணம் கண்ணைக் கவரும் (கவர்ச்சிகரமான இல்லை) ஆடை அணியும் இளம் பெண்கள் அழகு.//

    ஹி ஹி சூப்பர் ;)

    //
    மழலை மாறிய பின் மழலையை நினைவில் வைத்திருந்து 'நான் முன்பு அப்படிச் சொல்வேன். இப்போது சரியாகச் சொல்கிறேன்' என்று குழந்தைகள் சொல்லும் போது அழகு.//

    உண்மை....


    மொத்தத்தில் உங்கள் பதிவு அழகோ அழகு.... அதுவும் அளவான வார்த்தைகளோடு :)

    ReplyDelete
  16. ////சிறு குழந்தைகள் வரையும் கிறுக்கல் ஓவியங்கள் அழகு.//

    இதைப் பலரும் உணர்ந்து ரசித்திருக்கலாம். எங்கு வரைந்தார்கள் என்பது தான் சுவை, சுவாரஸ்யம், தலைவலி எல்லாம் :-)

    சுவரில் கிறுக்கக் கூடாதம்மா...இந்தா இந்த வெள்ளைப் புத்தகத்தில் அழகா வரைந்து காட்டு பாக்கலாம் என்று சொல்லி, இரண்டே நாளில் ஐ.நா சபை சென்றோம்!

    அங்குள்ள சுவரோவியங்களைப் பார்த்து நண்பனின் சுட்டிப் பெண், "மாமா...பாருங்க அமெரிக்காவிலேயே இப்படி சுவரில் வரையறாங்க!
    நான் தான் சின்னப் பொண்ணு, இவங்க எல்லாம் எவ்ளோ பெரியவங்க! பாவம், நீங்க கொடுத்த புத்தகத்தை வேணும்னா இவங்களுக்கு கொடுத்து விடட்டுமா" என்று அப்பாவியாகக் கேட்டாள்!

    அப்பாவித்தனமான அழகு!!!

    ReplyDelete
  17. ஆனால் எனக்கு நீல வானத்தைப் பார்க்கும் போது தான் அவன் நினைவு வருகிறது.
    குமரன் இதைப்பார்த்ததும் நினைவுக்கு வருவது
    "விவேகாநந்தர் சென்னை வந்திருந்தபோது இளைஞர்களின் கூட்டத்தில் உரையாற்றினார்.அப்போது ஒரு கேள்வி கேட்டார். ஏன் கண்ணனுக்கு நீல நிறத்தை தேர்ந்தெடுத்தார்கள்.அதற்கு அந்தக்கூட்டத்தில் இருந்த ராஜாஜி கூறினார்.நீல நிறமாயிருக்கின்ற வானம் எங்கும் பரந்து நீககமற நிறைந்து இருக்கிறது.அதுபோல எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும் கண்ணனும் நீலமாய் இருக்கிறார்

    ReplyDelete
  18. நன்றி இராம். உங்களை கம்பீர அழகன்னு சொன்னேன்னா நினைச்சீங்க?! இருக்கலாம். நான் எங்கே உங்களைப் பாத்திருக்கேன். :-)

    ReplyDelete
  19. ஆமாம் இரவிசங்கர். ஒவ்வொரு வார்த்தையையும் நன்றாக நினைவில் வைத்திருந்து தகுந்த நேரத்தில் கேட்டு மடக்குகிறார்கள். :-)

    எங்க வீட்டுலயும் தாள் வாங்கி வாங்கியே வீடெல்லாம் தாளாக இறைந்து கிடக்கிறது.

    ReplyDelete
  20. ஆமாம் தி.ரா.ச. நானும் நீங்கள் சொன்னதைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.

    ReplyDelete