நம் நண்பர் இரவிசங்கர் கண்ணபிரான் திருவேங்கடவன் திருப்பள்ளியெழுச்சிக்குப் பொருள் சொல்லிக் கொண்டு வருகிறார். அண்மையில் அவர் இட்ட பதிவில் அடியேன் சில பின்னூட்டங்களை இட்டேன். அப்போது தோன்றிய கருத்துகளை அப்படியே எழுத்தில் இட முயன்றதால் முற்றுப்புள்ளியே இல்லாமல் சில கருத்துகளைச் சொல்லியிருந்தேன். அவற்றை இன்னும் எளிமையாகச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நண்பர்கள் சிலர் அறிவுறுத்தியதால் அங்கே சொன்னதை இன்னும் எளிமையாகவும் விளக்கமாகவும் சொல்ல அடியேன் முயல்கிறேன்.
ஸ்ரீ ஸ்வாமினி - திருமகள் நம்மையுடையவள்!
இந்தப் பதிவு கொஞ்சம் வைணவ தத்துவங்களில் செல்லும். அதனால் கொஞ்சம் பொறுமையாகப் படிக்கும் படி நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். தத்துவங்கள் என்பதால் எல்லோருக்கும் புரியும் படி சொல்வது எளிதாக இருக்காது என்று எண்ணுகிறேன். முடிந்த வரை எளிதாகத் தர முயல்கிறேன். அடியேன் சிறிய ஞானத்தன்.
முதலாளியின் மனைவியும் முதலாளி என்று ஏற்றுக் கொள்வது சில நேரங்களில் ஏற்புடையது. பல நேரங்களில் ஏற்றுக் கொள்ள முடியாதது. நாம் ஒரு வீட்டில் வேலைக்காரராக இருந்தால் அந்த வீட்டில் இருக்கும் எல்லோருமே நமக்கு முதலாளிகளாக இருக்கலாம். ஆனால் அலுவலகத்தில் மேலாண்மையாளராக இருக்கும் ஒருவரது மனைவியும் நம்மிடம் மேலாண்மையாளரைப் போல் நடந்து கொண்டால் நாம் ஏற்றுக் கொள்வோமா? சில மேலாளர்களின் மனைவியர் அப்படித் தான் எண்ணிக் கொள்கின்றனர் என்பது வேறு. ஆனால் நம் கண்ணோட்டத்தில் அது அபத்தமாகத் தோன்றும் இல்லையா? அதைவிடக் கொடுமை சில நேரங்களில் சில மேலாளர்களின் மனைவியர் தங்கள் கணவர்களின் கீழ் வேலை செய்பவர்களின் மனைவியர் தங்களுக்கு அடிமைகள் என்பது போல் நடந்து கொள்வது தான். :-) பலருக்கும் அந்த அனுபவம் இருக்கும் என்று எண்ணுகிறேன். நான் மேலாளர் ஆவதற்கு முன்னாலேயே என் வீட்டம்மாவிடம் அப்படி நடந்து கொள்ளக் கூடாது என்று சொல்லிவிட்டேன். என் நல்வினைப்பயன் என் வீட்டம்மாவும் அந்த மாதிரி எண்ணிக் கொள்பவர் இல்லை. அதனால் என் குழுவில் வேலை செய்பவர்கள் எல்லாம் வீட்டிலும் அலுவலகத்திலும் நண்பர்களாகவும் இருக்கிறார்கள்.
சரி. இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா? இதோ சொல்லிவிட்டேன். வடமொழியில் ஸ்வம் என்றால் சொத்து. ஸ்வாமி என்றால் சொத்தை உடையவன். ஸ்வாமினி என்றால் சொத்தை உடையவள். உயிருள்ளது, உயிரற்றது என்று இந்த உலகிலும் பேரண்டங்களிலும் இருக்கும் எல்லாமே ஸ்வம் என்பதற்குள் அடக்கம். அந்த சொத்துக்களை உடையவன் ஸ்வாமி. அந்த ஸ்வாமி யார் என்ற கேள்விக்கு வடமொழி வேதங்களும் தமிழ் வேதங்களும் மிகத் தெளிவாகச் சொல்லிவிடுகின்றன. எளிமையாக கோதை நாச்சியார் 'நம்மையுடையவன் நாராயணன்' என்றும் 'நாராயணனே நமக்கே பறை தருவான்' என்றும் சொல்லிவிடுகிறார். அதனால் பெருமாள் தான் நம்மைப் பெறும் ஆள்; அவரே எல்லாரையும் விட பெரும் ஆள் என்று மிகத் தெளிவாகச் சொல்லிவிடுகிறார்கள். யார் நம் ஸ்வாமி; நம்மையுடையவர் என்பது ஐயத்திற்கு இடமின்றி தெளிவாகிவிடுகிறது.
சரி. இப்போது சொல்லுங்கள். நம்மையுடையவன் நாராயணன். சரி. அவனது துணைவி - என்றும் அவனை விட்டு நீங்க மாட்டேன் என்று அவனது மார்பில் நிலையாக அமர்ந்தவள் - அவள் நம்மையுடையவளா இல்லையா? மேலாளரின் மனைவியும் நமக்கு மேலாளரா இல்லையா?
அவனைச் சேர்ந்தவர் எல்லாருமே நம்மையுடையவர்கள். 'அவன் அடியார் அடியார் அடியார் அடியார் அடியார் தமக்கு அடியேன்' என்று ஆழ்வார்கள் சொல்லும் போது அவனின் துணைவி நம்மையுடையவளாய் இருப்பதில் என்ன தடை? அப்படித்தானே தோன்றுகிறது. உண்மை தான். ஸ்வாமியின் தர்மபத்னி நமக்கு ஸ்வாமினி.
திருமகள் திருமாலின் துணைவி என்ற முறையில் மட்டுமே நம்மையுடையவளா? எப்படி நாராயணன் அவனின் தனியுரிமையால் நம்மையுடையவனோ அப்படியே பெரிய பிராட்டியாரும் (திருமகளைப் பெரிய பிராட்டி என்பர்) தனது தனியுரிமையாலேயே நம்மையுடையவளா? இந்தக் கேள்விக்கு ஆசாரியர்கள் சொல்லும் பதில் 'ஆமாம்' என்பதே. இருவருமே நம்மையுடையவர்கள். இருவரும் இணைபிரியாதவர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் இணையானவர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் ஏற்றவர்கள் - திருமாலுக்கு ஏற்ற துணைவி திருமகள்; திருமகளுக்கு ஏற்ற துணைவன் திருமால். இருவரும் சேர்ந்தே நம்மையுடையவர்கள். திருமகளின்றித் திருமால் என்றுமே இல்லை. அதனால் அவனால் நம்மை அவனுக்கு மட்டுமே உரிமையானவராகக் கொள்ள முடியாது. இருவருக்கும் சொத்து நாம். இப்படி தன் தனியுரிமையாலும் நம்மை உடையவளாக இருப்பவள் மகாலக்ஷ்மி என்பதைச் சொல்லவே தனியாக ஸ்ரீ ஸ்வாமினி என்று சொல்லியிருக்கிறார்கள்.
அப்படி இருவருமே பரம்பொருள்; இருவருமே நம்மையுடையவர்கள் என்றால் இன்னொரு கேள்வி எழுகிறது. பரம்பொருள் ஒன்றே என்பது தான் வேதங்கள் சொல்வது. அதுவே அறிவிற்கும் ஏற்றது. பரம்பொருள் இருவராக இருப்பது சாத்தியமில்லை. 'ஏகம் சத். விப்ரா பஹுதா வதந்தி - உண்மை ஒன்றே. அறிஞர்கள் அதனைப் பலவாறாகப் (புகழ்ந்து) பேசுகிறார்கள்' என்றும் 'ஏகம் அத்விதீயம் - ஒன்று;(தனக்கு இணையாக) இரண்டாவது இல்லாதது' என்றும் வடமொழி வேதங்களும் 'தானோர் தனிவித்து' என்றும் 'ஒருவனே தேவன்' என்று தமிழ்மறைகளும் பேசுவதற்கு ஏற்ப இல்லையே இருவரும் பரம்பொருள் என்பது? இந்தக் கேள்விக்கு ஆசாரியர்கள் சொல்லும் பதில்: எப்படி மலரும் மணமும், சுடரும் ஒளியும் இணைபிரியாமல் இருக்கிறதோ அது போலவே இறைவனும் இறைவியும் இணைபிரியாமல் இருப்பதால் இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் இருப்பு என்பதே இல்லை; அதனால் இருவரும் ஒரே தத்துவமே. அதனால் ஒன்றே தேவன் என்பதற்கு இருவரும் பரம்பொருள் என்பது ஏற்புடையதே.
பிரணவம், திருமந்திரம், துவயமந்திரம் இவையும் இந்தப் பொருளையே சொல்கின்றன என்று இரவிசங்கரின் பதிவில் பின்னூட்டமாகச் சொல்லியிருந்தேன். அவற்றையும் விரித்தால் மிக விரிவாக இந்தப் பதிவு அமைந்துவிடும். அவற்றைப் பற்றி வேறோரிடத்தில் பேசலாம்.
ஸ்வம், ஸ்வாமி, ஸ்வாமினி என்ற சொற்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருள் புதிய செய்திதான்
ReplyDeleteநன்று!
சொத்து என்பது எது இறையருளா அல்லது மனிதன் ஓடிப்பிடித்துத் தேடிக்கொண்டிருக்கும் சொத்தா(பணமா)?
இது பற்றி வடமொழி நூல்கள் என்ன சொல்கின்றன நண்பரே?
குமரன்
ReplyDeleteநல்ல பதிவு மற்றும் விளக்கங்கள்.
ஆயினும் இறைவனையும் இறைவியையும் மேலாலர்களாக கொள்ள வேண்டியதேன். அவர்கள் அன்னை தந்தை அல்லவா..
இறைவனோ இறைவியோ நம்மை ஏவிடுபவர்கள் அல்லர்.
அவனை நோக்கி நாம் ஒரு அடி எடுத்து வைத்தால் பத்தடி நம்மை நோக்கி எடுத்து வைக்கக்கூடியவன் அல்லவா இறைவன்...
இறைவன் நம்மை கொண்டவன் என்பதில் எந்த மாற்றும் இல்லை.. நாம் நமது அன்பால் அவனை அடைய அவன் தன் பேரன்பால் நம்மை ஆட்கொள்கிறான்.
எனது புரிதலில் தவறிருந்தால் பொறுத்து விளக்க வேண்டுகிறேன்.
நன்றி
வாத்தியார் ஐயா. நம் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால் நிலையான வைத்தமாநிதி இறைவனும் இறையருளுமே. நாம் ஓடிப்பிடித்துத் தேடிக்கொண்டிருக்கும் சொத்து நிலையற்றது. இறைவனின் கண்ணோட்டத்தில் நிலைத்தது, நிலைக்காதது இரண்டுமே அவனுடைய சொத்துகள். எல்லாமே அவனுக்குரியவை (ஸ்வம்). சொந்தமாய் இருப்பது சொத்து. தனக்கென (ஸ்வ) இருப்பது ஸ்வம். அந்த வகையில் ஸ்வாமிக்கும் ஸ்வாமினிக்கும் உரியவையே யாமும் எம் உடைமைகளும் எல்லாமும்.
ReplyDeleteசாத்வீகன்,
ReplyDeleteஅவர்கள் அன்னை தந்தையர் என்பதே முதற்பொருள். அதனைத் தானே முதலில் சொன்னார்கள். மாத: என்று தாயார் என்று சொல்லித் தானே இந்த சுலோகமே தொடங்குகிறது. அதனை முதலில் சொல்லிவிட்டு அதே நேரத்தில் 'மறந்துவிடாதீர்கள். அவர்கள் நம்மையுடையவர்கள் என்பதையும்' என்று இங்கே சொல்லுகிறார்கள்.
இறைவனும் இறைவியும் நம்மை ஏவிடுவதற்கு உரிமையுடையவர்கள். ஆனால் நாம் ஓரடி வைத்தால் பத்தடி நம்மை நோக்கி வைத்தும் ஏதோ ஒரு சின்ன காரணத்தைக் கொண்டு நம்மேல் அருள் புரிந்தும் நம்மை அவனது பேரன்பாலேயே ஆட்கொள்கிறான் என்பதிலும் எந்த ஐயமும் இல்லை. அவனுடைய குணங்களைச் சொல்லும் போது பரத்துவத்தையும் (எல்லாவற்றையும் எல்லாரையும் விட உயர்ந்த, ஒப்பார் மிக்கார் இல்லாத தன்மை) சொல்லிவிட்டு பின்னரே அவனது வாத்ஸல்யத்தையும் (அன்னையின் அன்பையும்) சௌலப்யத்தையும் (எளிவந்த தன்மையையும்) சொல்வார்கள். அது போலத் தான் அன்னை என்று சொல்லியபின் அவள் ஸ்வாமினியும் என்று சொன்னது.
குமரா!!
ReplyDeleteமந்திரி, மனைவி மந்திரியா??கோலோச்சுவதில்லையா?,,முதலமைச்சர் மனைவி முதலமைச்சர் ஆகவில்லையா?,(ராப்ரிதேவி-லாலு)...அமெரிக்காவில் பெஸ்ட்(1) லேடி என்கிறாங்க !அப்படி சுவாமிக்கு ஏன் ஆகக்கூடாது..;அதுவும் திருமகளுக்கில்லாத் தகுதியா??
யோகன் பாரிஸ்
குமரன்
ReplyDeleteஅழகான, விரிவான விளக்கம்!
//ஸ்ரீ சுவாமினி, ப்ரிய தான சீலே//
யார் தானம் கொடுக்க முடியும்?
சொத்து உள்ளவர் தானே! சொத்துக்கு உரிமை உள்ளவர் தானே!
அதனாலும் அவள் சுவாமினி!
அன்னை நாம் பிரியப் பட்டதை எல்லாம் தானமாகத் தருகிறாள்; அதுவும் கேட்காமலேயே! பிரியப்பட்ட உடனேயே!
ஸ்ரீ ஸ்வாமினி என்ற பதம் எவ்வளவு பொருளை தன்னுள் பொதிந்திருக்கிறது என்பது உங்கள் விளக்கத்தைப் படித்தபின் புரிந்தது.
ReplyDelete//இருவரும் இணைபிரியாதவர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் இணையானவர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் ஏற்றவர்கள் - திருமாலுக்கு ஏற்ற துணைவி திருமகள்; திருமகளுக்கு ஏற்ற துணைவன் திருமால் //
தேசிகர் தனது ஸ்ரீ ஸ்துதியில் சொல்வது " நீங்கள் இருவரும் ஒரு நொடி கூடப் பிரியாத தம்பதிகள். உங்கள் அன்னியோனியம் எப்படிப்பட்டதென்றால் தம்பதிகளாய் உங்களைக் குறிப்பிடும் போது கூட ஸ்ரீயாம் பதி என்று ஸ்வாமியையும், விஷ்ணு பத்னி என்று உன்னையும் சொல்கிறார்கள். பாற்கடலில் ஆதிசேஷன் மீதும் ,தூய யோகியர் இதயத்திலும், வேதங்களின் தலையிலும் தம்பதிகளாக யோக நித்திரையில் துயில் கொள்கிறீர்கள்"
பாற்கடலில் துயில்வதும் வேதங்களால் துதிக்கப்படுவதுமான பரம்பொருள் இந்த தம்பதியே.
வைணவ மார்க்கத்தில் சரணாகதி அல்லது பிரபத்தி எனும் ஆத்ம நிவேதனத்தில் தனியாக நாராயணனை அல்ல, இந்த தம்பதிகளையே உபாயமாக ( நிவேதனத்தை எற்றுக்கொளும் தெய்வமாக ) கொள்ளப்படுகிறது. எனவே நாம் பரம் என வணங்கும் பரதேவதை இந்த தம்பதியே.
விஷ்ணு புராணம் சொல்வது " அன்னை ஒலியாகவும் (சொல்லாகவும்) விஷ்ணு அதன் பொருளாகவும் , நாராயணன் ஞானமாகவும் அன்னை புத்தி என்ற பெயரில் அவனது உபகரணமாகவும் , நாராயணன் தர்மமாகவும்(அறமாகவும்) அன்னை அதை செயல்படுத்தும் சத் கர்மமாகவும் ( நற் செயல்களாகவும் இருக்கிறார்கள்.
சுப்ரபாதப் பதிவுகள் களை கட்டுது என்று ஞானம் ஐயா சொன்னார்! சீமாச்சு அவர்கள் நிறுத்தாமல் தொடர்ந்து எழுதச் சொல்கிறார்!
ReplyDeleteஒவ்வொரு சுலோகமும் ஆழ்பொருளும், ஆழ்வார் குறிப்பும் பேசுகின்றன. அதனால் தானோ என்னவோ, பின்னால் வந்த மொழி ஆக்கங்களை முழுமையாக அனுபவிக்க இயலவில்லை! ஒன்று பாட்டின் கருத்து இருந்தால் மெட்டு சரியாக அமையாது; இல்லை மெட்டு மட்டும் அதே போல் அமைந்தால், கருத்துகள் விடுபட்டுப் போயிருக்கும்!
ஆனால் நாம் இதைக் கேட்டுக் கேட்டு, பொருள் தெரிந்தோ, தெரியாமலோ...
ஒன்றுக்குள் ஒன்றாகி விட்டது!
முதலில் வடமொழிப் பாடலுக்குப் பொருள் உரைக்க வேண்டுமா என்ற தயக்கம் இருந்தது; அதான் தமிழ் சுப்ரபாதம் வந்து விட்டதே! போதாதா என்று கேள்வி எனக்குள் எழுந்தது! "போதாது!" என்ற விடையும் பிறந்தது!
மூலப் பாடல் மக்களோடு ஒன்றி விட்டதால், அதன் மூலமாகவே சொல்லலாம் என்று தான் அடியேன், கடைசியில் துணிந்து முனைந்தேன். பாடல் ஒலிப்பகுதியும் சிறிதி சிறிதாக வெட்டினேன்! அப்படி முனைந்தது எவ்வளவு நல்லது என்று இப்போது தான் தெரிகிறது!
தொட்டனைத்து ஊறும் மணற் கேணியாய், கருத்துகள் ஊறுவதைப் பார்க்க பார்க்க ஆனந்தம்! அதுவும் தமிழ்ப் பாசுரக் கருத்துகள் பயின்று வரும் சுலோகங்கள் அவை! மாமுனிகள் மனதைப் படம் பிடித்து எழுதிய பாடல்கள் அல்லவா இவை!
அதை அத்தனையும் விரித்துச் சொல்லித் தீபமாய் ஜொலிக்க வைக்கும் உங்களுக்கு வெறும் "நன்றி" என்று அடியேன் எப்படிச் சொல்ல முடியும்?
//எப்படி மலரும் மணமும், சுடரும் ஒளியும் இணைபிரியாமல் இருக்கிறதோ அது போலவே இறைவனும் இறைவியும் இணைபிரியாமல் இருப்பதால் இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் இருப்பு என்பதே இல்லை; அதனால் இருவரும் ஒரே தத்துவமே//
ReplyDeleteஇப்படி இறைவனையும் இறைவியையும் சேர்த்தே அனுபவிக்க வேண்டும்!
அப்படிச் செய்யாமல் போவது என்பது, மலரை விட்டு மணத்தைப் பிரிப்பதற்கு ஒப்பானது! இதற்கு ஆச்சார்யர்கள் இராமாயண விளக்கம் கொடுப்பார்கள்!
சூர்ப்பனகை, இறைவியை ஒதுக்கி இறைவனை மட்டும் அனுபவிக்க எண்ணினாள்! முடியவில்லை!
இராவணன் இறைவனை ஒதுக்கி, இறைவியை மட்டும் பற்ற நினைத்தான்!...ஹூம்! அதுவும் முடியவில்லை!
நம் அனுமன், இறைவன் இறைவி, இருவரையும் ஒரு சேர அனுபவித்தான்! அவளுக்கு அவனையும், அவனுக்கு அவளையும் காட்டினான்! நீங்காப் புகழும், நிலைபெற்ற ஆனந்தமும் கிடைக்கப்பெற்றான்!
அதனால் தான் சுவாமி-சுவாமினி, இறைவன்-இறைவி, இருவரையும் சேர்த்து அனுபவிக்க வேண்டும் என்பது பெரியோர் காட்டிச் சென்றனர்! ஸ்ரீநிவாசனில், "ஸ்ரீ" என்பதை எடுக்கத் தான் முடியுமா? அப்படி எடுத்தால் அவன் பெயரில் பொருளும் தான் வருமா?
நன்றி குமரன்,
ReplyDeleteஇறைவனை ஒவ்வொருவரும் நோக்கும் பார்வையே அவர்களுக்கு இறைவனை பற்றிய புரிதலை தருகிறது.
மீராவும், ஆண்டாளும் இறைவனை மணாளனாக பார்த்தமையும்,
குகன் இறைவனை தன் நண்பனாய் பாவித்தமையும்..
அனுமன் தன்னை இறைவனின் சேவகனாய் பாவித்தமையும்,
இறைவன் யார் தன்னை எவ்வடிவில் நோக்கிலும் அவ்வடிவில் அருளும் தன்மையினன்...
இறைவனோடு இறைவி என்று வரும் போது அன்னையப்பன் பாவமே மேலோங்கி வருகிறது.
ரவிஷங்கர் தமது பின்னூட்டத்தில் அனுமன் இறைவனையும் இறைவியையும் தனது ஸ்வாமியாகவும், ஸ்வாமினியாவும் ஒரு சேர கொண்டு சேவை செய்தமையை குறிப்பிட்டுள்ளமையை ஒப்பு நோக்கி கொள்கிறேன்.
அவனை நம் தலைவன், ஸ்வாமி என பாவிக்குங்கால் கருணை பெருக்கு மிகுந்த தலைவனாக வந்து அருள வல்லான்.
தங்கள் விளக்கங்களுக்கு நன்றி.
உங்களின் சிந்தனைத் தொடர்ச்சியை நன்கு சொல்லியிருக்கிறீர்கள் யோகன் ஐயா. மிக்க நன்றி.
ReplyDeleteகுமரன்! ஸ்வாமினிக்கு அளித்த விளக்கம் அழகு. ஆம்! திருமகள் இருப்பிடமெல்லாம் அழகுதான். ஜெய்ஸ்ரீயின் ஸ்ரீ ஸ்துதி விளக்கமும் இங்கு பொருந்துகிறது. சிறு திரிதான். தூண்டிவிடப்பட்டால் எப்படி ப்ரகாசிக்கிறது பாருங்கள்! அவரவர் கருத்துக்கள் அற்புதமாய் அரங்கேறுகின்றன.
ReplyDelete'மாதவன் சக்தியினைச் செய்ய மலர் வளர் மணியினை வாழ்த்திடுவோம் ' என்கிறார் பாரதியும். மாதவனின் சக்தியாம் திருமகள்!
நாரணனை இணை
பிரியாதவள் அவள் என்பதை மேலும் பாரதி,'நாரணன் மார்பினிலே அன்பு நலமுற நித்தமும் இணைந்திருப்பாள்' என்கிறார்.
தொடருங்கள் குமரன் இதனை.
ஷைலஜா
மிக்க நன்றி ஷைலஜா.
ReplyDeleteமிக நன்றாக அடுத்த வரியையும் சேர்த்துச் சொன்னீர்கள் இரவி. அருமை. சொத்துக்கு உரியவர் தானே கொடுக்க முடியும். :-)
ReplyDeleteஜெயஸ்ரீ,
ReplyDeleteஸ்ரீ ஸ்துதியில் ஸ்வாமி தேசிகன் சொல்வதையும் விஷ்ணு புராணத்தில் பராசர ரிஷி சொல்வதையும் எடுத்துக் காட்டி மிக அழகாக விளக்கியிருக்கிறீர்கள். அடியேன் எழுதிய பதிவிற்கு நண்பர்கள் நீங்கள் வந்து இடும் பின்னூட்டங்களால் அடியேன் பலவற்றை அறிந்து கொள்கிறேன். மிக்க நன்றி.
உங்கள் பின்னூட்டத்தில் ஒவ்வொரு சொல்லையும் மிக விரும்பிப் படித்தேன். மிக்க நன்றி.
இரவிசங்கர். இந்தப் பதிவுகள் எழுதும் போது உங்கள் சுப்ரபாதப் பதிவை நான் எடுத்துக் கொள்கிறேன் என்று தாங்கள் எண்ணிவிடுவீர்களோ என்ற தயக்கம் முதலில் இருந்தது. பின்னர் உங்களிடம் கேட்டுவிட்டுத் தான் எழுதத் தொடங்கினேன். தாங்கள் சுப்ரபாதப் பதிவுகள் எழுதத் தொடங்கும் முன் தங்களுக்குத் தோன்றிய எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.
ReplyDeleteஇரவிசங்கர். இராமாயணத் தத்துவத்தை மிக நன்றாக விளக்கியிருக்கிறீர்கள்.
ReplyDeleteமிக்க நன்றி சாத்வீகன்.
ReplyDeleteபதிவும் பின்னூட்டமுமே என்னை வேறு எதுவும் கேட்கமுடியாத நிலைக்கு தள்ளிவிட்டது.
ReplyDeleteநன்றாக இருந்தது.
ஆமாம்,வலது பக்கம் உள்ள லிங்கில் தமிழ் எழுத்துக்கள் பூச்சி காட்டுகிறதே!! கொஞ்சம் பாருங்கள்.பின்னூட்டத்திலும் இதே பிரச்சனை தான்.
இதற்கு மருந்து,ஜெகத் பதிவில் இருக்கிறது.அதற்கு எங்கு போவது என்றால் என்னுடைய வலைப்பதிவில் வலது பக்கத்தில் "பூச்சி மறைக்க" என்ற சுட்டி தெரியும்.
நன்றி வடுவூர் குமார்.
ReplyDeleteஜெகத் பதிவில் இருக்கும் பூச்சி மருந்தைத் தெளித்தாகிவிட்டது. ஆனாலும் என் பதிவில் இனிப்பு நிலைக்க இந்த ஜிலேபிகள் விடாமல் நிற்கின்றன. :-) இன்னும் கொஞ்சம் கவனிக்க வேண்டும். சோம்பேறித்தனம் தான்.
வடுவூரார் கூரியது போன்றே எனது நிலைமையும், தங்களின் பதிவையும் அதற்க்கான பின்னூட்டங்களயும் பார்த்து ம்இகவும் சந்தோஷம், கருத்த்க்களைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி குமரன். தங்களின் கருத்துக்களில் இருக்கும் இனிப்பு ஜிலேபிகளை சுவைக்க விரும்பு எறும்பு நான்,எனவே எனக்கு கருத்து இனிப்பு மட்டுமே தெரிகின்றது எழுத்தில் ஜிலேபிகள் தெரியவில்லை!
ReplyDeleteஅன்புடன்...
சரவணன்.
தங்களின் அன்பிற்கு மிக்க நன்றி சரவணன்.
ReplyDelete