Wednesday, December 06, 2006

தமிழ்மணத்தில் இருந்து விடைபெறுகிறேன்

அன்பு நண்பர்களே,

கடந்த சில மாதங்களாக மனதில் ஓடிக் கொண்டிருந்த இந்த எண்ணத்தை நிறைவேற்றும் காலம் வந்துவிட்டது என்று எண்ணுகிறேன். அதனை அறிவித்துவிட்டு இதோ தமிழ்மணத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன்.

தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றி இரண்டு மூன்று வருடங்களாக அறிந்திருந்தாலும் 2005 வருடம் தான் தமிழ்மணத்தைப் பற்றியும் பிளாக்கரைப் பற்றியும் நண்பர் சிவபுராணம் சிவா சொன்னார். அந்த அறிமுகத்தால் தமிழ்ப்பதிவுகள் எழுத வந்து தமிழ்மணத்தால் பல நன்மைகள் பெற்றேன். தமிழ்மணத்தால் பெற்ற நன்மைகளைச் சொல்லி முடியாது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதனைப் பற்றி பலமுறை சொல்லியிருக்கிறேன்.

தமிழ்மணத்தின் பழைய நிர்வாகமும் புதிய நிர்வாகமும் உவப்பு வெறுப்பின்றி நடுநிலைமையோடு இந்த வலைதிரட்டும் பணியைச் செவ்வனே செய்து வருகிறார்கள். அவர்கள் தொடர்ந்து இந்தத் தமிழ்ப்பணியைச் செவ்வனே செய்து தமிழை வளர்த்து வரவேண்டும் என்று வாழ்த்துகளுடன் வேண்டிக் கொள்கிறேன்.

அண்மைக்காலமாகத் தமிழ் வலைப்பதிவுலகில் கருத்து மோதல்களில் தொடங்கி அவை தனிமனிதத் தாக்குதல்களாகவும் நக்கல், நகைச்சுவை என்ற பெயரில் எழுதப்படும் தரம் குறைந்த எழுத்துகளாகவும் பரிணாமம் பெற்று வருகிறது. வலையுலகச் சூழல் மிகவும் நச்சூட்டப் பெற்று வருகிறது. இந்தச் சூழலில் இருந்து விடுபட பதிவுகளில் எழுதுவதையே நிறுத்திவிடலாமா என்று சிந்தித்ததில் அதனை விட சிறந்தது இந்த சூழல் எங்கு அதிகம் தென்படுகிறதோ அங்கிருந்து விடுபடுவதே என்று தோன்றியது. அதனால் நான் விரும்பிப்படிக்கும் வலைப்பூக்களைச் சேமித்து வைத்துக் கொள்ளத் தொடங்கினேன். நிறைய பதிவுகளைச் சேர்த்து வைத்தாகிவிட்டது. இன்னும் சில நாட்களில் எல்லாமும் சேர்ந்துவிடும் என்ற சூழலில் நேற்று தனி மனிதத் தாக்குதல் என் வட்டத்திற்குள்ளேயே வந்து இந்த முடிவை இப்போதே செயல்படுத்து என்று பிடித்துத் தள்ளிவிட்டது.

என் வலைப்பூக்களில் இருவகை இருக்கிறது. கூட்டு வலைப்பூக்கள், தனி வலைப்பூக்கள். தனி வலைப்பூக்கள் எல்லாவற்றிலும் தமிழ்மணப்பட்டையை எடுத்துவிட முடிவு செய்திருக்கிறேன். கூட்டு வலைப்பூக்களைப் பற்றி அந்த வலைப்பூ அன்பர்கள் எல்லோரிடமும் பேசி அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி செய்ய முடிவு செய்திருக்கிறேன். அதனால் சில கூட்டு வலைப்பூக்கள் தமிழ்மணத்தில் இருக்கும். அதன் மூலம் எனது சில பதிவுகளும் தமிழ்மணத்தில் தெரியலாம்.

தமிழ்மணப்பட்டையை நீக்குவது மட்டும் போதாது. நிர்வாகத்திற்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று சில நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். விரைவில் நிர்வாகத்திற்கும் தெரியப்படுத்துகிறேன். (இந்த நேரத்தில் ஒரு வேண்டுகோள் - எப்படி தமிழ்மணத்தில் இணைத்துக் கொள்வது என்ற வழிமுறைகள் சொல்லியிருப்பதைப் போன்று, எப்படி தமிழ்மணத்தில் இருந்து விலகிக் கொள்வது என்பதைப் பற்றியும் சொன்னால் இனி மேல் அதனைப் பயன்படுத்த நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த வேண்டுகோளை நிர்வாகத்திற்கும் தெரியப்படுத்துகிறேன்).

தமிழ்மணத்தைத் தவிர வேறு எந்த வலைத்திரட்டியிலும் என் பதிவுகளைச் சேர்த்ததில்லை. தேன்கூடு தொடங்கப்பட்ட போது என் வலைப்பூக்களில் சில அங்கே இருப்பதைப் பார்த்தேன். மேல் விவரங்கள் சில அப்போது கொடுத்தேன். ஆனால் அதன்பிறகு தொடங்கப்பட்ட எந்த வலைப்பூவும் தேன்கூட்டில் நான் இணைக்கவில்லை. தமிழ்மணத்தில் மட்டுமே இணைத்தேன். இனிமேலும் நானாக எந்த வலைத்திரட்டியிலும் என் வலைப்பூக்களை இணைக்கப்போவதில்லை. தானாக ஏதாவது வலைத்திரட்டி திரட்டிக் கொண்டால் திரட்டிக் கொள்ளட்டும்.

தமிழ்மணத்தால் பெற்ற நன்மைகள் பலவற்றில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது நண்பர்களும் அவர்களின் வலைப்பூக்களும். தமிழ்மணத்தில் இருந்து விலகும் போது, பெற்ற நன்மைகளை மிகவும் நன்றியோடு நினைத்துப் பார்த்து அன்புடனும் மகிழ்ச்சியுடனும் தமிழ்மணத்திற்கு நன்றி சொல்லி விடைபெறுகிறேன்.

என் பதிவுகளை தொடர்ந்து படிக்கும் நண்பர்கள் அப்படியே தொடர்ந்து படித்து ஊக்குவிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

103 comments:

  1. அன்பு குமரன்

    மிகவும் வருத்தமாக உள்ளது..உங்கள் பதிவை தொடர்ச்சியாக படித்து பயன் பெரும் வாசகர்களில் நானும் ஒருவன்..

    உங்களுடைய ஆன்மீக அறிவு,வலைப்பூக்களில் உங்கள்து நேர்மையான வாதம்..பல வலைப்பூக்கள் அமைத்து தமிழ் + ஆன்மீகத் தொண்டு...

    மிகவும் கஷ்டமாக உள்ளது குமரன் உங்களைப் போன்றோர் விலகுவது..

    அன்புடன்
    மாயக்கூத்தன் கிருஷ்ணன்

    ReplyDelete
  2. எங்கிருந்தாலும் வாழ்க!
    உன் "இதயம்" அமைதியில் வாழ்க!

    எங்கே போனாலும் வந்து படிப்போமில்ல!!

    :))

    ReplyDelete
  3. உங்களை இந்த முடிவு வருந்தத்தக்கதே :(..

    ReplyDelete
  4. வாழ்க்கையில் மென்மேலும் உயரங்களைத் தொட வாழ்த்துக்கள் குமரன்....

    ReplyDelete
  5. குமரன் சார்,

    உங்கள் எல்லா முயற்சிகளுக்கும் வாழ்த்துக்கள்!!


    உங்கள் நன்பன்
    சிவபாலன்.

    ReplyDelete
  6. குமரன்,

    தொடர்ந்து எழுதுங்கள். நாங்கள் வந்து படித்துக் கொள்கிறோம்.

    //எங்கிருந்தாலும் வாழ்க!
    உன் "இதயம்" அமைதியில் வாழ்க!
    //

    இதை நான் வழிமொழிகிறேன்!

    ReplyDelete
  7. திரு.மாயக்கூத்தன் கிருஷ்ணன்.

    எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். என் மின்னஞ்சல் முகவரி என் ப்ரொபைலில் இருக்கிறது. பதிவுகள் இடும் போது உங்களுக்கு மின்னஞ்சலின் மூலம் தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  8. குமரன் !

    எங்கு எழுதினாலும் எழுத்துப் பொருள் மாறுவதில்லை. உங்கள் முடிவுகள் உங்களுக்கு அமைதியையும், மாறுதல், மகிழ்ச்சி தரவேண்டும் அதுதான் எனக்கு விருப்பம் ! தொடர்ந்து படித்து கலாய்பேன்.

    நன்றி !

    ReplyDelete
  9. இப்போது என்ன ஆகிவிட்டது என்று இந்த முடிவு? புரியவில்லையே.

    எது எப்படியானாலும் அதை தீர்மானிக்க வேண்டியது நீங்கள்தானே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. குமரன்,

    எதற்காக இந்த முடிவு.... :-((((((

    ReplyDelete
  11. குமரன்,
    முதலில் இதை படித்து கவலையுற்றாலும் இது உங்களை சுதந்திரமாக செயல்பட வைக்கும் என்றே தோன்றுகிறது. இது எங்களுக்கு இன்னும் சிறந்த பதிவுகளையே தரும் என்று நிச்சயமாக நம்புகிறேன்

    கண்டிப்பாக உங்கள் பதிவுகளை நாங்கள் என்றும் படிப்போம்.
    ஒரே பிரச்சனை புதிய வாசகர்கள் உங்கள் பதிவுகளை வந்து சேரும்விதம்தான்.

    இது நீங்கள் தமிழ்மணத்திலிருந்து விடைபெறும் பதிவே அன்றி வலைப்பதிவிலிருந்து இல்லை என்பதால் மகிழ்ச்சியே அடைகிறேன்...

    ReplyDelete
  12. //தொடர்ந்து படித்து கலாய்பேன்//

    இதையும் நான் வழிமொழிகிறேன்!

    :))

    ReplyDelete
  13. குமரன், உங்கள் முடிவு இது. நீங்கள் எழுதுங்கள். நான் வந்து படிக்கிறேன் வழக்கம் போல்.

    ஆனால் ஒன்று சொல்ல விரும்புகிறேன்

    "போற்றுவார் போற்றலும்
    தூற்றுவார் தூற்றலும்
    போகட்டும் கண்ணனுக்கே"

    அன்புடன்

    கால்கரி சிவா

    ReplyDelete
  14. I always be here to read your blog.

    Anbudan
    Gyanadevan

    ReplyDelete
  15. நடுவில் HTMLல் விளையாடிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் தலைப்பு மட்டுமே தெரிந்தது; பதிவு முழுமையாகத் தெரிந்திருக்காது. தலைப்பை மட்டும் பார்த்துப் பதிவைப் படிக்காத நண்பர்கள் மன்னிக்கவும்.

    ReplyDelete
  16. "போற்றுவார் போற்றலும்
    தூற்றுவார் தூற்றலும்
    போகட்டும் கண்ணனுக்கே"

    இதை நான் வழிமொழிகிறேன்!

    ReplyDelete
  17. திரு. மாயக்கூத்தன் கிருஷ்ணன். பதிவில் சொன்னது போல் நான் தமிழ்மணத்தில் இருந்து மட்டுமே விலகுகிறேன். பதிவுகளைத் தொடர்ந்து எழுதிக்கொண்டும் படித்துக் கொண்டும் இருப்பேன். நீங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தாருங்கள். உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன்.

    ReplyDelete
  18. எஸ்.கே. நான் எங்கேயும் போகலை. வழக்கம் போல பதிவுகள் இட்டு உங்கள் மின்னஞ்சல் பெட்டியை நிரப்பிவிட மாட்டேன்?! நீங்க தான் எல்லாப் பதிவுகளுக்கும் வருவதில்லை. :-) நேரம் கிடைக்கிறப்ப வாங்க. :-)

    ReplyDelete
  19. இல்லை சந்தோஷ். இதில் வருந்துவதற்கு ஏதுமில்லை. சந்தோஷமா இருங்க. :-) அப்படியே மின்னஞ்சல் வந்தா வந்து எட்டிப் பாத்துட்டுப் போங்க. :-)

    ReplyDelete
  20. நன்றி அன்புடன்...ச.சங்கர். உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் தாருங்கள்.

    ReplyDelete
  21. நன்றி நண்பர் சிவபாலன். அந்த நட்பிற்கு அடையாளமா என்னைத் தனிப்பட்ட முறையில் ஜாதியைச் சொல்லி தாக்குதல் விடும் பின்னூட்டத்தை உங்கள் பதிவில் இருந்து அழித்தீர்கள் என்றால் மிகவும் மகிழ்வேன்.

    அது உங்கள் பதிவு. உங்கள் பதிவில் என்ன பின்னூட்டம் அனுமதிப்பது என்பது உங்கள் உரிமை. ஜாதியைச் சொல்லித் தாக்கும் ஒரு பின்னூட்டத்தை நீங்கள் அனுமதித்தது உங்கள் உரிமையில் சேர்ந்தது.

    ReplyDelete
  22. நன்றி கோவி.கண்ணன் அண்ணா. முடிந்த போதெல்லாம் படித்துப்பாருங்கள். உங்களின் கலாய்த்தல் பின்னூட்டங்களை வரவேற்கிறேன். :-)

    ReplyDelete
  23. டோண்டு இராகவன் ஐயா. நீங்கள் படிக்கும் போது பதிவின் தலைப்பு மட்டுமே தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அப்படியென்றால் பதிவை இப்போது படித்துப் பாருங்கள். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராகவன் ஐயா.

    ReplyDelete
  24. இராம். நீங்கள் படிக்கும் போது பதிவின் தலைப்பு மட்டுமே தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அப்படியென்றால் பதிவை இப்போது படித்துப் பாருங்கள்.

    ReplyDelete
  25. உண்மை பாலாஜி. சுதந்திரம் கூடும் என்றே நானும் நினைக்கிறேன்.

    நீங்கள் சொன்ன பிரச்சனையை நானும் எண்ணிப்பார்த்தேன். ஆனால் தமிழ்மணத்தில் சேராமல் எத்தனையோ தமிழ் வலைப்பதிவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வலைப்பூக்களிலும் பின்னூட்டங்கள் வருகின்றன. என் வலைப்பூக்களில் பின்னூட்டம் இடாத வாசகர்கள் நிறைய பேர் இருப்பதாக உணர்கிறேன். இவற்றை எல்லாம் எண்ணிப் பார்க்கும் போது புதிய வாசகர்கள் கூகிள் தேடலிலோ இல்லை நண்பர்களின் பதிவுகளில் இருக்கும் சுட்டிகளின் மூலமோ என் பதிவுகளுக்கும் வந்து சேர்வார்கள் என்று எண்ணுகிறேன்.

    ReplyDelete
  26. ஆமாம் சிவா அண்ணா. போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே என்று தான் நானும் நினைக்கிறேன். ஆனால் தேவையில்லாமல் தீமையைப் படிப்பதும் கேட்பதும் வேண்டாம் என்றே விலகுகிறேன். தங்கள் அன்பிற்கு நன்றி.

    ReplyDelete
  27. மிக்க நன்றி ஞானதேவன். தொடர்ந்து படித்து வாருங்கள்.

    ReplyDelete
  28. நன்றி ஜெய.சந்திரசேகரன்.

    ReplyDelete
  29. சமூக ஏற்றத்தாழ்வுகளைக்குறித்த சில கொதிப்பான பிரச்சினைகளை அணுகும் அல்லது விமர்சிக்கும் விதத்தில் உங்களுக்கு இன்னும் முதிர்ச்சி தேவை என்பது சில சந்தர்ப்பங்களில் உங்களது சில பின்னூட்டங்களைப் படித்தபோது தோன்றியது - ஒரு அனாமதேயமாக சொல்ல நினைப்பது அவ்வளவுதான். அது ஒரு விஷயம் தவிர்த்து, ஆன்மீகத்தில், மொழியில், கலாச்சாரத்தில், சமூகத்தில் நிஜமாகவே அக்கறை கொண்டவர் நீங்கள் என்பது உங்கள் பதிவுகளைப் படிப்பவர்கள் எளிதில் தெரிந்துகொள்வார்கள். உங்களது பதிவுகளில் பின்னூட்டம் இட்டத்தில்லை என்றாலும் தொடர்ந்து படித்து வந்துள்ளேன். மனவருத்தம் வேண்டாம், வழக்கம்போல உங்கள் பதிவுகளை எழுதிக்கொண்டிருங்கள்.

    ReplyDelete
  30. தமிழ்மணத்திலிருந்து விடைபெற்றால் உங்கள் மீதான தாக்குதல்கள் குறையும் என நினப்பது சரியானதாய் தெரியவில்லை.

    உங்கள் பதிவுக்கு யார் வேண்டுமானாலும் வரலாமே. யார் வேண்டுமானாலும் இணைப்பு கொட்த்து பதிவிடலாம். உங்களுக்கு எதிராய் பதிபவரை படிக்கமல் போய் விட வாய்ப்புண்டு.

    தனிமனித தாக்குதல் செய்பவர்கள் பலர்தான் கொள்கைகளை பேசிச் செல்கிறார்கள் என்பது வருந்தத்தக்க செய்தி.

    உங்கள் முடிவை மாற்றமுடியுமா பாருங்கள். சிலரை ஒதுக்கிவிட்டு தொடரலாம். அவர்களின் பின்னூட்டங்களை ஒதுக்குங்கள்.

    தமிழ்மணத்தில் எந்த சூழலும் இல்லை மாறாக வலைப்பதிவர் மத்தியில்தான் காழ்ப்புணர்வு உள்ளது என்பதே உண்மை.

    ReplyDelete
  31. Goodbye!!!. Dont forget Oil Bath in sunday. Read well. Write Well.
    Pls. try to change your MIND.

    ReplyDelete
  32. குமரன் சார்

    என் பதிவிலா??!!

    தயவு செய்து லிங் தரவும்.. உடலே டெலிட் செய்துவிடுகிறேன்..

    என்னுடைய பதிவில் அனானி பின்னூடங்கள் இல்லை.. அதனால் கருத்து சுதந்திரம் என்று எல்லோரும் கேட்டுக் கொள்வதால் பின்னூடங்களை அனுமதித்துவிடுகிறேன். யாரேனும் எதிர்ப்போ வருத்தமோ தெரிவித்தால் உடனே டெலிட் செய்துவிடுகிறேன்.

    நிங்கள் நான் மதிக்கும் நல்ல மனிதர். நீங்கள் ஒரு தனிமடலாவது முன்பே அனுப்பியிருக்கலாம்.. நான் உடனே டெலிட் செய்திருப்பேன்..

    லிங்க் கொடுங்கள்.. டெலிட் செய்துவிடுகிறேன்...

    உங்களுக்கு ஏற்பட்ட வருத்ததிற்கு நானும் வருந்துகிறேன்..

    நன்றி.

    ReplyDelete
  33. அப்படித்தான் எண்ணினேன் சிவபாலன். யாரைப்பற்றிய தாக்குதல் அந்தப் பின்னூட்டம் என்று தெரியாமலேயே, அது தாக்கும் பின்னூட்டம் என்று கூடத் தெரியாமல் நீங்கள் அனுமதித்துவிட்டீர்கள். அந்தப் பதிவிற்கு வந்து பின்னூட்டம் இட்டிருக்கிறேன். உங்கள் புரிதலுக்கு நன்றி.

    ReplyDelete
  34. பெயர் சொல்ல விரும்பாத நண்பரே. நீங்கள் சொல்லும் குறை என்னிடம் இருக்கலாம். அவரவர்கள் இருக்கும் இடத்திற்கும், அடைந்த அனுபவங்களுக்கும் ஏற்ப தான் கருத்துகளும் அவற்றில் முதிர்ச்சியும் இருக்கும். அதனால் என் கருத்துகளில் குறை இருக்கலாம் என்பதில் எனக்கு எந்த வித மறுப்பும் இல்லை.

    தாங்கள் இதனை உங்கள் பெயரிலேயே சொல்லியிருக்கலாம். ஒரு நல்ல நண்பரை அடையாளம் கண்டு கொண்டிருப்பேன். இப்பொதும் நீங்கள் மின்னஞ்சல் அனுப்பினால் மகிழ்வேன்.

    தங்களின் ஆறுதல் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  35. குமரன் சார்

    சம்பந்தப்பட்ட பின்னூடம் டெலிட் செய்துவிட்டேன்.. அது சம்பந்தமான என்னுடைய பின்னூடமும் டெலிட் செய்துவிட்டேன்..

    நீங்கள் தமிழ்மணத்திலிருந்து விலகும் முடிவை மறுபரிசிலனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இது சம்பந்தமாக விரைவில் நான் தனிப் பதிவிட்டு உங்களுக்கு அழைப்புவிடுக்கப் போகிறேன்.

    ReplyDelete
  36. உண்மை தான் சிறில். தமிழ்மணத்தில் இருந்து விடைபெறுவதால் தாக்குதல்கள் குறையும் என்று எண்ணவில்லை. ஆனால் அவை என் பார்வைக்கு வராது. காலப்போக்கில் நான் இங்கே இருந்ததே பலருக்கு மறந்துவிடும். காலப்போக்கில் என்றது ஒரு மாதமாகக் கூட இருக்கலாம். என்பது தமிழ்மணத்தில் மிகவும் உண்மை. :-)

    இணைப்பு கொடுத்துப் பதித்தால் அந்த இணைப்பின் மூலம் அந்தப் பதிவுகளைப் படிக்க வாய்ப்புண்டல்லவா? அது போக, அவற்றைப் படிக்க வேண்டாம் என்பது தான் என் எண்ணம்.

    தமிழ்மணம் என்பதே அதில் வலைப்பதிவு செய்யும் வலைப்பதிவர்கள் தானே சிறில். அதுவும் இதுவும் வேறு வேறா? தமிழ்மணச்சூழல் என்று சொன்னது தமிழ்மணம் வேண்டுமென்றே ஏற்படுத்திக் கொடுத்தச் சூழல் என்ற பொருளில் இல்லை. வலைப்பதிவர் மத்தியில் இருக்கும் காழ்ப்புணர்ச்சியே எப்படி தமிழ்மணத்தில் சூழல் கெடுப்பாய் உள்ளது என்பதையே.

    ReplyDelete
  37. //Goodbye!!!. Dont forget Oil Bath in sunday. Read well. Write Well.
    Pls. try to change your MIND.
    //

    Thanks Mom. You have removed my worry about not having a Mother. :-)) Thanks again.

    ReplyDelete
  38. பின்னூட்டத்தை அழித்ததற்கு நன்றி சிவபாலன். தனிப்பதிவு இட்டு அழைப்பு விடுத்துத் தங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள். அதற்கு பதில் உங்கள் பயண ஏற்பாடுகளைக் கவனியுங்கள். ஊருக்குச் சென்று வந்தவுடன் தொடர்ந்து என் பதிவுகளையும் படியுங்கள். அதுவே பெரும் உதவி. :-)

    ReplyDelete
  39. குமரன்,

    என்ன சொல்வதென்று தெரியவில்லை. நீங்கள் இப்படி ஒரு முடிவு எடுக்க நேர்ந்தது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.

    இன்னும் மிகச் சிறந்த பதிவுகளை உங்களிடமிருந்து வரக்
    காத்திருக்கின்றன. பதிவுலகை விட்டு விலகவில்லை என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே.

    ReplyDelete
  40. குமரன்,

    திடீர்னு என்ன ஆச்சு?

    எதா இருந்தாலும் உங்க சொந்த முடிவை நாங்களும்
    மதிக்கணும், இல்லையா?

    ஆமாம், சேமிச்சு வலைப்பூவுலே துளசி இருக்கா(ளோ)?

    மனவருத்தம் குறைஞ்சதும் மீண்டு(ம்) வருவீங்க, வரணுமுன்னு எனக்கொரு ஆசை.

    நல்லா இருங்க.

    என்றும் அன்புடன்,
    அக்கா

    ReplyDelete
  41. துளசி அக்கா இல்லாமலா? கட்டாயம் இருக்கிறார்கள் பட்டியலில். இதுவரை ஒரு சிறிதே படித்த மழை, கஸ்தூரிப் பெண் பதிவுகளையும் பட்டியலில் சேர்த்து வைத்திருக்கிறேன். உங்களின் அண்மைப் பயணக் கட்டுரைகளைப் படித்தவுடன் அவர்கள் பதிவுகளையும் பார்க்கவேண்டும் என்ற ஆவல். :-)

    மன வருத்தம் இல்லை அக்கா. பதிவில் சொன்னது போல் பல நாட்களாக இருக்கும் எண்ணம். அவ்வளவு தான்.

    ReplyDelete
  42. குமரன் அண்ணா, நமக்கு உங்க பதிவுகளோட சுட்டிகளை மறக்காம அனுப்புங்க. நானும் நம்ம பதிவுகள் வரும் பொழுது சொல்லறேன்.

    வெறும் ஆன்மீக பதிவுகளோட நிறுத்திக்காம, கூடலில் வரும் கலக்கல் பதிவுகள், அந்த பாட்டு பதிவுகள், சொல் ஒரு சொல் எல்லாத்துலேயும் மறக்காம எழுதுங்க.

    (தமிழ்மணத்தில் வரும் பதிவுகள் எல்லாத்தையும் படிக்காததுனால் அதிக நேரம் கிடைக்கும், அதை குடும்பத்தோட செலவழியுங்க, அப்புறம் நமக்கு மட்டும் அதிகம் பின்னூட்டம் போடுங்க.:-D )

    ReplyDelete
  43. குமரன், என் மின்னஞ்சல் முகவரியை உங்கள் அனுப்பவேண்டியவர்களின் பட்டியலில் சேருங்கள். நன்றி.

    ReplyDelete
  44. உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பட்டியலில் சேர்த்துவிட்டேன் ஓகை ஐயா. மிக்க நன்றி.

    ReplyDelete
  45. கொத்ஸ். எப்ப நான் உங்களுக்கு அண்ணா ஆனேன்? இன்னொரு முறை மினியாபோலிஸ் பக்கம் வருவதாக எண்ணம் இல்லையா? அப்படி எண்ணம் இருந்தால் அண்ணா என்றெல்லாம் அழைப்பதை நிறுத்திவிடுங்கள். இல்லை ஒவ்வொரு முறையும் ஐ'ம் தி எஸ்கேப் தான். :-)

    எல்லா பதிவுகளிலும் வழக்கம் போல் பதிவுகள் இடுவேன் கொத்ஸ்.

    உங்களுக்கு மட்டும் இல்லை மற்றவர்களுக்கும் பின்னூட்டம் இடுகிறேன்.

    Please do to others what you want to be done to you. :-)

    ReplyDelete
  46. குமரன்

    காலையில் பணி மிகுதியிலும், உங்கள் தனி மடல் கண்டதில் இருந்து, கொஞ்சம் வருத்தமாகத் தான் இருந்தது! Silent Spectator ஆக, இங்கே என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டு தான் இருந்தேன்!
    அடியேன் சில வார்த்தைகள் சொல்ல விழைகிறேன்!

    இந்த முடிவை நீங்கள் இரண்டு மாதங்கள் முன்பு எடுத்து இருந்தீர்களே ஆனால், எனக்கு குமரன் என்பவர் யார்? அவர் என்ன பதிவு இடுகிறார் என்பதே தெரிந்து இருக்காது! ஏன் என்றால் நான் புதியவன்; அப்போது தான் வந்தேன்!

    இங்கு பல பேர், உங்கள் மனம் அமைதி பெற வேண்டும்! உங்கள் தனிக் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று சொன்னார்கள்; முற்றிலும் உண்மை! கிஞ்சித்தும் மறுப்பதற்கு இல்லை!

    ஆனால் இது வரை தமிழ்மணம் அறிமுகம் இல்லாது, இனி மேல் வரப்போகும் பதிவர்களை நாம் நினைத்துப் பார்க்கவும் வேண்டாமா? அவர்கள் உங்கள் பதிவினை நிச்சயம் இழப்பார்கள்! நான் அவர்கள் நிலையில் தான் என்னை வைத்துப் பார்க்கிறேன்!

    உங்கள் முடிவு சீர்தூக்கி எடுக்கப்பட்ட முடிவாகவே இருக்கும் என்றாலும் நீங்கள் சில மாற்று ஏற்பாடுகளாவது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்!

    உங்கள் ஆன்மிகப் பதிவுகள்/தமிழ்ப் பதிவுகள் இனி வரும் பதிவர்களுக்குத் தெரிய என்ன வழி?
    இதற்கு மட்டும் உங்கள் நண்பர் என்ற முறையில், உங்களிடம் விளக்கமோ மாற்று ஏற்பாடோ வேண்டுகிறேன்!

    நான் சுயநலமாகப் பேசுவதாக தயவு செய்து எண்ணவேண்டாம்!
    உங்கள் ஆதங்கம், மனவேதனைக்கு எங்களால் ஏதாவது மருந்திட முடியுமா என்றும் சொல்லுங்கள்!

    உங்களுக்கு மிகவும் பிடித்த ஆண்டாள் பாசுரம் இதோ:
    சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
    இறைவா நீதாராய் பறையேலோ ரெம்பாவாய்!

    ReplyDelete
  47. அய்யய்யே.. இது என்ன சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு.

    தமிழ்மணப் பட்டைய எடுத்துட்டா பிரச்சினை தீர்ந்துரும்னு நெசமாவ நம்புறீங்களா?

    இலக்கில்லாமல் கண்மண் தெரியாமல் தாக்குபவர்களுக்கு தமிழ் மணமோ சமஸ்கிருத மணமோ ஒரு பொருட்டே இல்லையே! அவர்கள் ஸ்வாசிப்பதும் உண்பதும் உணர்வதும் "வெறுப்பு" மட்டுமே. அது அவர்கள் கண்ணை மூடிக்கொண்டிருப்பதால் குருட்டுத்தனமான வாதங்களுடனும் வசைகளுடனும் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் புறக்கணிப்பது ஒன்றுதான் வழி. பட்டையை எடுப்பது தீர்வாகாது. எனினும் நீண்ட நாள்களாக யோசித்தே முடிவெடுத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

    தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  48. சிவபாலன் அவர்களது பதிவில் நான் இட்டப் பின்னூட்டம் இதோ:

    குமரன் அவர்களே,

    நான் எவ்வளவு தாக்கப்பட்டேன் என்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே உங்கள் வேதனையை என்னால் முழுக்க புரிந்து கொள்ள முடிகிறது என்பதை நீங்கள் நிச்சயம் அறிவீர்கள்.

    நான் கூறுகிறேன். நீங்கள் விலக வேண்டுமென்பதே எதிரியின் நோக்கம். அந்த வெற்றியை அவனுக்கு தந்து விடாதீர்கள். போடா ஜாட்டான் என்று போய்க்கொண்டே இருங்கள்.

    நான் உங்கள் பதிவுகளில் வந்து பின்னூட்டங்கள் அதிகம் போட்டவனில்லை. ஏனெனில் நீங்கள் தொடும் ஆன்மீக விஷயங்கள் எனது லெவலுக்கு மிக உயர்ந்தவை. அவ்வளவுதான்.

    நீங்கள் தாக்கப்பட்டதற்கு நானும் மறைமுகக் காரணம் என்று எனக்கு படுவதாலும் இப்பின்னூட்டத்தை இங்கு இடுகிறேன்.

    அதற்கு மேல் உங்கள் விருப்பம்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  49. Kumaran,

    What is all this?

    If you are quiting for personal reasons, I would have not commented on that.
    Leaving blog aggregator is not going to solve any problem other than temporarily hiding from the 'problem makers' sight.

    If someone is blackmailing you, let me know and we can find a solution for that.
    But, if you are just taking this step to move away from stupid anonymous emails, I pity you.
    You cannot be soft hearted these days, especially in a public forum.

    Learn to face it. Quiting is not an option.

    -BNI

    ReplyDelete
  50. குமரன்,
    உங்கள் முடிவு வருத்தமளித்தாலும், அது உங்கள் முடிவு. மறுபரிசீலனைக்கிடமிருந்தால், மீண்டும் யோசிக்குமாறு கோரிக்கை மட்டுமே வைக்க முடியும் என்னால்..

    தொடர்ந்து பதிவிடுங்கள்..

    ReplyDelete
  51. குமரன் அவர்களே, உங்களுடைய கருத்துக்களுடன் பல வேறுபாடுகள் கொண்டிருந்தாலும் நான் மிகவும் ரசிக்கும் மற்றும் மதிக்கும் பதிவர்களில் நீங்களும் ஒருவர். உங்களுடைய தமிழ் அறிவை கண்டு பல சமயங்களில் தமிழ் மொழி இன்னும் நன்கு கற்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டதுண்டு. உங்களுடைய சொல் ஒரு சொல் பதிவின் மூலம் பல புதிய தமிழ் சொற்களை அறிந்து கொண்டிருக்கிறேன். அதனால் ஔவியம் கூட அடைந்திருக்கிறேன் என்று சொன்னால் மிகையாகாது.

    இன்று நீங்கள் எடுத்திருக்கும் இந்த முடிவு உங்கள் உள்ளம் எவ்வளவு புண்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. காலம் என்பது ஒரு அருமருந்து அது எல்லாவற்றையும் ஆற வைத்து விடும். இன்று இருப்பது போல நாளை இருப்பது இல்லை.

    ஆகவே தங்களுடைய மனநிலையில் மாற்றம் ஏற்பட்ட உடன் தாங்கள் தங்களின் முடிவை தயை கூர்ந்து பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    சில சமயம் வேண்டாத சில விஷயங்களை ஒதுக்கி வைத்தே கையாள வேண்டும். அந்த விஷயத்திற்கு கொடுக்கப்பட வேண்டிய கவனம் குறைவாகவே இருக்க வேண்டும்.

    ReplyDelete
  52. அன்புள்ள குமரன்

    நான் வெகுகாலமாக வெவ்வேறு காரணங்களால் பதிய முடியாமலும் பின்னூட்டம் இட இயலாமல் போனாலும் தொடர்ந்து ஆன்மீகம் தமிழ் வாழ்வின் நெற்முறை பற்றி வரும் அனைவரின் பதிவுகளையும் விடாமல் படித்து வருகின்றேன். அதனால் எழுதுவைதை நிறுத்த வேண்டாம். நமக்கு தெரிந்த நல்லவற்றை இணையத்தில் பதிவோம். தேடுங்கள் கிடைக்கப்பெறும் என்று யேசு சொன்னதைப்போல் நல்ல்தை தேடுபவர்களுக்கு கூகிளாண்டவர் கருணையால் உங்கள் எழுத்து போய்ச்சேர்ந்து பயனடைவர்.

    மேடை முழ்க்கங்கள் வேகமாய் கரைந்துவிடும்.
    உள்ளத்தின் உயிர்ப்புக்கள் உளி பதிந்த சிலைகளாகும்

    மீண்டும் சந்திப்போம்

    ReplyDelete
  53. என்னாது இது சின்னப்புள்ளத் தனமா இருக்கு....கோவம் ராசா!....அம்புட்டும் கோவம்....

    மதுரயில இருந்து கெளம்பி வந்துட்டு இத்துணூண்டு சலசலப்புகெல்லாம் கடய ஏறக்கட்டுனா எப்டி....

    நிக்கனுமய்யா....நாமெல்லாம் சிங்கம்னு நிக்கனும்....

    நிப்பீகன்னு நெனக்கிறேன்...நிக்கலாம்ல....

    ReplyDelete
  54. அன்பு குமரன், உங்கள் ஆன்மிகப் பதிவுகளை மிகவும் விரும்பி எதிர்நோக்கும் வாசகர்களில் நானும் ஒருவன். நீங்கள் தமிழ்மணத்தில் இருப்பதோ நீங்குவதோ உங்கள் தனிப்பட்ட முடிவாயினும் இங்கு என் முன்னே பின்னூட்டமிட்டவர்கள் வேண்டுவதுபோல் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய விழைகிறேன்.

    உங்கள் பதிவினை rss reader இல் இட்டிருப்பதால் உடனுக்குடன் காணமுடியும் என எண்ணுகிறேன்.

    தமிழ்ப்பணி தொடர வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  55. //அண்மைக்காலமாகத் தமிழ் வலைப்பதிவுலகில் கருத்து மோதல்களில் தொடங்கி அவை தனிமனிதத் தாக்குதல்களாகவும் நக்கல், நகைச்சுவை என்ற பெயரில் எழுதப்படும் தரம் குறைந்த எழுத்துகளாகவும் பரிணாமம் பெற்று வருகிறது. வலையுலகச் சூழல் மிகவும் நச்சூட்டப் பெற்று வருகிறது.//

    உடன்பாடான கருத்து குமரன். இது போன்ற சூழலில், நீங்கள் தரம் மிகுந்த படைப்புகளைத் தந்து நச்சுக்களை அகற்ற வேண்டும் என பாஸிட்டிவாக எண்ண வேண்டும். அல்லாமல், விலகுவது என்பது சரியன்று. பாலையும், தண்ணீரையும் பிரிக்கும் அன்னம் போல, நீங்கள் வலைப்பதிவுகளைக் கையாளலாம். மற்றவர் தூற்றலுக்காகக் கலக்கம் கொள்ள வேண்டாம். எண்ணிய திண்ணியாங்கு எய்துபர். எண்ணம் மாற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  56. உண்மை இரவிசங்கர். நீங்கள் சொல்வதை ஒத்துக் கொள்கிறேன். புதியவர்களுக்கு என் பதிவுகள் தெரியாமல் போக வாய்ப்பிருக்கிறது. ஆனால் அவரவர் விதி வழி அடைய நின்றனரே என்ற மாறனின் சொற்களும் நினைவிற்கு வருகிறது. அதன் படி தமிழ்மணத்தில் இல்லாவிட்டாலும் சேர வேண்டியவர்களுக்கு போய் சேரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    அடியேனின் பதிவுகள் இனி வரும் தமிழ்மண பதிவர்களுக்குத் தெரிய என்ன வழி என்று கேட்டிருக்கிறீர்கள். சில நண்பர்கள் அடியேனின் வலைப்பூக்களின் சுட்டிகளைத் தங்கள் வலைப்பூக்களில் இட்டிருக்கிறார்கள். அவற்றின் மூலம் புதிய வலைப்பதிவர்கள் அடியேனின் பதிவுகளை அடைய வாய்ப்பிருக்கிறது.

    அது மட்டுமின்றி அடியேன் தொடர்ந்து பல பதிவுகளில் பின்னூட்டம் இட்டுக் கொண்டு தான் இருக்கப் போகிறேன். அவற்றின் மூலமாகவும் புதிய பதிவர்கள் என் பதிவுகளை அடைய வாய்ப்பிருக்கிறது.

    அன்பினால் உன் தன்னைச் சிறு பேர் அழைத்தனவும் என்று தான் கோதையும் சொல்லியிருக்கிறாள். அன்பு இல்லாமல் சிறு பேர் அழைத்தால்? :-)

    ReplyDelete
  57. இல்லை சுந்தர். தமிழ்மணப்பட்டியை எடுத்தால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று நினைக்கவில்லை.

    தொடர்ந்து எழுதுகிறேன். நீங்களும் படித்துப் பாருங்கள். நன்றி.

    ReplyDelete
  58. டோண்டு இராகவன் ஐயா. நீங்கள் எந்த விதத்தில் மறைமுகக் காரணம் என்று தெரியவில்லை. தாக்கிய, தாக்கும் பதிவர் தானாக என்னை அவரின் எதிரி என்று எண்ணிக் கொண்டு தாக்கிக் கொண்டிருக்கிறார். அவ்வளவு தான்.

    பதிவில் சொன்னது போல் விலகிவிட வேண்டும் என்று பல நாட்களாக எண்ணியிருந்தேன். நேற்றைய நிகழ்வுகள் அதனைத் துரிதப்படுத்திவிட்டன. அவ்வளவு தான்.

    நான் யாரையும் எதிரி என்று நினைக்கவில்லை. என்னை தன் எதிரி என்று நினைப்பவர் நான் அப்படி இல்லை என்று புரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் ஆவல்.

    ReplyDelete
  59. Sorry BNI. The decision is made and I am out. Thanks for your kind words. Please bookmark my blogs and visit often.

    ReplyDelete
  60. தொடர்ந்து பதிவிடுகிறேன் பொன்ஸ். நீங்களும் தொடர்ந்து ஆதரவு நல்கவேண்டும். நன்றி.

    ReplyDelete
  61. தங்களின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி செந்தில் குமரன். தொடர்ந்து அடியேன் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்தவற்றைப் படித்து வாருங்கள்.

    ReplyDelete
  62. உண்மை சூப்பர் சுப்ரா. நீங்கள் சொன்னதைப் போல் தொடர்ந்து எழுதுவதாகத் தான் எண்ணியிருக்கிறேன். நீங்களும் முடிந்த போதெல்லாம் வந்து படித்துப் பாருங்கள்.

    ReplyDelete
  63. இல்லை பங்காளி. நான் நிற்கப் போவதில்லை. தங்களின் கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  64. நன்றி மணியன் ஐயா.

    ReplyDelete
  65. நீங்கள் சொல்வது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது நெல்லை சிவா. ஆனால் செயலாக்கத்தில் எனக்கு அந்த அளவிற்கு ஊக்கம் இல்லை. தரம் மிகுந்து படைப்புகளைத் தொடர்ந்து தருகிறேன். நீங்கள் தொடர்ந்து வந்து படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லவேண்டும்.

    ReplyDelete
  66. கருத்து சொன்ன எல்லா நண்பர்களுக்கும் நன்றி. உங்கள் அன்பிற்கு நன்றி.

    உங்கள் அனைவரின் பதிவுகளையும் படிக்கும் வாய்ப்பு எனக்கு என்றும் இருக்கும் என்று நம்புகிறேன். தமிழ்மணச் சூழல் என்றாவது மாறினால் அப்போது மீண்டும் என் தனி வலைப்பூக்கள் தமிழ்மணத்தில் வரலாம். அடியேனுக்கு அந்த நம்பிக்கை இல்லை. பல குழுக்கள் இருக்கின்றன இங்கே. புதிய புதிய பெயர்களில் இவர்கள் வந்து கொண்டே தான் இருப்பார்கள் என்று எண்ணுகிறேன். அதனால் மீண்டும் என் வலைப்பூக்களைத் தமிழ்மணத்தில் இணைக்கும் காலம் விரைவில் வராது என்றே எண்ணுகிறேன்.

    ஏற்கனவே சொன்னது போல் கூட்டு வலைப்பூக்கள் அந்த வலைப்பூக்களின் பதிவர்கள் விருப்பம் போல் தொடர்ந்து தமிழ்மணத்தில் இருக்க வாய்ப்புகள் உண்டு.

    வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  67. அன்பு குமரா,
    நான் விலக முடிவு எடுத்தபொழுது, தாங்களும்தானே வந்து, "விலகவேண்டாம்" எனக் கூறினீர்கள். இப்பொழுது திடீரெனக் குண்டு போட்டால் என்ன ஆவது.
    அட! போவதுதான் போகிறீர்கள். என்னையுமல்லவா அழைத்திருக்க வேண்டும்; போவதற்குமுன்.
    இது எவ்வகையில் நியாயம்?

    "என்னதான் முடிவு?"

    இதில் post copy to - option இருக்கிறதா? தெரியவில்லையே!

    அவசரம்! முடிவு தெரியவேண்டும்.

    ReplyDelete
  68. உங்களை போன்றவர்களின் இது போன்ற முடிவாவது, தமிழ்மனத்தை நல்வழிப் ப்டுத்தட்டும்.

    ReplyDelete
  69. குமரன்

    தங்கள் எழுத்துக்கள் தொடரும் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    தமிழ்மணத்தில் திரட்டப்படுவதில் இருந்து விலகி நிற்பது தங்கள் விருப்பமே.

    தொடர்ந்து எழுதுங்கள்.

    எழுத்தாளன் முதலில் தனக்காகத்தான் எழுதுகிறான். அவனுடைய எழுத்துக்கள் முதலில் அவனை மகிழ்விக்கின்றன..

    அதே எழுத்துக்களை வாசகன் படித்துப் பாராட்டும் போது தன்னுடைய கருத்துக்கு அங்கீகாரம் இருக்கிறது என்பது அவனை மேலும் எழுத தூண்டும்.

    உங்கள் எழுத்துக்களை தேடிப் படிக்கக் கூடிய வாசகர்களை மட்டுமே அடைவது தங்கள் நோக்கம் எனப் புரிகிறது.

    தொடரட்டும் தங்கள் பணி. தேடிப் படிக்க நான் தயார்.

    அன்புடன்
    சாத்வீகன்

    ReplyDelete
  70. ஞானவெட்டியான் ஐயா. முடிவு - தமிழ்மணத்தில் இருந்து விலகல்; ஆனால் பதிவுகள் எழுதுவதைத் தொடர்தல்.

    தாங்கள் ஒவ்வொரு முறை விலகுகிறேன் என்ற போதெல்லாம் பதிவுகள் இடுவதையே நிறுத்தப் போகிறீர்களோ என்ற எண்ணத்தில் தான் விலகவேண்டாம் என்று சொன்னேன். பதிவுகள் தொடர்வேன்; ஆனால் தமிழ்மணத்தில் இருந்து விலகவேண்டும் என்றால் அதனைத் தடுக்க மாட்டேன் ஐயா. அது உங்கள் விருப்பம்.

    ReplyDelete
  71. நன்றி வெங்கட்ராமன். ஆனால் என் ஒருவனின் முடிவால் தமிழ்மணச் சூழல் மாறும் என்று நம்பவில்லை. தமிழ்மணம் பெருங்கடல்; நான் சிறு துளி. மண்ணில் கரைந்து காணாமல் போய்விடுவேன்.

    ReplyDelete
  72. நன்றி சாத்வீகன். அடியேனும் தாங்கள் எழுதுவதைத் தொடர்ந்து படிக்கிறேன். மின்னஞ்சலில் புதிய பதிவுகளைப் பற்றி அறிய விரும்பினால் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

    ReplyDelete
  73. மறுபரிசீலனை செய்யவும், முடிவை.

    ReplyDelete
  74. உங்கள் எழுத்தே வாசகர்களை திரட்டும், எந்த திரட்டியும் தேவையில்லை, வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  75. அண்ணா,

    சற்று நேர்கானல் போன்ற வேலைகள் நடப்பதால் அதிகமாக வலை மேய்வது முடியாமல் இருந்து வருகிறது. ஆகையால் தொடர்ந்து பதிவிடுதலும் நடக்காமல் அங்கொரு, இங்கொருமாக் பின்னூட்டம் மட்டும் இட்டு வருகிறேன்.

    என்னை தமிழ்மணத்தில் சேர சொன்னதே நீங்கள் தான். உங்கள் மூலமாக பலரது எழுத்துக்களை படிக்க ஒரு பாலமாக இருந்தது தமிழ்மணம். கருத்து மோதல்களால் இப்படி ஒரு முடிவை எடுத்தால் என்ன செய்வது. கொட்டுவது குளவியின் செயல் அதை காப்பது முனிவரின் செயல் என்று மண்ணித்து விடுங்களேன்.

    ஞானம் ஐயா அவர்கள் விலக முடிவு எடுத்த சமயம் அவருக்கு இதை தான் சொன்னேன்.

    "போற்றுவார் போற்றலும்
    தூற்றுவார் தூற்றலும்
    போகட்டும் கண்ணனுக்கே"

    இதை மீண்டும் வழிமொழிகிறேன்!

    தங்களை நன்றாக புரிந்து கொண்டுள்ளேன் என்று சொல்லிவிட முடியாது அதே போல் தங்களை பற்றி ஒன்றும் தெரியாது என்றும் சொல்லிவிட முடியாது.

    நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களை துன்பத்திலிருந்து விடுவிக்கும் மருந்தாக இருப்பின் அதனால் மகிழ்பவகளில் நானும் ஒருவன்.

    தங்களது புதிய வலைபதிவுகள் பற்றிய மின்னஞ்சல் பட்டியலில் என் பெயரையும் சேர்க்கவும்.

    நன்றி.

    ReplyDelete
  76. அன்பின் 'ஜூனியர்' குமரன் !

    தமிழ்மணம் விட்டு விலகுவது என்பது, நீங்கள் சிந்தித்து எடுத்த முடிவு என்ற வகையில்
    மதிக்கிறேன். காலம் கனிந்தால் வாருங்கள் !

    தொடர்ந்து எழுதுவேன் என்று கூறியதற்கு நன்றி. நான் அதிகமாக உங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்டதில்லை என்றாலும், தொடர்ந்து தங்கள் அழகான ஆன்மிகப் பதிவுகளை (காலம்
    தாழ்த்தி !), பல பதிவுகளின் தாங்கள் இடும் பொருள் செறிந்த பின்னூட்டங்களை வாசித்து வருகிறேன் (என் பின்னூட்டம் வேண்டி தாங்கள் இல்லை என்றாலும் ... உங்கள் ரசிகர் வட்டமே பெரிய வட்டம் அல்லவா :)))

    //அதனால் நான் விரும்பிப் படிக்கும் வலைப்பூக்களைச் சேமித்து வைத்துக் கொள்ளத் தொடங்கினேன்.
    //
    இந்தப் பட்டியலில், அடியேனும் உள்ளேன் என்று நம்புகிறேன் !!! ஏனெனில், நான் (ஏதோ) எழுதும் ஆன்மிகப் பதிவுகளுக்கு, தாங்கள் ஒரு முக்கிய உந்துதலாக விளங்குகிறீர்கள் (இன்னும் சிலரும் உண்டு). இதை வாய் வார்த்தையாகச் சொல்லவில்லை என்பதும் உண்மை.

    நீங்கள் (என் சமீபத்தியப் பதிவில் இட்ட பின்னூட்டத்தில்) கேட்ட லிங்கை மடலில் அனுப்புகிறேன்.
    திருக்கபிஸ்தலம் பற்றிய பதிவு விரைவில் ! நன்றி.

    "சீனியர்" (வயதில் மட்டும்!) எ.அ.பாலா

    ReplyDelete
  77. நீங்கள் தமிழ்மணத்தில் பதிவு செய்யாவிடினும், உங்கள் புதிய பதிவுகளை, நீங்கள் பதியப்பதிய, உடனடியாக உங்கள் வாசகர்கள் படிக்க, கூகிள் ரீடரைப் பயன்படுத்தலாம்.

    எப்படி என்பதனை என்னுடைய பதிவில் விளக்கியிருக்கிறேன்.

    வேண்டுபவர்கள், படிக்க:

    http://vinmathi.blogspot.com/2006/12/blog-post_116556380962128596.html

    ReplyDelete
  78. குமரன் தொடர்ந்து எழுதுங்கள்
    இதை மட்டுமே இப்போது சொல்ல முடியும்.

    எழுத்துப்பணி தொடரட்டும். நூலாக்கம் செய்ய வேண்டுமென்று நினைக்கும்போது சொல்லுங்கள்.

    ReplyDelete
  79. என் கூகிள் ரீடரில் கூடலை சேர்த்து விட்ட்ஏன், நன்றி சிவா!

    ReplyDelete
  80. குமரன் ஐயா,

    தமிழ்மணத்தில் மனம் நொந்து பதிவதில்லை, பின்னூட்டமிடுவதில்லை என்று முடிவெடுத்து அதை அறிவித்து

    பின் அதை மீறி நான் முதலும், கடைசியுமாக (?) இடும் பின்னூட்டம்.

    தங்களின் முடிவு மிகச்சரியான முடிவு. பதிவுகளை தொடர்ந்து தாருங்கள். எனக்கு அதை தெரிவிக்க இயலுமானால் மிக்க மகிழ்வேன்.

    தங்களின் பதிவுகள் மனதை கொள்ளை கொண்டு நான் அனுபவித்தவை ஏராளம்.

    வாழ்க வளமுடன்

    நன்றி

    ReplyDelete
  81. குமரன் அவர்களே, நீங்க குறிபிட்ட பின்னூட்டம் இடாத வாசகர் பட்டியலில் நானும் ஒருவன்!. உங்க பதிவுகளையும், ராகவன் அவர்கள் பதிவுகளையும் ரொம்ப விரும்பி படிப்பேன்..தமிழ்மணத்தில் தோன்றும் மறுமொழி list மூலம் தான் உங்க பதிவுக்கு வருவது வழக்கம்..இந்த முடிவு என்னை உங்க பதிவுக்கு வருவதில் தனிப்பட்ட முறையில் சிரமத்தை ஏற்படுத்தினாலும்...உங்கள் முடிவை நான் மதிக்கிறேன்..கண்டிப்பாக தொடர்ந்து எழுதவும்,இனிமேல் கண்டிப்பாக பின்னூட்டம் இடுகிறேன் :).!

    ReplyDelete
  82. குமரன்,

    விலகுவது என நீங்கள் தீர்மானித்துவிட்ட நிலையில் அதைப்பற்றி மேலும் விமர்சிப்பது சரியல்ல என்றாலும் நான் நினைப்பதை எழுதலாம் என்று நினைக்கிறேன்.

    உங்களை விலகுவது என தீர்மானிக்க வைத்த காரணிகள்தான் என்னை இதை எழுத தூண்டின.

    நாம் வாழும் இவ்வுலகமும் இத்தகையதுதானே. நல்லவர்கள் நிறைய இருக்கும் இடத்தில சில தீயவர்களும் இருக்கிறார்களே. அவர்கள் எல்லோரையும் நாம் திருத்த முயல்வது என்றால் நடக்கும் காரியமா என்ன? நம்மால் முடிந்தால் செய்கிறோம். இல்லையா நம் வழியைப் பார்த்து நாம் போகிறோம். இதுதானே நம்மால் முடிந்தது?

    என்னுடைய சக பதிவாளர்கள் எழுதும் பதிவுகளின் தரம் குறைந்து வருவது என்னை எப்படி பாதிக்கப் போகிறது? உன்னுடைய நண்பனைப் பற்றி சொல் நான் நீ யாரென்று சொல்கிறேன் என்ற அடிப்படையில் இத்தகைய சூழலில் என்னையும் இணைத்துக்கொள்ள எனக்கு விருப்பமில்லை என்று நீங்கள் கருதினால் அதை மறுத்துப் பேசும் உரிமை எனக்கு இல்லை.

    உங்களுடைய பதிவுகளை வாசிக்க என்று ஒரு கூட்டமே இருக்கிறதென்பது உங்களுக்கும் தெரியும்தானே. அவர்களை நினைத்தாவது உங்களுடைய விலகல் முடிவை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்பது என் ஆவல்.

    போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டம் நம் பணி செய்து கிடப்போம்..

    என்னுடைய நிலைப்பாடு இதுதான். அதுவே உங்களுடைய கருத்தும் இருக்க வேண்டும் என்பதில்லை..

    அன்புடன்,
    ஜோசப்

    ReplyDelete
  83. தங்கள் அன்பிற்கு நன்றி மாயவரத்தான்.

    ReplyDelete
  84. தங்கள் அன்பிற்கு நன்றி ஜீவா. பதிவினை உங்களின் கூகுள் ரீடரில் சேர்த்ததற்கு நன்றி.

    ReplyDelete
  85. சிவமுருகன்,

    கருத்து மோதல்களால் தமிழ்மணத்தில் இருந்து விலகவில்லை. தமிழ்மணத்தில் இல்லாவிட்டாலும் நான் எந்த கருத்து மோதல்களில் ஈடுபட்டேனோ அவற்றில் தொடர்ந்து ஈடுபடத்தான் போகிறேன். :-) இராகவனிடம் கேட்டுப் பாருங்கள். சொல்லுவார். :-)

    பட்டியலில் உங்கள் பெயர் எப்போதுமே உண்டு. இனியும் தொடர்ந்து இருக்கும் சிவமுருகன். நன்றி.

    ReplyDelete
  86. சிவமுருகன், ஞானம் ஐயாவும் விலக முடிவு செய்திருக்கார் போலிருக்கிறது. இன்று ஒரு அறிவிப்பு பதிவு இட்டிருக்கிறார்.

    ReplyDelete
  87. என்றென்றும் அன்புடன் 'சீனியர்' பாலா,

    பின்னூட்டங்கள் இடாவிட்டாலும் பரவாயில்லை. தொடர்ந்து முடிந்த போதெல்லாம் படித்துப்பாருங்கள். உங்கள் பதிவுகளை நான் கூகுள் ரீடரில் சேர்த்துவிட்டேன். அதனால் உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து பார்ப்பேன். என் ஆவலைத் தூண்டினால் படித்துப் பின்னூட்டம் இடுவேன். :-)

    தாங்கள் அனுப்பிய மின்னஞ்சல் கிடைத்தது. நன்றி.

    ReplyDelete
  88. நெல்லை சிவா, தங்கள் காலத்தால் செய்த உதவிக்கு மிக்க நன்றி. என் பதிவைப் படிப்பவர்களுக்கு மட்டுமில்லை. நான் சேமித்து வைத்திருக்கிறேன் என்று சொன்னேனே அந்தப் பதிவுகளையும் இப்போது என் கூகுள் ரீடரில் போட்டுக் கொண்டு வருகிறேன். பதிவுகளை மட்டும் படிப்பதால் விரைவில் படித்து முடிக்க முடிகின்றது. பின்னூட்டம் இட வேண்டும் என்றால் பதிவுகளுக்குச் சென்று இட்டுவருகிறேன்.

    என் பதிவை நீங்கள் உங்கள் ரீடரில் போட்டிருப்பதாகச் சொன்னீர்கள். மிக்க நன்றி.

    ReplyDelete
  89. மதுமிதா அக்கா. நூலாக்கத்தைப் பற்றிய எண்ணங்கள் தற்போது இல்லை. அப்படி தோன்றும் போது கட்டாயம் உங்களின் உதவியைக் கேட்கிறேன்.

    ReplyDelete
  90. ஜயராமன் ஐயா. தங்கள் முடிவை எனக்காகக் கொஞ்சம் தளர்த்திக் கொண்டு பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி. தங்கள் முடிவை நீங்கள் மீறவில்லை. தமிழ்மணத்தில் இருக்கும் பதிவுகளுக்குத் தானே பின்னூட்டம் இடுவதில்லை என்று முடிவு செய்திருந்தீர்கள். இந்தப் பதிவு தான் இப்போது தமிழ்மணத்தில் இல்லையே.

    என் ப்ரொபைலில் என் மின்னஞ்சல் முகவரி இருக்கிறது. எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். அதன் மூலம் உங்களின் மின்னஞ்சல் முகவரி எனக்குக் கிடைக்கும். நான் உங்களுக்குப் பதிவுகளைப் பற்றித் தெரியபடுத்துகிறேன்.

    தங்களின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. தங்களின் மன வருத்தம் விரைவில் நீங்க எம்பெருமான் திருவருளை நாடுகிறேன்.

    ReplyDelete
  91. தமிழ்ப்பிரியரே. :-) பின்னூட்டம் இடாத வாசகரே. அதனைச் சொன்னதற்கு மிக்க நன்றி. :) தங்களின் சிரமத்திற்கு மன்னிக்கவும். தங்களின் மின்னஞ்சல் முகவரியைத் தந்தால் அந்த சிரமமும் இன்றித் தீரும். தாங்கள் பின்னூட்டமிடாவிட்டாலும் படித்தாலே போதும். :-)

    ReplyDelete
  92. குமரன் தமிழ்மண BUG உங்களை கடுமையாக கடித்துவிட்டது காயப்படுத்திவிட்டது போலும். :-) தமிழ்மணத்திலிருந்து விலகும் தங்கள் முடிவு வருத்தம் கொடுத்தாலும் வலைப்பதிவை விட்டு நீங்காமல் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது உங்கள் முடிவு இதை நான் சரி அல்லது தவறு என்று சொல்வது தவறு. முடிந்தால் பரிசீலனை செய்யுங்கள் அப்போது தான் உங்கள் பதிவை பல புதிய வாசகர்கள் படிக்க இயலும், இல்லாவிட்டால் உங்கள் பதிவை படிப்பது ஒரு சிறிய குழுவாக தான் இருக்கும். புதிய வாசகர்களுக்காக பரிசீலனை செய்யுங்கள். "மாற்றமே மாறாதது" என்ற தத்துவப்படி உங்கள் முடிவும் மாறுதலுக்குட்பட்டது என்று நம்புவோம். :-)

    ReplyDelete
  93. ஜோசப் ஐயா. தங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி. அது தங்களின் அன்பைக் காட்டுகிறது.

    //நாம் வாழும் இவ்வுலகமும் இத்தகையதுதானே. நல்லவர்கள் நிறைய இருக்கும் இடத்தில சில தீயவர்களும் இருக்கிறார்களே. அவர்கள் எல்லோரையும் நாம் திருத்த முயல்வது என்றால் நடக்கும் காரியமா என்ன? நம்மால் முடிந்தால் செய்கிறோம். இல்லையா நம் வழியைப் பார்த்து நாம் போகிறோம். இதுதானே நம்மால் முடிந்தது?

    //

    இந்த வார்த்தைகளை ஒத்துக் கொள்கிறேன் ஐயா. நம் வழியை நாம் பார்த்துக் கொண்டு போகலாம் என்ற எண்ணத்தில் வந்த முடிவு தான் இது.

    உங்களின் அடுத்தக் கேள்விக்கு நீங்களே பதில் சொல்லி எனக்கு வேலையைக் குறைத்துவிட்டீர்கள். பதிவுகளைத் தொடர்ந்து படிக்கும் அன்பர்கள் தமிழ்மணத்தில் என் பதிவு தெரியாததால் அவர்களுக்குக் கடினமாக இருக்கிறது என்று சொல்லத்தொடங்கினால் நான் மீண்டும் தமிழ்மணத்தில் தயங்காமல் இணைந்துவிடுவேன்.

    ReplyDelete
  94. தங்களின் அன்பிற்கு நன்றி குறும்பன்.

    ReplyDelete
  95. குமரன்

    நீங்கள் தமிழ்மணத்துக்கு திரும்ப வருவது தான் நல்லதென்று நினைக்கிறேன்.உங்கள் பதிவுகள் பற்றிய மின்னஞ்சல்கள் வந்தாலும் ஜிமெயிலில் என் பின்னூட்டங்களுக்கு வரும் மின்னஞ்சல்கள் ஏராளம் இருப்பதால் நடுவே கலந்துவிடுகின்றன.அதோடு முத்தமிழ் குழு மடல்களும் ஏராளமாக மின்னஞ்சலில் வருவதால் பலமுறை உங்கள் அறிவிப்புகள் இரண்டு அல்லது மூன்றுமணிநேரம் மின்னஞ்சலை திறக்காமல் விட்டால் அடுத்த பக்கத்துக்கு சென்றுவிடுகின்ரன.

    நேரடியாக உங்கள் பதிவுகளுக்கு வரலாம் என்று வந்தால் 18 முதல் 20 பதிவுகள் இருக்கின்றன.இதில் புதிதாக என்ன எழுதினீர்கள் என்பதை அறிய ஒவ்வொன்றுக்கும் செல்ல வேண்டியிருக்கிறது.

    தமிழ்மனத்தில் இன்று எழுதப்பட்ட இடுகைகள் பகுதி மூலம் தினமும் இடப்பட்ட உங்கள் இடுகைகளை கொண்டு பின்னூட்டம் இடவும் படிக்கவும் வசதி இருந்தது.இப்போது பிராக்டிகலாக நிரைய சிரமங்கள் இருக்கின்ரன என்பதால் நீங்கள் எங்கள் எல்லோர் நலன் கருதியும் தமிழ்மனத்தில் மீண்டும் இணைய வேண்டுகோள் விடுக்கிறேன்.

    ReplyDelete
  96. செல்வன். போன படியே திரும்பவும் வந்தாச்சு. ஒவ்வொன்றாக என் பதிவுகளை இணைத்துக் கொண்டிருக்கிறேன். அதில் தான் இந்த இடுகை உங்களுக்கு இன்று தெரிந்திருக்கிறது.

    நீங்கள் சொன்ன எல்லா காரணங்களையும் நண்பர்கள் சொன்னார்கள். பல பேர் பல முறை சொன்ன பின்னாலும் என்றும் மாறாத சூழலுக்காக அலைகடலில் காலை நனைக்காமல் இருக்க வேண்டாம் என்று வந்து விட்டேன்.

    ReplyDelete
  97. நன்றி குமரன்

    ReplyDelete
  98. திரும்பி வந்தாச்சா!! வாங்க வாங்க. முன்னமே சொல்லி இருந்தால் நான் ஒரு பதிவு போட்டு வரவேற்று இருப்பேனே. இப்படி அநியாயமா எனது எண்ணிக்கையில் ஒண்ணு கம்மி பண்ணிட்டீங்களே!! :))

    ReplyDelete
  99. கொத்ஸ் அடிச்சான்யா 100!!!!

    ReplyDelete
  100. நன்றி கொத்ஸ். இப்ப கூட ஒன்னும் குறைஞ்சு போயிடலை. உங்க இடுகைகளின் எண்ணிக்கைக் கூட்டிக் கொள்ளுங்கள். :-)

    ReplyDelete