Wednesday, November 29, 2006

மதுசூதனன் மார்பில் நிலைத்தவளே!

நம் நண்பர் இரவிசங்கர் கண்ணபிரான் திருவேங்கடவன் திருப்பள்ளியெழுச்சிக்குப் பொருள் சொல்லிக் கொண்டு வருகிறார். அண்மையில் அவர் இட்ட பதிவில் அடியேன் சில பின்னூட்டங்களை இட்டேன். அப்போது தோன்றிய கருத்துகளை அப்படியே எழுத்தில் இட முயன்றதால் முற்றுப்புள்ளியே இல்லாமல் சில கருத்துகளைச் சொல்லியிருந்தேன். அவற்றை இன்னும் எளிமையாகச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நண்பர்கள் சிலர் அறிவுறுத்தியதால் அங்கே சொன்னதை இன்னும் எளிமையாகவும் விளக்கமாகவும் சொல்ல அடியேன் முயல்கிறேன்.

மதுகைடபாரே வக்ஷோ விஹாரிணி - மதுகைடபர்களை அழித்தவனின் மார்பில் கோயில் கொண்டவளே!

நல்லவைகள் குறைந்து கெட்டவைகள் மேம்படும் போது நல்லவைகளை நிலைநாட்டுவதற்காக நான் மீண்டும் மீண்டும் பிறப்பேன் என்கிறான் கீதாசார்யன் கண்ணன். சொன்ன சொல் தவறாதவன் தானே இறைவன்? எப்போதெல்லாம் அடியவர்களுக்கு துன்பம் நேர்கிறதோ அப்போதெல்லாம் தோன்றுகிறான். அடியவர்களின் துன்பத்திற்கு காரணமானவர்களையும் காரணமானவைகளையும் நீக்கி நல்லதை நிலைநாட்டுகிறான். அப்படி நல்லதை நிலைநாட்டும் நீதிபதி அவன் என்பதைச் சொல்கிறது மதுகைடபர்களை அழித்தவன் என்ற பெயர்.

அவன் அப்பன் என்றாலும் முதலில் நீதிபதி. நன்மையையும் தீமையையும் சீர்தூக்கி எந்த பக்கமும் சாராமல் நீதியை வழங்குபவன். அடியேனோ அளவற்ற குற்றங்கள் செய்தவன். அபராதச் சக்ரவர்த்தி. அப்படிப்பட்டவனை அந்த மதுசூதனன் தள்ளிவிடுவானோ என்ற ஐயம் தோன்றும். அப்போது அவன் மார்பில் அன்னை நித்ய வாசம் செய்கிறாள் என்று சொல்லுவதால் அந்த ஐயம் நீங்கி ஆறுதல் ஏற்படுகிறது.

அன்னை அருகில் இருக்கும் போது அப்பன் நம்மை மன்னிக்கலாம். ஆனால் நான் அவனை நெருங்கும் போது அன்னை பக்கத்தில் இல்லாமல் போய்விட்டால்? அசுரர்களை அழிக்கும் அவன் நம்மிடம் இருக்கும் அசுர குணங்களையும் அழிக்கலாம்; அழிக்க முடியும்; அழிப்பான். ஆனால் அவற்றை இவ்வளவு நாள் நமக்குள் வைத்துக் கொண்டிருந்ததால் சினம் கொண்டு தண்டிப்பானோ? இந்த ஐயமே தேவையில்லை. அன்னை எப்போதும் அவன் மார்பில் இருக்கிறாள். எப்போதும் நகலக் கூடாது என்று அங்கேயே கோயில் கொண்டு இருக்கிறாள். அதனால் எந்தக் கவலையும் இல்லை.

சரி. கோயில் கொள்வதற்கு சுவாமியின் உடலில் வேறு இடமா இல்லை? ஏன் மார்பில் கோயில் கொண்டாள்? கண்ணை மூடிக்கொள்ளுங்கள். இன்று மாலை என்ன என்ன செய்வது என்று கொஞ்சம் சிந்தியுங்கள். எண்ணங்கள் தோன்றுகின்றனவா? அவை எங்கே தோன்றுகின்றன என்று பாருங்கள். எனக்குத் தெரிந்தவரை அவை தலையிலிருந்து தோன்றும். சிலருக்கு புருவ மத்தியில் இருந்து எண்ணங்கள் வருவதாய் தோன்றும். சிலருக்கு பிள்ளையாரைக் கும்பிடும் போது குட்டிக் கொள்வோமே அந்த இடங்களில் (னெற்றிப் பொட்டு?) இருந்து எண்ணங்கள் எழுவதாகத் தோன்றும்.

சரி இப்போது அம்மாவையோ அப்பாவையோ நம் வாழ்க்கைத் துணைவரையோ குழந்தையையோ நினைத்துக் கொள்ளுங்கள். தோன்றும் உணர்வு எங்கே இருந்து கிளம்புகிறது? மார்புகளின் நடுவில் ஏதோ அசைந்தது போல் தோன்றுகிறதா? அங்கே தான் உணர்ச்சிகள் தோன்றுகின்றன.

நாம் செய்த தவறுகளைக் கண்டு நம் மீது சுவாமிக்குச் சினம் வந்தால் அது எங்கிருந்து தோன்றும்? மார்பின் நடுவிலிருந்து தானே?! அது தோன்றும் முன் அதனை மாற்றி நம் மேல் கருணை எழச் செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் கருணைக்கடல் அன்னை வேங்கடவன் மார்பைத் தேர்ந்தெடுத்து அங்கே கோயில் கொண்டாள்.

இனி மேல் என்னங்க கவலை? அன்னையின் சிபாரிசோடு அப்பனை சரண் புகலாம் வாருங்கள்.

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்று...

20 comments:

  1. குமரன்

    மது சூதனின் மார்பில் நிலைத்தமை, இறைவனின் இதயத்தின் அருகிருக்கும் பொருட்டே எனக் கொள்வோம். இதயக் கமலத்தின் நின்று இன்னருளை வழங்கும் இலக்குமி இவளே..

    நன்று.

    ReplyDelete
  2. குமரன்,

    உச்சிக் குழி, புருவ மையம், நெற்றி பொட்டு - சிந்தனைகள் எங்கு தோன்றினாலும் உடனடியாக உணர்வது இதயம் தான். அதற்கு ஏற்றவாறு உதிர ஓட்டத்தில் மாற்றம் ஏற்படுகிறது. ஆகவே சிந்தனைகளை நம் இதயத்தின் மூலம் உணர்வதாக நினைக்கிறோம். அதனால் தான் மார்பு (இதய சிம்மாசனம்) உயர்ந்ததாக சொல்லப்படுகிறது.

    ReplyDelete
  3. உலக நன்மைக்காக, உலக மக்களுக்காக தன்னை சிறு உறுப்பாகி வேங்கடவனின் மார்பில் உள்ளவளே, வல மார்பில் வாழ்கின்ற மங்கையே வாழ்க நீ பல்லாண்டு.

    அவள் அங்கு குடிகொண்டதற்க்கு அழகான காரணத்தை சொன்னீர்கள்.

    நன்றி.

    ReplyDelete
  4. நல்லதொரு விளக்கம். அனைத்துச் சிந்தனைகளும் மூளையில் தோன்றினாலும் நம்மோடு ஒன்றியவைகளாகையில் இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. படபடப்பு வருகிறது. துடிதுடிப்பு எகிறுகிறது. மடமடப்பு தடுக்குகிறது. ஆகையால்தான் இதயத்திலிருந்து வருவதாகச் சொல்கிறோம். மூக்குக்கண்ணாடிக்கு மூக்கு பெயர் தந்தது போல இதயமும் பெயர் குடுத்திருக்கிறது.

    அதுவுமின்றி மூளை இறப்பு என்று ஒன்று உண்டு. மூளை மட்டும் வேலை செய்யாது. ஆனால் மத்ததெல்லாம் வேலை செய்யும். ஆனால் இதயம் நின்று விட்டால்...இரண்டு நிமிடங்கள்தான். அதனாலும் அத்தனை சிறப்பு. சிந்திக்காமல் கொஞ்ச நேரம் இருக்க முடியும். முகராமல் நகரமால் தூங்காமல் திங்காமல்...எல்லாம் முடியும். கொஞ்ச நேரம் இதயமடிக்காமல் நின்றால்....இந்தக் காரணங்களால்தான் துணைவிக்கு நெஞ்சகத்தைத் தஞ்சகமாகக் கொடுப்பது.

    ReplyDelete
  5. very good interpretations Sir.

    Srivathsan.....

    ReplyDelete
  6. குமரன்,

    அகலகில்லேன் என்று மார்பில் உறைந்தவள் ,மாதவனுடன்
    நீண்டயுகங்கள் தோறும்
    அவன் கூடவே வருவது நம்மைக் காக்கத்தானே.
    அவனையும் அவளையும் மறக்காமல் இதயம் நிறைய நினைக்க வைக்கும் நல்ல பதிவு.

    ReplyDelete
  7. வக்ஷ ஸ்தல வாசினி
    திரு மறு மார்பன்
    இதய கமல வாசினி
    அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பன்
    வடிவாய் நின் வல மார்பில் வாழ்கின்ற மங்கை.....

    குமரன் நீங்கள் சொல்லச் சொல்ல, பாசுரங்களில் திருமார்பு பயின்று வரும் இடங்கள் அப்படியே மனதில் ஓடிகின்றன!

    ReplyDelete
  8. இறைவன் நம்மிடம் மிக விரும்புவது எது? மனது! நம் மனதை அவனுக்கு அளிப்பது! ஆத்ம சமர்ப்பணம்!

    ஏன் அவன் நம் மனதை விரும்ப வேண்டும்? ஏனென்றால், அவன் மனது அன்னை!
    அதனால் தான் போலும் எங்கும் எதிலும் அவன் மனதுகளையே பார்க்கிறான்! நம்மிடமும் அதையே பார்க்கிறான்!

    நம் மனதை அவன் மனதிடம் கொடுத்து விடுவோம்; திருமகளைப் பற்றி, திருமகள் நாதனிடம் சரணாகதி செய்வோம்!

    ReplyDelete
  9. மிக நல்ல விளக்கம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல?

    வெறுமே விஷ்ணுவின் மார்பில் உறைபவளே என்று சொல்லாமல் மதுகைடபரை அழித்தவன் மார்பில் உறைபவளே என்பதில் எத்தனை பொருள் பொதிந்திருக்கிறது !!

    ReplyDelete
  10. அருமையான விளக்கம் குமரன்... இதுதான் திருமகள் மார்பில் குடி கொண்டிருப்பதன் ரகசியமா???

    இன்னோரு விஷயம்...

    நம் சிந்தனைக்கேற்றவாறு நம் முச்சுக்காற்றும் இரத்த ஓட்டமும் மாறும். நீங்கள் நன்றாக கவனித்தால் தெரியும் அதிக டென்ஷனாக இருக்கும் போது மூச்சுக்காற்றை சீக்கிரம் எழுத்து வெளியே விட்டுவிடுவோம். அதுவே கொஞ்சம் மெறுமூச்சு விட்டால் நிம்மதியடைந்ததை போல் உணர்வோம். இதனாலே நம் எண்ணங்கள் இதயத்தில் உதிப்பது போன்று தோன்றுகிறது.

    ReplyDelete
  11. அருமையான விளக்கம் குமரன்... இதுதான் திருமகள் மார்பில் குடி கொண்டிருப்பதன் ரகசியமா???

    இன்னோரு விஷயம்...

    நம் சிந்தனைக்கேற்றவாறு நம் முச்சுக்காற்றும் இரத்த ஓட்டமும் மாறும். நீங்கள் நன்றாக கவனித்தால் தெரியும் அதிக டென்ஷனாக இருக்கும் போது மூச்சுக்காற்றை சீக்கிரம் எழுத்து வெளியே விட்டுவிடுவோம். அதுவே கொஞ்சம் மெறுமூச்சு விட்டால் நிம்மதியடைந்ததை போல் உணர்வோம். இதனாலே நம் எண்ணங்கள் இதயத்தில் உதிப்பது போன்று தோன்றுகிறது.

    ReplyDelete
  12. நன்றிகள் சாத்வீகன். இதயக்கமலத்தில் வீற்றிருக்கும் இறைவனின் இதயக்கமலத்தில் வீற்றிருக்கும் கமலா நம் அன்னை.

    ReplyDelete
  13. கோவி.கண்ணன். நல்ல கருத்து சொன்னீர்கள். நன்றி.

    ReplyDelete
  14. நன்றி சிவமுருகன்.

    ReplyDelete
  15. இதயத்தின் பெருமையை நன்கு விளக்கினீர்கள் இராகவன். நன்றி.

    ReplyDelete
  16. உண்மை தான் வல்லியம்மா. சரியாகச் சொன்னீர்கள். யுகேயுகே அவன் அவதாரம் எடுக்கும் போதெல்லாம் அன்னையும் கூடவே வருவது நம்மைக் காக்கத்தான். அதனால் தானே அவனுக்கு மாதவன் என்றே பெயர். சரியான இடத்தில் சரியான பெயரை இட்டிருக்கிறீர்கள். :-)

    ReplyDelete
  17. இரவிசங்கர். உண்மை தான். ஆழ்வார்கள் கண்ணன் வைபவங்களில் ஆழங்காற்பட்டது போல் அன்னை பெருந்தாயாரைப் பாடுவதிலும் ஆழங்காற்பட்டிருக்கிறார்கள்.

    மிக நன்றாக சரணாகதி நெறியைப் பற்றிச் சொன்னீர்கள் இரவிசங்கர். நம் மனதை அவன் மனதிடம் கொடுத்துவிடுவோம். திருமகளைப் பற்றி திருமகள் நாதனிடம் சரணாகதி செய்வோம்.

    ReplyDelete
  18. உண்மை ஜெயஸ்ரீ. ஆழ்வார் பாசுரங்களிலும் இந்த அழகைக் காணலாம். எந்த இடத்தில் எந்தப் பெயரைச் சொன்னால் பொருத்தமோ அந்தப் பெயரைச் சொல்லியிருப்பார்கள். மேலே வல்லி அம்மா செய்ததைப் போல.

    ReplyDelete
  19. பாலாஜி. மூச்சின் வேகத்திற்கும் நம் உணர்வுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது பலரது அனுபவம். சினத்தின் பால் படும் போது ஒன்றிலிருந்து பத்து வரை எண்ணும் படி சொல்வதும் இதற்காகத் தானே. பணியிடத்தில் பலமுறை அனுபவப்பட்டதாயிற்றே இது. மூச்சு சீராக்க உணர்வுகள் சீராகும்; குளிரும். அது உணர்ச்சிகள் இதயத்தில் தோன்றுவதைத் தானே சொல்கிறது?!

    உணர்ச்சிகள் சீராக எண்ணங்களும் சீராகும். ஆனால் அது அடுத்தக் கட்டம்.

    ReplyDelete