Thursday, July 27, 2006
இன்றோ திருவாடிப்பூரம்!
திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்தப் பெண்பிள்ளாய் வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்தி மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப்பதங்கள் வாழியே
திருவாடிப்பூரம் ஆகிய இன்றையத் திருநாளில் உலகத்தில் அவதரித்தவள் வாழ்க!
திருப்பாவை முப்பதும் சொன்னவள் வாழ்க!
பெரியாழ்வார் பெருமையுடன் வளர்த்தப் பெண் பிள்ளை வாழ்க!
திருப்பெரும்புதூரில் அவதரித்த இராமானுஜமுனிக்குத் தங்கையானவள் வாழ்க!
ஒரு நூற்று நாற்பத்தி மூன்று பாசுரங்களைப் பாடியவள் வாழ்க!
உயர்வற உயர்நலம் உடைய அரங்கனுக்கு மலர்மாலையை மகிழ்ந்து தான் சூடிக் கொடுத்தவள் வாழ்க!
மணம் கமழும் திருமல்லிநாட்டைச் சேர்ந்தவள் வாழ்க!
புதுவை நகரெனும் வில்லிபுத்தூர் நகர்க் கோதையின் மலர்ப்பதங்கள் வாழ்க வாழ்க!
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடம் தோன்றும் ஊர் - நீதிசால்
நல்ல பக்தர் வாழுமூர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்.
கோதை பிறந்த ஊர்
கோவிந்தன் நிலைத்து வாழும் ஊர்
ஒளிவீசும் மணி மாடங்கள் விளங்கும் ஊர்
நீதியில் சிறந்த நல்ல பக்தர்கள் வாழும் ஊர்
நான்மறைகள் என்றும் ஒலிக்கும் ஊர்
அப்படிப்பட்ட வில்லிபுத்தூர் வேதங்களின் தலைவனின் ஊர்
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதம் அனைத்திற்கும் வித்தாகும் - கோதைதமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானுடரை
வையம் சுமப்பதும் வம்பு.
பஞ்சமா பாதகங்களைத் தீர்க்கும்
பரமனின் அடிகளைக் காட்டும்
வேதங்கள் அனைத்திற்கும் வித்து ஆகும்
அப்படிப்பட்டக் கோதையின் தமிழ்ப் பாசுரங்கள்
ஐயைந்தும் ஐந்தும் (முப்பதும் - திருப்பாவை)
அறியாத மானுடரை
வையம் சுமப்பது வீண்
அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கற்கு
பன்னு திருப்பாவை பல்பதியம் இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை, பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.
அன்னங்கள் சூழ, அன்னம் விளையும் வயல்கள் கொண்ட புதுவை என்னும் திருவில்லிபுத்தூர்.
ஆங்கு அவதரித்த ஆண்டாள், ஆரா அமுதன் அழகிய திரு அரங்கன் மீது பாடிக் கொடுத்தாள் நல்ல பாமாலை...வாய்க்கு மணம்!
போதாது என்று பூமாலையும் சூடிக்கொடுத்தாள்...மேனிக்கே மணம்!
அந்த மாலைகளை அனைவரும் சொல்லுவோம்.
சூடிக் கொடுத்தச் சுடர்கொடியே தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய் - நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு.
மலர்மாலையை மாலவனுக்குச்
சூடிக் கொடுத்த சுடர்கொடியே!
தொன்மையான பாவை நோன்பிற்காக
திருப்பாவை பாடி அருளிய பலவிதமான வளையல்களை அணிந்தவளே!
'மன்மதனே. நீ மனம் இரங்கி திருவேங்கடவனுக்கே என்னை மணாட்டியாக விதி' என்று நீ கூறிய வார்த்தைகளை நாங்களும் ஏற்று
என்றும் புறந்தொழாமல்
என்றும் படிதாண்டா பத்தினிகளாக
எம்பெருமானையே பற்றி வாழ அருள்வாய்.
இன்றோ திருவாடிப்பூரம் எமக்காக
அன்றோ ஆண்டாள் அவதரித்தாள் - குன்றாத
வாழ்வான வைகுந்த வான்போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்.
இன்றல்லவோ திருவாடிப்பூரம்! (இந்தத் திருநாளில்)எம் பொருட்டு அன்றோ ஆண்டாள் அவதரித்தாள்!(எம் மேல் அவள் கருணை எப்படிப்பட்டதெனில்) என்றும் அழியாத பெரும்பேறான வைகுந்த வான்போகத்தை (அடியாரைக் காத்தருளுவதை விட கீழானதென்று) இகழ்ந்து பெரியாழ்வர் திருமகளாராய்!
அடையுங்கள் அடையுங்கள் ஆண்டாள் திருவடி அடையுங்கள் நம் ஆண்டாள் திருவடி அடையுங்கள்!
ஆண்டாள் திருவடிகளே சரணம்
ReplyDeleteஆச்சாரியான் திருவடிகளே சரணம்
///
ReplyDeleteதிருவாடிப்பூரம் ஆகிய இன்றையத் திருநாளில் உலகத்தில் அவதரித்தவள் வாழ்க!
திருப்பாவை முப்பதும் சொன்னவள் வாழ்க!
///
நல்லநாள்
நல்ல சேதி
நன்றி குமரன்
ஆண்டாள் - அந்த அரங்கனை ஆண்டாள்
ReplyDeleteவேண்டாத குணமுடைய என்னையும் ஆண்டாள்!
ஆண்டுதோறும் மார்கழியில் பாடுகின்ற ஆண்டாள்!
தூண்டுகின்ற தமிழுணர்வை உள்ளெழுப்பும் ஆண்டாள்!
வேண்டி நிற்கும் அனைவருக்கும் அருள்பொழியும் ஆண்டாள்!
பண்டுமாலை தனைப்புனைந்து அழகு பார்த்த ஆண்டாள்!
ஆண்டாள் திருவடிகளே சரணம்!
[நாற்பத்தி மூன்றா, நாற்பத்து மூன்றா, குமரன்?
ஆண்டாள் புகழ் பாடி எங்களையும் மகிழ்வித்ததற்கு நன்றி! ]
செல்வன், நானும் உங்களுடன் சேர்ந்து சொல்கிறேன்.
ReplyDeleteஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆசார்யன் திருவடிகளே சரணம்
மிக்க மகிழ்ச்சி
ReplyDeleteமதுமிதா அக்கா
எஸ்.கே. கவிதைக்கு நன்றி.
ReplyDeleteநாற்பத்தி மூன்று vs நாற்பத்து மூன்று - பாடபேதம் என்று நினைக்கிறேன்.
கோதை ஆண்டாள்
ReplyDeleteதமிழை ஆண்டாள் என்றால் மிகையாகாது...
அழகு மிகும் தெற்குத் தமிழில்
எளிய சொற்களைச் சேர்த்து
மணிமணியாகக் கோர்த்து
திருப்பாவை அருளிய திருப்பாவையின்
பிறந்த நாளில் அவளை வணங்கி
அவளது மொழிப்பணியை நினைவு கூர்வதே சிறப்பு!
வங்கக் கடல் கொண்ட மாயவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிரைஞ்சி
அங்கப்பரவை கொண்ட ஆற்றை அணிப்புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிகரைப்பார் ஈரிரண்டு மால்வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
அன்புக் குமரா!
ReplyDeleteகோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்!
கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள்:-கவியரசர் கண்ணதாசன்
ஆண்டாள் கிருபை எல்லோருக்குமாகட்டும்§
நல்ல பனுவல்களைத் தேர்ந்து தந்ததிற்க்கு நன்றி!
யோகன் பாரிஸ்
அடையுங்கள் அடையுங்கள் ஆண்டாள் திருவடியை அடையுங்கள்...
ReplyDeleteநன்றி அண்ணா
ஆண்டாள்,
ReplyDeleteமாலை கொண்டாள்,
தமிழயையும் ஆண்டாள்,
அரங்கனையும் ஆண்டாள்,
அரங்கனிடம் ஐக்கியம் கொண்டாள்
அவள் நாமம் வாழ்க
அன்பு குமரா!
ReplyDeleteஇன்றே திருவாடிப்பூரம்- என்பது தலைப்பா? இன்றோ திருவாடிப்பூரம் தான் தலைப்பா? இரண்டாவதெனில் ஏன்? இந்த கேள்வியமைப்பில் அமைந்த தலைப்பு.ஏதும் காரணம் உண்டா?
யோகன் பாரிஸ்
//அன்பு குமரா!
ReplyDeleteஇன்றே திருவாடிப்பூரம்- என்பது தலைப்பா? இன்றோ திருவாடிப்பூரம் தான் தலைப்பா? இரண்டாவதெனில் ஏன்? இந்த கேள்வியமைப்பில் அமைந்த தலைப்பு.ஏதும் காரணம் உண்டா?
யோகன் பாரிஸ்//
அன்பு யோகன் -பாரிஸ்,
கேள்விக்குறி போட்டிருந்தால் சந்தேகமாக நம்மைக் கேட்பதாகும்!
ஆனால் குமரன் ஆச்சரியக்குறிதானே போட்டிருக்கிறார்.
போதுமினோ நேரியைழியீர்! என ஆண்டாள் பாவயரைப் பார்த்துச் சொன்னதுபோல,
'மார்கழி வந்து விட்டது! போகவேண்டாமோ! எனக் கேட்டது போலக் குமரனும்,
இன்றொ திருப்பூரம்! இன்னும் அவளை வாழ்த்தாமல் இருக்கலாமோ! எனச் சொல்லியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
சரிதானே குமரன்!!
ஆடிப் பூரத்தில் வந்துதித்த ஆண்டாள் நம் கோதை மலர் பதங்கள் வாழிய!
ReplyDeleteகுமரன்,... முடிந்தால், பின் வரும் பாடலையும்,
"சூடிக் கொடுத்தச் சுடர்கொடியே தொல்பாவை" என்று முன்வரும் பாடலோடு இணைத்து விடுகிறீர்களா?
பாசுரப் படி சாற்று முறையில், இவ்விரண்டு பாடல்களும் வரும் அழகே தனி. அதனால் தான் என்னவோ அதற்கு "தனியன்" என்று பெயர் இட்டார்கள்?
அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கற்கு
பன்னு திருப்பாவை பல்பதியம் இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை, பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.
அன்னங்கள் சூழ, அன்னம் விளையும் வயல்கள் கொண்ட புதுவை என்னும் திருவில்லிபுத்தூர்.
ஆங்கு அவதரித்த ஆண்டாள், ஆரா அமுதன் அழகிய திரு அரங்கன் மீது பாடிக் கொடுத்தாள் நல்ல பாமாலை...வாய்க்கு மணம்!
போதாது என்று பூமாலையும் சூடிக்கொடுத்தாள்...மேனிக்கே மணம்!
அந்த மாலைகளை அனைவரும் சொல்லுவோம்.
பாமாலை சொல்லலாம்? ஆனால் பூமாலை எப்படிச் சொல்லுவது? அங்கு தான் சூட்சுமம்!
வாயால் பாடுவதோடு மட்டும் நின்று விடாமல், அவரவர் முடிந்த அளவு, உடலாலும் உழைப்பு செய்து காணிக்கை ஆக்குவோம்...அதுவே தொண்டு, கைங்கர்யம்!
உள்ளன்பால் வருவது பாமாலை.
உடலுழைப்பால் வருவது பூமாலை.
இவை இரண்டும் கலந்து நாம் தருவோம்; நலம் பெறுவோம்!
பி.கு.
1. குமரன் பதிவை வாசித்து கொண்டு இருக்கும் போது, கவியரசர் கண்ணதாசன் பாடல் ஒன்று பின்னணியில் பாடிக்கொண்டு இருந்தது..."கோதையின் திருப்பாவை, வாசகி எனும் பாவை...கூப்பிடும் குரல் கேட்டு கண்ணன் வந்தான்" மிகவும் அருமையான் பாடல். சுட்டி இதோ
[http://www.musicindiaonline.com/p/x/EUQ9AYGyit.As1NMvHdW/]
2.//மணம் கமழும் திருமல்லிநாட்டைச் சேர்ந்தவள் வாழ்க!//
இந்த மல்லிக்கும், தங்கள் பெயரில் உள்ள மல்லிக்கும் தொடர்பு ஏதேனும் உண்டா குமரன்?
ஏன் கேட்கிறேன் என்றால் - ஆண்டாளும் நீங்களும் ஒரே ஊர்க்காரர்களோ? :-)
ஆண்டாள் ஆண்டாள்.என்ன அருமையாக எழுதிவிட்டிர்கள் குமரன்.
ReplyDeleteஅவளே உணர்ச்சிக் குவியல்.ஒட்டு மொத்தப் பெண்குலத்துக்கும் விளக்கு.அந்த நூற்றாண்டில் அந்த நாட்களில் ஒரு மங்கை போராடி அரங்கனை அடைந்தாள். என்ன ஒரு திண்மை.!!வில்லிபுத்தூர் மண்ணைத் தொட்டாலே பக்தி வரும். இப்போது மனதில் நினைக்கும்போதே இனிக்கிறது.நாங்கள் அங்கே 1950களில் இருக்கும்போது, என்னையும் சேர்த்து 4 ஆண்டாள் (பாட்டிகள், ) 5 ஆண்டாள் (பெண்கள்) சிறுமிகள்.அவ்வளவு பக்திச் செறிவு நிறைந்த நகரம்.பெரியாழ்வார் திருவடிகளே சரணம். ஆண்டாள் திருவடிகளே சரணம்.அவளை அணைத்த அரங்கன் திருவடிகள் சரணம்.
/////
ReplyDeleteதிருவாடிப்பூரம் ஆகிய இன்றையத் திருநாளில் உலகத்தில் அவதரித்தவள் வாழ்க!
//
குமரன்,
ஆடிப்பூரத்தின் விஸேஷத்தை இன்றுதான் அறிந்து கொண்டேன்.
மார்கழி மாதத்தில் திருப்பாவையுடன் சேர்த்து மேற்கண்ட பாடல்களையும் படிப்போம். அம்மார்கழி மாத அதிகாலை நினைவுகளை ஏற்படுத்திவிட்டது உங்கள் பதிவு.
ஆமாம் இராகவன். கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள் தான்.
ReplyDeleteநீங்கள் நிறைவு செய்யாததை நான் செய்துவிடுகிறேன்.
'எங்கும் திருவருள் பெற்று இன்புறுவரெம்பாவாய்'
படித்து மகிழ்ந்ததற்கு மிக்க நன்றி யோகன் ஐயா.
ReplyDeleteசிவமுருகன். நீங்கள் சொன்ன நாயகி சுவாமிகளின் வரிகளையும் பதிவில் சேர்த்துவிட்டேன். மிக்க நன்றி.
ReplyDeleteஆண்டாள் திருநாமம் வாழ்க. அவள் பெயரைச் சொல்லும் போதே எல்லோரும் ஆசுகவி ஆகிவிடுகிறோம்.
ReplyDeleteயோகன் ஐயா. இன்றோ திருவாடிப்பூரம் என்பது தான் தலைப்பு. அது கேள்வியல்ல. 'ஆகா. இன்றல்லவோ திருவாடிப்பூரம்' என்ற உடல் சிலிர்ப்பால் (புளகாங்கிதத்தால்) வந்த வரி. வைணவ ஆசாரியரான மணவாள மாமுனிகள் இயற்றிய தனியனின் முதல் அடி இது. பதிவில் அந்தத் தனியனையும் இப்போது இட்டுவிட்டேன்.
ReplyDeleteஇன்றோ திருவாடிப்பூரம்! எமக்காக
அன்றோ ஆண்டாள் அவதரித்தாள் - குன்றாத
வாழ்வான வைகுந்த வான்போகத்தை இகழ்ந்து
ஆழ்வார் திருமகளா ராய்.
எஸ்.கே. உங்கள் விளக்கத்திற்கு நன்றி.
ReplyDelete//போதுமினோ நேரியைழியீர்! என ஆண்டாள் பாவயரைப் பார்த்துச் சொன்னதுபோல,
'மார்கழி வந்து விட்டது! போகவேண்டாமோ! //
போதுமின் என்றால் பழந்தமிழில் வாருங்கள் என்று பொருள். போ என்று இருப்பதால் அது போக என்ற பொருளில் வரும் என்ற மயக்கம் எனக்கும் வந்ததுண்டு.
போதுமினோ நேரிழையீர் என்றால் வாருங்களே அழகிய நகைகளை அணிந்த தோழியரே என்று பொருள் சொல்வார்கள்.
ரவிசங்கர் கண்ணபிரான். எப்படி 'அன்ன வயல் புதுவை ஆண்டாள்...' தனியனை விட்டேன் என்று தெரியவில்லை. உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தப் பின் அதனையும் சேர்த்துவிட்டேன். மிக்க நன்றி. பாடலையும் கொடுத்துப் பொருளுரையும் கொடுத்ததற்கு மிக்க நன்றி.
ReplyDelete'தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி
மனத்தினால் சிந்திக்க'
என்று நாச்சியார் திருப்பாவையிலும் மூன்று கரணங்களாலும் (உடல், சொல், மனம்) செய்யவேண்டிய சேவையைப் பற்றிச் சொல்லியிருக்கிறாரே. அதே போல் தான் பாமாலையும் பூமாலையும் என்று மிக அழகாக விளக்கம் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.
பாடலின் சுட்டி கொடுத்ததற்கு மிக்க நன்றி. அந்தப் பாடல் வரிகள் 'கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை' என்று வரும் என்று நினைக்கிறேன். அது மாணிக்க வாசகரின் திருவெம்பாவையைக் குறிக்கிறது. திருவெம்பாவை சிவபெருமானின் மேல் பாடப்பட்டது என்றாலும் சிவ: என்பதும் விஷ்ணுவின் சகஸ்ர நாமங்களில் ஒன்று தானே. அந்த முறையில் அதுவும் கண்ணனைப் பாடுவதாய்க் கொள்ளலாம்.
ReplyDeleteதிருமல்லி நாட்டிற்கும் என் பெயரில் இருக்கும் மல்லிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை ரவிசங்கர் கண்ணபிரான். சௌராஷ்ட்ரர்கள் எல்லோருக்கும் பரம்பரை பரம்பரையாக வீட்டுப்பெயர் என்று ஒன்று உண்டு (கோத்திரமும் உண்டு. வீட்டுப்பெயர் கோத்திரத்தின் உட்பிரிவு என்று சொல்லலாம். ஒரே வீட்டுப் பெயர் உடையவரும் ஒரே கோத்திரத்தவரும் திருமணம் செய்து கொள்வதில்லை). என் வீட்டுப் பெயர் 'மல்லி'. சிவமுருகனின் வீட்டுப்பெயர் 'நீலமேகம்'. கால்கரி சிவா அண்ணாவின் வீட்டுப் பெயர் 'சுட்டி'. வஜ்ரா ஷங்கரின் வீட்டுப் பெயர் 'மாணிக்கா'.
உண்மை தான் மனு அம்மா. ஆண்டாளின் வரிகளைப் படித்தால் பக்தி பெருகும். வில்லிபுத்தூர் மண்ணைத் தொட்டாலே பக்தி வரும். பலமுறை நானும் அனுபவித்திருக்கிறேன் அதனை.
ReplyDeleteஆமாம் சிபி. திருப்பாவை சொல்லும் முன் இந்தத் தனியன் பாடல்களைச் சொல்லுவது வழக்கம். அதனைச் சாற்றுமுறை என்று சொல்வார்கள்.
ReplyDeleteநடனகோபால நாயகி சுவாமிகளின் 'அடையுங்கள் அடையுங்கள் ஆண்டாள் திருவடி அடையுங்கள்' என்ற பாடலை சிவமுருகன் 'மதுரையின் ஜோதி' வலைப்பூவில் இட்டிருக்கிறார். படித்துப் பாருங்கள். பாடலைக் கேட்டுப் பாருங்கள்.
ReplyDeletehttp://nadanagopalanayaki.blogspot.com/2006/07/blog-post_28.html
http://nadanagopalanayaki.blogspot.com/2006/07/blog-post_29.html
aruamai swami thodaratum umathu kainkaryam.
ReplyDeleteandaal thiruvadigale saranam
alwar emberumanar jeeyar thiruvadigale saranam
நன்றி திரு. ச்ரிநிவாசன்.
ReplyDeleteஅரங்கனை விரும்பிய ஆண்டாள் அவனையே ஆண்டாள்
ReplyDeleteஆமாம் என்னார் ஐயா. ஆண்டவனையே ஆண்டவள் தான் ஆண்டாள்.
ReplyDelete