Monday, January 09, 2006

108: திருவரங்கத்தாய் இவள் திறத்து என் செய்கின்றாயே!

உயர்வற உயர்நலம் உடையவனும் அயர்வறும் அமரர்கள் அதிபதியும் ஆன எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் திருமறு மார்பனைப் பாடிப் பரவிய திவ்யதேசங்கள் 108. அவற்றில் முதல் திவ்ய தேசம் கங்கையில் புனிதமான காவிரியின் நடுவில் உள்ள திருவரங்கம். பெரிய பிராட்டியாரோடு பெரிய பெருமாள் நித்ய வாசம் செய்யும் பூலோக வைகுண்டம்.

வைகுண்ட ஏகாதசியாகிய இன்று பெரிய பெருமாள் திருவரங்க நகரப்பன் பரமபத வாசல் வழி வந்து எல்லாருக்கும் திவ்ய தரிசனம் தருகின்றான். அவன் திருமுன்பு அவனாலேயே 'நம் சடகோபன்' என்று கொண்டாடப் பட்ட நம்மாழ்வாரின் பாசுரங்களைப் பாடி பரமானந்தம் எய்துவோம்.

கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
கண்ணநீர் கைகளால் இறைக்கும்
சங்கு சக்கரங்கள் என்று கைகூப்பும்
தாமரைக் கண் என்றே தளரும்
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும்
இருநிலம் கைதுழாவிருக்கும்
செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய்
இவள்திறத்து என் செய்கின்றாயே

சிவந்த கயல்மீன்கள் பாய்ந்து விளையாடும் நீர்வளம் மிக்கத் திருவரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள பெரிய பெருமாளே! இந்தப் பெண் இரவும் பகலும் தூக்கம் என்பதே அறியாமல் இருக்கிறாள். அவள் கண்களில் இருந்து விழும் கண்ணீர் துடைக்கும் படியாய் இல்லை; கைகளால் இறைக்கும் படியாய் இருக்கிறது. உன் திவ்ய ஆயுதங்களை எண்ணி 'சங்கு, சக்கரம்' என்று சொல்லிக் கை கூப்புகிறாள். உன் அழகிய தாமரை போன்ற கண்களை நினைந்து அந்த அழகில் மயங்கித் தளர்ந்து போகிறாள். 'உன்னைப் பிரிந்து எப்படி நான் உயிர் வாழ்வேன்' என்று மயங்குகிறாள். வேறு வழி தெரியாமல் பூமியைக் கைகளால் துழாவித் துன்புற்று ஒன்றும் செய்ய இயலாமல் வருந்துகிறாள். நீர் இந்தப் பெண் விஷயமாக என்ன செய்யப் போகின்றீர்?

என் செய்கின்றாய் என் தாமரைக்கண்ணா
என்னும் கண்ணீர் மல்க இருக்கும்
என்செய்கேன் எறிநீர்த் திருவரங்கத்தாய்
என்னும் வெவ்வுயிர்த்துயிர்த்து உருகும்
முன் செய்த வினையே முகப்படாய் என்னும்
முகில்வண்ணா தகுவதோ என்னும்
முன்செய்திவ்வுலகம் உண்டுமிழ்ந்தளந்தாய்
என்கொலோ முடிகின்றது இவட்கே

முன்னொரு காலத்தில் இந்த உலகங்களை எல்லாம் படைத்துப் பின் பிரளயக் காலத்தில் அவற்றை எல்லாம் உண்டு தன் திருவயிற்றில் வைத்துக் காத்து பின் வெளிக் கொணர்ந்து நிலைப்படச் செய்த நீ பின் திரிவிக்கிரமனாய் அந்த உலகங்களை அளக்கவும் செய்தாய்! அப்படிப் பட்ட எல்லா வல்லமையும் பெற்றவனே! இந்தப் பெண் 'தாமரைக் கண்ணா. நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?' என்று புலம்புகிறாள். கண்ணீர் மல்க இருக்கிறாள். 'அலைகள் வீசும் காவிரியை உடைய திருவரங்க நகரானே! நான் என்ன செய்வேன்?' என்கிறாள். உம்மை எண்ணி எண்ணி பெருமூச்சுகள் விட்டுக் கொண்டே உருகி நிற்கிறாள். 'நான் முன் செய்த தீய வினைகள் தான் இன்று என்னை வாட்டுகின்றன. ஏ தீய வினைகளே. தடையாய் முன்னே நில்லாதீர்கள்' என்கிறாள். 'கருணை மேகம் போல் நிறம் கொண்டவனே. இது உனக்குத் தகுமா?' என்கிறாள். நீர் இவளுக்கு என்ன முடிவு வைத்திருக்கிறீர்?

வட்கிலள் இறையும் மணிவண்ணா என்னும்
வானமே நோக்கும் மையாக்கும்
உட்குடை அசுரர் உயிரெல்லாம் உண்ட
ஒருவனே என்னும் உள்ளுருகும்
கட்கிலீ உன்னைக் காணுமாறருளாய்
காகுத்தா கண்ணனே என்னும்
திட்கொடி மதில்சூழ் திருவரங்கத்தாய்
இவள் திறத்து என்செய்திட்டாயே

இவள் கொஞ்சம் கூட வெட்கம் என்பதே இல்லாமல் எங்கும் எப்போதும் உன் பெயர்களைச் சொல்லித் திரிகிறாள். கரிய மாணிக்கம் போன்ற நிறத்தானே என்கிறாள். நீ வருவாய் என்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். பின் நீ வராததால் மயங்கி நிற்கிறாள். 'உடலின் உள்ளே, உயிரின் உள்ளே நின்று நம்மை எல்லாம் கெடுக்கும் அசுரர் கூட்டங்களை எல்லாம் அழித்து நிற்கும் ஒருவனே' என்கிறாள். அந்தக் கருணையை எண்ணி உள்ளம் உருகுகிறாள். 'கண்களால் காண்பதற்கு அரியானே! உன்னை நான் கண்டு அனுபவிப்பதற்கு நீயே அருள வேண்டும். காகுத்தா. கண்ணனே' என்கிறாள். கொடிகள் ஏற்றப் பட்ட திடமான மதில்களால் சூழப்பட்டிருக்கும் திருவரங்க நகரானே! இவள் இப்படி உன் மேல் பைத்தியமாய் அலையும் படி நீ என்ன தான் செய்தாய்?

இட்ட கால் இட்ட கையளாய் இருக்கும்
எழுந்துலாய் மயங்கும் கைகூப்பும்
கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும்
கடல்வண்ணா கடியை காண் என்னும்
வட்டவாய் நேமி வலங்கையா என்னும்
வந்திடாய் என்றென்றே மயங்கும்
சிட்டனே செழுநீர்த் திருவரங்கத்தாய்
இவள் திறத்து என் சிந்தித்தாயே

சில நேரங்களில் எந்த வித உணர்வும் இன்றி தன் கைகளும் கால்களும் இட்டது இட்டபடி இவள் கிடக்கிறாள். சில நேரங்களில் எழுந்து உலாவி மயங்கி நிற்கிறாள்; கைகளைக் கூப்புகிறாள். 'காதலில் விழுவது மிகுந்த துன்பத்தைக் கொடுக்கிறது' என்று மூர்ச்சை அடைகிறாள். 'கடல் நிறத்தானே! நீ மிகுந்த கொடுமைக்காரன்' என்கிறாள். 'வட்டமான வடிவத்தை உடைய சக்கரத்தை வலக்கையில் ஏந்திய பெருமானே! எனக்கு அருள வந்திடாய்' என்று சொல்லிச் சொல்லி மயங்குகிறாள். இப்படி இவளை துன்புறுத்தும் நீயோ நல்லவன் (சிட்டன்) போல் தூங்கிக் கொண்டிருக்கிறாய். நீர் வளம் செழித்து இருக்கும் திருவரங்க நகரானே! இவளைப் பற்றி நீர் என்ன எண்ணம் கொண்டிருக்கிறீர்?

சிந்திக்கும் திசைக்கும் தேறும் கைகூப்பும்
திருவரங்கத்துள்ளாய் என்னும்
வந்திக்கும் ஆங்கே மழைக்கண்ணீர் மல்க
வந்திடாய் என்றென்றே மயங்கும்
அந்திப் போது அவுணன் உடலிடந்தானே
அலைகடல் கடைந்த ஆரமுதே
சந்தித்துன் சரணம் சார்வதே வலித்த
தையலை மையல் செய்தானே

உன்னையே இவள் சிந்தித்துக் கொண்டிருக்கிறாள். சில நேரம் நீ வருவாயோ இல்லையோ என்று திகைத்து நிற்கிறாள். பின் நிச்சயம் நீ வருவாய் என்று தேறி கைகளைக் கூப்புகிறாள். 'திருவரங்கத்தில் இருப்பவனே' என்று உன்னை அழைக்கிறாள். தலையால் வணங்குகிறாள். மழையைப் போல் கண்களில் நீர் மல்க 'வந்திட மாட்டாயா' என்று மயங்குகிறாள். பகலும் இரவும் சந்திக்கும் அந்திப் போதில் அவுணனாகிய இரணியனின் உடலை நரசிங்கமாய் வந்துப் பிளந்தவனே! அமுதம் வேண்டி பாற்கடலைக் கடைந்த ஆரா அமுதனே! உன்னைக் கண்டு உன் திருவடிகளையே அடைய திண்ணமான எண்ணம் கொண்டிருக்கும் இந்தப் பெண்ணை மயக்குகிறாயே? இது உனக்குத் தகுமோ?

மையல் செய்தென்னை மனம் கவர்ந்தானே
என்னும் மாமாயனே என்னும்
செய்யவாய் மணியே என்னும் தண் புனல் சூழ்
திருவரங்கத்துள்ளாய் என்னும்
வெய்யவாள் தண்டு சங்கு சக்கரம் வில்
ஏந்தும் விண்ணோர் முதல் என்னும்
பைகொள் பாம்பணையாய் இவள் திறத்தருளாய்
பாவியேன் செயற்பாலதுவே.

'என்னை மயக்கி என் மனதைக் கொள்ளை கொண்டவனே. மாமாயனே' என்கிறாள். 'செம்மையான சிவந்த அழகிய உதடுகள் உடைய மணியே' என்கிறாள். 'குளிர்ந்த தண்ணீரால் சூழப்பட்டத் திருவரங்கத்தில் உள்ளவனே' என்கிறாள். 'வெம்மையுடைய வாள், கதை, சங்கு, சக்கரம், வில் என்னும் திவ்ய ஆயுதங்களை ஏந்தும் விண்ணவர்களின் தலைவனே' என்கிறாள். படம் விரித்து இருக்கும் ஆதி சேடனை படுக்கையாய் கொண்டவனே! இவள் மீது உன் கருணையை வைப்பாய். பாவியேனாகிய நான் செய்யக் கூடியது அது மட்டுமே தான் (வேண்டுவது மட்டுமே தான்).

பால துன்பங்கள் இன்பங்கள் படைத்தாய்
பற்றிலார் பற்ற நின்றானே
காலசக்கரத்தாய் கடலிடங் கொண்ட
கடல்வண்ணா கண்ணனே என்னும்
சேல் கொள் தண் புனல் சூழ் திருவரங்கத்தாய்
என்னும் என் தீர்த்தனே என்னும்
கோலமா மழைக்கண் பனிமல்க இருக்கும்
என்னுடைக் கோமளக் கொழுந்தே

'உலகத்தைக் காப்பதற்காக (பாலிப்பதற்காக) இன்பத்தையும் துன்பத்தையும் படைத்தவனே. உலகப் பற்றில்லாதவர்களுக்கு ஒரே பற்றாய் நிற்பவனே. காலம் என்னும் சக்கர வடிவாய் இருப்பவனே. பாற்கடலில் பள்ளி கொண்ட கடல்வண்ணனே. கண்ணனே' என்கிறாள். 'அழகிய மீன்கள் துள்ளி விளையாடும் நீரால் சூழப்பட்ட திருவரங்க நகரானே' என்கிறாள். 'தூய்மைகளுக்கெல்லாம் தூய்மையான என் தீர்த்தனே' என்கிறாள். அழகு பொருந்திய கண்களில் கண்ணீர் மழைபோல் வழிய நிற்கும் என் மென்மையான கொழுந்து போன்ற பெண் உருகித் துடிக்கிறாள்.

கொழுந்து வானவர்கட்கு என்னும் குன்றேந்திக்
கோநிரை காத்தவன் என்னும்
அழும் தொழும் ஆவி அனல வெவ்வுயிர்க்கும்
அஞ்சன வண்ணனே என்னும்
எழுந்து மேல் நோக்கி இமைப்பிலள் இருக்கும்
எங்ஙனே நோக்குகேன் என்னும்
செழுந்தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய்
என் செய்கேன் என் திருமகட்கே

'வானில் வாழ் தேவர்களுக்கு எல்லாம் கொழுந்து போன்றவனே' என்கிறாள். 'கோவர்த்தன மலையைத் தூக்கி பசுக்கூட்டத்தைக் காத்தவனே' என்கிறாள். உன்னை எண்ணி அழுகின்றாள். தொழுகின்றாள். உயிர் வெந்து போகும் படி பெருமூச்சு விடுகின்றாள். 'கரு நிற மை போன்றவனே' என்கிறாள். எழுந்து நின்று மேலே நோக்கி கண் கொட்டாமல் இருக்கிறாள். 'உன்னை நான் எப்படிப் பார்ப்பேன்' என்கிறாள். அகன்று ஆழமாகத் தண்ணீர் சூழ்ந்திருக்கும் திருவரங்கத்தாய்! எனது திருமகளுக்காக நான் இன்னும் என்ன செய்வது?

என் திருமகள் சேர் மார்பனே என்னும்
என்னுடை ஆவியே என்னும்
நின் திருஎயிற்றால் இடந்து நீ கொண்ட
நிலமகள் கேள்வனே என்னும்
அன்றெரு தேழும் தழுவி நீ கொண்ட
ஆய்மகள் அன்பனே என்னும்
தென் திருவரங்கம் கோயில் கொண்டானே
தெளிகிலேன் முடிவிவள் தனக்கே

'நான் உன்னை அடைவதற்கு உறுதுணையாய் இருக்கும் என் திருமகள் வாழும் மார்பினை உடையவனே' என்கிறாள். 'என் உயிருக்கும் உயிரானவனே' என்கிறாள். 'அன்று வராக அவதாரம் எடுத்த போது உன் திருக் கொம்பால் தாங்கி நீ அடைந்த நிலமகள் மணவாளனே' என்கிறாள். 'கண்ணனாக அவதாரம் செய்த போது ஏழு எருதுகளைத் தாக்கிக் கொன்று அதன் பரிசாக நப்பின்னைப் பிராட்டியை அடைந்த அன்பனும் நீயே' என்கிறாள். தென் திசைக்கு அணிகலனாய் விளங்கும் திருவரங்கத்தில் கோயில் கொண்டவனே! உன்னைப் பிரிந்து என் மகள் படும் துன்பத்திற்கு என்ன தான் முடிவோ; எனக்குத் தெரியவில்லை.

முடிவிவள் தனக்கு ஒன்று அறிகிலேன் என்னும்
மூவுலகாளியே என்னும்
கடிகமழ் கொன்றைச் சடையனே என்னும்
நான்முகக் கடவுளே என்னும்
வடிவுடை வானோர் தலைவனே என்னும்
வண்திருவரங்கனே என்னும்
அடியடையாதாள் போல் இவள் அணுகி
அடைந்தனள் முகில் வண்ணன் அடியே

'எனக்கு என்ன முடிவு என்று அறிகிலேன்' என்கிறாள். 'மூன்று உலகங்களையும் ஆள்பவனே' என்கிறாள். 'மணம் வீசும் கொன்றை பூவை தன் சடைமுடியில் அணிந்திருக்கும் சிவபெருமானாகவும் நீயே இருக்கிறாய்' என்கிறாள். 'நான்முகனாம் பிரம்ம தேவனாகவும் நீயே இருக்கிறாய்' என்கிறாள். 'அழகான வடிவம் கொண்ட தேவர்கள் தலைவனாம் இந்திரனாகவும் நீயே இருக்கிறாய்' என்கிறாள். 'வளங்கொண்ட திருவரங்க நகரானே' என்கிறாள். இதுவரை உன் அடிகளை அடையாதவள் போல் இருந்தாள். இப்போது முகில் வண்ணனாகிய உன் திருவடிகளை நெருங்கி அனுபவித்து அடிகளை அடைந்துவிட்டாள்.

முகில்வண்ணன் அடியை அடைந்து அருள் சூடி
உய்ந்தவன் மொய்புனல் பொருநல்
துகில்வண்ணத் தூநீர்ச் சேர்ப்பன் வண் பொழில் சூழ்
வண்குருகூர்ச் சடகோபன்
முகில்வண்ணன் அடிமேல் சொன்ன சொல்மாலை
ஆயிரத்து இப்பத்தும் வல்லார்
முகில்வண்ண வானத்து இமையவர் சூழ
இருப்பர் பேரின்ப வெள்ளத்தே


முகில்வண்ணன் அடியை அடைந்து அவன் அருளைச் சூடி உய்ந்தவன், வெண்மையான ஆடையைப் போன்ற வண்ணம் கொண்ட நீரையுடைய தாமிரபரணி நதிக் கரையில் இருப்பவன், வளம் மிக்க குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரியில் வாழ்பவன், சடகோபன் - முகில்வண்ணன் திருவடிகளின் புகழைச் சொன்ன சொல் மாலையாம் திருவாய்மொழியின் ஆயிரம் பாடல்களில் இந்தப் பத்துப் பாடல்களும் பாடக் கூடியவர் மேகங்களால் நிறைந்த வானத்தில் தேவர்கள் சூழ்ந்திருக்க பேரின்ப வெள்ளத்தில் என்றும் இருப்பார்கள்.

----------
Updated on 11-Jan-2006:

நம்மாழ்வார் தன்மேல் நாயகி பாவத்தை ஏறிட்டுக் கொண்டு பராங்குச நாயகியாய் இருக்கும் போது, பராங்குச நாயகியின் திருத்தாயாரின் கூற்றாக வருவது இந்தப் பத்துப் பாசுரங்களும். பரமனைக் காணாமல் பராங்குச நாயகி தவிக்கும் தவிப்பு மிக அருமையாக இந்தப் பாசுரங்களில் கூறப்பட்டுள்ளது.

வைகுண்ட ஏகாதசி மார்கழியில் வரும் என்பது தெரியும். ஆனால் இந்த வருடம் அது எந்த நாளில் வருகிறது என்று தெரிந்து கொள்ளாமல் இருந்தேன். தேசிகனின் வலைப்பூவில் வைகுண்ட ஏகாதசி ஜனவரி பத்தாம் தேதி என்று தெரிந்தவுடன் திருவாய்மொழியை சேவிக்கலாம் என்று எண்ணி முதல் பத்தை எழுத ஆரம்பித்தேன். பின்னர் ஒரு எண்ணம். திருவரங்கத்தைப் பற்றிய திருவாய்மொழியாய் இருந்தால் இன்னும் சிறப்பாய் இருக்குமே என்று தோன்றியது. உடனே 'கங்குலும் பகலும்' நினைவிற்கு வந்தது. முதல் பத்தில் முதல் பாசுரத்தின் வரிகளை தொடக்க வரிகளாய் வைத்து எழுத ஆரம்பித்தேன்.

திருவாய்மொழியின் முதல் பாசுரம்:

உயர்வற உயர்நலம் உடையவன் எவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் எவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவனவன்
துயரறு சுடரடி தொழுதெ(ழு) என் மனனே

எழுதிக்கொண்டு வரும்போது 108 திவ்ய தேசங்களைப் பற்றியும் எழுதினேன். பதிவை எழுதி முடித்துப் பதித்தும் விட்டேன். தமிழ்மணத்தில் அது வந்த பிறகு தான் கவனித்தேன் அது 108வது பதிவு என்று. 108வது பதிவில் 108 திவ்ய தேசங்களைப் பற்றிச் சொல்லி அதில் முதலாவதாகிய திருவரங்கத்தைப் பற்றி எழுத வைத்தது அவன் அருளே என்று மகிழ்ந்தேன். முன்பே திட்டமிடாமல் தற்செயலாய் நிகழும் இது போன்ற நிகழ்வுகளால் தான் அவனே அவனைப் பாடிக் கொள்கிறான்; புகழ்ந்து கொள்கிறான் என்பது நிச்சயமாகிறது. இப்படிப் பட்ட நிகழ்ச்சிகள் ஏராளமாய் எனக்கு நடந்து அவனே எல்லாம் செய்துகொள்கிறான் என்ற உண்மையைப் புரியவைத்துள்ளன.

24 comments:

  1. இப்போது தான் முழுவதையும் படித்து முடித்தேன். "கங்குலும் பகலும் கண் துயில் அறியாள்
    கண்ணநீர் கைகளால் இறைக்கும்
    ..." என் அப்பாவிற்கு ரொம்ப பிடித்த பாட்டு. நல்ல பதிவு.

    ReplyDelete
  2. அப்பப்பா! எவ்வளவு புலம்பியிருக்கிறார் நம்மாழ்வார். ஒவ்வொரு புலம்பலும் ஒரு சொர்க்கம். இனி பாசுரங்களையும் படிக்க வேண்டியதுதான்.

    இவைகளை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி குமரன்.

    ReplyDelete
  3. ஓ..கோ வின்னும்,கடலும் அவன் வண்ணம் மண்ணும், வெண்ணையும் வேறு வண்ணம் அதான் அவன் அவைகளையுண்டானோ?

    ReplyDelete
  4. மிக்க நன்றி திரு. K.V. பதி ஐயா.

    ReplyDelete
  5. மிக்க நன்றி தேசிகன். எனக்கும் இந்தப் பாசுரம் மிகவும் பிடிக்கும். உங்கள் பதிவில் பெரிய பெருமாளைச் சேவித்துவிட்டு திருவரங்கத்தைப் பற்றிய திருவாய்மொழி சேவிக்க வேண்டும் என்று எண்ணியவுடன் என் நினைவிற்கு வந்தது இந்தப் பாசுரம் தான். பாராட்டுக்கு நன்றி.

    ReplyDelete
  6. இராகவன். தமிழில் எத்தனையோ பொக்கிஷங்கள் இருக்கின்றன. விஷ்ணு சித்தரின் பாசுரங்களுக்கு எல்லாம் பொருள் எழுதிய பிறகு நம்மாழ்வாரின் பாசுரங்களுக்குப் பொருள் எழுதலாம் என்று இருக்கிறேன். பெருமாள் திருவுளம் எப்படியோ?

    ReplyDelete
  7. நன்றி Jsri. பகவத் கிருபையால் பகவத் விஷயத்தில் கொஞ்சம் பயிற்சி உண்டு. என் மற்றப் பதிவுகளையும் படித்துப் பார்த்து ஏதாவது தவறு இருந்தால் சொல்லுங்கள். 'விஷ்ணு சித்தன்' வலைப் பக்கத்தில் பெரியாழ்வார் பாசுரங்களும் 'கோதை தமிழ்' வலைப்பக்கத்தில் திருப்பாவை விளக்கங்களும் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். தற்போது முன்னுரை கொடுத்துக் கொண்டிருக்கிறேன். கோதை தமிழில் நாச்சியார் திருமொழி பாசுரங்கள் சிலவற்றிற்குப் பொருள் எழுதியிருக்கிறேன்.

    உங்கள் நவராத்திரிப் படைப்புகளை முத்தமிழ் மன்றத்தில் படித்திருக்கிறேன். மிக நன்றாக இருந்தன. அண்மையில் ஏதாவது எழுதியிருக்கிறீர்களா? இருந்தால் சொல்லுங்கள்.

    ReplyDelete
  8. விண்ணும் கடலும் அவன் வண்ணம்
    மண்ணும் வெண்ணையும் வேறு வண்ணம்
    அதனால் அவன் அவைகளையுண்டானோ?

    அற்புதமாக இருக்கிறது என்னார் ஐயா. மிக்க நன்றி.

    ReplyDelete
  9. Vaikunda ekadashi pathivu kalakkal.

    Kumaresh

    ReplyDelete
  10. மனத்திலோர் தூய்மை யில்லை

    வாயிலோ ரிஞ்சொ லில்லை,
    சினத்தினால் செற்றம் நோக்கித்

    தீவிளி விளிவன் வாளா,
    புனத்துழாய் மாலை யானே.

    பொன்னிசூழ் திருவ ரங்கா,
    எனக்கினிக் கதியென் சொல்லாய்

    என்னையா ளுடைய கோவே
    திருவரன்கத்துகே எங்களை அழைத்துச்சென்று அரங்கனை சேவிக்க வைத்ததற்கு குமரனுக்கு நன்றி தி. ரா. ச

    ReplyDelete
  11. அன்பு TRC. நீங்கள் எழுதியிருப்பது ஒரு அற்புதமான பாசுரம். இது தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாசுரம் என்று நினைக்கிறேன். சரியா? மிக்க நன்றி.

    ReplyDelete
  12. பதிவின் இறுதியில் இன்னும் கொஞ்சம் விஷயத்தைச் சேர்த்திருக்கிறேன். ஏற்கனவே பதிவைப் படித்திருக்கும் நண்பர்கள் அதனையும் படிக்க வேண்டுகிறேன். நன்றிகள்.

    ReplyDelete
  13. // இராகவன். தமிழில் எத்தனையோ பொக்கிஷங்கள் இருக்கின்றன. விஷ்ணு சித்தரின் பாசுரங்களுக்கு எல்லாம் பொருள் எழுதிய பிறகு நம்மாழ்வாரின் பாசுரங்களுக்குப் பொருள் எழுதலாம் என்று இருக்கிறேன். பெருமாள் திருவுளம் எப்படியோ? //

    தமிழின் பின்னால் ஓடுகின்றவன்...தீந்தமிழை நாடுகின்றவன்....தமிழில் புகழ்வோரைக் கூடுகின்றவன்.....குமரனுடைய தமிழுக்கா தயங்குவான்? நிச்சயம் உங்கள் எண்ணன் ஈடேறும். அதே போல நானும் சைவத்தில் தொட வேண்டியது நிறைய உண்டு. தொடுவேன். மக்களுக்கு முடிந்த வரையில் எடுத்து விடுவேன்.

    ReplyDelete
  14. திரு. குமரன் அவர்களே மிகவும் சரி. அந்த பாசுரம்தான். உங்கள் விளக்கத்திற்கு பொருந்துமாறு சில பாசுரங்களை போட்டேன். ஏதேனும் தவறு இருந்தால் சுட்டிக் காட்டவும் திருத்திக்கொள்கிறேன்.உங்கள் பதிவை அதிகம் பேர் படிப்பதால் அவ்ர்களும் அறியவேண்டும் என்ற அவா. தி. ரா.ச

    ReplyDelete
  15. நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்
    பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச்
    சீயேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளந்
    தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ

    உங்களை 108வது பதிவில் 108வது சேஷத்திரத்தை பாட வைத்தது மாணிக்கவாசகர் சொன்னது போல்
    அந்த ஈசனைத்தவிர வேறுயாராக இருக்கமுடியும். தி. ரா. ச.

    ReplyDelete
  16. //நானும் சைவத்தில் தொட வேண்டியது நிறைய உண்டு. தொடுவேன். மக்களுக்கு முடிந்த வரையில் எடுத்து விடுவேன்.
    //

    இராகவன், நீங்கள் சைவத்தையும் கௌமாரத்தையும் மொத்தமாய் குத்தகை எடுத்து விட்டதால் தான் நான் அங்கு தயங்கித் தயங்கி நுழைகிறேன். திருவாசகமும் அபிராமி அந்தாதியும் உங்களை அறியும் முன்னரே தொடங்கிவிட்டதால் அவற்றைத் தொடர்ந்து எழுதலாம் என்று எண்ணுகிறேன். அனுமதியுண்டா? :-)

    ReplyDelete
  17. தங்கள் ஆவலுக்கு மிக்க நன்றி தி.ரா.ச. நான் தான் சொன்னேனே அந்தப் பாசுரம் மிக அற்புதமானது என்று. தவறு ஏதும் இல்லை. தொடர்ந்து உங்களுக்குத் தோன்றும் பாசுரங்களை இடுங்கள். முடிந்தால் அதன் பொருளையும் சேர்த்து எழுதுங்கள். பலருக்குப் பயன் படும்.

    ReplyDelete
  18. உண்மை தான் தி.ரா.ச. தானே தன்னைப் பாடுவித்துக் கொள்கிறான்.

    நீங்கள் கொடுத்துள்ள திருவாசகப் பாடலுக்கு நான் எழுதிய உரை இங்கே இருக்கிறது.

    http://sivapuraanam.blogspot.com/2005/10/blog-post_112847907394157692.html

    ReplyDelete
  19. // இராகவன், நீங்கள் சைவத்தையும் கௌமாரத்தையும் மொத்தமாய் குத்தகை எடுத்து விட்டதால் தான் நான் அங்கு தயங்கித் தயங்கி நுழைகிறேன். திருவாசகமும் அபிராமி அந்தாதியும் உங்களை அறியும் முன்னரே தொடங்கிவிட்டதால் அவற்றைத் தொடர்ந்து எழுதலாம் என்று எண்ணுகிறேன். அனுமதியுண்டா? :-) //

    :-))) என்ன குமரன். உலகுக்கே ஆனது உமக்கு ஆகாமல் இருக்குமா? தாராளமாக எழுதுங்கள்.

    சைவமும் கௌமாரமும் சாக்தமும் இன்று நேற்றல்ல....இரண்டாயிரம் ஆண்டுப் பொழுதில் ஒன்றாகக் கலந்தவை. ஒன்றையொன்று பிரிக்கமுடியாதவை. அவைகளில் மூழ்குவது எனக்கு பேரின்பமே. :-) நீங்களும் துணைக்கு வந்தால் இன்னும் மகிழ்ச்சியே.

    ReplyDelete
  20. // தொடர்ந்து உங்களுக்குத் தோன்றும் பாசுரங்களை இடுங்கள். முடிந்தால் அதன் பொருளையும் சேர்த்து எழுதுங்கள். பலருக்குப் பயன் படும். //

    ஆமாம். தி.ரா.ச நீங்கள் எழுதத்தான் வேண்டும். அதை நாங்களும் படிக்கத்தான் வேண்டும்.

    ReplyDelete
  21. it is really very nice.i am just making this comment just to enter yr valaipoo(I DON'T KNOW MUCH ABOUT THIS)

    ReplyDelete
  22. மிக்க நன்றி திரு. சீனிவாசன். தொடர்ந்து வந்து படித்து உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.

    ReplyDelete