'எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்; எழுத்தறிவித்தவன் இறைவன்; ஆசார்ய தேவோ பவ; மாதா பிதா குரு தெய்வம்' என்று பலவிதமாக, அறிவுக்கண் திறக்கும் ஆசிரியர்களைப் பற்றி நம் பண்பாடு சொல்கிறது. குரு வணக்கம் செய்தே எந்தக் காரியத்தையும் தொடங்க வேண்டும். ஆனால் நானோ அப்படிச் செய்யாமல் 100 பதிவு வரை எழுதிவிட்டேன். நல்ல நேரத்தில் தி.ரா.ச அவர்கள் அதனை நினைவூட்டினார். அதனால் இந்த 2006 ஆண்டு தொடங்கும் இந்த நல்ல நாளில் 100வது பதிவை என் வாழ்வில் பல நிலைகளில் எனக்கு அமைந்த ஆசிரியர்களைப் பற்றியதாக எழுதலாம் என்று எண்ணி ஆரம்பிக்கிறேன்.
அம்மாவை விடச் சிறந்த ஆசிரியர் யார் உண்டு? அன்று அந்தத் தாய் என்ன விதைக்கிறாளோ அது தானே நன்கு வேர்விட்டு பெரிய மரமாக (இந்த வார நட்சத்திரத்தைச் சொல்லலீங்க) வளர்கிறது. சின்ன வயதில் அம்மா கையைப் பிடித்துக் கொண்டு கோவில் கோவிலாகச் சென்று கந்தர் சஷ்டி கவசம் சொன்னது நினைவில் என்றும் நிற்கிறது. தமிழையும் பக்தியையும் தாய்ப்பாலுடன் சேர்த்து ஊட்டினாள். அதன் பலனைக் காணத் தான் அவள் இன்று இல்லை. தாயே நீயே துணை. தாயிற் சிறந்த கோவிலும் இல்லை.
எல்லா அப்பாக்களைப் போலவே எந்தக் குறையும் தெரியாமல் வளர்த்த அதே வேளையில் வருடத்திற்கு ஒரு முறை அவரின் அலுவலக நண்பர்களுடன் இணைந்து பல ஊர்களுக்குச் சுற்றுலா அழைத்துச் சென்று உலகத்தை சுற்றிக் காண்பித்த அப்பா அடுத்த ஆசிரியர். பழனிக்கு வருடம் மூன்று நான்கு முறை அழைத்துச் சென்று அம்மா ஊட்டிய முருக பக்தி தழைத்தோங்கச் செய்தவர். பின்னாளில் தன் மகன் பல இடங்களில் பேசுவதையும் எழுதுவதையும் கேட்டும் படித்தும் ஆனந்தக் கண்ணீர் வடித்தும் தனக்கு காயத்ரி மந்திரத்தைத் அதன் பொருளோடு மகன் சொல்லிக்கொடுத்ததும் 'தகப்பன் சாமி' என்று சொல்லி மகிழ்ந்ததும் அவன் அருள். அவர் அன்பையும் ஆசியையும் என்றும் விரும்பி நிற்கிறேன். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
ஒன்றாம் வகுப்பில் படிக்கும் போது எனக்கு 'ஊமைக் குசும்பன்' என்று பெயர் கொடுத்த ஆசிரியையை இன்னும் மறக்கமுடியவில்லை. அது வரை யாருமே என்னைத் திட்டியதில்லை. திட்டுவதென்ன, என்னைப் பற்றித் தவறாய்ச் சொன்னதில்லை. அன்று அந்த ஆசிரியை எங்களை எல்லாம் தானாகப் படிக்கச் சொல்லிவிட்டு புதிதாக வந்த இன்னொரு ஆசிரியையிடம் வகுப்பில் இருக்கும் ஒவ்வொரு குழந்தையைப் பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தார். என்னைப் பற்றி அந்த ஆசிரியை என்னச் சொல்லப் போகிறார் என்று ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு அவர் என்னை 'ஊமைக் குசும்பன்' என்று கூறி அதற்கு விளக்கமும் கூறியது மிக்க அதிர்ச்சியாக இருந்தது. அது ஒரு சிறந்த பாடமாய் அமைந்தது. நாம் நினைப்பது மாதிரியே எல்லாரும் நினைப்பதில்லை. அவரவர்கள் பார்வை அவரவர்களுக்கு அமையும் சூழ்நிலையைப் பொறுத்து அமைகிறது. அதனால் எல்லாவிதமான கருத்தையும் எதிர்நோக்க வேண்டும் என்பது மிகவும் உதவிய ஒரு பாடம்.
எங்கள் ஆரம்பப் பள்ளிக்குப் பக்கத்தில் ஒரு சின்ன பலசரக்குக் கடை இருந்தது. ஒரு வயதான தாத்தா அதை நடத்தி வந்தார். அவர் ஒரு நல்ல விஷயம் செய்து வந்தார். பள்ளியில் படிக்கும் குழந்தைகள் ஒரு பேனாவை எடுத்துக் கொண்டு வந்தால் அதில் மையை இலவசமாக ஊற்றித் தருவார். அப்போது அது ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. ஆனால் வளர்ந்தவுடன் அவரின் செய்கையின் நோக்கமும் படிப்பு என்பது நம் முன்னேற்றத்திற்கு எவ்வளவுத் தேவையானது என்பதும் நன்கு புரிந்தது. அவரால் முடிந்த அளவில் அவர் செய்ததைப் போல நம்மால் முடிந்த அளவில் மற்றவர் கல்விக்காக நாமும் செய்ய வேண்டும் என்ற ஊக்கத்தைக் கொடுத்த பாடம் அது.
பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம், திருக்குறள், திருப்பாவை, தேவாரத் திருவாசகங்கள், திவ்யப் பிரபந்தம், கந்தர் அனுபூதி, திருப்புகழ் போன்ற புத்தகங்களை வீட்டில் வைத்திருந்து அவைகளைப் படிப்பதில் எனக்கு இருக்கும் விருப்பத்தை மிகச் சிறு வயதிலேயே கண்டு அதற்கு ஏற்ற ஊக்கத்தைக் கொடுத்து, கேட்ட போதெல்லாம் என் வயதிற்கு உகந்த விளக்கங்கள் கொடுத்த என் தாய் வழிப் பாட்டி அடுத்து நினைவில் நிற்பவர். மகா பாரதம் படித்து விட்டு பல இடங்களில் புரியாமல் விவகாரமான கேள்விகளைக் கேட்டு அவரை தர்ம சங்கடத்தில் பல முறை ஆழ்த்தியது நன்றாக நினைவில் இருக்கிறது. அப்போதெல்லாம் தாத்தா வந்து வேறு எதையோ சொல்லி என் கவனத்தை மாற்றிவிடுவார். அன்று கேட்ட கேள்விகளுக்கு இன்னும் சரியான விடைகள் எனக்குத் தெரியவில்லை. அதில் ஒரு கேள்வியை ஏற்கனவே பதிவிட்டிருக்கிறேன்.
அடிக்கடி மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு வந்து நாட்கணக்கில் கதை சொல்லி 'செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்' என்பதற்கேற்ப பல விஷயங்களைச் சொல்லிப் புரியவைத்த வாரியார் சுவாமிகளை மறக்க முடியாது. பேசும் போது நடுநடுவே ஏதாவது கேள்விகளைக் கேட்டு கூட்டத்தில் இருக்கும் சிறுவர் சிறுமியர் அதற்குப் பதில் சொல்ல வேண்டும் என்று கூறுவார். சரியாகப் பதில் சொல்லும் சிறுவர்/சிறுமியருக்கு ஒரு சின்ன நூல் பரிசாகக் கொடுப்பார். அப்படிப் பல முறை அவர் கையால் சிறு நூல்களையும் அவர் ஆசிகளையும் பெறும் பாக்கியம் கிடைத்தது. ஒரு முறை என்னுடன் யார் வந்துள்ளார் என்று கேட்ட போது நான் தனியாக வந்துள்ளேன் என்று அறிந்து கண்களில் நீர் மல்க 'நானும் ஒரு வாரமாகப் பார்க்கிறேன். முதல் வரிசையில் இந்த எட்டு வயது சிறுவன் தனியாக வந்து அமர்ந்துக் கொண்டு கூட்டம் முடிந்த பிறகே போகிறான். இவன் நிச்சயமாய் முருகன் அருளால் வருங்காலத்தில் பெரிய ஆளாய் வருவான்' என்று ஆசிர்வதித்தார். அவர் ஆசி சீக்கிரம் பலிக்கும் என்று நம்புகிறேன்.
உயர்நிலைப் பள்ளியில் என் தமிழார்வத்தைக் கண்டுகொண்டு என்னில் தனிக் கவனம் செலுத்தி எனக்குத் தமிழைச் சொல்லிக்கொடுத்த தமிழாசிரியர்கள் சுரேந்திரன் ஐயாவையும் சக்திவேல் ஐயாவையும் மறக்க முடியாது. ஏழாம் வகுப்பு முதல் மூன்று வருடம் சுரேந்திரன் ஐயா எனக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்தார். அதற்கு அப்புறம் மூன்று வருடங்கள் சக்திவேல் ஐயா தமிழ் வகுப்பெடுத்தார். அன்று அவர்கள் சொல்லிக் கொடுத்தத் தமிழ் தான் இன்று இங்கு வலைப்பதிவுகளில் எழுதும் போது பெருந்துணையாக இருக்கிறது.
பத்தாம் வகுப்பில் எனக்கு கணிதம் சொல்லிக் கொடுத்த சுரேந்திரன் சார் அடுத்து நினைவில் நிற்கிறார். அவர் பல ஆன்மிகப் பெரியவர்களைப் பற்றிப் பல தமிழ் நூல்களை எழுதிப் பதித்திருக்கிறார். என்னையும் எழுதத் தூண்டியவர் அவர். அந்த வயதில் கவிதை எழுத ஆரம்பித்தேன். பாரதிதாசன், சுப்புரத்தின தாசன் (சுரதா), கண்ணதாசன் இவர்கள் வரிசையில் நானும் ஒரு பெரிய கவிஞனாய் வருவேன் என்று எண்ணிக் கொண்டு சுரேந்திர தாசன் (சுதா) என்ற பெயரிலும் இளங்கவி குமரன் என்ற பெயரிலும் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். மற்றவர் கவிதைகளை ரசிக்க ஆரம்பித்த உடன் நான் கவிதை எழுதுவது இப்போது குறைந்து விட்டது. இன்னும் நான் எழுதியவை எதையும் நூலாகப் பதிக்கவில்லை. எதிர்காலத்தில் நடக்கலாம்.
நான் உங்களிடம் பகவத் கீதை கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னவுடன் தயங்காமல் வீட்டிற்கு வா என்று சொல்லி வாராவாரம் பகவத் கீதையையும் திவ்யப் பிரபந்தத்தையும் எனக்குச் சொல்லிக் கொடுத்த, தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் வேதியியல் பேராசிரியராய் இருக்கும் திரு. வாசுதேவன் எனக்கமைந்த அடுத்த குரு. வில்லிபுத்தூர் அருகில் இருக்கும் கிருஷ்ணன் கோவிலில் இளங்கலை பொறியியல் படித்துக் கொண்டிருந்தேன் அப்போது. ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் மதுரை அருகே இருக்கும் திருநகருக்கு வந்து அவர் இல்லத்தில் அவரிடம் தமிழும் கீதையும் கற்றுக் கொண்டேன். பல முறை அந்த வாரம் மதுரைக்கு (வீட்டிற்கு) வரவேண்டாம் என்று எண்ணியிருப்பேன். அந்த வாரங்களும் தவறாமல் திருநகர் வரை வந்து செல்வேன். அவர் அடிக்கடி சொற்பொழிவு ஆற்றுவார். எனக்கும் சொற்பொழுவு ஆற்ற ஊக்கம் தந்தார்.
நட்பு என்றால் என்ன? நண்பர்கள் எங்கே இருந்தாலும் எப்படி இருக்கவேண்டும்? என்பதை நன்றாக எனக்குப் புரியவைத்தவர்கள் தற்போது குஜராத்தில் இருக்கும் என் நண்பன் குமரனும் வெர்ஜினியாவில் இருக்கும் என் நண்பன் கார்த்திகேயனும். பல விஷயங்கள் அவர்களிடம் கற்றுக் கொண்டுள்ளேன். அவற்றை எல்லாம் சொன்னால் மிக விரிவாய்ப் போய்விடும்.
வேலை பார்க்க ஆரம்பித்தப் பிறகு எத்தனையோ ஆசிரியர்கள். எனக்கு வேலை கொடுத்தவர்கள், என்னுடன் வேலை பார்த்தவர்கள், என்னிடம் வேலை பார்த்தவர்கள் என்று நிறைய பேரிடம் அவர்கள் நேரே சொல்லியும் அவர்கள் செய்வதைக் கவனித்தும் கற்றுக் கொண்டவை ஏராளம். கற்றுக் கொள்வது கடைசிக் காலம் வரை நடப்பது அல்லவா? அதனால் இனிமேல் வரப்போகும் ஆசிரியர்களையும் இப்போதே வணங்கிக் கொள்கிறேன்.
இன்னும் நிறைய பேரைப் பற்றிச் சொல்ல வேண்டும். ஆனால் பதிவு மிக விரிவாகச் செல்கிறது. அதனால் அவர்கள் பெயர்களை மட்டும் கூறிக்கொண்டு விரிக்காமல் விடுகிறேன்.
பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா, பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸர், பகவான் ஸ்ரீ ரமணர், ஸ்ரீ அரவிந்த மகரிஷி, அன்னை மிரா, ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள், ஸ்ரீ நடனகோபால நாயகி சுவாமிகள், இப்படி பல மகான்கள் எழுதியதைப் படித்தும் கேட்டும் பல விஷயங்கள் புரிந்தன.
பத்தாவது படிக்கும் போது வந்த ஒரு கனவு நினைவிற்கு வருகிறது. வீதியில் ஏதோ ஒரு பேராரவாரம். வீட்டு வாசலில் வீட்டில் இருக்கும் எல்லோரும் நின்று கொண்டிருக்கின்றனர். என்னவென்றால் ஒரு மகான் வந்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னார்கள். அவர் எங்கள் வீட்டிற்கு முன் வந்தவுடன் என்னை அறியாமல் நான் அவர் முன் சென்று நமஸ்கரிக்கிறேன். யாரோ ஒருவர் ஒரு சிறு நாற்காலியைக் கொண்டு வந்து போடுகிறார்கள். அதில் அந்தப் பெரியவர் அமர்ந்து கொண்டு கீழே விழுந்து வணங்கிக் கொண்டிருக்கும் என் தலையில் தன் கால்களை வைக்கிறார். பின்புலத்தில் கீதையின் பெருமையைப் பேசும் சுலோகத்தை ஒருவர் சொல்கிறார். கனவு கலைந்தது. அப்படி கனவில் வந்து கீதையை படி என்று சொல்லாமல் சொல்லி எனக்குப் பாத தீட்சை கொடுத்தவர் ஆசார்யர் என்று சொன்னவுடனே எல்லாருக்கும் நினைவிற்கு வருபவர்.
என்ன புண்ணியம் செய்தேனோ? சத்குரு நாதா
எத்தனை தவம் செய்தேனோ? உன் அருள் பெறவே (என்ன)
பன்னரும் வேதங்கள் படித்து உணர்ந்தாலும் உன்னருள் இல்லாவிட்டால் ஒன்றுக்கும் உதவாது (என்ன)
அவர் இவரே.
குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு
குருர் தேவோ மஹேஷ்வர:
குருர் சாக்ஷாத் பரப்ரம்ஹ:
தஸ்மை ஸ்ரீ குரவே நம:
// இவன் நிச்சயமாய் முருகன் அருளால் வருங்காலத்தில் பெரிய ஆளாய் வருவான்' என்று ஆசிர்வதித்தார்.//
ReplyDelete"ததாஸ்து".
அது அங்ஙனமே ஆகுக.
ஆசார்ய தேவோ பவ-ன்னு 100 பதிவு.
ReplyDeleteம் குமரன் ஊமைக்குசும்பன் உலக குசும்பனாயிட்டீங்க:-)
///இன்னும் நான் எழுதியவை எதையும் நூலாகப் பதிக்கவில்லை. எதிர்காலத்தில் நடக்கலாம்///
அப்படியே ஆகட்டும்.
கனவு நனவாகட்டுமம்மா
// இவன் நிச்சயமாய் முருகன் அருளால் வருங்காலத்தில் பெரிய ஆளாய் வருவான்' என்று ஆசிர்வதித்தார்.அவர் ஆசி சீக்கிரம் பலிக்கும் என்று நம்புகிறேன்.//
ReplyDelete:-)) Siva, inna adakkam paathingalla....))
Nalla Pathivu.....
Anbudan,
Natarajan
வளர்க
ReplyDeleteஆகா! அதியற்புதமான பதிவு குமரன். வாரியார் வாக்கு தமிழ் வாக்கு. அது ஏற்கனவே பலிக்கத் தொடங்கி விட்டதே! நீங்கள் செல்லுமிடமெங்கும் புகழ் பெற்று சிறந்தோங்க நானும் முருகப் பெருமானை வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன்.
ReplyDelete100வது பதிவுக்கு வாழ்த்துக்கள். உங்கள் கனவு நனவாக கந்த அருள் புரியட்டும். ஆசு முத நாற்கவியும் அட்டாவதானமும் சீர்ப்பேசும் பல்காப்பியத்தொகையும் ஓசை எழுத்து முதலாம் ஐந்திலக்கணமும் பழுத்த தமிழ் புலமை பாலித்து ஒழுக்கமுடன் இம்மை பிறப்பில் இருவாதனை அகற்றி மும்மை பெருமலங்க்கள் மோசித்து தம்மைவிடுத்து ஆயும் இறபோகம் துப்பித்து, அவனே அருளட்டும்111
ReplyDeleteகூடல்ன்னு தலைப்பு போட்டு இருக்கே.............
ReplyDeleteஅடடே நம்ம கிழம் கவி! 100 பதிவு போட்டுட்டாராமில்லே! வாரியார் குட்டு பட்ட எழுத்துக்களா!
வாசிக்கும் பேறு அடைகின்றேன். நடு வானில் நித்திரை அடைந்த அந்த பெருமானை நேரில் பார்க்க ஆசைபட்டு நிராசையானதே! தழைத்த மரத்திற்கு தண்ணீர் விட்டு வளர்த்தோரை தாய்மையோடு திரும்பி பார்க்கும் திரு.குமரன் .வாழ்க வளமோடு வாழ்த்துக்கள்!
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteகுமரன்! முதல் சதம் போட்டுட்டீங்க. வாழ்த்துக்கள். புதுவருடத்தில் நான் செய்யும் முதல் காரியமே, உங்கள் பதிவை படிப்பது தான் :-). 100 என்று வேற சொல்லி நிறைய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டீர்கள். உண்மையாகவே படித்து மகிழ்ந்தேன். புதுவருட தொடக்கமே ஒரு நல்ல விஷயங்களை படித்த திருப்தியோடு ஆரம்பிக்கிறேன். வாரியார் கையால் பரிசும், வாயால் பாராட்டும் பெற்றவரா நீங்கள். பெரிய ஆள் தாம்பா :-). அவர் கூறிய படி பெரிய ஆளாக வந்து கொண்டிருக்கிறீர்கள். மேலும் வளர இந்த நண்பனின் ஆசைகள்.
ReplyDeleteஅன்றே "ஊமை குசும்பன்" என்று கண்டுபிடித்த உங்கள் ஒன்றாம் வகுப்பு ஆசிரியருக்கு ஒரு "ஓ" போடலாம் :-)). என்ன நடா சொல்றீங்க :-))
புத்தாண்டை நன்றாக கொண்டாடுங்கள். உங்கள் குடும்பத்திற்கும், குட்டி பாப்பாவுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சீக்கிரம் இரட்டை சதம் போட வாழ்த்துக்கள்.
குமரன்,
ReplyDeleteநூறுக்கும் புத்தாண்டுக்கும் வாழ்த்துகள்.
ஊமைக்குசும்பனா?? :))
Congrats, Kumaran! கண்டிப்பா 31 Dec குள்ள 100 வந்துடும்னு எதிர்பார்த்தேன்! :)
ReplyDeleteஉங்க பழைய கவிதைகள இங்கே போடலாம் இல்ல்?
போதெல்லாம் குருபாதம் எண்ணிவந்தென்
ReplyDeleteபுண்ணியம் வேறேதும் பண்ணவில்லை
மாதவள் தானாக வந்துவிட்டாள்
மலரடி கூடத் தந்துவிட்டாள்
ஆதலால் அகிலத்தார் அறிந்திருக்க
அன்னை மீனாக்ஷீ அருள்பிறக்க
ஏது செய்திடத் தேவையில்லை
என்னாளும் குருவினை துதித்திடுக
குருவாகி உன்னுருவில் கோவிந்தன் தான் வந்து
குழலாக்கி உனை ஊதக் குயிலாக தானாக
வருநாளும் வள்ளல்சீர் வற்றாது பேசென்று
வரமருளி தன்பாதம் வைத்தானை ஏற்றருளே அன்பன் தி. ரா. ச
ஆசிகளுக்கு நன்றி ஞானவெட்டியான் ஐயா.
ReplyDeleteஅக்கா, வலைப்பதிவில் கண்ட ஆசிரியர்களைப் பற்றி எழுதினால் அதுவும் இன்னொரு முழுப் பதிவாய் வரும். பார்க்கலாம். 200ம் பதிவில் அவர்களைப் பற்றி எழுதவேண்டியது தான்.
ReplyDeleteதொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். எழுத்துகளை நூலாகப் பதிக்க எண்ணும் போது உங்கள் உதவி நிச்சயமாய்த் தேவைப்படும்; அப்போது கேட்கிறேன்.
-உலகக் குசும்பன்.
நன்றி நடராஜன். அடக்கமாய் இருக்கிறேன் என்று சொல்கிறீர்களா? இல்லை அடக்கமே இல்லை என்று சொல்கிறீர்களா? :-) கொஞ்சம் தெளிவா சொல்லுங்களே. சிவாவை வேற துணைக்குக் கூப்புடறீங்க? :-)
ReplyDeleteமிக்க நன்றி தருமி ஐயா.
ReplyDeleteமிக்க நன்றி இராகவன்.
ReplyDeleteமிக்க நன்றி தேன் துளி. உங்கள் வாழ்த்துக்கே ஒரு தனிப் பதிவு போடலாம் போலிருக்கிறதே. :-) இராகவன் இன்னும் பார்க்கவில்லையோ? அவர் விளக்கமாய்ப் பதிவு போடுவதற்குள் நீங்களே பதித்துவிடுங்களே. (ஏன் சொல்றேன்னா, எனக்கு புரிந்தும் புரியாமலும் இருக்கிறது. வெளியே சொல்லாதீங்க என்ன). :-)
ReplyDeleteவாங்க ராசா. சிங்கு. சிங்காரகுமரா. கூடல்லே கதையும் வரும்; மற்றவையும் வரும். அடுத்த முறை கதை எழுதும் போது உங்களுக்குத் தனி மடல் அனுப்பிவிடுகிறேன். இல்லாட்டி உள்ளே வந்துப் பார்த்து ஏமாந்து போறீங்களே.
ReplyDeleteபெருந்தன்மையா இளங்கவிங்கற பேரை விட்டுக்கொடுத்தா இங்க வந்து என்னையா கிழங்கவிங்கறீங்க. கொஞ்சம் கூட நன்றியே இல்லாம. சே. :-)
நான் வாரியாரை நிறைய முறை பார்த்திருக்கிறேன் செயகுமார். பரமாசாரியரைத் தான் ஒருமுறை கூடப் பார்த்தில்லை. :-(
வாழ்த்துகளுக்கு நன்றி சிங்காரகுமரன்.
குமரன்
ReplyDeleteஉங்களுகு தெரிந்திருக்கும். என் விளக்கம் என்னவாக இருக்கும் என்று கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். நான் எழுதிய சில வரிகள் கந்தர் கலிவெண்பாவில் குமரகுருபரர் அருளியது.பள்ளியில் படிக்கும்போது இவற்றில் பொருளுக்கு எழுத்துபரீட்சையும் பாடல்களுக்கு ஒப்பித்தல் போட்டியும் உண்டு.
மிக்க நன்றி சிவா. முதல் தடவை படிக்கும் போது 'இந்த நண்பனின் ஆசிகள்'ன்னு படிச்சுட்டுக் கொஞ்சம் அரண்டு தான் போனேன். :-) அப்புறம் தான் தெரிந்தது அது ஆசைகள்னு :-)
ReplyDeleteஎன்னோட ஊமைக்குசும்புகளைப் பற்றி நண்பர்களில் உங்களுக்கும் நடராஜனுக்கும் மட்டும் தானே இப்போதைக்குத் தெரியும். இராமநாதனும் இராகவனும் கொஞ்சம் கொஞ்சம் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்காங்க. :-)
நீங்க ஆரம்பிச்சு வச்சது தானே. தனியா வீட்டுப் பக்கம் வந்துராதீங்க. வீட்டுல உங்க மேல ரொம்ப கோபமா இருக்காங்க. :-) சும்மா சொன்னேன். வலைப்பதிவுகளுக்கு என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி. உங்கள் ஆதரவு தொடர்ந்து இருந்தால் சீக்கிரமே இரட்டை சதம் போட்டுவிடலாம். இன்னும் ஒரு மூணு மாசம் காத்திருங்க.
இன்ஷா அல்லாஹ்
மிக்க நன்றி இராமநாதன். புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் எப்படி இருந்தது?
ReplyDeleteஆமாம் சார். ஊமைக் குசும்பன் தான். உங்களுக்கு இன்னுமா தெரியலை?
யாருப்பா அது? என்ன சொல்றீங்க? தலைகீழா நின்னாலும் இராமநாதன் அளவுக்கு குசும்பனா வரமுடியாதா? என்னமோ போங்க.
எல்லாம் நீங்க கொடுத்த ஊக்கம் தான் கார்த்திக். என் கவிதைகளா? எங்க இருக்குன்னு தெரியாதுங்க. புதுசா இனிமே எழுதுனா பதிக்கிறேன்.
ReplyDeleteஇரண்டு பாடல்களும் அருமை தி.ரா.ச. மிக்க நன்றி. நீங்களும் பாடல்களுக்கு விளக்கம் சொல்லுங்களேன்.
ReplyDeleteகந்தர் கலிவெண்பா நான் படித்ததில்லை தேன் துளி. அதனால் அந்தப் பாடல் எனக்குத் தெரியவில்லை.
ReplyDeleteஅருமையா 'ஆசான்'களைப் பத்தி எழுதிட்டீங்க.
ReplyDelete'விளையும் பயிர் முளையிலே'ன்னு சும்மாவா சொல்லிட்டுப் போனாங்க?
நல்லா இருங்க.
இப்படிக்கு ஊமைக்குசும்பனின் அக்கா.
Dear MN Kumaran,
ReplyDeleteAsiriyargal varisaiyel, nanbanagiye ennayum serthu perumai paduthiya kumaranukku nanri ... NS Kumaran, Gujarat.
நன்றி துளசி அக்கா.
ReplyDeleteஉள்ளதைத் தானே சொன்னேன் N.S.குமரன்.
ReplyDeleteகுமரன் நல்லாயிருக்கு உலக குசும்பன்னு கையெழுத்து போட்டா.
ReplyDelete///அக்கா, வலைப்பதிவில் கண்ட ஆசிரியர்களைப் பற்றி எழுதினால் அதுவும் இன்னொரு முழுப் பதிவாய் வரும்///
தனிப்பதிவு போடுங்க குமரன்
கொஞ்ச நாள் போகட்டும் அக்கா. தனிப் பதிவு போடறேன்.
ReplyDelete'ஆன்மீக' குமரன்,
ReplyDeleteஇன்று தான் படிக்க முடிந்தது.அருமையான பதிவு. வாரியார் சுவாமிகள் வாக்கு பலிக்காமல் போகுமா? தொடர்ந்து கலக்குங்கள்.வாழ்த்துக்கள்!
நன்றி ஜோ.
ReplyDeleteVariyayarai kanda Kumara, vazhga !! Nanum oru thadavai Variyar swamigala pakka Meenakshi Amman koil ponen - ana kadaisi varisaila ninnathunala, nalla pakka mudiyala.
ReplyDeleteKumaresh
வாழ்த்துக்கு நன்றி குமரேஷ்.
ReplyDeleteகுமரன்
ReplyDeleteவாரியார் சுவாமிகள் நம்ம ஊருக்கு வந்தப்ப மதுரையில் வந்திருந்த ஒரு சிறுவனைக்குறித்து சொல்லியிருந்தார்.
அப்ப அந்த சிறுவன் நீங்க தானா?வேற யாரோவா?
அவர் நிகழ்த்திய கடைசி சொற்பொழிவு நம்ம ஊரு சொக்கர் கோவில் தான்.
இருக்கலாம் அக்கா. :-) அதே நேரத்தில் என்னை மாதிரி நிறைய சிறுவர்களை அவர் பார்த்திருக்கலாம். அதனால் வேறு எவரைப் பற்றியாவதோ பேசியிருக்கலாம். :-)
ReplyDeleteநம்ம ஊரு சொக்கர் கோவில்ன்னு நீங்க சொல்றது மதுரை மீனாக்ஷி சொக்கநாதர் கோவிலா. இல்லை வேறு ஊரில் இருக்கும் சொக்கர் கோவிலா?
இராஜபாளையம் சொக்கர் கோவில் குமரன்
ReplyDeleteநன்றி அக்கா.
ReplyDeleteஎன்னோட ஊமைக்குசும்புகளைப் பற்றி நண்பர்களில் உங்களுக்கும் நடராஜனுக்கும் மட்டும் தானே இப்போதைக்குத் தெரியும். இராமநாதனும் இராகவனும் கொஞ்சம் கொஞ்சம் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்காங்க. :-)
ReplyDeleteநமக்கும் தெரியும் நண்பரே. நண்பர் ஒருவரின் பதிவிலே நீங்கள் sureshinuk என்ற பெயரிலே சபைநாகரீகம் கெட்ட பின்னூட்டம் இட்டது உட்பட. I had a good respect for you You lost it. Anyway please do not do it again. Thanks.
அனானிமஸ் நண்பரே. இது புது விஷயமாய் இருக்கிறது. அனாமத்தாகவோ வேறு பெயரிலோ இதுவரை நான் பின்னூட்டம் இட்டதில்லை. நீங்கள் நான் தான் அந்தப் பெயரில் சபை நாகரிகம் கெட்ட பின்னூட்டம் இட்டதாக நம்பினால் ஏன் அப்படி நம்புகிறீர்கள் என்பதை தெரிவிக்கவும். முடிந்தால் உங்கள் உண்மைப் பெயரில் வந்து பின்னூட்டம் இடுங்கள். அனாமத்தாய் வந்தால் சும்மா என் பெயரைக் கெடுக்க நீங்கள் செய்யும் முயற்சி என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் உண்மைப் பெயரில் பின்னூட்டம் இட நீங்கள் விரும்பவில்லை என்றால் தனி மடலும் அனுப்பலாம்.
ReplyDeleteகுமரன் உங்களுக்கு தெரிந்த சங்கதியாக இருக்கலாம்.
ReplyDeleteபெரியவர் எங்கு சென்றாலும் நடந்துதான் போவாராம். அவருடைய பூஜை சாமான்கள் போன்றவை ஒரு ரிக்ஷாவில் கூட வருமாம்.
களைத்துப் போனால் ரிக் ஷாவை பிடித்துக் கொண்டு மெல்ல நடப்பாராம்.
அபப்டியே சாப்பாடு மதியம் வெறும் இரண்டு கவளம் ரசம் சாதம் மட்டுமே! இன்றைய தலைமைகளை நினைத்தால் ... என்ன சொல்ல? பென்சும், சுமோவும் பறக்கின்றன!
அன்பு குமரன்,
ReplyDeleteஉங்க பதிவுக்கு பின்னோட்டம் இட்டு நீண்ட நாட்களாகி விட்டது.
அருமையான பதிவு, பாராட்டுகள்.
அன்னை முதல் அனைவரையும் இங்கே சொன்ன விதம் அற்புதம்.
ஊமை குசும்பன் இன்று உலக குசும்பன் என்றாகி விட்டது, வாரியாரின் வாக்கு பலித்து விட்டது.
இன்னும் மென் மேலும் உங்கள் புகழ் பரவட்டும்.
மேலும் முன்பு நீங்க கேட்ட பிடிஎப் கோப்பு தயாரிக்க உதவும் ஒரு மென்பொருள்.
http://primopdf.com/
மேலே இருப்பதை முயற்சி செய்து பாருங்க.
அன்புடன்
பரஞ்சோதி
ஆமாம் உஷா. நானும் படித்திருக்கிறேன். காஞ்சிப் பெரியவரை நேரில் தரிசிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. கனவில் தரிசித்ததோடு சரி.
ReplyDeleteநன்றி பரஞ்சோதி. பிடிஎப் கோப்பு தயாரிக்க உதவும் மென்பொருளைப் பற்றிச் சொன்னதற்கு நன்றி. முயன்று பார்க்கிறேன். ஏதாவது கேள்விகள் இருந்தால் தனி மடல் அனுப்புகிறேன். நன்றி.
ReplyDeleteகுமரனைப்போல அப்போது வாரியார் தன்னுடைய உரை கேட்கவரும் சிறுவர்களை ஊக்குவிப்பது உண்டு. என் சகோதரன் ஒருமுறை அவர் கேட்ட கேள்விக்கு பதிலையும் பாடலையும் சொன்னதால் ஒரு சங்கிலியும் முருகனின் பதக்கத்தையும் தந்தார். அது இன்னும் அண்ணனிடம் இருக்கிறது. அதேபோல நான் படிக்கும் போது அபிராமி அந்தாதி, கந்தர் கலிவெண்பா போன்ற சமய நூல்களையும் கற்று தந்தார்கள் மாலை வேளையில். இப்போது எப்படியோ?
ReplyDeleteகுமரனின் ஆர்வம் அப்போதே வெளிப்பட்டிருக்க வேண்டும். உங்களுடைய பதிவுகளை எல்லாம் படித்துவருகிறேன். அதேபோல இராவகனின் உரையாடல்களையும். நன்றிகள் பல.
உங்கள் சகோதரர் வாரியாரிடம் பரிசும் பாராட்டும் பெற்றதை பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி தேன் துளி. அவர் இன்னும் அவைகளை வைத்திருப்பது அறிந்து மகிழ்ச்சி. நான் தான் வாரியார் கொடுத்த புத்தகப் பரிசுகளை எல்லாம் என் மற்றப் புத்தகங்களோடு சேர்த்து வைத்து இப்போது எவை அவர் கொடுத்தவை என்று தெரியாமல் முழிக்கிறேன். :-)
ReplyDeleteமதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்புகழ், தேவார திருவாசகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி மன்றம் உண்டு. அவை அந்த அந்த பக்தி இலக்கியங்களை சிறுவர்களுக்கும் விருப்பம் உள்ள பெரியவர்களுக்கும் இன்றும் கற்றுக் கொடுக்கின்றன. நான் சிறுவயதில் திருப்புகழை விரும்பிக் கற்றிருக்கிறேன் - அதன் சந்த நயத்துக்காகவும் அது முருகன் பாடல்கள் என்பதாலும். அண்மையில் மதுரைக்குச் சென்றிருந்த போது சற்று நேரம் திருப்புகழ் மன்றத்திற்குச் சென்று அவர்கள் திருப்புகழைப் பாடுவதைக் கேட்டுவிட்டு வந்தேன்.
எனது பதிவுகளையும் இராகவனின் பதிவுகளையும் தொடர்ந்து படித்து வருவதற்கு மிக்க நன்றிகள்.
தேன் துளி. உங்கள் வலைப்பூவிற்குச் சென்று பார்த்தேன். அண்மையில் (கடந்த மூன்று மாதங்களில்) நீங்கள் எழுதிய எல்லாப் பதிவுகளையும் நானும் படித்திருக்கிறேன். நல்ல பதிவுகள்.
ReplyDeleteநண்பர் குமரன் இரு பெயர்களானபோதும் ஒரே ஐபி பொய் சொல்லாது என்றபோதும் நீங்கள் கேட்ட அந்தப் பின்னூட்டத்தை இங்கு இடுவது சரியானதாகத் தோன்றவில்லை. அந்தப்பின்னூட்டமும் உங்கள் பெயரிலான வேறு பின்னூட்டமும் வெளி வந்த பதிவினை வைத்திருக்கும் என் நண்பரும் விரும்பமாட்டார் என்பதாகத் தோன்றுகின்றது. sureshinuk என்ற பெயரிலே இடப்பட்ட தரக்குறைவான பின்னூட்டம் தடுக்கப்பட்டபின்னால் test என்றொரு பதிவும் உங்கள் பெயரிலே இடப்பட்டிருக்கின்றது. உங்கள் முகவரியினை யாராவது பொய்யாகப் பயன்படுத்துகின்றனர் என்றால் அவதானமாக இருங்கள். இந்த விதயத்தை இத்தோடு விட்டுவிடுவோம்.
ReplyDeleteஅனானிமஸ் நண்பரே. இப்போது விஷயம் புரிகிறது. நான் நிறைய பின்னூட்டங்களை அலுவலகத்தில் இருந்து இடுவதுண்டு. எங்கள் அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் வேலை செய்கிறார்கள். பாதிக்குப் பாதி அதில் தமிழர்கள். அலுவலகத்தில் இருந்து வாக்களிக்க சில நேரம் முயலும் போது என்னால் முடிவதில்லை. அப்போது நினைத்துக் கொள்வேன். இன்னொருவர் தமிழ்மண வாசகராய் இருந்து வாக்களிக்கிறார் என்று. ஏனெனில் பல நிறுவனங்களில் உள்ளது போல் நான் வேலை பார்க்கும் நிறுவனமும் இரண்டு மூன்று ஐபி முகவரிகளையே பயன்படுத்துகிறது என்று எண்ணுகிறேன். ஏற்கனவே வேறு தமிழன்பர்கள் பயன்படுத்திய ஐபியே எனக்கும் கிடைத்தால் என்னால் வாக்களிக்க முடிவதில்லை என்று நினைக்கிறேன். அந்த தமிழர்களில் ஒருவர் தான் உங்கள் நண்பரின் பதிவில் அந்தப் பின்னூட்டம் இட்டிருக்க வேண்டும். அதற்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும் என்று தெரியவில்லை. அலுவலகத்தில் இருந்து தமிழ்மணம் படிக்காமல், பின்னூட்டம் இடாமல் வேண்டுமானால் இருக்கலாம்; ஆனால் அது ஒரு நல்ல முடிவாக இருக்குமா என்று தெரியவில்லை.
ReplyDeleteநான் அண்மையில் டெஸ்ட் பின்னூட்டம் இரண்டு முறை ஒரே வலைப் பதிவில் போட்டுப் பார்த்திருக்கிறேன். நீங்கள் அந்த நண்பர் பெயரை வெளியிட விரும்பாததால் நானும் இங்கும் வெளியிடவில்லை. ஆனால் எதற்காக டெஸ்ட் பின்னூட்டம் இட்டுப் பார்க்கிறேன் என்பதைத் தெளிவாக பின்னர் அதே இடத்தில் இட்டப் பின்னூட்டத்தில் விளக்கியிருக்கிறேன்.
இதற்கு மேலும் நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம். இதில் மேலும் உண்மை கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணினால் என்னை தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள். என் அலுவலகத்தைப் பற்றிய விவரங்கள் தனி மடலில் கொடுக்கிறேன். நீங்களே விசாரித்து நான் சொல்வது உண்மையா இல்லையா என்று தெரிந்து கொள்ளலாம்.
என் மேல் அபாண்டமாய் ஒரு பழி விழுவதால் இவ்வளவு விளக்கமாய் ஒரு பின்னூட்டம் இடுகிறேன். இது நான் நினைப்பது போல் அலுவலகத்தில் இருக்கும் ஒரு தமிழர் செய்வதாக இருந்தால் நான் அதனை எப்படித் தடுப்பது, எப்படிக் கவனமாய் இருப்பது, இதைப் பற்றி நான் கவலைப் படத் தான் வேண்டுமா என்று தெரியவில்லை.
நண்பரே நீங்கள் எனக்கு எதையும் நிரூபிக்கத்தேவையில்லை. இந்த விதயத்தினை உங்கள் கவனிப்புக்குக் கொண்டு வருவதே என் நோக்கு. கொண்டு வந்தேன். உங்கள் தொழிலகத்திலே தொழில் புரிகின்றவர்களினால் நீங்கள் இடருறுவதாகத் தெரிகின்றது. அது குறித்து அவதானமாக இருங்கள். பயன்பட்ட கணிப்பொறி முகவரி 161.225.129.111 என்பதாகும்.
ReplyDeleteவிதயத்தினை இத்தோடு விட்டுவிடுவோமே. உங்களுக்குச் சுற்றியே பகையிருக்கின்றதென்பதை நீங்கள் அறிய இது உதவியிருக்கின்றதென மகிழ்ச்சியடைவோம்.
உங்கள் நல்லெண்ணத்திற்கு நன்றி அனானிமஸ் நண்பரே.
ReplyDeleteநல்ல பதிவு. வாரியாரை நான் ஒரே ஒரு முறைதான் பார்த்திருக்கிறேன். ஆனால் அவரது பேச்சுக்களை அதிகம் கேட்டிருக்கிறேன். குமரன்., ஆன்மீகமோ, நாத்திகமோ நம்மை சுற்றி இருப்பவர்களாலும்., பின்னால் நாமே ஒன்றின் மீது மையல் கொண்டும் வருவது. கல்லூரி வந்தும் சமயத் தமிழைப் தேடிப் பிடித்து ஆர்வத்துடன் படித்து... நினைக்கையில் உண்மையில் வியப்பாய் இருக்கிறது. நீங்க உண்மையிலேயே மதுரைதானா? (அடிக்கவந்துராதிகப்பா... மதுரயெல்லாம்!!)., சுற்றுப்புரப் பாதிப்பை தன்னுள் திணித்துக் கொள்ளாத உங்களை., அதற்காக மட்டுமே (உங்கள் பக்தியை விட) அதிகம் வியக்கிறேன் தம்பி.
ReplyDeleteஅக்கா. உங்கள் வியத்தலுக்கு நன்றி. ஒரு வேளை வித்தியாசமாய் இருக்க வேண்டும் என்ற உந்துதலும், அதில் உங்களைப் போல் பலர் பார்த்து வியந்ததும் என்னை சமயத் தமிழில் ஆழ்த்தியிருக்கலாம் :-) ஒரு வகையில் பவ்வு மக்கள் எல்லாருமே மதுரை சுற்றுப்புறப் பாதிப்பு இல்லாமல் தான் இருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன். அதுவும் ஒரு காரணமாய் இருக்கும் :-)
ReplyDeleteநீங்கள் சொல்வது உண்மை. ஆன்மிகமோ நாத்திகமோ நம்மைச் சுற்றி இருப்பவர்களாலும் பின்னால் நாமே ஒன்றின் மேல் மையல் கொள்வதாலும் வருவது தான்.
//அருமையா 'ஆசான்'களைப் பத்தி எழுதிட்டீங்க.
ReplyDelete'விளையும் பயிர் முளையிலே'ன்னு சும்மாவா சொல்லிட்டுப் போனாங்க?
நல்லா இருங்க.
இப்படிக்கு ஊமைக்குசும்பனின் அக்கா.//
ரிப்பீட்டேய்! :)
வழிமொழிஞ்சதுக்கு நன்றி கவிநயா அக்கா.
ReplyDelete