மினியாபொலிஸுக்கும் மதுரைக்கும் உள்ள நேர வேறுபாட்டால் ஏற்பட்ட பகல் இரவு குழப்பம் இன்னும் குழந்தைகளுக்கு தீரவில்லை. மதியம் 3 மணி போல் தூங்கத் தொடங்கினால் 8 மணிக்கு எழுந்து மீண்டும் எங்களுடன் 10 மணிக்குத் தூங்குகிறார்கள். அதனால் அதிகாலை 4 மணிக்கு எல்லாம் எழுந்துவிடுகிறார்கள். நேற்றும் (ஜூலை 20) அப்படியே அதிகாலையிலேயே அனைவரும் எழுந்துவிட ஒரே நேரத்தில் நானும் துணைவியாரும் 'பேசாமல் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போய் வந்துவிடலாமா?' என்றோம். உடனே சரி என்று சொல்லி அனைவரும் குளித்துக் கோவிலுக்குச் சென்றோம்.
மதுரையின் அரசியையும் அரசனையும் காணச் செல்கிறோம் என்று தான் மகளிடம் சொன்னேன். முதலில் அவளுக்குப் புரியவில்லை; பின்னர் புரிந்து கொண்டாள். (நல்ல வேளை அஞ்சாநெஞ்சனை அவளுக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் அவரைத் தான் பார்க்கப் போகிறோம் என்று நினைத்திருப்பாள். :-) )
வீட்டிலிருந்து கோவில் பக்கம் தான் என்பதாலும் அதிகாலை நேரம் தெருவில் கூட்டம் இருக்காது என்பதாலும் நடந்தே சென்றோம். தெருவில் இருந்த குப்பைக்கூளங்களைக் கண்டு மகள் முகத்தைச் சுளித்தாள்; மூக்கைப் பொத்தினாள். மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் விளைவுகள் இவை என்று அவளுக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன்.
முன்பு கோவிலுக்கு உள்ளே ஆடி வீதியில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருப்பார்கள். இப்போது கோவிலைச் சுற்றி முழுச்சாலையையும் நடைபாதையைப் போல் தளம் பாவிவிட்டதால் அங்கே வாகனங்கள் எதையும் அனுமதிப்பதில்லை; அங்கேயே நிறைய பேர் நடைப்பயிற்சி செய்கிறார்கள். நாங்கள் சென்ற போதும் நடக்கும் பலரைப் பார்க்க முடிந்தது.
சென்ற வருடம் வந்திருந்த போது மீனாட்சி அம்மன் சன்னிதியில் நிறைய கூட்டம் இருந்ததால் சிறப்புத் தரிசனச் சீட்டை வாங்கி அம்மனைத் தரிசிக்க வேண்டியிருந்தது. இந்த முறை அவ்வளவாகக் கூட்டம் இல்லை. வேண்டும் என்ற அளவிற்கு அன்னையைத் தரிசிக்க முடிந்தது. மகளுக்கு மூன்று வருடங்களுக்கு முன்னர் மெனிஞ்சடிஸ் வந்த போது அவளைக் காப்பாற்றியவள் இந்த மீனாட்சி அன்னை தான் என்று என் மனைவி அவளுக்குச் சொன்னாள். உடனே அவள் 'எனக்குத் தெரியும். அதோ கையில் கிளியும் வைத்திருக்கிறாளே' என்றாள். சேந்தன் தான் ஒரு இடத்தில் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்தான்.
கூடல் குமரர் சன்னிதிக்கு வந்த போது 'இந்த முருகனை கார்த்திகை தோறும் வணங்கித் தான் நான் ஸ்மார்ட்டாக இருக்கிறேன்' என்று சொன்னவுடன் இரு குழந்தைகளும் விழுந்து விழுந்து கூடல் குமரரை வணங்கினார்கள். 'நானும் இப்ப ஸ்மார்ட்டாயிட்டேன்' என்றான் சேந்தன் உடனே. :-)
பார்க்கும் இடமெல்லாம் கணேசனைக் கண்டு 'கணேசா, கணேசா' என்று அவனுடைய இஷ்ட தெய்வத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டே இருந்தான் சேந்தன். இஷ்ட தெய்வம் என்று சொல்வதை விட அவனுடைய நெருங்கிய தோழன் கணேசன் என்று சொல்லலாம். அப்படிச் சொல்லிக் கொண்டே வந்தவன் முக்குறுணி விநாயகர் முன்பு வந்தவுடன் 'Biiiggg கணேசா. உன்னை மாதிரி இருக்கார் அப்பா' என்று சொல்லி விட்டான். :-)
அப்படியே சுவாமி சன்னிதிக்கு அருகில் வரும் போது கோவில் அருச்சகர் ஒருவர் அப்போது தான் கோவிலுக்கு வந்திருப்பார் போல; ஒவ்வொரு சன்னிதியாகத் தரிசனம் செய்து வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்தவுடன் சேந்தன் சௌராஷ்ட்ரத்தில் 'இவர் சிவாவைப் போலவே இருக்கிறார்' என்று பலமுறை சொன்னான். சிவா சிவா என்று சொன்னது மட்டும் அருச்சகருக்குப் புரிந்தது போலும். அவனைப் பார்த்து புன்னகை செய்து, தலையில் கைவைத்து ஆசி கூறி, அங்கிருந்த ஓவியங்களில் இருந்த சிவபெருமானைக் காட்டினார். அவன் மீண்டும் 'நீ சிவாவைப் போல இருக்கிறாய்' என்று சௌராஷ்ட்ரத்தில் சொன்ன போது எப்படியோ அது அருச்சகருக்குப் புரிந்துவிட்டது. ஆங்கிலத்தில் 'இதற்குப் பெயர் சிவ வேடம். சிவனை வணங்குபவர்கள் எல்லோரும் இப்படித் தான் இருப்பார்கள்' என்று அவனுக்கு விளக்கத் தொடங்கிவிட்டார். சேந்தனுக்கு அதெல்லாம் ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் கேட்டுக் கொண்டான்.
சுவாமி சன்னிதிக்குள் நுழைந்தால் ஒரு வியப்பு. எப்பொழுதும் அம்மன் சன்னிதியில் கூட்டம் அதிகம் இருக்கும்; சுவாமி சன்னிதியில் கூட்டமே இருக்காது. இன்று என்னடாவென்றால் அங்கே கூட்டம் இல்லை; இங்கே நல்ல கூட்டம். அதனால் 15 ரூ நுழைவுச் சீட்டு வாங்கி அருத்த மண்டபத்திற்குள் சென்று மதுரையின் அரசனைத் தரிசித்தோம். வெளியே பார்த்த அருச்சகர் அங்கே இருந்தார். அருகில் வந்து அன்புடன் சேந்தனுக்குத் திருநீறு இட்டுவிட்டார். அவளுக்கு அது கிடைக்கவில்லை என்று மகளுக்குக் கொஞ்சம் வருத்தம். நீ பெரிய பெண்; அதனால் உனக்கு கையிலேயே திருநீறைக் கொடுத்தார் என்று சொன்னேன்.
சுவாமி சன்னிதியில் இருந்து வெளியே வந்த போது வீரபத்ரருக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது; அதனை நிறைய பேர் கீழே அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். 'சாமியைக் குளிப்பாட்டுவதை நானும் பார்க்கணும்' என்று சொல்லி அமர்ந்துவிட்டான் சேந்தன். அவனை எழுப்புவதற்குள் பெரும்பாடு ஆகிவிட்டது. ஐந்து நிமிடம் சென்ற பின்னர் 'அதோ அங்கே காளி தேவி இருக்கிறாள். அவளைப் பார்க்க வேண்டும்' என்று சொன்னவுடன் எழுந்து வந்தான்.
'காளி தேவி ஏன் கோபமாக இருக்கிறாள்' என்று கேட்ட மகளுக்கு சிவனுக்கும் காளிக்கும் நடந்த ஆடல் போட்டியைப் பற்றிச் சொன்னேன். சிவனுக்கு வெட்கமே இல்லை; காளியைப் போல் அவரும் வெட்கப்பட்டுக் கொண்டு காலைத் தூக்காமல் இருந்திருக்க வேண்டும் என்றுசொன்னாள். :-) 'நான் நல்லா பரதநாட்டியம் கத்துக்கிட்டா சிவனைப் போல நானும் காலைத் தூக்கி ஆடுவேன்' என்றும் சொன்னாள். :-) அவளுடைய பெயர் காளியின் பெயர் என்று யாரோ ஒருவர் (வேறு யார்? நான் தான்) அவளிடம் சொன்னதிலிருந்து அவள் காளியின் கட்சி. காளிதேவி என்று சொன்னாலே போதும்; ஓடிச் சென்று பார்ப்பாள். ரொம்பப் பிடிக்கும்.
சேந்தனின் இன்னொரு நெருங்கிய தோழனான அனுமானைப் பார்த்துவிட்டு இன்னொரு முறை அப்பா கணேசரை (அது தான் முக்குறுணி விநாயகர்) பார்த்துவிட்டு பொற்றாமரைக்குளக்கரையில் கொஞ்சம் நேரம் செலவழித்துப் பின்னர் வீட்டிற்கு வந்தோம்.
வீட்டிற்கு வந்தவுடனே சரவணனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. உடனே கிளம்பி திருஞானம் பள்ளிக்குச் சென்றோம்.
நேற்று (20 July) இரவு தெற்கு கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்று வந்தோம். நான் அந்தக் கோவிலுக்கு மிக அருகில் இருக்கும் வீட்டில் பிறந்து வளர்ந்தவன்; ஒவ்வொரு நாளும் இரவு 8:30 மணிக்கு என்னை வேறெங்கும் தேட வேண்டாம். அந்தக் கோவிலில் தான் இருப்பேன். நாள்தோறும் அக்கோவிலில் பெருமாள் சீதேவி பூதேவியுடன் திருக்கோவிலுக்குள்ளேயே சுற்றி வரும் புறப்பாடு நடைபெறும். ஒவ்வொரு நாளும் அவருடைய திருவோலக்கத்தில் அமர்ந்து அந்த இன்பத்தில் மகிழ்ந்திருக்கிறேன். நேற்றும் அந்த வாய்ப்பு கிடைத்தது. புறப்பாட்டிற்காக ஆயத்தமாக மூவரும் அமர்ந்திருந்தார்கள். ஆனால் குடும்பமாகச் சென்றதால் எங்கே புறப்பாடு நடக்கும் வரை இருக்க இயலாதோ என்று ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் கோவில் தலைமை அருச்சகர் என்னை அடையாளம் தெரிந்து கொண்டு 'புறப்பாடு முடியும் வரையில் இருந்துவிட்டுப் போ' என்று சொல்லிவிட்டார். அத்துடன் பெருமாள் (மூலவர்) உடுத்துக் களைந்த பீதகவாடையும் (பரிவட்டம்) மாலையும் தந்தார்.
புறப்பாடு நடந்து பெருமாள் திருவோலக்கம் கண்டருளும் போது 'ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்' என்று மாணவப் பருவத்தில் இங்கே அமர்ந்து தினந்தோறும் வேண்டிக் கொண்டது நினைவிற்கு வந்தது. அப்போதெல்லாம் அடிக்கடி இக்கோவில் நிர்வாகிகளில் ஒருவர் என்னைக் கேட்பார் - 'தினமும் கோவிலுக்கு வருகிறாயே. என்ன வேண்டிக் கொள்வாய்?'. 'ஒன்றும் இல்லை' என்று சொல்வேன். ஆனால் மனத்தில் 'இதே மாதிரி என்றென்றும் உன் திருமுன் அமர்ந்து உனக்கு அடிமை செய்ய வேண்டும் என்று தானே வேண்டிக் கொள்கிறேன்' என்று நினைப்பதுண்டு. நான் வேண்டிக் கொண்டதை அவன் நிறைவேற்றாவிட்டாலும் அவன் நடத்திக் கொள்வதின் படி நாம் நடந்து கொள்வது தானே அவனுக்கு அடிமைசெய்யும் முறை என்று நேற்று எண்ணிக் கொண்டேன்.
புறப்பாடு முடிந்து கோஷ்டியும் நடந்தது. கோஷ்டியில் பிரசாதம் தந்த போது என் மனைவி என்னைப் பார்த்து ஒரு புன்னகை புரிந்தார். எனக்கும் என்ன நினைக்கிறார் என்று புரிந்தது. 'இதற்குத் தானே இங்கே வந்தாய் குமரா?' என்று கேட்டது தெரிந்தது. :-)
பின்னர் அருச்சகருடன் பேசிக் கொண்டிருந்த போது மகள் 'எனக்கு பிரசாதம் ரொம்ப பிடிச்சது. ரொம்ப நல்லா இருந்தது' என்று என்னிடம் சொன்னாள். அதனைக் கேட்ட அருச்சகர் உடனே எங்களை மடப்பள்ளிக்கு அழைத்துச் சென்று 'சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, முறுக்கு, வடை' எல்லாம் தந்தார். வீட்டிற்கு வரும் போது மனைவியார் 'உங்களை பெருமாள் இன்னைக்கு ரொம்ப நல்லா கவனிச்சுக்கிட்டார் போல' என்று சொல்லிச் சிரித்தார்.
(இரு கோவில்களிலும் எடுத்த படங்கள் இருக்கின்றன. ஆனால் பி.எஸ்.என்.எல். கருணை இல்லாததால் வீட்டில் இணையத் தொடர்பு அறுந்துவிட்டது. படங்களை வலையேற்ற முடியவில்லை. இடுகையை எழுதி முடித்துவிட்டதால் இணைய மையத்திற்கு வந்து இடுகையை மட்டும் இப்போது இடுகிறேன். படங்களை பின்னர் இடுகிறேன்...
இதோ வீட்டிலிருந்து அழைப்பு வந்துவிட்டது. இரவிசங்கர் ஆசைபட்டபடி பூரிக்கட்டை பறக்கப் போகிறது போல... :-) :-( )
//இரவிசங்கர் ஆசைபட்டபடி பூரிக்கட்டை பறக்கப் போகிறது போல... :-)//
ReplyDeleteதோடா! பழி ஓரிடம், பாவம் ஓரிடமா? :)
பூரிக்கட்டை சக்கரத்தை விட பவர்ஃபுல் - தெரிஞ்சிக்கோங்க! :)
காலை எழுந்தவுடன் கோயில், பின்பு
கதம்பக் கறியுடன் இட்லி!
மாலை முழுவதும் பதிவு - இதை
வழக்கப்படுத்திக் கொள்ளு குமரா
-ன்னு மாத்திப் பாடிக்கிட்டு இருக்கீங்களா? :)
ஊருக்குப் போயும் பதிவா? அதுவும் ராவுல எட்டு மணிக்கு? சீனா ஐயா, கொஞ்சம் இவரைத் தட்டி வையுங்க! :)
//நல்ல வேளை அஞ்சாநெஞ்சனை அவளுக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் அவரைத் தான் பார்க்கப் போகிறோம் என்று நினைத்திருப்பாள். :-) )//
ReplyDeleteசொ.செ.சூ...ஒத படாம ஊருக்கு வந்து சேருங்க! :)
//கூடல் குமரர் சன்னிதிக்கு வந்த போது//
ஓ..ஆன்மீகப் பதிவுலகப் பிதாமகர், ஆ.உ.ஆ.சூ. உங்களுக்குச் சன்னிதியே கட்டிட்டாங்களா ரசிகர்கள்? குஷ்பூவுக்கு அடுத்து குமரன் போல! :)
தாயி மீனாட்சியையும், அப்பன் சொக்கனையும் பலமுறை விசாரிச்சதா சொல்லுங்க!
ReplyDeleteசொக்கன் சன்னிதிக் கொடி மரத்தில், எங்கும் இல்லாத வழக்கமா, முருகனுக்குப் பதிலா சம்பந்தப் பெருமான் இருப்பதை மறக்காமப் பாருங்க!
வண்டிக்குளம் ஆத்தாளுக்கு வந்தனங்கள்!
அழகனுக்கும் ஆழ்வாருக்கும் என் அன்பு பேச்சுக்கள்!
பரங்குன்றத்தான் - அவனை எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கலை-ன்னு சொல்லிட்டு வாங்க!
பழமுதிர் சுவையானைச் சுவையேன், கோவமா இருக்கேன்-ன்னு அந்தச் சுட்ட பழம் கிட்ட சொல்லிட்டு வாங்க!
- குமரனை நோக்கி, குமர விடு தூது! :)
பதி எங்கிலும் இருந்து விளையாடி
ReplyDeleteபரங் குன்றில் அமர்ந்த பெருமாளே! - என்
விதி எங்கிலும் இருந்து விளையாடி
வீணாய் எனை ஆக்கிய முருகோனே!
கதிஎன்றும் தான் ஆவான்,
கருதாது இந்த மாதவியை
வதைசெய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே!
வையகத்தார் மதியாரே!
கனாத் திறம் உரைத்த காதை :)
ReplyDeleteவாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
"ஏரக முருகன்" ஏகின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்!
இன்னைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
என்னை உடையவன் எழில்முருகத் திருநம்பி
முன்னை என் கால்பற்றி, முன்றில் அம்மியின் மேல்,
நன்மெட்டி நாண் பூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்!
கந்தனுக்காகத் தான் கண்ட கனாவினை
முந்துற மாதவிப் பந்தல் பகர்ந்து என்
அந்தமும் ஆவியும் நீயே நீயெனச்
"செந்தூர்" அவனிடம் சென்று சேர்மினே!
அன்பின் குமரன்
ReplyDeleteபூரிக்கட்டை எல்லாம் ஒழி(ளி)த்து விட்டாயிற்று - மாமானார் வீட்டில் மருகனுக்குப் பூரி கூட கிடையாதாம். ஆமா - கேயாரெஸ் நோட் திஸ்.
ஆமா 5 மறுமொழி - அஞ்சும் கேயாரெஸ் தானா - என்ன அக்ரிமெண்ட் உங்க ரெண்டு பேருக்குள்ளே
ம்ம் - நானும் ஒண்ணுக்கு மேற்பட்ட மறுமொழிகள் இடப் போறேன்
நல்வாழ்த்துகள் குமரன்
நட்புடன் சீனா
அன்பின் குமரன்
ReplyDeleteமாமதுரையை அரசாளும் அரசியை, காலை 4 / 5 மணிக்குச் சென்று தரிசிப்பதில் உள்ள இன்பம் - மகிழ்ச்சி கிடைக்கக் கோடி புண்னீயம் செய்திருக்க வேண்டும்.
நடைப்பயிற்சி நன்றாகவே நடக்கிறாது
நல்வாழ்த்துகள் குமரன்
நட்புடன் சீனா
அன்பின் குமரன்
ReplyDeleteமக்ளுக்கு மீனாட்சியை அறிமுகம் செய்திருக்கும் முறை நன்று - தேஜுவினைக் காப்பாற்றியவள் என்று அவளுக்குப் புரிய வைத்தது நன்று.
காளி பக்தை ஆனதும் நல்லது தான்
நல்வாழ்த்துகள் குமரன்
நட்புடன் சீனா
அன்பின் குமரன்
ReplyDeleteசேந்தனின் தோழன் - விளையாட்டுத் தோழன் - கணேசனை எனக்கு மிகவும் பிடிக்கும் - பொறுமை சாலி - திட்டலாம் - கோபிக்கலாம் - அன்பாக மிரட்டலாம் - சேர்ந்து மகிழலாம் - இது பன்ணலன்னா ஒத வாங்குவேன்னு நான் சொல்வேன் - தங்க்ஸ் உடனே சாமிய எல்லாம் அப்படிச் சொல்லக் கூடாது என்பார்கள் - நான் அவர் சாமி இல்ல - என் நண்பன்னு சொல்வேன் - சேதனும் என் கட்சிதான் - மகிழ்ச்சி
நல்வாழ்த்துகள் சேந்தன்
நட்புடன் சீனா
அன்பின் குமரன்
ReplyDeleteஅர்ச்சகர் ஆசி வழங்கியமை நன்று
ஆலய தரிசனம் கோடி புண்ணியம்
குழந்தைகள் பெற்றோர் மாதிரியே ஆன்மிக்கத்தில் அதிக நாட்டம் கொள்வது மகிழ்ச்சியினைத் தருகிறது.
நல்வாழ்த்துகள் தேஜு - சேந்தன்
நட்புடன் சீனா
அன்பின் குமரன்
ReplyDeleteமீனாட்சி அம்மையுடன் சுந்தரேஸ்வரரைத் தரிசனம் செய்த கையோடு பெருமாளையும் தரிசனம் செய்தது - மலரும் நினைவுகளில் மூழ்கி மகிழ்ந்தது - தலைமை அருச்சகரின் நினைவாற்றல் - சிறப்புக் கவனிப்பு ( சென்ற வேலைய முடிச்சாச்சுக்கும் ) - நன்று நன்று
நல்வாழ்த்துகள் குமரன்
அன்னை மீனாட்சியின் அருட் பார்வை ஆயுள் முழுவதும் கிடைக்க பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள்.
நட்புடன் சீனா
இஷ்ட தெய்வம் என்று சொல்வதை விட அவனுடைய நெருங்கிய தோழன் கணேசன் என்று சொல்லலாம்.//
ReplyDeleteஅடடா? எனக்குப் போட்டி உருவாகிறதா?? தொடர்ந்து என்னைக் கவரும் பதிவுகளாகவே போட்டுட்டு இருக்கீங்க! :)))))) மீனாக்ஷி எப்படி இருக்கா? நல்லாப் பார்க்க முடிஞ்சதுனு எழுதி இருப்பது சந்தோஷமா இருக்கு. வாழ்த்துகள், மீனாக்ஷியைப் பார்க்க முடிஞ்சது பத்தி. மதுரையை விட்டே போயிட்டாளோனு நினைச்சேன்! ;(
மிக அருமை....மதுரையிலிருந்து எழுதுவதாலோ என்னமோ :-)
ReplyDelete//இதோ வீட்டிலிருந்து அழைப்பு வந்துவிட்டது. இரவிசங்கர் ஆசைபட்டபடி பூரிக்கட்டை பறக்கப் போகிறது போல... :-) :-( ) //
ReplyDeleteமதுரை என்றாலே இதெல்லாம் .... நடக்குமோ !
:)
இடுகையில் படங்களை இணைத்திருக்கிறேன்.
ReplyDelete//கோவி.கண்ணன் said...
ReplyDeleteமதுரை என்றாலே இதெல்லாம் .... நடக்குமோ !
:)//
ஏன் நாகைப்பட்டினத்தில் மட்டும் நடக்காதாக்கும்? :)
கேள்வி கேட்கும் முன், உங்க விழுப்புண்களை எண்ணிப் பாத்த்துக்கோங்க! :)
//cheena (சீனா) said...
ReplyDeleteபூரிக்கட்டை எல்லாம் ஒழி(ளி)த்து விட்டாயிற்று - மாமானார் வீட்டில் மருகனுக்குப் பூரி கூட கிடையாதாம். ஆமா - கேயாரெஸ் நோட் திஸ்//
அடப் பாவமே! என்ன சீனா சார் சொல்றீக? மதுரையில் பூரிப் பஞ்சமா?
சுறுசுறு பூரி எங்கே?
சூடான பூரி எங்கே?
விறுவிறு குருமா எங்கே?
வாசனை எங்கே எங்கே?
உருளையின் கிழங்குப் புட்டு
உசுப்பிடும் தக்காளி சட்னி
மருதையில் காட்டி அருள்செய்
மயிலேறு கந்த வேளே!!
//
ReplyDeleteஆமா 5 மறுமொழி - அஞ்சும் கேயாரெஸ் தானா - என்ன அக்ரிமெண்ட் உங்க ரெண்டு பேருக்குள்ளே
ம்ம் - நானும் ஒண்ணுக்கு மேற்பட்ட மறுமொழிகள் இடப் போறேன்//
அப்பாடா! சீனா சார் பொறுப்பு எடுத்துக்கிட்டாரு! இனி நம்ம வேலை மிச்சம்! மீ தி எஸ்கேப்! வேர் இஸ் மை டீப் ப்ரவுன் பூரி?
அன்பின் குமர
ReplyDeleteகேயாரெஸ் has gone for the deep brown poory - கவலையை மறந்து இடுகை இடுக !
படங்கள் அருமை
நல்வாழ்த்துகள் குமர
நட்புடன் சீனா
அன்பின் குமர
ReplyDeleteகேயாரெஸ் has gone for the deep brown poory - கவலையை மறந்து இடுகை இடுக !
படங்கள் அருமை
நல்வாழ்த்துகள் குமர
நட்புடன் சீனா
மதுரையம்பலம் ஏகிய குமரன் குடும்பத்தாரின் களிப்பு இந்தப் பதிவினால் எங்களுக்கும் பரவிய உவப்பு!
ReplyDeleteமதுரைக் கோயிலில் மீனாட்சியைக் காணச் செல்லும் வழியில் ஒரு இஸ்லாமியர் சாம்பிராணிச் சேவை செய்து கொண்டிருப்பாரே! அவர் இன்னமும் இருக்கிறாரா!
பிறர் சாதம் பெற உணவிட்டவருக்குப் பிரசாதம் கிடைப்பதில் வியப்பேது!
உங்களுக்கு எழுதத் தெரியுமா... பேசத்தெரியுமா என்று என்னைக் கேட்டால்.... நன்றாகப் படிக்கத் தெரியும் என்று சொல்வேன் நான். சரிதானே!
பூரி பறந்தால் கவ்வலாம். பூரிக்கட்டை பறந்தால்... எதற்குப் பின்னாலாவது பவ்வலாம்...
பின்னூட்டம் இட்டவர்கள் அனைவருக்கும் - பதில் சொல்ல நிறைய நாட்கள் ஆகிவிட்டன; மன்னிக்கவும்.
ReplyDeleteகூடல் குமரர் சன்னிதியைப் பத்தி ஏற்கனவே கூடல்ல எழுதியிருக்கிறேன்னு நினைக்கிறேன் இரவி. அருணகிரிநாதர் பாடிய மதுரைத் திருப்புகழ் பாடல்கள் எல்லாமே இந்த கூடல் குமரர் மேல் பாடியவைன்னு சொல்லக் கேட்டிருக்கிறேன். மீனாட்சி அம்மன் சன்னிதியில் இரண்டாம் பிரகாரத்தில் இருக்கும் முருகன் சன்னிதி.
ReplyDeleteஇது வரை கொடிமரத்தில் சம்பந்தர் இருப்பதைக் கண்டதில்லை. நீங்கள் சொன்னதைப் பார்த்துவிட்டு ஊருக்குத் திரும்பும் முதல் நாள் கிடைத்த கொஞ்ச நேரத்தில் சுவாமி சன்னிதிக்கு மட்டும் சென்று பார்த்தேன். நீங்கள் சொன்னதைத் தேடிப் பிடிக்க முடியவில்லை. :-(
வண்டிக்குளம் இல்லை; வண்டியூர் தெப்பக்குளம். நானும் என் மாமனாரும் அந்தப் பக்கம் வங்கிக்குச் செல்லும் போது அப்படியே போய் மாரியம்மனைத் தரிசித்து வந்தோம். குடும்பத்துடன் செல்ல இந்த முறை வாய்ப்பில்லாமல் போனது.
பழமுதிர்ச்சோலைக்கும் செல்ல முடியவில்லை. மற்றவர்கள் அழைத்துத் தரிசனம் தந்தார்கள்.
ஒன்றுக்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் இட்ட சீனா ஐயாவிற்கும் நன்றி. :-)
ReplyDeleteகுழந்தைகளுக்கு ஆன்மிகத்தை விளையாட்டாகத் தான் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். கடவுளிடம் பயம் இல்லை அவர்களுக்கு. பக்தி இருக்கிறதா என்று தெரியாது. ஆனால் பாசம் உண்டு. :-)
இன்று கண்ணன் பிறந்த நாள் என்று சொன்னதால் சேந்தனுக்கு கேக் வேண்டும் என்று கேட்டிருக்கிறான். நல்ல பிள்ளையாக இருந்தால் கண்ணன் உனக்கு கேக் தருவான் என்று சொல்லியிருக்கிறேன். மகளுக்குக் கண்ணனிடமிருந்து கேக் வேண்டாமாம். லட்டும் சமோசாவும் வேண்டுமாம். :-)
வாங்க கீதாம்மா. அடடா. எது பிடித்தது; எது கவர்ந்தது என்று சரியாகத் தெரியவில்லையே. தெரிந்தால் அதனையே தொடர்ந்து எழுதுவேனே! :-)
ReplyDeleteமீனாட்சிக்கென்ன? ரொம்ப நல்லா இருக்காங்க! ராஜா வேஷம் போட்டாலே கோட்டைக்குள்ள உக்காந்துக்க வேண்டியது தானே! அதான் திருப்பதி மாதிரி ராணி இவளைச் சுத்தியும் கம்பியா போட்டு வச்சுட்டாங்க.
மௌலி. அப்படி என்ன நல்லா இருந்ததுன்னு சொல்லுங்க. மினியாபொலிஸ்லயும் அப்படி எழுத முடியுதான்னு பாக்கணும்ல. :-)
ReplyDeleteகண்ணன். நான் வந்து பதில் சொல்றதுக்குள்ள கண்ணபிரான் வந்து சொல்லிட்டாரு! :-)
ReplyDeleteநீங்க சொல்றது எந்த இடம் இராகவன்? மதுரையில் சாம்பிராணிப் புகை போடும் இஸ்லாமியர்கள் பலரை இப்போதும் பார்க்க முடிந்தது; ஆனால் கோவிலின் அருகில் இல்லை. இன்னும் இருக்கலாம் - என் கண்ணில் படவில்லை.
ReplyDeleteஇப்படி எழுதுவது இயற்கையாகவே வருமா? இல்லை எழுதும் போது கொஞ்சம் முயன்று எழுதுவீர்களா? :-) எதுகை மோனை எல்லாம் எனக்கு முயன்றால் தான் வரும்! :-)
மதுரை, மதுரை தான்.மதுரையில் பிறந்து வளர்ந்தாலும் பிறர் மூலம் பார்த்தால் மகிழ்வுதான்--மதுரை பத்மா (மாதேஸ்வரன்மதுரை பிளாக்.காம்)
ReplyDeleteவாங்க மதுரை பத்மா. வருகைக்கு நன்றி.
ReplyDelete