என் அப்பாவின் முதலாண்டு நினைவு நாளுக்காக இப்போது மதுரைக்கு வந்திருக்கிறேன். அப்பாவின் மறைவுக்குச் சென்ற ஆண்டு வரும் போது நான் மட்டும் வந்தேன். இந்த முறை மனைவியும் குழந்தைகளும் வந்திருக்கிறார்கள்.
சனிக்கிழமை மினியாபொலிஸிலிருந்து கிளம்பி ஞாயிறு இரவு 11:30 மணிக்குச் சென்னை வந்து சேர்ந்தோம். சென்னையில் பெரியம்மா வீட்டில் தங்கியிருந்த என் பாட்டி (அம்மாவின் அம்மா) அங்கு எங்களுடன் சேர்ந்து கொண்டார். அனைவரும் திங்கள் காலை மதுரை வந்து சேர்ந்தோம்.
அப்பா இருக்கும் வரையில் அவரை சென்னைக்குக் கூட விமானத்தில் அழைத்துச் செல்லவில்லை என்பது சென்ற வருடம் அவர் மறைவுக்குப் பின்னர் தான் உறைத்தது. அதனால் அப்போதே சென்னை செல்ல வேண்டும் என்று சொன்ன பாட்டியை விமானத்தில் அழைத்துச் செல்லலாம் என்று விமானச்சீட்டையும் வாங்கிவிட்டேன். ஆனால் நெருங்கிய உறவினர் ஒருவர் மறைந்ததால் அப்போது அவரால் சென்னைக்கு விமானத்தில் என்னுடன் வர இயலவில்லை. இப்போது கேட்டதில் 'இன்னும் இரண்டு நாட்களில் மதுரைக்குச் செல்லலாம் என்று இருக்கிறேன். நீ அழைத்துப் போனால் வருகிறேன்' என்று சொல்லிவிட்டார். உடனே அவருக்கும் பயணச்சீட்டு வாங்கி விமானத்தில் அழைத்து வந்துவிட்டேன். என் மகிழ்ச்சிக்காக விமானத்தில் வந்ததாக அவர் சொன்னாலும் அவருக்கும் அதில் மிக்க மகிழ்ச்சி தான் என்று நினைக்கிறேன்.
பயணக்களைப்பாற்றுவதில் முதல் நாள் சென்றது. இரண்டாவது நாளான இன்று (20 ஜூலை 2010) மதுரை சந்தைப்பேட்டையில் இருக்கும் Dr. T. திருஞானம் துவக்கப் பள்ளிக்குச் சென்றோம். அங்கே படிக்கும் சிறுவர் சிறுமியர் நூற்றிப் பதினெட்டுப் பேருக்குச் சீருடைகள் தரும் விழா நடைபெற்றது. மூத்த பதிவர் சீனா ஐயாவின் உறுதுணையால் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய முடிந்தது.
ஒரு மாதம் முன்பாக சீனா ஐயாவைத் தொடர்பு கொண்டு இந்த முறை மதுரை வரும் போது இந்த மாதிரி சிறு உதவிகள் செய்ய விரும்புகிறேன் என்று சொன்னவுடன் மிகுந்த ஊக்கத்துடன் பல பள்ளிகள், நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு அனைத்து ஏற்பாடுகளையும் ஐயா செய்யத் தொடங்கினார். இந்தத் துவக்கப்பள்ளியில் ஏழைக்குழந்தையர் நிறைய பேர் படிக்கிறார்கள். அவர்களில் 118 பேரைத் தேர்ந்தெடுத்துச் சீருடைகள் வழங்கலாம் என்றும் அதற்கு எவ்வளவு தொகை ஆகும் என்றும் ஐயா இருவாரங்களுக்கு முன்னர் சொன்னார். செய்யலாம் என்று சொன்னவுடன் உடனே குழந்தைகளின் அளவுகளை எல்லாம் எடுத்து சீருடைகளைத் தைக்கச் சொல்லிவிட்டார். ஜூலை பதினைந்தாம் தேதி பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் விழா இந்தப் பள்ளியில் நடைபெறும் போது ஒரு பத்து மாணவர்களுக்கு மட்டும் சீருடைகள் எங்கள் சார்பில் வழங்கினார். நாங்கள் மதுரைக்கு வந்த பின்னர் இன்று மீதி இருக்கும் நூற்றி எட்டு மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கினோம்.
பத்து மணிக்குப் பள்ளிக்கு வந்து சேருகிறோம் என்று சீனா ஐயாவிடம் சொல்லியிருந்தோம். ஏற்பாடுகளைக் கவனிக்க ஐயாவும் அவரது துணைவியார் மெய்யம்மை அம்மாவும் ஒன்பதரைக்கே பள்ளிக்குச் சென்றுவிட்டனர். அவர்கள் சென்று சேர்ந்ததும் பள்ளித் தலைமையாசிரியர் சரவணன் அவர்கள் தொலைபேசி நாங்கள் வரும் நேரத்தை உறுதி செய்து கொண்டார். மாணவர்களை காக்க வைக்கக் கூடாது என்று எண்ணியிருந்ததால் உடனே கிளம்பி சரியாகப் பத்து மணிக்குப் பள்ளிக்குச் சென்றோம்.
நாங்கள் சென்ற சிறிது நேரத்தில் அனைத்து மாணவர்களையும் கூடத்தில் கூட்டி நிகழ்ச்சியைத் தொடங்கினார்கள். சீனா ஐயாவைப் பேச அழைத்த போது 'நான்கு நாட்கள் முன்னால் தான் நான் பேசினேன். மீண்டும் பேசினால் உங்களுக்குப் போரடிக்கும். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையும் தமிழாசிரியையும் ஆன என் துணைவியார் பேசுவார்' என்று சொல்லி அமர்ந்துவிட்டார்.
அம்மாவும் குழந்தைகளுக்கு ஏற்றபடியான அறிவுரைகளுடன் அழகாக சில நிமிடங்கள் பேசினார். அவரது தமிழ்ப்பேச்சழகு அதற்குள் பேசி முடித்துவிட்டாரே என்று எண்ணும் படி இருந்தது.
என்னையும் பேச அழைக்க 'எனக்கு எழுதத் தெரியும். பேசத் தெரியாது' (அப்படியா? என்று ஒரு குரல் மனத்தில் அப்போது கேட்டது. அப்புறம் தான் தெரிந்தது அது என் மனைவியின் குரல் என்று. :) ) என்று சொல்லிவிட்டு மாணவர்களுடன் நேரடியாகச் சில வார்த்தைகள் பேசினேன். நான் கேட்கவும் அவர்கள் பதில் சொல்லவும் ஆக சில நிமிடங்கள் சென்றன.
பின்னர் சீருடைகளை வழங்கும் போது சேந்தன் தான் வழங்க வேண்டும் என்று விரும்பியதால் நான்கைந்து மாணவர்களுக்கு மட்டும் நான் வழங்கிவிட்டு மற்றவர்களுக்குச் சேந்தன் வழங்கினான்.
அனைத்து மாணவர்களுக்கும் சீருடைகள் வழங்கிய பிறகு சீனா ஐயா தலைமை மேலாளராகப் பணி புரியும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலம் அங்கே படிக்கும் எல்லா மாணவர்களுக்கும் (ஏறக்குறைய ஐநூறு பேர்) குறிப்பேடும் (நோட்டுப் புத்தகம்) எழுதுகோலும் சீனா ஐயாவும் மெய்யம்மை அம்மாவும் வழங்கினார்கள். அப்போது சேந்தனும் அவர்களுக்கு உதவியாக சில மாணவர்களுக்கு அவற்றை வழங்கினான்.
தொடர்புடைய இடுகைகள்: பாட்டி படித்த பள்ளி, கண்ணிழந்தார்க்கு ஒரு கைவிளக்கு...
அண்ணா
ReplyDeleteசேந்தன் எவ்வளவு பெரிய பையன் ஆயிட்டான்!! :)
கொத்ஸ் என்ன கிண்டலா? புதுசா 'அண்ணா'ன்னு எல்லாம் கூப்புடுறீங்க?
ReplyDeleteஆமாம் கொத்ஸ். சேந்தன் பெரிய பையன் ஆயிட்டான். உங்க வீட்டுக் குட்டிப் பாப்பாவும் இப்ப வளர்ந்திருப்பாளே! :-)
பகிர்வுக்கு நன்றி !
ReplyDelete//அப்பா இருக்கும் வரையில் அவரை சென்னைக்குக் கூட விமானத்தில் அழைத்துச் செல்லவில்லை என்பது சென்ற வருடம் அவர் மறைவுக்குப் பின்னர் தான் உறைத்தது//
பலருக்கும் உறைத்து உடனடியாக அவர்கள் செயல்படுத்துவார்கள்.
என் விசயத்தில் அது காலம் கடந்துவிட்டது. அதனால் தான் மிகவும் வயதான பாட்டியையாவது விமானத்தில் காலம் கடப்பதற்குள் அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்ற ஆசை.
ReplyDelete(நீங்க வந்தாலே காலம் காலம்ன்னு ஒரு நிமிடத்திற்கு எத்தனை காலம் வருகிறது பாருங்கள். :-) )
/குமரன் (Kumaran) said...
ReplyDeleteநீங்க வந்தாலே காலம் காலம்ன்னு ஒரு நிமிடத்திற்கு எத்தனை காலம் வருகிறது பாருங்கள்./
:)))
இடுகையின் வாயிலாக தங்களையும் சேந்தனையும் பார்க்க முடிந்தது
பகிர்வுக்கு நன்றிங்க
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்..அவன் யாருக்காக கொடுத்தான்.
ReplyDeleteஒருத்தருக்கா கொடுத்தான்..இல்லை ஊருக்காகக் கொடுத்தான்.
http://www.youtube.com/watch?v=1rAYHJIACaY
என்னும் பாடல் நினைவுக்கு வந்தது.
சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
அலுவலகத்தில் இருந்து கிளம்பும் வேளையில் இடுகையைப் பார்த்ததால் படங்களையும் மேலோட்டமாகவும் படித்துச் சென்றேன்.
ReplyDelete*****
ஏழை மாணவர்களுக்கு சீருடை வழங்கிய செயல் பாராட்டத்தக்கது.
உங்களுடன் உங்கள் இல்லத்தினர், குழந்தைகளையும் முதல் முறையாக படங்களின் வழியாக பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
பாராட்டுக்கள் குமரன்.
ReplyDeleteநல்ல காரியம் செய்திருக்கிறீர்கள் குமரன்...வாழ்த்துக்கள். பெங்களூர் விஜயத்திற்கான தேதிகள் முடிவாகிவிட்டதா?...
ReplyDeleteஅப்பாவின் முதலாண்டு நினைவில் நிறைவான பணி இது!
ReplyDeleteஏதோ நன்கொடை என்று ஒப்புக்குத் தாராமல், சிறுவர்களின் தேவை அறிந்து அதைச் செய்து கொடுக்கும் போது, கைங்கர்யம் சிறக்கிறது!
அதையும் நம் வீட்டுக் குழந்தைகளின் முன்னர் செய்யும் போது, ஓரளவு வசதியான வீட்டில் பிறந்ததால் இல்லாமை பற்றித் தெரியாது இருக்கும் குழந்தைகள்... இல்லாதார்/இல்லாமை என்றால் என்ன என்பதைக் கண் முன்னே பார்க்கும் வாய்ப்பு கிட்டுகிறது!
இது பிஞ்சு மனங்களில் கருணையை விதைக்கும்! உலகின் பால் அனுசரணையைத் தூவும்!
ஆலய உண்டியலில் போடும் போது, குழந்தைகள் அவ்வளவாக உணர்வதில்லை! ஆனால் இதை நிச்சயம் உணரப் பெறுவார்கள் என்று எந்தப் பதிவிலோ சொன்ன ஞாபகம்! அதைப் புகைப்படத்தில் பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சி! :)
முருகனருள் முன்னிற்க நீடூ பீடு வாழ்க, சேந்தன் & தேஜஸ்வினி!
//என்னையும் பேச அழைக்க 'எனக்கு எழுதத் தெரியும். பேசத் தெரியாது'//
ReplyDelete:)
//(அப்படியா? என்று ஒரு குரல் மனத்தில் அப்போது கேட்டது. அப்புறம் தான் தெரிந்தது அது என் மனைவியின் குரல் என்று. :)//
அண்ணி எதுக்கு புன்னகைச்சாங்க தெரியுமா?
"பேசத் தெரியாது" என்று சொன்னதற்கு அல்ல!
"எனக்கு எழுதத் தெரியும்" என்று சொன்னதற்காக! :))
//அம்மாவும் குழந்தைகளுக்கு ஏற்றபடியான அறிவுரைகளுடன் அழகாக சில நிமிடங்கள் பேசினார். அவரது தமிழ்ப்பேச்சழகு அதற்குள் பேசி முடித்துவிட்டாரே என்று எண்ணும் படி இருந்தது//
ReplyDelete//மாணவர்களுடன் நேரடியாகச் சில வார்த்தைகள் பேசினேன். நான் கேட்கவும் அவர்கள் பதில் சொல்லவும் ஆக சில நிமிடங்கள் சென்றன//
ஆகா! சீனா ஐயா, அம்மா, நீங்க பேசினது எல்லாம் ஒலிக்கோப்பு செய்திருக்கலாமே!
சின்ன பசங்க உங்க கிட்ட என்ன பேசினாங்க என்பதைச் சொல்லுங்க!
"பெரிய பையன்" சேந்தன் இஸ் கலக்கிங்ஸ்! :)
குழந்தையையும் உங்களுடன் சேர்த்துக் கொண்டது மிக மிக நல்ல விஷயம். குமரன்! மீண்டும் சென்னை வருவீங்களா? ஒரு மீட்டிங் போட்டுடலாம்.
ReplyDeleteமகிழ்ச்சி திகழ். எழுத வந்த தொடக்கத்தில் என் படம் பதிவு முகப்பில் இருந்தது. பின்னர் காலக் கொடுமையால் படத்தை நீக்க வேண்டும் என்று நினைத்த போது என் படத்தை விடப் பொருத்தமாக இருக்கும் என்பதால் தமிழன்னை படத்தை இட்டேன். அதுவே இன்றும் தொடர்கிறது. அன்றிருந்த நிலை இன்று மாறிவிட்டது என்றொரு நம்பிக்கை இப்போது தோன்றியிருக்கிறது. அதனால் தான் துணிந்து குடும்பத்தினர் அனைவரும் இருக்கும் படங்களை இடத் தொடங்கிவிட்டேன். :-)
ReplyDeleteநண்பர்கள் பலருக்கும் என் படத்தைப் பார்ப்பது இதுவே முதன்முறையாக இருக்கும்.
அடடா. மிகவும் அருமையான பாடல் சுப்பு ரத்தினம் ஐயா அது. காந்தியடிகளின் தருமகருத்தா கொள்கையின் படி அமைந்த பாடல் என்று சொல்லலாம். என் முன்னோர்களில் ஒருவரான, மதுரைக் காந்தி என்றும் அரிசனங்களின் தந்தை என்றும் பெயர் பெற்ற நாட்டாண்மை மல்லி. திரு. என்.எம்.ஆர். சுப்புராமன் அவர்கள் அக்கொள்கையின் படியே வாழ்ந்தார் என்று அறிந்துள்ளேன். உழைத்துக் கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதி ஊருக்காக என்று தானே வள்ளுவமும் சொல்கிறது; வடமொழிச் சாத்திரங்களும் சொல்கின்றன. தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை என்ற குறள் நினைவிற்கு வருகிறது உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்தவுடன். ஆறில் ஒரு பங்கு அரசுக்கு, ஒரு பங்கு முன்னோர் நினைவு பேணுதற்கு, ஒரு பங்கு தெய்வத்தைப் பேணுதற்கு, ஒரு பங்கு விருந்தோம்பலுக்கு, ஒரு பங்கு சுற்றத்தாரை பேணுதற்கு, கடைசி ஒரு பங்கு தனக்கு என்பது சாத்திரங்கள் சொல்லும் பகுப்பு.
ReplyDeleteவிருந்தும் சுற்றமும் பெறும் பங்கில் ஒரு பங்கு இங்கே ஊருக்காக என்று தரப்படுகிறது. அது நம் கடன்.
இந்தப் பாராட்டை உங்கள் பின்னூட்டத்தில் எதிர்பார்த்தேன் கோவி.கண்ணன். காணாமல் ஒரு நொடி மனம் துணுக்குற்றது. ஒரு வேளை ஏதேனும் தவறாக எழுதிவிட்டேனோ என்று எண்ணி ஒரு முறை எழுதியதைப் படித்துப் பார்த்தேன். :-)
ReplyDeleteடிஸ்கி (மற்றவர்களுக்காக): பாராட்டிற்காக இதனைச் செய்யவில்லை; எழுதவில்லை. ஆனால் இந்த மாதிரி நற்செயல்களைப் பற்றி யாராவது எழுதினால் அங்கெல்லாம் தவறாமல் கோவி.கண்ணனின் பாராட்டு இருக்கும். அப்படி பாராட்டுவது அவரது வழக்கம். இது அவரது பின்னூட்டத்தில் இல்லாதது தான் வியப்பாக இருந்தது. :-)
நன்றி செல்வநம்பி ஐயா.
ReplyDeleteநன்றி மௌலி. பெங்களூர் வருகைத் தினங்களைப் பற்றி என் மின்னஞ்சலிலேயே சொல்லியிருக்கிறேனே. அந்த நாட்களில் எந்த மாற்றமும் இல்லை. யாரைப் பார்க்க எப்போது செல்கிறேன் என்பது தான் இன்னும் திட்டமிடப்படவில்லை. பெங்களூர் வந்த பின்னர் தான் அனைவரையும் தொடர்பு கொண்டு அத்திட்டத்தை வகுக்க வேண்டும்.
ReplyDeleteஇல்லாமை பற்றி தெரியாத குழந்தைகள் இதனால் இல்லாமையை குறைந்த பட்சம் கண்ணாலாவது பார்த்து கொஞ்சமேனும் உணர்கிறார்கள் என்பது உண்மை தான் இரவி. அதனால் தான் நாங்கள் மட்டும் செல்லாமல் குழந்தைகளையும் அழைத்துச் சென்றோம். நடப்பது என்ன என்று சேந்தனுக்குப் புரியவில்லை என்று நினைக்கிறேன் - ஏதோ மற்ற குழந்தைகளுடன் பழகுவதற்கு ஒரு வாய்ப்பு என்பதைப் போல் ஒவ்வொரு குழந்தைக்கும் சீருடை வழங்கும் போது அந்தக் குழந்தையின் கண்ணையே பார்த்துக் கொண்டு புன்சிரிப்புடன் நட்பாக வழங்கிக் கொண்டிருந்தான். என்ன கொடுக்கிறோம் என்று கூட அவனுக்குத் தெரியாது. மேடையில் உட்கார்ந்த சிறிது நேரத்திலேயே அங்கிருந்த குழந்தைகளைப் பார்த்து புன்னகை புரிந்து அவர்களும் புன்னகை புரிந்து என்று ஒரு மனதளவில் ஒரு நட்பான சூழல் அவனுக்கு ஏற்பட்டுவிட்டது. அது மகிழ்வாக இருந்தது.
ReplyDeleteமகளுக்கு இவர்கள் ஏழைக் குழந்தைகள் என்பதும் தனது நல்லூழ் எப்படி அமைந்திருக்கிறது என்பதும் புரிந்திருந்தது. அது அவளுக்குக் கொஞ்சம் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியதோ என்று கூட தோன்றுகிறது. தம்பியைப் போல் நீயும் சிலருக்குக் கொடு என்று சொன்ன போது மறுத்துவிட்டாள். வற்புறுத்தியதில் ஒரே ஒரு மாணவிக்கு மட்டும் கொடுத்தாள். ஏன் என்று நிகழ்ச்சிக்குப் பின்னர் கேட்ட போது 'எனக்கு வெட்கமாக இருந்தது' என்று சொன்னாள். மேலும் துருவிக் கேட்டதில் 'துணியைப் பெற்றவர்கள் எல்லோரும் ஏழைகள் இல்லை. சில குழந்தைகள் அழகான புதுத்துணி அணிந்திருந்தார்கள்' என்று சொன்னாள். அதுவே அவளது மன நிலையைக் கொஞ்சம் காண்பிக்கிறது என்று நினைக்கிறேன். நாளை இன்னொரு பள்ளிக்குச் செல்கிறோம். அங்கே தருவாயா என்று கேட்டதற்குப் பதில் இல்லை.
//அண்ணி எதுக்கு புன்னகைச்சாங்க தெரியுமா?
ReplyDelete"பேசத் தெரியாது" என்று சொன்னதற்கு அல்ல!
"எனக்கு எழுதத் தெரியும்" என்று சொன்னதற்காக! :))//
உண்மையைச் சொன்னால் ஒரு முறை இல்லை இரண்டு முறை 'அப்படியா?' என்று கேட்டது. :-) ஒன்று 'எனக்கு நன்கு எழுதத் தெரியும்' என்று சொன்னதற்கு. மற்றொன்று 'பேசத் தெரியாது' என்று சொன்னதற்கு. பின்னர் கேட்ட போது, 'நல்லா பேசினீங்க. இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம். குழந்தைங்க எல்லாம் நல்லா உங்க கிட்ட இன்டராக்ட் பண்றப்ப டக்குன்னு நிறுத்திட்டீங்க' என்றார்கள். 'அவ்வளவு தானா? ஒன்றும் சொதப்பவில்லையா?' என்றதற்கு, 'ரெண்டு பொய் மட்டும் சொன்னீங்க' என்று சிரித்தார்கள். :-)
ஒலிக்கோப்பா? செஞ்சிருக்கலாம் தான். இது வரை என் பயணங்களைப் பற்றி எல்லாம் எழுதியது இல்லை. இதுவே முதன்முறை. இவ்வளவு படங்கள் கிடைத்ததே பெரிதாக எண்ணுகிறேன். பள்ளி ஆசிரியர் ஒருவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை எடுத்துத் தள்ளிவிட்டார். அவற்றில் சிலவற்றைத் தான் வலையேற்றியிருக்கிறேன்.
ReplyDeleteஎன்ன பேசினேன் என்பது மறந்துவிட்டது இரவி. திட்டமில்லாமல் பேசியதால். பள்ளித் தலைமையாசிரியர் சரவணனும் ஒரு பதிவர். அவரது பதிவிற்குச் சுட்டியை இடுகையில் தந்திருக்கிறேன். அவர் இந்த இடுகையைப் படித்தால், பின்னூட்டம் இட்டால், நான் பேசியது நினைவிருந்தால் சொல்வதற்கு வாய்ப்பிருக்கிறது. :-)
சேந்தன் நிஜமாகவே கலக்கிவிட்டான். சுத்திப் போட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
அமெரிக்காவிற்குத் திரும்பிச் செல்லும் போது சில மணி நேரங்கள் சென்னை விமான நிலையங்களில் இருப்பேன் உஷா. மற்றபடி இப்போதைக்குச் சென்னை வரும் திட்டம் இல்லை.
ReplyDelete//டிஸ்கி (மற்றவர்களுக்காக): பாராட்டிற்காக இதனைச் செய்யவில்லை; எழுதவில்லை. ஆனால் இந்த மாதிரி நற்செயல்களைப் பற்றி யாராவது எழுதினால் அங்கெல்லாம் தவறாமல் கோவி.கண்ணனின் பாராட்டு இருக்கும். அப்படி பாராட்டுவது அவரது வழக்கம். இது அவரது பின்னூட்டத்தில் இல்லாதது தான் வியப்பாக இருந்தது. :-) //
ReplyDeleteவீட்டுக்குச் சென்றதும் முதல் வேலையாக உங்கள் பதிவை திறந்து முழுமையாக படித்துவிட்டு பின்னூட்டம் போட்ட பிறகு தான் மனது நிறைவானது. நமக்குள் எதிர்ப்பார்ப்புகள் உண்டு மறைக்க ஒன்றும் இல்லை குமரன். மாற்றுக்கருத்துகள் வேறு விதமாக செல்லும் காரணங்களால் உங்கள் ஆன்மிகம் தொடர்புடைய எழுத்துக்களை வாசிப்பதுடன் முடித்துக் கொள்வதை வழக்கமாக்கி வைத்திருக்கிறேன்.
:)
உங்களின் இந்திய/தமிழக பயணம் மேலும் பல நற்செயல்களுடனும், மன நிறைவாக இருக்க நல்வாழ்த்துகள்.
அருமை குமரன்!
ReplyDeleteஅத்தனை உள்ளங்களும் மகிழ்ந்திருக்கும். அவர்கள் வீட்டுப் பெரியோர்கள் மனதார வாழ்த்தி யிருப்பார்கள். ஒவ்வொரு புகைப்படத்தையும் அதற்கான குறிப்புகளையும் வரிசையாகப் பார்க்க பார்க்க, உங்களையும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.
அத்தனை ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்து உதவியாக இருந்த சீனா ஐயாவின் பணியும் பெருமைப் படத்தக்கது.
மனம் நெகிழ்ந்த வாழ்த்துக்கள்,குமரன்!
அன்பின் குமரன்
ReplyDeleteசில மணி நேரங்கள் தங்கள் குடும்பத்தாருடன் ம்கிழ்ந்திருந்தது மன நிறைவினைத் தருகிறது.
சேந்தன் குழந்தைகளுடன் நடபுடன் பழகியது - கண்ணில் மின்னல் தெறிக்க - வாய் கொள்ளாச் சிரிப்புடன் அவன் மழலைகளுக்கு சீருடை வழங்கிய விதம் மனதில் அப்படியே நிற்கிறது குமரன்.
சுடச்சுட இடுகை இட்ட செயல் - பாராட்டுகள் - வாழ்த்துகள் குமரன்
இன்னும் இருக்கின்றன செயல்கள். நாட்கள் நாலு இருக்கின்றன - ஜமாய்ச்சிடுவோம்.
நல்ல உள்ளங்களுக்கு நன்றி குமரன்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
வணக்கம் நண்பரே,உங்கள் குழந்தைகளுக்கும் மனித நேயத்தை சொல்லிக்கொடுத்துள்ளீர்கள்......மனசு சந்தோசமாய் இருக்கிறது..
ReplyDeleteமிக நல்ல செயல் செய்துள்ளீர்கள் குமரன். வாழ்த்துகள்.
ReplyDeleteமிகவும் நல்ல செயல்.இது என் போன்றோருக்கு ஒரு ஊக்குவிப்பாக இருக்கும்.கோவில் உண்டியலில் சமர்ப்பிப்பதை விட இது போன்ற செயல்களினால் இறைவன் நிச்சயம் மகிழ்வான்.அருள்வான்.
ReplyDeleteமனதார வாழ்த்துகிறேன் குமரன்.,
ReplyDeleteஅதற்கு உறுதுணையாக இருந்த திரு.சீனா தம்பதியினரையும் வாழ்த்துகிறேன்
பாராட்டுகளும், வாழ்த்துகளும்
ReplyDeleteஇடுகைக்கு நன்றி கோவி.கண்ணன். பாராட்டிற்காக இதனைப் பற்றி எழுதவில்லை என்று சொன்னது இது தான் - எழுதியது இப்படியெல்லாம் செய்ய முடியும்; உதவி செய்ய சீனா ஐயாவைப் போன்றவர்கள் இருக்கிறார்கள் - என்பதெல்லாம் மற்றவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத் தான். உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் பலரும் இருக்கிறார்கள்; ஆனால் ஏமாற்றிவிடுவார்களோ என்ற தயக்கம் இருக்கிறது; உதவி செய்கிறேன் என்று ஏமாற்றிப் பணம் பறிப்பவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள்; அதனால் நேரடியாக நாமே செய்வதென்றால் எப்படி என்ற குழப்பம் நிறைய பேருக்கு உண்டு. எனக்கும் இருந்தது. எனது நல்லூழ் சீனா ஐயாவின் அளப்பரிய பெரும் உதவி கிடைத்தது. அப்படியே பலருக்கும் கிடைக்க வேண்டும்.
ReplyDeleteநன்கு சொன்னீர்கள் ஜீவி ஐயா. பெரியவர்களின் வழிகாட்டுதலுடன் செய்த சிறு உதவி இது; இது போல் இன்னும் நிறைய செய்ய வாய்ப்புகள் கிட்ட வேண்டும். அணில் செய்ததைப் போல்.
ReplyDeleteதங்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும் சீனா ஐயா. மிகவும் நன்றி.
ReplyDeleteநன்றி ஜெரி ஈசானந்தன். முதல் வருகை என்று நினைக்கிறேன். வருக வருக. நல்வரவு.
ReplyDeleteநன்றி இராகவன். நீங்கள் வந்துள்ளதைப் பற்றியும் பதிவர் சந்திப்பைப் பற்றியும் சீனா ஐயாவும் சரவணனும் சொன்னார்கள். இயன்றால் வருகிறேன் என்றேன். வர இயலவில்லை. வேறு வேலையாகிவிட்டது. பதிவர் சந்திப்பு நன்கு நடந்திருக்கும் என்று எண்ணுகிறேன். வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி சிவசுப்ரமணியன். திருக்கோவில்களும் வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. மரபின்றி வாழ்தல் முறையில்லை. மரபுகளைக் காப்பதில் திருக்கொவில்களுக்கு முதன்மையான இடம் உண்டு. அதனால் கோவில்களுக்கும் கொடுக்கலாம். ஏமாற்றுபவர்கள் இல்லாத பட்சத்தில். :-)
ReplyDeleteஏழைகள் சிரிப்பில் இறைவனைக் காண்பது அதனை விட உயர்ந்தது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஏழைகளே இல்லாத சமுதாயம் இருந்தால் நன்று. அது அமையாத வேளையில் அதனை அமைக்க நம்மால் முடியாத போதில் ஏழைகளுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வது சரி.
நன்றி நிகழ்காலத்தில்...
ReplyDeleteமிக்க நன்றி தருமி ஐயா.
ReplyDeleteதிரு.குமரன்,
ReplyDeleteதந்தையார் மறைந்து ஒரு ஆண்டு ஓடி விட்டதா?
தந்தையார் நினைவை வெற்றுச் சடங்குகளில் அல்லாமல், நல்லதொரு செயல் வழியாகக் கொண்டாடியிருக்கிறீர்கள்!
எல்லா நலன்களும் சூழத் திருவருள் கைகூட்டட்டும்!
கோவி பதிவின் மூலம் இங்கு வந்தேன். பாராட்டுக்குரிய சேவை.
ReplyDeleteதாங்களும் குடும்பத்தினரும், சீனா ஐயாவும் குடும்பத்தினரும் போற்றுதலுக்குரியவர்கள். தங்களின் இடுகை மற்றவர்களுக்கும் இது போன்ற நற்கருமங்கள் செய்ய உந்துதலை ஏற்படுத்தும்.
(மேலே: எழுத்துப்பிழை சொற்பிழையாக்கி விட்டது)
Vow! Realy realy great service!
ReplyDeletethank you very much!
great"
thanks
rajesh
"Giving is pleasure"
ReplyDeleteI got this sentence in my mind when I saw சேந்தன் is giving.
Regards
Sivamurugan
நீங்கள் செய்த உதவி மிகவும் பெரியது. என் வாழ்வில் மறக்க முடியாது . அந்த குழந்தைகளும் மறக்க மாட்டார்கள். தாங்கள் உதவி செய்தவர்களில் எண்பது மாணவர்கள் தாய், தந்தை இழந்து பாட்டி , தாத்தா பராமரிப்பில் வாழ்பவர்கள். எனக்கு தெரிந்து மிகவும் கஷ்டப்படுபவர்கள் . என்னால் முடிந்தவரை உண்மையான ஏழைகளுக்கே உதவி புரிந்ததாக பாப்பாவிடம் சொல்லவும். ஒரு சிலர் ஏழைகள் அல்லாதவர்கள் போல் இருந்திருக்கலாம் , ஏழை என்பதற்கு அடையாளம் கிழிந்த உடை அணிவதல்ல என்பதை பாப்பாவிற்கு எடுத்துச் சொல்லவும் . தவறு எதுவும் நடந்து இருந்தால் பாப்பாவிடம் மன்னிப்பு கேட்டதாக சொல்லவும். வகுப்பு ஆசிரியரால் பரிந்துரைக்கப் பட்ட பெயரை மட்டுமே , நம்பி மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டது, ஆகவே, ஏழைகளுகு தான் உதவி சென்று இருக்கும் , அந்த சில மாணவர்களும் வாராமல் தவறுகளும் நடக்காமல் ஆசிரியர் பரிந்துரைத்தாலும் உண்மை தன்மை அறிந்து உதவுகிறேன் எனவும் பாப்பாவிடம் சொல்லவும்.
ReplyDeleteசேத்தனை முதல் வகுப்பு மாணவர்கள் கேட்டார்கள். யார் என்று மதியம் கொடைந்து எடுத்து விட்டார்கள் ... அனைத்து ஆசிரியர்களும் உங்கள் அறிமுகத்தையும் , உதவும் தன்மையையும் பாராட்டினார்கள்.
உங்கள் பயணம் இனிதாகவும், பிறருக்கு உதவும் விதமாகவும் இருக்க அனைவர் சார்பாக வாழ்த்துகிறேன்.
ஆச்சரியம் உங்கள் துணைவியார் உங்களுக்கு உதவியாக இருந்து, உதவிகளுக்கு உறுதுணையாக இருப்பது அனைத்து ஆசிரியர்களையும்
ஆச்சரியப்படுத்தியது.
குழந்தைகளுக்கு நல்ல பண்புகளைக் கற்றுத்தரும் தகப்பனாக இருக்கிறீர்கள்.
தங்கள் குடும்பம் எல்லா சிறப்புக்களையும் பெற்று வளமுடன் பல்லாண்டு வாழ மாணவர்கள் , ஆசிரியர்கள் சார்பாக வாழ்த்துகிறேன்...
நேரில் சந்திப்போம்...மதுரை சரவணன்.
பாப்பாவிடம் சொல்லவும் மாணவர்களிடம் வெளிப்படையாக தெரியும் ஏற்றத்தாழ்வுகளை போக்கவே சீருடை வழங்கப்படுகிறது. காமராசர் அவர்கள் இந்த ஏற்ற தாழ்வுகள் மறையவே இலவச சீருடை திட்டத்தை கொண்டு வந்தார்கள். அரசு அதை செய்து வந்தாலும் , நீங்கள் செய்யும் உதவி போன்று நேர்த்தியாக இருப்பதில்லை. மேலும் மாணவர்கள் சீருடையில் இருந்தால் உங்கள் மனதில் ஏற்பட்டுள்ள ஜயப்பாடு இருக்காது . தற்போது தங்கள் செய்த உதவியால் இந்த ஏற்றத்தாழ்வுகள் மறைந்து அனைவரும் சமமாய் காட்சி தருகின்றனர். இன்றைய காலை பிரார்த்தனையில் அதை பார்த்தேன் . ..என் மகிழ்சியில் உங்கள் அனைவர் முகமும் வ்ந்து சென்றது... உதவிகள் தொடரட்டும்... மாணவர்கள் சிரிப்பில் இறைவனை காண்கிறேன்...அந்த இறைவனாகவே உங்கள் அனைவரையும் காண்கிறேன்.
ReplyDeleteதிரு. கிருஷ்ணமூர்த்தி ஐயா,
ReplyDeleteஆமாம். ஒரு வருடம் ஆகிவிட்டது. தங்களது ஆசிகளுக்கு நன்றி.
தந்தையாரின் நினைவு நாள் வரும் திங்கள் ஜூலை 26ம் தேதி. அன்று எங்கள் வீட்டில் சடங்குகள் நடைபெறும். வந்து நடத்தி வைக்கும் வாத்தியாரிடம் அவற்றின் பொருள் கேட்டுக் கேட்டுச் செய்யும் வழக்கம் இருப்பதால் அவை பொருளுள்ள சடங்குகளாகத் தான் இருக்கும் என்று எண்ணுகிறேன். புரியாமல் ஏனோ தானோ என்று செய்தால் தானே அது வெற்றுச் சடங்காகிறது.
மிக்க நன்றி சுல்தான் ஐயா. கோவி.கண்ணனின் பதிவின் மூலம் இங்கே வந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்த இடுகையைப் பற்றி கோவி. கண்ணன் பதிவிட்டு அவரது பங்கினையும் நன்கு ஆற்றியிருக்கிறார். நன்றிக்குரிய செயல் அது.
ReplyDeleteஇதுவரை இந்த மாதிரி எண்ணமே தோன்றாதவருக்கு ஒரு உந்துதலாகவும், எண்ணம் இருந்தும் செயலாற்ற வழி தெரியாமல் இருப்பவர்களுக்கு ஒரு வழிகாட்டுதலாகவும் இருக்க வேண்டும் என்றே செய்பவற்றை எல்லாம் உடனே உடனே பதிவிடுகிறேன். வெற்று விளம்பரமாகிவிடுமோ என்று இவ்வளவு நாட்கள் சொல்லாமல் விடுவேன். விளம்பரம் செய்துகொள்கிறேன் என்ற கெட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை; மேலே சொன்ன நோக்கங்களுக்காக எழுத வேண்டும் என்று எண்ணுவதால் மதுரைக்கு விடுமுறையில் வந்த போதும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.
மிக்க நன்றி இராஜேஷ். திட்றீங்களோ என்ற ஐயம் வராத மாதிரி ஒரு பின்னூட்டம் போட்டதற்கும் நன்றி. :-) (சும்ம்மா).
ReplyDeleteஉண்மை தான் சிவமுருகன். நன்றி.
ReplyDeleteவாங்க தலைமையாசிரியர் ஐயா. நீங்கள் என் வயதொத்தவராகத் தெரிந்ததால் சில இடங்களில் உங்களை 'ஐயா' என்று அழைக்காமல் 'சரவணன்' என்றே சொல்லியிருக்கிறேன். தவறில்லை என்று நினைக்கிறேன். தவறென்றால் சொல்லுங்கள். மாற்றிக் கொள்கிறேன்.
ReplyDeleteஎங்களுக்கு எந்த விதமான ஐயங்களும் இல்லை. மகள் இப்போது தான் நேரில் ஏழைகளைப் பார்க்கிறாள். அதுவரை நான் சொன்னதை வைத்து அவளாகவே கற்பனை செய்து கொண்ட தோற்றம் மட்டுமே அவளுக்கு இருந்தது. மறுநாள் சௌராஷ்ட்ர பள்ளியிலும் 'இவர்களெல்லாம் ஏற்கனவே சீருடையில் தானே இருக்கிறார்கள். எதற்கு மீண்டும் கொடுக்கிறோம்?' என்று கேட்டாள். அவள் கேட்டவை ஐயத்தினால் வந்த கேள்விகள் இல்லை; அறியாமையால் வந்த கேள்விகள். அதனைப் பொருட்படுத்த வேண்டாம். அறிய அறிய கேள்விகள் மாறும்.
உங்கள் பின்னூட்டத்தைப் பார்த்த பின்னர் 'நேற்று நாம் உதவிய 100 குழந்தைகளில் 90 பேருக்குத் தாய் தந்தையர் இல்லையாம். பாட்டி தாத்தாவிடம் வளர்கிறார்களாம்' என்று சொன்னேன். அதற்கு அவள் சொன்ன மறுமொழி 'அந்த மீதி 10 பேர் லக்கி'. :-) 'அப்படியென்றால் நீ?' ஒரு நிமிடம் மறுமொழியில்லை. அப்புறம் அவள் சொன்னது 'ரொம்ப லக்கி'. அவளிடம் நாம் சொல்ல நினைக்கும் செய்திகள் செல்கின்றன; ஆனால் அவள் அதற்குத் தரும் மறுமொழிகள் அந்தச் செய்திகளைப் புரிந்தும் புரியாமலும் அவள் செய்யும் எதிர்வினைகளை மட்டுமே காட்டுகின்றன. மீதி 10 பேர் லக்கி என்று சொன்னதில் மற்ற 90 பேர் பாவம் என்ற அவளது புரிதல் வெளிப்படுகிறது. சிலர் நல்ல உடை அணிந்திருந்தார்கள் என்று அவள் சொன்னதில் மீதி பேர் நல்ல உடை அணியவில்லை; பாவம் என்ற புரிதல் வெளிப்படுகிறது. நம் நாட்டில் வளரும் குழந்தைகள் எண்ணங்களை வெளிப்படுத்தும் முறைக்கும் வெளிநாட்டில் வளரும் குழந்தைகள் எண்ணங்களை வெளிப்படுத்தும் முறைக்கும் சில வேறுபாடுகள் இருக்கின்றன. சரியான கான்டெக்ஸ்டில் சொல்லாமல் விட்டது என் தவறு தான். மனவருத்தம் ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும்.
எங்கள் மகனின் பெயர் சேந்தன். சேத்தன் இல்லை; நிறைய பேர் பெயரைச் சொல்லும் போது அப்படித் தான் புரிந்து கொள்கிறார்கள். சேதன் என்றால் வடமொழிப் பெயர் - அறிவு என்று பொருள். சேட்டன் என்றால் மலையாளத்தில் மூத்தவன் என்று பொருள் - அதுவும் ஜ்யேஷ்ட என்ற வடசொல்லின் திரிபு. சேந்தன் என்பது பழந்தமிழ்ப்பெயர். சிவந்தவன் என்று பொருள். முருகனின் சங்ககாலப் பெயர். எங்கள் குலதெய்வம் முருகனின் பெயரைத் தான் எங்கள் மகனுக்கு வைத்திருக்கிறோம்.
ReplyDeleteஅவனை ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் கேட்டார்கள் என்று அறிந்து மகிழ்ச்சி. அவனுக்கு இப்போது நாம் உங்கள் பள்ளிக்கு வந்து சென்றதே மறந்துவிட்டது. கேட்டால் அவனுக்கு நினைவில்லை. ஆனால் படங்களைப் பார்த்தால் நினைவுக்கு வருகிறது. மிகச் சிறியவன். ஆனால் அன்று அனைவருக்கும் சீருடைகளை வழங்கியதில் மிக மகிழ்ச்சி அடைந்தான் என்பது தெரிகிறது.
துணைவியார் உறுதுணையாக இருப்பதில் என்ன வியப்பு என்று புரியவில்லை. மனைவி அமைவதெல்லாம் எப்படி இறைவன் கொடுத்த வரமோ அது போல் தான் கணவன் அமைவதும். எனக்கும் என் மனைவிக்கும் அந்த வரம் நன்கு அமைந்திருக்கிறது என்று எண்ணுகிறேன். :-)
ReplyDeleteதங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
மறுநாள் காலைப் பிரார்த்தனையில் மாணவர்கள் புதிய சீருடை அணிந்து வந்தார்கள் என்று அறிந்து மிக்க மகிழ்ச்சி. உங்களது பாராட்டுகளுக்கு என்னைவிட அதிகம் உரியவர் சீனா ஐயா. அவரை விட்டுவிடாதீர்கள்! உங்கள் பள்ளிக்குப் பெரும் நன்மைகள் அவரால் விளையும்!
குழந்தைகளின் மறுமொழிகள் எடுத்துரைத்தப் பாங்கு அருமை . பொறுப்புள்ள தகப்பனாக , சமூக சிந்தனைத்தூண்டும் பொறுப்பாளியாக,நட்பு பாராட்டல் அதிகம் உள்ளவராக உள்ளீர்கள்...உங்களை கணவனாகப் பெற்றமைக்கு உங்கள் துணைவியார் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மிக்க மகிழ்ச்சி..
ReplyDeleteசொல்ல நினைத்துச் சொல்லாமல் விட்டுவிட்டேன் சரவணன். உதவிப் பெறத் தகுந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்த உங்களுக்கும் வகுப்பு ஆசிரியர்களுக்கும் எங்கள் நன்றிகள். உங்கள் உதவியின்றி இவ்வளவு விரைவில் இந்த நற்செயலைச் செய்து முடித்திருக்க முடியாது.
ReplyDeleteநண்பர்களே, சீருடை வழங்கும் படங்களில் ஒலிப்பெருக்கித் தாங்கி நிற்பவரும் குறிப்பேடு வழங்கும் படங்களில் குறிப்பேடுகளைத் தாங்கி நிற்பவரும் தான் சரவணன். சீருடைகள் வழங்கும் போது மாணவர்களை அவர்களின் பெயர் கூறி அழைத்தார். குறிப்பேடுகள் வழங்கும் படத்தில் சீனா ஐயாவின் இடப்புறம் (படத்தில் நமக்கு வலப்புறம்) நிற்கிறார்.
ReplyDeleteஇந்திய நாட்டுக்கு உங்களையும் உங்கள் இல்லத்தாரையும் வருக என்று வரவேற்கிறேன்.
ReplyDeleteகுழந்தைகளைக் கைக்குழந்தைகளாகப் பார்த்தது. இப்பொழுது பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
தந்தையாரின் ஆண்டு நினைவு நிகழ்ச்சிகள் சிறப்புற நடந்தேகியனவா! அப்படியே நடந்திருக்கும் என்று நம்புகிறேன்.
கொடுப்பது என்பது எளிதன்று. ஆகையால்தான் வறியார்க்கு ஒன்று ஈவதை ஈகை எனப்பாராட்டுகிறார்கள்.
அந்தப் புகைப்படங்களில் வாங்குகின்ற குழந்தைகளின் முகமகிழ்ச்சியைப் பாருங்கள். அடடா! பேறு பல செய்திருக்கின்றீர்! உளங்கனிந்த பாராட்டுகள்.
நல்ல மனம் வாழ்க .நாடு போற்ற வாழ்க!
ReplyDeleteVANAKKAM SIR,
ReplyDeleteAPPRECIATING YOU.
ARANGAN ARULVANAGA.
K.SRINIVASAN.
நன்றி இராகவன், ஜோ, ஸ்ரீநிவாசன் ஐயா.
ReplyDeleteYou've inspired me Kumaran.
ReplyDeleteThanks Ravi.
ReplyDeleteWelcome and thanks for your first comment. :-)