பூஜையறை பொக்கிஷம்!
அழகென்ற சொல்லுக்கு முருகா!
டி.எம்.சௌந்தரராஜன்
'உள்ளம் உருகுதய்யா...' - குரலைக் கேட்டால், அந்த முருகனே மனம் உருகி வருவார். 'புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே...' என்று இவர் பாடினால், அந்தக் கண்ணனே மயங்கி விடுவார். அப்படியரு காந்தர்வக் குரல் டி.எம். சௌந்தரராஜனுக்கு!
மந்தவெளியில் உள்ள இவரது வீட்டுக்குச் சென்ற போது, குடும்பத்தினரோடு மகிழ்வாகப் பேசிக் கொண்டிருந்தவர், புன்னகையுடன் வரவேற்றார். 80 வயதைக் கடந்தாலும், மார்க்கண்டேய வரம் வாங்கி வந்த கணீர் குரல் மட்டும் அப்படியே இருக்கிறது!
''எல்லாரும் விருப்பு வெறுப்பு இல்லாம கேக்கக்கூடிய குரலை எனக்குக் கொடுத்து, பாடக்கூடிய பக்குவத்தை தந்ததே முருகப் பெருமான்தான்'' என்று நெகிழ்ந்த டி.எம்.எஸ்., நான் பண்ணின கச்சேரிகள்ல, என் பாட்டுக்குக் கிடைச்ச விக்கிரகங்கள்தான், எங்க வீட்டு பூஜையறைய அலங்கரிக்குது!'' என்று சொல்லிக் கொண்டே பூஜையறைக்குள் அழைத்துச் சென்றார்.
''1946-ல கல்யாணமாச்சு. அப்ப மதுரைல சஷ்டி உற்ஸவம்; அங்கதான் இந்த முருகன் படத்தை வாங்கினோம். என்னவொரு அழகு பாருங்க...'' என்றவர், ''அழகென்ற சொல்லுக்கு முருகா... உன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா?'' என்று குழைவு சேர்த்துப் பாடினார்.
''சில வருஷத்துக்கு முன், மலேசியாவுல கச்சேரி... அங்கே ரசிகர் ஒருத்தர், இந்த கல் பதித்த வேலையும் கந்தனையும் கொடுத்தார். எங்க ஆயுசு நீடிச்சிருக்கறதுக்கு, இவைதான் காரணம்! தினமும் காலைல முருகனை வழிபட்டுட்டுதான் அடுத்த வேலை! மொட்டை மாடில வாக்கிங், விஜயலட்சுமிங்கறவங்க மூலமா தியானம், ஜான்நாயகத்திடம் 'முத்ராஸ்', கிருஷ்ணமூர்த்தியிடம் 'யோகா' என உடம்பையும் மனசையும் முருகனருளால ஆரோக்கியமா வெச்சிட்டிருக்கேன்...'' என்றவர், வைஷ்ணவராக இருந்து முருக பக்தராக மாறிய ரகசியத்தை விவரித்தார்... ''நாங்க வடகலை நாமம் போடும் வைஷ்ணவர்கள். அப்பா, மதுரை வரதராஜ பெருமாள் கோயில்ல பூஜை பண்ணிட்டிருந்தார். முறைப்படி வேத சாஸ்திரங்களை படிச்சேன். இதுதான் அட்சர சுத்தமா என்னைப் பாட வெச்சுது! கோயிலுக்கு அப்பாவோட நிறைய முறை போயிருந்தாலும் எனக்குள்ளே ஆன்மிக சிந்தனை வந்ததுக்கு பழநி முருகனே காரணம்! ஒருமுறை, பழநி கோயிலுக்குப் போனவன், சந்நிதிக்குள் நுழைஞ்சதும், தண்டாயுதபாணிய பாத்தேன். அவ்ளோதான்... பஞ்சாமிர்த வாசனையும் விபூதியோட நறுமணமும் ஏதோ பண்ணுச்சு. 'கடைசில நாமளும் சாம்பலாத்தானே போகப் போறோம்'னு சட்டுன்னு ஒரு எண்ணம். அந்த நிமிஷத்துல இருந்து முருகனோட பாடல்களைப் பாடுறதுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சேன்; முருக பக்தனாவே மாறிப் போனேன்...'' என்று நெகிழ்கிறார் டி.எம்.எஸ்.
அறைச் சுவரில் புட்டப்பர்த்தி ஸ்ரீசாயிபாபாவின் படமும், பாபாவிடம் இவர் ஆசி பெறும் புகைப்படமும் இருந்தது. பாபாவின் முன் கச்சேரி பண்ணியிருக்கிறாராம் காஞ்சி மகா பெரியவரை தரிசித்ததையும் விவரித்தார் டி.எம்.எஸ்.
''காஞ்சி மகா பெரியவாளைப் பத்தின பாடல்களை நான் பாடி, அதை பெரியவாள் கேட்டு ரசிச்சதோட, அந்த கேசட் மேல தேங்காயை சுத்தி திருஷ்டி கழிச்சாராம். இதை என் ரசிகர்கள் சொல்லவும், அடுத்ததா... அவரை தரிசிக்கிற வாய்ப்பும் கிடைச்சது. சைகையில பக்கத்துல வரச்சொன்ன சுவாமிகள், 'கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்' பாட்டை பாடச் சொன்னார். நானும் பாடினேன். உடனே, உதவியாளரைக் கூப்பிட்டு, தன் மேல போட்டிருந்த சால்வையைக் கொடுத்து, என் கழுத்துல போடச் சொன்னார். இதைவிட பாக்கியம் என்ன வேணும் எனக்கு?'' என்று நெக்குருகிச் சொல்கிறார் டி.எம்.எஸ்.
- ரேவதி
படங்கள்: பொன். காசிராஜன்
நன்றி: சக்தி விகடன்.
நன்றி: இக்கட்டுரையை எனக்கு அனுப்பிய மின் தமிழ் குழும நண்பர் கேசவன்
நன்றி: இக்கட்டுரையை மின்வருடி தன் பதிவில் இட்டிருக்கும் நண்பர் டி.எம். பாலாஜி
//நாங்க வடகலை நாமம் போடும் வைஷ்ணவர்கள். அப்பா, மதுரை வரதராஜ பெருமாள் கோயில்ல பூஜை பண்ணிட்டிருந்தார்//
ReplyDeleteமேற்கண்ட வரிகளை (முழு பேட்டியையும்) படித்ததும் இவர் வடகலை ஐயங்கார் என்றே நினைக்கத்தோன்றுகிறது. இவர் சௌராஷ்டிரர் என்று எனக்கு தெரிந்ததால் வடகலை வைணவர்கள் என்ற பிரிவில் ஐயங்கார் மட்டும் அல்ல மற்றவர்களும் இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டேன். சௌராஷ்டிரர்களில் சைவமும் வைணவமும் உண்டா? அல்ல வைணவம் மட்டும் தானா? படித்த சிலவற்றை வைத்து பார்க்கும் போது சௌராஷ்டிரர்களிடம் பெருமாளுக்கே சிறப்பு அதிகம் என்று தெரிகிறது.
தகவலுக்கு நன்றி.
ReplyDeleteநன்றி குமரன் கட்டுரைக்கு!!
ReplyDeleteT.M.S மேன்மேலும் வாழ, வளர முருகனும், கண்ணனும் அருள் புரிய வேண்டுகிறேன்.
குறும்பன்,
ReplyDeleteஇது கொஞ்சம் குழப்பமான இடம்; சௌராஷ்ட்ரர்களின் நடுவில் அந்தக் குழப்பம் இல்லை; தமிழகத்தில் இருக்கும் சாதி முறைகளைக் காணும் போது அந்தக் குழப்பம் இருக்கிறது.
வடகலை பிரிவில் ஐயங்கார்கள் மட்டும் இல்லை மற்றவர்களும் இருக்கிறார்கள் என்பது உண்மை தான்; தென்கலை வடகலை பிரிவுகளைப் பற்றி தவறான கருத்துகள் மீண்டும் மீண்டும் பலரும் சொல்லிக் கொண்டே இருப்பதால் வடகலை பிரிவு வடமொழியைச் சார்ந்த பிரிவு; ஐயங்கார்கள் மட்டுமே இருக்கும் பிரிவு என்றொரு கருத்து பெரும்பான்மையாக நிலவுகிறது; சாத்தாத வைணவர்கள் என்றும் உண்டு - அதாவது பூணூல் போடாதவர்கள்; அவர்கள் இரு பிரிவிலும் இருக்கிறார்கள்.
இப்போது டி.எம்.எஸ். விசயத்தில் பார்த்தால் இவர் குடும்பத்தினர் ஐயங்கார் என்றே தங்கள் பெயர்களுக்குப் பின்னர் இட்டுக் கொள்கிறார்கள். தொகுளுவா என்பது இவரது குடும்பப்பெயர் (எனக்கு மல்லி என்பது குடும்பப்பெயர்; சிவமுருகனுக்கு நீலமேகம் என்பது குடும்பப்பெயர்; கால்கரி சிவாவிற்கு சுட்டி என்பது குடும்பப்பெயர்). மீனாட்சி சுந்தரம் ஐயங்கார் (ஆஃசிமோரான் போல் இல்லை இந்தப் பெயர்? :-) ) என்பது இவரது தந்தையார் பெயர். இரண்டும் சேர்ந்து தொ.மீ. சௌந்தரராஜன் ஐயங்கார் இவர் (ஆங்கிலத்தில் டி.எம். சௌந்தரராஜன்).
வடகலை நாமம் போட்டுக் கொண்டாலும் இவரது தந்தைக்கு மீனாட்சி சுந்தரம் என்ற பெயர் இருப்பது சைவ வைணவ வேறுபாடுகள் சௌராஷ்டர்கள் நடுவில் குறைவு என்பதை காட்டும்.
சௌராஷ்ட்ரர்கள் எல்லோரும் பூணூல் போட்டுக் கொள்கிறார்கள்; பெரும்பாலும் ஊன் உண்பார்கள் (டி.எம்.எஸ். குடும்பத்தினர் உண்ண மாட்டார்கள் என்று தெரியும்; டி.எம்.எஸ். உண்பார் என்று நினைக்கிறேன்). இரண்டு தலைமுறைக்கு முன்னர் பெயர்களின் பின்னர் ஐயர், ஐயங்கார் என்று போட்டுக் கொண்டார்கள். சென்ற தலைமுறையிலிருந்து (அதாவது டி.எம்.எஸ்., என் தந்தையார் தலைமுறை) அப்படி போட்டுக் கொள்வதில்லை.
சௌராஷ்ட்ரர்கள் பிற்படுத்த சாதி என்று ஆங்கிலேயர் காலத்தில் வகைப்படுத்தப்பட்டார்கள்; அதுவே இன்னும் தொடர்கிறது. 90% நெசவாளிகள் என்பதால் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியாக அறிவிக்க வேண்டும் என்று மனு கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்து தத்துவங்களில் முதன்மை கொண்ட அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் மூன்றையும் பின்பற்றும் குடும்பத்தினர் இருக்கிறார்கள். அத்வைதத்தைப் பின் பற்றும் குடும்பத்தினர் (என் குடும்பமும்) சிருங்கேரி சங்கர மடத்துச் சீடர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள்; நேரடித் தொடர்பு இல்லை; ஆனால் சிருங்கேரி சங்கராச்சாரியர் மதுரைக்கு வரும் போது சென்று பார்ப்பார்கள். விசிஷ்டாத்வைதம் பின்பற்றுபவர்கள் வடகலை, தென்கலை இரு பிரிவுகளிலும் இருக்கிறார்கள்; அவரவர் அந்த அந்த கலைகளின் ஆசாரியர்களிடம் பஞ்ச சம்ஸ்காரம் என்னும் ஐவகை சடங்குகளைச் செய்து கொள்கிறார்கள். த்வைதம் பின்பற்றுபவர்கள் பெயருக்குப் பின்னார் ராவ் என்று போட்டுக் கொண்டு உடுப்பியில் இருக்கும் மாத்வ மத ஆசாரியர்களிடம் சீடர்களாக இருக்கிறார்கள்.
திருமணத்தொடர்புகளின் போது இவை எதுவுமே இடையில் வருவதில்லை. என் தாய்வழி பாட்டி வீட்டார் வைணவர்கள்; வடகலை நாமம் இட்டுக் கொள்வார்கள். எங்கள் தந்தையார் வீட்டார் சைவர்கள்; முருகன் குலதெய்வம்; திருநீற்றுப் பட்டை தான். நான் நாமம் போட்டுக் கொள்ளலாம் என்றால் 'கூடாது' என்று தடுப்பதில்லை எங்கள் வீட்டுப் பெரியவர்கள். :-)
ஒரே குழப்பமாக இருக்கிறதா? ஒரு குழப்பமும் இல்லை; எல்லா சாமியும் ஒன்று தான் என்பதே இவர்கள் கருத்து. அதனால் தான் டி.எம்.எஸ்-ஆல் இவ்வளவு எளிதாக முருகன் பக்தராக மாற இயலுகிறது. வடகலை நாமம் போடாமல் திருநீறு அணிந்து கொள்ள முடிகிறது.
மதுரையில் கூடலழகர் கோவில், அழகர் கோவில், மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம் என்று எல்லா கோவில்களிலும் சௌராஷ்ட்ரர்கள் கூட்டத்தையும் மொழியையும் எப்போதும் காணலாம்.
நன்றி கிருஷ்ணா & இராகவ்.
ReplyDeleteநடிகர்களுக்கு ஏற்றாற் போல, குரலை மாற்றாமலேயே புகழ் அடைந்தவர் சுசீலாம்மா-ன்னு சொல்வாய்ங்க!
ReplyDeleteநடிகர்களுக்கு ஏற்றாற் போல, குரலை மாற்றிப் புகழ் அடைந்தவர் டி.எம்.எஸ்!
ஆனால் டி.எம்.எஸ் அவர்களின் இயற்கையான குரலை உலகுக்குக் காட்டிக் கொடுத்ததே என் முருகன் பாடல்கள் தான்! :)
//சந்நிதிக்குள் நுழைஞ்சதும், தண்டாயுதபாணிய பாத்தேன். அவ்ளோதான்... பஞ்சாமிர்த வாசனையும் விபூதியோட நறுமணமும் ஏதோ பண்ணுச்சு//
ReplyDeleteசூப்பரு!
என்னமோ பண்ணுச்சி - இது எனக்கு மிகவும் பிடிச்ச வரிகள், குமரன்! :)
இப்படித் தான் திருவண்ணாமலை கோபுரத்து இளையனார் - முருகன் சன்னிதியில்,
ஒரு குட்டிப் பையன் சங்கரனை, "என்னமோ பண்ணிச்சி" :)
அன்னியில் இருந்து, அந்த இளையனைக் காட்டினாத் தான், அவன் சோறு ஊட்டிக்குவான்! :)
//மீனாட்சி சுந்தரம் ஐயங்கார் (ஆஃசிமோரான் போல் இல்லை இந்தப் பெயர்? :-)//
ReplyDeleteஇல்லையே! :)
ரொம்ப "நன்னா" இருக்கே! :))
//முருகன் குலதெய்வம்; திருநீற்றுப் பட்டை தான். நான் நாமம் போட்டுக் கொள்ளலாம் என்றால் 'கூடாது' என்று தடுப்பதில்லை எங்கள் வீட்டுப் பெரியவர்கள். :-)//
எங்க வீட்டுல இன்னும் கொஞ்சம் பயம் தான்! :)
புரட்டாசி மாசம் தளிகை போடும் போது கூட, நான் முழு நாமம் போட்டுக்க முடியாது! நடுவிற் திலக ரேகையான ஸ்ரீசூர்ணம் மட்டும் தான்!
முழுக்கப் போட்டா, மை மம்மி வில் பீட் மி! :))
திருநீரில் மருந்து இருக்கு தெரியுமா?
ReplyDeleteஅதை தினம் அணிந்தால் புகழ் இருக்கு தெரியுமா?
T MS ஐயா இட்ட திருநீறு அவருக்கு புகழ் நீறு >
.திருநீறு தீட்டி க்கொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும் ,
,,,சித்ரம்...//