ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள்
'என் மீதே மனத்தை வைத்து, என்னையே வணங்கி பூஜிக்கும் என் பக்தன், என்னையே அடைவான்' - என பகவத் கீதையில் அருள்கிறார் ஸ்ரீகண்ணபிரான்!
இதன்படி, உண்ணும் உணவு, பருகும் நீர் அனைத்தும் கண்ணனுக்கே என்று, அவனுக்கே ஆட்பட்டு வாழ்ந்தவர் - 'மதுரையின் ஜோதி' என அன்பர்களால் போற்றப்படும் ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள்.
ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் அவதரித்த பக்தி வளம் செறிந்த பூமி, தமிழ் மண். இந்த மண்ணுக்குப் பெருமை சேர்ப்பது, மதுரையம்பதி. 'ஸ்ரீமந் நாராயணனே பரம்பொருள்' என்று பெரியாழ்வார் வைணவத் தத்துவத்தை நிலைநாட்டிய கூடல் நகரான மதுரையம்பதியில், ஆழ்வார்களின் அவதாரம் நிகழவில்லை. பகவான் கண்ணன், இந்தக் குறையைப் போக்க வேண்டும் என்று நினைத்தானோ என்னவோ... ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகளை மதுரை நகரில் அவதரிக்கச் செய்தான்!
அது 1843-ஆம் வருடம்; ஜனவரி 9-ஆம் தேதி; மார்கழி- 22 (சௌராஷ்டிர வருடம் 531). வியாழக்கிழமை. சௌராஷ்டிர விப்ரகுல ஜாபாலி கோத்திரத்தில் வந்த சின்னக்கொண்டா ஸ்ரீரங்காரியருக்கும் லட்சுமி அம்மைக்கும் குமாரராக அவதரித்தார் ராமபத்ரன். அன்று, மிருகசீரிஷ நட்சத்திரம். நெசவுத் தொழிலைச் செய்து வந்த குடும்பம் அது! குழந்தைப் பருவத்தில் இருந்தே, ராமபத்ரனுக்கு உலக வாழ்க்கையில் நாட்டம் இல்லை; கல்வியில் ஈடுபாடு அறவே இல்லை. வேலை செய்வதிலோ, குடும்பத் தொழிலான நெசவை கவனிப்பதிலோ ஆர்வம் சிறிதுகூட இல்லை. அவருடைய எண்ணம் முழுவதையும் இறைச் சிந்தனையே ஆக்கிரமித்திருந்தது.
அப்போது ராமபத்ரனுக்கு 9 வயது. வீட்டைத் துறந்து சென்றார்; திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி வரும் பாதையில் முருகப் பெருமானின் சந்நிதிக்கு பின்புறம் உள்ள குக ஆஸ்ரமத்தில் தவம் புரிந்தார்... 12 வருடங்களாக!
பரமக்குடியில் நாகலிங்க அடிகளைப் பற்றி கேள்விப்பட்டு, அவரை குருவாக ஏற்றார். அவரிடம் அஷ்டாங்க யோகப் பயிற்சி கிடைத்தது. பதினெட்டே நாட்களில் ஸித்திகள் பலவும் கைவரப் பெற்று, 'சதானந்த சித்தர்' எனும் திருப்பெயர் பெற்றார் ராமபத்ரன்.
பரமக்குடியில் இருந்து மதுரைக்குத் திரும்பினார். வழியில் சிவகங்கை சமஸ்தான மன்னர் இவரை வரவேற்று உபசரித்தார். இவருடைய தோற்றத்தைக் கண்டு வியந்தார். அழகு ததும்பும் சரீரம்; கோலமோ, துறவிக் கோலம். பொல்லாத பெண்ணாசையை இவர் துறந்துவிட்டாரா என்பதை அறிய இவரை சோதித்துப் பார்க்கும் எண்ணம் எழுந்தது மன்னருக்கு! அழகு மங்கை ஒருத்தியை இவர் இருந்த அறைக்கு அனுப்பி வைத்தார்.
'பெருக்கெடுத்து ஓடும் ஆறுகள், கடலில் சென்று அடங்கும். அதுபோல் எவன்பால் ஆசைகள் அனைத்தும் சென்று அடங்குகின்றனவோ அவனே சாந்தி அடைகிறான். ஆசையுள்ளவன் சாந்தி அடையமாட்டான்' என்ற கீதையின் வாக்குப்படி, ஆசைகளைக் கடந்த சதானந்தர், அந்த மங்கையை சக்தியின் சொரூபமாகக் கண்டார்.
இத்துடன் விட்டாரா மன்னர்?! இன்னுமொரு சோதனையும் வைத்தார் சதானந்தருக்கு!
ஆண்டுக் கணக்கில் தவம் இருந்த சதானந்தரை, சமாதி நிலையில் பார்க்கும் எண்ணம் மன்னருக்கு! சதானந்த சித்தரின் ஒப்புதலுடன் பாதாள அறை ஒன்றில், சதானந்தரை அமரச் செய்து, அந்த அறைக்குச் செல்லும் வழியை அப்படியே அடைக்கவும் செய்தனர். காவலர்கள் பாதுகாக்க, ஒரு மண்டல காலம்... இப்படியே ஓடியது. திடீரென பாதாள அறையின் மேல் பாகத்தில் வெடிப்பு ஏற்பட, அதை மன்னரிடம் தெரிவித்தனர் காவலர்கள். அதேநேரம், சித்தர் மதுரையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக மன்னருக்கு தகவல் வந்தது. ஆச்சரியம் அடைந்த அவர், பாதாள அறையைத் திறக்கச் சொன்னார். அங்கே சித்தர் இல்லாதது கண்டு வியந்தார். மனம் வருந்தியவர், சதானந்தரிடம் மனதார மன்னிப்புக் கேட்டார்.
மதுரை நோக்கிச் செல்லும்போது, சதானந்தர் களைப்பின் மிகுதியில் 'விடின்தோப்பு' எனும் தோட்டத்தில் சற்றே உறங்கினார். அப்போது, அவர் முகத்தில் சூரிய ஒளி படாமல் இருக்க, நாகப் பாம்பு ஒன்று படம் எடுத்து இருந்ததாம்! இதைக் கண்டு வியந்த சிலர், ஊருக்கு சேதி பரப்ப... சதானந்த சித்தரின் புகழ் பரவியது.
மதுரையில் சில நாட்கள் தங்கினார்; சீடர்கள் சேர்ந்தனர். அவர்களை அழைத்துக் கொண்டு தெற்கு நோக்கி யாத்திரை சென்றார் சதானந்தர். ஒருநாள்... வழிப்பறிக் கும்பல் ஒன்று இவர்களைத் தாக்கியது. சதானந்தர், ஒரு பிடி மண்ணை எடுத்துத் தூவ, கொள்ளையருக்கு பார்வை பறி போனது. அவர்கள், சித்தரின் மகிமையை உணர்ந்து தங்களை மன்னிக்க வேண்டினர். அவரும் அறிவுரை கூறி, அவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்க அருளினார்.
பாத யாத்திரை தொடர்ந்தது. ஆழ்வார்திருநகரிக்கு வந்த சதானந்தர், நம்மாழ்வார் சந்நிதியில் மனம் கரைந்தார். அங்கே, வைணவ ஆச்சார்யரான வடபத்ர அரையரின் தேஜஸ் இவரைக் கவர்ந்தது. அவரிடம் அடிபணிந்து, உபதேசம் பெற்றார். சதானந்தருக்கு திருமால் மீது காதலை ஏற்படுத்தி, பஞ்ச சம்ஸ்காரம் எனும் ஐவகைச் சடங்கினைச் செய்து, திருமண் காப்பு அணிவித்து, அவரை வைணவராக்கினார் வட பத்ராச்சார்யர்; தாஸ்ய நாமமாக நடனகோபாலன் என்ற நாமத்தையும் சூட்டினார்.
ஆழ்வார்திருநகரியிலேயே சில காலம் தங்கியிருந்து, வடபத்ராச் சார்யரிடம் பிரபந்தம் முதலான தத்துவங்களை உபதேசமாகப் பெற்று, குருவின் திருவருளால் பகவானின் திருவருளையும் தரிசனத்தையும் பெற்றார் ஸ்ரீநடன கோபால சுவாமிகள்.
மீண்டும் யாத்திரை செல்ல எண்ணி, ஆழ்வார் திருநகரியிலிருந்து கிளம்பினார். வழியில், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளின் சந்நிதிக்கு வந்து தரிசித்தார். ஆண்டாளின் நாயகி ஸ்வரூபமான பக்தி உணர்வும், கண்ணன் மீதான காதல் வேகமும் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. அவரது வாக்கிலிருந்து தமிழிலும் சௌராஷ்டிர மொழியிலும் மளமளவெனப் பாடல்கள் வெளிவந்தன.திருப்பதிக்குச் சென்றார். வழியில் திருபுவனம் எனும் ஊரில் குழந்தைச் செல்வத்துக்காக ஏங்கிய தம்பதி, சுவாமிகளை வணங்க... 'விரைவில் குழந்தை பிறக்கும்' என ஆசி வழங்கிச் சென்றார்.
நாட்கள் சென்றன. மீண்டும் அந்த வழியே அவர் திரும்பியபோது, அந்தத் தம்பதி தங்கள் குழந்தையுடன் சென்று சுவாமிகளை வணங்கினர். அப்போது, புடவை, ரவிக்கை, மஞ்சள், குங்குமம், வளையல், சலங்கை ஆகிய மங்கலப் பொருள்களை சுவாமிகளுக்கு அர்ப்பணித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளை தரிசித்த பிறகு, உள்ளத்தால் நாயகி பாவனை மேலிட பாடல்களைப் பாடிவந்த சுவாமிகள், 'தாம் தோற்றத்தாலும் மாற வேண்டும் என்பதற்காக திருமாலே இவற்றை அளித்தார் போலும்' என எண்ணினார். உடனே, சேலையை உடுத்தினார்; முகத்தில் மஞ்சள் பூசினார்; நாயகியாகவே மாறினார்! இதே கோலத்தில் திருவரங்கம் வந்தார். அங்கே... ஸ்ரீரங்கம் நாராயண ஜீயர் இவருக்கு 'நடனகோபால நாயகி' என பெயர் சூட்டி அருளினார். இதன் பிறகு, ஸ்ரீமந் நாராயணனை நாயகனாகவும், தன்னை நாயகியாகவும் பாவித்து, சுவாமிகள் பாடிய பாடல்களும் நாமாவளிகளும் பிரபலம் அடைந்தன.
சுவாமிகள் பெரும்பாலும் மதுரையிலேயே வசித்தார். வயிற்றுக்கு வேண்டிய உணவை உஞ்சவிருத்தி மூலம் பெற்றார். பிரம்மச்சரிய வாழ்க்கைதான்! சுவாமிகளின் நாவில் கலைமகள் களிநடம் புரிந்தாள். அவர் பாடிய தமிழ்ப் பாக்களும் சௌராஷ்டிரப் பாடல்களும், சுவாமிகளை வரகவி என புகழ்பெற வைத்தன. அவருடைய பாடல்களில் அறவுரை, வைணவ தத்துவ பக்தி நெறி, நாயகனாகிய கண்ணனைப் பிரிந்து வாடும் நிலை ஆகியவை அதிகம் வெளிப்பட்டன.
சுவாமிகளுக்கு தாம் முக்தியடையப் போகும் நாள் குறித்த நினைவு வந்தது. அதை சீடர்களுக்கு குறிப்பால் உணர்த்தினார்.
பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணன், 'ஸர்வத் வாராணி ஸம்யம்ய' என்ற கீதா ஸ்லோகத்தில் (அத்: 8 ஸ்லோ: 12,13) சொன்னது இது...
'எல்லா இந்திரிய வாயில்களையும் அடைத்து, மனத்தையும் இதயத்தில் நிலைநிறுத்தி, தனது பிராணனை தலை உச்சியில் வைத்து, யோக தாரணையில் நிலை பெற்றவனாக, 'ஓம்' என உச்சரித்துக் கொண்டு, என்னை முறைப்படி சிந்தித்தவனாக உடலை விட்டு எவன் செல்கிறானோ அவன் உயர்ந்த கதியை அடை கிறான்.' - இதன்படி, தான் முன்பே கணித்த ஸ்ரீவைகுண்ட ஏகாதசி நாளுக்கு முன்னதாக... அஷ்டமி நாளில் இரவு, ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள் தியானத்தில் அமர்ந்தார். அன்ன ஆகாரம் ஏதுமில்லை. வைகுண்ட ஏகாதசி. 1914 ஜனவரி-8, வியாழக்கிழமை, மதியம் 12 மணி; சுவாமிகள் மேலே நோக்கி, 'ஹரி அவ்டியோ' (ஹரி வந்துவிட்டார்) என்று உரக்கச் சொல்லியபடி பகவான் ஹரியின் தரிசனம் கண்ட மகிழ்ச்சியில் கலகலவென சிரித்து, முக்தி நிலை அடைந்தார்.
இந்த நிலை அடைய அவர் சௌராஷ்டிர மொழியில் அடிக்கடி இப்படிப் பாடினாராம்...
ஸெணமவி ஸேவ தீ ஸெரிர் வெக்ள கெரி தொர
ஸெர மிள்விலேத் ஸீன் திரயி (தொர் ஸெர)
ஸ்ரீலக்ஷ்மி தேவிஸெர அவி மொகொ தூபொவ்லே'
'விரைவில் வந்து சேவை சாதித்து, இந்த சரீரத்தில் இருந்து விடுவித்து, உன்னுடன் நான் சேர்ந்தால்தான், பிறந்து இறந்து என... பிறவிச் சுழலில் சிக்கியதால் ஏற் பட்ட களைப்பு தீரும். ஸ்ரீலட்சுமிதேவியுடன் வந்து என்னை உன்னிடத்தில் அழைத்துக் கொள்' என்று அவர் விரும்பியபடி திருமாலின் திவ்ய தரிசனம் பெற்று, பத்மாசனத்தில் இருந்தபடி முக்தி அடைந்தார் ஸ்ரீமந் நடனகோபால நாயகி சுவாமிகள். அவர் விரும்பிய வண்ணம், மதுரை- காதக்கிணறு பகுதியில் சுவாமிகளுக்கு பிருந்தாவனம் அமைந்தது. பீடத்தின் மேல், சுவாமிகளின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. அருகில் நின்ற கோலத்தில் சுவாமிகளின் உற்ஸவ விக்கிரகத்தையும் தரிசிக்கலாம்.
பிருந்தாவனக் கோயிலின் உள்ளே, ஸ்ரீருக்மிணி ஸ்ரீசத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி சந்நிதி உள்ளது. மூலவர் மற்றும் உற்ஸவர் விக்கிரகங்கள் கொள்ளை அழகு! எதிரில் தியான மண்டபம் ஒன்று அமைத்து வருகிறார்கள்.
ஒரு சுவாரஸ்யம்... சுவாமிகள் அவதரித்ததும், முக்தி அடைந் ததும் மார்கழி, வியாழக்கிழமையில்தான்! அவருடைய ஜன்ம தினமும், பிருந்தாவனத்துக்கு எழுந்தருளிய தினமும் மிருகசீரிஷ நட்சத்திரமே!
சித்திரைத் திருவிழாவின் போது, கள்ளழகர் மதுரைக்குச் செல்லும் போதும், திரும்பி வரும்போதும்... பிருந்தாவனத்துக்கு வந்து தரிசனம் தருகிறார் என்பது சுவாமிகளின் பெருமையைப் பறைசாற்றும்.
மதுரையில் இருந்து அழகர்கோவில் செல்லும் வழியில் சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது காதக் கிணறு. சாலையின் இடதுபுறத்தில் பிரமாண்டமாக அமைந்திருக்கிறது பிருந்தாவனக் கோயில். இங்கே வந்து சுவாமிகளை தரிசித்தால், குருவருளும் திருவருளும் கிடைப்பதை உணரலாம்!
- எஸ். ஜானகிராமன்
படங்கள்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
நன்றி: சக்தி விகடன்.
நன்றி: இக்கட்டுரையை எனக்கு அனுப்பிய மின் தமிழ் குழும நண்பர் கேசவன்
நன்றி: இக்கட்டுரையை மின்வருடி தன் பதிவில் இட்டிருக்கும் நண்பர் டி.எம். பாலாஜி
'ஹரி அவ்டியோ'
ReplyDelete'ஹரி அவ்டியோ'
'ஹரி அவ்டியோ'
மெள்ள எழுந்து
ReplyDeleteஹரி என்ற பேரரவம்
உள்ளம் புகுந்து
குளிர்ந்தேலோ!
ஸ்ரீமன் நடன கோபால நாயகி சுவாமிகள் கதையின் சுருக்கத்தை இங்கு இட்டமைக்கு நன்றி குமரன்!
தோற்றத்திலும் நாயகியாகவே திருவரங்கம் சென்ற நாயகி சுவாமிகளின் அனுபவங்கள் அலாதியானது! விரிவாக இடணும்!
மதுரையின் ஜோதி நாயகி சுவாமிகள் திருவடிகளே சரணம்!
//திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி வரும் பாதையில் முருகப் பெருமானின் சந்நிதிக்கு பின்புறம் உள்ள குக ஆஸ்ரமத்தில் தவம் புரிந்தார்... 12 வருடங்களாக!//
ReplyDelete//ஆண்டாளின் சந்நிதிக்கு வந்து தரிசித்தார். ஆண்டாளின் நாயகி ஸ்வரூபமான பக்தி உணர்வும்...//
:)
முருகா முருகா!
இது எனக்குத் தெரிஞ்ச ஒருத்தரின் விஷயம் போலவே இருக்கே!
முருகனைப் பற்றி, பெருமாளில் முடிந்த கதை! :)
தோழி கோதையின் மேல் நாயகி சுவாமிகள் பாடிய பாடல்கள் உள்ளனவா குமரன்?
http://nadanagopalanayaki.blogspot.com/2006/07/blog-post_28.html
ReplyDeletePlease see this post for Swamigal's song on andal.
'ஹரி அவ்டியோ' என்றால் கட்டுரையாளர் சொன்னது போல் 'ஹரி வந்துவிட்டார்' இல்லை. அவ்டியோ என்றால் வந்துவிட்டான்! :-)
ReplyDeleteநாயகி சுவாமிகளின் கதைச் சுருக்கமும் விரிவும் இது தான் இரவி. ஆங்காங்கே சில குறிப்புகள் தான் இங்கே சொல்லாமல் விட்டிருக்கிறார்கள். அவற்றை முடிந்த போது சொல்லலாம்.
'மதுரையின் ஜோதி' பதிவைப் பாருங்கள். சுவாமிகளின் நிறைய கீர்த்தனைகளை சிவமுருகன் இட்டிருக்கிறார்.
சுருக்கமா இருந்தாலும் நிறைவான பதிவு குமரன்.. வைகுண்ட ஏகாதசி அன்று எங்க ஊர்ல நாயகி சுவாமிகளின் திரூருவச் சிலை ஊர்வலம் நடந்தது.. இத்தனை வருடமும் அவரை ஒரு பாகவதர் என்ற அளவில் மட்டுமே தெரியும்.. அரங்கனுக்கு அவர் செய்த பணிகள் பற்றி அறிய நேர்ந்த போதே மேலும் தெரிந்து கொள்ள ஆவல் உண்டாகியது.. ஒவ்வொரு வருடமும் தை மாத ரத சப்தமியன்று சுமார் 30 குழுக்கள் எங்க பெருமாள் பின்னாடி அவரின் பாடல்களைப் பாடிக்கொண்டும், கோலாட்டமாக ஆடிக்கொண்டும் வருவார்கள்.. அற்புதமாக இருக்கும்.. நாயகி சுவாமிகள் வேடம் போடுபவர் அருமையாக இருப்பார்.. எனக்கென்னவோ அவர் மாதிரி தாடி வைத்தவர்களைப் பார்த்தாலே நாயகி சுவாமிகள் நினைவு தான் வரும்
ReplyDeleteமதுரையில் மட்டும் முன்பு நாயகி சுவாமிகளின் நினைவு நாள் ஊர்வலம் நடந்து கொண்டிருந்தத் இராகவ். இப்போது உங்கள் ஊரிலும் நடக்கிறது என்பதை அறிந்து மகிழ்ச்சி.
ReplyDeleteரத சப்தமியும் சௌராஷ்ட்ரர் வரலாற்றில் முக்கியமான ஒன்று; ரத சப்தமி விரதகதா மஹாத்மியம் என்ற நூல் சௌராஷ்ட்ரர்களின் 'புராண' வரலாற்றைக் கூறுகிறது. :-)
கோலாட்டத்திற்கு நாயகி சுவாமிகளின் பாடல்கள் மிகவும் பொருத்தமாக இருக்கும். என் திருமணத்திற்கு அந்த 'பிருந்தாவனக் கோலாட்டத்தை' திருமணத்திற்கு முதல் நாள் வைக்க வேண்டும் என்று விரும்பினேன். தம்பி சாயிபஜன் வைக்கலாம் என்று சொல்லவும் வீட்டில் எல்லோரும் சாயிபஜனுக்கே ஆதரவு தந்தார்கள். எங்கள் இருவர் திருமணத்திலும் முதல் நாள் சாயிபஜன் நடந்தது.
தாடி வைத்த தாத்தாக்கள் எல்லாம் சேந்தனுக்கு சான்டா க்ளாஸ்; உங்களுக்கு நாயகி சுவாமிகளா? சரி தான். :-)
//ரத சப்தமியும் சௌராஷ்ட்ரர் வரலாற்றில் முக்கியமான ஒன்று; ரத சப்தமி விரதகதா மஹாத்மியம் என்ற நூல் சௌராஷ்ட்ரர்களின் 'புராண' வரலாற்றைக் கூறுகிறது. :-)//
ReplyDeleteஅதை எப்போ எங்களுக்குச் சொல்லப் போறீங்க?
//என் திருமணத்திற்கு அந்த 'பிருந்தாவனக் கோலாட்டத்தை' திருமணத்திற்கு முதல் நாள் வைக்க வேண்டும் என்று விரும்பினேன். தம்பி சாயிபஜன் வைக்கலாம் என்று சொல்லவும் வீட்டில் எல்லோரும் சாயிபஜனுக்கே ஆதரவு தந்தார்கள்//
அதானே!
கண்ணபிரான் நான் இல்லாம எப்படிப் பிருந்தாவனக் கோலாட்டம்? அதான் போல...வீட்டில் ஒத்துக்கலை! :)
தாண்டியா ஆட்டம் அப்பறம் எப்ப தான் நடந்தது?
திராச ஐயா பதிவில் கொஞ்சமே கொஞ்சம் புராணம் சொல்லியிருக்கிறேன். படிச்சுப் பாருங்க இரவி.
ReplyDeleteSuper
ReplyDelete