Wednesday, January 13, 2010

கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 7 (பெரிய நம்பிகள், திருக்கச்சி நம்பிகள்)

"வா குமரன். எத்தனை நாளாயிற்று உன்னைப் பார்த்து. முன்பு வாரமொரு முறை வந்து கொண்டிருந்தாய். இப்போது பெரும் சம்சாரியாகிவிட்டாய் போலும். இந்த வாசுதேவனை மறந்தே விட்டாய். வருடமொரு முறை பார்ப்பதே அரிதாக இருக்கிறது."

"மன்னிக்க வேண்டும் ஐயா. உண்மை தான். கல்லூரி காலத்தில் வார இறுதியில் தவறாமல் வந்து உங்களிடம் கீதையும் பாசுரங்களும் கற்ற காலம் மிகவும் மகிழ்வான காலம். இப்போது வெளிநாட்டில் சென்று வசிப்பதால் மதுரைக்கு எப்போதோ ஒரு முறை தான் வருகிறேன். வரும் போது தான் உங்களை வந்து காண இயலுகிறது. மன்னிக்க வேண்டும்"

"பரவாயில்லை குமரா. மதுரை வரும் போதெல்லாம் வந்து பார்க்கிறாயே. அதுவே மகிழ்ச்சி"

"ஐயா. வழக்கம் போல் சில ஐயங்களுடன் தான் உங்களைக் காண இந்த முறையும் வந்திருக்கிறேன்"

"ஐயங்களா? சரி தான். கேள். கேள்"

"இராமானுசருக்கு ஆளவந்தார் குருவா? பெரிய நம்பிகள் குருவா?"

"பெரிய நம்பிகள் தான் எம்பெருமானாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்தவர். அதனால் அவரைத் தான் குருவாகக் கொள்ள வேண்டும். ஆனால் பெரிய நம்பிகள் இளையாழ்வாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்யும் போது ஆளவந்தாரே செய்வதாக எண்ணிக் கொள்ளும் படி கூறியதால் ஆளவந்தாரை எம்பெருமானாரின் குரு என்றும் சொல்லுவார்கள். (பஞ்ச சம்ஸ்காரம் - ஓர் உயிர், இறைவனுக்கே அடிமை என்பதை உறுதி செய்யும் ஐந்து பகுதிகளைக் கொண்ட ஒரு சடங்கு)

அது மட்டுமில்லை குமரன். ஆளவந்தாரின் ஐந்து சீடர்களிடம் எம்பெருமானார் வைணவ சமயத்தின் பல கூறுகளைக் கற்றார். அதனால் அந்த ஐந்து ஆசாரியர்களும் இராமானுசரின் ஆசாரியர்களே. சமயம் என்னும் நதி ஆளவந்தார் என்னும் ஒற்றை உருவில் இருந்து அவரின் ஐந்து சீடர்கள் என்னும் கிளை நதிகளாக மாறி பின்னர் இராமானுசரிடம் மீண்டும் ஒன்றாகக் கலந்தது என்று இதனைச் சுவையுடன் கூறுவார்கள்".

"இராமானுசரின் ஆசாரியர்களைப் பற்றி மேலும் சொல்லுங்கள் ஐயா".

"முதலில் இராமானுசரின் இரு ஆசாரியர்களைப் பற்றி சொல்கிறேன். கேள். அவ்விருவர்கள் பெரிய நம்பிகளும் திருக்கச்சி நம்பிகளும்".

"திருக்கச்சி நம்பிகளா? அவர் காஞ்சி வரதனுக்கு திருவாலவட்டக் கைங்கரியம் (விசிறும் பணி) செய்யும் போது வரதன் அவருடன் நேரில் பேசுவார் என்று படித்திருக்கிறேன். சரி தானா?"

"ஆமாம் குமரன். அவரே தான்"

***

இராமானுசர் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் தீர்த்த கைங்கரியம் செய்து கொண்டிருக்கிறார். பெருமாளின் அபிசேகத்திற்கும் மற்ற கோவில் பயன்பாடுகளுக்கும் பக்கத்தில் இருக்கும் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதே அந்தப் பணி. அப்படி தொண்டு செய்து வரும் போது ஒரு முறை திருக்கோவிலில் திருக்கச்சி நம்பிகளைக் காணுகிறார்.

"வாரும் இளையாழ்வாரே. நலம் தானே?!"

"தேவரீர் ஆசிகளினால் அடியேன் நலமுடன் இருக்கிறேன் சுவாமி".

"ஆனால் உங்கள் முகம் ஏதோ குழப்பத்தால் வாடியிருக்கிறதே. அது ஏன்?"

"சுவாமி. அடியேன் மனத்தில் சில கேள்விகள் இருக்கின்றன. தேவரீர் திருவுளம் இரங்கி வரதனிடம் அக்கேள்விகளுக்கு விடை பெற்றுத் தரவேண்டும்".

"வருந்த வேண்டாம். உம் கேள்விகளுக்கு வரதனின் விடை என்ன என்று இன்றைய திருவாலவட்டப் பணியின் போது கேட்டுச் சொல்கிறேன்".

**

"காஞ்சிபூர்ணரே. ஏதோ எம்மைக் கேட்க எண்ணியிருந்தீர் போலிருக்கிறதே. ஏன் கேட்காமல் இருக்கின்றீர்?"

"சுவாமி. தேவரீர் திருக்கட்டளையை எதிர்நோக்கியே காத்திருந்தேன். இளையாழ்வார் ஏதோ கேள்விகளைத் தன் மனத்தில் கொண்டிருக்கிறாராம். அவற்றிற்கான விடைகளை உங்களிடம் கேட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறார். தேவரீர் திருவுளம் இரங்கிச் சொல்லியருள வேண்டும்"

"ஓ. இராமானுசனின் கேள்விகளா? அவை மிகப் பெரியவை. அந்த ஆறு கேள்விகளுக்கு ஆறு வார்த்தைகள் விடைகளாகச் சொல்கிறேன். சென்று அவனிடம் சொல்லும்".

"ஆகட்டும் சுவாமி. அந்த ஆறு வார்த்தைகளைச் சொல்லியருள வேண்டும்".

"பரதத்துவம் நாமே.

பேதமே தரிசனம்.

உபாயமும் பிரபத்தியே.

அந்திமஸ்மிருதியும் வேண்டாம்.

பிறப்பின் இறுதியில் மோட்சம்.

பெரியநம்பிகளைக் குருவாக அடையட்டும்.


இவையே அந்த ஆறு வார்த்தைகள் கஜேந்திர தாசரே."

***


"இளையாழ்வாரே. வரதன் அருளிய ஆறு வார்த்தைகள் இவை. உமது திருவுள்ளத்தில் கொண்டிருக்கும் கேள்விகளுக்கு இவை சரியான விடைகள் தானா என்று பாரும்".

வரதன் சொன்ன ஆறு வார்த்தைகளைச் சொல்கிறார்.

"ஆகா. அடியேன் தங்களுக்குப் பெரும் நன்றியுடையவன் ஆனேன் சுவாமி. பெருமாளின் பதில்கள் என் மனத்தில் இருக்கும் குழப்பங்களை எல்லாம் நீக்கின".

"அவ்வாறு நீர் நினைத்ததும் என்ன? வரதன் சொன்னதும் என்ன?"

"வேதங்களும் சாத்திரங்களும் பரதெய்வம் என்று பல தெய்வங்களைக் குறிக்கின்றன. எல்லா சம்பிரதாயத்தாரும் நாராயணனே பரம்பொருள் என்று அறுதியிட்டாலும் வேதங்களை நேரடியாகப் படித்துப் பார்த்தால் மற்ற தேவதைகளையும் பரம்பொருள் என்று வேதம் சொல்வதைப் பார்க்க முடிகிறது. அதனால் குழப்பம் கொண்டிருந்தேன். மாயாவாதத்தார், பரசமயத்தார் முதற்கொண்டு முன்னோர் பலரும் சாதித்த படியே பரதத்துவம் தாமே என்று வரதன் பறை சாற்றினான்.

முத்தத்துவங்களான இறை, உயிர், இயற்கை என்னும் இவை ஒரே பொருள் தான் என்றும் வெவ்வேறு என்றும் கூறும் வேத வாக்கியங்கள் இருக்கின்றன. இவற்றுள் எதனை முதன்மையாகக் கொள்ள வேண்டும் என்ற குழப்பம் இருந்தது. இயல்பில் உயிரும் இயற்கையும் இறையின் பகுதிகளாக இருப்பதால் அவை ஒன்றே என்று சொல்லலாம் என்றாலும் அவற்றின் இடையே இருக்கும் வேறுபாடுகளும் உண்மை என்பதால் அவை வெவ்வேறானவை என்று கொள்வதே சமயக் கொள்கை என்று பொருள்படும்படி பேதமே தரிசனம் என்று சொன்னான் வரதன்.

வேத வேதாந்தங்களில் இறைவனை அடையும் வழிகளாகப் பல வழிகளும் சொல்லியிருக்க எந்த நிலையிலும் இறைவனுக்கே அடிமையான உயிர் அந்த வழிகளைக் கடைபிடிப்பது எங்ஙனம் என்று வருந்தியிருந்தேன். உயிருக்கும் இறைக்கும் இயற்கையாக அமையும் அந்த தொடர்பிற்குத் தகுந்த வழியான - அவனே கதி என்று இருக்கும் - பிரபத்தியே வழி என்று சொன்னான் பேரருளாளன்.

அப்படி இயற்கை தொடர்பினாலே நாராயணனே நமக்கே பறை தருவான் என்று இருக்கும் பிரபத்தி வழியில் நின்றால் கீதையில் கண்ணன் சொன்னது போன்ற மரண காலத்தில் அவனை நினைப்பது என்ற அந்திம ஸ்மிருதி இயல்பின் வழியில் தானே அமையலாம்; அமையாமலும் போகலாம். அவ்வாறு அமையாமல் போனால் அவ்வுயிரின் கதி என்ன என்று கலங்கியிருந்தேன். அப்போதைக்கிப்போதே சொல்லி வைத்தால் போதும்; அந்திமஸ்மிருதியும் வேண்டாம் என்று அருளினான் அத்திகிரி காளமேகம்.

அந்திமஸ்மிருதி இல்லையேல் அவ்வுயிருக்கு விடுதலை உண்டா என்ற கேள்விக்கு அப்பிறப்பின் இறுதியில் மோட்சம் என்று அருளினான் அச்சுதன்.

தேவரீரைக் குருவாக வரித்தேன்; தேவரீர் சாத்திர மரியாதையைச் சொல்லி தவிர்த்துவிட்டீர்கள். அதனால் நற்கதிக்கு வழியேது என்று கலங்கியிருந்தேன். பெரிய நம்பிகளை குருவாக அடைய வழி காட்டினான் வரதன்."

"ஆகா. அருமை அருமை இளையாழ்வாரே. ஆளவந்தார் 'ஆமுதல்வன் இவன்' என்று உம்மை குளிர கண் பார்வை செய்தது மிகப் பொருத்தமே. வரதன் காட்டிய வழியில் பெரிய நம்பிகளை சென்று அடையுங்கள்".

***

வரதன் காட்டிய வழியிலே பெரிய நம்பிகளை ஆசாரியராக அடைந்து அவர் காட்டிய வழியில் ஆளவந்தாருக்குப் பின்னர் வைணவ தலைமைப் பீடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார் இளையாழ்வார் எம்பெருமானார் இராமானுசர். ஆளவந்தாருக்கு வந்த இராசபிளவை என்ற நோயை தான் அடைந்து அதனால் நோயுற்று வருந்திக் கொண்டிருக்கிறார் ஆளவந்தாரின் சீடர் மாறனேரி நம்பிகள். இவர் தாழ்ந்த குலம் என்று அக்காலத்தில் கருதப்பட்ட குலத்தில் பிறந்தவர். அந்தணரான பெரிய நம்பிகள் தன்னுடைய ஆத்ம சகோதரரான மாறனேரி நம்பிகள் ஆசாரிய பிரசாதமாக இந்த நோயை அடைந்து வருந்திக் கொண்டிருப்பதைக் கண்டு அவருக்குப் பணிவிடைகள் செய்து வருகிறார். மாறனேரி நம்பிகள் தம் காலம் முடிந்து ஆசாரியன் திருவடிகளை அடைந்த போது (காலமான போது) அவருடைய திருவுடலுக்கு அந்தணர்களுக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்து எரியூட்டுகிறார் பெரிய நம்பிகள்.

"கேட்டீர்களா இந்த அநியாயத்தை. பிராமண குலத்தில் பிறந்து சாத்திர மரியாதையையே கெடுத்துவிட்டார் பெரிய நம்பி".

"ஆமாம் ஆமாம். இது பெரிய துரோகம் தான். காலம் சென்றவர் என்ன தான் தன் ஆசாரியரின் இன்னொரு சீடர் என்றாலும் சாத்திரம் சொன்ன வழி நடப்பது தானே அவருக்கும் அழகு; அவருடைய ஆசாரியருக்கும் அழகு. இப்படி ஒரு காரியத்தை அவர் செய்யலாமா?"

"இப்படி சாத்திரம் காட்டிய வழியிலிருந்து தவறிய பெரிய நம்பியை நாம் அனைவரும் ஒதுக்கி வைக்க வேண்டும். இனி மேல் நாம் யாருமே அவருடன் எந்தவித சம்பந்தமும் வைத்துக் கொள்ளக் கூடாது. இது நம் அனைவரையும் கட்டுப்படுத்தும். ஒத்துக் கொள்கிறீர்களா?"

"சரி தான். ஒத்துக் கொள்கிறோம். ஒத்துக் கொள்கிறோம்"

நாட்கள் செல்கின்றன. சாதிக்கட்டுப்பாட்டின் படி திருவரங்கத்து அந்தணர்கள் எல்லோரும், ஆளவந்தாரின் தொடர்பு கொண்டவர்களைத் தவிர்த்து மற்ற அந்தணர்கள் எல்லோரும், பெரிய நம்பிகளுடன் எந்த வித தொடர்பும் இல்லாமல் இருக்கின்றனர். இது இராமானுசரின் திருவுள்ளத்தை நோகடிக்கிறது. இதற்குத் திருவரங்கனே வழி செய்ய வேண்டுமென்று வருந்தியிருக்கிறார்.

அப்போது திருவிழாக்காலம். அரங்கன் தனது திருத்தேரில் ஏறி வீதி வலம் வந்து கொண்டிருக்கிறான்.

"அடடா. இதென்ன தேர் நகர மாட்டேன் என்கிறதே. அனைவரும் கூடி இன்னும் நன்கு வலித்து இழுங்கள்".

"ஐயா. அனைத்து முயற்சிகளும் செய்தாயிற்று. என்ன முயன்றாலும் தேர் நகரவே மாட்டேன் என்கிறது".

"திருத்தலத்தாரே. இப்போது என்ன செய்வது?"

"அதைத் தான் நாமும் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு முன்னர் இப்படி நிகழ்ந்ததுண்டா?"

"இல்லை. இதுவே முதன்முறை."

"அப்படியென்றால் அரங்கனைத் தான் வேண்டிக் கொள்ள வேண்டும்."

"அரங்கா. இந்த சோதனையிலிருந்து எங்களை விடுவிக்க நீயே வழி காட்டியருள வேண்டும்".

அருச்சகர் மேல் அரங்கனின் ஆவேசம் ஏற்படுகிறது.

"திருத்தலத்தாரே. என் அடியவன் ஒருவனுக்கு இவ்வூர் மக்கள் தீங்கு இழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவனை ஒதுக்கிவைத்து இவர்கள் துன்புறுத்துவதால் வருந்தி இப்போது தன் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறான் என் அடியவன். அவனிடம் இவர்கள் மன்னிப்பு கேட்டுக் கொண்டு அவனை வெளியே அழைத்து வந்து தீர்த்தம் சடாரி முதலிய மரியாதைகளைச் செய்தால் தான் தேர் நகரும்".

"ஆகா. அப்படிப்பட்ட அடியவர் யார்? யார் வீட்டின் முன் தேர் இப்போது நிற்கிறது? ஓ இது பெரிய நம்பிகளின் வீடு அல்லவா? அவரைத் தான் அரங்கன் சொல்கிறான்.

ஊரார்களே. அரங்கனின் கட்டளையை நீங்கள் கேட்டீர்கள். அதன் படியே நாம் செய்ய வேண்டும். வாருங்கள் சென்று பெரிய நம்பிகளைப் பணிந்து அழைத்து வருவோம்"

அரங்கனின் கட்டளைப்படி பெரிய நம்பிகளை அழைத்து வந்து தீர்த்த சடாரி மரியாதைகளைச் செய்த பின்னர் தேர் நகர்கிறது. அன்று முதல் முன் போலவே ஊரார்கள் பெரிய நம்பிகளுடன் அனைத்து தொடர்புகளையும் கொள்கின்றனர். இளையாழ்வாரின் திருவுள்ளமும் மகிழ்ந்திருக்கிறது.

**

"ஆசாரியர்களின் திருக்கதைகளைச் சொன்னதற்கு நன்றி ஐயா. அவர்களது வாழித் திருநாமத்தின் பொருள் இப்போது நன்கு புரிகிறது."

"வாழித் திருநாமமா? சொல் குமரா. மீண்டும் ஒரு முறை கேட்டால் ஆனந்தமாக இருக்கும்"

"பெரிய நம்பிகளின் வாழித் திருநாமம்:



அம்புவியில் பதின்மர் கலை ஆய்ந்துரைப்போன் வாழியே
ஆளவந்தார் தாளிணையை அடைந்துய்ந்தோன் வாழியே
உம்பர் தொழும் அரங்கேசர்க்கு உகப்புடையோன் வாழியே
ஓங்கு தனுக் கேட்டை தன்னில் உதித்த பிரான் வாழியே
வம்பவிழ்தார் வரதர் உரை வாழி செய்தான் வாழியே
மாறனேர் நம்பிக்கு வாழ்வளித்தான் வாழியே
எம்பெருமானார் முனிவர்க்கு இதம் உரைத்தான் வாழியே
எழில் பெரிய நம்பி சரண் இனிதூழி வாழியே


அம்புவியில் பதின்மர் கலை ஆய்ந்துரைப்போன் வாழியே. அழகிய இந்த உலகத்தில் பத்து ஆழ்வார்களது பாசுரங்களை ஆய்ந்து உரைப்பவன் வாழ்க.

ஆளவந்தார் தாளிணையை அடைந்து உய்ந்தோன் வாழியே. ஆளவந்தாரது திருவடிகள் இரண்டினையும் அடைந்து உய்வு அடைந்தவன் வாழ்க.

உம்பர் தொழும் அரங்கேசர்க்கு உகப்புடையோன் வாழியே. ஊரெல்லாம் ஒதுக்கி வைத்தாலும், தேவர்களும் தொழும் திருவரங்கநாதன் அவன் திருத்தேரை இவர் திருமாளிகை முன்பு நிறுத்தி அதன் மூலம் இவர் மேல் அவனுக்கு இருக்கும் உகப்பை ஊரெல்லாம் அறியும் படி செய்தான். அப்படி அரங்கேசனின் உகப்பை உடையவன் வாழ்க.

ஓங்கு தனுக் கேட்டை தன்னில் உதித்த பிரான் வாழியே. பெருமையில் சிறந்த மார்கழி மாதக் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த தலைவன் வாழ்க.

வம்பவிழ்தார் வரதர் உரை வாழி செய்தான் வாழியே. மணம் மிகுந்த தாரை (மலர் மாலையை) அணிந்த வரதரின் ஆறு வார்த்தைகள் உண்மை ஆகும் படி இராமானுசருக்கு குருவாக அமைந்தவன் வாழ்க.

மாறனேர் நம்பிக்கு வாழ்வளித்தான் வாழியே. நம்மாழ்வாருக்கு நேரான மாறனேர் நம்பிகளின் இறுதிச் சடங்குகளைச் செய்து அவர் நல்கதி அடையவைத்தவன் வாழ்க.

எம்பெருமானார் முனிவர்க்கு இதம் உரைத்தான் வாழியே. எம்பெருமானாராம் இராமானுசமுனிவருக்கு நன்மையான சமயக்கருத்துக்களைச் சொன்னவன் வாழ்க.

எழில் பெரியநம்பி சரண் இனிது ஊழி வாழியே. அழகுடைய பெரிய நம்பிகளின் திருவடிகள் இனிது எல்லா காலங்களிலும் வாழ்க வாழ்க.

திருக்கச்சி நம்பிகளின் வாழித் திருநாமம்:



மருவாரும் திருமல்லி வாழ வந்தோன் வாழியே
மாசி மிருகசீரிடத்தில் வந்துதித்தான் வாழியே
அருளாளருடன் மொழி சொல் அதிசயத்தோன் வாழியே
ஆறு மொழி பூதூரர்க்கு அளித்த பிரான் வாழியே
திரு ஆலவட்டம் செய்து சேவிப்போன் வாழியே
தேவராச அட்டகத்தைச் செப்புமவன் வாழியே
தெருளாரும் ஆளவந்தார் திருவடியோன் வாழியே
திருக்கச்சி நம்பி இரு திருவடிகள் வாழியே


மருவாரும் திருமல்லி வாழ வந்தோன் வாழியே - மலர்களின் மகரந்தங்கள் எங்கும் விளங்கும் பூந்தண்மல்லி (பூவிருந்தவல்லி, பூந்தமல்லி) என்றும் பெயர் பெற்று விளங்குமாறு அந்த ஊரில் பிறந்தவன் வாழ்க.

மாசி மிருகசீரிடத்தில் வந்துதித்தான் வாழியே - மாசி மாத மிருகசீரிட நட்சத்திரத்தில் வந்து உதித்தவன் வாழ்க.

அருளாளருடன் மொழி சொல் அதிசயத்தோன் வாழியே - பேரருளாளனாம் காஞ்சிபுரம் வரதராசப் பெருமாளுடன் நேரடியாகப் பேசும் அதிசயம் செய்தவன் வாழ்க.

ஆறு மொழி பூதூரர்க்கு அளித்த பிரான் வாழியே - ஆறு வார்த்தைகளை திருப்பெரும்பூதூரில் பிறந்த பூதூரராம் இராமானுசருக்காக வரதராசப் பெருமாளிடம் கேட்டுச் சொன்ன தலைவன் வாழ்க.

திரு ஆலவட்டம் செய்து சேவிப்போன் வாழியே - பேரருளாளப் பெருமாளுக்கு விசிறி வீசும் சேவையைச் செய்தவன் வாழ்க.

தேவராச அட்டகத்தைச் செப்புமவன் வாழியே - அந்தப் பெருமாளின் மேல் தேவராச அட்டகம் என்ற துதி நூலைச் செய்தவன் வாழ்க.

தெருளாரும் ஆளவந்தார் திருவடியோன் வாழியே - மயக்கம் தீர்ந்த/தீர்க்கும் ஆளவந்தாரின் திருவடிகளை அடைந்தவன் வாழ்க.

திருக்கச்சி நம்பி இரு திருவடிகள் வாழியே - திருக்கச்சி நம்பிகளின் இரு திருவடிகளும் வாழ்க வாழ்க."

***

அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்!

23 comments:

  1. பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  2. பொங்கல் வாழ்த்துகள் குமரன்.. அரங்கனை தரிசிக்க வந்திருக்கும்போது இவ்விரு ஆசார்ய புருஷர்களை பற்றி படிக்கக் கிடைத்தது பாக்கியமே !!

    ReplyDelete
  3. //உம் கேள்விகளுக்கு வரதனின் விடை என்ன என்று இன்றைய திருவாலவட்டப் பணியின் போது கேட்டுச் சொல்கிறேன்"//

    குமரன் திருக்கச்சி நம்பிகள் மூலவர் வரதனுக்கு ஆலவட்ட கைங்கர்யம் செய்தாரா அல்லது உற்சவருக்கா ?? உற்சவர் தானே யாக வேள்வியில் உதித்தவர்.. சிலர் திருக்கச்சி நம்பிகள் கருவறையில் சென்று ஆலவட்ட கைங்கர்யம் செய்யவில்லை, கச்சிக்கு வாய்த்தான் மண்டபத்தில் வைத்து உற்சவருக்கு கைங்கர்யம் செய்து வந்தார் என்று சொல்கிறார்கள். எது சரி?

    ReplyDelete
  4. //அந்த ஆறு கேள்விகளுக்கு ஆறு வார்த்தைகள் விடைகளாகச் சொல்கிறேன்.//
    வேளுக்குடி ஸ்வாமிகள், 5 கேள்விகளுக்கு ஆறு பதில்கள் என்று சொல்வார்.. பரதத்துவம் நானே என்பது பெருமாளின் Self Declaration அவரே சொல்லிக் கொள்ளுமளவுக்கு நாம் வைத்து விட்டோம் என்று சொல்வார்.

    ReplyDelete
  5. தேவப்பெருமானின் ஆறு வார்த்தைகள் தானே விசிஷ்டாத்வைத தத்துவம் ?

    ReplyDelete
  6. அந்திமஸ்மிருதின்னா என்ன குமரன் ? கொஞ்சம் விளக்குங்களேன்.

    ReplyDelete
  7. Vanakkam sir,
    pongal suvaithen,sunaithen,it is really interesting to read about guruparamrai,vande guruparamparam.
    ARANGAN ARULVANAGA.
    anbudan
    srinivasan.

    ReplyDelete
  8. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் குமரன் அண்ணா!
    மற்றும் மார்ட்டின் லூதர் கிங் தின வாழ்த்துக்கள்!

    இந்த இடுகை துவயம் போன்று இரட்டையா?
    இரண்டு ஆசார்யர்கள் இப்பதிவில் திருவடி சார்த்தி உள்ளார்களே! அருமை!

    ReplyDelete
  9. //சிலர் திருக்கச்சி நம்பிகள் கருவறையில் சென்று ஆலவட்ட கைங்கர்யம் செய்யவில்லை, கச்சிக்கு வாய்த்தான் மண்டபத்தில் வைத்து உற்சவருக்கு கைங்கர்யம் செய்து வந்தார் என்று சொல்கிறார்கள். எது சரி?//

    அதானே!
    எது சரி?

    ReplyDelete
  10. //பரதத்துவம் நானே என்பது பெருமாளின் Self Declaration அவரே சொல்லிக் கொள்ளுமளவுக்கு நாம் வைத்து விட்டோம் என்று சொல்வார்//

    அவரே சொல்லிக் கொண்ட பின்னும், நாம் ஒப்புக் கொள்கிறோமா என்பது இன்னொரு விஷயம்! :)

    அதெல்லாம் அவரே சொல்லிக்கிட்டா எப்படி?
    நாராயணனே நமக்கே பறை தருவான்-ன்னு இன்னொருத்தி வந்து சொன்னா கேப்பாய்ங்க! இவரே இவரைப் பத்தி பெருமை பேசிக்கிட்டா நல்லாவா இருக்கு? :)

    ReplyDelete
  11. //கல்லூரி காலத்தில் வார இறுதியில் தவறாமல் வந்து உங்களிடம் கீதையும் பாசுரங்களும் கற்ற காலம் மிகவும் மகிழ்வான காலம்//

    வாசுதேவன் என்ற இன்னொரு ஆச்சார்யரும் பதிவில் இருக்கிறாரே!

    வாசுதேவன் ஐயாவுக்கு வந்தனங்கள்!

    ReplyDelete
  12. //வேத வேதாந்தங்களில் இறைவனை அடையும் வழிகளாகப் பல வழிகளும் சொல்லியிருக்க எந்த நிலையிலும் இறைவனுக்கே அடிமையான உயிர் அந்த வழிகளைக் கடைபிடிப்பது எங்ஙனம் என்று வருந்தியிருந்தேன்//

    உம்ம்ம்ம்ம்

    //உயிருக்கும் இறைக்கும் இயற்கையாக அமையும் அந்த தொடர்பிற்குத் தகுந்த வழியான - அவனே கதி என்று இருக்கும் - பிரபத்தியே வழி என்று சொன்னான் பேரருளாளன்//

    :)

    அப்போ கீதையில் சொன்னதை, இன்னொரு முறை, நமக்காக மெனக்கெட்டு, ரிப்பீட் வேற பண்ணி இருக்கானா?
    அப்படி இருந்துமா நான் ஒத்துக்க மாட்டேங்குறேன்? அடக் கடவுளே! :)

    எம்பெருமானே...
    ஸ்ரீமன் நாராயண சரணெள சரணம் ப்ரபத்யே
    ஸ்ரீமதே நாராயணாய நம:

    ReplyDelete
  13. //வேதங்களை நேரடியாகப் படித்துப் பார்த்தால் மற்ற தேவதைகளையும் பரம்பொருள் என்று வேதம் சொல்வதைப் பார்க்க முடிகிறது//

    அப்படியா? வேதங்களில் "பரப்பிரம்ம" வாசகம் பல தேவதைகளுக்கும் சொல்லப்பட்டிருக்கா குமரன்?

    //எல்லா சம்பிரதாயத்தாரும் நாராயணனே பரம்பொருள் என்று அறுதியிட்டாலும்//

    புரியவில்லை! இதற்கு முன் சொன்ன வரிகள் வேறு மாதிரி இருக்க, எப்படி எல்லா சம்பிரதாயத்தாரும் நாராயணனே பரம்பொருள் என்று அறுதியிடுவார்கள்?

    ReplyDelete
  14. //இயல்பில் உயிரும் இயற்கையும் இறையின் பகுதிகளாக இருப்பதால் அவை ஒன்றே என்று சொல்லலாம் என்றாலும்

    அவற்றின் இடையே இருக்கும் வேறுபாடுகளும் உண்மை என்பதால்

    அவை வெவ்வேறானவை என்று கொள்வதே சமயக் கொள்கை என்று பொருள்படும்படி பேதமே தரிசனம் என்று சொன்னான் வரதன்//

    ஏதோ கொஞ்சம் சுமாராப் புரிஞ்சுது குமரன்! ஆனா முழுக்கப் புரியலை!

    ReplyDelete
  15. //ஆமாம் ஆமாம். இது பெரிய துரோகம் தான். காலம் சென்றவர் என்ன தான் தன் ஆசாரியரின் இன்னொரு சீடர் என்றாலும் சாத்திரம் சொன்ன வழி நடப்பது தானே அவருக்கும் அழகு; அவருடைய ஆசாரியருக்கும் அழகு. இப்படி ஒரு காரியத்தை அவர் செய்யலாமா?"//

    :)

    சாத்திரம் இதற்கு உட்பட்டு, இன்னொரு மாற்று விதி (விதிவிலக்கு) வைத்திருக்குமே! அதைக் காட்டி ஏனோ பெரிய நம்பிகள் தம்மைக் தற்காத்துக் கொள்ளவில்லை போலும்!

    ReplyDelete
  16. //திரு ஆலவட்டம் செய்து சேவிப்போன் வாழியே//

    உக்கம் என்பதும் விசிறி தான்! உக்கமும் தட்டொளியும் என்கிறாள் தோழி கோதை!
    ஆலவட்டம் என்ற பெயர் எப்படி வந்தது குமரன்? வட்டமாக இருப்பதாலா? அது என்ன ஆல+வட்டம்?

    ReplyDelete
  17. இதோ, வழமை போல் இன்னொரு கலையில் வாழித் திருநாமம்! (பெரிய நம்பிகளுக்கு மட்டும்)

    மணி மாட மதிள் அரங்கத்து அவதரித்தான் வாழியே!
    மார்கழியில் நற் கேட்டை மாண வந்தான் வாழியே!

    குண மிகுந்த ஆளவந்தார் அடி தொழுதோன் வாழியே!
    குருக்களுக்குள் முக்கியனாய்க் கூறி நின்றான் வாழியே!

    துணை கெழு சீர் பராங்குசர்க்கு தொண்டன் ஆனான் வாழியே!
    துன்பில்லா உடையவர்க்கு தேசிகன் தான் வாழியே!

    மணம் மகிழும் தத்துவத்தின் வளம் அளித்தான் வாழியே!
    வண் புகழார் பெரியநம்பி மலர்ப்பதங்கள் வாழியே!

    ReplyDelete
  18. நன்றி திகழ். உங்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. நன்றி இராகவ். உங்களுக்கும் வாழ்த்துகள். திருக்கச்சி நம்பிகள் வரதனுக்கு திருவாலவட்டக் கைங்கர்யம் செய்த போது மூலவருக்குச் செய்தாரா உற்சவருக்குச் செய்தாரா என்பதை இனி மேல் தான் கவனித்துப் படிக்க வேண்டும் இராகவ். படித்த வரையில் குறிப்பிட்டுச் சொன்னதாகத் தெரியவில்லை. இதே கேள்வியை ஏற்கனவே ஒரு முறை கேட்ட போது இரவி ஏதோ பதில் சொன்னார்; என்ன சொன்னார் என்பது தான் வழக்கம் போல் மறந்துவிட்டது.

    ஆறு கேள்விகளுக்கு ஆறு வார்த்தைகளா ஐந்து கேள்விகளுக்கு ஆறு வார்த்தைகளா என்று தெரியவில்லை இராகவ். பெருமாள் சொன்னவை ஆறு வார்த்தைகள் என்று மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆமாம். ஏறக்குறைய இந்த ஆறு வார்த்தைகள் தான் விசிஷ்டாத்வைதம்.

    இறக்கும் தருவாயில் எதனை நினைக்கிறோமோ அதற்கேற்ற பிறவியே அடுத்து வரும் என்பது இந்து மதக் கருத்து. கீதையிலும் பகவான் அந்திமஸ்மிருதியைப் பற்றி நிறைய பேசுவார். வைராக்கியத்தில் சிறந்த ஜடபரதன் தான் வளர்த்த மானை நினைத்துக் கொண்டே இறந்ததால் மறு பிறவியில் மானாகப் பிறந்ததும், வாழ்நாள் முழுக்க பாவமே செய்த அஜாமிளன் தன் மகனின் பெயரான நாராயண நாமத்தைச் சொல்லிக் கொண்டே இறந்ததால் வைகுண்டம் சென்றதும் அந்திமஸ்மிருதிக்கு எடுத்துக்காட்டுகளாக்ச் சொல்லுவார்கள். வரதன் பிரபத்தி செய்தவர்களுக்கு அந்திமஸ்மிருதி மோட்சமடைய ஒரு நிபந்தனை இல்லை என்று ஆறுவார்த்தைகளில் சொல்லியிருக்கிறான்.

    ReplyDelete
  20. //இதே கேள்வியை ஏற்கனவே ஒரு முறை கேட்ட போது இரவி ஏதோ பதில் சொன்னார்; என்ன சொன்னார் என்பது தான் வழக்கம் போல் மறந்துவிட்டது//

    :)))

    //சிலர் திருக்கச்சி நம்பிகள் கருவறையில் சென்று ஆலவட்ட கைங்கர்யம் செய்யவில்லை, கச்சிக்கு வாய்த்தான் மண்டபத்தில் வைத்து உற்சவருக்கு கைங்கர்யம் செய்து வந்தார் என்று சொல்கிறார்கள். எது சரி?//

    திருக்கச்சி நம்பிகள் கருவறைக்குள் போக முடிந்ததா என்பது தான் விவாதப் பொருளா?
    இதோ இரண்டு நிகழ்வுகள்!

    1. பேரருளாளன் (மூலவர்) அவர் கருவறைக் கதவை அடைக்கும் முன்னரே, கூரேசன் வீட்டுக் கதவு அடைக்கும் சத்தம் கேட்டு, "என்ன சத்தம் அது"? என்று திருக்கச்சி நம்பிகளைக் கேட்டார். இது பலரும் அறிந்த ஒன்றே!

    கருவறைக் கதவை அடைக்கும் முன்னர், இன்னொரு கதவு அடைபடும் சத்தம் என்றால் என்ன?

    கருவறைக்குத் தான் கதவு இருக்கு!
    கச்சிக்கு வாய்த்தான் மண்டபத்தில் கதவு இல்லையே! அது உற்சவர் கொலுவிருக்க அமரும் தனி மேடை தானே!

    அப்படின்னா, இந்த நிகழ்வு கருவறைக்குள் அல்லவா நிகழ்ந்து இருக்கும்?
    அப்படின்னா, திருக்கச்சி நம்பிகள் கருவறைக்குள் அல்லவா ஆலவட்டம் வீசிக் கொண்டு இருந்திருப்பார்?

    2. பொதுவாக, கொண்டாட்டங்கள் முடிந்த பின்னர், உற்சவரும் கருவறைக்குள்ளேயே தான் வைக்கப்படுகிறார்! அப்போது அங்கும் ஆலவட்டம் வீச வேண்டி இருந்திருக்குமே!

    வரதன் கருவறையில் யக்ஞ வாசம் வீசும் என்பார்கள்! அப்படின்னா யக்ஞத்தில் (வேள்வியில்) தோன்றியது மூலவரா? உற்சவரா? :)

    ReplyDelete
  21. மூலவர், உற்சவர் என்ற பாகுபாடு இல்லை!

    திருக்கச்சி நம்பிகள், ஆலவட்ட கைங்கர்யம் என்பதை...
    வரதனுக்குச் செய்தார்! அவ்வளவு தான்!

    * வரதன் கச்சிக்கு வாய்த்தான் மண்டபத்தில் இருந்தால், அப்போது அங்கு ஆலவட்டம் செய்தார்!
    * வரதன் கருவறையில் இருந்தால், அப்போது கருவறையில் ஆலவட்டம் செய்தார்!

    கருவறையில் இருந்து செய்யும் போது தான், கூரேசன் வீட்டுக் கதவடைக்கும் சத்தம் கேட்டு, பெருமாள் நம் கதவை அடைக்கும் முன், இது என்ன சத்தம் என்று கேட்டது!
    போதுமா ராகவ்? :)

    ReplyDelete
  22. நீங்களும் சொன்னது தான் இரவி. ருத்ரம் முதலான வேத பாகங்களில் மற்ற தெய்வங்களும் பரம் என்று சொல்லலாம்படி வேத வாக்கியங்கள் இருக்கின்றன தானே. ஆனால் அனைத்து ஆசாரியர்களும் நாராயணனே பரம்பொருள் என்று பொருள் கொண்டிருக்கிறார்கள்; நிர்க்குண நிராகார பிரம்மத்தைப் பற்றி பேசும் ஆதிசங்கரரும் சகுண சகாரமான ஈஸ்வரன் என்னும் போது நாராயணனே மற்ற தெய்வங்களுக்கு எல்லாம் முதன்மையானவன் என்று சொல்வதைப் படித்திருக்கிறோம். அது தான் இடுகையிலும் வந்திருக்கிறது.

    அடுத்த கேள்விக்குப் பதிலும் அதே போல் நீங்கள் அடுத்த இடுகையின் பின்னூட்டத்தில் சொன்னது தான். உயிரும் இயற்கையும் இறையின் பகுதிகள்; அதனால் இறை மட்டுமே உண்டு என்று அல்லிருமை பேசலாம்; வேதத்திலும் அப்படி வரும் அபேத ச்ருதிகள் உண்டு. அதே நேரத்தில் இறை, இயற்கை, உயிர் இவற்றின் நடுவே இருக்கும் வேறுபாடுகளும் உறுதியானவை; அதனால் அவை மூன்றுமே வெவ்வேறாக இருக்கின்றன என்று இருமை பேசலாம்; வேதத்திலும் அப்படி வரும் பேத ச்ருதிகள் உண்டு. வரதன் சொன்ன வழியில் எம்பெருமானார் நிலை நாட்டிய விதப்பொருமை தத்துவம் இவ்விரண்டிற்கும் நடுவே நின்று வேதங்களில் வரும் கடக ச்ருதிகளைக் கொண்டு அபேத பேத ச்ருதிகளை இணைத்துப் பொருள் சொல்கின்றது. இதுவும் முழுதாக (உங்களுக்கு இல்லை; சமயக் கருத்திகளில் பயிற்சி இல்லாதவர்களுக்கு) புரியாது என்று தெரியும். எளிமையாக எழுத இன்னொரு நேரத்தை அரங்கன் தரட்டும்.

    ReplyDelete