Friday, January 23, 2009

எனக்குள் ஒரு கதை சொல்லி

இது ஒரு சுய ஆய்வு என்று சொல்லலாம். (சுய தம்பட்டம் என்று நினைத்தாலும் சரியே). என்னுள் இருக்கும் ஒரு திறன் ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாறும் போது அடையும் வளர்ச்சிகளையும் தடைகளையும் எழுத்தில் வடிக்க எண்ணும் ஒரு முயற்சி இது. எவ்வளவு தூரம் வெற்றி பெறுகிறேன் என்பதை இக்கட்டுரையை எழுதி முடித்த பின் பார்க்க வேண்டும்.

ஒரு காலத்தில் நிறைய பேசிக் கொண்டிருந்தேன். ஆன்மிகம், தமிழ் இலக்கியம், தன் திறன் வளர்ச்சி (Self Development) போன்ற தலைப்புகளில் பேசத் தொடங்கினால் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தேன். அப்படிப் பேசும் போதெல்லாம் கேட்டவர்கள் நான் சொல்லும் கருத்துகளை ஏற்றுக் கொள்பவர்கள்; கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் கொண்டவர்கள்; மறுத்து பேசாதவர்கள். நான் சொன்ன கருத்துகளில் (முக்கால்வாசி கடன் பெற்ற கருத்துகள் - இலக்கியங்களில் இருந்தும் மற்றவர்களிடம் இருந்தும்) மயங்கியா அவற்றை நான் சொன்ன விதத்தில் மயங்கியா, எந்த விதத்தில் அவர்களுக்கு என் பேச்சைக் கேட்க விருப்பமாக இருந்தது என்ற ஐயம் இப்போதும் உண்டு. ஆனால் கேட்டவர்கள் மீண்டும் மீண்டும் கேட்க வந்தார்கள். மீண்டும் மீண்டும் பேசச் சொன்னார்கள்.

சில நேரங்களில் மாற்றுக் கருத்துகள் கொண்டவர்களும் கேட்க வருவார்கள். அவர்கள் தங்களது மாற்றுக் கருத்துகளைச் சொல்லும் போது அந்தப் பேச்சு ஒரு கலந்துரையாடலாக மாறும். கலந்துரையாடல் என்றால் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்ள வாய்ப்புகள் நிறைய உண்டு. அதனால் அப்படிப் பட்ட கலந்துரையாடல்களை மிகவும் விரும்பினேன். சில நேரங்களில் அந்தக் கலந்துரையாடல் விதண்டா வாதங்களாக மாறத் தொடங்கும். மாற்றுக் கருத்தினைச் சொன்னவருக்கு ஏற்ற மறுப்பினைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் சொன்ன பின்னரும் தடம் மாறித் தடம் மாறி புலனங்களை மாற்றி மாற்றிப் பேசி வேண்டா விவாதமாகச் சென்று கொண்டிருக்கும். யாரும் யாரிடமிருந்தும் எதுவும் கற்றுக் கொள்ளவில்லை என்பது தெரிந்தவுடன் பேசுவதை அப்போதே நிறுத்திவிட்டுக் கேட்கத் தொடங்கிவிடுவேன். அவர்களின் கருத்து அவர்களின் அனுபவங்களில் இருந்து வருகின்றது என்பதால் கருத்துகள் தவறென்று தோன்றினாலும் அந்த அனுபவங்களில் இருந்து ஏதேனும் கற்றுக் கொள்ள முடியுமா என்று பார்க்கத் தொடங்கிவிடுவேன்.

பள்ளி இறுதி வகுப்பில் தொடங்கிய இந்த 'பேசுதல்' முதுநிலை பட்டப்படிப்பு வரை தொடர்ந்தது. வேலையில் சேர்ந்த முதல் வருடமும் சென்னையில் அது தொடர்ந்தது. வேலையில் சேர்ந்த இரண்டாம் வருடம் அமெரிக்கா வந்துவிட்டேன். அதே வருடம் திருமணமும் நடந்தது. பேசுவது நின்றுவிட்டது. அமெரிக்கா வந்ததால் தான் என்று நினைக்கிறேன். திருமணத்தால் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை.

சில வருடங்கள் (மனைவியைத் தவிர்த்து மற்றவரிடத்தில்) மணிக்கணக்கில் பேசுவது என்பதே இன்றிப் போனது. சில நேரங்களில் சில பக்தி இலக்கியஙகளுக்கும் சுலோகங்களுக்கும் ஆங்கிலத்தில் பொருள் சொல்லி மின்னஞ்சலில் நண்பர்களுக்கு அனுப்புவேன். இப்படியே சென்று கொண்டிருக்கும் போது வலைப்பதிவு தென்பட்டது. இத்தனை நாட்களும் பேசாமல் இருந்த வேகத்தில் நினைத்ததைப் பற்றி எல்லாம் எழுத ஒவ்வொரு பதிவாகத் தொடங்கி நிறைய பதிவுகள் தொடங்கினேன். எழுதிக் கொண்டிருக்கிறேன்.

ஒரு காலத்தில் பேசிக் கொண்டிருந்தவன் இப்போது அவ்வளவாகப் பேசாமல் எழுதும் போது என்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன, புதிதாக ஏதேனும் தென்படுகின்றதா என்று இப்போது ஆய்ந்து பார்த்தால் ஒரு விதயம் கண்ணுக்குத் தென்பட்டது.

ஒரு நல்ல கதை சொல்லி என்னுள் இருக்கிறான். பேசும் போது நன்கு சுவையாகக் கதை சொல்லத் தெரிந்த அவனுக்கு எழுதும் போதும் அதே சுவையும் அழகும் வரும்படி எழுதத் தெரிந்திருக்கிறது (வரும்படி எதுவும் வரவில்லை இதுவரை). பேசும் போது எப்படி கதை கேட்பவர்களைத் தொடர்ந்து கேட்கும் படி செய்கிறேனோ அதே போல் எழுதும் போதும் படிப்பவர்களைத் தொடர்ந்து படிக்கும் படி செய்கிறேன். இது வரை எழுதிய தொடர்கதைகளிலும் சிறுகதைகளிலும் இது நன்றாகத் தெரிகிறது.

தொடர்கதைகள் எழுதும் போது சில உத்திகளையும் பயன்படுத்தியிருக்கிறேன். 'புல்லாகிப் பூண்டாகி' தொடர்கதை எழுதும் போது 'எப்போது கதையின் முக்கிய பகுதி வரப்போகிறது?' என்று நண்பர்கள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே கதை நிறைவு பெற்றுவிட்டது. நிறைந்த பின்னர் கதையை இன்னொரு முறை படித்துப் பார்த்தால் கதையின் முழுவடிவம் தென்படும். அந்தக் கதையில் உண்மை நிகழ்வுகளை வைத்து எழுதியதால் நிறைவு செய்வது எளிதாக வந்தது.

வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையிலான புனைவுக் கதைகளையும் தொடர்கதைகளாகச் சொல்லிச் செல்வது எளிதாக வருகின்றது. கோதையின் கதை, பெரியாழ்வார் கதை, பாரி வள்ளல்/கபிலர் கதையான 'உடுக்கை இழந்தவன் கை' போன்றவை எடுத்துக்காட்டுகள். பேசும் போது இருந்த அழகும் வருணனைகளும் கற்பனைகளும் எழுதும் போது இன்னும் வளர்ச்சி அடைந்துள்ளதைக் காண்கிறேன். ஆனால் ஒரு பெரும் தடையை கதைகளை 'எழுதும்' போது காண்கிறேன். கதையின் உச்சக்கட்டத்தை அடையும் போதும் புலனம் மாறும் போதும் ஒரு தடுமாற்றம் ஏற்படுகின்றது. பெரியாழ்வார் கதையின் உச்சக்கட்டமான பல்லாண்டு பாடிய நிகழ்வினைச் சொல்லிவிட்டு புலனம் மாறி அவருடைய பாசுரங்களைப் பற்றி பேச வேண்டிய நேரத்தில் ஒரு தடுமாற்றம் வருகிறது. கோதையின் கதையின் உச்சக்கட்டமான திருப்பாவை நோன்பு நோற்கும் நிகழ்வினைச் சொல்லும் போது புலனம் மாறி திருப்பாவையின் பொருளுரையைப் பேச வேண்டிய தருணத்தில் ஒரு தடுமாற்றம் வருகிறது. 'உடுக்கை இழந்தவன் கை' கதையின் உச்சக்கட்டமான கபிலர் பாரி மகளிரை மலையமானுக்கு மணம் செய்து கொடுக்கும் நிகழ்வினை எழுதும் போது ஒரு தடுமாற்றம் வருகிறது. இது வரை எழுதி வந்ததின் அழகு மாறாமல் அதே நேரத்தில் புலனம் மாறுவதும் கதையின் உச்சக்கட்டத்தை அடைவதையும் படிப்பவர்கள் உணர்ந்தும் உணராத வகையில் எப்படி சொல்வது என்பது புரியவில்லை போலும். முயன்றால் முடியும் என்று தெரிகிறது. ஆனால் முயல்வதற்கு கை முன்வரவில்லை. அதனால் அவை மாதக்கணக்கிலும் ஆண்டுக்கணக்கிலும் முன்னேறாமல் முடங்கி நிற்கின்றன.

இன்னொன்றையும் கவனிக்கிறேன். புத்தம் புதிதான புனைவை எழுத இயலவில்லை. தரவுகள் நிறைந்த ஒரு கதையை எடுத்துக் கொண்டு தரவுகளின் அடிப்படையில் என் கற்பனையைக் கலந்து விரித்து எழுதுவது தான் வருகிறதே ஒழிய முழுக்க முழுக்கக் கற்பனை செய்து எழுதும் திறன் இல்லாதது போல் தோன்றுகிறது. அப்படித் தொடங்கினால் என்னவோ தரையில் கால் பாவாமல் அந்தரத்தில் தொங்குவது போல் ஒரு உணர்வு. தரவுகள் என்ற தரை இல்லாமல் என்னால் கதை சொல்ல இயலவே இயலாது போலும்.

26 comments:

  1. என்னென்னவோ எழுதி இருக்கீங்க. ஆனா உங்க கதை எல்லாம் படிக்கப் பிடிக்கும் என்று சொல்லிக்கிறேன்! ரொம்ப ஆன்மீகம் பக்கம் போயிடறீங்க. அதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு! :))

    ReplyDelete
  2. புத்தம் புதிதான புனைவை எழுத இயலவில்லை. தரவுகள் நிறைந்த ஒரு கதையை எடுத்துக் கொண்டு தரவுகளின் அடிப்படையில் என் கற்பனையைக் கலந்து விரித்து எழுதுவது தான் வருகிறதே ஒழிய முழுக்க முழுக்கக் கற்பனை செய்து எழுதும் திறன் இல்லாதது போல் தோன்றுகிறது. அப்படித் தொடங்கினால் என்னவோ தரையில் கால் பாவாமல் அந்தரத்தில் தொங்குவது போல் ஒரு உணர்வு. தரவுகள் என்ற தரை இல்லாமல் என்னால் கதை சொல்ல இயலவே இயலாது போலும்.//

    சுய
    ஆய்வு
    நன்றாக
    உள்ளது!
    எழுதுங்கள்
    படிக்கிறோம்..
    தேவா.

    ReplyDelete
  3. //அமெரிக்கா வந்ததால் தான் என்று நினைக்கிறேன். திருமணத்தால் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை.//

    :))

    //தரவுகள் நிறைந்த ஒரு கதையை எடுத்துக் கொண்டு தரவுகளின் அடிப்படையில் என் கற்பனையைக் கலந்து விரித்து எழுதுவது தான் வருகிறதே//

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை. உங்களுக்கு இப்படி ஒரு திறமையுடன் அதீதமான படிப்பறிவும் புலமையும். அதை எல்லாம் எழுதவே எத்தனையோ காலம் ஆகுமே.

    //புத்தம் புதிதான புனைவை எழுத இயலவில்லை.//

    இது வெறும் observation-தானே.... இல்ல வருத்தமா? :)

    ReplyDelete
  4. //தரவுகள் நிறைந்த ஒரு கதையை எடுத்துக் கொண்டு தரவுகளின் அடிப்படையில் என் கற்பனையைக் கலந்து விரித்து எழுதுவது தான் வருகிறதே ஒழிய முழுக்க முழுக்கக் கற்பனை செய்து எழுதும் திறன் இல்லாதது போல் தோன்றுகிறது.//

    மெய்யே அதுவே. இல்லை எனச் சொல்வோர்
    சொல்லும் பொய்யே.

    இருக்கட்டும்.

    கடலுக்குக் கரையில்லையேல் அதற்கு கடலெனப்பெயர் வருமோ ?
    கடல் கதை. கரை நீங்கள் சொல்லும் தரவு.


    பேசிக்கொண்டே இருந்த காலத்தைப் பற்றிக் குறிப்பிட்டது எனக்கு மிகவும்
    பிடித்தது. எனக்கும் கிட்டத்தட்ட அதே நிலைதான். 1980 வாக்கில் எனது
    தொழிலில் பேச முடியாது. செயல் மட்டும் தான். அதனால், நான் ஊமையாகிப்போனேன். இவனைப்பேசவைக்கவேண்டும் என மேலிடத்தார் நினைத்தார்
    போலும் ! என்னை புதுவணிகத்துறைக்கு மேலாளராகப் பணி நியமனம் செய்தார்கள்.
    அங்கேயும் என்னால் அதிகம் பேசிட இயலவில்லை. இவனை விடக்கூடாதென நினைத்து,
    மனித வள் மேம்பாட்டுத்துறைக்கு 1992 ல் மேலதிகாரியாக நியமனம் செய்தார்கள்.
    அன்றுமுதல் பேச்சு, பேச்சே தான். ஒரு கால கட்டத்தில் இவ்ன் பேச்சை நிறுத்துவது
    எப்படி என யோசித்தார்கள் போலும். நிறுவனத்தின் பயிற்சி மையத்திற்கு வைஸ் பிரின்ஸிபால் ஆக மாற்றினார்கள்.

    பேசிப் பேசியே பொழுதைப் போக்கினேன்.


    சுப்பு ரத்தினம்.
    தற்சமயம்
    ஸ்டாம்ஃபோர்ட், சிடி.
    வருக:

    ReplyDelete
  5. //தரவுகள் என்ற தரை இல்லாமல் என்னால் கதை சொல்ல இயலவே இயலாது போலும்//

    ஹா ஹா ஹா!
    பதிவுலகத் தரவுத் தந்தை குமரன் வாழ்க! வாழ்க! :)

    குமரன்
    தரவு = தருவதால் வருவதா?
    பெயர்க் காரணம் சொல்லுங்கள்!

    //மீண்டும் மீண்டும் பேசச் சொன்னார்கள்//
    இதற்காக மேற்கண்ட கேள்வியைக் கேட்கவில்லை-ன்னும் சொல்லிக்கறேன்! :)

    ReplyDelete
  6. //சில வருடங்கள் (மனைவியைத் தவிர்த்து மற்றவரிடத்தில்) மணிக்கணக்கில் பேசுவது என்பதே இன்றிப் போனது.//

    ஹூம்ம்ம்ம்...அதெல்லாம் ஒரு பொற்காலம்-ன்னு அங்கே அண்ணியார் சொல்வது என் காதில் மட்டும் கேட்கிறதே! :))

    //இப்படியே சென்று கொண்டிருக்கும் போது வலைப்பதிவு தென்பட்டது. இத்தனை நாட்களும் பேசாமல் இருந்த வேகத்தில் நினைத்ததைப் பற்றி எல்லாம் எழுத ஒவ்வொரு பதிவாகத் தொடங்கி....//

    எவன்யா இந்த ப்ளாக்கரைக் கண்டுபுடிச்சான்? என்கிற வீரக்(பாசக்) குரலும் கொஞ்சம் கொஞ்சம் கேட்கிறது! :))

    ReplyDelete
  7. //ஒரு நல்ல கதை சொல்லி என்னுள் இருக்கிறான்//

    அப்போ பாடகன்?
    இருங்க, ரெண்டையுமே குழந்தையிடம் கேட்டுருவோம்! :)

    //கோதையின் கதையின் உச்சக்கட்டமான திருப்பாவை நோன்பு நோற்கும் நிகழ்வினைச் சொல்லும் போது புலனம் மாறி திருப்பாவையின் பொருளுரையைப் பேச வேண்டிய தருணத்தில் ஒரு தடுமாற்றம் வருகிறது.//

    ஆண்டாள் டு அப்துல்கலாம் பார்த்த பிறகுமா? :))

    ReplyDelete
  8. //இன்னொன்றையும் கவனிக்கிறேன். புத்தம் புதிதான புனைவை எழுத இயலவில்லை//

    புத்தம் புதிய புனைவு-ன்னு ஒன்னுமே கிடையாது குமரன்!

    நீங்கள் ஆன்மீகத்தையோ இலக்கியத்தையோ மையமாக வைப்பதால் தரவு-ன்னு ஆகுது!

    தம்பி வெட்டி எழுதும் கதைகள், அன்றாட நிகழ்வுகளையோ, கண்டு கேட்டவற்றையோ, தாக்கம் ஏற்படுத்தியவையோ எழுதுவதால் நிகழ்வுகள்/புனைவு என்னும் புலனத்தில் போகுது!

    அனைத்துமே நடந்த, நடக்கின்ற, நடக்கும்...வினை ஆக்கங்கள் தான்!

    வினை ஆக்கங்களே புனை ஆக்கங்கள்!
    Therez no Invention.
    Everything is a Discovery in Creativity!

    ReplyDelete
  9. //ஒரு நல்ல கதை சொல்லி என்னுள் இருக்கிறான்//

    அந்த ஆளை பலமுறை பார்த்திருக்கிறேன். ஹாய் சொன்னதில்லை அவ்வளவுதான் :-)

    //தரவுகள் நிறைந்த ஒரு கதையை எடுத்துக் கொண்டு தரவுகளின் அடிப்படையில் என் கற்பனையைக் கலந்து விரித்து எழுதுவது தான் வருகிறதே ஒழிய//

    தரவென்று எதனைச் சொல்வீர்? எந்தக் கதை முழுக்கற்பனையாக இதுவரை எழுதப்பட்டிருக்கிறது?

    9ஆம் ப்ளாட்பாரத்தையும் 10 ஆம் ப்ளாட்பாரத்தையும் ரவுலிங் பார்த்திருப்பதால்தானே 9 3/4 ப்ளாட்பாரம் கற்பனையில் உருவாகிறது?

    பி சி சொர்க்காரின் கண்கட்டை தரவாகக் கொண்டுதானே கூபி கைன் உருவாகிறது?

    ReplyDelete
  10. என்ன செய்றது கொத்ஸ்.ஆன்மிகம் தவிர்த்து மத்தது எழுதலாம்ன்னு தொடங்குனா எழுதுறது கொஞ்சம் கடினமா இருக்கே. அதான் எது எளிதா வருதோ அதுல எழுதிக்கிட்டு இருக்கேன். :-)

    ReplyDelete
  11. நன்றி தேவா. நீங்கள் எழுதியிருக்கிறதை பின்னூட்டமா எடுத்துக்கணுமா? கவிதையா எடுத்துக்கணுமா? குழப்பத்தைத் தீர்த்துட்டுப் போங்க. :-)

    ReplyDelete
  12. அதீதமான படிப்பறிவும் புலமையுமா? நல்லா கிண்டல் பண்றீங்க அக்கா. :-)

    கவனிப்பு என்றால் கவனிப்பு; வெறும் வருத்தம் என்றால் வருத்தம் தான். :-)

    புனைவு எழுதவில்லை என்பதை விட ஏன் சில நேரம் கதை முன்னேறாமல் தடைபட்டு நிற்கின்றது என்பதில் தான் வருத்தம் உண்டு.

    ReplyDelete
  13. //அதீதமான படிப்பறிவும் புலமையுமா? நல்லா கிண்டல் பண்றீங்க அக்கா. :-)//

    அச்சோ. கிண்டலும் இல்ல; சுண்டலும் இல்ல. உண்மை; உண்மையைத் தவிர வேறில்லையப்பா :)

    //புனைவு எழுதவில்லை என்பதை விட ஏன் சில நேரம் கதை முன்னேறாமல் தடைபட்டு நிற்கின்றது என்பதில் தான் வருத்தம் உண்டு.//

    எல்லா எழுத்தாளர்களுக்குமே அப்பப்ப இப்படி ஆகும். அப்புறம் சரியாயிடும். (எவ்வளவு நாள்லன்னு கேட்கக் கூடாது :) வருத்தம் வேண்டாம் :)

    ReplyDelete
  14. //தரவென்று எதனைச் சொல்வீர்? எந்தக் கதை முழுக்கற்பனையாக இதுவரை எழுதப்பட்டிருக்கிறது?

    9ஆம் ப்ளாட்பாரத்தையும் 10 ஆம் ப்ளாட்பாரத்தையும் ரவுலிங் பார்த்திருப்பதால்தானே 9 3/4 ப்ளாட்பாரம் கற்பனையில் உருவாகிறது?

    பி சி சொர்க்காரின் கண்கட்டை தரவாகக் கொண்டுதானே கூபி கைன் உருவாகிறது?//

    ரிப்பீட்டே!!!

    ReplyDelete
  15. சுப்பு ரத்தினம் ஐயா. தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றிகள். நீங்கள் இப்போது பேசுவதைக் குறைத்துக் கொண்டீர்கள் போலும்; நிறைய பாடுகிறீர்கள் இப்போதெல்லாம். நீங்கள் பாடியவற்றை நிறைய கேட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  16. இரவி, முன்பொரு முறை வளவில் இராம.கி. ஐயாவிடம் இந்தக் கேள்வியைக் கேட்டு அவரும் பதில் சொன்னாரே. அவர் பதிவில் சென்று வேங்கடவனைத் தேடுங்கள் (உங்கள் பதிவில் தான் அவனைத் தேடுவதும் பற்றுவதும் எளிது என்று தெரியும். இருந்தாலும் வளவிலும் தேடிப்பாருங்கள். பந்தலில் இருப்பவன் வளவிலும் இருப்பான். அவன் தான் 'எங்குமுளன் கண்ணன்' என்று ஒரு சின்னப்பயல் சொல்ல நின்றவன் ஆச்சே). தரவு என்றால் என்ன என்று தெரியும்.

    ReplyDelete
  17. ஆண்டாள் டு அப்துல்கலாம், மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும், அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் - இதெல்லாம் உங்களுக்குத் தான் எளிதாக வரும் இரவிசங்கர். வேண்டுமானால் நாரதர் துணையைத் தேடிக் கொள்ளலாம். அடியேனுக்கு அது கடினம். :-)

    ReplyDelete
  18. இரவி,

    இப்படி சொல்லிப் பார்க்கிறேன். நான் எழுதுவதும் மற்றவர் எழுதுவதும் பார்த்த படித்த அனுபவித்தவற்றின் அடிப்படையிலேயே எழுதப்படுகின்றன. சரி தான். ஆனால் நான் எந்தத் தரவின் அடிப்படையில் எழுதுகிறேன் என்று காட்டுவது போல் தரவுகளையும் கதையின் பகுதியாக வைக்கிறேன். மற்றவர்கள் அப்படி வைக்கிறார்களா? அப்படி வைக்காதவற்றை முழுக்க முழுக்கக் கற்பனை என்று சொல்ல இயலும். அவற்றைத் தான் புத்தம்புதிய முழுக்க முழுக்கக் கற்பனையான கதைகள் என்கிறேன். அவ்வளவு தான். :-)

    ReplyDelete
  19. வாங்க சுரேஷ். இப்ப சொல்லிட்டீங்களே ஹாய்ன்னு. :-)

    நீங்க சொல்றது சரி தான். முதல் எடுத்துக்காட்டு புரிந்தது - அந்தப் படங்களைப் பார்த்திருக்கிறேன். இரண்டாவது எடுத்துக்காட்டு புரியவில்லை. கூபி கைன் என்றால் என்ன என்று தெரியாது. கூகிளாரைக் கேட்கிறேன்.

    ReplyDelete
  20. ரிப்பீட்டே சொன்னவங்களுக்குப் பதில் 'உதைப்பேன்'. :-)

    படிச்சேன்னு சொன்ன பாலாஜிக்கு நன்றி.

    ReplyDelete
  21. //புத்தம் புதிதான புனைவை எழுத இயலவில்லை.//

    இப்படி ஒன்று இருப்பதாகத் தோன்றுகிறது..அவ்வளவுதான்..புத்தம் புதிது என்று புனைவில் இருக்கிறதா என்ன?

    ஏதோ ஓர் தரவு அல்லது நிகழ்வு ...அல்லது அனுபவம் இப்படிப் பெயரிட்டுக் கொண்டே போகலாம்..இதன் அடிப்படையில்தானே படைப்புகள் அமைகின்றன..

    ReplyDelete
  22. //குமரன் (Kumaran) said...
    ரிப்பீட்டே சொன்னவங்களுக்குப் பதில் 'உதைப்பேன்'. :-)

    படிச்சேன்னு சொன்ன பாலாஜிக்கு நன்றி.//

    ஹி ஹி ஹி...

    அவர் சொன்னதைவிட சிறப்பா சொல்ல முடியாதுனு தான் ரிப்பீட்டே போட்டது...

    உங்க கதைக்கு தனியா விமர்சனமே போட்டதால ஒரு பின்னூட்டத்துல பெருசா என்ன சொல்லிட போறோம்னு ஒரு எண்ணமும் கூட :)

    ReplyDelete
  23. உண்மை தான் பாசமலர். நன்றி.

    ReplyDelete
  24. என்ன சொல்லறதுன்னு தெரியல.....
    நல்ல பதிவு

    ReplyDelete
  25. //இரவி, முன்பொரு முறை வளவில் இராம.கி. ஐயாவிடம் இந்தக் கேள்வியைக் கேட்டு அவரும் பதில் சொன்னாரே//

    ஓ தெரியுமே! இருந்தாலும் உங்க நடையில் சுருக்கமா, இங்கே எல்லாரும் அறியும் பொருட்டும் தரணும்-ல! அதான்! :)

    //அவர் பதிவில் சென்று வேங்கடவனைத் தேடுங்கள்//

    அவர் கட்டுரைகளைத் தவற விடுவதேயில்லை! (அவர் பதிவுகளை, பதிவு என்பதை விட ஒவ்வொன்னும் ஆய்வுக் கட்டுரை-என்று சொல்வதே பொருத்தம் என்பது அடியேன் கருத்து)

    //(உங்கள் பதிவில் தான் அவனைத் தேடுவதும் பற்றுவதும் எளிது என்று தெரியும். இருந்தாலும் வளவிலும் தேடிப்பாருங்கள். பந்தலில் இருப்பவன் வளவிலும் இருப்பான்//

    அட ஆண்டவா! என்ன இப்படிச் சொல்லிட்டீங்க!
    பந்தலில் இருப்பது வெறும் அறிவொன்றுமில்லாத கோவிந்தன்!
    வளவில் இருப்பது வண்டமிழர் தலைவன் கோவிந்தன்! மறத் தமிழ்த் தலைவன் மாயோன்!

    //ஒரு சின்னப்பயல் சொல்ல நின்றவன் ஆச்சே//

    யார் இந்தச் சின்னப்பயல்?
    என் தம்பி வெட்டிப்பயலுக்குப் போட்டியா? :))

    ReplyDelete