லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்
என்று எல்லா வைணவர்களும் திருவாராதன (பூசை) காலத்தில் தன்னுடைய ஆசாரிய பரம்பரையை வணங்கிவிட்டே திருவாராதனம் செய்கிறார்கள்.
'இலக்குமிநாதன் தொடக்கமாகவும் நாதமுனிகள், யாமுன முனிகள் (ஆளவந்தார்) நடுவாகவும், என்னுடைய ஆசாரியன் வரையிலாகவும் இருக்கும் குருபரம்பரையை வணங்குகிறேன்' என்பது இந்த சுலோகத்தின் பொருள்.
வைணவ ஆசாரிய பரம்பரை:
1. திருமகள் நாதன்
2. திருமகள்
3. சேனைமுதலியார் என்னும் விஷ்வக்சேனர்
4. மாறன் சடகோபன் என்னும் நம்மாழ்வார்
5. நாதமுனிகள்
6. உய்யக்கொண்டார்
7. மணக்கால் நம்பி
8. ஆளவந்தார்
9. பெரிய நம்பி
10. திருக்கச்சி நம்பி
11. எம்பெருமானார் என்னும் இராமானுஜர்
12. கூரத்தாழ்வான்
இப்படி திருமாலிடம் இருந்து தொடங்கி வரும் ஒவ்வொரு ஆசாரியனுடைய பெருமையையும் எட்டு வரிகளில் பாடும் 'வாழித் திருநாமம்' என்றொரு மரபு இருக்கிறது. பகவத் இராமானுஜரின் முதன்மைச் சீடரான கூரத்தாழ்வாரின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டத்தின் பகுதியாக திருமகள் கேள்வன் தொடங்கி கூரத்தாழ்வான் வரை உள்ள ஆசாரியர்களின் வாழித் திருநாமங்களைப் பார்ப்போம்.
இந்தக் கொண்டாட்டத்தை வலைப்பதிவுகளில் தொடங்கி வைத்தவர் ஷைலஜா அக்கா. அதனைத் தொடர்ந்து இரவிசங்கரும் ஒரு இடுகை இட்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து 'ஆசாரிய ஹ்ருதயம்' பதிவில் தொடராக கூரத்தாழ்வாரது திவ்ய சரிதம் பரவஸ்து சுந்தரால் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் அடியேன் வாழித் திருநாமங்களைத் தொடராக இடுகிறேன். இன்னும் நிறைய வரும்.
***
பெரிய பெருமாள்
திருமகளும் மண்மகளும் சிறக்க வந்தோன் வாழியே
செய்யவிடைத்து ஆய் மகளார் சேவிப்போன் வாழியே
இரு விசும்பில் வீற்றிருக்கும் இமையவர் கோன் வாழியே
இடர் கடியப் பாற்கடலை எய்தினான் வாழியே
அரிய தயரதன் மகனாய் அவதரித்தான் வாழியே
அந்தரியாமித்துவமும் ஆயினான் வாழியே
பெருகி வரும் பொன்னி நடுப்பின் துயின்றான் வாழியே
பெரிய பெருமாள் எங்கள் பிரான் அடிகள் வாழியே
வாழித் திருநாமத்தின் பொருள்:
திருமகளான இலக்குமித் தாயாரும் மண்மகளான பூமித் தாயாரும் சிறப்பு பெறும் படி அமைந்தவன் வாழ்க. இறைவனைப் பற்றி சொல்லிக் கொண்டே வரும் புருஷ சூக்தம் என்னும் வேத மந்திரம் அவனது அடையாளமாக 'ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்ச பத்ன்யௌ - உனக்கு பூமியும் இலக்குமியும் மனைவியர்' என்று கூறுகிறது. அப்படி அவன் பரம்பொருள் என்று சொல்வதற்கு அடையாளமாக அமையும் அருளும் பொறுமையும் வடிவான திருமகளும் மண்மகளும் சிறக்கும் படி வந்தமைந்த திருமாலே வாழி வாழி. செம்மையுடைய ஆயர்மகளான நீளாதேவி நப்பின்னைத் தாயாரின் சேவையைப் பெறுவோன் வாழ்க.
உலக உயிர்களின் இடர்களைக் களைய பாற்கடலை அடைந்து அங்கே பள்ளி கொண்டவன் வாழ்க. 'என்ன தவம் செய்தனை' என்று வியக்கும் படியாக அரிய தவம் செய்த தயரதனின் திருமகனாய், சக்ரவர்த்தித் திருமகனாய் அவதரித்தவன் வாழ்க.
அனைத்துயிர்களின் இருதயங்களிலும் உள் நின்று இயக்குபவனாக அந்தரியாமியாக ஆனவன் வாழ்க. பெருகி வரும் வடகாவிரி, தென்காவிரி நடுவில் இருக்கும் திருவரங்கத்தில் துயில்கின்றவன் வாழ்க. பெரிய பெருமாளாகிய எங்கள் தலைவனின் திருவடிகள் வாழ்க வாழ்க.
இறைவனின் ஐந்து நிலைகளும் இங்கே போற்றப்பட்டது.
1. திருமகளும், மண்மகளும், ஆயர்மகளும் அருகில் இருக்க பரம்பொருளாய் பரமபதத்தில் அமர்ந்திருக்கும் நிலை - பரம்
2. தேவர்களுக்கும் இருடிகளுக்கும் (ரிஷிகளுக்கும்) அருள் செய்வதற்காகவும் அவதாரம் செய்வதற்காகவும் பிரகிருதி மண்டலத்தில் பாற்கடலில் பள்ளி கொண்ட நிலை - வியூஹம்
3. தருமத்தை நிலை நாட்ட பல உயிர்களாக உருவெடுத்து இறங்கி வரும் நிலை - விபவம்/அவதாரம்
4. உள் நின்று இயக்குபவனாக எல்லா உயிர்களிலும் இருக்கும் நிலை - அந்தரியாமி
5. அனைவரும் எளிதில் கண்டு வணங்கும் வகையில் திருக்கோவில்களிலும் வீடுகளிலும் சிலை உருவில் இருக்கும் நிலை - அர்ச்சை
***
பெரிய பிராட்டியார்
பங்கயப் பூவில் பிறந்த பாவை நல்லாள் வாழியே
பங்குனியில் உத்திர நாள் பார் உதித்தாள் வாழியே
மங்கையர்கள் திலகம் என வந்த செல்வி வாழியே
மால் அரங்கர் மணி மார்பை மன்னுமவள் வாழியே
எங்கள் எழில் சேனை மன்னர்க்கு இதம் உரைத்தாள் வாழியே
இருபத்தஞ்சு உட்பொருள் மால் இயம்புமவள் வாழியே
செங்கமலச் செய்யரங்கம் செழிக்க வந்தாள் வாழியே
சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே
சீரங்கநாயகித் தாயார் வைணவ ஆசாரிய பரம்பரையில் இரண்டாவது ஆசாரியர். முதல் ஆசாரியன் இறைவனே என்பதால் ஜீவாத்மாக்களுள் முதல் ஆசாரியராக திருமகள் அமைகிறாள். அதனால் பெண்ணை முதல் குருவாகக் கொண்ட மரபாக தமிழக வைணவ மரபைக் கூறவேண்டும். ஸ்ரீயை முதல் ஆசாரியராகக் கொண்டதால் இந்த மரபு ஸ்ரீவைஷ்ணவம் என்று அழைக்கப்படுகின்றது.
வாழித் திருநாமத்தின் பொருள்:
தாமரைப்பூவில் பிறந்த நன்மைகளெல்லாம் ஓருருவான பெண் வாழ்க. பங்குனி உத்திர நாளில் பிறந்தவள் வாழ்க. பெண்களில் சிறந்தவள் என்னும்படி இருப்பவள் வாழ்க. திருமாலவனாம் திருவரங்கன் மணி மார்பில் 'அகலகில்லேன் சிறிது நேரமும்' என்று நிலைத்து வாழ்பவள் வாழ்க. திருமாலவனுக்கு 'இவள் மனைவி' என்பதால் தனித்தன்மை; திருமகளுக்கு 'இவன் திருமார்பில் நிலைத்து வாழ்பவள்' என்பதால் தனித்தன்மை.
எங்கள் அடியார் குழாத்திற்கெல்லாம் தலைவனான 'சேனை மன்னருக்கு' இவ்வைணவ மரபை உரைத்தவள் வாழ்க. இவ்வுலகில் நிலையாக இருக்கும் தத்துவங்கள் இருபத்தி ஐந்து என்ற நுண்ணிய அறிவை திருமாலவனிடமிருந்து பெற்றவள் வாழ்க. செம்மையுடைய திருவரங்க நகரம் செழிக்கும்படி வந்தவள் வாழ்க. சீரங்க நாயகியாரின் திருவடிகள் வாழ்க வாழ்க.
சேனை முதலியார்
ஓங்கு துலாப் பூராடத்துதித்தச் செல்வன் வாழியே
ஒண்டொடியாள் சூத்ரவதி உறை மார்பன் வாழியே
ஈங்குலகில் சடகோபற்கு இதம் உரைத்தான் வாழியே
எழிற் பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே
பாங்குடன் முப்பத்து மூவர் பணியுமவன் வாழியே
பங்கயத்தாள் திருவடியைப் பற்றினான் வாழியே
தேங்கு புகழ் அரங்கரையே சிந்தை செய்வோன் வாழியே
சேனையர் கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே
திருமாலின் தெய்வீகப் படைகளை 'மாதவன் பூதங்கள்', 'கடல்வண்ணன் பூதங்கள்' என்றெல்லாம் பாடுவார் நம்மாழ்வார். அந்தத் தெய்வீகப் படைகளின் தலைவனாக இருப்பவர் விஷ்வக்சேனர் எனப்படும் சேனை முதலியார். சேனைகளுக்கு முன்னவராக இருந்து படைகளை நடத்துபவர் என்பதால் அவருக்குச் சேனை முதலியார் என்ற திருப்பெயர். இவர் ஆசாரிய பரம்பரையில் மூன்றாவது ஆசாரியர்; ஜீவாத்மாக்களில் இரண்டாவது ஆசாரியர். எந்த வித தடைகளும் இன்றி எடுத்தக் காரியம் யாவினும் வெற்றி பெற வைணவர்கள் எல்லாக் காரியங்களுக்கும் தொடக்கத்தில் வணங்குவது சேனை முதலியாரை.
யஸ்ய த்விரத வக்த்ராத்யா பாரிசத்யா பரஸ்ஸதம்
விக்னம் நிக்னந்தி சததம் விஷ்வக்சேனம் தம் ஆச்ரயே
யாருடைய படையில் / அவையில் இரட்டைக் கொம்பனான விக்னேசர் முதலிய விஷ்ணு கணங்கள் இருக்கின்றார்களோ அந்த விஷ்வக்சேனரை தடைகள் எல்லாம் நீங்கும் பொருட்டு எப்போதும் வணங்குகிறேன்.
வாழித் திருநாமத்தின் பொருள்:
பெருமையில் சிறந்த ஐப்பசி மாத பூராட நட்சத்திரத்தில் உதித்த செல்வன் வாழ்க. ஒளி பொருந்திய நெற்றியையுடைய சூத்ரவதி என்றும் நீங்காமல் வாழும் மார்பை உடையவன் வாழ்க. (எம்பெருமான் திருமகளை என்றும் மார்பில் கொண்டிருப்பதைப் போல் சேனைமன்னரும் தன் பிராட்டியான சூத்ரவதியை என்றும் மார்பில் தாங்கியிருக்கிறார்). இங்கே இவ்வுலகில் சடகோபரான நம்மாழ்வாருக்கு மரபு வழி ஞானத்தை உரைத்தவன் வாழ்க.
இறைவனின் திருக்காரியங்கள் யாவும் தடையின்றி நடைபெறுவதற்காகத் தன் திருக்கையில் செங்கோலை ஏந்தி இருப்பவன் வாழ்க. அழகு பெற முப்பத்து மூக்கோடி தேவர்களும் வந்து பணியும் பெருமையுடையவன் வாழ்க. தாமரையாள் ஆகிய திருமகளின் திருவடிகளைப் பணிந்து அவளைக் குருவாகக் கொண்டவன் வாழ்க.
என்றென்றும் புகழ் மங்காத திருவரங்கனையே எப்போதும் சிந்தை செய்பவன் வாழ்க. சேனைகளின் தலைவனது செங்கமலத் திருவடிகள் வாழ்க வாழ்க.
***
இத்துடன் விண்ணுலக ஆசாரியர்களின் வரிசை நிறைவு பெற்றது. மண்ணுலக ஆசாரியர்களின் வாழித் திருநாமத்தை அடுத்த இடுகையில் பார்ப்போம்.
ஆச்சார்ய பதமலரை பனிமனமே !
ReplyDeleteஆச்சார்ய பரம்பரை வாழி திருநாமத்தை சிறப்பாக ஆரம்பிச்சுருக்கீங்க குமரன்.
கோவில்களில் அரையர் சுவாமிகள் கோஷ்டி முடிவில் கீதம் இசைத்துக் கொண்டே, வாழி திருநாமத்தை பாடுவர், கேட்க இனிமையாக இருக்கும்.. சென்ற வாரம் தான் நம்மாழ்வார் மோட்சத்தன்று அவர் வாழி திருநாமம் கேட்கும் பாக்கியம் கிடைத்தது.. இங்கும் காத்திருக்கிறேன்.
//திருமகள் கேள்வன் தொடங்கி கூரத்தாழ்வான் வரை உள்ள ஆசாரியர்களின் வாழித் திருநாமங்களைப் பார்ப்போம்.//
ReplyDeleteஎன் ஆசை, அப்படியே தொடர்ந்து, தேசிகர், மணவாளமாமுனிகள் வரை கூறலாமே குமரன்.
//எந்த வித தடைகளும் இன்றி எடுத்தக் காரியம் யாவினும் வெற்றி பெற வைணவர்கள் எல்லாக் காரியங்களுக்கும் தொடக்கத்தில் வணங்குவது சேனை முதலியாரை.//
ReplyDeleteகோவில்களிலும் பிரம்மோத்ஸவ தொடக்கமான கொடியேற்றத்திற்கு முதல் நாள் விஷ்வக்சேன ஆராதன்ம் செய்தே தொடங்குவர்.
வாழிதிருநாமங்களை அருமையாத் தொடங்கியிருக்கீங்க.
ReplyDelete//1. திருமகளும், மண்மகளும், ஆயர்மகளும் அருகில் இருக்க பரம்பொருளாய் பரமபதத்தில் அமர்ந்திருக்கும் நிலை - பரம்
2. தேவர்களுக்கும் இருடிகளுக்கும் (ரிஷிகளுக்கும்) அருள் செய்வதற்காகவும் அவதாரம் செய்வதற்காகவும் பிரகிருதி மண்டலத்தில் பாற்கடலில் பள்ளி கொண்ட நிலை - வியூஹம்
3. தருமத்தை நிலை நாட்ட பல உயிர்களாக உருவெடுத்து இறங்கி வரும் நிலை - விபவம்/அவதாரம்
4. உள் நின்று இயக்குபவனாக எல்லா உயிர்களிலும் இருக்கும் நிலை - அந்தரியாமி
5. அனைவரும் எளிதில் கண்டு வணங்கும் வகையில் திருக்கோவில்களிலும் வீடுகளிலும் சிலை உருவில் இருக்கும் நிலை - அர்ச்சை//
அருமை. விவரமாவும் தெளிவாகவும் (எனக்கே புரியறாப்ல :) எழுதியிருக்கீங்க. ரொம்ப நன்றி குமரா.
கூரத்தாழ்வான் ஆயிரமாம் ஆண்டில் ஆச்சார்ய பரம்பரை வாழி அருமையான தொடக்கம் குமரன் ஐயா.
ReplyDeleteஎம்பெருமானின் ஐந்து நிலைகளின் விளக்கமும் அருமை.
//லக்ஷ்மீநாத ஸமாரம்பாம்//
ReplyDelete//1. திருமகள் நாதன்
2. திருமகள்//
சுலோகத்தில் முதலில் லக்ஷ்மீ தானே வருகிறாள்? உங்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் கொடுத்து உள்ளீர்களே! - முதல் ஆசார்யன் லக்ஷ்மீயா? நாதனா? :)
//முதல் ஆசாரியன் இறைவனே என்பதால் ஜீவாத்மாக்களுள் முதல் ஆசாரியராக திருமகள் அமைகிறாள்//
அன்னை ஜீவாத்மாவா? பரத்துவம் கிடையாதா?
//அதனால் பெண்ணை முதல் குருவாகக் கொண்ட மரபாக தமிழக வைணவ மரபைக் கூறவேண்டும்//
ReplyDeleteகால் அமுக்கி விடத் தான் திருமகள், பெண்ணடிமைக்கு இது தான் சான்று என்று சொன்ன சான்றோர் எங்கே? :)
ஓடி வந்து இதைப் படிக்கவும்!
பெண்ணாசிரியர், அவளே முன்னாசிரியர்!
முதல் குரு, எங்கள் திருமகள் திருவடிகளே சரணம்!
திருக் கண்டேன்! பொன் மேனி கண்டேன்!
சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே!
//இவ்வுலகில் நிலையாக இருக்கும் தத்துவங்கள் இருபத்தி ஐந்து என்ற நுண்ணிய அறிவை//
அந்த இருபத்தி ஐந்து என்ன குமரன்?
//வைணவர்கள் எல்லாக் காரியங்களுக்கும் தொடக்கத்தில் வணங்குவது சேனை முதலியாரை//
ReplyDeleteஇவரிடமும் சங்கு சக்கரங்கள் இருக்கும்!
சேனை முதலியார் என்னும் விஷ்வக்சேனர் ஒப்புதலோடே பிரம்மோற்சவமும் தொடங்கும்!
//இரட்டைக் கொம்பனான விக்னேசர் முதலிய விஷ்ணு கணங்கள் இருக்கின்றார்களோ //
அந்த விக்னேஸ்வரர்?
இந்த விக்னேசர்??
Its very difficult to read :(
ReplyDeletelot of sanskrit words... I think I need to concentrate more to understand... :)
நன்றி இராகவ். அடுத்த பகுதியில் நம்மாழ்வார் வாழி திருநாமம் வந்துவிடும் இராகவ்.
ReplyDeleteஎனக்கும் அப்படியே ஒரு ஆசை உண்டு இராகவ். இப்போது கூரத்தாழ்வாரின் திருநட்சத்திரத்தை முன்னிட்டு எழுதுவதால் பூர்வாசாரியர்களின் வாழி திருநாமங்களை மட்டும் பார்ப்போம். இன்னொரு தருணத்தில் தேசிகன், மாமுனிகள் வாழி திருநாமங்களைப் பார்க்கலாம்.
ReplyDeleteமாமுனிகள் வாழி திருநாமத்தை முன்பே ஒரு முறை எழுதியிருக்கிறேன்.
//கோவில்களிலும் பிரம்மோத்ஸவ தொடக்கமான கொடியேற்றத்திற்கு முதல் நாள் விஷ்வக்சேன ஆராதன்ம் செய்தே தொடங்குவர்.//
ReplyDeleteஉண்மை தான் இராகவ்.
நன்றி கவிநயா அக்கா.
ReplyDeleteநீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள் இரவிசங்கர். வைணவ ஆசாரிய பரம்பரையில் முதல் ஆசாரியர் லக்ஷ்மியா லக்ஷ்மிநாதனா? இந்த சுலோகம் ஏன் லக்ஷ்மியிலிருந்து தொடங்க வேண்டும்? விஷ்ணு என்றோ நாராயணன் என்றோ வாஸுதேவன் என்றோ சொல்லியிருக்கலாமே? விஷ்ணு காயத்ரியும் இம்மூன்று பெயர்களைத் தானே சொல்கின்றது? அப்படியிருக்க இந்தச் சுலோகம் மட்டும் ஏன் அப்பெயர்களைச் சொல்லாமல் லக்ஷ்மீநாத என்று சொல்கிறது? விளக்குங்கள்.
ReplyDelete:-)
அன்னை ஜீவனுமாகிறாள்; பரத்துவமும் ஆகிறாள் என்று தான் ஆசாரியர்கள் சொல்கிறார்கள். மிதுனமே ப்ரதானம் என்பது வேதாந்த தேசிகரின் வாக்கு. இரட்டையே (லக்ஷ்மியும் நாதனும்) சேர்ந்தே பரத்துவம்; அவர்களே முக்தி அளிக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அதே நேரத்தில் அவள் ஜீவன் என்றும் சொல்லியிருக்கிறார்கள். நீங்கள் அறிந்தவற்றிலிருந்து மேலும் சொல்லுங்கள். அடியேன் அறிந்தது மிகவும் குறைவே.
இரவி,
ReplyDeleteஇருபத்தி ஐந்து தத்துவங்கள்:
ஐந்து பூதங்கள்: நிலம், நீர், நெருப்பு, காற்று, வான் - 5
ஐந்து தன்மாத்திரைகள்: நாற்றம், சுவை, ஒளி, ஓசை, ஊறு - 5
ஐந்து அறிவுப்புலன்கள் (ஞானேந்திரியங்கள்): மூக்கு, வாய், கண், காது, மூக்கு, உடல் - 5
ஐந்து செயற்புலன்கள் (கர்மேந்திரியங்கள்): கைகள், கால்கள், வாய், மலம் கழியும் வாயில், நீர் கழியும் வாயில் - 5
மனம் (உட்புலன் - அந்தக்கரணம்) - 1
நான் என்னும் உணர்வு (அஹங்காரம்) - 1
இயற்கையின் வெளிப்பட்ட நிலை (மஹத்) - 1
இயற்கையின் வெளிப்படா நிலை (பிரகிருதி) - 1
இவ்விருபத்திநான்கு தத்துவங்களுடன் ஆதன் (ஆத்மா) என்ற தத்துவம் சேர மொத்தம் இருபத்தி ஐந்து தத்துவங்கள்.
முன்பே ஒரு முறை விக்னேசரைப் பற்றி சொன்னதாக நினைவு. ஒற்றைக்கொம்பனான விக்னேஸ்வரர் வேறு; இரட்டைக்கொம்பனான இந்த விக்னேசர் சேனை முதலியாரின் படைத்தலைவர்களில் ஒருவர்.
ReplyDeleteபாலாஜி,
ReplyDeleteஎன்ன சொல்றீங்கன்னே புரியலை. புரியற மொழியில எழுதுங்க. :-)
பாலாஜி,
ReplyDeleteவடமொழிச்சொற்கள் மிகவும் குறைவாகத் தான் இருக்கின்றன என்று நினைக்கிறேன். வடமொழி போல் தென்படும் தமிழ்ச்சொற்கள் மிகுதியாக இருக்கலாம்; பழந்தமிழ்ச் சொற்கள் என்பதால் புரியவில்லை என்பதால் அவை வடமொழிச் சொற்கள் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். எந்த இடங்களில் புரியவில்லை என்று சொன்னால் புரியும் படி சொல்லத் தான் நமக்கு கண்ணபிரான் இரவிசங்கர் இருக்கிறாரே. :-) சொல்லுங்கள்.
//நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள் இரவிசங்கர்//
ReplyDelete//நீங்கள் அறிந்தவற்றிலிருந்து மேலும் சொல்லுங்கள்//
வேணாம்! அழுதுருவேன்! :)
நீங்களாச்சும் அடியேன் சிறிய ஞானத்தன்!
நான் வெறும் அப்பாவிச் சிறுவன் தான்!
//பாலாஜி,
எந்த இடங்களில் புரியவில்லை என்று சொன்னால் புரியும் படி சொல்லத் தான் நமக்கு கண்ணபிரான் இரவிசங்கர் இருக்கிறாரே. :-) சொல்லுங்கள்//
என் தம்பியோடு கூட்டு சேர்ந்து என்னைய அடிக்கப் பாக்குறீங்களா? :)
குமரனின் திருக்கரங்களால் கூரேசரின் குருபரம்பரை இங்கு குதூகலமாய் தொடங்கிஉள்ளதா !மகிழ்ச்சி!இதோ பணிமுடித்து
ReplyDeleteவந்து வாசித்து பின்னூட்டமிடறேன்.
மிக அருமை குமரன். அங்கு இல்லாவிடினும் ஸ்ரீவைஷ்ணவ ஆச்சார்ய பரம்பரைத் தொடரை இங்காவது ஆரம்பித்தமைக்கு நன்றி. :-)
ReplyDeleteஇந்தக் கொண்டாட்டத்தை வலைப்பதிவுகளில் தொடங்கி வைத்தவர் ஷைலஜா அக்கா.\\\
ReplyDeleteநன்றிகுமரன்..இதனை எனது பேறாகக்கருதுகிறேன்!
]] அதனைத் தொடர்ந்து இரவிசங்கரும் ஒரு இடுகை இட்டிருக்கிறார்]]
இது கலக்கலான பதிவு!
\\\. அதனைத் தொடர்ந்து 'ஆச்சாரிய ஹ்ருதயம்' பதிவில் தொடராக கூரத்தாழ்வாரது திவ்ய சரிதம் பரவஸ்து சுந்தரால் சொல்லப்படுகிறது.\\
அதனைப்படித்து அங்கே பின்னூடமிடவேண்டும்.
\\\ அதே நேரத்தில் அடியேன் வாழித் திருநாமங்களைத் தொடராக இடுகிறேன். >>>///
நல்ல முயற்சிகுமரன் ....ஆசார்யபக்தி மிகவும் அவசியம் என்பார்கள் உங்களின் இந்தப்பதிவு அதனாலேயே சிறப்பாக இருக்கிறது
/// இரண்டாவது ஆசாரியர். எந்த வித தடைகளும் இன்றி எடுத்தக் காரியம் யாவினும் வெற்றி பெற வைணவர்கள் எல்லாக் காரியங்களுக்கும் தொடக்கத்தில் வணங்குவது சேனை முதலியாரை...]]]
சேனைமுதலியார் சந்நிதி அரங்கன் கோயிலில் அவருடைய திருப்பாதம் படும் இடத்தின் அருகே இருக்கும்! இதிலிருந்தே தெரிகிறதே அவருடைய மக்கத்துவம்!
ஆசார்யார்கள் என்னும் குருபரம்பரையினர்தான் நம்மை பகவானிடம் சேர்க்கும் நல்வழிகளை உபதேசித்து பண்டை வல்வினைமாற்றியருளி நம்மை அவருக்கு சமர்ப்பிக்கிறார்கள்.
அதிகாரஸ்ங்ரஹத்தில் சுவாமிதேசிகன் கூறுவதாவது.....
என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம் புக்கு
யானடைவே அவர்குருக்கள் நிரைவணங்கி
பின்னருளால் பெரும்புதூர்வந்த வள்ளல்
பெரியநம்பி ஆளவந்தார் மணக்கால்நம்பி
நன்னெறியை யவர்க்குறைத்த உய்யக்கொண்டார்
நாதமுனி சடகோபன் சேனைநாதன்
இன்னமுதத் திருமகளென்றிவரைமுன்னிட்டு
எம் பெருமான் திருவடிகள் அடைகின்றேனே!”
இந்தப்பாசுரத்தில் ஆசார்யபரம்பரையை முன்னிட்டு
எம்பெருமான் திருவடியை அடையப்பிரார்த்திக்கிறார் சுவாமிதேசிகன்.
இதை இங்கு எனக்கு எழுத வாய்ப்பளித்த குமரனுக்கு நன்றி
ஷைலஜா அக்கா. குமரனின் வெறும்கரங்களால் தன்னைத்தானே பாடிக் கொள்கிறார் கூரேசர். :-)
ReplyDeleteபணி முடித்து வந்ததற்கு நன்றி.
இந்தத் தொடரை எழுதுவதற்கு முன் ஒரு நிமிடம் யோசித்தேன் மௌலி. இங்கே இடுவதா அங்கே இடுவதா என்று. இரண்டு இடத்திலும் இடலாம் என்று நினைக்கிறேன். இங்கே படிப்பவர்கள் எல்லாம் அங்கே படிப்பதில்லை. அங்கே படிப்பவர்கள் எல்லாம் இங்கே படிப்பதில்லை. அதனால் சுந்தர் அண்ணா எழுதி முடித்த பின்னர் இங்கிருக்கும் தொடரை அங்கேயும் இடலாம். சரியா? :-)
ReplyDelete// இரண்டு இடத்திலும் இடலாம் என்று நினைக்கிறேன். இங்கே படிப்பவர்கள் எல்லாம் அங்கே படிப்பதில்லை. அங்கே படிப்பவர்கள் எல்லாம் இங்கே படிப்பதில்லை. அதனால் சுந்தர் அண்ணா எழுதி முடித்த பின்னர் இங்கிருக்கும் தொடரை அங்கேயும் இடலாம். சரியா?//
ReplyDeleteமிக்க நன்றி குமரன். என் ஆதங்கத்தை சரியான முறையில் புரிந்து கொண்டமைக்கு நன்றி. அங்கும் ஒரு முறை படிக்க காத்திருக்கிறேன். :-)
ஆமாம் ஷைலஜா அக்கா. திருவரங்கத்தில் சேனை முதலியார் திருமுன் எங்கே இருக்கிறது என்று நினைவிருக்கிறது. திருவரங்கநாத பாதுகைகளும் அந்தத் திருமுன்னிற்கு அருகில் இருக்கும்.
ReplyDeleteசுவாமி தேசிகனின் பாசுரத்தைத் தந்ததற்கு மிக்க நன்றி அக்கா.
ஸ்ரீ, ஸ்ரீ வைஷ்ணவம் என்று எழுதலாமே !
ReplyDeleteதிருமகளாரின் பரத்வம்
--------------------------
’ஈச்வரீம் ஸர்வபூதாநாம்’ என மறை மொழிவதால் திருமகளை ஈச்வரியாக,
பரத்வம் மிக்கவளாக முடிவு செய்யலாம்;
இவள் ஸ்ருஷ்டி தொடங்கி அனைத்திலும் பரமனுடன் பங்கு கொள்கிறாள்.
பரம வ்யோமத்தில் லக்ஷ்மீ நாராயணர்கள் இருவருக்கும் சேர்த்தே முக்த ஜீவன் கைங்கர்யம் செய்கிறான்.
‘அநந்யா ராகவேணாஹம்’ என்பதால் இந்த திவ்ய மைதுநம்
பிரிக்கவொண்ணாதது; இவர்கள் பிரிவது போலவும்,சேர்வது போலவும் தோன்றுவது வெறும் அபிநயம்.
ஆயினும் தன் பரத்வத்தை மறைத்துக்கொண்டு சாமானிய ஜீவன் போல் வர்த்திப்பது பிராட்டியாரின் இயல்பு;
‘பஸ்ம பஸ்மார்ஹ ராவண’-’உன்னைப் பொசுக்கி விடுவேன்’
என அரக்கனிடம் மொழிவது வெறும் மிரட்டல் அன்று.
ஐயனின் வரவை நோக்கியவராக அத்யந்த பாரதந்த்ர்யம் மிக்கவராக அவர் சிறை இருந்ததே ஓர் அழகு.
அக்காண்டமும் ’ஸுந்தர காண்டம்’ எனும் பெயர் பெற்றது.
‘ஸீதாயா: சரிதம் மஹத்’ என வால்மீகி முனிவரும் அன்னையைக் கொண்டடுவார்.
வடமொழியின் துணை கொண்டல்லது இதை விளக்குவது கடினம்.ஆகவே சில வார்த்தைகள் கூறினேன்.
தேவ்
விஷ்வக்ஸேனர், விக்நேச்வரர்
ReplyDelete-------------------------------
விஷ்வக்ஸேனர் – சேனை முதலியார்
இவருக்கு கஜாநநர், ஸிம்ஹாநநர் என்னும் இரு பார்ஷதர்கள்.
கஜாநநர் – வேழமுகம் கொண்டவர்
ஸிம்ஹாநநர் – சிங்கமுகம் கொண்டவர்
தும்பிக்கை ஆழ்வார் என்பது இந்த ஸிம்ஹாநநரையே.
தேவ்
ஸ்ரீ:
ReplyDeletesri என்று அடித்தால் என்னுடைய ஒருங்குறி (யூனிகோடு) எழுத்தர் ச்ரி என்று தான் காண்பிக்கிறது தேவ் ஐயா. அதனால் எழுதும் போது அப்படி எழுதிவிட்டுப் பின்னர் பதிவில் திருத்திவிடுவேன். இந்த முறை மறந்துவிட்டேன். நினைவூட்டியதற்கு நன்றி. இப்போது திருத்திவிட்டேன்.
மிக அழகாக அன்னையின் பரத்வத்தைச் சொன்னீர்கள் தேவ் ஐயா. முன்பொரு முறை 'திருமகளும் நம்மையுடையவள்' என்று ஒரு இடுகை இந்தக் கூடல் பதிவில் எழுதினேன். இப்போது நீங்கள் சொல்லியிருப்பதை இன்னும் விரிவாக்கி எழுதினால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. அடுத்த இடுகையாக எழுத முயலுகிறேன்.
ReplyDeleteதும்பிக்கை ஆழ்வாரைப் பற்றி சொன்னதற்கும் நன்றி தேவ் ஐயா. தும்பிக்கை ஆழ்வார் என்பது கஜாநநரை, ஸிம்ஹாநநரை இல்லை என்று நினைக்கிறேன். சரி தானே ஐயா.
ReplyDeleteஆம்;மன்னிக்க வேண்டும் குமரன்.
ReplyDeleteதவறாக எழுதி விட்டேன்.ஆயினும் வைகாநஸ ஆகமங்கள்
சிவ குமாரரான கணபதிக்கு ஸ்தாநம் அளிப்பதாகப் பரனூர்ப் பெரியவர் கூறக்கேட்டுள்ளேன்.
மூல நூலைப் பார்த்ததில்லை.
தேவ்
தாயார் பேற்றுக்கு உபாயமாகவும் ஆகிறார்; பெறத்தக்க
ReplyDeleteஉபேயமாகவும் ஆகிறார்; பெருமாளின் சினத்தை மாற்றி
நாம் அதைப் பெறுவதற்குப் புருஷகாரமும் செய்கிறார்.
‘வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே’
எனும் ஆழ்வார் ஸ்ரீஸூக்தியும்,
‘அலமேஷா பரித்ராதும் மைதிலீ ஜநகாத்மஜா’(நம்மைக் காக்க ஜநகநந்தினி ஒருத்தி மட்டுமே போதும்)எனும் ராமாயண வசனமும் பிராட்டியின் உபாயத்வத்துக்கான சான்றுகள்.
‘ச்ரீணாதி’ - கேட்கச் செய்கிறாள் என்பதால் ‘ஸ்ரீ’ என்று பெயர்.
இதனால் புருஷகாரத்வம் உறுதியாகிறது.
பேற்றுக்கான இலக்கு திவ்ய மைதுநம் மட்டுமேஎன்பதை உடையவர் கத்யத்தில் விளக்கியுள்ளார்.
இதனால் பிராட்டியாரின் உபேயத்வம் புரிகிறது.
தேவ்
நன்றி தேவ் ஐயா. இந்த கூடுதல் விளக்கங்களையும் அடுத்த இடுகைக்கு எடுத்துக் கொள்கிறேன். நன்றி.
ReplyDelete