Thursday, November 06, 2008

அமெரிக்க இளைய சமுதாயமும் இனவேறுபாடுகளும்...

அமெரிக்கத் தலைவர் (President) தேர்தலில் எந்தக் குழுவினர் எந்த வகையில் வாக்களித்திருக்கிறார்கள் என்ற விவரங்களை இந்த வலைப்பதிவில் பார்த்தேன். அதில் தோன்றும் எண்ணங்களை இங்கே தருகிறேன்.

1. இரு வேட்பாளருக்கும் ஆண்களிடம் இருந்து ஏறக்குறைய சமமான அளவில் வாக்குகள் கிடைத்திருக்கின்றன. ஒபாமா 1% மெக்கெய்னை விட அதிகம் ஆண்களிடம் இருந்து பெற்றிருக்கிறார்.

2. பெண்கள் 13% அதிக வாக்குகளை ஒபாமாவிற்குத் தந்திருக்கிறார்கள். கிளின்டனின் ஆதரவாளர்கள் அவர் பேச்சைக் கேட்டு ஒபாமாவிற்கு அதிக வாக்குகளைத் தந்திருப்பதாகத் தோன்றுகிறது.

3. வெள்ளை ஆண்களும் பெண்களும் மெக்கெய்னுக்கு அதிக வாக்குகள் தந்திருக்கிறார்கள். இது எதிர்பார்க்கப்பட்டது தான். என்ன தான் நடைமுறை வாழ்க்கையில் இன/நிற வேற்றுமையை வெளிப்படையாக வெள்ளையர்கள் காட்டாவிட்டாலும் உள்ளூர அவர்களுக்கு உயர்வு மனப்பான்மையும் நிற/இன வேறுபாடும் இருக்கின்றன என்றே எண்ணி வருகிறேன். அப்படி நினைக்க நேரடி அனுபவங்கள் மிகக்குறைவே; ஆனால் நம் நாட்டுச் சூழ்நிலையைக் கண்டு இவர்களை இப்படி ஐயப்பட வைக்கின்றது என்று நினைக்கிறேன். அப்படியிருக்க வெள்ளை ஆண்களிடம் 41% வாக்குகளும் வெள்ளைப் பெண்களிடம் 46% வாக்குகளும் ஒபாமா பெற்றது வியப்பு தான். என்ன தான் மிடையங்கள் எல்லாம் ஒபாமா தான் வெற்றி பெறுகிறார் என்று வாக்கெடுப்புகளின் மூலம் சொன்னாலும் வெள்ளையர்கள் பொய் சொல்கிறார்கள்; வாக்குச் சாவடியில் தங்கள் உண்மை நிறத்தைக் காட்டிவிடுவார்கள் என்றே எண்ணியிருந்தேன். 41% ஆண்களும் 46% பெண்களும் தங்கள் நிறத்தை மறந்தது மிக நல்லதே. ஒபாமா கறுப்பின வேட்பாளராக நிற்கவில்லை; ஒரு கட்சியின் வேட்பாளர் கறுப்பராக அமைந்தார்; அவ்வளவு தான் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அப்படி என்ன தான் சொன்னாலும் அவருடைய நிறமும் இனமும் இந்த இரு வருடங்களில் மீண்டும் மீண்டும் பேசப்பட்டது என்னவோ உண்மை தான்.

4. மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 6% கொண்ட கறுப்பின மக்கள் மொத்தமாக 95% என்ற அளவில் ஒபாமாவிற்கு வாக்களித்தது எதிர்பார்த்தது என்று சொல்லத் தான் ஆசை. அவர்களில் பெரும்பாலோர் ஒபாமாவிற்கு வாக்களிப்பார்கள் என்று நினைத்தேன்; ஆனால் இந்த அளவிற்கு கட்சி வேறுபாடுகளை மறப்பார்கள் என்று நினைக்கவில்லை. ஆனால் இப்போது எண்ணிப்பார்த்தால் பலவிதங்களில் அல்லல்களை அனுபவித்துக் கொண்டும் தாழ்வு மனப்பான்மையை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டும் வாழும் கறுப்பின மக்கள் பெரும்பான்மையோர் இப்படிப்பட்ட வாய்ப்பு தங்கள் வாழ்நாளில் கிடைக்கும் என்றோ கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் அதிபர் ஆவார் என்றோ எண்ணியே பார்க்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்ததை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த வாய்ப்பைச் சிதறவிடக் கூடாது என்று மொத்தமாக எல்லோரும் ஒபாமாவிற்கு வாக்களித்திருக்கிறார்கள். மொத்த மக்கள் தொகையில் அவர்களின் சதவீதத்தைப் பார்க்கும் போது வெள்ளையர்களிடமிருந்து 45% வாக்குகள் கிடைக்காமல் கறுப்பர் வாக்குகள் மட்டுமே கொண்டு ஒபாமா வெற்றி பெற்றிருக்க முடியாது என்பது புரியும்.

5. மற்ற இன மக்கள் ஒபாமாவிற்கே அதிகம் வாக்களிப்பார்கள் என்று எண்ணினேன். பெரும்பாலும் குடியேறிகளான இவர்களுக்கு ஒபாமாவையும் அப்படியே பார்ப்பது எளிது. ஆனாலும் இவர்களும் 31% வரை கட்சிச் சார்பாக வாக்களித்திருக்கிறார்கள்.

6. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இப்போது எல்லா இனத்தவரும் படிக்கிறார்கள். நிறத்தைப் பற்றியும் இனத்தைப் பற்றியும் தன்னுடைய நண்பர்களுடன் கிண்டர்கார்டன் படிக்கும் என் 5+ வயது மகள் உரையாடுகிறாள். வீட்டிற்கு வந்தும் அதனைப் பற்றி பேசுகிறாள். தோலின் நிறமும் பண்பாட்டுக் கூறுகளும் வேறுபாடுகளைத் தெளிவாகக் காட்டினாலும் அந்த வேறுபாடுகளைப் பேசிப் புரிந்து கொள்கிறார்கள்; இந்த வேறுபாடுகள் இயற்கை என்ற எண்ணமும் அவர்களிடையே நிலைபெறுகிறது; ஏற்றத் தாழ்வுகள் இருப்பது போல் தொடக்கத்தில் பேசினாலும் பின்னர் பழகப் பழக அந்த ஏற்றத் தாழ்வுகள் செயற்கையானவை என்று புரிந்து கொள்கிறார்கள். இளைய தலைமுறையினர் பெரும்பாலும் கலவை இனத்தவரான ஒபாமாவிற்கு வாக்களித்ததில் இவை எல்லாம் வேலை செய்திருக்கின்றன என்று நினைக்கிறேன். வயதாக வயதாக நிற/இன வேறுபாடு நன்கு தெரிவதும் இதனை உறுதிபடுத்துகின்றது.

பணியிடத்திலும் இதனைக் கண்டிருக்கிறேன். வயதில் மூத்தவர்களிடையே நிற/இன ஒற்றுமையை/நட்பை பார்க்க முடிகிறது. இளையவர்களிடையே நட்பும் ஒற்றுமையும் நிற/இனங்களைக் கடந்தே இருக்கின்றன. அவர்களிடம் அந்த வேறுபாடு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. அவர்களின் பெற்றோர்களை விட மற்ற பண்பாட்டுக்கூறுகளை அதிகம் அறிந்தவர்களாகவும் அந்தப் பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டாடுவதில் பெரும் ஊக்கம் காட்டுபவர்களாகவும் இணைய கால இளைய சமுதாயத்தினர் விளங்குகிறார்கள்.

12 comments:

  1. குமரன், பெரிய பெரிய விஷயங்கள் பத்தி சொல்றீங்க... உள்ளேன் குமரன் (ஐயா சொல்லக்கூடாதுல்ல அதான் ) மட்டும் சொல்லிக்கிறேன்.. :)

    ReplyDelete
  2. இருங்க இராகவ். நீங்க இங்கே இருக்குறப்ப இதெல்லாம் கவனிக்கலையா? :-)

    ReplyDelete
  3. நன்று குமரன்..

    மின்னணு அடையாள அட்டையின் உபயோகத்தைப் பார்த்தீர்களா..

    எந்த அளவுக்குப் புள்ளி விவரங்களைத் தொகுத்துத் தருகிறார்கள் என்று..

    நம் ஊரிலும் இருக்கிறார்களே அரசியல்வாதிகள்..

    தன்னையும், தன் குடும்பத்தையும் தவிர மற்ற எதைப் பற்றியும் யோசிக்காத பிராணிகள்..

    கோபம், கோபமாக வருகிறது..

    ReplyDelete
  4. ரொம்ப நல்லா அனுமானம் செய்து எழுதி இருக்கீங்க குமரன். குழந்தைகள் அதிக வித்தியாசம் பார்க்கவில்லை.
    நேற்று நீச்சல் பயிற்சிக்குப் பேரனோடு போகும்போது பார்த்தேன் தண்ணீரில் பல நிறங்களில் இந்தக் குழந்தைகள் கும்மாளமிட்டுப் பயின்று கொண்டிருந்தார்கள்.

    மார்ட்டின் லூதர் கிங் பெயரையும் பயன் படுத்தி இருக்கிறார்கள்.


    இன வேறுபாடை இருவருமே பெரிதாக்காமல் ஆட்சியைக் கொண்டு போனால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  5. உண்மைத் தமிழரே.

    இது மின்னணு அட்டையின் பயன் என்றா நினைத்தீர்கள்? அப்படி இருக்காது என்பது என் அனுமானம். மின்னணு அட்டையை அமெரிக்காவின் சில மாநிலங்களில் பயன்படுத்துகிறார்களோ என்னவோ ஆனால் எல்லா மாநிலங்களிலும் அப்படி இல்லை. இந்த ஊர் சட்டப்படி தேர்தல் எல்லாம் மாநில அரசுகளே நடத்துகின்றன; அதனால் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு முறை.

    2000ல் நடந்த கூத்துகள் எல்லாம் தெரியுமா? தெரியும் என்றால் மறந்திருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறென். :-)

    அரசியல்வாதிகள் என்னவோ எல்லா ஊரிலும் ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது அந்தக் காலத்திலே. மக்களாட்சியில் மக்கள் எவ்வழியோ மன்னன் அவ்வழி. இந்த ஊர் மக்களுக்கேற்ப இந்த ஊர் அரசியல் நடக்கிறது. நம் ஊர் மக்களுக்கேற்ப நம் ஊர் அரசியல் நடக்கிறது. நீங்கள் சினம் கொண்டால் நம் எல்லோர் மேலும் தான் சினம் கொள்ளவேண்டும். :-)

    ReplyDelete
  6. ஆமாம் அம்மா. இந்தக் குழந்தைகள் எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை. ஆனால் அவர்களிடையே இருக்கும் நிற மாறுதல் பற்றிய தெளிவு இருக்கிறது. அவள் தோல் நிறம் வெண்மை; என் தோல் நிறம் பழுப்பு; இவள் தோல் நிறம் கறுப்பு என்று சொல்கிறார்கள். ஆனால் அது பெரிய விதயமில்லை என்று தெரிந்திருக்கிறது.

    என் மகளோ வாயாடி. யாராய் இருந்தாலும் பார்த்த அடுத்த நொடி பேசத் தொடங்கிவிடுகிறாள். அம்மாவும் அப்பாவும் அப்படி இல்லை. எங்கிருந்து அந்த 'நல்ல' குணம் அவளுக்கு வந்ததோ? அப்படி பேசும் போது மற்ற குழந்தைகளும் ஒருவித தயக்கமும் இன்றிப் பேசத் தொடங்கிவிடுகின்றன. :-)

    ReplyDelete
  7. //அடுத்த நொடி பேசத் தொடங்கிவிடுகிறாள். அம்மாவும் அப்பாவும் அப்படி இல்லை//

    what? appa appdi illeeyaa? ithai govi anna chonna naan othukkaren :))

    ReplyDelete
  8. கோவியும் அதைத் தான் சொல்லுவார் இரவி. ஒரே ஒரு முறை தான் பேசியிருக்கிறோம். அவர் தொலைபேசினார். பத்து நிமிடத்துக்கு மேல 'சரி. இவன் ஒன்னும் பேச மாட்டேங்கறான்'ன்னு வச்சுட்டார். :-)

    அப்பா ரொம்ப பேச மாட்டார்ன்னு தானே சொன்னேன்; அதுவும் புதுசா யாரையாவது பார்த்தா பேசுற முதல் ஆளா இருந்ததை எண்ணிப் பார்த்துச் சொல்லிடலாம். எழுதுறதுக்கு என்ன? மத்தவங்க நொந்து நூடுல்ஸ் ஆகும் வரை அப்பா நல்லாவே எழுதுவார். அம்மா அதனால தான் அப்பா பேசுறதையும் கேக்குறதில்லை; எழுதுறதையும் படிக்கிறதில்லை. :-)

    ReplyDelete
  9. //மூத்தவர்களிடையே நிற/இன ஒற்றுமையை/நட்பை பார்க்க முடிகிறது. இளையவர்களிடையே நட்பும் ஒற்றுமையும் நிற/இனங்களைக் கடந்தே இருக்கின்றன//

    இதை நான் இங்கு பல காதல்களில் நேரடியாகப் பாத்திருக்கேன்! :))

    அந்தக் காதல் எதிர்ப்பு விமர்சனங்களில் கூட பணம், அழகு பேசப்படுமே தவிர, நிறம் பேசப்பட்டு நான் கேட்டதில்லை, குமரன்!

    ReplyDelete
  10. //பத்து நிமிடத்துக்கு மேல 'சரி. இவன் ஒன்னும் பேச மாட்டேங்கறான்'ன்னு வச்சுட்டார். :-)//

    ஹா ஹா ஹா!
    பாவம் கோவி அண்ணா! அவரை இப்பிடி ஏமாத்திப்புட்டீங்களே :)

    //எழுதுறதுக்கு என்ன? மத்தவங்க நொந்து நூடுல்ஸ் ஆகும் வரை அப்பா நல்லாவே எழுதுவார்//

    இதை ராகவன் சொன்னா ஒத்துக்கிடறேன்! :)

    //அம்மா அதனால தான் அப்பா பேசுறதையும் கேக்குறதில்லை; எழுதுறதையும் படிக்கிறதில்லை. :-)//

    இதை யாருமே சொல்ல வேணாம்!
    நானே ஒத்துக்கிடறேன்! :))

    ReplyDelete
  11. மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது அந்தக் காலத்திலே. மக்களாட்சியில் மக்கள் எவ்வழியோ மன்னன் அவ்வழி.
    இந்த பகுதியை தான் இப்போது சோ எழுதிய மஹாபாரதம் பேசுகிறது புத்தகத்தில் படித்துக்கொண்டிருக்கேன்.
    அருமையான புத்தகம்,வாய்பிருந்தால் படிக்கவும்.
    உங்கூர் உள் விஷயங்களை அருமையாக சொல்லியுள்ளீர்கள்.

    ReplyDelete
  12. நன்றி வடுவூர் குமார்.

    முன்பு துக்ளக்கில் அந்தத் தொடர் வரும் போது சில பகுதிகளைப் படித்திருக்கிறேன். பொத்தகமாக வாங்கிப் படிக்கவில்லை. அடுத்த முறை இந்தியா வரும் போது வாங்குகிறேன்.

    ReplyDelete