உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு
ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி
உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்றாள்
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை
மறு இல் கற்பின் வாணுதல் கணவன்
சுருக்கமாக முதல் மூன்று அடிகளின் பொருளானது: உலகத்து உயிர்கள் எல்லாம் மகிழும்படி உலகத்தை வலம் வரும் பலரும் புகழும் ஞாயிறு கடலில் தோன்றியதைப் போல், எத்திசையில் நோக்கினும் விளக்கமாகத் தோன்றும் குறைவற்ற ஒளி கூடிய (திருமுருகன்).
இனி அடுத்த மூன்று அடிகளின் பொருளைப் பார்ப்போம்.
உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்றாள்
செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை
உலகத்து உயிர்கள் எல்லாம் மகிழும் படி தோன்றினாலும் அவனை அடைந்தவர்கள் அவனை வெறுத்தவர்கள் என்று இருவகையான உயிர்கள் எங்கும் இருக்கின்றனவே. அவனை அடைதல் என்பது அவனது உரிமைப்பொருட்களான உயிர்களையும் உலகத்தையும் நேயத்துடன் நோக்கி அவற்றிற்கு தொண்டு செய்தல். அவனை வெறுத்தலானது அவ்வுயிர்களையும் உலகத்தையும் வெறுத்து அவற்றிற்குத் தீங்கு விளைவிப்பது.
அவனது உடைமைகளான உயிர்களையும் உலகத்தையும் விரும்புபவர்கள் அவனுக்கு உரியவர்கள். அவர்களின் துன்பங்களையெல்லாம் நீக்கி அவர்களுக்கு நன்மைகள் செய்து தாங்குகிறான் திருமுருகன். அதனால் 'உறுநர்த்தாங்கிய' என்றார் ஆசிரியர்.
அவ்வாறு அவனை விரும்பாமல் அவனை வெறுத்தவர்களை இவ்வுலகில் இல்லாமல் செய்தும் காக்கிறான் திருமுருகன். இவ்வகை மக்களை இல்லாமல் செய்தல் என்பது இரண்டுவிதமாகச் செய்யலாம். அவர்களுக்கு எடுத்துக்காட்டுகளாக இருப்பவர்களை அழித்து இல்லாமல் செய்வது; அப்படி அழிக்கப்பட்டவர்களைக் கண்டு மனம் திருந்தி செறுநர்களாக இருந்தவர்கள் உறுநர்களாக மாறுவதால் செறுநர்கள் இல்லாமல் செய்வது. சூரனைப் போன்றவர்கள் செறுநர்களுக்கு எடுத்துக்காட்டுகள். அவர்களை அழித்து இல்லாமல் செய்கிறான் கந்தன். அவர்களே மனம் திருந்தி வணங்கும் போது மயிலும் சேவலுமாக அவர்களைத் தன் அணிகளாகக் கொள்கிறான் கடம்பன். இதனையே 'செறுநர்த் தேய்த்த' என்று குறிக்கிறார் ஆசிரியர்.
இவ்விரு செயல்களையும் திருமுருகனே செய்தாலும் அச்செயல்களைச் செய்வதில் முனைப்புடன் இருப்பவை அவனது இரு அங்கங்கள்.
உறுநரைத் தாங்குவது அவனது அழகும் வலிமையும் பொருந்திய திருத்தாள்கள். அழகுடன் இருப்பதால் உறுநர்களைக் கவர்ந்து அடி சேர்க்கிறது. அவர்களின் தீவினைப்பயன்களை நீக்கி அவர்களது அறியாமை இருளையும் நீக்குவதால் வலிமை கொண்டதாகவும் விளங்குகிறது. இவ்வாறு உறுநரைத் தாங்குவது அவனுடைய அழகும் வலிமையும் பொருந்திய திருவடிகள் என்பதால் 'உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்றாள்' என்றார் ஆசிரியர்.
உறுநரைத் தாங்குவது அவனது திருவடிகள் என்றால் செறுநரைத் தேய்ப்பதோ தடக்கைகள். இடியைப் போன்றும் மேகத்தைப் போன்றும் விளங்கும் நீண்ட திருக்கைகள் செறுநரைத் தேய்க்கின்றன. முன்பு சொன்னது போல் அத்திருக்கைகள் மறக்கருணை செய்யும் போது இடியைப் போல் விளங்குகின்றன. அறக்கருணை செய்யும் போது அவை மேகங்களைப் போல் அன்பைப் பொழிகின்றன. இவ்வாறு இடியைப் போல் அழித்தும் மேகத்தைப் போல் கருணை செய்தும் செறுநரைத் தேய்ப்பதால் 'செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை' என்றார் ஆசிரியர்.
முதல் நான்கு அடிகளையும் ஒரு தொடராகக் கொண்டு 'உலகம் உவக்கும் படி தோன்றி ஒளி பெற்று விளங்குவது திருமுருகனின் திருவடிகள்' என்றும் பொருள் கொள்வார் உண்டு.
இவ்விதமாக அடியவரைக் காத்தும் வெறுப்பவர்களைக் குறைத்தும் திகழும் திருமுருகனின் இன்னொரு முதன்மையான அடையாளத்தை அடுத்த வரியில் சொல்கிறார் ஆசிரியர். வடமொழியிலும் புருஷசூக்தம் 'உனக்கு மண்மகளும் திருமகளும் மனைவிகள்' என்று மனைவியரை முன்னிட்டே மாதவனை அடையாளம் சொல்லும். இங்கே நக்கீரனாரும் அப்படியே திருமுருகனின் மனைவியைச் சொல்லி அவனை அடையாளப்படுத்துவதைப் பார்த்தவுடன் புருஷசூக்தம் நினைவிற்கு வந்தது.
முதல் அடையாளமாக உறுநரைத் தாங்குதலையும் இரண்டாவது அடையாளமாக செறுநரைத் தேய்த்தலையும் சொல்லிய பின் மூன்றாவதாக அவனது மனைவியைப் பற்றி சொல்லி அவனது அடையாளத்தை உறுதி செய்கிறார் ஆசிரியர்.
மறு இல் கற்பின் வாணுதல் கணவன்
அழகிய ஒளிபொருந்திய நெற்றியை உடையவளின் கணவன் என்று மட்டுமே சொன்னால் எந்தப் பெண்ணைச் சொன்னார் என்ற குழப்பம் நேரிடும். திருமுருகனின் மனைவியரான வள்ளியம்மையாகவும் இருக்கலாம் தெய்வயானையம்மையாகவும் இருக்கலாம். அதனால் 'மறு இல் கற்பின்' என்ற அடைமொழியை இங்கே தருகிறார் ஆசிரியர். வள்ளியம்மையை மணந்ததோ களவு மணம் என்ற வகையில் அடங்கும். பெற்றோரையும் உற்றோரையும் எதிர்த்து அவருடன் போராடி வள்ளியம்மையை மணம் புரிந்தான் இக்கிழவன். அதனால் அது சங்க கால இலக்கியங்கள் காட்டும் 'களவு மணம்' என்ற வகையில் அமையும். இரண்டு பக்கத்துப் பெற்றோரும் உற்றோரும் மகிழ்ந்து மணமுடித்துத் தர தெய்வயானையம்மையை மணந்தான் இத்தேவசேனாபதி. அதனால் அது சங்க கால இலக்கியங்கள் காட்டும் 'கற்பு மணம்' என்ற வகையில் அமையும்.
அப்படி குற்றம் சொல்ல முடியாத வகையில் கற்பு மணத்தால் கொண்ட ஒளிபொருந்திய நெற்றியைக் கொண்ட தெய்வயானையின் கணவன் திருமுருகன் என்பதை 'மறு இல் கற்பின் வாணுதல் கணவன்' என்றார் ஆசிரியர்.
இனி வரும் இடுகைகளில் தொடர்ந்து திருமுருகாற்றுப்படை நூலைப் பயிலலாம்.
அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள் குமரன். வாழ்த்துக்கள்.
ReplyDelete//அவ்வாறு அவனை விரும்பாமல் அவனை வெறுத்தவர்களை இவ்வுலகில் இல்லாமல் செய்தும் காக்கிறான் திருமுருகன். இவ்வகை மக்களை இல்லாமல் செய்தல் என்பது இரண்டுவிதமாகச் செய்யலாம். //
ReplyDeleteஅழகான விளக்கம். நன்றி குமரா.
நான் படிச்சேன்னு மட்டும் சொல்லிக்கறேன் :)....நன்றி குமரன்.
ReplyDeleteநன்றி கவிநயா அக்கா. :-)
ReplyDeleteபடிச்சுட்டேன்னு சொன்னதற்கு நன்றி மௌலி. நிறைய பேரு அதைக் கூட சொல்லாம போறாங்க. அப்படி போனா படிக்கிறாங்களா இல்லையான்னு எனக்குத் தெரியாதில்லை. :-)
ReplyDeleteஅடுத்த தடவை இன்னும் கூடுதலா ஏதாவது சொல்லுங்க. :-)
//நக்கீரனாரும் அப்படியே திருமுருகனின் மனைவியைச் சொல்லி அவனை அடையாளப்படுத்துவதைப் பார்த்தவுடன் புருஷசூக்தம் நினைவிற்கு வந்தது//
ReplyDeleteஅதான் முருகப் பெருமான் திருக்கைகளில் சங்கு சக்கரம் திகழ்கிறதோ, குமரன்? :)
//உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்றாள்//
//செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை//
ஆக...திருக்கரங்கள் அருள்வோம் என்று பேருக்குக் காட்டினாலும்,
திருவடிகளே அடியவர்களைத் தாங்குகின்றன என்று நக்கீரரும் திருவடிப் பெருமை சொல்லப் போந்தாரோ! அருமை!
திருவடிகளின் பெருமையை உணர்ந்த ஒரே காரணத்துக்காகவேனும், எங்கள் மருகன் சங்கு சக்கரங்களை வைத்துக் கொள்ளட்டும்! :)
//மறு இல் கற்பின் வாணுதல் கணவன்//
ReplyDeleteகுமரன்,
ஏன் தேவசேனையின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட நக்கீரர் மட்டும் மறுக்கிறார்?
மற்ற சங்கப் புலவர்கள் வள்ளி, தேவசேனை இருவரின் பெயரையும் கூறுகின்றனரே!
இதற்கு விளக்கம் தேவை!
//கற்பின் வாணுதல் கணவன்//
கற்பு மணம் புரிந்தவளின் கணவன் என்று பொருள் கொண்டு, தேவசேனை-ன்னு சொல்றீங்க!
ஆனால் கற்புடைய பெண் வள்ளியின் கணவன் என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம் அல்லவா?
ராகவன் வந்து சொன்னால் அடியேன் ஏற்றுக் கொள்வேன்!
உறுநர் X செறுநர்
அடடா. பெருமாள்ன்னா ஒருத்தர் மட்டும் தான்னு நினைச்சிருந்தேன். ஓசைமுனி அந்த எண்ணத்தைத் தகர்த்தார். சங்குசக்கரத்தான்ன்னா ஒருத்தர் மட்டும் தான்னு நினைச்சிருந்தேன். அதுவும் இன்று தகர்ந்ததே!!!
ReplyDeleteபழைய பின்னூட்டத்தின் அடியில் இது ஒட்டிக்கிச்சி!
ReplyDeleteஉறுநர் X செறுநர்
நல்ல சொற்கள் குமரன்! புழங்க வேண்டும்!
விடுநர் X பெறுநர் நினைவுக்கு வந்துரிச்சி!
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteஅடடா. பெருமாள்ன்னா ஒருத்தர் மட்டும் தான்னு நினைச்சிருந்தேன். ஓசைமுனி அந்த எண்ணத்தைத் தகர்த்தார்.//
ஓசை முனி மட்டுமா?
எங்கள் தோசை முனியும் தான்! :)
//சங்குசக்கரத்தான்ன்னா ஒருத்தர் மட்டும் தான்னு நினைச்சிருந்தேன். அதுவும் இன்று தகர்ந்ததே!!!//
பாத்தீங்களா? நீங்க போட்ட படத்தை நீங்களே கவனிக்கலை! உம்ம்ம்ம்!
குமரன்
ReplyDeleteசாரி...இன்னிக்கி பதிவில் இருந்து கேள்வி மட்டுமில்லை!
படத்தில் இருந்தும் கேள்வீஸ்!
பதிவில் உள்ள படம் திருப்பரங்குன்றம் முருகன் தானே? கூடத் தேவசேனை!
அது யாரு தாடிக்காரரு? நாரதரா? அவரு ஏன் தாரை வார்த்துக் கொடுக்கணும்?
மேலே ரெண்டு பேரு பறக்கறாங்களே? அவிங்க யாரு?
இன்னும் யார் யாரெல்லாம் இருப்பாங்க கருவறைக் குகைச் சிற்பத்தில்?
திருவடிகளின் பெருமையைப் பற்றி நீங்கள் சொன்ன பிறகு தான் இடுகையை எழுதத் தொடங்கும் போது எழுத நினைத்து எழுதாமல் மறந்துவிட்டது நினைவிற்கு வருகிறது இரவிசங்கர். 'நாதன் தாள் வாழ்க' என்று ஒருவரும், 'துயரறு சுடரடி' என்று இன்னொருவரும் எடுத்தவுடனேயே திருவடிகளைப் பற்றி பேசுவார்களே, அதே போல் நக்கீரரும் முதலில் திருவடிகளையே பேசியிருக்கிறார் முதலில். பின்னர் தான் திருக்கரங்களும் மனைவிமார்களும். :-)
ReplyDeleteநக்கீரர் தேவசேனையின் திருப்பெயரை வெளிப்படையாகக் கூற மறுப்பதாக எனக்குத் தோன்றவில்லை இரவிசங்கர்.
ReplyDeleteகலைஞர் என்றாலோ பெரியார் என்றாலோ காந்தி என்றாலோ இன்றைக்கு அந்த அந்த ஆட்களைக் குறிப்பதாகத் தானே எடுத்துக் கொள்கிறோம்? ஆனால் இவை பொதுப் பெயர்கள் தானே? எத்தனையோ கலைஞர்கள் உண்டு; எத்தனையோ பெரியார்கள் உண்டு; எத்தனையோ காந்திகள் உண்டு. ஆனால் எத்தனையோ பேர் கலைஞர் என்று மட்டும் குறிப்பிட்டு விட்டு கருணாநிதி என்று சொல்லாமல் விடுகிறார்களே. ஏன்? கலைஞர் என்று சொன்னாலே மற்றவர்களுக்கு இடம், பொருள், ஏவலைக் கொண்டு அந்தச் சொல் கருணாநிதியைத் தான் குறிக்கிறது என்று மற்றவர்கள் புரிந்து கொள்வதால் தானே.
அதே போல் நக்கீரரின் காலத்தில் முருகனின் மனைவியைக் கூறும் போது 'மறு இல் கற்பின் வாணுதல்' என்று சொன்னாலே அது தெய்வயானை அம்மையாரைக் குறித்திருக்கலாம். அதனால் அவரும் அப்படியே சொல்லிச் சென்றிருக்கலாம்.
கற்பு என்ற சொல் நாற்றம் என்ற சொல்லைப் போல் தற்போது வேறு பொருள் பெற்றுவிட்டது என்று நினைக்கிறேன். அதனால் அந்தக் காலக் கற்பு என்ற சொல்லுக்கு இந்தக் காலக் கற்பு என்பதற்கான பொருளை ஏற்றினால் 'கற்புள்ள வள்ளியம்மையின் கணவன்' என்று பொருள் சொல்ல விரும்பினால் தடையில்லை. சொல்லிக் கொள்ளலாம். :-)
ஆமாம் இரவி. நல்ல முரண்சொற்கள் தான் இந்த உறுநரும் செறுநரும். முதலில் செருநர் என்று படித்துவிட்டு செரு என்றால் போர் புரிபவர்கள் தானே. இங்கே என்ன வெறுப்பவர்கள் என்று பொருள் கொள்கிறார்களே என்று திகைத்தேன். அப்புறம் தான் இது செருநர் இல்லை செறுநர் என்று புரிந்தது. :-)
ReplyDeleteஇந்தப் படத்தில் அமர்ந்திருக்கும் மூவர் யார் என்று மரபாக என்ன சொல்கிறார்களோ அதனையே சொல்கிறேன்.
ReplyDeleteநடுவில் இருப்பவன் குன்றத்துக் குமரன்.
அவனின் இடப்பக்கம் தெய்வயானை.
வலப்பக்கம் இந்திரன் என்பாரும் உண்டு; நாரதர் என்பாரும் உண்டு. தாடி மீசையுடன் இருப்பதால் இந்திரனா என்ற ஐயம் உண்டு. மகளைத் தாரை வார்த்துக் கொடுப்பது போலும் இல்லை. நாரதர் என்றால் யாழைக் காணவில்லை. அப்படியே நாரதர் என்றாலும் அவருக்குச் சரியாசனம் தரவேண்டிய தேவை என்ன என்றும் புரியவில்லை.
மேலே பறந்து கொண்டிருப்பவர்களின் தலையின் பின்னால் இருக்கும் சூரிய சந்திர பிரபைகளை வைத்து அவர்கள் சூரிய சந்திரர்கள் என்று சொல்லுவார்கள்.