Monday, August 18, 2008

*நட்சத்திரம்* - இராமனா கிருஷ்ணனா யார் கருணை வேண்டும்?



நீரில் மூழ்கும் போது நீச்சல் தெரியாதவன் எப்படித் தவிப்பானோ அப்படிப்பட்ட தவிப்பு இருந்தால் இறையை உடனே உணரலாம் என்று அறிந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். குறைவற்ற அன்பு மட்டுமே துணையாகக் கொண்டு நீரில் மூழ்கி மூச்சுத் திணறும் ஒரு மீனவ பக்தனுக்காக அன்னை காட்சி கொடுப்பதை மிக நன்றாக 'ஆதிபராசக்தி' திரைப்படத்தில் காண்பித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட தவிப்பு கொள்வதை 'ஆர்த்தி' என்று சொல்வது வழக்கம். இனி மேலும் தாங்காது; நாட்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன; ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாகக் கழிகிறது; உன் கருணைக்காக வேண்டி நிற்கிறேன்; வருவாய் வருவாய் வருவாய் என்று ஏங்கி அழைக்கும் ஆர்த்திப் பிரபந்தமாக இருக்கும் நாயகி சுவாமிகளின் பாடல்கள் பலவற்றில் ஒன்றை இங்கே தருகிறேன்.

இந்தப் பாடலை டி.எம்.எஸ். பாடி இங்கே கேட்கலாம். இந்த இடுகையில் சௌராஷ்ட்ரப் பாடலின் வரிகளையும் அதனைத் தொடர்ந்து அடியேன் செய்த தமிழாக்கத்தையும் தருகிறேன். ஒரே மெட்டில் இரண்டு மொழிப் பாடல்களையும் பாடலாம் என்று நினைக்கிறேன். யாரேனும் அதே மெட்டில் தமிழ்ப்பாடலைப் பாடித் தந்தால் அதனை இங்கே சேர்த்துவிடுகிறேன்.


ராமா க்ருப ஸாரே ராக் ஸோட் ரே ஸ்ரீ
ராமா க்ருப ஸாரே (ராமா)

இராமா கருணை செய்வாய் சினம் விடடா ஸ்ரீ
இராமா கருணை செய்வாய் (இராமா)

ராமா க்ருப ஸாரே ப்ரேம ஹோர் அவிகிநு
தே தொர் பதாலுநு தூஸ் மொக் கதி ஸ்ரீ (ராமா)

இராமா கருணை செய் அன்புடன் வந்திங்கு
தா உன் பாதங்கள் நீயே கதி எனக்கு ஸ்ரீ (இராமா)

திந்நூ ஜேடரேஸி தேவு கோ
திந்நூ ஜேடரேஸி
திந்நூ கோ ஜேடரேஸ் மொந்நு தொவி மொர
மொந்நும் அவி மொந்நு துவெ மொதி காரி ஸ்ரீ (ராமா)

நாட்கள் போகின்றன தேவா வீணே
நாட்கள் போகின்றன
நாட்கள் வீணாகின்றன மனம் வைத்து எனது
மனத்தில் வந்து மனம் வெண் முத்தாய் செய் ஸ்ரீ (இராமா)

காய் கரு மீ யேடு ஏ கர்முனுக்
காய் கரு மீ யேடு
காய் கரு மீ யேடு மாய் பாப் மொக் கோநுரே
ஸாய் தூத் லொநி சொரே ரெங்க ஸாயி க்ருப ஸாரே (ராமா)

என்ன செய்வேன் நான் இங்கே இந்த வினைகளை
என்ன செய்வேன் நான் இங்கே
என்ன செய்வேன் நான் இங்கே அன்னை தந்தை எனக்காரடா
ஆடைப் பால் வெண்ணெய் தின்ற ரெங்கசாயி கருணை செய்வாய் (இராமா)


கெடோ செர்சிலேரே க்ருஷ்ணா க்ருஷ்ணா செனம்
கெடோ செர்சிலேரே க்ருஷ்ணா
கெடோ செர்சிலே நமம் படன கர்யாஸ்தெங்கோ
வடபத்ரஸாயி ஹொய் அவெ நடனகோபாலா (ராமா)

கரை சேர்த்துக் கொள்ளடா கிருஷ்ணா கிருஷ்ணா விரைவாய்
கரை சேர்த்துக் கொள்ளடா கிருஷ்ணா
கரை சேர்த்துக் கொள் நாமம் பாடிக் கொண்டிருப்பவர்களை
வடபத்ரசாயி ஆகி வந்த நடனகோபாலா (இராமா)



ஆழ்வார்கள் கண்ணன் செய்ததை இராமன் செய்ததென்றும் நரசிம்மனைப் பாடும் போது நடுவில் இராமனையும் கண்ணனையும் பாடியும் அவதாரங்களில் முன் பின்னாக நிகழ்ச்சிகளைக் கொண்டு சென்று உருகுவார்கள். ஆழத் தொடங்கி உருகிவிட்டால் இப்படித் தான் நிகழும் போலிருக்கிறது. பத்தொன்பதான் நூற்றாண்டின் சௌராஷ்ட்ர ஆழ்வாருக்கும் அப்படியே நடக்கிறது.

சினத்தை விடடா இராமா என்று கெஞ்சித் தொடங்கியவர் உன் பாதங்களே கதி என்று சரணம் அடைந்து, 'உன் அருளாலே உன் தாள் வணங்கி' என்று அருளாளர்கள் சொன்னது போல் நீயே மனம் வைத்து என் மனத்தில் வந்திருந்து என் மனத்தைத் தூய்மை செய் என்று பாடுகிறார். நடுவில் கரும வினைகளைப் பற்றி நொந்து கொண்டு என் தாயும் தந்தையுமான ரங்கசாயி நீயே கருணை செய் என்று இராமனிடமிருந்து அந்த இராமன் வணங்கிய அரங்கனிடம் தாவிவிடுகிறார்.

திருவரங்கனைப் பாடியவுடன் கண்ணனின் உருவாக நிற்கும் அழகிய மணவாளன் திருவுருவம் நினைவில் ஆடியது போலும். அதனால் திருவரங்கனைப் பாடும் போதே வெண்ணெய் களவு செய்து உண்ட வாயனையும் பாடிவிடுகிறார். அப்போது தானே இறுதியில் கரை சேர்த்துக் கொள்ளடா கிருஷ்ணா கிருஷ்ணா என்று உருகி அழைக்க முடியும்.

இராமனாய், அரங்கனாய், கண்ணனாய் வந்தவனே தன் குருவான வடபத்ரஸாயி ஜீயராகவும் வந்தார் என்று குருவின் கருணையே தலையாயது என்று நிறைவு செய்தார். நாயகி சுவாமிகளுக்கு வடபத்ரார்யராக வந்து அருள் செய்த நடனகோபாலா! நீயே எங்களுக்கும் கருணை செய்ய வேண்டும்!

33 comments:

  1. அருமையான பாடல் குமரா.

    //என்ன செய்வேன் நான் இங்கே அன்னை தந்தை எனக்காரடா//

    உருக வைத்த வரி. தமிழாக்கத்தை படித்துக் கொண்டே கேட்க சுகமாக இருந்தது. நன்றி குமரா.

    ReplyDelete
  2. குமரன், நாட்கள் எவ்வளவு வேகமாய் ஓடுகின்றன இல்லையா? இப்பொழுது "பெருமாள் ஏளரார்"
    படிச்ச நினைவு :-)
    இலவசம் சொன்னா மாத்ரி காமடி முயற்சி செய்யுங்களேன். சிரிக்க நாங்க ரெடியாய் இருக்கிறோம் :-))

    கே.ஆர்.எஸ்! எங்களுக்கும் ரெண்டு ரெண்டு பின்னுட்டம் பார்சல் மத்தப்படி, இந்த பதிவுக்கு கமெண்ட், கவிநயா ரீப்பிட்டே :-))))))))))))

    ReplyDelete
  3. தமிழாக்கம் அருமை

    பாடலும்
    கேட்க கேட்க இனிக்கின்றது
    செவிகளில்

    ReplyDelete
  4. அபூர்வமான இது போன்றவற்றை அடிக்கடி பதிவிடுங்கள் குமரன். :)

    நடன கோபால நாயகியாருக்கு என்றே ஒரு சன்னதி கிருஷ்ணன் கோவிலில் இருக்கு இல்லையா?

    ReplyDelete
  5. //கரை சேர்த்துக் கொள்ளடா கிருஷ்ணா கிருஷ்ணா விரைவாய்
    கரை சேர்த்துக் கொள்ளடா கிருஷ்ணா//

    நாள் தோறும் நாமும் உருக வேண்டிய அருமையான வரிகள்.

    ReplyDelete
  6. பத்தொன்பதாம் நூற்றாண்டின் சௌராஷ்ட்ர ஆழ்வார் திருவடிகளே சரணம்!

    ReplyDelete
  7. பாட்டினைப் பாடிக் கொடுக்கும் சேவார்த்திகள் யாரேனும் உள்ளனரா?

    இல்லை...கண்ணபிரான் நானே கேட்டு வாங்கி விடுவேன்! சொல்லிட்டேன்! ஆமாம்! :))

    ReplyDelete
  8. @உஷாக்கா
    //கே.ஆர்.எஸ்! எங்களுக்கும் ரெண்டு ரெண்டு பின்னுட்டம் பார்சல்//

    பார்சல் கட்ட இப்போ தையிலை இல்லைக்கா!
    எனவே தையலை அனுப்பி வைங்க!
    பாட்டு பாடித் தர! :)

    பார்சேல் அவிங்க கிட்ட அனுப்பி வைக்கிறேன்! :))

    ReplyDelete
  9. //திருவரங்கனைப் பாடியவுடன் கண்ணனின் உருவாக நிற்கும் அழகிய மணவாளன் திருவுருவம் நினைவில் ஆடியது போலும். அதனால் திருவரங்கனைப் பாடும் போதே வெண்ணெய் களவு செய்து உண்ட வாயனையும் பாடிவிடுகிறார்//

    உம்...
    இதில் இன்னொரு ரகசியமும் உள்ளது குமரன்! நாயகி சுவாமிகள் அறியாத ரகசியமா!

    இராமன்+கண்ணன்=அரங்கநாதன்!

    அரங்கநாதனை அருகில் கண்டவர்க்குத் தெரியும்! அவன் திருவயிற்று உதர பந்தம்! திருவயிற்றிலே தாம்புக் கயிறு தழும்புகள்! உரலில் கட்டிய அடையாளங்களையும் அவனே ஏற்றுக் கொண்டான்!

    தோளிலே அம்புறாத் தூணி தாங்கிய தழும்புகள்! விஸ்வாமித்திரர் வேள்வி காத்த போது இள வயதிலேயே சதா சர்வ காலமும் வில்லும் கையுமாய் அலைந்ததால் வந்த தழும்பு! அதுவும் அவனே ஏற்றுக் கொண்டான்!

    இராமன் வணங்கிய பெருமாள் மட்டுமல்ல! இப்படி இரண்டு பெருமாள்களாகவும் இருப்பதால் தான் அவன் பெரிய பெருமாள்!

    ReplyDelete
  10. கோதை அரங்கனைத் தேர்ந்தெடுத்த காரணமும் இது தான்!
    தன்னிடம் கண்ணனாகவும், தன் தோழியரிடம் இராமனாகவும் இருக்கும் காதலனை எந்தப் பெண் தான் விரும்ப மாட்டாள்! :))

    அங்கு மாதவிப் பந்தல் பதிவிலேயே சொல்லி இருப்பேன்! திவ்ய சூரி சரிதம் சொல்லும் போது! ஆனால் அங்கு காதலுக்கு முக்கியத்துவம்! காதல் காரணங்களை ஆராய்ந்து வருவதில்லை என்பதால் அப்படிச் சொல்லவில்லை! :)

    ReplyDelete
  11. //இப்பொழுது "பெருமாள் ஏளரார்"
    படிச்ச நினைவு :-)//

    புரியுது.. புரியுது..

    ReplyDelete
  12. நான் எத்தனையோ முறை கேட்டு , பார்த்து ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று குமரன். எமனேஸ்வரத்தில் அடிக்கடி நடக்கும். தை மாதம் ரத ஸ்ப்தமி அன்று ஊரில் உள்ள 20 குழுக்களும், நடன கோபால நாயகி ஸ்வாமிகள் போன்று வேடம் அணிந்து, கோலாட்டம் ஆடிக்கொண்டு, ஊர் முழுதும் பாடிக் கொண்டு வருவர். பார்ப்பதற்கு அருமையாக இருக்கும்.

    ReplyDelete
  13. //கோதை அரங்கனைத் தேர்ந்தெடுத்த காரணமும் இது தான்!
    தன்னிடம் கண்ணனாகவும், தன் தோழியரிடம் இராமனாகவும் இருக்கும் காதலனை எந்தப் பெண் தான் விரும்ப மாட்டாள்! :))//

    என்ன ரசனை ஐயா உமக்கு! ஆணாகவும் இருக்க வேண்டும், பெண்மனமும் உள்ளிருக்க வேண்டும்!! அந்த மாலனும் உமக்கு பாதை போட்டு தருகிறான் பார்!!!

    என்ன ரசனை ஐயா உமக்கு! ரெண்டு பக்கத்து இலையிலும் தயிர் சாதம் சாப்பிட வேண்டும். அதைப் பார்த்துக்கொண்டே நீர் சக்கரைப் பொங்கல் சாப்பிட வேண்டும்!! ரெண்டும் சாப்பிட்ட திருப்தி உமக்கு!!!

    வாழ்க, வாழ்க!

    ReplyDelete
  14. //ஓகை said...
    அந்த மாலனும் உமக்கு பாதை போட்டு தருகிறான் பார்!!!//

    இதை நீங்க ஆண்டாளிடம் தான் கேக்கணும் ஓகை ஐயா! :)

    //என்ன ரசனை ஐயா உமக்கு! ஆணாகவும் இருக்க வேண்டும், பெண்மனமும் உள்ளிருக்க வேண்டும்!!//

    கோதை அப்படிச் சொல்லலையே!
    கோதையிடம் கண்ணன் போல் லீலைகள் செய்யணும், கோதையின் தோழிகளிடத்தில் இராமன் போல் ஏகபத்னி விரதனாக இருக்கணும்!

    கோதையின் ஆசை நியாயமானது ஓகை ஐயா! :)

    ReplyDelete
  15. //கோதையின் ஆசை நியாயமானது ஓகை ஐயா! :)//

    ஆமாம்! நான் அதைச் சொல்ல வரவில்லை. நீங்கள் இரண்டையும் ரசித்து எழுதியதை நான் ரசித்து எழுதினேன்.

    ReplyDelete
  16. மிக்க மகிழ்ச்சி கவிநயா அக்கா. நன்றி.

    ReplyDelete
  17. அனுபவித்து ரசித்து எழுதியிருக்கிறீர்கள். டி.எம்.எஸ் குரலில் சௌராஷ்ட்ரா பாடல் கேட்கவே நன்றாக இருக்கிறது. உங்கள் மொழிபெயர்ப்பும் அழகு.

    முத்தங்கி சார்த்திய பெருமாள் மேல் ஃபோட்டோஷாப் வேலையா? :‍-)

    ReplyDelete
  18. அன்பின் குமரன்,

    நடன கோபால நாயகி சுவாமிகளின் பாடல் - அதுவும் டிஎமெஸ்ஸின் குரலில் - ஆகா ஆகா - அதனுடன் தமிழாக்கம் வேறு. அருமை அருமை.

    பின்னூட்ட விளக்கங்களும் அருமை

    ReplyDelete
  19. ஆமாம் உஷா. அதற்குள் இரண்டு விண்மீன் வாரங்கள் வந்து சென்று விட்டன. நீங்கள் குறிப்பிடும் 'தமிழ் இறைவனுக்கும் முன்னால்...' இடுகையை இந்த தடவையும் இட்டிருந்தேன் - நீங்களும் படித்துப் பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள்.

    இனிமேல் நகைச்சுவை முயல்கிறேன் உஷா. நீங்க கஷ்டப்பட்டாவது சிரிக்கிறேன் என்று சொன்னதால். :-)

    ReplyDelete
  20. மிக்க நன்றி திகழ்மிளிர். உண்மை. இனிமையான பாடல் தான் இது.

    ReplyDelete
  21. மௌலி. நான் முன்பு தொடர்ந்து 'மதுரையின் ஜோதி' பதிவில் நாயகி சுவாமிகளின் கீர்த்தனைகளை இட்டுக் கொண்டிருந்தேன். அண்மைக்காலமாக (ஏறக்குறைய ஒன்று, ஒன்றரை வருடமாக) சிவமுருகன் மட்டுமே இட்டு வருகிறார். நிறைய பாடல்களை அங்கே இட்டிருக்கிறார். படித்துப் பாருங்கள்.

    ஆமாம். தெற்கு கிருஷ்ணன் கோவிலில் நடனகோபால நாயகி சுவாமிகளின் சன்னிதி இருக்கிறது. மாரியம்மன் தெப்பக்குளத்தின் கரையில் ஒரு நினைவாலயமும் (கீதா நடனகோபால நாயகி மந்திர்), அழகர் கோவில் செல்லும் வழியில் காதக்கிணறு என்ற ஊரில் ஆனைமலை நரசிம்மப்பெருமாளை நோக்கி சுவாமிகளின் ஜீவசமாதி கோவிலும் இருக்கின்றன. முக்கோடி வைகுண்ட ஏகாதசியன்று சுவாமிகள் ஜீவசமாதியில் அமர்ந்தார்.

    ReplyDelete
  22. உண்மை கைலாஷி ஐயா. அதுவும் தாய்மொழியில் அந்த வார்த்தைகளைச் சொல்லும் போது இன்னும் அதிகமாக உணர்வு பொங்குகிறது டி.எம்.எஸ்ஸிற்கும் கேட்பவர்களுக்கும்.

    ReplyDelete
  23. வாங்க இருபத்தொன்றாம் நூற்றாண்டின் உடையவரே. அந்த இராமானுஜர் ஆழ்வார் திருவடிகளே சரணம் என்றார். அவர் பின் வந்தோர் ஆழ்வார் எம்பெருமானார் தேசிகன் ஜீயர் திருவடிகளே சரணம் என்றார்கள். நாங்கள் சௌராஷ்ட்ர ஆழ்வார் திருவடிகளே சரணம் என்னும் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் எம்பெருமானார் திருவடிகளே சரணம் என்று கூறலாமோ? :-)

    பாடலை எப்போது பாடி அனுப்பப் போகிறீர்கள்?

    ReplyDelete
  24. சரி தான் இரவிசங்கர். அரங்கனும் அழகிய மணவாளனும் இராமகிருஷ்ணர்களாக இருக்கிறார்கள் என்றே சொல்ல வந்தேன். சரியாகச் சொல்லவில்லை போலும். 'ஏன் பள்ளி கொண்டீர் ஐயா' பாடலை நேற்று கேட்கும் போதும் நினைத்துக் கொண்டேன்.

    ReplyDelete
  25. இராகவ்,

    இரத சப்தமி சௌராஷ்ட்ரர்களுக்குப் புனிதமான நாள். ஏனென்று உங்களுக்குத் தெரியுமா? நிறைய சௌராஷ்ட்ரர்களுக்கே தெரியாது ஏன் இரத சப்தமியைக் கொண்டாடுகிறோம் என்று.

    ReplyDelete
  26. நன்றி கெக்கேபிக்குணி.

    முத்தங்கிப் பெருமாள் போட்டோஷாப் வேலையா என்று தெரியாது. வலையில் அகப்பட்டவர். அவரை எடுத்து உள்ளே வைத்துக் கொண்டேன். :-)

    ReplyDelete
  27. மிக்க நன்றி சீனா ஐயா.

    ReplyDelete
  28. //நிறைய சௌராஷ்ட்ரர்களுக்கே தெரியாது ஏன் இரத சப்தமியைக் கொண்டாடுகிறோம் என்று//

    ஏன்?

    எனக்கு பீஷ்மர் கதையும், கால மாற்றமும்(?) தான் காரணங்கள் தெரியும். இப்படி நீங்கள் கேட்டால், பி.க. மாதிரி தெரியுதே;-)

    ReplyDelete
  29. நான் சொல்றது வேற காரணமுங்க. நீங்க சொன்ன கதையை (பீஷ்மர் கதை) சொல்லுங்க கெக்கேபிக்குணி.

    புராணத்தின் படி சௌராஷ்ட்ரர்களின் முதல்வரான தந்துவர்த்தனன் சூரியனின் மகளைத் திருமணம் செய்து கொண்ட நாள் இரத சப்தமி. அதனால் தான் சௌராஷ்ட்ரர்கள் இரதசப்தமியைக் கொண்டாடுகின்றார்கள். :-)

    ReplyDelete
  30. ஓ, அது தான் பெயர்க் காரணமா? தெரியாத விஷயம் (போய் என் சௌராஷ்டிர நண்பர்களிடம் அலட்டிக்கிறேன்:-), நன்றி!

    ReplyDelete
  31. அலட்டிக்க நல்லதா ஒன்னு கிடைச்சுருச்சா கெக்கேபிக்குணி. :-) இன்னும் கூடுதலா தெரிஞ்சுக்கணும்ன்னா சொல்லுங்க.

    ReplyDelete
  32. //தெற்கு கிருஷ்ணன் கோவிலில் நடனகோபால நாயகி சுவாமிகளின் சன்னிதி இருக்கிறது.//

    ஆமாம், இப்போ நினைவில் வந்துடுச்சு.

    //மாரியம்மன் தெப்பக்குளத்தின் கரையில் ஒரு நினைவாலயமும் (கீதா நடனகோபால நாயகி மந்திர்), அழகர் கோவில் செல்லும் வழியில் காதக்கிணறு என்ற ஊரில் ஆனைமலை நரசிம்மப்பெருமாளை நோக்கி சுவாமிகளின் ஜீவசமாதி கோவிலும் இருக்கின்றன. முக்கோடி வைகுண்ட ஏகாதசியன்று சுவாமிகள் ஜீவசமாதியில் அமர்ந்தார்.//

    ஓ! ஜீவ சமாதி அடைந்தவரா ?...

    டிசம்பரில் 10 தினங்கள் மதுரை செல்ல இருக்கிறேன். கண்டிப்பாக காதக்கிணறு செல்கிறேன்.

    நன்றி குமரன்.

    ReplyDelete
  33. கட்டாயம் போய் வாருங்கள் மௌலி. அழகர் கோவில் திறந்திருக்கும் அதே நேரம் காதக்கிணறு கோவிலும் திறந்திருக்கும்.

    ReplyDelete