Friday, June 27, 2008

தகப்பன் சாமி!

"அப்பா அப்பா ஒரு கதை சொல்லுங்க அப்பா" 

 "இப்பத் தானே, அம்மா ஒரு கதை புத்தகத்தைப் படிச்சுக் காமிச்சாங்க. அப்பாவுக்குத் தூக்கம் வருது. தூங்கணும்" 

 "அப்பா அப்பா ப்ளீஸ் அப்பா. ஒரே ஒரு கதை அப்பா" 

 "இல்லைம்மா. அப்பா பாட்டு பாடறேன். சீக்கிரம் தூங்கு. காலையில எந்திரிச்சுப் பள்ளிக்கூடம் போகணும்" 

 "ஒரே ஒரு கதைப்பா. ஒன்னே ஒன்னு. ப்ளீஸ். ப்ளீஸ்" 

 "உழந்தாள் நறுநெய்..." 

 "ம்ம்ம். கதை வேணும்பா" 

 "ஓரோ தடா உண்ண..." 
 
"ம். சரி. பாடுங்க" 

 "உழந்தாள் நறுநெய் ஓரோ தடா உண்ண 
இழந்தாள் எரிவினால் ஈர்த்து எழில் மத்தின் 
பழந்தாம்பால் ஓச்சப் பயத்தால் தவழ்ந்தான் 
முழந்தாள் இருந்தவா காணீரே 
முகிழ் முலையீர் வந்து காணீரே" 

"தூங்கிட்டியா அம்மா?" 

"தூக்கம் வர்றமாதிரி இருக்கு. ஆனா இன்னும் தூங்கலை" 

 "சரி. கதை சொல்லவா?" 

 "கதையா! ம்.ம். சொல்லுங்கப்பா. சொல்லுங்க" 

 "எந்தக் கதை வேணும்?" 

 "ம்.ம். கண்ணன் கதை. கண்ணன் கதை" 

 "ம். அப்பாவும் அதான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். சரி. கண்ணனுக்கு என்ன ரொம்ப பிடிக்கும்?" 

 "வெண்ணெய். வெண்ணெய்" 

 "ஆமாம். வெண்ணெய் தான். ஒரு தடவை அவங்கம்மா.." 

 "யசோதாவா? தேவகியா?" 

 "யசோதாம்மா தான். அவங்க ஒரு தடவை ரொம்ப நேரம் வேலை பார்த்து ஒரு பானை நிறைய வெண்ணெய் சேர்த்து வச்சாங்களாம்" 

 "எம்புட்டு பெரிய பானைப்பா?" 

 "நம்ம வீட்டுல இட்லி மாவு வப்போமே. அது மாதிரி பெரிய பானை" 

 "இட்லி மாவு பானையில இருக்காதே. பாத்திரத்துல தானே இருக்கும்" 

 "ஹிஹி ஆமாம். அந்த மாதிரி பெரிய பானைன்னு சொல்றேன்" 

 "அப்ப சரி" :-) 

 "அம்மா அந்தப் பக்கம் போனவுடனே இந்தக் கண்ணன் என்ன செஞ்சான் தெரியுமா?" 

 "தெரியும் தெரியும். அந்தப் பானையில இருக்குற வெண்ணெயை எல்லாம் தின்னுட்டான்" 

 "உனக்கும் குடுத்தானா என்ன?" 

 "இல்லை. எனக்குக் குடுக்கலை" 

 "அப்ப எப்படி உனக்குத் தெரியும்?" 

 "அப்பா தான் சொன்னீங்க. இன்னொரு கதை சொல்றப்ப" 

 "ம். :-). ஆமாம். அந்தப் பானையில இருக்குற எல்லா வெண்ணெயையும் அவன் வழிச்சு சாப்டான். கொஞ்ச நேரம் கழிச்சு அம்மாவுக்குத் தெரிஞ்சிருச்சு. அம்மாவுக்கோ கோவமோ கோவம். ஒரு பானை வெண்ணெயை முழுங்குனா என்ன ஆகும்?" 

"வயிறு வலிக்கும்" 

"ம். அதான். வயிறு வலிக்கும்ல. இந்தத் திருட்டுப்பய அம்மா எத்தனை தடவை சொன்னாலும் கேக்காம பானை வெண்ணெயை முழுங்கியிருக்கான். கண்ணனுக்கு வயிறு வலிக்குமேன்னு அம்மாவுக்கு பயம். அடடா நாம எத்தனை தடவை சொன்னாலும் கேக்க மாட்டேங்கறானே. இவனுக்கு வயிறு வலிக்குமேன்னு அம்மாவுக்கு கோவம் கோவமா வருது" 

 "ம்" 

 "அம்மா அந்த கோவத்துல கண்ணனை அடிக்க வர்றாங்க. அம்மா அடிக்கப் போறாங்கன்னு தெரிஞ்சவுடனே கண்ணனுக்கு பயம் வந்திருச்சு. உடனே அழ ஆரம்பிச்சுட்டான்" 

 "அப்பா" 

 "என்னம்மா?" 

 "இனிமே நான் நிறைய சாக்லேட் சாப்ட மாட்டேம்பா" 

 "இப்ப எதுக்கும்மா சாக்லேட் நினைவு வந்தது?" 

 "இன்னைக்கு காலையில நான் ரெண்டு பார் சாக்லேட் சாப்புட்டேன்னு அப்பா அடிச்சீங்கள்ல. எனக்கு வயிறு வலிக்கும்ன்னு நீங்க பயந்து தானே அடிச்சீங்க" 

அங்கே ஒரு நீண்ட மௌனம் நிலவியது.


18 comments:

  1. //அங்கே ஒரு நீண்ட மௌனம் நிலவியது. //

    கண்ணில் நீரை வரவழைத்த வரிகள். சொல்லிக் கொடுத்தது யார்?? கற்றது யார்???
    உண்மையில் நாம் அனைவருமே!!

    அது சரி,"தகப்பன் சாமி" என்ற தலைப்பு??? இது மாதிரியும் ஒரு சங்கிலித் தொடர் ஆரம்பிச்சிருக்கீங்களா என்ன?? நான் ராமாயண காலத்திலேயே இருக்கேனா, ஒண்ணும் புரியலை!!! :)))))))))))

    ReplyDelete
  2. ஆஹா! ச்சோ.....ச்வீட்! அருமை குமரா. எப்படி இப்படில்லாம் எழுதறீங்க!

    அப்படியே அந்த பாடலுக்கு பொருள் சொல்லிடுங்க :)

    ReplyDelete
  3. நன்றி கீதாம்மா.

    இந்தத் தலைப்பில் வேறெங்காவது படித்தீர்களா? இந்தக் கதையை நேற்றிரவு எழுதும் போது வேக வேகமாக எழுதிவிட்டேன். தலைப்பிடும் போது தான் கொஞ்சம் சிந்திக்க வேண்டியிருந்தது. சரியான தலைப்பு என்று தோன்றி இட்டேன். இந்தத் தலைப்பில் அண்மையில் எங்கும் படித்த நினைவில்லை.

    உங்க இராமாயணத் தொடர்ல நீங்க எங்கேயோ போயிட்டீங்கன்னு தெரியும். நான் தான் 26வதோ 30வதோ பகுதியிலேயே இருக்கேன். தொடர்ந்து படிக்கணும்.

    ReplyDelete
  4. கவிநயா அக்கா. என்ன இப்படி கேட்டீங்க? நீங்க எழுதுறதையெல்லாம் பார்த்தா இது பக்கத்திலேயே வர முடியாதே?!

    பாடலுக்குத் தானே இந்தக் கதையில பொருள் சொன்னேன். கதை கேட்ட சின்னப் பொண்ணுக்குப் புரிஞ்சிருச்சே. :-)

    உழந்து உழந்து (நிறைய வேலை செய்து) சேர்த்து வைத்த நறுமணம் மிக்க நெய்யை ஒரு பெரும் பானை நிறைய கண்ணன் உண்ண, பானை நெய்யையும் விழுங்கினானே இவன் என்னாவான் என்று பயந்து அவனை இழுத்து வைத்து அழகிய மத்தைக் கடையும் பெரிய தாம்புக்கயிற்றால் அவனை அடிப்பதற்காக ஓங்க அதைக் கண்டு பயத்தாலே தப்பிச் செல்வதற்காகத் தவழ்ந்த இந்தக் கண்ணனின் முழங்கால்களின் அழகைக் காணுங்கள்; முகிழ்த்த முலையுடைய பெண்களே வந்து காணுங்கள்.

    பெரியாழ்வார் திருமொழியின் வரும் பாசுரம். இன்னும் கொஞ்சம் நாளில் 'நாலாயிரம் கற்போம்' பகுதியில் வரும்.

    ReplyDelete
  5. இன்பமாய் இருந்தது இக்கதையைக் கேட்டதும்,
    துன்மமெல்லாம் சோர்ந்தது அப்பா,
    அப்பா மகளின் அன்பைப் பார்த்து.

    ReplyDelete
  6. //பாடலுக்குத் தானே இந்தக் கதையில பொருள் சொன்னேன்.//

    அப்படிங்கிற அளவு புரிஞ்சது... இருந்தாலும் முழுக்க புரியல..

    //கதை கேட்ட சின்னப் பொண்ணுக்குப் புரிஞ்சிருச்சே. :-)//

    நான் இவ்வளவு நாளா உங்ககிட்ட கேட்கிற கேள்வியெல்லாம் பார்த்தும் இப்படிக் கேட்கறீங்களே! உங்க சி.பொ. அளவுக்கு நான் பு.சா. இல்லையே :(

    ReplyDelete
  7. //"உழந்தாள் நறுநெய்..."

    "ம்ம்ம். கதை வேணும்பா"

    "ஓரோ தடா உண்ண..."

    "ம். சரி. பாடுங்க"//

    :-)))))
    சர்வேசன்! என்னமோ சொன்னீங்க?
    நோட் திஸ் பாயின்ட்!
    Our Kumaran is His Master's Voice (HMV)

    ReplyDelete
  8. //இன்னைக்கு காலையில நான் ரெண்டு பார் சாக்லேட் சாப்புட்டேன்னு அப்பா அடிச்சீங்கள்ல. எனக்கு வயிறு வலிக்கும்ன்னு நீங்க பயந்து தானே அடிச்சீங்க//

    தகப்பன் சாமி, தகப்பன் தாயீ!

    //அங்கே ஒரு நீண்ட மௌனம் நிலவியது//

    இங்கும் தான்!

    சிவக்கொழுந்துக்கு என் இனிய வாழ்த்துக்கள்!

    அப்பாவை இதே மாதிரி, கேள்வி கேட்டுக்கிட்டே இரும்மா!
    அப்ப தான் கதைப் பதிவா நெறைய போடுவாரு! :-)

    ReplyDelete
  9. நல்லாயிருக்குங்க குமரன்...நானும் சமிபமா இந்த மாதிரி சிச்சுவேஷனை சந்திக்க ஆரம்பிச்சுட்டேன்...புரியுது. :-)

    ReplyDelete
  10. ஆமாம், அம்பியும் எழுதி இருந்தார் இதே தலைப்பில் இன்னும் எங்கே பார்த்தேன் தெரியலை, அதான் சங்கிலித் தொடரோனு நினைச்சேன். :)))))

    ReplyDelete
  11. ஆஹா. கவிநயா அக்கா. நீங்க இப்படி சொல்லப் போறீங்கன்னு நெனைச்சுக்கிட்டே தானே அதை எழுதுனேன். அப்படியே சொல்லீட்டீங்களே. விளையாட்டா சொன்னதுன்னு தெரியும் தானே?! :-)

    பின்னூட்ட விதிகளின் படி ஒரு செய்யுள் சொன்னா விளக்கமும் சொல்லணும். அப்படியிருக்க இடுகையிலேயே செய்யுள் சொல்லிட்டு விளக்கம் சொல்லாட்டி எப்படி? நீங்க கேட்டீங்க. நான் சொல்லிட்டேன். சரியா?! :-)

    ReplyDelete
  12. இது சிவக்கொழுந்து கதைன்னு யாருங்க உங்களுக்குச் சொன்னது இரவிசங்கர்? :-))

    ReplyDelete
  13. மகிழ்ச்சி மௌலி. நல்லா அனுபவிங்க. :-)

    ReplyDelete
  14. //நீங்க இப்படி சொல்லப் போறீங்கன்னு நெனைச்சுக்கிட்டே தானே அதை எழுதுனேன்.//

    அவ்வளவு நல்லா என்னைத் தெரிஞ்சு வச்சிருக்கீங்க :)

    //விளையாட்டா சொன்னதுன்னு தெரியும் தானே?! :-)//

    ஹ்ம்... நம்பிட்டேன் :)

    //அப்படியிருக்க இடுகையிலேயே செய்யுள் சொல்லிட்டு விளக்கம் சொல்லாட்டி எப்படி? நீங்க கேட்டீங்க. நான் சொல்லிட்டேன். சரியா?! :-)//

    நீங்க சொன்னா சரியா இல்லாம இருக்குமா? :)

    ReplyDelete
  15. அம்பி எழுதுனதை அண்மையில் பார்த்தேன் கீதாம்மா. இனி மேல் தான் படிக்கணும்.

    ReplyDelete
  16. இந்த பசங்களோட ஏரணம் நமக்கு சில சமயங்களில் பிடிபடறதே இல்லை இல்லையா!! :))

    ReplyDelete