Monday, June 23, 2008
முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்தியம் ஆவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆலவாயான் திருநீறே
முத்தி தருவது நீறு - பிறப்பு இறப்பு என்னும் சுழலில் இருந்து விடுதலை தருவது திருநீறு
முனிவர் அணிவது நீறு - முக்கண்ணனை அறியும் முனிவர்கள் அணிவது திருநீறு
சத்தியம் ஆவது நீறு - நிலையில்லாத இந்த உலகத்தில் என்றும் நிலையானது திருநீறு
தக்கோர் புகழ்வது நீறு - நம் அன்பிற்கும் பணிவிற்கும் தக்கோரான அடியார்கள் புகழ்வது திருநீறு
பத்தி தருவது நீறு - அணிபவர்களுக்கு பக்தியெனும் இறையன்பைத் தருவது திருநீறு
பரவ இனியது நீறு - போற்றிப் புகழ இனியது திருநீறு
சித்தி தருவது நீறு - நினைத்ததை அடைய வைக்கும் நல்வலிமையைத் தருவது திருநீறு
திருஆலவாயான் திருநீறே - அது திருவாலவாயாம் தென்மதுரையில் வாழும் இறைவனின் திருநீறே.
இந்த இடுகை 'திருநீற்றுப்பதிகம்' பதிவில் 15 அக்டோபர் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
ReplyDelete15 comments:
வல்லிசிம்ஹன் said...
முத்தி தருவது நீறு.
இதுதான் மிக முக்கியம் என்று நினைக்கிறேன். மறுமையைப் பற்றி நினைப்பு வருவதற்கும்
நீறு அணிவது நலம்.
நீறில்லா நெற்றி பாழ் தானே.
8:59 AM, October 15, 2006
--
இலவசக்கொத்தனார் said...
குமரன், திருநீறு என்பதற்கு விளக்கம் தாருங்களேன். எனக்குத் தெரிந்த வரை நீறு என்றால் சாம்பல் எனப் பொருள். நீறு பூத்த நெருப்பு என்ற பதத்திலிருந்து நான் புரிந்து கொண்டது. இச்சொல்லிற்குப் பெயர் காரணம் ஏதாவது இருக்கிறதா?
நீர் சேர்த்து குழைத்து நெற்றியில் இடப்படுவதற்கும் இப்பெயருக்கும் எதாவது தொடர்புண்டா?
9:33 AM, October 15, 2006
--
குமரன் (Kumaran) said...
கொத்ஸின் கேள்விக்கு எல்லோரும் பதில் சொல்லலாம். நன்றிகள்.
10:34 AM, October 15, 2006
--
கோவி.கண்ணன் [GK] said...
குமரன்...!
வைனவரான தாங்கள் திருநீற்றுப் பதிகம் பற்றி எழுதுவதில் அதன் சிறப்பு விளங்குகிறது !
6:20 PM, October 15, 2006
--
குமரன் (Kumaran) said...
கோவி.கண்ணன் ஐயா. அடியேன் வைணவனும், சைவனும், கௌமாரனும். மூன்றுமே. :-) குலதெய்வம் திருபரங்குன்றம்/பழனி முருகன். இஷ்டதெய்வம் கண்ணன். வீட்டில் எல்லாருக்கும் பெயர் சைவப்பெயர்களே. அடுத்தத் தலைமுறைக்கும் அப்படியே. :-)
6:47 PM, October 15, 2006
--
குமரன் (Kumaran) said...
கோவி.கண்ணன் ஐயா. மேலே சொன்ன பதிலில் இதனையும் சேர்த்துக் கொள்ளுங்கள். தினமும் பகலவனை வணங்குவதால் நான் சௌரனும் கூட. கணபதியை வணங்காமல் காரியம் தொடங்குவதில்லை. அதனால் காணபத்தியனும் கூட. அபிராமி அந்தாதியை விரும்பிப் படிப்பதால் சாக்தனும் கூட. அபிமானத்தால் பௌத்தனும் சமணனும் கிறிஸ்தவனும் கூட. இன்னும் இஸ்லாமியன் மட்டும் ஆகவில்லை. இன்னும் நிறைய படித்து அறிந்து கொள்ள வேண்டும் அந்த சமயத்தைப் பற்றி.
9:40 AM, October 16, 2006
--
குமரன் (Kumaran) said...
உண்மை வல்லியம்மா. முடி மன்னரும் இறுதியில் பிடிசாம்பல் தான் என்பதையும் நினைவுறுத்தும் ஒவ்வொரு நாளும் திருநீறு அணியும் போது.
9:41 AM, October 16, 2006
--
குமரன் (Kumaran) said...
கொத்ஸ். மற்றவர்கள் வந்து சொல்லுவார்கள் என்று காத்திருந்தேன். யாரும் சொல்லவில்லை. அதனால் அடியேனே சொல்கிறேன்.
நீங்கள் சொன்னது போல் நீறு என்றால் சாம்பல் தான். பசுஞ்சாணத்தை முறைப்படி காயவைத்து அதனை எரித்து எடுப்பது தான் திருநீறு. வடமொழியில் பஸ்மம் என்றும் விபூதி என்றும் சொல்லுவார்கள். பஸ்மம் என்றால் சாம்பல். விபூதி என்றால் சாம்பலையும் குறிக்கும்; பெருமையையும் குறிக்கும். கீதையில் தன் பெருமைகளைக் கண்ணன் விவரிக்கும் பகுதியை விபூதி யோகம் என்பார்கள்.
திருநீறு எப்படி சைவச் சின்னம் ஆனது என்று சைவச்செம்மல் வந்து விளக்கம் சொல்லட்டும். அவருக்குத் தனிமடல் அனுப்புகிறேன்.
9:45 AM, October 16, 2006
--
G.Ragavan said...
// திருநீறு எப்படி சைவச் சின்னம் ஆனது என்று சைவச்செம்மல் வந்து விளக்கம் சொல்லட்டும். அவருக்குத் தனிமடல் அனுப்புகிறேன். //
என்னையா சைவச் செம்மல் என்கிறீர்கள். முருகா! அந்தப் பெருமை எனக்குத் தகாது. நான் கற்றது விரல் நுனிப்புள்ளியினும் நுணுங்கியது.
நீறு என்றால் சாம்பல். அவ்வளவுதான். அதற்கும் நீரிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
திரு என்ற சொல் சிறப்புச் சொல் என்று தெரிந்திருக்கும். சிறப்புடைய சாம்பல் என்பதால் திருநீறு. எப்படி அது சைவச் சின்னமானதா!
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடி காடுடைய சுடலைப் பொடி பூசி என்னுள்ளம் கவர் கள்வன்.
அந்தக் கள்வன் மெய் என்பது மெய்யன்று என்று விளக்கப் பூசிய பொடியைப் பெருமைப் படுத்த வேண்டிதானே திருவைச் சேர்த்தது.
இதற்கு மேலும் எதுவும் விளக்கம் வேண்டுமோ!
10:40 AM, October 16, 2006
--
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
சைவச்செம்மல் அவர்களிடம் மேலும் ஒரு விளக்கம் வேண்டுகிறேன்!
//நீர் சேர்த்து குழைத்து நெற்றியில் இடப்படுவதற்கும் இப்பெயருக்கும் எதாவது தொடர்புண்டா?//
நீரில் குழைத்தும் அணிகிறார்கள்; அப்படியே சிவசிவ என்றும் அணிகிறார்கள். எந்த எந்த தருணங்களில் எவ்வாறு அணிவது முறைமை என்பதையும் சற்றே விளக்க வேண்டும்.
எனக்கு சிறு வயதில் நீர் குழைத்து அணியப் பிடிக்கும்; நல்ல வாசம் மற்றும் நிறைய நேரம் நெற்றியில் துலங்கும்.
12:02 PM, October 16, 2006
--
சிவமுருகன் said...
முக்தி தரும் நீறை அணிவோம்.
பக்திக்கு அம்சம் அகம்.
அந்த அகத்திற்க்கு கண்ணாடி முகம் அதில் நீறு இருந்தால் அதற்க்கு அழகே தனி.
அகவே தான்
"நீறில்லா நெற்றி பாழ்
ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்"
என்று ஆன்றோர் சொன்னர்.
3:50 AM, October 17, 2006
--
சிவமுருகன் said...
//திரு என்ற சொல் சிறப்புச் சொல் என்று தெரிந்திருக்கும். சிறப்புடைய சாம்பல் ... எதுவும் விளக்கம் வேண்டுமோ!
//
கடந்த சிவராத்திரி அன்று சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்கள் ஒரு கதை சொன்னார், அதில் ஈசன் திருநீறை அனிவதில்லை அது அவர் உடலில் இருந்து ஊற்றாக ஊறுவதாக சொன்னார் அப்படியும் இருக்கலாம்.
3:55 AM, October 17, 2006
--
குமரன் (Kumaran) said...
சைவச்செம்மல் இராகவன். விளக்கமான விளக்கத்திற்கு மிக்க நன்றி. :-)
இன்னும் விளக்கமாக திருநீற்றின் வரலாற்றைச் சொல்லுவீர்கள் என்று நினைத்தேன்.
7:41 PM, October 19, 2006
--
குமரன் (Kumaran) said...
இரவிசங்கர். நானும் சில நேரம் நீரில் திருநீறைக் குழைத்து இட்டிருக்கிறேன். ஆனால் பெரும்பாலும் நீரில் குழைக்காமல் தான் இடுவது. சந்தி செய்பவரும் தீட்சை பெற்றவரும் நீரில் குழைத்து இடக் கண்டிருக்கிறேன்.
4:45 AM, October 20, 2006
--
குமரன் (Kumaran) said...
விளக்கத்திற்கு நன்றி சிவமுருகன். அகத்தின் அழகு முகத்தில் தெரிய அழகாகச் சொன்னீர்கள்.
10:56 AM, October 20, 2006
//இஷ்டதெய்வம் கண்ணன்.//
ReplyDeleteஆஹா. இங்கேயே சொல்லியிருக்கீங்களே, தெளிவா :) நான் பழசெல்லாம் படிக்காததால தெரியல :)
தீட்சை பெற்றவர்கள் மட்டுமே நீரில் குழைத்து அணிய வேண்டும் என்று நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அது எப்படி பழநி விபூதிக்கு மட்டும் அவ்வளவு மணம்?
(சின்ன வயதில், விபூதியை நிறைய சாப்பிட்டிருக்கேன் :)
எப்பவும் தயக்கமில்லாம 'மனத்துக்கினியவன் மாதவன்'ன்னு சொல்றது தான் அக்கா. ஆனா அண்மையில் நடந்த சில விளையாட்டு விவாதங்கள் வேதனைகளா சில நண்பர்கள் நடுவுல மண்டிக் கிடக்கிறதால இப்ப எல்லாம் ஒரு தயக்கம். அவ்வளவு தான். :-)
ReplyDeleteஅட. நானும் சின்ன வயசுல நிறைய விபூதி சாப்பிட்டிருக்கேன் அக்கா. கோவிலுக்குப் போனா அங்க இருக்கிற விபூதியில பாதி என் வாயில தான் இருக்கும். :-)