Sunday, June 22, 2008

வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு


வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதம் தருவது நீறு புன்மை தீர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல் வயல் சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே

வேதத்தில் உள்ளது நீறு - வேதங்களில் எல்லாம் புகழப்பட்டுள்ளது திருநீறு

வெந்துயர் தீர்ப்பது நீறு - உலகத்தில் எல்லாவிதமான துயர்களையும் தீர்ப்பது திருநீறு

போதம் தருவது நீறு - ஞானத்தைத் தருவது திருநீறு

புன்மை தீர்ப்பது நீறு - நம் குறைகளைத் தீர்ப்பது திருநீறு

ஓதத் தகுவது நீறு - போற்றிப் புகழத் தகுந்தது திருநீறு

உண்மையில் உள்ளது நீறு - என்றும் உண்மையாக நிலைத்திருப்பது திருநீறு

சீதப் புனல் வயல் சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே - குளிர்ந்த நீர் வளம் மிக்க வயல்களால் சூழப்பட்டுள்ள திருவாலவாயான கூடல் நகரானின் திருநீறே.

5 comments:

  1. இந்த இடுகை 'திருநீற்றுப் பதிகம்' பதிவில் 8 அக்டோபர் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

    13 comments:

    கோவி.கண்ணன் [GK] said...
    //வெந்துயர் தீர்ப்பது நீறு - உலகத்தில் எல்லாவிதமான துயர்களையும் தீர்ப்பது திருநீறு//

    குமரன் அவர்களே...!

    விவேகா நந்தோர் போன்றோர் எவ்வளவோ உறைத்தும்,
    இந்துமதமும் திருநீறும் இமயமலையை தாண்டவில்லையே ஏன் ?

    1:25 AM, October 09, 2006
    --

    குமரன் (Kumaran) said...
    கோவி.கண்ணன் ஐயா. இந்து மதமும் திருநீறும் இமயமலையைத் தாண்டவில்லை என்பது பார்ப்பவர் பார்வையைப் பொறுத்தது. அமெரிக்கா வந்து பாருங்கள். ஹரே கிருஷ்ணா இயக்கம் ஏற்படுத்திய தாக்கத்தைப் பார்க்கலாம். அப்படி நடக்கச் சாத்தியமானது ஹரே கிருஷ்ணா இயக்கத்தினரும் கிறிஸ்தவ இஸ்லாமிய மதப்பரப்பு வழிமுறையைப் பின்பற்றியதால் இருக்கலாம். இந்து மதத்தின் பெரும்பான்மையோர் அப்படி மதப்பரப்பினைச் செய்வதில்லை; அதுவும் இந்து மதமும் திருநீறும் இந்தியத் திருநாட்டிற்கு வெளியே இல்லாததற்கு காரணமாய் இருக்கலாம். அது சரி. தென்னாசிய நாடுகளில் இந்து மதத்தின் தாக்கம் வெகுவாக இருக்கிறது என்று படித்திருக்கிறேனே. அது உண்மை இல்லையா? அங்கே இருக்கும் இந்துக் கோவில்கள் எல்லாம் மற்ற மதத்தினரும் திருநீற்றின் பெருமை அறியாதவரும் கட்டியதா? :-)

    7:48 AM, October 09, 2006
    --

    Parasaran said...
    கண்ணன் அவர்களே, இன்று மேல் நாட்டிலிருந்து பெரும்பாலோர் நம் நாடு தேடிவந்து நம் கோட்பாடுகளைப் பின்பற்ற முயற்சிப்பதைக் கண்கூடாக் காண்கிறோம். இங்கே திரு. ரவிசங்கர் குருஜியின் ஆசிரமத்தில் யோகா பயில்வோர் பெரும்பாலும் வெளிநாட்டினரே.

    இன்னும் கொஞ்சம் ஆழமாக பார்த்தால், நமது கோட்பாடுகளை நாம் எவரிடமும் திணித்து பரப்ப முயற்சித்தது இல்லை. 'எவர் எவ்வழியில் வழிபாட்டாலும் அது என்னையே சேருகிறது' என்பது கீதாச்சாரியன் வாக்கு. இன்றும் நம் தத்துவங்களை பின்பற்ற வரும் வெளிநாட்டினர் அவர்களாகவே வருகிறார்களே அன்றி, நம்முடைய 'marketing' ஆல் இல்லை

    9:41 PM, October 09, 2006
    --

    கோவி.கண்ணன் [GK] said...
    குமரன் !

    எந்த ஒரு தனிமனிதனும் ஒரு மதக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் அந்த மத அடையாளம் அவனுக்கு தானாகவே வந்துவிடும்.

    ஒருவன் புத்தர்கருத்துக்களை படித்துவிட்டு புத்தமத்தினன் ஆகிறான்.

    திருநீறு பூசினாலும், நாமத்தைப் போட்டுக் கொண்டாலும் இருவெளிநாட்டினரை நாம் இந்து என்று சொல்லமுடியுமா ? அல்லது அவர்கள் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்கிறார்களா ?

    இந்துமத திருநீரை பூசிக் கொள்ள இந்து என்று அழைக்கப்பட வேண்டியதில்லை என்று சொல்லிவிடாதீர்கள்.

    வெளிநாட்டினர் இந்துமதத்தை ஏற்றுக் கொண்டால் அவர்கள் இந்துமதத்தினர் ஆகிவிடுவார்களா ?

    இந்துமதத்தில் இணைவதாக இருந்தால் இங்கு இருக்கும் 40 ஆயிரம் சாதிகளுக்குள் ஒரு சாதியாக இருக்க வேண்டுமே !

    தூனில் துரும்பிலும் இருக்கிறான் இறைவன் என்று சொல்லும் இந்து மதத்தின் தொழுநோயாளியை தழுவ ஒரு கிறித்துவர் வரவேண்டியிருக்கிறது.

    10:17 AM, October 10, 2006
    --

    குமரன் (Kumaran) said...
    கோவி கண்ணன் ஐயா. ஒரு சிறு நிகழ்ச்சி. உங்களைப் போன்றே ஒரு ஆலயப் பணியாளரும் நினைத்துக் கொண்டிருந்தார். ஒரு முறை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்றிருந்த போது அங்கே ஒரு வெள்ளையர் என்னுடன் நின்று அன்னையை வணங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆலயப் பணியாளர் வந்து அந்த வெள்ளையரிடம் 'ஒன்லி ஹிந்தூஸ் அல்லோட்' என்று சொல்லிக் கொண்டிருந்தார். அதற்கு அந்த வெள்ளையர் 'ஐ அம் ஹிந்து' என்று சொல்லிக் கொண்டிருந்தார். மீண்டும் மீண்டும் அவர் சொன்னதையே அவர் சொல்ல இவர் சொன்னதையே இவர் சொல்லிக் கொண்டிருந்தார். பார்த்த நான் தமிழில் அந்த ஆலயப் பணியாளரிடம் சொன்னேன் 'ஐயா. இவர் இந்து தான் என்று சொல்கிறார்' என்று. அதற்கு அவர் 'அதெப்படிங்க. வெள்ளக்காரரா இருக்காரு. எப்படி இந்துவா இருக்கமுடியும்?' என்றார். அதற்கு நான் 'அவர் நம் மதத்தை ஏற்றுக் கொண்டு இந்துவாக ஆன பின்பே இங்கே வந்திருக்கிறார். அப்படி இருக்க அவர் இந்து இல்லை என்று எப்படி சொல்ல முடியும்?' என்றேன். அவர் ஒன்றும் சொல்லாமல் ஆலய அதிகாரியைக் கூட்டிக் கொண்டு வந்தார். நான் அவரிடம் அதே கேள்விகளைக் கேட்டவுடன் அவரும் அந்த வெள்ளைக்காரரிடம் ஆங்கிலத்தில் கேட்டு அவர் இந்து தான் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு ஆலயப் பணியாளரிடம் 'வெள்ளைக்காரர்களிலும் இந்துக்கள் உண்டு' என்று தெளிவு படுத்தினார்.

    12:37 PM, October 10, 2006
    --

    குமரன் (Kumaran) said...
    //திருநீறு பூசினாலும், நாமத்தைப் போட்டுக் கொண்டாலும் இருவெளிநாட்டினரை நாம் இந்து என்று சொல்லமுடியுமா ? அல்லது அவர்கள் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்கிறார்களா ?
    //

    கட்டாயம் முடியும். அவர்களும் அப்படியே சொல்லிக் கொள்கிறார்கள்.

    //வெளிநாட்டினர் இந்துமதத்தை ஏற்றுக் கொண்டால் அவர்கள் இந்துமதத்தினர் ஆகிவிடுவார்களா ?
    //

    ஆகிவிடுவார்கள். அதற்கு மேலே சொன்ன நிகழ்ச்சியே எடுத்துக்காட்டு.

    //இந்துமதத்தில் இணைவதாக இருந்தால் இங்கு இருக்கும் 40 ஆயிரம் சாதிகளுக்குள் ஒரு சாதியாக இருக்க வேண்டுமே !
    //

    தேவையில்லை. அப்படி யாராவது சொன்னார்கள் என்றாலோ அதனை கேப்பையில் நெய் வடிகிறது என்று கேட்டுக் கொண்டு அதனை உண்மை என்று எடுத்துக் கொண்டாலோ அவர்கள் அந்தப் பழமொழி சொல்லும் கேணையர்கள் தான் என்பதில் ஐயமில்லை.

    //தூனில் துரும்பிலும் இருக்கிறான் இறைவன் என்று சொல்லும் இந்து மதத்தின் தொழுநோயாளியை தழுவ ஒரு கிறித்துவர் வரவேண்டியிருக்கிறது.//

    கிறிஸ்தவர் செய்யும் சேவைகளைக் குறைத்துப் பேச விரும்பவில்லை. ஆனால் அதே நேரத்தில் இந்து மதத்தினர் செய்யும் சேவைகள் சிலரின் கண்களுக்கு ஏன் தெரிவதில்லை என்பது வியக்கத் தக்கது. சேவை செய்யும் எண்ணத்துடன் இருப்பவர்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள். ஆனால் மற்ற மதத்தினரைப் போல் இந்துக்கள் தங்கள் மதத்தை முன்னிறுத்துவதில்லையோ என்னவோ? அதனால் தான் உங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும் அவர்கள் எட்டவில்லையோ என்னவோ?

    12:43 PM, October 10, 2006
    --

    குமரன் (Kumaran) said...
    வருகைக்கு நன்றி பராசரன்.

    12:46 PM, October 10, 2006
    --

    கோவி.கண்ணன் [GK] said...
    //மற்ற மதத்தினரைப் போல் இந்துக்கள் தங்கள் மதத்தை முன்னிறுத்துவதில்லையோ என்னவோ? அதனால் தான் உங்கள் கண்களுக்கும் காதுகளுக்கும் அவர்கள் எட்டவில்லையோ என்னவோ?
    //

    அப்பாடா !
    குமரன் அவர்களிடம் திட்டு வாங்கியாச்சி !

    :)))

    குமரன் அவர்களே...!

    எனது கேள்விகளுக்கும் / உங்கள் மறுமொழிக்கும் நம் அருமை நண்பர்
    ஜிரா என்ன சொல்லுவார் என்று கேட்க ஆவலாக உள்ளது.

    இந்த பின்னூட்டம் அவருரைய கண்களுக்கும் / காதுகளுக்கும் எட்டுகிறதா பார்ப்போம் !

    :))

    3:33 AM, October 11, 2006
    --

    G.Ragavan said...
    // குமரன் அவர்களே...!

    எனது கேள்விகளுக்கும் / உங்கள் மறுமொழிக்கும் நம் அருமை நண்பர்
    ஜிரா என்ன சொல்லுவார் என்று கேட்க ஆவலாக உள்ளது. //

    நன்றி கோவி. :-) நான் நண்பன் என்பதை வெளிப்படையாகவே உறுதி செய்தமைக்கு. மகிழ்கிறேன். :-) நம்மளையும் மதிச்சி நண்பரா ஏத்துக்கிட்டீங்கன்னுதான்.

    // இந்த பின்னூட்டம் அவருரைய கண்களுக்கும் / காதுகளுக்கும் எட்டுகிறதா பார்ப்போம் !

    :)) //

    ஜிராவின் நாசிகள் தூசிகள் அடைந்து போயிருந்தாலும் கண்களில் மண்துகள் விழுந்திருந்தாலும் மதுரையின் பொதிகைத் தென்றல் மகரந்தங்களை அள்ளிக் கொண்டு வந்து நாசிக்கும் தந்து கண்களுக்கும் காட்டுகையில் எப்படி எட்டாமல் இருக்கும்! :-)

    கோவி, இந்து மதம் என்பது பல(ழ)ரசம் என்று அறிவீர்கள். பல வழக்கங்கள் ஒன்றாகச் சேர்ந்தது. என்னை இந்து என்று அழைத்துக் கொள்கிறேன். சரி. ஆனால் சாதி என்னைக் கட்டுப்படுத்தியாகக் கொள்ளவில்லை. என்னுடைய சாதிச் சான்றிதழில் ஒரு சாதி இருந்தாலும் அதற்கு நான் பொறுப்பன்று. அதே நேரத்தில் சாதீயத்தால் என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது. அப்படி நினைப்பவர்களுக்கு என்னிடம் தோல்விதான் கிட்டும் என்றே நம்புகிறேன். சாதீயம் மட்டுமல்ல மொழியியம் மற்றும் மதம் கூட அப்படித்தான்.

    சாதியால் நான் தாழ்ந்தவன் என்று எவனாவது சொன்னால் அவனைத் தாழ்வாகத்தான் பார்ப்பேன். அது போல என்னுடைய வழிபாட்டு முறைகளால் என்னைத் தாழ்ந்தவன் என்று சொன்னால் அவனை சாதீயகக்காரனைப் போலத் தாழ்வாகத்தான் பார்ப்பேன். அவனுக்கும் என்னிடம் வெற்றி கிடைக்காது. இது மொழி, இனம் என்று எதற்கும் பொருந்தும்.

    ஏன் இமயத்தைத் தாண்டவில்லை என்பதே மையக் கேள்வி. அதற்குக் காரணம் உண்டு. ஒன்றே ஒன்று. நான் அறிந்தது மட்டும் சொல்கிறேன். அருணகிரிப் பெருமானை அறிவீர். அநுபூதி. அலங்காரம். விருத்தம். திருப்புகழ். எத்தனையெத்தனை. அத்தனையும் எழுதி விட்டு "கலையே பதறிக் கதறித் தலையூடு அலையே படுமாறு அதுவாய் உளதோ"......ஏன்? தண்ணிய தம்ளர்ல குடிச்சா என்ன? கிண்ணத்துல குடிச்சா என்ன? சொம்புல குடிச்சா என்ன? ஓடையில அள்ளிக் குடிச்சா என்ன? அருவியில வாயத் தொறந்து குடிச்சா என்ன? இதுதான் கருத்து. இன்றைக்கு இந்துக்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்களில் சிலர் மதம் பிடித்திருந்தாலும் நம் நாட்டில் பல அறிஞர் பெருமக்கள் எடுத்துச் சொல்லிய கருத்துகள் நம்மோடு ஆங்காங்கு ஒட்டிக் கொண்டிருக்கின்றன. அது நம்மோடு சேர்ந்தது.

    சாதீயம் நீங்க வேண்டியதுதான். கொடியதுதான். ஆனால் வெளியில் இருந்து அதை அழிக்க விரும்புகிறவர்கள் ஆடு நனைய அழுத ஓநாய்கள். இது புகுத்தியது அது புகுத்தியது என்கிறவர்கள்...சரி...ராமரை தூக்கி விடலாம். கிருஷ்ணனைத் தூக்கி விடலாம். வடமொழி செழிக்கும் எந்தக் கோயிலும் வேண்டாம். வாருங்கள் தமிழ்க்கடவுளை மட்டும் பைந்தமிழில் வணங்குவோம் என்றார் வர மாட்டார்கள். காரணம் அதுவல்ல அவர்கள் விருப்பம். அவர்கள் செய்யாயதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். இன்னும் பலரும் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை நீங்கள் அறிவீர்கள் என்றே நம்புகிறேன். மனிதனுடைய நம்பிக்கையே இறைவன். அந்த நம்பிக்கையை வைத்துக் கொண்டு நல்லதையும் அமைதியையும் கொண்டு வரமுடியாவிட்டால் என்ன பயன்? மொத்தத்தில் மத நம்பிக்கையை விட இறை நம்பிக்கை பெரியது. ஆகையால்தான் நாம் நாடு நாடாகப் போய் யாரையும் பயமுறுத்துவதில்லை. இதுதான் என்னுடைய கருத்து.

    9:28 AM, October 11, 2006
    --

    கோவி.கண்ணன் [GK] said...
    //G.Ragavan said... நாம் நாடு நாடாகப் போய் யாரையும் பயமுறுத்துவதில்லை. இதுதான் என்னுடைய கருத்து.//

    ஜிரா நன்றாக விளக்கம் சொல்லியிருக்கிறீர்கள். மதம் பரப்புதல் என்பதைப் பற்றி நான் கேட்கவில்லை. இந்து மதம் ஏன் வெளிநாட்டினரை ஈர்க்கவில்லை என்று கேட்டேன் ?

    இதற்கு முக்கிய காரணமாக நான் கருதுவது உருவ வழிபாடு. இந்து கடவுள்கள் இந்தியாவில் அறியப் பட்டதால் எல்லாம் இந்திய முகமாக இருக்கிறது. இந்திய முகமுடைய கடவுளை நாம் உலகத்துக்கு பொதுவான கடவுள் என்றால் மற்றவர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள். மேலும் மற்ற மதங்களைப் போல வழிபாடு என்ற அளவில் இந்துமதம் மாறியதும் கூட இருக்கலாம். தத்துவங்கள் முன்னிருத்தப் படாமல் உருவச் சிலைகள் முன்னிருத்தப்பட்டதே 'புதுசா என்ன இருக்கு ?' என்பது போல் வெளிநாட்டினர் பார்த்திருப்பர் என்று கருதுகிறேன். இன்னும் எழுதலாம் ... இழுத்துக் கொண்டே போகும்

    :))

    8:24 AM, October 12, 2006
    --

    குமரன் (Kumaran) said...
    கோவி.கண்ணன் ஐயா. நீங்கள் சொன்னது சரிதான். இதில் விவாதிக்கத் தொடங்கினால் இழுத்துக் கொண்டே போகும். உருவ வழிபாடு என்பதில் இஸ்லாம் தவிர எல்லா மதங்களிலும் உருவ வழிபாடு உண்டு என்பதனை நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன். இறைவனைப் பற்றிப் பேசாத புத்தரைக் கடவுளாக்கி அவரது திருவுருவத்தை எல்லா இடங்களிலும் வைத்தப் பின் தான் பௌத்தம் பரவியது. கிறிஸ்தவத்திலும் உருவ வழிபாடு கூடாது என்றாலும் ஏசு நாதர் மரியன்னை என்று உருவங்களை வழிபடுவது நடக்கிறது என்பதனை நீங்கள் அறிவீர்கள் என்று எண்ணுகிறேன்; ஏசு நாதர் மரியன்னை என்றிவர்கள் உருவங்களை வழிபடாத கிறிஸ்தவ மதப் பிரிவுகளும் சிலுவை என்ற ஒரு உருவக் குறியீட்டை வழிபடுகின்றன என்றும் அறிகிறேன். நீங்கள் சொன்னது போல் 'இந்திய முகங்களைக் கொண்ட' திருவுருவங்கள் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் உருவ வழிபாடு காரணமாகக் கொள்ள முடியவில்லை. ஏனெனில் உருவ வழிபாடு என்பது மனிதனின் இயற்கை. எல்லா இடங்களிலும் அது உண்டு. குறியீடாவது வைத்துக் கொண்டு வழிபடுவதே இயற்கையாய் நடக்கக் கூடியது. உங்கள் கருத்து எதிராகவும் ஆதாரங்கள் சொல்ல முடியும். ஏற்கனவே சொன்னது போல் ஹரே கிருஷ்ணா இயக்கம் உருவ வழிபாட்டின் அடிப்படையிலேயே தான் வளர்ந்தது. அந்த இயக்கத்தில் சேர்ந்த வெளி நாட்டவர் வரைந்த அழகிய கண்ணன் இராதை ஓவியங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    வழிபாட்டை முன்னிருத்தியது என்று சடங்குகளை முன்னிருத்தியதைப் பற்றிச் சொல்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். எந்த மதமானாலும் காலப்போக்கில் சடங்குகள் முன்னிருத்தப் படுவதும் பின்னர் ஒரு சிறு புரட்சி ஏற்பட்டு தத்துவங்கள் மீண்டும் முன்னிருத்தப்படுவதும் நடந்து கொண்டு தான் இருக்கும். இந்து மதத்திலும் அது நடந்தது; நடக்கிறது; நடக்கும். அந்த மாற்றம் நிகழும் காலத்தில் இருப்பதாலேயே நமக்கு இரண்டுமே தென்படுகிறது. சடங்குகள் முன்னிருத்தப்படுவதையும் ஒரு இடத்தில் பார்க்கிறோம். தத்துவங்கள் முன்னிருத்தப்படுவதை இன்னொரு இடத்தில் பார்க்கிறோம். தற்போது வெளிநாடுகளில் தெரியும் இந்து மதம் தத்துவங்களால் ஆனதே ஒழிய சடங்குகளால் அறியப்படுவதில்லை. இந்து மத தத்துவங்களே வெளிநாட்டவரைக் கவர்கின்றன.

    சிலருக்கு இந்துமதத் தத்துவங்கள் என்று சொல்வதை விட இந்தியத் தத்துவங்கள் என்று சொல்வது பிடிக்கும். அதற்கு என்னிடம் எந்த வித மறுப்பும் இல்லை. எப்படியும் சொல்லிக் கொள்ளலாம்.

    4:06 AM, October 14, 2006
    --

    Johan-Paris said...
    அன்புக் குமரா!
    தேவாரம் படிக்கிறேன்; அதாவது மீண்டும் படிக்கிறேன். நன்றே எழுதுகிறீர்கள்.
    மேலும் கோவைக் கண்ணனுக்கு இந்த எங்கள் மதம் இமயமலையைத் தாண்டவில்லை என்பது; எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்; இந்தோனேசியாவின் யாவாத் தீவு மட்டுமிருந்தது.
    இப்போதும் இடைப்பட்ட அத்தனை நாடுகளிலும் உள்ளது; மகாபாரதம்;ராமாயணம் போற்றப் படுகிறது.
    யாவாத் தீவின் ஓர் ஊர்ப் பெயரே மதுரா; இன்றும் பாலி வானொலி ""ஓம் சாந்தி" எனவே ஆரம்பிக்கிறது.
    அடுத்தபக்கம் ஆப்கானிஸ்தான் மட்டும் இருந்துள்ளது. கந்தகார் என்பது "காந்தார" தேசமாம். அங்கு புத்தர் சிலையை இடித்தார்களே!!!; புத்தர் யார்??? வைணவர்....பிறப்பால்....கிருஸ்ணாவதாரமெணவும் கூறுவார் உண்டு.
    மேலும் இப்போ ஐரோப்பிய; அமெரிக்க ;அவுஸ்ரேலிய நகரங்களில் நம்மதம்; நம் வாழ்வு முறைக்கு வரவேற்பிருக்கிறது.
    இங்கொரு பத்திரிகை கணக்கெடுப்புச் செய்தபோது; ஐரோப்பா முழுதும் சுமார் ஒரு மில்லியன் ஐரோப்பியர்கள்; இந்திய சமயங்களைக் கடைப்பிடிப்பதாக அதிர்ச்சித் (இந்த நாட்டுத் தலைவர்களுக்கும்;பாப்பரசருக்கும்) தகவலைத் தந்தது. இதன் தாக்கமாக் சில வருடங்களுக்கு முன் ஜேர்மனியில் ஓர் தாய் தன் குழந்தைக்குச் "சிவா" எனப் பெயரிட கத்தோலிக்கக் குழந்தைக்கு எப்படி ?? சிவா எனப் பெயரிடலாம். என பதிய மறுத்து; அத் தாய் நீதி மன்றம் சென்ற செய்தி அறிந்திருக்கலாம்.
    அந்த அளவுக்கு இந்த மாற்றங்கள் ஏற்படக் கூடாதென்பதில்; கத்தோலிக்கத் திருச்சபை மிகக் கவனமாக இருக்கிறது. எனினும் சுதந்திரம் விரும்பும் இவ்வினங்கள். இவற்றை உதறுவது நடக்கிறது. அதே வேளையில் நம் நாடுகளிலும் மதமாற்றம் மிக வேகமாக நடக்கிறது. இது புதுச் சமயம் பிடித்தல்ல; அது கொடுக்கும் பணம் பிடித்து.....அதே வேளை சாதிக் கொடுமைகளும் காரணியாக அமைவது வேதனையே!!!
    இவை மாறுவது இளைஞர்களாகிய உங்கள் கையில் தான் உண்டு; இனியும் நான் தலையால் பிறந்தேன் ; நீ காலால் பிறந்தாய் என விசத்தைக் கக்காமல் இருந்தால் சரி.காலத்துக்குதவாக் கருத்தைத் தள்ளினால் போதும்!!!

    நிச்சயம் நம் மதம் ,உலக மக்களைக் கவரும்.தொலைவில் இல்லை.
    யோகன் பாரிஸ்

    9:58 AM, November 05, 2006
    --

    குமரன் (Kumaran) said...
    மிக்க நன்றி யோகன் ஐயா. தங்கள் கருத்துகளுடன் ஒத்துப் போகிறேன்.

    7:43 PM, November 06, 2006

    ReplyDelete
  2. குமரா, வைத்தீஸ்வரரின் அழகைக் கண்டு அகமகிழ்ந்து போனேன். அதே போல் உங்களிடம் தையல் நாயகியும் இருக்கிறாளோ என்னவோ. 'தையல் நாயகி போற்றி' பதிவுக்காகத் தேடினேன், அவள் கிடைக்கவில்லை :( உங்களிடம் கேட்டிருக்கலாம் :(

    இந்து சமயம் பற்றிய கருத்தாடல்களும் மிக நன்று. நன்றி, குமரா!

    ReplyDelete
  3. குளிர்ந்த நீர் வளம் மிக்க வயல்களால் சூழப்பட்டுள்ள திருவாலவாயான கூடல் நகரானின் திருநீற்றின் பெருமையைக் கூடல் நகர்க் குமரன் பாடாமல் யார் பாடுவது?

    திருநீறு என்பது இறைவனின் பிரசாதம், செல்வம் அதைக் கீழே சிந்தாதே, நெற்றி நிறையப்
    பூசிக்கொள் என்று அனுதினமும் சொல்லாகேட்டு வளர்ந்தவன் நான். குறைந்தது நாளொன்றுக்கு
    ஆறுமுறையாவது பூசிக்கொள்வேன்.

    நீறில்லா நெற்றி பாழ் என்று சும்மாவா சொன்னர்கள்?

    இறையுணர்வு உள்ளவர்களுக்கு மட்டுமே அது தெரியும்!

    ReplyDelete
  4. நன்றி கவிநயா அக்கா.

    ReplyDelete
  5. உண்மை தான் ஐயா. அந்த உணர்வு தான் இன்றைக்கும் திருநீறு பூசிய நெற்றியுடன் அலுவலகத்திற்குச் செல்ல வைக்கிறது என்னை.

    ReplyDelete