Friday, June 13, 2008
உருவளர் பவளமேனியும் ஒளி திருநீறும்.....
உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து
உமையொடும் வெள்ளை விடை மேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.
உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து - அழகில் சிறந்த சிவந்த மேனியின் மேல் ஒளிவீசும் திருநீற்றினை அணிந்து கொண்டு
உமையொடும் வெள்ளை விடை மேல் - உமையன்னையுடன் வெள்ளை எருதின் மேல் ஏறி
முருகலர் கொன்றை - தேன் நிறைந்து மலர்ந்த அழகிய கொன்றைப் பூவினையும்
திங்கள் - நிலவையும்
முடிமேல் அணிந்து - திருமுடியின் மேல் சூடி
என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளத்தில் புகுந்து வீற்றிருப்பதால்
திருமகள் - செல்வத்திற்கு அதிபதியான திருமகள்
கலையதூர்தி - கலையாகிய வித்தைகளை வாகனமாகக் கொண்ட கலைமகள்
செயமாது - வெற்றிக்கு அதிபதியான மலைமகள்
பூமி - நிலமகள்
திசை தெய்வமான பலவும் - எல்லா திசைகளிலும் இருந்து மக்களைக் காக்கும் தெய்வங்கள் எல்லாம்
அருநெதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே - அடியவர்களுக்கு மிக நல்லவை. மிக மிக நல்லவை. நன்மையை அன்றி மற்றவற்றைத் தாரா.
***
உருவளர் பவள மேனி ஒளி நீறனிந்து:
கரிய மேகங்களைப் பார்க்கும் தோறும் எப்படி மேகவண்ணனின் கரிய நிறம் மனதில் தோன்றி மயக்குகிறதோ அது போல் மேலே வெளிர்ந்த சாம்பல் பூசி எரிந்து அடங்கி நிற்கும் தீக்கங்கினைக் காணும் தோறும் மனதில் தோன்றுவது சிவபெருமானின் தோற்றமே. தீக்கங்கினைப் போன்ற சிவந்த, பவளம் போன்ற மேனியைக் கொண்டவன் சிவன் (சிவந்தவன், செம்மையானவன்). அந்த செந்நிற மேனி முழுவதும் மறையும் படி வெண்ணிற நீறணிந்து தோன்றும் தோற்றம் தீக்கங்கினை சாம்பல் சூழ்ந்தது போன்ற தோற்றம். காக்கைச் சிறகினிலே கண்ணனைக் கண்டது போல் இந்த சாம்பல் சூழ்ந்த கங்கினைக் காணும் தோறும் நினைவில் வருபவன் 'ஆத்தி சூடி இளம் பிறை அணிந்து மோனத்திருக்கும் முழுவெண் மேனியான்'.
ஒரு முறை வாரியார் சுவாமிகள் சொன்னது நினைவிற்கு வருகிறது. தென்னாட்டார் சிவனைச் சிவந்தவன் என்ன, வடநாட்டார் அவனை வெண்ணிறம் கொண்டவன் என்கிறார்களே என்ற கேள்விக்கு அவர் சொன்னது: நாம் அவனின் உண்மையான தோற்றத்தைக் கண்டோம். அதனால் அவன் சிவந்த நிறம் கொண்டவன். சிவன் என்றோம். வடவர்கள் அவன் உடலெங்கும் திருநீறு பூசி நிற்கும் கோலத்தைக் கண்டார்கள். அதனால் அவன் பனியைப் போன்ற நிறமுடையவன் என்றார்கள்.
பாரதியாரும் முழுவெண்மேனியான் என்கிறார் பாருங்கள்.
முருகுலர் கொன்றை:
முருகு என்றால் அழகு என்று பொருள். நிறைய பேருக்கு அது தெரியும். முருகன் என்றால் அழகன்.
ஆனால் முருகு என்றால் தேன் என்றும் ஒரு பொருள் இருக்கிறது. அதனால் தான் இதற்கு தேன் நிரம்பி அலர்ந்த அழகிய கொன்றை என்று பொருள் சொன்னேன்.
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி:
இதில் கலையதூர்தி செயமாது என்பதற்கு முன்னோர்கள் கலையென்னும் மானை வாகனமாகக் கொண்ட துர்க்கையும், வெற்றிக்கு அரசியான செயமாதுவும் என்று பொருள் சொல்லியிருக்கிறார்கள்.
பின்னால் வந்தவர்கள் சிலர் வெற்றிக்கு அரசியான (செயமாதுவான) மான் வாகனம் கொண்ட துர்க்கை என்று இருவரும் ஒருவரே என்று பொருள் கொண்டிருக்கிறார்கள்.
கலையதூர்தி என்னும் போது மானை ஊர்தியாகக் கொண்டவள் என்ற பொருளிலேயே சம்பந்தர் பாடியிருக்கலாம். ஆனால் இங்கு திருமகளையும் சொல்லி, மலைமகளையும் சொல்லிவிட்டு, கலைமகளை விட மனம் வரவில்லை. அதனால் கலை என்பதை வித்தை என்ற பொருள் கொண்டு கலையதூர்தி என்பதனை கலைமகள் என்று பொருள் கொண்டேன்.
திசை தெய்வமான பலவும்:
முதலில் இதற்குத் தோன்றிய பொருள் 'எட்டுத் திசைகளிலும் இருந்து நம்மைக் காக்கும் எண்திசைக்காவலர்கள்' என்பதே. வடமொழியில் அவர்களை 'அஷ்டதிக் பாலகர்கள்' என்பார்கள். அவர்கள் கிழக்கு - இந்திரன், தென்கிழக்கு - அக்கினி, தெற்கு - யமன், தென்மேற்கு - நிர்ருதி, மேற்கு - வருணன், வடமேற்கு - வாயு, வடக்கு - குபேரன், வடகிழக்கு - ஈசானனாகிய சிவன்.
இந்த சொற்றொடர் இந்த எண்திசைக் கடவுளர்களை மட்டும் குறிக்காமல் மேலும் எல்லாத் திசைகளிலும் இருந்து நம்மைக் காக்கும் தெய்வங்களையும் குறிக்கும் என்று பின்னர் தோன்றியது.
இப்போது இன்னொரு பொருளும் தோன்றுகிறது. வேற்று மொழியில் இருந்து தமிழுக்கு வந்த சொற்களைத் திசைச் சொற்கள் என்பார்கள். அது போல் தொடக்கத்தில் நம் வழிபாட்டு முறையில் இல்லாமல் பின்னர் நம் வழிபாட்டு முறையில் சேர்ந்த, சேர்ந்து கொண்டிருக்கும் தெய்வங்களைத் திசைத் தெய்வங்கள் எனலாம் என்று தோன்றுகிறது.
இந்த இடுகை 'கோளறு பதிகம்' பதிவில் 30 ஏப்ரல் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
ReplyDelete12 comments:
வல்லிசிம்ஹன் said...
குமரன் நல்ல காலைப்பொழுதில் அதுவும் திஙகள் அன்றூ கோளறு பதிகம் படிப்பது இனிமையாக இருக்கிறது. எத்தனை நன்றி சொல்ல முடியும் என்னால்?
இருந்தும் நீங்கள் நிறைய எழுதி நாங்கள் அனுபவிக்க வேண்டும்.உங்கள் குடும்பத்திற்கு எங்கள் ஆசீர்வாதங்கள். வல்லி
April 30, 2006 5:56 PM
--
rnateshan. said...
ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை!!வாரியார் சாமிக்கென்று ஒரு திறமை!!குமரன் சாமிக்கு ஒரொ திறமை!!அது கம்ப்யூட்டரில் வெளீப்படுகிறது!!
May 01, 2006 4:55 AM
---
சிவமுருகன் said...
நல்ல பாடல், நிறையகருத்துக்களுடன் சொன்ன விதம் அருமை.
May 01, 2006 5:38 AM
---
குமரன் (Kumaran) said...
உங்கள் ஆசிகளுக்கு மிக்க நன்றி வல்லி. தங்களில் ஆசியும் ஆதரவும் தான் தொடர்ந்து எழுதத் தூண்டுகோல்கள்.
May 01, 2006 11:26 AM
---
குமரன் (Kumaran) said...
குமரன் சாமியா? என்ன நடேசன் ஐயா, நல்ல மனநிலையில இருக்கிங்க போல.... நான் சொல்றது நல்ல மூடுல இருக்கீங்க போலன்னு.... வேற எதையாவது நினைச்சுக்காதீங்க :-)
பாராட்டினை மட்டும் எடுத்துக் கொண்டு, உயர்வு நவிற்சியை விட்டு விடுகிறேன். மிக்க நன்றி.
May 01, 2006 11:28 AM
--
குமரன் (Kumaran) said...
மிக்க நன்றி சிவமுருகன்.
May 01, 2006 11:28 AM
--
G.Ragavan said...
நல்ல விளக்கம் குமரன்.
ஆனால் முருகலர் கொன்றைக்கு விளக்கம் அப்படிச் சொல்றது சரியில்லைன்னு நெனைக்கிறேன்.
அலர் - மலர்ந்திருக்கின்ற
கொன்றை - கொன்றை மலர்
முருகு - இளமை...ரொம்பச் சரி....
முருகலர் கொன்றை - அப்பப் பூத்துருக்குற இளமையான கொன்றை மலர்....இப்பிடிக் கொள்ளனும்னு நெனைக்கிறேன்.
May 05, 2006 1:23 AM
--
குமரன் (Kumaran) said...
இராகவன்,
முருகு என்பதற்கு நான் படித்தப் பொருட்களைச் சொன்னேன். நீங்கள் சொன்ன இளமை என்ற பொருளும் உண்டு. அதனால் முருகலர் கொன்றை என்பதனை அப்போதே பூத்த இளமையான தேன் நிரம்பிய அழகிய கொன்றை மலர் என்று பொருள் சொல்வதில் தடையேதும் இல்லை என்று எண்ணுகிறேன்.
May 06, 2006 2:35 PM
--
johan -paris said...
மிக இலகுவான விளக்கம்!
படிக்க ஆவலாகவுள்ளது.
யோகன்
பாரிஸ்
May 16, 2006 2:42 AM
--
சிவபாணன் said...
வணக்கம் குமரன்,
நல்ல பொருளுரை தந்துள்ளீர்கள். என் சில கருத்துகள் பின்வருமாறு.
முருகு என்றால் நறு மணம் எனவும் பொருளுண்டு. OTL இல் பார்க்க
திசை தெய்வம் என்பது வட்டார வழிபாட்டுத் தெய்வங்களைக் குறிக்குமா?
//கலையதூர்தி என்னும் போது மானை ஊர்தியாகக் கொண்டவள் என்ற பொருளிலேயே சம்பந்தர் பாடியிருக்கலாம்.
அப்படித்தான் என்னக்குந் தோன்றுகிறது.
//கலைமகளை விட மனம் வரவில்லை.
எனக்கும் தான்! ஆனால் சம்பந்தர் பாடியதன் பொருளை அதன் மூலப்பொருளிலே உரைப்பதல்லவோ நல்லது.
உங்கள் நற்பணி தொடர என் வாழ்த்துகள்!
May 16, 2006 5:55 AM
--
குமரன் (Kumaran) said...
பாராட்டுக்கு மிக்க நன்றி யோகன் ஐயா. நானும் முடிந்த வரை எளிமையாகத் தான் விளக்கம் சொல்ல முயல்கிறேன். எங்கேயாவது கடினமாக இருந்தால் சொல்லுங்கள். மாற்ற முயல்கிறேன்.
May 18, 2006 9:28 AM
--
குமரன் (Kumaran) said...
முருகு என்றால் நறுமணம் என்றும் ஒரு பொருளுண்டு என்று சொன்னதற்கு நன்றி சிவபாணன்.
திசை தெய்வம் என்பது வட்டார வழிபாட்டுத் தெய்வங்களை மட்டுமின்றி தொடக்கத்தில் நம்மிடையே இன்றி காலப்போக்கில் வெளியிடங்களிலிருந்து வந்து நம் வழிபாட்டுக்குரிய தெய்வங்களாக மாறியிருக்கும் தெய்வங்களையும் திசைத் தெய்வம் என்னலாம் என்று எண்ணுகிறேன்.
உண்மை தான். சம்பந்தர் எந்தப் பொருளில் பாடினாரோ அந்தப் பொருளை மூலப் பொருளில் உரைத்துவிட்டு பின்னர் விளக்கத்தில் கலைமகளைப் பற்றிச் சொல்வது தான் முறை. அடுத்தப் பாடலிலிருந்து அப்படி செய்கிறேன்.
உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.
May 18, 2006 9:32 AM