தில்லானா மோகனாம்பாள் படத்தில் வரும் நலந்தானா பாடலை யார்தான் மறக்க முடியும்! கவுண்டமணி ஒரு படத்தில் மேளம் வாசிக்கும் செந்திலிடம் நலந்தானா வாசிக்கச் சொல்லி வம்பு செய்து "டொட்டொடோ டொட்ட டொட்டடோ" என்று சிரிக்க வைப்பார். அந்த அளவிற்கு அந்தப் பாட்டு மிகவும் புகழ் பெற்றது. கவியரசர் எழுதி திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இசையில் இசைக்குயில் பி.சுசீலா பாடிய பாடல் அது.
ஒன்று வெற்றி பெற்றால் அதைப் பார்த்து மற்றொன்று வருவது இயல்புதானே. அப்படி வந்த இன்னொரு பாடல்தான் "சௌக்கியமா கண்ணே சௌக்கியமா"! இந்தப் பாடலும் திறமையுள்ளவர்கள் இணைந்து உருவாக்கிய பாடல்தான். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வைரமுத்து எழுதி நித்யஸ்ரீ பாடிய பாடல் இது. ஆனாலும் முதல் பாட்டு அடைந்த புகழை இந்தப் பாட்டு அடையவில்லை. அதற்குப் பல காரணங்கள் உண்டு. அவைகளில் ஒன்று நலந்தானா என்ற சொல் நமக்கு எளிதாக இருக்கும் அளவிற்குச் சௌக்கியமா என்ற சொல் இல்லாதது.
ஆனாலும் நாம் நண்பர்களையோ உறவினர்களையோ சந்திக்கையில் "சௌக்கியமா?" "சவுக்கியமா?" "சௌகர்யமா?" "சவுரியமா?" என்றெல்லாம் கேட்கிறோம். இந்தச் சொற்களைத் தவிர்த்துத் தமிழில் பேசுகையில் நலமா என்றே கேட்கலாம். நலமா என்று சொல்வது செந்தமிழில் பேசுவது போல இருந்தால் "நல்லாயிருக்கீங்களா" என்று கேட்கலாம்.
சௌக்கியமும் சௌகர்யமும் பல இடங்களில் பயன்படுத்தப் படுகிறது. அதாவது வசதி என்ற சொல்லுக்கு மாற்றாக. இடம் வசதியாக இருந்தது என்று சொல்வதற்கு சௌகர்யமாக இருந்தது என்று சொல்வதும் உண்டு. அந்த இடங்களில் வசதியைப் பயன்படுத்தலாம்.
இவ்வளவு சொல்லியாகி விட்டது. இலக்கியத்தில் நலம் வரும் இடங்களில் சிலவற்றைப் பார்க்கலாமா?
1. திருக்குறளில் வாழ்க்கைத் துணைநலம் என்றே ஒரு அதிகாரம் உள்ளது. இங்கு நலம் என்பது கிட்டத்தட்ட செல்வம் என்ற பொருளில் வருகிறது. வாழ்க்கைத் துணை என்பதே நலம் என்ற பொருள். இந்த அதிகாரத்தில்தான் "தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெளுவாள் பெய்யெனப் பெய்யும் மழை" என்ற புகழ் பெற்ற திருக்குறளும் உள்ளது.
2. ஒரு வாசகத்திற்கும் உருகாதாரும் உருகும் திருவாசகத்தில் ஒரு மாறுபட்ட பயன்பாடு. பொற்சுண்ணம் இடிக்கும் பொழுது பாடுகிறார்கள் "நலக்க அடியோமை ஆண்டுகொண்டு" என்று. அதாவது இறைத்தொண்டாக பொற்சுண்ணம் இடிப்பதால் தாம் நலம் அடையும் வகையில் ஆட்கொள்வான் இறைவன் என்னும் பொருளில் வந்தது. நலக்க என்பது நலம் பெறும் வகையில் என்ற பொருளில் வந்துள்ளது.
இப்பொழுது நான் இங்கு நிறுத்திக் கொள்கிறேன். மற்றைய இலக்கியங்களில் நலம் எங்கெல்லாம் பயின்று வந்திருக்கிறது என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.
அன்புடன்,
கோ.இராகவன்
இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் நண்பர் இராகவனால் 13 செப்டம்பர் 2006 இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
ReplyDelete34 கருத்துக்கள்:
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஜிரா
செளக்கியமா? இல்லை...இல்லை...நலமா?:-)
"நலந்தானா" போலவே கவியரசரின் இன்னொரு பாட்டு, "கருடா செளக்கியமா". அதுவும் சரி ஹிட்.
ஆக அவரவர் சௌகர்யம் போல்,
"நலமும்", "செளக்கியமும்" மாறி மாறி பயன்படுத்தி உள்ளனர்.
இருப்பினும் "நலமே" நலமாக உள்ளது!
(முதலில் "உபயோகப்படுத்தி உள்ளனர்" என்று தான் டைப் செய்தேன். உங்கள் பதிவைப் படிக்கும் தாக்கம் நல்லாவே அடிக்க ஆரம்பித்து விட்டது. "பயன்படுத்தி உள்ளனர்" என்று மாற்றி விட்டேன்" :-)
September 13, 2006 1:24 PM
--
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
"'நலம்' தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்" என்பது திருமங்கையாழ்வார் பாடல். இங்கும் "நலம்" தான் பயின்று வருகிறது.
அண்மைக் காலத்தில், பாரதி கூட
"ஓமெனப் பெரியோர் கள் என்றும்
ஓதுவ தாய் வினை மோதுவ தாய்
தீமைகள் மாய்ப்பது வாய் துயர்
தேய்ப்பது வாய், 'நலம்' வாய்ப்பது வாய்"
என்று "நலம்" என்று தான் சொல்லுகிறார்.
வள்ளுவர் முதல் வள்ளலார் வரை அனைவரும் "நலம்" பயின்று உள்ளனர். இவற்றை இன்னும் பலர் வந்து இங்கே "நலம்" சொல்லட்டும் :-)
September 13, 2006 1:42 PM
--
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
சௌகர்யம் - வசதி என்று சொல்லலாம் என்று சொல்லி உள்ளீர்கள்.
"வசதி" - தமிழா? (இராம கி அய்யா அவர்களைக் கேட்க வேண்டும்)
இல்லை வேறு நல்ல சொல் உள்ளதா?
September 13, 2006 1:45 PM
--
குறும்பன் said...
உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனும் நீ அலையோ
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுர பூபதியே
- அருணகிரி
:-))
September 13, 2006 3:16 PM
--
குறும்பன் said...
"வசதி"ங்கிறதே ஐயமா போச்சா?
"வசதி" தமிழ் ஐயா.
/(முதலில் "உபயோகப்படுத்தி உள்ளனர்" என்று தான் டைப் செய்தேன். உங்கள் பதிவைப் படிக்கும் தாக்கம் நல்லாவே அடிக்க ஆரம்பித்து விட்டது. "பயன்படுத்தி உள்ளனர்" என்று மாற்றி விட்டேன்" :-)
/
KRS நீங்க குமரன் எழுதுவதை படிக்கிறதில்லைன்னு அவர் கோவிச்சுக்கப்போறார். குமரன் "பயன்படுத்துகிறார்" என்பதற்கு பதிலாக "புழங்குகிறார்" என்ற சொல்லை தான் புழங்குவார். :-))
"எப்படி இருக்கறிங்க" இது தான் நான் அதிகம் புழங்குவது. அடுத்து "நல்லாயிருக்கறிங்களா".
September 13, 2006 3:25 PM
--
ஜெயஸ்ரீ said...
நலம் என்ற சொல்லுக்கு பின்வரும் வெவ்வேறு பொருள்கள் உண்டு.
1. நற்பண்பு
2. அழகு
3. அன்பு
4. லாபம்
5. புகழ்
6. செல்வம், ஆரொக்கியம்
7. சிவப்பு நிரம்
8. விருச்சிக ராசி(சோதிடம்)
9. சுக்கு
September 13, 2006 4:05 PM
--
துளசி கோபால் said...
ராகவன்,
பெந்தகளுருக்குப்போய்ச் சேர்ந்தாச்சா?
நல்லா இருக்கீங்களா?
September 13, 2006 4:10 PM
--
துளசி கோபால் said...
'நலம். நலமறிய ஆவல்'
பாட்டை விட்டுட்டீங்களே(-:
September 13, 2006 4:11 PM
--
ஜெயஸ்ரீ said...
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு
இக்குறளில் நலம் என்னும் சொல் நனமை என்ற பொருளில் வந்துள்ளது
"உயர்வர உயர்னலம் உடையவன் எவனெவன்"
இந்த நம்மாழ்வார் பாசுரத்தில் நலம் - பண்பு என்ற பொருளில் வந்துள்ளது
September 13, 2006 4:30 PM
--
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//KRS நீங்க குமரன் எழுதுவதை படிக்கிறதில்லைன்னு அவர் கோவிச்சுக்கப்போறார். குமரன் "பயன்படுத்துகிறார்" என்பதற்கு பதிலாக "புழங்குகிறார்" என்ற சொல்லை தான் புழங்குவார். :-)) //
குமரன்,
உங்கள் profile-இல் உள்ள முகவரிக்கு மின்மடல் ஒன்று அனுப்பி உள்ளேன். இனி "புழங்குகிறார்" என்றே புழங்குகிறேன்; கோபித்துக் கொள்ளாதீர்கள் :-):-):-)
குறும்பன் அவ்ர்களே
சரியான நேரத்தில் நீங்கள் வந்து சொன்னது, "வசதி" யாகப் போய் விட்டது; நன்றி! :-) "வசதி" தமிழ் தான் என்று தெரிந்து கொண்டேன். மீண்டும் நன்றி!!
September 13, 2006 10:58 PM
--
G.Ragavan said...
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஜிரா
செளக்கியமா? இல்லை...இல்லை...நலமா?:-)
"நலந்தானா" போலவே கவியரசரின் இன்னொரு பாட்டு, "கருடா செளக்கியமா". அதுவும் சரி ஹிட்.
ஆக அவரவர் சௌகர்யம் போல்,
"நலமும்", "செளக்கியமும்" மாறி மாறி பயன்படுத்தி உள்ளனர்.
இருப்பினும் "நலமே" நலமாக உள்ளது!
(முதலில் "உபயோகப்படுத்தி உள்ளனர்" என்று தான் டைப் செய்தேன். உங்கள் பதிவைப் படிக்கும் தாக்கம் நல்லாவே அடிக்க ஆரம்பித்து விட்டது. "பயன்படுத்தி உள்ளனர்" என்று மாற்றி விட்டேன்" :-) //
வாங்க கண்ணபிரான். நலம் நலமே அல்லவா. கருடா சௌக்யமா பாட்டு இப்பொழுதுதான் நினைவிற்கு வருகிறது. :-)
பயன்படுத்தின்னு மாத்தீட்டீங்களா? ரொம்ப நல்லது. குறஞ்சது நம்மளாவது முடிஞ்ச வரைக்கும் இப்படிச் செய்றது நல்லதுதானே...
// "'நலம்' தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்" என்பது திருமங்கையாழ்வார் பாடல். இங்கும் "நலம்" தான் பயின்று வருகிறது.
அண்மைக் காலத்தில், பாரதி கூட
"ஓமெனப் பெரியோர் கள் என்றும்
ஓதுவ தாய் வினை மோதுவ தாய்
தீமைகள் மாய்ப்பது வாய் துயர்
தேய்ப்பது வாய், 'நலம்' வாய்ப்பது வாய்"
என்று "நலம்" என்று தான் சொல்லுகிறார்.
வள்ளுவர் முதல் வள்ளலார் வரை அனைவரும் "நலம்" பயின்று உள்ளனர். இவற்றை இன்னும் பலர் வந்து இங்கே "நலம்" சொல்லட்டும் :-) //
இத இத இதத்தான் எதிர் பார்த்தேன். சரியாக எடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி.
// சௌகர்யம் - வசதி என்று சொல்லலாம் என்று சொல்லி உள்ளீர்கள்.
"வசதி" - தமிழா? (இராம கி அய்யா அவர்களைக் கேட்க வேண்டும்)
இல்லை வேறு நல்ல சொல் உள்ளதா? //
என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? குறும்பன் குமுறியிருக்கிறார் பாருங்கள். வசதி தமிழ்ச் சொல்லே!
September 14, 2006 12:23 AM
--
G.Ragavan said...
// உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனும் நீ அலையோ
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா சுர பூபதியே
- அருணகிரி
:-)) //
குறும்பன் ஆனாலும் ஒங்களுக்கு ரொம்பவும் குறும்புதான். :-) நல்ல கந்தரநுபூதிச் செய்யுள் இது. இதில் பாருங்களேன்...என்னை இழந்த நலம். ஒன்றை இழப்பது நலம் தருமா? தரும் என்கிறார். தம்மை இழப்பது ஒரு நலமாம். அதுவும் எல்லாம் அற. இங்கு சொல்ல வருவது அகந்தையும் நாம் என்ற எண்ணமும். மிகவும் மாறுபட்ட நலத்தை எடுத்துக் காட்டியமைக்கு மிக்க நன்றி.
September 14, 2006 12:27 AM
--
G.Ragavan said...
// ஜெயஸ்ரீ said...
நலம் என்ற சொல்லுக்கு பின்வரும் வெவ்வேறு பொருள்கள் உண்டு.
1. நற்பண்பு
2. அழகு
3. அன்பு
4. லாபம்
5. புகழ்
6. செல்வம், ஆரொக்கியம்
7. சிவப்பு நிரம்
8. விருச்சிக ராசி(சோதிடம்)
9. சுக்கு //
வாங்க ஜெயஸ்ரீ. வரிசையா நலன்களை அடுக்கீட்டீங்க. இந்தப் பொருள்கள்ள பயின்று வர்ர மாதிரி சில சின்னச் சின்ன வரிகளைச் சொல்லுங்களேன். நீங்களாவே எழுதியிருந்தாலும் சரிதான். இல்லை மேலே குறிப்பிட்டிருப்பது போல குறளாகவோ பாசுரமாகவோ வேறொரு செய்யுளாகவோ இருந்தாலும் சரிதான். (ஆசைக்கு அளவேது! :-) )
September 14, 2006 12:30 AM
--
G.Ragavan said...
// துளசி கோபால் said...
ராகவன்,
பெந்தகளுருக்குப்போய்ச் சேர்ந்தாச்சா?
நல்லா இருக்கீங்களா? //
பந்தாயித்து டீச்சர். சென்னாகிதினி. தாவு?
// 'நலம். நலமறிய ஆவல்'
பாட்டை விட்டுட்டீங்களே(-: //
தப்புத்தான் டீச்சர். என்னதான் குருவை மிஞ்சிய சிஷ்யனா...இல்லை இல்லை..ஆசானை மிஞ்சிய சீடனாக இருந்தாலும் ஆசான் ஆசாந்தான். டீச்சர் டீச்சர்தான்.
September 14, 2006 12:32 AM
--
பொன்ஸ்~~Poorna said...
ராகவன்,
இந்த மாதிரி சொற்களுக்குத் தமிழ்ச்சொல் சொல்லும்போது, ஒரே சொல்லில் நின்று போகிறோமோ என்று தோன்றுகிறது.. நலம் என்பதற்கு வேறு தமிழ் வார்த்தை உள்ளதா?
வசதி - இதற்கும் வேறு தமிழ்ச் சொற்கள் இல்லையா?
ஒரே சொல்லைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவது கவிதை மாதிரியான படைப்புகளில் சலிப்பை ஏற்படுத்தலாம்..
September 14, 2006 12:34 AM
--
கோவி.கண்ணன் [GK] said...
ஜிரா...!
"நலந்தான நலந்தானா" தலைப்பைப் பார்த்து மருத்துவர் ஓடி வந்து கருத்துசொல்வார் ... அப்பறம் நான் சொல்லலாம் என்று எதிர்பார்தேன்.
பெருத்த ஏமாற்றம்...!
:(
பாரதியார் பாட்டு ஒன்னு,
நல்லதோர் வீனை செயது அதை நலம் கெட புழுதியில்...
இதுமட்டும் தான் எனக்கு தற்போது ஞாபகத்துக்கு வந்தது !
September 14, 2006 12:37 AM
--
வெற்றி said...
இராகவன்,
நல்ல பதிவு. இச் சொல்லைப் பற்றி ஒரு சங்கதியைச் சொல்ல விரும்புகிறேன். ஈழத்தில் பேச்சுத்தமிழில் செளக்கியமா, நலமா எனும் சொற்களைப் புழங்குவதில்லை. ஒருவரைப் பார்த்து நலமாக இருக்கிறீர்களா என்பதை ஈழத்துப் பேச்சுத் தமிழில், "எப்படிச் சுகம்?" அல்லது "எப்படிச் சுகமாய் இருக்கிறீங்களே?" எனவும் "அம்மா சுகமாய் இருக்கிறாவே?" அல்லது "வீட்டிலை எல்லாரும் சுகமா இருக்கினமே?" அல்லது "அம்மாடை சுகங்கள் எப்பிடி?" என்றுதான் கேட்பார்கள். ஆனால் எழுதும் போது நலம் என்ற சொல்லைத்தான் அதிகமான நேரங்களில் புழங்குவார்கள். இந்த செளக்கியம் என்ற சொல் ஈழத்தில் புழக்கத்தில் இல்லை. என்ன காரணமோ தெரியாது.
கவியரசர் இந்த செளக்கியமா எனும் சொல்லையும் புழங்கியுள்ளார்.
"பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா செளக்கியமா?"
September 14, 2006 12:41 AM
--
மதுமிதா said...
நலந்தானா ஜீரா
'எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்'
'வாழி நலம் சூழ'
'நலம் வாழ எந்நாளும்'
பாடலையும் சேர்த்துக்கோங்க ஜீரா
September 14, 2006 12:45 AM
--
SP.VR.சுப்பையா said...
எங்க ஊரில் 9கோவைப் பகுதியில்) மண்வாசனையுடன் இப்படிக்கேட்பார்கள்
"நல்லயிருக்கியா சாமி?"
அல்லது
"சொகமா இருக்கியா கண்ணு?"
அதோடு கேட்டும் குரலிலும் ஒரு கனிவும் ஈரமும் இருக்கும்!
பார்த்தால் சொக்கிப் போவீர்கள்!
September 14, 2006 12:45 AM
--
ஜெயஸ்ரீ said...
இந்த குறட்பாக்களைப் பாருங்கள்
பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.
இங்கு நலம் 'இன்பம்' என்ற பொருளில் வந்துள்ளது. புன்னலம் (புன்மை+ நலம்)-கீழான இன்பம்
தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்.
தன்னுடைய நலத்தை(புகழ்) விரும்புவோர் எவரும் பொதுமகளிரின் கீழான நலத்தை(இன்பம்) நாடமாட்டர்.
"காம்பினை வென்றமென் றோளி பாகங் கலந்தான் நலந்தாங்கு "- தேவாரம்
(மூங்கிலைப் போன்ற தோளினள் உமையை பாகமாகக் கொண்டவன் நலத்தை(புகழை)த் தாங்கும்)
குறளில் நலம்(அழகு)புனைந்துரைத்தல் என்ற அதிகாரம் உள்ளது. இங்கு நலம் அழகு என்ற பொருளில் பாவிக்கப்படுகிறது.
September 14, 2006 9:18 AM
--
SK said...
'நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன் மேல் வந்து நீள்கழல்கள் காட்டி'
என சிவபுராணத்தில் வரும்.
'நலம் நலந்தான முல்லை மலரே
சுகம் சுகந்தானா முத்துச் சுடரே'
என்ற பிரபல வரிகள் அன்றைய 'அன்புள்ள மான்விழியே' பாடலில்.
இன்னும் பல பாடல்கள் உண்டு!
நலங்கிள்ளி என ஒரு சங்க மன்னன்.
'நலம் தகு நானம் இடிக்கும் நல்லவர்' என்று சீவக சிந்தாமணியில் வருகிறது. விரும்பத்தக்க பொற்சுண்ணப்பொடியை இடிக்கு மகளிர் என்ற பொருளில்.
அதெல்லாம் சரி, சௌக்கியம், சௌகர்யம், நலம், சுகம் எல்லாமே நலமாகத்தானெ புழங்கி வருகின்றன.
அப்படியே இருந்து விட்டுப் போகலாமே.
September 14, 2006 12:56 PM
--
MSV Muthu said...
ராகவன் நீங்கள் தமிழாசிரியரா? உங்கள் profile லில் தமிழும், பக்தியும், இசையும் மணக்கிறது. இந்த நிமிடம் நானும் என்னுடன் வேலை செய்பவரும் பேசிக்கொண்டிருந்த போது வந்த சந்தேகம். drum என்ற ஆங்கில் வார்த்தைக்கு தமிழில் இனையான சொல் என்ன? மத்தளமாக இருக்காது என்று நினைக்கிறேன்.
September 14, 2006 9:11 PM
--
மங்கை said...
வாலியின் பாடல் வரிகள் நினைவுக்கு வருது..மறுபடியும் படத்தில்..
நான் அடிக்கடி கேட்க நினைக்கும் பாடல்
'நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்!
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்'
மங்கை
September 15, 2006 10:53 PM
--
ஞானவெட்டியான் said...
//drum என்ற ஆங்கில் வார்த்தைக்கு தமிழில் இனையான சொல் என்ன? மத்தளமாக இருக்காது என்று நினைக்கிறேன்.//
பேரிகை என்பதாம்
September 16, 2006 6:08 AM
--
ரவிசங்கர் said...
மிக அருமையான நோக்கமுடைய வலைப்பதிவு. பாராட்டுக்கள். இன்று தான் இந்த வலைப்பதிவை கண்டேன்..நிறைய எழுதி வைத்திருக்கிறீர்கள்..ஒவ்வொன்றாய் படித்து பயன் பெற முயல்வேன்..பின்னூட்டங்களையும் இடுகிறேன். நேற்று தான், இராம.கி அவர்கள் வலைப்பதிவில் அவருடைய சொல்லாக்கங்களை தொகுத்து தர வேண்டும் என்று வேண்டினேன்.. அந்தப் பணியை நீங்கள் செய்வது கண்டு மகிழ்ச்சி. இது போன்ற இன்னும் பல முயற்சிகள் இணையத்தில் வரும் என்று நம்புகிறேன்
September 19, 2006 7:10 AM
--
Mayooresan said...
இரண்டாவது பாடல் வீடியோவைப் பாருங்கள். அந்தப் பெண் (சந்தியா??) பரத நாட்டியத்தைப் படுத்தும் பாடு...
முன்னய காலங்களில் பத்மினி போன்றோர் நடனக்கலையை கற்றிருந்ததுடன் அதை அழகாக ஆடிக்காட்டினர். இப்போ இருப்பவர்களுக்கு பிரேக் டிஷ்கோ இதைவிட்டால் எதுவும் தெரியாது. தேவையில்லாமல் இவர்களை விட்டு நம்ம கலைகளை புண்படுத்துவதுதான் மிச்சம்
September 19, 2006 10:33 PM
--
G.Ragavan said...
// பொன்ஸ் said...
ராகவன்,
இந்த மாதிரி சொற்களுக்குத் தமிழ்ச்சொல் சொல்லும்போது, ஒரே சொல்லில் நின்று போகிறோமோ என்று தோன்றுகிறது.. நலம் என்பதற்கு வேறு தமிழ் வார்த்தை உள்ளதா?
வசதி - இதற்கும் வேறு தமிழ்ச் சொற்கள் இல்லையா? //
இருக்கலாம் பொன்ஸ். தேடிப் பார்த்தால் கிடைக்கலாம். என்னைப் பொறுத்த வரையில் கற்றது கைமண்ணளவு கூடக் கிடையாது.
// ஒரே சொல்லைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவது கவிதை மாதிரியான படைப்புகளில் சலிப்பை ஏற்படுத்தலாம்.. //
இத்தனை பேர் எத்தனை பாடல்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். எதிலாவது சலிப்பு இருக்கிறதா? ஒரே மண்தான். பிடிக்கிறவன் கையைப் பொருத்து பானை. பானையைப் பொருத்து சமையல். சமையலைப் பொருத்துச் சுவை. சுவையைப் பொருத்து பாராட்டு.
September 20, 2006 12:42 PM
--
G.Ragavan said...
// கோவி.கண்ணன் [GK] said...
ஜிரா...!
"நலந்தான நலந்தானா" தலைப்பைப் பார்த்து மருத்துவர் ஓடி வந்து கருத்துசொல்வார் ... அப்பறம் நான் சொல்லலாம் என்று எதிர்பார்தேன்.
பெருத்த ஏமாற்றம்...!
:( //
ஏமாற்றாதே ஏமாறாதே :-)))))))))))))))
// பாரதியார் பாட்டு ஒன்னு,
நல்லதோர் வீனை செயது அதை நலம் கெட புழுதியில்...
இதுமட்டும் தான் எனக்கு தற்போது ஞாபகத்துக்கு வந்தது ! //
ஒன்னுன்னாலும் கண்ணு மாதிரி சொல்லீருக்கீங்க கோவி.
September 20, 2006 12:47 PM
--
G.Ragavan said...
// வெற்றி said...
இராகவன்,
நல்ல பதிவு. இச் சொல்லைப் பற்றி ஒரு சங்கதியைச் சொல்ல விரும்புகிறேன். ஈழத்தில் பேச்சுத்தமிழில் செளக்கியமா, நலமா எனும் சொற்களைப் புழங்குவதில்லை. ஒருவரைப் பார்த்து நலமாக இருக்கிறீர்களா என்பதை ஈழத்துப் பேச்சுத் தமிழில், "எப்படிச் சுகம்?" அல்லது "எப்படிச் சுகமாய் இருக்கிறீங்களே?" எனவும் "அம்மா சுகமாய் இருக்கிறாவே?" அல்லது "வீட்டிலை எல்லாரும் சுகமா இருக்கினமே?" அல்லது "அம்மாடை சுகங்கள் எப்பிடி?" என்றுதான் கேட்பார்கள். ஆனால் எழுதும் போது நலம் என்ற சொல்லைத்தான் அதிகமான நேரங்களில் புழங்குவார்கள். இந்த செளக்கியம் என்ற சொல் ஈழத்தில் புழக்கத்தில் இல்லை. என்ன காரணமோ தெரியாது. //
நல்ல தகவல் வெற்றி. இலங்கைத் தமிழ்ப் புழக்கத்தையும் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.
September 20, 2006 1:06 PM
--
G.Ragavan said...
// மதுமிதா said...
நலந்தானா ஜீரா
'எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்'
'வாழி நலம் சூழ'
'நலம் வாழ எந்நாளும்'
பாடலையும் சேர்த்துக்கோங்க ஜீரா //
சேத்துக்கிட்டாச்சு மதுமிதா :-)
// SP.VR.SUBBIAH said...
எங்க ஊரில் 9கோவைப் பகுதியில்) மண்வாசனையுடன் இப்படிக்கேட்பார்கள்
"நல்லயிருக்கியா சாமி?"
அல்லது
"சொகமா இருக்கியா கண்ணு?"
அதோடு கேட்டும் குரலிலும் ஒரு கனிவும் ஈரமும் இருக்கும்!
பார்த்தால் சொக்கிப் போவீர்கள்! //
அப்ப கோவைப் பக்கம் சுத்திப் பாக்கப் போகனுமே....ரெண்டு மூனு நாள் தங்கிப் பாக்கனும்.
September 20, 2006 1:08 PM
--
G.Ragavan said...
ஜெயஸ்ரீ, எஸ்.கே, இருவரும் திகட்டாமல் அள்ளியள்ளித் தருகிறீர்கள் தமிழமுதத்தை. :-)
msv.muthu, நான் தமிழாசிரியன் இல்லை. மென்பொருளில் பணி செய்கிறேன். தமிழார்வம் உண்டு.
drum என்ற சொல்லுக்கு ஞானவெட்டியான் ஐயா சொன்னது போல பேரிகை என்றும் சொல்லலாம். அல்லது கொட்டு என்றும் சொல்லலாம்.
September 20, 2006 1:11 PM
--
G.Ragavan said...
மங்கை, நல்லதொரு பாடலை நினைவு படுத்தியிருக்கிறீர்கள். நன்றி. மறுபடியும் என்ற படம் என்று நினைக்கிறேன்.
பாராட்டுக்கு நன்றி ரவிசங்கர். இராம.கி ஐயா தமிழறிந்த பெரியார். நான் சிறியோன். முடிந்ததைச் செய்கிறேன். செய்வேன்.
மயூரேசன்...அந்தப் பாட்டைப் பார்க்கும் துணிவு எனக்கு இல்லை. ஒருமுறை பார்த்து விட்டே அந்த முடிவுக்கு வந்து விட்டேன்.
September 20, 2006 1:13 PM
--
மதுமிதா said...
இலக்கியம் என்று கேட்க சினமாவிலிருந்து பாடலா:-(
இதோ சேக்கிழார் பாடியதிலிருந்து.
திருஞானசம்பந்தரின் வளர்ப்பைப் பாடியது.
தாயார்திரு மடித்தலத்தும்
தயங்குமணித் தவிசினும்
தூயசுடர்த் தொட்டிலினும்
தூங்குமலர்ச் சயனத்தும்
சேயபொருள் திருமறையும்
தீந்தமிழும் சிறக்கவரு
நாயஜனைத் தாலாட்டி
நலம்பலபா ராட்டினார்
கடைசி வரியினைப் பாருங்கள் ஜீரா
October 08, 2006 12:22 AM