Tuesday, May 13, 2008

திருவிளையாடலும் பாரதியாரும்...

1. சன் தொலைக்காட்சியில் கடந்த சில வாரங்களாக 'திருவிளையாடல்' என்ற நெடுந்தொடரைத் தொடங்கியிருக்கிறார்கள். திருவிளையாடல் திரைப்படத்தை ஒட்டி மாங்கனி விளையாட்டுடன் தொடங்கிய தொடர் திரைப்படத்தைப் போலவே 'தருமி'யின் கதைக்கு முதலில் சென்றுவிடும் என்று எண்ணினேன். ஆனால் அப்படி செய்யாமல் திருவிளையாடல் புராணத்தில் வருவதைப் போலவே வரிசையாக திருவிளையாடல்களைச் சொல்லிவரப் போகிறார்கள் போலும். முதல் திருவிளையாடலான இந்திரன் பிரம்மஹத்தி தோஷத்தைப் பெற்று பொற்றாமரைக் குளத்தில் மூழ்கி அந்தப் பாவத்தைப் போக்கிக் கொள்ளும் திருவிளையாடலைத் தற்போது காட்டுகிறார்கள். திருவிளையாடல் புராணம் சொல்வதற்கும் அதிகமாக இந்தக் கதையில் இந்திரன் தொடர்புள்ள மற்ற கதைகளையும் இணைத்துச் சொன்னாலும் இது வரை பிசிறு தட்டவில்லை; எந்தக் கதையுமே இந்தத் தொடருடன் இயைந்து வருவதற்காக மாற்றப்படவும் இல்லை. அது வியப்பாகவும் சுவையாகவும் இருக்கிறது. அவ்வப்போது நடுநடுவே சுவையைக் குறைக்கும் நீண்ட உரையாடல்கள் வந்தாலும் தற்போதைக்கு இந்தத் தொடர் மொத்தத்தில் சுவையுள்ளதாக இருக்கிறது.

2. பாரதியாரின் பாடல்கள் சிலவற்றை இன்று யூட்யூபில் பார்த்துக்/கேட்டுக் கொண்டிருந்தேன். அவரது 'அச்சமில்லை அச்சமில்லை' பாடலை ஒரு சிறுவன் பிசிறு தட்டாமல் பாடுவதைக் கண்டு வியந்தேன். பெரியவர்களுக்கே வாய் குழறும் நீண்ட வரிகளை ஒருவர் சொல்லச் சொல்ல எந்த வித குழறல்களும் இல்லாமல் இந்த சிறுவன்/சிறுமி மிக அருமையாகச் சொல்கிறார்.




இப்படி சின்ன சின்ன எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக குறும்பதிவுகள் இடுவதும் நன்றாகத் தான் இருக்கிறது. இனி அவ்வப்போது நானும் இப்படி இடுகைகள் இடலாம் என்று எண்ணியிருக்கிறேன்.

39 comments:

  1. இடுங்க இடுங்க.

    நம்ம வீட்டிலும் இப்போ திருவிளையாடலும் ராமாயணமும்தான் பேவரேட்.

    அடுத்தது ஐபிஎல்!

    ReplyDelete
  2. சன் டிவியில் இராமயணமும் திருவிளையாடலுமா?

    என்ன ஆச்சரியம்............... (நாகேஷ் திருவிளையாடல் படத்தில் சொல்வதை போல் சொல்லவும்)

    அப்ப சன் டிவி கனக்ஷன் வாங்கிட வேண்டியதுதான்

    ReplyDelete
  3. ஆமாம் கொத்ஸ். எங்கள் வீட்டிலும் அப்படியே. இராமாயணத்தை விட்டாலும் விடுவேன்; திருவிளையாடலின் ஒரு பகுதியையும் இதுவரை விடவில்லை. இனிமேலும் அப்படியே சுவையாக இருக்கும் என்று நினைக்கிறேன். இராமாயணமும் நன்றாக இருந்தாலும் வடக்கத்திய முகங்களையும் மொழிபெயர்த்த உரையாடல்களையும் அவ்வளவாக சகிக்க முடியவில்லை. அதிலும் இராமனின் தாயார்களாக நடிப்பவர்கள் குறிப்பாக கைகேயி பார்க்க சகிக்கவில்லை. இளம்வயது இராமனும் உடன்பிறப்புகளும் சகிக்க முடியாமல் இருந்தாலும் இப்போது இளைஞர்கள் பரவாயில்லை என்னும்படி இருக்கிறார்கள். இளைஞனான இராமனும் முதலில் பார்க்க சகிக்காதவராகத் தான் இருந்தார். போகப் போக பழகிவிட்டது. :-) சீதையும் அப்படியே பழகிப் போய்விடும் என்று நினைக்கிறேன்.

    திருவிளையாடலில் இந்திரனாக வருபவரும் (பெயர் என்ன? பப்லுவா?) ஒளவையாக வரும் ஆச்சியும் நாரதராக வரும் ராதாரவியும் அந்தந்த கதைமாந்தர்களுடன் பொருந்தவில்லை போல் தோன்றுகிறது. :-)

    ReplyDelete
  4. ஆமாம் சிவாண்ணா. விரைவில் சன் தொலைக்காட்சி தொடர்பை வாங்குங்கள். திருவிளையாடல் வார நாட்களில் இரவு 8 மணிக்கும் இராமாயணம் ஞாயிறு தோறும் காலை 10:30 மணிக்கும் வருகின்றன.

    ReplyDelete
  5. நாங்க எல்லாம் ரெக்கார்ட் பண்ணி வாரயிறுதியில்தான் பார்க்கறோம்!

    ReplyDelete
  6. நாங்கள் பதிவு செய்யும் சேவையைப் பெறவில்லை. அதனால் தினந்தோறும் எங்கிருந்தாலும் 8 மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுகிறோம். விரைவில் பதிவு சேவையை வாங்கவேண்டும்.

    ReplyDelete
  7. ஏனோ என் மனம் திருவிளையாடல் தொடரோடு அவ்வளவாக ஒட்டவில்லை குமரன். அதிருக்கட்டும், உங்களோடு உங்கள் மகளும் தொடரைப் பார்க்கிறாரா? கேள்விகளெல்லாம் கேட்கிறாரா?
    இந்திரனாக வருபவர் - பிரிதிவிராஜ்.

    ReplyDelete
  8. ஆமாம் குமரன், இந்த பழைய பதிவுகளுக்கு புனரோத்தாரணம் செய்வதை விடுத்து, புதுசா எழுதற முடிவினை வரவேற்கிறேன்.. :)

    ReplyDelete
  9. நால்வரும் ஒன்றாக அமர்ந்து தான் தொடரைப் பார்க்கிறோம் ஜீவா. சொல்லும் முறையிலும் நடிப்பவர்களின் குறை நடிப்பிலும் உரையாடல்களின் செயற்கையிலும் எனக்கும் இந்தத் தொடரில் குறைகள் தோன்றத் தான் செய்கின்றன. ஆனால் தற்கால திரைப்படங்களில் காண்பிக்கப்படும் கடவுளின் மாயாஜாலங்களை ஒப்பிடும் போது இந்தத் தொடர் மிக மிக நன்றாக இருக்கின்றது என்று தான் தோன்றுகிறது. அது மட்டும் இல்லாமல் இலக்கியங்களைப் படித்து மனத்தில் ஒரு உருவத்தை வைத்திருக்கும் நமக்கு எந்த வித வடிவில் காட்சிப்படுத்தினாலும் குறையாகத் தோன்றத் தான் செய்யும் என்று எண்ணுகிறேன். ஏதேனும் நாவலைப் படித்தவர்கள் அந்த நாவல் திரைப்படமாக வரும் போது நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று சொல்வதைப் போல் தான். :-)

    ReplyDelete
  10. பிருதிவிராஜின் பெயரை இன்றைய பகுதியில் பார்த்தேன் ஜீவா. நன்றி.

    ReplyDelete
  11. மௌலி. அப்படியெல்லாம் தவறான முடிவிற்கு வந்துவிடாதீர்கள். மறுபதிவுகள் இனியும் வந்து கொண்டிருக்கும். மற்ற பதிவுகளில் இருப்பதை எல்லாம் இங்கே கொண்டுவர வேண்டுமே. அப்போது தான் பதிவுகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும்.

    ஆதித்ய ஹிருதயத்தின் அடுத்த பகுதியையும் பாரிவள்ளல் கதையின் அடுத்தப் பகுதியையும் எழுத வேண்டும். இரு வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

    ReplyDelete
  12. //ஆதித்ய ஹிருதயத்தின் // இதெங்கே எழுதறீங்க?...நான் படிக்கல்லையே?
    ஸ்தோத்திர மாலாவிலா?..அங்கு எழுதறதாயிருந்தா சொல்லுங்க நானும் சேர்ந்துக்கறேன். :-)

    ReplyDelete
  13. அங்கே எழுதத்தொடங்கி ரெண்டு பகுதியும் போட்டாச்சு. நீங்க பாக்கவே இல்லை போலிருக்கே.

    ReplyDelete
  14. // ஒளவையாக வரும் ஆச்சியும் நாரதராக வரும் ராதாரவியும் அந்தந்த கதைமாந்தர்களுடன் பொருந்தவில்லை போல் தோன்றுகிறது. :-)//

    ட்ரெயிலரிலேயே பார்த்தேன், பொருத்தமாயிருக்காதுனு மனசிலே பட்டது. ம்ம்ம்ம்ம்ம்ம், ஆனாலும் இந்தத் தொடரைப் பார்க்கும் பாக்கியம் பெறவில்லை! :))))))) என்ன, இப்போ பதிவுக்கு மெயிலறதில்லை?????

    ReplyDelete
  15. அந்தப் பையனின் அச்சமில்லை recital நல்லா இருந்தது..

    நன்றி,

    சீமாச்சு..

    ReplyDelete
  16. நல்ல தகவல்களுக்கு நன்றி நண்பரே!

    எங்க வீட்டில் விஜய் டிவிதான்!

    எல்லாம் சுகமாயிருக்கிறது!
    நியூஸ் கிடையாது! விளம்பரங்கள் கிடையாது! மனதுக்கு இதமான நிகழ்ச்சிகள்! நெருடல் எதுவுமே இல்லாத சிறந்த மாலை நேரம் இனிமையாகக் கழிகிறது!

    அதிலும் 'தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு' வார நிகழ்ச்சி இதன் ஹைலைட்!

    நோ சன் டிவி! :))

    ReplyDelete
  17. ஓ இப்பப் புதுசா இதெல்லாம் போடுறாங்களா? நான் இந்தக் கனாக் காணும் காலங்கள் அப்படீங்குற நாடகத்த மட்டும் பாப்பேன். அது கூட டீவி கெடையாது. நெட்டுலதான். ஒரு சைட்ல அன்னைன்னைக்கி நாடகங்கள போடுறாங்களே. திருவிளையாடல்னு பேரைப் பாத்தேன். ஆனா வேற ஏதோன்னு நெனைச்சி விட்டுட்டேன். உங்க பதிவைப் படிச்சப்புறமா அதுல ஒரு எபிசோடு பாத்தேன். நல்ல முயற்சி. ஆனா யாரோ ராகேஷ் சின்ஹான்னு ஒருத்தர் இயக்குனர். அதுதான் ஆச்சரியம்.

    இராமாயணத்தையும் பாத்தேன். எல்லாம் வடக்கத்திப் பசங்க. அதான் நீங்க சொன்னாப்புல ஒல்லிப் பிச்சான்களா இருக்காங்க. ஆனா இராமாயணத்தை விட திருவிளையாடல் நல்லாருக்குற மாதிரி தோணிச்சு. முருகனா நடிச்ச பையனுக்கு மட்டும் நல்ல விக் வாங்கிக் குடுக்கச் சொல்லுங்க.

    ReplyDelete
  18. நீங்க சொல்லியாச்சா? சரி பாத்துட வேன்டியது தான்.

    ராதாரவி நாராயண! நாராயண! சொல்வது ரொம்ப வசாப்பா(கொத்ஸ், எப்புடி?) இருக்குனு தங்கமணி சொன்னாங்க. :))

    ReplyDelete
  19. மொத்தமா வாரத்துக்கு ஒரு முறை தான் மின்னஞ்சல் அனுப்புகிறேன் கீதாம்மா. ஏதாவது ஒரு வாரத்தில் எந்த புதிய இடுகையும் இடவில்லை என்றால் அந்த மின்னஞ்சலும் இல்லை. இந்த வாரம், சென்ற வாரம் இரண்டிற்கும் சேர்த்து அனுப்பவேண்டும்.

    ReplyDelete
  20. அப்பாடா. நீங்கள் மட்டுமாவது அந்த பாரதியார் பாட்டைப் பற்றி சொன்னீர்களே. நன்றி சீமாச்சு.

    ReplyDelete
  21. சன் தொலைக்காட்சித் தொடுப்பு இருந்தால் விஜய் தொலைக்காட்சித் தொடுப்பு கிடைப்பதில்லையே எஸ்.கே. இல்லாவிட்டால் எங்கள் வீட்டில் இரண்டும் இருக்கும். செய்திகள் இல்லையா? ஒரு தலைச் சார்பான செய்திகள் என்றாலும் அது இல்லாவிட்டால் தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் என்ன நடக்கிறது என்பதே தெரியாதே?

    ReplyDelete
  22. நல்லா சொன்னீங்க இராகவன். முருகக் குழந்தையும் மழலை பேசும் குழந்தை. பெரிய பெரிய தத்துவங்களை மழலை மொழியில் கேட்டால் சிறுவயதில் ஷாலினி பேசியவை தான் நினைவிற்கு வருகின்றன. இணையத்திலும் இந்தத் தொடர்கள் பார்க்கக் கிடைக்கின்றன என்று தெரியும். ஒரு முறை பார்த்திருக்கிறேன். உரலைத் தருகிறீர்களா?

    ReplyDelete
  23. வாங்க அம்பி. உங்க தங்கமணி சொன்னது சரி தான். வாசாப்பாகத் தான் இருக்கிறது. அவர் பேசுவதைக் கேட்பதும் அப்படியே. :-)

    ReplyDelete
  24. அம்பி,

    அது வசப்பு, வசம்பு எல்லாம் இல்லைய்யா. வாசாப்பு!! :))

    ReplyDelete
  25. //அம்பி,

    அது வசப்பு, வசம்பு எல்லாம் இல்லைய்யா. வாசாப்பு!! :))
    //
    இரண்டு பேரோட டிஸ்கஷனும் நல்லாவே இருக்கு! :P

    ReplyDelete
  26. ராதாரவியை இரணியணா அப்பிடி இப்பிடின்னே பாத்து பழக்கமாப் போச்சா? அதான் நாரதர் வேசம் ஒட்டலை போல!

    ராதாரவியும் தன்னை இரணியனா undo பண்ணிக்கிட்டு, நாரதரா do பண்ணிக்கலாம்!

    என்.டி.ராமாராவ் இராமனாவும் நடிச்சாரு! இராவணனாகவும் நடிச்சாரு! ரெண்டுமே நல்லாப் பண்ணி இருப்பாரு!

    //முருகனா நடிச்ச பையனுக்கு மட்டும் நல்ல விக் வாங்கிக் குடுக்கச் சொல்லுங்க.
    //

    ஹா ஹா ஹா
    மறக்காம சொல்லுங்க குமரன். அப்படியே நம்ம மனோரமா ஆச்சிக்கும் நல்ல விக்கா வாங்கித் தாரச் சொல்லுங்க! ஒளவையார் வேசத்துல கேபி சுந்தராம்பாளை பீட் பண்ணனும்னா என்னா சும்மாவா?

    ReplyDelete
  27. இன்னைக்கு மாலை/இரவு தொடர் வரும் போது ராதாரவி, மனோரமா, குமரக் குழந்தை இவர்களிடம் சொல்லிவிடுகிறேன் இரவிசங்கர். தொலைக்காட்சிக்கு அருகில் சென்று சொன்னால் போதுமில்லையா? :-)

    ReplyDelete
  28. கவிநயா அக்கா மின்னஞ்சலில் கேட்ட கேள்வி:

    ஒரு கேள்வி - பூதேவி இந்திரலோகத்திலயா இருப்பாங்க?

    ReplyDelete
  29. அட. எனக்கும் இந்தக் கேள்வி இருக்கு அக்கா. எங்க வீட்டுத் தங்கமணி (வீட்டம்மாவைத் தங்கமணின்னு சொல்றது வலைப்பதிவு வழக்கம். கணவன்னா ரங்கமணி) ஒவ்வொரு தடவையும் இந்தக் கேள்வியைக் கேப்பாங்க. ஏன் அப்படி வைச்சாங்கன்னு தெரியலை. ஒரு வேளை பூமாதேவி இந்திர சபையில் மற்றவர்களுடன் கொலுவிருப்பாள் என்று சில புராணங்களில் சொல்லியிருப்பதை வைத்து இப்படி செய்தார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இந்தத் தொடரில் பூமாதேவி இந்திராணியும் இந்திரனும் தங்கள் அரியணைகளில் அமர்ந்திருக்க இந்திராணியின் வலப்பக்கத்தில் எப்போதுமே நின்று கொண்டிருப்பதாகக் காட்டுகிறார்கள். என்னவோ பூமாதேவி இந்திராணியின் பணிப்பெண் என்று சொல்வதைப் போல.

    ReplyDelete
  30. //முருகனா நடிச்ச பையனுக்கு//
    பையனில்லை, பொண்ணுன்னு நினைக்கிறேன்!
    //ஒரு வேளை பூமாதேவி இந்திர சபையில் மற்றவர்களுடன் கொலுவிருப்பாள் என்று சில புராணங்களில் சொல்லியிருப்பதை வைத்து இப்படி செய்தார்கள் என்று நினைக்கிறேன்.//
    பூமாதேவி - பஞ்சபூதங்களுள் ஒன்றான நிலத்தைக் குறிப்பதற்காக அவரை காட்டுகிறார்கள் என நினைக்கிறேன்.
    ஆனால் பூமாதேவி அதற்கும் மேலாக மஹாலஷ்மியின் சொரூபம் என்பதால் இந்தக் குழப்பம்!
    (Its like is Prime minister also holding the portfolio of a cabinet position is mistaken for a cabinet minister!)

    ReplyDelete
  31. வசம்பு, வசப்புன்னு பசப்பாத அம்பி...தப்பாச் சொன்னா அண்ணன் இ.கொ எங்கிருந்தாலும் வந்துடுவார்..

    ReplyDelete
  32. //ஒரு வேளை பூமாதேவி இந்திர சபையில் மற்றவர்களுடன் கொலுவிருப்பாள் என்று சில புராணங்களில் சொல்லியிருப்பதை வைத்து இப்படி செய்தார்கள் என்று நினைக்கிறேன்.//
    பூமாதேவி - பஞ்சபூதங்களுள் ஒன்றான நிலத்தைக் குறிப்பதற்காக அவரை காட்டுகிறார்கள் என நினைக்கிறேன்.
    ஆனால் பூமாதேவி அதற்கும் மேலாக மஹாலஷ்மியின் சொரூபம் என்பதால் இந்தக் குழப்பம்!

    ஜீவா சொல்வதை வழிமொழிகிறேன் குமரன்.
    திருமகளின் அம்சம் என்று பார்ப்பதால் வரும் குழப்பம் இது. இறைவனுக்கு அருகில் இருக்க வேண்டியவர் இப்படி இந்திர சபையில் சேவகம் போல் இருக்கலாமா என்று ஒரு பார்வை.

    ஆனால் அவரவர்கென்று ஒரு பணி இருக்கு அல்லவா? அப்படிப் பணி புரியும் போது அந்தப் பணியிடத்துக்கு ஏற்றாற் போலத் தான் நடந்து கொள்ள வேண்டும்! அது இறைவனே ஆனாலும் சரி!

    கண்ணன் துவாரகைக்கு அரசன். ஆனால் தேரோட்டும் போது குதிரை குளிப்பாட்டி புல்லைப் போடத் தான் வேண்டும்! தயங்காமல் செய்வான்.

    ஈசன் இறையனாராக வரும் போது, அவைப் புலவரின் கேள்விக்கு விடையிறுத்துப் பின்னர் தான் அரங்கேற்ற முடியும்! சங்க விதி!

    அது போலத் தான் மண்மகளும்! ஐம்பூதத் தொழில் செய்யும் போது, அதற்குரிய விதிகள்! இதே இந்திரன் அபயம் கேட்டு வைகுந்தம் செல்லும் போது அங்கு இறைவன் பக்கத்தில் இறைவி! :-)

    ஒரே அலுவலகத்தில் கணவன்-மனைவி வேலை பார்த்தால் இது சட்டென்று புரிஞ்சிடும்! :-)

    ReplyDelete
  33. இந்த விளக்கமெல்லாம் சரி தான் இரவிசங்கர். மற்ற இயற்கைச் சக்திகளான வருணன், வாயு, அக்னி இவர்களுக்கெல்லாம் ஒரு ஆசனம் இந்திர சபையில் இருக்கும் போது மண்மகளுக்கு மட்டும் இல்லாமல் அவள் எப்போதும் நின்று கொண்டிருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதில்லை. ஐம்பூதங்களுக்குரிய இடத்தில் அவள் இருக்கிறாள் என்றால் அவளுக்கும் சபையில் ஒரு இருக்கை வேண்டுமல்லவா? அது மட்டும் இல்லாமல் அவள் மட்டுமே இந்திரன், இந்திராணி இவர்களின் உதவியாளரைப் போல் இந்திராணியின் அந்தப்புரத்திலும் சேவகம் செய்கிறாள். பொருந்தவில்லை.

    ReplyDelete
  34. யோசித்துப் பார்த்தால் ஆசனங்களில் அமர்ந்திருப்பவர்கள் எல்லோரும் ஆண்கள்தான்! :) அதனால்தான் இயக்குனர் என்ன செய்வதென்று தெரியாமல் மண்மகளை அம்போவென்று விட்டு விட்டாரோ?

    ReplyDelete
  35. //வருணன், வாயு, அக்னி இவர்களுக்கெல்லாம் ஒரு ஆசனம் இந்திர சபையில் இருக்கும் போது மண்மகளுக்கு மட்டும் இல்லாமல் அவள் எப்போதும் நின்று கொண்டிருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதில்லை//

    சன் டிவி சீரியலை வைத்துச் சொல்லவில்லை குமரன்.
    கதைகளில் வருவதை வைத்துச் சொன்னேன்! மண்மகளுக்கு ஆசனம் அளிக்காதது குற்றம் தான்!
    ஆபீஸ்-ல சேர் கொடுக்கலைன்னா எப்பிடிப் பின்னூட்டம் போடுறதாம்? :-)

    ReplyDelete
  36. மண்மகளைப் போல நீங்களும் நின்னுக்கிட்டே பின்னூட்டம் போட வேண்டியதுதான் :)

    ReplyDelete
  37. ஆமாம் ஜீவா. பையனா பொண்ணாங்கற குழப்பம் வேணாம்ன்னு தான் முருகக் குழந்தைன்னு சொன்னேன். :-) ஆணல்லன் பெண்ணல்லன் அல்லால் அலியுமல்லன் தானே. :-)

    ReplyDelete
  38. மண்மகளுக்கு எப்படியோ எனக்குத் தெரியாது ஆனால் இந்தத் தொடரைப் பார்க்க வசதியான இருக்கை எனக்கு இருக்கு. பின்னூட்டம் போடவும் நல்ல இருக்கை இருக்கு. :-)

    ReplyDelete
  39. //யோசித்துப் பார்த்தால் ஆசனங்களில் அமர்ந்திருப்பவர்கள் எல்லோரும் ஆண்கள்தான்! :) அதனால்தான் இயக்குனர் என்ன செய்வதென்று தெரியாமல் மண்மகளை அம்போவென்று விட்டு விட்டாரோ?

    //

    ராதிகா தயாரிப்பிலும் இப்படி. என்ன செய்வது?

    ReplyDelete