Friday, May 16, 2008

கொங்கு

கொங்கு நாட்டுக்காரங்க எத்தன பேர் இருக்கீங்க வலைப்பூக்கள்ள? ரொம்பப் பேரு. கொங்கு வட்டாரச் சொற்களும் சொலவடைகள்ளாம் நிறைய தெரிஞ்சிக்கிட்டோமே. சரி. கொங்குன்னா என்னன்னு தெரியுமா? தெரிஞ்சவங்க கை தூக்குங்க. தூக்கியாச்சா? இப்ப கொங்குன்னா என்னன்னு பாக்கலாம். நீங்க நெனச்சதும் நான் சொல்றதும் சரியாயிருந்துச்சுன்னா ஒங்க முதுகுல நீங்களே பாராட்டுதலா தட்டிக்கிருங்க. சரியா?

அதுக்கு முன்னாடி இலக்கியத்துல எங்கெல்லாம் கொம்பு..இல்லயில்ல..கொங்கு வருதுன்னு பாப்போமா? மொதல்ல எல்லாருக்கும் தெரிஞ்ச திருவிளையாடல் படத்துல வர்ர பாட்டு வரிகளப் பாப்போமா? "கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி" இந்தப் பாட்டத்தான் இறையனார் எழுதிக்குடுக்க தருமி வாங்கீட்டுப் போய் வம்புல மாட்டிக்கிட்டது.

தலைவன் பாடுறானாம். அதுவும் தும்பியைப் பாத்து. அதனால்தான் பாட்டு இப்படித் தொடங்குது. இதுக்குப் பொருள் மொதல்ல பாக்கலாம். அதென்ன கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி? தும்பி தெரியும். பறக்குமே. தும்பி என்ன இறையாகச் சாப்பிட்டு வாழும்? தேனைத்தானே!

அப்படியே ஜிங்குன்னு பறந்து போய் மலர்ல உக்காந்து கிட்டு தேன்குடத்துல லேசா ஒரு ஓட்டையப் போட்டு தேனைக் குடிக்கிறப்போ மலர்கள்ள இருக்குற மகரந்தப் பொடியும் அந்தத் தேன் குடத்துலயும் தும்பியோட வாயிலையும் விழுமாம். அப்படித் தேனையும் மகரந்தத்தையும் கொழப்பித்தான் இறையாத் திங்குதாம் தும்பி. இங்க தேன் என்றால் சிறிலோட வலைப்பூவென்றோ மகரந்தம் என்றால் என்னுடைய வலைப்பூவென்றோ எடுத்துக் கொள்ளக் கூடாது! :-)

அரிசிதான் பலருக்குச் சாப்பாடு. அதுக்காக எந்த அரிசியுமா திங்க முடியுது. கேரளா அரிசி ரொம்பப் பெருசு. கர்நாடகா அரிசி ரொம்பக் கொழையுது. ஆந்திரா அரிசி அம்சமா இருக்குன்னு தேர்ச்சி பண்ணித் திங்கதுண்டுதானே. அப்படிச் சாப்பிடுறவங்கள்ளாம் "அரிசி தேர் வாழ்க்கை அஞ்சிறை மனிதன்". புரிஞ்சதுங்களா? இப்ப கொங்கு தேர் வாழ்க்கைக்கு என்ன பொருள்? தேன் என்றும் சொல்லலாம். மகரந்தம்னும் பொருள் சொல்லலாம். இரண்டையுமே எடுத்துக்கிட்டிருக்காங்க. மகரந்தம் நறுமணம் மிகுந்ததால கொங்குங்குறதுக்குப் பண்பாகுபெயரா நறுமணம்னும் பொருள் சொல்லுவாங்க. ஆனா மகரந்தந்தான் மிகப் பொருத்தமானது. அதுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு பாக்கலாமா? சிலப்பதிகாரத்தைத் தொடுவோம். அதுவும் மொதப் பாட்டே.

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று
இவ்வங்கண் உலகளித்தலான்


முழுப் பொருளையும் இப்பப் பாக்க வேண்டாம். கொங்க மட்டும் பார்க்கலாம். "கொங்கு அலர் தார்"னா என்ன? தார்னா மாலை. அலர்னா மல்ர். ஆக அலர் தார்னா மலர்மாலை. கொங்கு? அந்த மாலையில இருந்த மலர்கல் எல்லாம் இளம் மலர்களாம். அதுனால மகரந்தம் நிரம்பித் ததும்பித் ததும்பி வழிந்து மணம் பரப்புச்சாம். இப்ப கொங்குக்குப் பொருள் தெரிஞ்சதா? எத்தனை பேர் சரியா நினைச்சீங்க?

அன்புடன்,
கோ.இராகவன்

5 comments:

  1. இந்த இடுகை நண்பர் இராகவனால் 'சொல் ஒரு சொல்' பதிவில் 25 நவம்பர் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

    27 கருத்துக்கள்:

    அனுசுயா said...
    //தேன் என்றும் சொல்லலாம். மகரந்தம்னும் பொருள் சொல்லலாம்//

    இத்தன நாள் கொங்கு நாட்டுலயிருந்துகிட்டு அத பத்தி ‍யோசிக்காமயே இருந்துட்டேன். நல்ல விளக்கம் தந்ததற்கு நன்றி.

    November 25, 2006 2:57 AM
    --

    ILA(a)இளா said...
    இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலைங்க. ஆனா நல்ல விளக்கம் சொல்லி இருக்கீங்க, கொங்கு அப்படிங்கிறதுக்கு விளக்கம் சொன்ன ஜி.ரா அவர்களுக்கு விவசாயி சார்பாக் நன்றி

    November 25, 2006 3:38 AM
    --

    குமரன் (Kumaran) said...
    நான் கையைத் தூக்கினேன். முதுகுல பாராட்டா தட்டிக்கிட்டேன். :-)

    எழுத்துப் பிழையார் இல்லாத குறையை நான் தீர்க்கிறேன். 'தும்பி என்ன இறையாகச் சாப்பிட்டு வாழும்?'. இரை என்பதை ஏன் இறையாக்கினீர் செஞ்சொற்பொற்கொல்லரே? காசே தான் கடவுள் எனச் சொல்லக் கேள்விபட்டுள்ளேன். நீர் சோறு தான் கடவுள் என்பீர்கள் போலிருக்கிறதே. :-)

    November 25, 2006 6:20 AM
    --

    வல்லிசிம்ஹன் said...
    கொங்கு என்றால் தேனா.
    திருவிளையாடல் படம் பார்க்கும்போதெல்லாம் சிவாஜி இந்தப் பாட்டை படபடவ்வென்று சொல்லுவாரா,,
    நமக்குப் புரியாது.
    ராகவன் விளக்கம் சொல்லவே இப்போ புரிஞ்சுது,. இப்பவாவது புரிஞ்சுதே.:-)

    November 25, 2006 6:37 AM
    --

    மங்கை said...
    எங்க ஊர் பேருக்கு விளக்கம் சொன்ன ராகவனுக்கு ஆய்ரம் பொற்காசுகள்.:-))

    November 25, 2006 11:00 AM
    --

    நாமக்கல் சிபி said...
    சூப்பர்...

    இந்த மாதிரி பதிவு அடிக்கடி கொடுத்தால் மிக்க மகிழ்வோம்...

    November 25, 2006 1:01 PM
    ---

    kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    தேன் போல இனிக்க இனிக்கப் பேசும் கொங்கு நாட்டுக்காரர்களே என்று நல்லா வெளிப்படையாவே மனம் திறந்து பாராட்டுங்கள் ஜிரா! :-)

    //அரிசி தேர் வாழ்க்கை அஞ்சிறை மனிதன்//
    அதானே, எந்தக் கடையில நீ அரிசி வாங்குறே ன்னு கேக்கறவன், மாநிலத்துக்கு மாநிலம் அரிசி ஆராய்ச்சி செய்ய மாட்டானா என்ன? :-)

    November 25, 2006 1:26 PM
    --

    குறும்பன் said...
    //நான் கையைத் தூக்கினேன். முதுகுல பாராட்டா தட்டிக்கிட்டேன். :-) //

    நானும் தான் :-)))

    கொங்கு என்றால் குதிரை, வாசனை என்றும் பொருள் உண்டு.

    November 25, 2006 7:03 PM
    --

    SK said...
    மணம், வாசனை என்னும் பொருளே பொருத்தமாகப் படுகிறது.

    அதுசரி, கொங்கு நாட்டுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது?
    சற்று விளக்க முடியுமா?

    November 25, 2006 10:07 PM
    --

    ஜெயஸ்ரீ said...
    அருமையான சொல்லைத் தேர்ந்தெடுத்திருக்கிறிர்கள் ராகவன்.

    கொங்கு என்ற சொல்லுக்கு தேன், மகரந்தம், நறுமணம், கள், ஒருவிதமான சுரைக்காய் போன்ற பொருள் கள் உண்டு. ஆனால் அதிகம் பாவிக்கப்படுவது மகரந்தம், தேன் மற்றும் நறுமணம் என்ற பொருளில்தான்.

    இந்தத் தேவாரப் பாடல் வரிகளைப் பாருங்கள்

    கொங்குலவு கொன்றைச் சடையான் குணம்பரவிப்
    - மாணிக்கவாசகர்
    இங்கு கொங்கு - தேன் , மகரந்தம் என இரண்டு விதமாகவும் பொருள் கொள்லலாம்

    கொங்கு லாம்பொழிற் கோடிகா வாவென
    எங்கி லாததோர் இன்பம்வந் தெய்துமே

    கொங்குலாம் பொழில் - நறுமணம் சூழ்ந்த சோலைகள்

    கொங்குவார் மலர்க்கண்ணிக் குற்றா லன்காண்
    கொங்குவார் மலர் - தேன் ஒழுகும் மலர்

    கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே - அபிராமி அந்தாதி -
    மகரந்தம் செறிந்த பூக்களையுடைய குழல்

    கொங்கு முதிர் முண்டகத்து - குறுந்தொகை
    தேன் (அல்லது) மகரந்தம் நிறைந்த தாமரை


    இந்தப் பெரியாழ் வார் திருமொழியில் கண்ணன் திரிந்து விளையாடும் இடங்களில் முதலாவதாக கொங்கு நாட்டை சொல்லியிருக்கிறார்

    கொங்குங்குடந்தையும் கோட்டியூரும்பேரும்
    எங்கும்திரிந்து விளையாடும்என்மகன்
    சங்கம்பிடிக்கும் தடக்கைக்குத்தக்க நல்
    அங்கமுடையதோர்கோல்கொண்டுவா
    அரக்குவழித்ததோர்கோல்கொண்டுவா.

    December 01, 2006 1:00 PM
    ===

    வெற்றி said...
    இராகவன்,
    உங்களின் இப் பதிவின் மூலமும் இப் பதிவுக்கான மற்றையவர்களின் பின்னூட்டங்களின் மூலமும் மிகவும் பயனடைந்தேன். மிக்க நன்றி. தொடரட்டும் உங்களின் தமிழ்ப்பணி.

    நன்றி.

    December 01, 2006 4:03 PM
    ---

    சிறில் அலெக்ஸ் said...
    இப்படி ஒரு சூப்பர் பதிவப் போட்டு அதுல ஒரு 'வரி'விளம்பரம் எனக்குத் தந்ததுக்கு நன்றி. நம்ம பதிவுகளுக்குள்ள இப்படி ஒரு தொடர்பிருக்கிறத இப்பத்தான் உணர்ந்தேன்.

    அடுத்து 'நாஞ்சில்'னா என்னண்ணு சொல்லுங்க.

    :)

    December 01, 2006 7:59 PM
    --

    குமரன் (Kumaran) said...
    சிறில், நாஞ்சில்ன்னா... நாஞ்சில்ன்னா... நாஞ்சில்ன்னா.... எனக்குத் தெரியும். ஆனா இராகவன் வந்தே சொல்லட்டும். :-)

    December 01, 2006 9:03 PM
    ---

    இலவசக்கொத்தனார் said...
    இவ்வளவு மேட்டர் இருக்கா. சரிதான். நல்ல தெரியாத மேட்டரைத்தான் சொல்லி இருக்கீங்க.

    December 01, 2006 9:17 PM
    ---

    அருட்பெருங்கோ said...
    ம்ம்ம்... உங்கப் பதிவும் கொங்கு மாதிரிதான் இருக்கு :)

    December 01, 2006 9:42 PM
    ---

    அருட்பெருங்கோ said...
    ம்ம்ம்... உங்கப் பதிவும் கொங்கு மாதிரிதான் இருக்கு :)

    December 01, 2006 9:42 PM
    ---

    ஜெயஸ்ரீ said...
    http://en.wikipedia.org/wiki/Kongu_Nadu

    December 02, 2006 9:00 AM
    ---

    ரவிசங்கர் said...
    உங்க வலைப்பதிவ என் கூகுள் ரீடரில் சேர்த்து இருக்கிறேன். பிடித்த இடுகைகளை பொதுப் பார்வைக்கும் வைக்க இருக்கிறேன். எனக்குத் தெரிந்ந பயனுள்ள வலைப்பதிவுகளில் உங்களுடையதும் ஒன்று. தொடர்ந்து எழுதுங்கள்.

    December 08, 2006 3:58 PM
    --

    G.Ragavan said...
    // அனுசுயா said...
    இத்தன நாள் கொங்கு நாட்டுலயிருந்துகிட்டு அத பத்தி ‍யோசிக்காமயே இருந்துட்டேன். நல்ல விளக்கம் தந்ததற்கு நன்றி. //

    அப்ப அனுசுயா இனிமே கொங்கு நாட்டுல போய் ஒவ்வொருத்தர் கிட்டயும் கொங்குன்னா என்னன்னு தெரியுமான்னு நீங்க போட்டிக்குக் கூப்பிடலாம். :-)

    // ILA(a)இளா said...
    இதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலைங்க. ஆனா நல்ல விளக்கம் சொல்லி இருக்கீங்க, கொங்கு அப்படிங்கிறதுக்கு விளக்கம் சொன்ன ஜி.ரா அவர்களுக்கு விவசாயி சார்பாக் நன்றி //

    நன்றி விவசாயி. ஒங்கூரு பத்துன பதிவு வழியா நீங்க நம்ம வலைப்பூவுக்கு வந்துட்டீங்க பாத்தீங்களா!

    // மங்கை said...
    எங்க ஊர் பேருக்கு விளக்கம் சொன்ன ராகவனுக்கு ஆய்ரம் பொற்காசுகள்.:-)) //

    எங்க எங்க? மொதல்ல அந்த பேங்க்காரன் கடனத் தீக்கனும்.

    December 08, 2006 10:18 PM
    ---

    G.Ragavan said...
    // குமரன் (Kumaran) said...
    நான் கையைத் தூக்கினேன். முதுகுல பாராட்டா தட்டிக்கிட்டேன். :-) //

    என்னது முதுகுல பரோட்டா தட்டிக்கிட்டீங்களா!!!!!!!! :-)

    // எழுத்துப் பிழையார் இல்லாத குறையை நான் தீர்க்கிறேன். 'தும்பி என்ன இறையாகச் சாப்பிட்டு வாழும்?'. இரை என்பதை ஏன் இறையாக்கினீர் செஞ்சொற்பொற்கொல்லரே? காசே தான் கடவுள் எனச் சொல்லக் கேள்விபட்டுள்ளேன். நீர் சோறு தான் கடவுள் என்பீர்கள் போலிருக்கிறதே. :-) //

    ஹி ஹி...அது தப்பு நடந்து போச்சுங்க. ஆனாலும் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரேன்னு சொல்றாங்களே. உயிர் கொடுப்பது கடவுள்னா...உண்டி கொடுப்பதும் கடவுள்தானே! (அப்பா பண்ற தப்பையும் செஞ்சிட்டு எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு....)

    // வல்லிசிம்ஹன் said...
    கொங்கு என்றால் தேனா.
    திருவிளையாடல் படம் பார்க்கும்போதெல்லாம் சிவாஜி இந்தப் பாட்டை படபடவ்வென்று சொல்லுவாரா,,
    நமக்குப் புரியாது.
    ராகவன் விளக்கம் சொல்லவே இப்போ புரிஞ்சுது,. இப்பவாவது புரிஞ்சுதே.:-) //

    வல்லி, நீங்களுமா!

    December 08, 2006 10:22 PM
    ---

    G.Ragavan said...
    // வெட்டிப்பயல் said...
    சூப்பர்...

    இந்த மாதிரி பதிவு அடிக்கடி கொடுத்தால் மிக்க மகிழ்வோம்... //

    கொடுப்போம். கொடுப்போம். நீர் மகிழ்வீர். மகிழ்வீர்.

    // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    தேன் போல இனிக்க இனிக்கப் பேசும் கொங்கு நாட்டுக்காரர்களே என்று நல்லா வெளிப்படையாவே மனம் திறந்து பாராட்டுங்கள் ஜிரா! :-) //

    ம்ம்ம்ம்....அது வந்து...அது வந்து...அது வந்து.....

    ////அரிசி தேர் வாழ்க்கை அஞ்சிறை மனிதன்//
    அதானே, எந்தக் கடையில நீ அரிசி வாங்குறே ன்னு கேக்கறவன், மாநிலத்துக்கு மாநிலம் அரிசி ஆராய்ச்சி செய்ய மாட்டானா என்ன? :-) //

    கண்டிப்பா....அதுலயும் பொன்னியா, நயமா, பச்சரியா, புழுங்கரிசியா....இல்ல கர்நாடகா ஸ்டைல்ல பாதி புழுக்கியதா...வெள்ளையா..சிவப்பா...முழுசா..ஒடச்சதா....கல் பொறுக்குனதா..பொறுக்காததா...கைக்குத்தலா மிஷின் பாலீஷா...என்னென்னவோ இருக்கு ரவி.

    December 08, 2006 10:24 PM
    --

    G.Ragavan said...
    // குறும்பன் said...
    //நான் கையைத் தூக்கினேன். முதுகுல பாராட்டா தட்டிக்கிட்டேன். :-) //

    நானும் தான் :-))) //

    சூப்பருங்க. பாராட்டுகள். முதுகக் காட்டுங்க. நானும் பரோட்டா...இல்ல இல்ல பாராட்டா தட்டுறேன்.

    // கொங்கு என்றால் குதிரை, வாசனை என்றும் பொருள் உண்டு. //

    ஆமாம். ஆனால் பெரும்பாலும் தேன், மகரந்தம், நறுமணம் ஆகியவைகளே எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அதைத்தான் ஜெயஸ்ரீ கீழே குடுத்திருக்கிறார்.

    // SK said...
    மணம், வாசனை என்னும் பொருளே பொருத்தமாகப் படுகிறது.

    அதுசரி, கொங்கு நாட்டுக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது?
    சற்று விளக்க முடியுமா? //

    நிலவளமும் நீர்வளமும் பெருகிப் பசிந்து மலர் வ்ந்டித்துத் தாது கமழும் நாடு என்பதால் அப்பெயர்.

    December 08, 2006 10:36 PM
    --

    G.Ragavan said...
    // ஜெயஸ்ரீ said...
    அருமையான சொல்லைத் தேர்ந்தெடுத்திருக்கிறிர்கள் ராகவன்.

    இந்தத் தேவாரப் பாடல் வரிகளைப் பாருங்கள்


    இந்தப் பெரியாழ் வார் திருமொழியில் கண்ணன் திரிந்து விளையாடும் இடங்களில் முதலாவதாக கொங்கு நாட்டை சொல்லியிருக்கிறார் //

    ஆகா....அருமையான செய்யுட்களை எடுத்துகாட்டி பேச்சில்லாமல் போகச் செய்து விட்டீர்கள் ஜெயஸ்ரீ. படிக்க இன்னும் எவ்வளவோ இருக்கிறது.

    December 08, 2006 10:39 PM
    --

    கோபிநாத் said...
    இராகவன் சார்,
    அருமையான பதிவு..
    திருவிளையாடல் படம் பார்க்கும் போது இப்படி ஒரு அருமையான கருத்து உள்ளது என்று தொரியாது. இப்போது தான் புரிந்தது.

    நன்றி...நன்றி...

    December 14, 2006 2:59 PM
    --

    johan-paris said...
    ராகவா!
    திருவிளையாடல் படத்தில் காட்சியில் இச்சம்பவம் வந்தாலும்; அதற்கு இவ்வளவு விளக்கம் இருக்குதென்பது தெரியவில்லை.
    அப்போ கொங்குநாட்டுத் தமிழ் தேன் என்கிறீர்கள்!!!
    யோகன் பாரிஸ்

    December 14, 2006 4:25 PM
    --

    G.Ragavan said...
    // கோபிநாத் said...
    இராகவன் சார்,
    அருமையான பதிவு..
    திருவிளையாடல் படம் பார்க்கும் போது இப்படி ஒரு அருமையான கருத்து உள்ளது என்று தொரியாது. இப்போது தான் புரிந்தது.

    நன்றி...நன்றி... //

    கோபிநாத், இப்ப தெரிஞ்சிருச்சு பாத்தீங்களா? அந்தப் படம் எப்ப வந்தது? 66,67ன்னு நெனைக்கிறேன். ஆனா இன்னைக்கும் ஒரு பிரபலமான படமா இருக்குது. கிட்டத்தட்ட நாப்பது வருடங்கள் கழிச்சும். அந்தப் படத்துல இன்னும் சில சங்கப்பாடல்கள் எல்லாம் வசனமா வரும். "அங்கம் புளுதி பட அரிவாளில் நெய் பூசி, பங்கப் பட இரண்டு கால் பரப்பி சங்கதனைக் கீர் கீர் என்று அரியும் நக்கீரன்" அப்படீங்குற பாட்டும் வரும்.


    // johan-paris said...
    ராகவா!
    திருவிளையாடல் படத்தில் காட்சியில் இச்சம்பவம் வந்தாலும்; அதற்கு இவ்வளவு விளக்கம் இருக்குதென்பது தெரியவில்லை.
    அப்போ கொங்குநாட்டுத் தமிழ் தேன் என்கிறீர்கள்!!!
    யோகன் பாரிஸ் //

    பொதுவாகவே ஏ.பி.நாகராஜன் படங்களில் தமிழ்ச் செய்யுட்களை மிகவும் அழகாகப் பயன்படுத்தியிருப்பார். மிகச் சிறப்பாக. அதே போல ஔவையார் படத்தில் நல்ல பாக்கள் கிடைக்கும். தெனாலிராமன் என்ற படம். கருணாநிதி அவர்கள் வசனம். அதிலும் நல்ல செய்யுட் பொருள் வசங்களும் கிடைக்கும். தேடித் தேடித்தான் வண்டுகளுக்குக் கொங்கு கிடைக்கிறது. :-)

    கொங்கு நாடு மலைவளம் மிகுந்த நாடு என்பதைக் குறிக்க இப்படிச் சொல்லப்பட்டது.

    December 14, 2006 10:50 PM
    --

    குமரன் (Kumaran) said...
    நன்றி இரவிசங்கர்.

    December 20, 2006 11:57 AM

    ReplyDelete
  2. அருமையான பதிவு. நன்றி, குமரன், ராகவன்! :)

    குமரா, செஞ்சொற்பொற்கொல்லரை நீங்க தாக்கியதையும் அவர் சமாளித்ததையும் ரசித்தேன் :)

    ReplyDelete
  3. இன்னும் பாருங்க கவிநயா அக்கா அவரும் இறையை இரையாக மாற்றவில்லை; நானும் மறுபதிவு செய்யும் போது மாற்றவில்லை. இறைவனுக்கு இரையாக நாம் இருக்கலாம்; நமக்கு இறை இரையாவதா என்ற தயக்கமோ?

    ReplyDelete
  4. வாழ்க ராகவன். 2006 ல படிக்கலை. இப்ப படிச்சேன். நல்ல விளக்கம்

    ReplyDelete
  5. நானும் வாழ்க இராகவன்னு வாழ்த்திக்கிறேன் சின்ன அம்மணி.

    ReplyDelete