வண்டி உருண்டோட அச்சாணி தேவைன்னு பாட்டு இருக்கு. ஆனா அச்சாணி மட்டும் போதுமா? அதவிடத் தேவையானது எது? அதாங்க சக்கரம். அச்சாணி இல்லாம வண்டி கொஞ்ச தொலையாவது ஓடும். ஆனா அச்சாணி இருந்து சக்கரமில்லாட்டி? வண்டிச்சக்கரம்னு சிவகுமாரும் சரிதாவும் நடிச்சு ஒரு படம் வந்தது. அதுலதாங்க தமிழர் உள்ளங் கொண்ட சிலுக்கு சுமிதா அறிமுகமானாங்க. "வா மச்சாம் வா வண்ணாரப்பேட்ட! சிலுக்கோட கையால வாங்கிக் குடி"ங்குற தீந்தமிழ்ப் பாட்டு இருக்கு.
இந்தச் சக்கரம் எப்படியெல்லாம் பயன்படுது பாருங்க...எதெல்லாம் சுத்துதோ அதோட எல்லாம் வரும். வாழ்க்கைச் சக்கரம்னு ஒரு திரைப்படம் கூட இருக்கு. சக்கரத்தாழ்வார்னு ஒரு சாமி இருக்கு. மதுரைக்குப் பக்கத்துல திருமாலிருஞ்சோலைக்குப் (பழைய பழமுதிர்ச்சோலை) போனீங்கன்னா அங்க சக்கரத்தாழ்வாருக்கு ஒரு சின்னக் கோயில் இருக்கு. அங்க இருக்குற ஐயரு "எட்டெட்டும் பதினாறு கைகள். பதினாறு கைகளிலும் பதினாறு வித ஆயுதங்கள்" அப்படீன்னு விளக்கம் சொல்வாரு. போன தடவ போனப்போ கேட்டேனே!
காலச்சக்கரம்னும் சொல்ற வழக்கம் உண்டே. மகாபாரதம் தொடர் பாத்தவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். ஒரு சக்கரம் அப்பப்ப வந்து சுத்திக்கிட்டே கதை சொல்லும். விளக்கம் சொல்லும். அதுதான் காலச்சக்கரம். காலம் நிக்காம சுத்திக்கிட்டேயிருந்து உலகத்த நடத்துதுன்னு சொல்ல அப்படிக் காட்டுவாங்க.
வேறெங்க சக்கரம் இருக்கு? அசோகச் சக்கரம். நம்ம நாட்டுக் கொடியில ஊதா நிறத்துல நடுவுல 24 ஆரங்களோட இருக்குதே. அதுவும் காலங் காட்டும் குறியீடுதான்.
இன்னொரு எடத்துலயும் சக்கரம் இருக்கு. களிமண்ண வெட்டியெடுத்துக் கொழச்சு சக்கரத்தச் சுத்த விட்டு நடுவுல மண்ண வெச்சி பான சட்டி செய்யுறதுக்கும் சக்கரம் பயன்படுது. மைக்ரோவேவ் அவன் வெச்சிருக்கீங்களா? அதுக்குள்ள ஒரு சக்கரம். பிலிம் ரோல் சுக்தி வெக்கிற சக்கரம்.
இன்னும் நெறைய இருக்கு. இந்தச் சக்கரம் தமிழா? வடமொழியில் இருந்து வந்ததுன்னு நெனைக்கிறேன். பழைய தமிழ் நூல்களில் வேறொரு சொல் பயன்படுத்தப்பட்டிருக்கு. அதத்தான் இன்னைக்கு அறிமுகப்படுத்தப் போறேன். மேலே நம்ம பாத்த அத்தனைக்கும் இந்தச் சொல்தான் பயன்படுத்தப்பட்டது. அந்தச் சொல்தான் "திகிரி!"
இலக்கியத்துல இது இருக்குதா? சட்டுன்னு நினைவுக்கு வர்ரது திருப்புகழ்தான். முத்தைத் தரு பத்தித் திருநகை திருப்புகழ் எல்லாருக்கும் தெரியும். அதுல் இப்பிடி வரும். "பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக".
வட்ட வடிவமானவை திகிரி. இங்கு சூரியனும் திகிரிதான். அதுவும் எப்படி? பட்டப்பகல் வட்டத் திகிரி. திகிரின்னா சக்கரம்னு சொன்னேன். பட்டப்பகல்னா பெருவெளிச்சம். பெருவெளிச்சந்தரும் வட்ட வடிவச் சக்கரந்தான் பட்டப்பகல் வட்டத் திகிரி. எப்படி பேரு வெச்சிருக்காரு பாத்தீங்களா அருணகிரிநாதரு.
வைணவத்துலயும் திகிரிதான். திருமாலின் திருக்கரத்தில் திருவீற்றிருக்கும் திருக்கருவியும் திகிரிதான்.
இதுக்கும் பழையது ஒன்னு இருக்கு. சிலப்பதிகாரந்தான். வஞ்சிக் காண்டத்துல இப்பிடி வருது. ஒம்பது அரசர்கள் சோழன் கிள்ளி வளவனச் சண்ட பிடிக்க வர்ராங்க. அப்ப அவரோட மச்சினரு சேரன் செங்குட்டுவன் உதவிக்கு வந்து அந்த ஒம்பது அரசர்களை ஒரு பகற்பொழுதில் அழிச்சான். (இந்தக் கதையும் ரொம்பச் சுவையானது. வேறொரு பொழுது பார்ப்போம்.) அதச் சொல்றப்போ இப்படி ஒரு வரியப் போடுறாரு நம்ம இளங்கோ.
ஒன்பது குடையும் ஒரு பகலொழித்தவன்
பொன்புனை திகிரி ஒருவழிப்படுத்தோய் (அப்பயே ஒருவழிப்பாதைய ஏற்படுத்துனவன் தமிழன் ஹா ஹா ஹா)
இப்பிடி எக்கச்சக்கமாப் பயன்படுத்தப்பட்ட திகிரிங்குற சொல் இன்னைக்குப் பயன்பாட்டுல இல்ல. இனிமே சக்கரத்துக்குப் பதிலா பஸ் திகிரி, சைக்கிள் திகிரின்னு சொல்லச் சொல்லலை. ஆனா இப்படி ஒரு சொல் இருந்தது. அது செழிப்பாப் பயன்படுத்தப்பட்டதுன்னு எல்லாரும் நினைவுல வெச்சுக்கனும். அதுதான் என்னோட வேண்டுகோள். மறந்தது மறைந்ததுன்னு தெரிஞ்சிக்கிட்டு மறக்காம மறையவிடாம காப்பாத்தனும். அவ்வளவுதாங்க.
என்னோட அறிவுக்கு எட்டியத் சொல்லீட்டேன். இனிமே இராம.கி, எஸ்.கே, யோகன் ஐயா, குமரன் போன்றோர் வந்து நெறைய விவரங்களத் தரனமுன்னு கேட்டுக்கிறேன். விவரந் தெரிஞ்ச யாரும் வந்து சொல்லலாம். ரொம்ப நன்றியாப் போகும்.
அன்புடன்,
கோ.இராகவன்
இந்த இடுகை நண்பர் இராகவனால் 'சொல் ஒரு சொல்' பதிவில் 27 ஆகஸ்ட் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
ReplyDelete62 கருத்துக்கள்:
குமரன் (Kumaran) said...
மிக நல்ல சொல் இராகவன். நன்கு தெரிந்த சொல். திகிரி என்ற சொல்லுடன் சக்கரமும் பலமுறை ஆழ்வார் பாசுரங்களில் படித்திருக்கிறேன்.
திருமாலிருஞ்சோலை என்ற பெயர் மிகப் பழைய சங்கப் பாடல்களிலும் வருவதாக உணர்கிறேன்.
August 27, 2006 7:14 AM
--
ஜெயஸ்ரீ said...
நல்லதொரு சொல் ராகவன்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம்திரி தலான்.
- சிலப்பதிகாரம் மங்கல வாழ்த்து
August 27, 2006 7:38 AM
--
ஜெயஸ்ரீ said...
திகிரி என்ற சொல் அடிப்படையில் வட்ட உருவத்தைக் குறிக்கிறது.
1. சக்கரம்
2. குயவர்கள் மண்பாண்டம் செய்யப் பயன்படும் சக்கரம்
3. சக்கராயுதம்
4. மன்னனின் ஆட்சி
5. கதிரவன்
6. தேர்
7. மூங்கில்
8. மலை
போன்ற பல பொருள்களில் இந்த சொல் பயன்பாட்டில் உள்ளது
August 27, 2006 8:01 AM
--
G.Ragavan said...
// குமரன் (Kumaran) said...
மிக நல்ல சொல் இராகவன். நன்கு தெரிந்த சொல். திகிரி என்ற சொல்லுடன் சக்கரமும் பலமுறை ஆழ்வார் பாசுரங்களில் படித்திருக்கிறேன். //
ஆழ்வார்ப் பாசுரங்களில் இரண்டும் பயின்றிருக்கக் கண்டிருக்கிறேன். ஆனால் பழைய தமிழ் நூல்களில் திகிரியைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். சிலப்பதிகாரத்தின் கடவுள் வாழ்த்திலேயே காணலாம். காவிரி நாடன் திகிரி போல் பொன்கோட்டு வலம் வருதலால்-னு வருதே. மற்ற பல நூல்களிலும் அப்படித்தான்னு நெனைக்கிறேன்.
// திருமாலிருஞ்சோலை என்ற பெயர் மிகப் பழைய சங்கப் பாடல்களிலும் வருவதாக உணர்கிறேன். //
எந்த நூலில் குமரன். சொன்னால் தெரிந்து கொள்கிறேன்.
August 27, 2006 8:43 AM
--
இலவசக்கொத்தனார் said...
திகிரி - இந்த சொல் கேள்விப்பட்டதில்லை. தந்தமைக்கு நன்றி.
ஒரு சந்தேகம் (அது இல்லாமலேயா!)
ஜெயஸ்ரீ அவர்களின் உதாரணங்கள் படி இது வெறும் சக்கரத்தைக் குறிப்பது இல்லை என தெளிவாகிறது.
ஆங்கிலத்தில் வரும் round என்ற பொருளுக்கு மட்டும் இது சமமா அல்லது sphereக்கும் வருமா?
August 27, 2006 8:57 AM
--
இலவசக்கொத்தனார் said...
ஜெயஸ்ரீ,
ரொம்ப நாள் கழிச்சு!!!! நல்லா இருக்கீங்களா?
August 27, 2006 8:58 AM
--
G.Ragavan said...
// ஜெயஸ்ரீ said...
நல்லதொரு சொல் ராகவன்
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம்திரி தலான்.
- சிலப்பதிகாரம் மங்கல வாழ்த்து //
மிகச் சரியாகச் சொன்னீர்கள் ஜெயஸ்ரீ. இதைத்தான் குமரனிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். நீங்களும் சொல்லி விட்டீர்கள்.
August 27, 2006 8:59 AM
--
G.Ragavan said...
// திகிரி என்ற சொல் அடிப்படையில் வட்ட உருவத்தைக் குறிக்கிறது.
1. சக்கரம்
2. குயவர்கள் மண்பாண்டம் செய்யப் பயன்படும் சக்கரம்
3. சக்கராயுதம்
4. மன்னனின் ஆட்சி
5. கதிரவன்
6. தேர்
7. மூங்கில்
8. மலை
போன்ற பல பொருள்களில் இந்த சொல் பயன்பாட்டில் உள்ளது //
அருமையாக வரிசைப் படுத்தி விட்டீர்கள். வட்டமான சுற்றுந்தன்மையுள்ளவைகளோடு தொடர்புடைய ஆகுபெயர்களாகவே மற்ற பொருட்களிலும் வருகிறது என நினைக்கிறேன்.
August 27, 2006 9:00 AM
--
சுல்தான் said...
சக்கரம் என்ற சொல்லுக்கு திகிரி என்பது பழந்தமிழ்ச்சொல் - புதிய தகவல். நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்தினால் பழக்கத்தில் வந்து விடும். விடுமா?!
நான் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது என் தமிழாசிரியர் தமிழ்மணி என்கிற இராமசாமி ஐயா, நிறைய நேரடி தமிழ்ச் சொற்களை எங்களுக்குச் சொல்லித் தந்தார். சைக்கிள் - ஈருருளி, பேனா - ஊற்றெழுதி, பால்பாயிண்ட் பேனா - மையெழுதி, பென்சில் -எழுதுகோல், சாக்பீஸ் - சுதைக்கட்டி, ஆக்ஸிஜன் - உயிர் வளி முதலியன. அவருடைய வகுப்பு நேரத்தில் இந்த மாதிரிதான் கூற வேண்டுமென்பதில் கண்டிப்பு காட்டுவார்.
August 27, 2006 9:27 AM
--
மகேந்திரன்.பெ said...
பள்ளிக்கூடத்துல நம்ம வாத்தியார் போட்டதை திகிரின்னு சொல்லலாமா :)
August 27, 2006 12:17 PM
--
SK said...
நல்ல ஆய்வு ஜி.ரா.!
ஆனால், சற்றே மாறுபடுகிறேன்!
திகிரி எனும் சொல் வெறும் உருண்டோடும் சக்கரத்தைக் குறிப்பது அல்ல எனக் கருதுகிறேன்.
"ஆணைச் சக்கரம்"[] எனும் பொருளிலேயே அது பயன்படுத்தப் பட்டிருக்கிறது!
அதாவது, ஒரு நியதிக்குக் கட்டுப்பட்டு சுழலும், பகலவன், திருமாலின் கையில் இருக்கும் சக்கரம், காலம் போன்றவைகளைக் குறிக்கும் போது இச்சொல் பயன்படுத்தப் பட்டிருக்கிறது!
நீங்கள் குறிப்பிட்ட வஞ்சிக்காண்டப் பாடலிலும் கிள்ளிவளவனின் ஆணைச்சக்கரத்தை, ஆட்சியை நிலைநாட்டினான் என்னும் பொருளில் தான் அது வருகிறது.
மேலும் சான்றாக, நீங்கள் இவ்வளவு தூரம் சிலப்பதிகாரப் பக்கங்களைப் புரட்டாமலேயே, புகார்க்காண்ட முதல் பாடலிலேயெ இதே கருத்தில்,
"திங்களைப் போற்றுதும்" பாடலில்,
"காவிரிநாடன் திகிரி போல் பொற்கோட்டு மேரு வலம் திரிதலான்"
எனச் சொல்லியிருக்கிறார் இளங்கோ அடிகள்!
காவிரி நாடனாகிய சோழ மன்னனுடைய ஆணைச் சக்கரத்தைப் போல சூரியனும் அழகிய முகடுகளை உடைய மேரு மலையினை வலம் வந்து கொண்டிருப்பதால் அந்த ஞாயிற்றைப் போற்றுவோம் என்னும் பொருளில்.
மற்றபடி, 'சக்கரம்' என்பதற்கு, 'உருள்' என்னும் சொல்தான் வழங்கப்பட்டது எனக் கருதுகிறேன்
August 27, 2006 2:21 PM
--
ஜெயஸ்ரீ said...
கொத்ஸ்,
// ரொம்ப நாள் கழிச்சு!!!! நல்லா இருக்கீங்களா //
ஆமாங்க. கொஞ்சம் கொஞ்சம் பதிவுகளைப் படித்தாலும் பின்னூட்டம் இட முடியவில்லை.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ( ஆமா belated க்கு தமிழ்ல என்ன?)
August 27, 2006 10:22 PM
--
ஜெயஸ்ரீ said...
திகிரி என்றால் மலை என்றும் ஒரு பொருள் உண்டு.
//எட்டுநாற் கரவொ ருத்தல் மாத் திகிரி
யெட்டுமாக் குலைய ...... எறிவேலா //
இந்த திருப்புகழ் வரிகளைப் பாருங்கள். மாத்திகிரி (மா+திகிரி) எட்டும் என்பது எட்டு பெரிய மலைகளையே (குலகிரிகள் 7 + கிரவுஞ்ச மலை) குறிக்கிறது.
August 27, 2006 10:29 PM
--
துளசி கோபால் said...
புதுச் சொல்.
திகிரி
சொல்றதுக்கும் நல்லா இருக்கு.
கற்றுக்கொண்டேன்.
நன்றி.
August 27, 2006 10:46 PM
--
கைப்புள்ள said...
புதுச் சொல் ஒன்றை இன்று தெரிந்து கொண்டேன். நன்றி.
August 28, 2006 6:12 AM
--
செந்தில் குமரன் said...
நன்றீங்க உங்க புண்ணியத்துல ஒரு புது சொல்லைத் அறிந்து கொண்டேன்.(புண்ணியம் தமிழா வடமொழியா தெரியல).
August 28, 2006 7:04 AM
--
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
திகிரி, திகிரி (தகடு, தகடு போலப் படிக்கவும்) என்று பழஞ்சொல்லை கொணர்ந்த ராகவன் - நன்றி! old wine in new bottle ஓ :-)
//
"பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக".
பெருவெளிச்சந்தரும் வட்ட வடிவச் சக்கரந்தான் பட்டப்பகல் வட்டத் திகிரி.
எப்படி பேரு வெச்சிருக்காரு பாத்தீங்களா அருணகிரிநாதரு.
//
தங்கள் விளக்கம் பொருத்தம் தான் என்றாலும், இங்கே அருணகிரியார், வேறு ஒரு நிகழ்வைப் பதிவு செய்வதாகவே எண்ணுகிறேன்.
கண்ணன், தன்னுடைய வட்டத் திகிரியால் (சக்கரத்தால்), பட்டப் பகலை, சில விநாடிகளுக்கு, இரவாக (இருட்டாக) மாற்றினான். இதனால் பார்த்தன் உயிரைக் காத்தான்.
இந்த நிகழ்வு, Annular Eclipse -சூரியக் கிரகணமாகவும் பேசப்படுகிறது.
சங்க காலம் மட்டும் அல்லாது, ஆழ்வார் பாடல்கள், ஏனைச் சிற்றிலக்கியங்கள் (கலிங்கத்துப் பரணி என் நினைக்கிறேன்), ராமாயணம் என்று பல இடங்களில் "திகிரி" புழங்குகிறது.
"சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து தொல்லை
ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும்விட் டயோத்தி வந்தான்" என்று கம்பனும் பாடுகிறான்.
பாரதியார், பாரதிதாசன் பாடல்களில் "திகிரி" உள்ளதா?
தெரிந்தவர் சொன்னால், தித்திக்கும்.
August 28, 2006 10:45 AM
--
சிறில் அலெக்ஸ் said...
ரெம்ப ரெம்ப அருமையா.. வழக்கம்போல..
கலக்குறீங்க.
வாழ்த்துக்கள்.. கொஞ்சம் சின்ன பதிவா நிறைய போடுங்களேன்...
:)
August 28, 2006 12:03 PM
--
G.Ragavan said...
// இலவசக்கொத்தனார் said...
திகிரி - இந்த சொல் கேள்விப்பட்டதில்லை. தந்தமைக்கு நன்றி.
ஒரு சந்தேகம் (அது இல்லாமலேயா!)
ஜெயஸ்ரீ அவர்களின் உதாரணங்கள் படி இது வெறும் சக்கரத்தைக் குறிப்பது இல்லை என தெளிவாகிறது.
ஆங்கிலத்தில் வரும் round என்ற பொருளுக்கு மட்டும் இது சமமா அல்லது sphereக்கும் வருமா? //
கொத்ஸ், ஜெயஸ்ரீ குறிப்பிட்ட அத்தனை பொருட்களும் சரியே. முறையே. ஆனால் திகிரியின் தொடக்கப் பொருள் சுற்றத்தக்க வட்டம். நீங்கள் சொல்லும் roundதான்.
ஒரு அரசனின் ஆணைச் சக்கரம் என்று எடுத்துக் கொள்வோமே...அது எல்லா இடங்களுக்கும் சுற்றி வருவதால் திகிரி. இது செயலாகு பெயர். இப்படி ஒவ்வொன்றிற்கும் சொல்லலாம். அதே நேரத்தில் மலை என்ற சொல்லுக்கும் சில இடங்களில் திகிரி புழங்குகிறது. அது இந்தப் பொருளில் வராது என்றே நினைக்கிறேன்.
August 28, 2006 12:13 PM
--
G.Ragavan said...
// சுல்தான் said...
சக்கரம் என்ற சொல்லுக்கு திகிரி என்பது பழந்தமிழ்ச்சொல் - புதிய தகவல். நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்தினால் பழக்கத்தில் வந்து விடும். விடுமா?! //
சுல்தான், சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம். மெட்ராஸ் சென்னையான பொழுது சொல்லிச் சொல்லிப் பழகி இப்பொழுது சென்னை என்றுதான் வருகிறது. வெளிமாநிலக்காரர்களும் சென்னை என்றுதான் சொல்கிறார்கள். சொல்லச் சொல்ல எல்லாம் பழக்கத்தில் வரும். சொல்லிப் பழகத்தான் நமக்கு மனம் இருக்க வேண்டும்.
// நான் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது என் தமிழாசிரியர் தமிழ்மணி என்கிற இராமசாமி ஐயா, நிறைய நேரடி தமிழ்ச் சொற்களை எங்களுக்குச் சொல்லித் தந்தார். சைக்கிள் - ஈருருளி, பேனா - ஊற்றெழுதி, பால்பாயிண்ட் பேனா - மையெழுதி, பென்சில் -எழுதுகோல், சாக்பீஸ் - சுதைக்கட்டி, ஆக்ஸிஜன் - உயிர் வளி முதலியன. அவருடைய வகுப்பு நேரத்தில் இந்த மாதிரிதான் கூற வேண்டுமென்பதில் கண்டிப்பு காட்டுவார். //
உங்கள் ஆசிரியருக்கு எனது வணக்கங்கள்.
August 28, 2006 12:15 PM
--
G.Ragavan said...
// மகேந்திரன்.பெ said...
பள்ளிக்கூடத்துல நம்ம வாத்தியார் போட்டதை திகிரின்னு சொல்லலாமா :) //
அதே அதே சரியாப் பிடிச்சீங்க மகேந்திரன். அந்தத் திகிரியப் பாத்துட்டு வீட்டுல முதுகுல போடுறது எகிறி ஓட வைக்குமுல்ல. :-)
August 28, 2006 12:17 PM
--
G.Ragavan said...
// SK said...
நல்ல ஆய்வு ஜி.ரா.!
ஆனால், சற்றே மாறுபடுகிறேன்!
திகிரி எனும் சொல் வெறும் உருண்டோடும் சக்கரத்தைக் குறிப்பது அல்ல எனக் கருதுகிறேன்.
"ஆணைச் சக்கரம்"[] எனும் பொருளிலேயே அது பயன்படுத்தப் பட்டிருக்கிறது! //
ஆணைச் சக்கரம் என்று ஏன் சொல்ல வேண்டும்? அது எங்கும் சுற்று வரும் தன்மையது கொண்டது என்பதால்தானே.
// அதாவது, ஒரு நியதிக்குக் கட்டுப்பட்டு சுழலும், பகலவன், திருமாலின் கையில் இருக்கும் சக்கரம், காலம் போன்றவைகளைக் குறிக்கும் போது இச்சொல் பயன்படுத்தப் பட்டிருக்கிறது!
நீங்கள் குறிப்பிட்ட வஞ்சிக்காண்டப் பாடலிலும் கிள்ளிவளவனின் ஆணைச்சக்கரத்தை, ஆட்சியை நிலைநாட்டினான் என்னும் பொருளில் தான் அது வருகிறது.
மேலும் சான்றாக, நீங்கள் இவ்வளவு தூரம் சிலப்பதிகாரப் பக்கங்களைப் புரட்டாமலேயே, புகார்க்காண்ட முதல் பாடலிலேயெ இதே கருத்தில்,
"திங்களைப் போற்றுதும்" பாடலில்,
"காவிரிநாடன் திகிரி போல் பொற்கோட்டு மேரு வலம் திரிதலான்"
எனச் சொல்லியிருக்கிறார் இளங்கோ அடிகள்!
காவிரி நாடனாகிய சோழ மன்னனுடைய ஆணைச் சக்கரத்தைப் போல சூரியனும் அழகிய முகடுகளை உடைய மேரு மலையினை வலம் வந்து கொண்டிருப்பதால் அந்த ஞாயிற்றைப் போற்றுவோம் என்னும் பொருளில்.
மற்றபடி, 'சக்கரம்' என்பதற்கு, 'உருள்' என்னும் சொல்தான் வழங்கப்பட்டது எனக் கருதுகிறேன் //
திகிரியிலிருந்து சக்கரத்திற்கு வராமல் சக்கரத்திலிருந்து நான் திகிரிக்குப் போயிருக்கிறேன். உருள் என்ற சொற்புழக்கமுள்ள பாடல் வரிகள் எதுவும் காட்டுங்களேன். நானும் தெரிந்து கொள்கிறேன்.
August 28, 2006 12:20 PM
--
G.Ragavan said...
// துளசி கோபால் said...
புதுச் சொல்.
திகிரி
சொல்றதுக்கும் நல்லா இருக்கு.
கற்றுக்கொண்டேன்.
நன்றி.
August 27, 2006 10:46 PM
--
கைப்புள்ள said...
புதுச் சொல் ஒன்றை இன்று தெரிந்து கொண்டேன். நன்றி.
August 28, 2006 6:12 AM
--
குமரன் எண்ணம் said...
நன்றீங்க உங்க புண்ணியத்துல ஒரு புது சொல்லைத் அறிந்து கொண்டேன்.(புண்ணியம் தமிழா வடமொழியா தெரியல). //
துளசி டீச்சர், கைப்ஸ், குமரன் எண்ணம், இந்த பழைய சொல்லை உங்களுக்கு அறிமுகம் செஞ்சு வெச்சதுல ரொம்ப மகிழ்ச்சி. ரொம்ப லேசான சொல்தான்.
குமரன் எண்ணம், புண்ணியம் தமிழலல்ல. வடமொழிதான்.
August 28, 2006 12:23 PM
--
G.Ragavan said...
// kannabiran,Ravi Shankar (KRS) said...
திகிரி, திகிரி (தகடு, தகடு போலப் படிக்கவும்) என்று பழஞ்சொல்லை கொணர்ந்த ராகவன் - நன்றி! old wine in new bottle ஓ :-)
//
வாங்க KRS. :-)
//// "பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக".
பெருவெளிச்சந்தரும் வட்ட வடிவச் சக்கரந்தான் பட்டப்பகல் வட்டத் திகிரி.
எப்படி பேரு வெச்சிருக்காரு பாத்தீங்களா அருணகிரிநாதரு.
//
தங்கள் விளக்கம் பொருத்தம் தான் என்றாலும், இங்கே அருணகிரியார், வேறு ஒரு நிகழ்வைப் பதிவு செய்வதாகவே எண்ணுகிறேன்.
கண்ணன், தன்னுடைய வட்டத் திகிரியால் (சக்கரத்தால்), பட்டப் பகலை, சில விநாடிகளுக்கு, இரவாக (இருட்டாக) மாற்றினான். இதனால் பார்த்தன் உயிரைக் காத்தான்.
இந்த நிகழ்வு, Annular Eclipse -சூரியக் கிரகணமாகவும் பேசப்படுகிறது. //
நீங்க சொல்றது ரொம்பச் சரி. ஆனா நான் மேல் விளக்கம் மட்டும் சொல்றதுக்காக அப்படிச் சொன்னேன். SKயோட திருப்புகழ் விளக்கம் படிச்சீங்களா? அதுல அவரு ரொம்ப அழகாச் சொல்லியிருக்காரு.
// சங்க காலம் மட்டும் அல்லாது, ஆழ்வார் பாடல்கள், ஏனைச் சிற்றிலக்கியங்கள் (கலிங்கத்துப் பரணி என் நினைக்கிறேன்), ராமாயணம் என்று பல இடங்களில் "திகிரி" புழங்குகிறது.
"சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து தொல்லை
ஆலமும் மலரும் வெள்ளிப் பொருப்பும்விட் டயோத்தி வந்தான்" என்று கம்பனும் பாடுகிறான்.
பாரதியார், பாரதிதாசன் பாடல்களில் "திகிரி" உள்ளதா?
தெரிந்தவர் சொன்னால், தித்திக்கும். //
தெரியலையே...தெரிஞ்சவங்க சொல்லுங்க...தெரிஞ்சிக்கிறோம்.
August 28, 2006 12:26 PM
--
SK said...
//உருள் என்ற சொற்புழக்கமுள்ள பாடல் வரிகள் எதுவும் காட்டுங்களேன். நானும் தெரிந்து கொள்கிறேன்//
நீங்க சொன்னீங்களேன்னு ஒரு 2500 ஆண்டுகள் பின்னால் போய் வந்தேன், ஜி.ரா.!!
"உருவு கண்டு எள்ளாமை வேண்டும் "உருள்"பெருந் தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து." [667]
பிற மேற்கோள் மாலையில் இல்லம் சென்றதும்,..... வேண்டுமெனின்!
August 28, 2006 12:45 PM
--
SK said...
paripATal & paripATal tiraTTu (in tamil script, TSCII format)
... file has the verses in tamil script in TSCII-encoding ... மூன்றும்- உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே ...
http://www.infitt.org/pmadurai/mp087.html
patiRRuppattu (in tamil script, unicode format)
... patiRRuppattu. in Tamil script, unicode/utf ... நாட்டைப் படைஎடுத்துத் தழீஇ. உருள் பூங் ...
http://www.infitt.org/pmadurai/mp038.html
puRanAnURu (in tamil script, TSCII format)
puRanAnURu ( in Tamil Script, TSCII format ) புறநானூறு. Etext Preparation : Staff & Students of K.A.P. Viswanatham Higher Secondary School, Tiruchirappalli, Tamilnadu, India. Dr. C. ... This Etext file has the verses in tamil script in TSCII-encoding ... have a TSCII-conformant tamil font to view the Tamil part properly ...
http://www.infitt.org/pmadurai/mp057.html
manonmaNIyam by cuntaram piLLai (in tamil script, unicode format)
manOnmaNIyam (a poetrical play) by cuntaram piLLai (in Tamil Script, unicode format) மனோன்மணீயம். ஆசிரியர் : சுந்தரம் பிள்ளை (1855-1891) Etext Preparation and Proof-reading: Mr. ... presents the Etext in Tamil script but in Unicode encoding. To view the Tamil text correctly you need to set ...
http://bharani.dli.ernet.in/pmadurai/mp105.html
நாலாயிர திவ்விய பிரபந்தம் - முன்னுரை nAlAyirat ...
... of the wise !." - Tamil Poem in Purananuru, circa 500 ... தீதற விளங்கிய திகிரி யோனே. இச் சங்க வழியில் ...
http://www.tamilnation.org/sathyam/east/pirapantam/introduction.htm
Cilapathikaram - pukaark kaaNtam
... electronic texts of Tamil literary works and to ... ஆண்ட. ஒருதனித் திகிரி உரவோன் காணேன் ...
http://www.tamilnation.org/literature/cilapathikaram/puhar.htm
•
•
•
•
•
chooLaamaNi - part I(in tamil script, unicode format)
... the Etxt in Tamil script but in ... சங்கியல் வலம்புரி திகிரி யென்றிவை. தங்கிய ...
http://www.infitt.org/pmadurai/mp035b.html
aruNakirinAtar tiruppukaz-part 2 அருணகிரிநாதர் அருளிய ...
aruNakirinAtar aruLiya tiruppukaz. part 2, verses 331-670. அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ். இரண்டாம் பாகம், பாடல்கள் (331-670)
http://www.tamilnation.org/literature/pmunicode/mp187.htm
nAlAyira tivya pirapantam-part II / in Unicode/UTF-8
PROJECT MADURAI. Electronic Texts of Tamil Literary works in Unicode Encoding. nAlAyira tivya pirapantam- part II. verses 2032-2790. This webpage presents part 4 of nAlAyira tivya pirapantam in Tamil script. but in Unicode encoding.
http://www.infitt.org/pmadurai/mp007.html
desika prabandam - வேதாந்த தேசிகர் அருளிய தேசிக ...
... 5.54: திகிரி மழுவுயர்குந்தந்தண்டங்குசம் பொறி ...
http://www.tamilnation.org/sathyam/east/pirapantam/mp013.htm
August 28, 2006 12:55 PM
--
Anonymous said...
//உருவு கண்டு எள்ளாமை வேண்டும் "உருள்"பெருந் தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து." //
SK...
Any ulkuththu? :-)))
August 28, 2006 12:59 PM
--
SK said...
ஐயா சாமி! அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க, வராதுங்க!
ஆனால், என்னமோ அப்படி ஒரு டிஸ்கி போடலாமா எனத் தோன்றியது அக்குறளை எழுதியதும்!
சரி, நாமே போடவேண்டாமே என நினைத்து விட்டுவிட்டேன்!
அடுத்த பின்னூட்டமே இப்படி வந்தது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது!
மேலும் ஜி.ரா.வுக்கு உ.கு. கொடுக்குமளவுக்கு எங்களுக்குள் அப்படி ஒன்றும் மாறாக ஏதும் இல்லை!
சரிதானே ஜி.ரா.?
August 28, 2006 1:16 PM
--
SK said...
:))
சிரிப்பான் போட மறந்து போனேன்!
August 28, 2006 1:17 PM
--
ஜெயஸ்ரீ said...
SK,
//உருவு கண்டு எள்ளாமை வேண்டும் "உருள்"பெருந் தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து //
இந்த இடத்தில் உருள்பெருந்தேர் என்பதற்கு (ஓடும் அல்லது செல்லும் பெரிய தேர்) என்றே பொருள் என எண்ணுகிறேன்.
"உருள்" இந்த இடத்தி' வினைச்சொல்லாக வருகிறது.
உருள்பெருந்தேர் - வினைத்தொகையோ??
August 28, 2006 1:18 PM
--
SK said...
தேர் உருளாது!
தேர் சக்கரம்தான் உருளும்!
சக்கரம் உருளத், தேர் நகரும்!
இப்படி உருளுவது "உருள்"!
மேலும் தேருக்கு அச்சாணி இல்லை!
தேர்ச்சக்கரத்துக்குத்தான் அச்சாணி தேவை!
அப்படிப் பார்த்தால் உருள் பெயர்ச்சொல்லாகவும் வருமே இங்கு!
"பெருந்தேர்க்கு உருள்", "அதற்கு அச்சாணி" என்னும் பொருளில் வந்திருக்கிறது எனவே நான் கருதுகிறேன்.
உருள் என்னும் சொல் சக்கரத்துக்குப் பொருந்தாது எனச் சொல்லுகிறீர்களா, ஜெயஷ்ரீ ?
உங்கள் கருத்தை அறிய ஆவலாயிருக்கிறேன்.
August 28, 2006 2:47 PM
--
ஜெயஸ்ரீ said...
SK,
உருள் என்ற பெயர்ச்சொல்லுக்கு சக்கரம், தேர் என்று இரண்டு பொருள்கள் உண்டு.
சக்கரங்களை உடையது என்பதால் தேருக்கும் 'உருள்' என்பது ஆகுபெயராக இருக்கலாம்.
உருள் வினைச்சொல்லாக வரும்போது உருண்டு செல்லுதல், நகர்தல்(proceed), உருண்டையாக வளர்தல் போன்ற பொருள்களில் வரும்.
பெயர்ச்சொல்லாகப் பொருள் கொள்ளும் போது உருள்(சக்கரம்) ஐ உடைய பெரிய தேர் (இரண்டாம் வேற்றுமைத் தொகை)
வினைச்சொல்லகப் பொருள் கொள்ளும் போது
உருல்கின்ற(செல்லுகின்ற) பெரிய தேர் - வினைத்தொகை
பெயர்ச்சொல்லாக (சக்கரம்) என்று பொருள் கொள்வது இன்னும் பொருத்தமாகத் தெரிகிறது.
August 28, 2006 4:30 PM
--
குறும்பன் said...
புதிய சொல் அறிந்துகொண்டேன். நன்றி
August 28, 2006 6:55 PM
--
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//சக்கரங்களை உடையது என்பதால் தேருக்கும் 'உருள்' என்பது ஆகுபெயராக இருக்கலாம்//
ஜெயஸ்ரீ, சினையாகு பெயர் ??? (உறுப்புகள், அதன் முழுமைக்கு ஆகி வருவது)...ஆகா...ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே, இலக்கணம் எல்லாம்..ஞாபகம் வருதே :-)
August 28, 2006 7:38 PM
--
ஜெயஸ்ரீ said...
உருள் இனார்க் கடம்பு - பரிபாடல்
(உருண்ட வடிவுடைய கடம்ப மலர்க் கொத்து)
August 28, 2006 8:55 PM
--
ஜெயஸ்ரீ said...
உருள் பூ தண் தார் புரளும் மார்பினன் - திருமுருகாற்றுப்படை
உருண்டை வடிவுடைய தண்மையான கடம்ப மலர் மாலையை மார்பில் அணிந்தவன்
August 28, 2006 9:04 PM
--
குமரன் (Kumaran) said...
இராகவன். கால தாமதத்திற்கு மன்னியுங்கள். முதல் பின்னூட்டத்தைப் பதிவு படித்த வேகத்தில் அவசர அவசரமாக இட்டுச் சென்றுவிட்டேன். பின்னர் வந்த பின்னூட்டங்களை மட்டுறுத்த மட்டுமே நேரம் கிடைத்தது. இப்போது தான் ஆற அமர பின்னூட்டம் இட கொஞ்சம் நேரம் கிடைத்துள்ளது.
சக்கரம் என்பது வடமொழிச் சொல் போலத் தோன்றினாலும் இப்போதெல்லாம் எந்தச் சொல்லையும் வடமொழிச் சொல் என்று சொல்வதற்கு முன் கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது. இராம.கி. ஐயாவிடம் கேட்டால் சக்கரம் என்பதற்கும் தமிழில் ஏதாவது அடிச்சொல்லைச் சொல்லலாம். அது பின்னர் வடமொழியில் சக்ர என்றாகியது என்றும் விளக்கம் தரலாம். அதனால் சக்கரம், புண்ணியம் போன்றவை வடமொழிச் சொற்களே என்று அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை.
திகிரி என்ற சொல் பழந்தமிழ்ப் பாடல்களில் பயின்று வரவில்லை என்று சொல்லவில்லை. ஆனால் சக்கரமும் பயின்று வந்திருக்கலாம். தேடினால் கிடைக்கும் என்று நினைக்கிறேன். நேரம் கிடைக்கும் போது தேடிப் பார்த்துக் கிடைத்தால் சொல்கிறேன்.
திருமாலிஞ்சோலையைப் பற்றி பரிபாடலில் வருவதாக நினைவு இருந்ததால் இப்போது பரிபாடல் என்று போட்டுத் தேடினேன். தேடியது கிடைத்தது.
//அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய,
சிலம்பாறு அணிந்த, சீர் கெழு திருவின்
சோலையடு தொடர் மொழி மாலிருங்குன்றம்--
//
மாலிருங்குன்றம் என்றும் சிலம்பாறு என்றும் திருவின் சோலையடு என்றும் எந்த வித ஐயத்திற்கும் இடமின்றி திருமாலிருஞ்சோலையைப் பற்றிப் பரிபாடல் சொல்கிறதே. பாருங்கள்.
http://www.tamilnation.org/literature/ettuthokai/mp087.htm
சிலப்பதிகாரத்திலும் மதுரை காண்டத்தில் ஆய்ச்சியர் குரவையிலோ எங்கோ திருமாலிருஞ்சோலையைப் பற்றிப் படித்ததாக நினைவு. தேடிப் பார்த்துக் கிடைத்தால் சொல்கிறேன்.
திருப்பதி ஏழுமலையானைப் பற்றி ஒரு சர்ச்சை இருக்கிறதே. அது போல் ஏதோ ஒன்றை மனதில் கொண்டு தான் நீங்கள் திருமாலிருஞ்சோலை கோவில் பழைய பழமுதிர்ச்சோலை என்று சொன்னீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அடியேன் அறிந்த வரை திருமாலிருஞ்சோலை அழகர் கோவில் மிகப் பழைய கோவில். மாமனும் மருகனும் ஒற்றுமையாக அங்கே இருக்கிறார்கள்.
August 28, 2006 9:19 PM
--
kekkE PikkuNi #25511630 said...
திகிரியமா, புச்சா சொல்லிக் கொடுத்தியே தலீவா....
மன்னிச்சுடுங்க. திகிரி என்ற சொல் பயிலப்பட்டும் என் மரமண்டையில் ஏறுமாறு சொன்ன கோரா (ரபீந்த்ரநாத் தாகூர் கதை தான் ஞாபகம் வருது) மற்றும் ஜெயஸ்ரீ, SK, குமரன் - எல்லாருக்கும் நன்றி.
கெ.பி.
August 28, 2006 9:49 PM
--
ஜெயஸ்ரீ said...
"திகிரி மாதிர ஆவார திகிரி சாய
................................
செருவை நாடு வாநீப "
உருண்டையான வடிவுடைய(திகிரி), திசைகளை மறைக்கும் சக்ரவாள மலை(திகிரி) சாயும் வண்ணம் போரிடச் சென்றவனே
இந்தத் திருப்புகழ் வரியில் திகிரி என்ற சொல் இருமுறை வருகிறது. முதல் முறை உருண்ட வடிவுடைய என்ற பொருளிலும் இரண்டாம் முறை மலை என்ற பொருளிலும்.
"திகிரி" சுழலக்கூடிய மற்றும் சுற்றக்கூடியவற்றைக் குறிப்பதாகக் கொள்ளலாமா?
August 29, 2006 9:23 AM
--
லொடுக்கு said...
வாழ்க! தமிழ் வளர்க்கும் நற்சான்றோர். 'சொல் ஒரு சொல்'. நறுக்கு தெறிக்கிறது.
August 30, 2006 3:25 AM
--
G.Ragavan said...
// நீங்க சொன்னீங்களேன்னு ஒரு 2500 ஆண்டுகள் பின்னால் போய் வந்தேன், ஜி.ரா.!!
"உருவு கண்டு எள்ளாமை வேண்டும் "உருள்"பெருந் தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து." [667] //
மிக நல்ல எடுத்துக்காட்டு எஸ்.கே. மிகச் சரியானதும் கூட. இன்னும் கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்வேன்? இதில் நான் பேராசைக்காரனே! :-)
August 30, 2006 2:32 PM
--
G.Ragavan said...
// ஜெயஸ்ரீ said...
"திகிரி மாதிர ஆவார திகிரி சாய
................................
செருவை நாடு வாநீப "
உருண்டையான வடிவுடைய(திகிரி), திசைகளை மறைக்கும் சக்ரவாள மலை(திகிரி) சாயும் வண்ணம் போரிடச் சென்றவனே
இந்தத் திருப்புகழ் வரியில் திகிரி என்ற சொல் இருமுறை வருகிறது. முதல் முறை உருண்ட வடிவுடைய என்ற பொருளிலும் இரண்டாம் முறை மலை என்ற பொருளிலும்.
"திகிரி" சுழலக்கூடிய மற்றும் சுற்றக்கூடியவற்றைக் குறிப்பதாகக் கொள்ளலாமா? //
மிகச் சரி ஜெயஸ்ரீ. நானும் அப்படித்தான் கருதுகிறேன். இலக்கியங்களும் அவைகளிலிருந்து எஸ்.கேயும் குமரனும் மற்ற நண்பர்களும் எடுத்துக் கொடுத்த மேற்கோள்களும் அப்படித்தான் சொல்கின்றன.
August 30, 2006 2:34 PM
--
SK said...
முன்காலத்தில் மலைகளுக்கெல்லாம் இறக்கைகள் இருந்ததாம்!
அவை திகிரித் திகிரி [வாக்கியத்தில் உபயோகித்து விட்டேன்!!]][சுழன்று, சுழன்று] பறந்து கண்ட இடங்களிலும் அமர, ஜீவராசிகள் பட்ட துயரம் கண்டு, இந்திரன் தன் வஜ்ஜிராயுதத்தால் அதன் இறக்கைகளை வெட்டி ஓரிடத்திலேயே அவைகளை அமரச் செய்தானாம்.
இதனால் கூட அவர்களுக்கும்[மலைகள்] இப்பெயர்[திகிரி] வழங்கப் பட்டிருக்கலாம்.
மூங்கில், கரும்பு போன்றவைகளும் இது போலவே சுழன்று வளர்வதால் இப்பெயர் வந்திருக்கும்.
August 30, 2006 3:27 PM
--
நாமக்கல் சிபி said...
இது வரை கேள்விப்பட்டதாக நியாபகம் இல்லை. பயன்படுத்த முயற்சி செய்கிறேன்...
August 30, 2006 5:21 PM
--
ஜெயஸ்ரீ said...
//அவை திகிரித் திகிரி [வாக்கியத்தில் உபயோகித்து விட்டேன்!!]][சுழன்று, சுழன்று] பறந்து//
திகிரி பெயர்ச்சொல். வினைச்சொல்லாக அறியப்படவில்லை ( நான் அறிந்த வரை). மலை , மூங்கில் இரண்டைத் தவிர திகிரி என அறியப்படுபவை எல்லாம் சுழலும் அல்லது சுற்றும் தன்மையடையன (வட்டம் அல்லது உருண்டை வடிவுடையன ). ஆனால் திகிரி வினைச்சொல்லாக சுழல்வதைக் குறிக்கப் பயன்படுமா?
August 30, 2006 5:39 PM
--
SK said...
இன்னும் சில சொல்ல வேண்டும்!
அவசரமாக "வேட்டையாடு விளையாடு" பார்க்கப் போய்க் கொண்டிருக்கிறேன்!
வந்து போடுகிறேன்!
மு.மு.!!
:))
August 30, 2006 5:56 PM
--
பொன்ஸ்~~Poorna said...
ஜெயஸ்ரீக்கும் எஸ்கேவுக்கும் ஆன விவாதம் நன்றாகப் போகிறது..
ராகவன்,
திகிரிக்கும், டிகிரிக்கும் ஏதாவது தொடர்பிருக்குமா? :))
Circle has 360 degrees : ஹி ஹி
August 31, 2006 12:30 AM
--
இலவசக்கொத்தனார் said...
இந்த பதிவே ஒரு திகிரி தானே? அதான் திகிரி திகிரி (ஆஹா நானும் உபயோகப்படுத்தியாச்சு) தமிழ்மண முகப்பில் வருதோ!
August 31, 2006 5:50 AM
--
இலவசக்கொத்தனார் said...
50!!
August 31, 2006 6:08 AM
--
வெற்றி said...
அன்பின் இராகவன்,
இது வரை நான் இச் சொல்லை அறிந்திலேன். பதிவுக்கு மிக்க நன்றி.
//இலக்கியத்துல இது இருக்குதா? சட்டுன்னு நினைவுக்கு வர்ரது திருப்புகழ்தான். முத்தைத் தரு பத்தித் திருநகை திருப்புகழ் எல்லாருக்கும் தெரியும். அதுல் இப்பிடி வரும். "பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக".
வட்ட வடிவமானவை திகிரி. இங்கு சூரியனும் திகிரிதான். அதுவும் எப்படி? பட்டப்பகல் வட்டத் திகிரி. திகிரின்னா சக்கரம்னு சொன்னேன். பட்டப்பகல்னா பெருவெளிச்சம். பெருவெளிச்சந்தரும் வட்ட வடிவச் சக்கரந்தான் பட்டப்பகல் வட்டத் திகிரி. எப்படி பேரு வெச்சிருக்காரு பாத்தீங்களா அருணகிரிநாதரு.//
ஆகா! அருமையான விளக்கம்.
திகிரி = வட்ட வடிவில் அமைந்த பொருட்கள், இல்லையா?
September 01, 2006 12:59 AM
--
குமாரசாமி said...
பொது வேண்டுகோள்
தமிழ் மணம், மணம் வீசவில்லை.
வரவர அழுகல் நாற்றமடிக்க ஆரம்பித்து விட்டது
சில மேன்மைக்குரிய பதிவாளர்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் கடித்துக் குதறிக்கொண்டிருக்கிறார்கள்
அவர்கள் நினைக்கும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் - அதாவது அவர்கள் மொழியில் பூஜை, புனஸ்காரம் என்று இருப்பவர்கள் அந்த சமூகத்தில் 10% பேர்கள்தான்
மற்றவர்கள் எல்லாம் (90%) நன்றாகப் படித்து நல்ல வேலைகளில், நல்ல நிலைமையில் இருக்கிறார்கள்
அரசு படிப்பதற்கு, வேலைகளுக்கு என்று கோட்டா வைத்து அவர்களை ஓரங்கட்டியபோதும் அவர்கள் உள்
நாட்டிலும், வெளிநாட்டிலும் சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
அதனால் ஒட்டு மொத்தமாக அந்த சமூகத்தைச் சாடுவதில், குப்பைகளைக் கொட்டுவதில் எந்தப் பயனும் இல்லை
சூரியனைப் பார்த்து நாய் குறைப்பதைப் போன்றதாகும் அப்படிப்பட்ட செயல்கள்
முதலில் எழுதுபவர்கள் தங்களுடைய நிலைமையை உணரவேண்டும்
அவர்கள் மீது குப்பைகளை கொட்டும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தார்கள்?
அதற்குத் தமிழ் மணம்தான் கிடைத்ததா?
வேறு ஊடகங்களே இல்லையா?
பெரியார் மீது இவர்களுக்குக் காதலென்றால் - அவருடைய கருத்துக்களை மக்களுக்குக் கொண்டு போகவேண்டு மென்றால் - அதை மட்டும் எழுதட்டும்
இப்படிக் காறி உமிழ்ந்துகொண்டே இருப்பதற்கும்,
தொண்டை வரண்டு போகும் அளவிற்கு விடாது குறைப்பதற்கும்தான் பெரியார் இவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டுப்போனாரா?
இப்படி இவர்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தால் என்னைப் போன்ற பெரியார் கொள்கையில் பிடிப்பு உள்ளவர்களும், அந்த இயக்கத்தை விட்டு விலக நேரிடும்
படித்து, நல்ல நிறுவனங்களில் வேலை பார்க்கும் இவர்கள் இப்படித் தமிழ் மணத்தில் கத்தி (ச்) சண்டை போட்டுக்கொண்டிருப்பது இவர்களுடைய நிறுவன உயர் அதிகாரிகளுக்குத் தெரியுமா?
தங்கள் புகைப்படம், அலுவலக முகவரியுடன் தங்கள் எழுத்துக்களைப் பதிவு செய்யும் தைரியம் இவர்களுக்கு ஏன் இல்லை?
அந்த துணிச்சலைப் பெரியார் இவர்களுக்குக் கொடுத்துவிட்டுப் போகவில்லையா?
ஆகவே இவர்கள் திருந்த வேண்டும்!
இவர்களின் ஆபாச எழுத்துக்கள் தமிழ் மணத்தில் தடை செய்யப்பட வேண்டும்
இல்லை என்றால் கண்ணியமாக எழுத & படிக்க விரும்பும் வாசகர்கள் தமிழ் மணத்தை இவர்களுக்குப் பட்டா
போட்டுக் கொடுத்து விட்டு வேறு ஊடகங்களுக்குப் போக வேண்டியதுதான்
எந்த சமூகத்திற்குத்தான் தன் சாதிப்பெருமை இல்லை?
மருத்துவர் அய்யா கட்சிக்காரர்கள் வன்னியரைத்தவிர மற்றவர்கள் அன்னியர் என்கிறார்களே - அவர்களை எதிர்த்து எழுதும் துணிவு உண்டா இவர்களுக்கு,
கொங்கு வேளாளர் பேரவை, முக்குலத்தோர் பேரவை என்று மாவட்டத்திற்கு ஒரு சாதி , இனச் சங்கம் தலை துக்க்கிக் கொடி பிடித்துக் கொண்டு இருக்கவில்லையா? அவர்களை எதிர்த்து எழுதும் துணிவு உண்டா இவர்களுக்கு.
ஆகவே சாதி இனச் சண்டைகள் நமக்கு வேண்டாம் (வலைப் பதிவாளர்களுக்கு) எழுத்தாளன் என்றாலே எல்லோருக்கும் பொதுவானவன். ஆகவே சாதிகளை மறந்து மனிதர்களை நேசிப்போம்
மனிதநேயத்தோடு மட்டும் இருப்போம்
இனிமேலாவது அறிஞர் திரு.C.N.அண்ணாதுரை அவர்கள் சொல்லிக்கொடுத்த கண்ணியத்தோடு அனைவரும் எழுதுவோம்!
இவர்கள் திருந்தவில்லை என்றால் - தமிழ் மணம், ஆபாச எழுத்துக்களுக்குப் பதிலடியாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைகளைக் கட்டிகொண்டு தொடர்ந்து வேடிக்கை பார்க்கும் என்றால் தமிழ் மணத்தை விட்டு வெளியேறுவோம்
நான் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவனல்ல - அதை
நினைவில் வைத்துக்கொண்டு முதல்வரியில் இருந்து
மீண்டுமொரு முறை அனைவரும் படியுங்கள்
வாழ்க தமிழ்!
வளர்க தமிழர்கள்!
தமிழ்நேசன்
( Copy to Tamil Bloggers for information)
September 01, 2006 6:46 AM
--
கோவி.கண்ணன் [GK] said...
திகிரி மருவி திரிகி ஆகி - சுற்றவதைக் குறிக்க திருகி என்று ஆகியதோ !
தலை திகிரிடிச்சு :))
September 02, 2006 11:39 AM
--
கோவி.கண்ணன் [GK] said...
//நினைவில் வைத்துக்கொண்டு முதல்வரியில் இருந்து
மீண்டுமொரு முறை அனைவரும் படியுங்கள்
//
ம் ..
நீங்கள் குறிப்பிட்டது ... லைப்பதிவாளர்கள் எல்லோருக்கும் ஏற்கனவே செரிமானம் ஆன விசயம்தான்.
மேலும் மேலும் படித்துப் பார்த்ததில் பல பதிவுகள் ராமசாமி நாயகர் என்று அன்புடன் அழைக்கும் பதிவுகள், திராவக வீச்சுகளும் தங்கள் கண்ணுக்கு தெரியாமல் போனதை வைத்து தாங்கள் வலைப்பதிவுக்கு புதியவர் என்றும் தெரிகிறது.
:)))
September 02, 2006 11:43 AM
--
G.Ragavan said...
// சக்கரம் என்பது வடமொழிச் சொல் போலத் தோன்றினாலும் இப்போதெல்லாம் எந்தச் சொல்லையும் வடமொழிச் சொல் என்று சொல்வதற்கு முன் கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது. இராம.கி. ஐயாவிடம் கேட்டால் சக்கரம் என்பதற்கும் தமிழில் ஏதாவது அடிச்சொல்லைச் சொல்லலாம். அது பின்னர் வடமொழியில் சக்ர என்றாகியது என்றும் விளக்கம் தரலாம். அதனால் சக்கரம், புண்ணியம் போன்றவை வடமொழிச் சொற்களே என்று அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை. //
குமரன் எனக்கும் இந்தக் குழப்பந்தான். ஆகையால்தான் நானும் அடக்கி வாசிக்கிறேன். :-) தமிழ் முழுதுணர்ந்த பெரியவர்களின் பின்னூட்டங்கள் நமது ஐயப்பாடுகளை நீக்குகின்றன.
September 02, 2006 1:14 PM
--
G.Ragavan said...
// SK said...
ஐயா சாமி! அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க, வராதுங்க!
ஆனால், என்னமோ அப்படி ஒரு டிஸ்கி போடலாமா எனத் தோன்றியது அக்குறளை எழுதியதும்!
சரி, நாமே போடவேண்டாமே என நினைத்து விட்டுவிட்டேன்!
அடுத்த பின்னூட்டமே இப்படி வந்தது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது!
மேலும் ஜி.ரா.வுக்கு உ.கு. கொடுக்குமளவுக்கு எங்களுக்குள் அப்படி ஒன்றும் மாறாக ஏதும் இல்லை!
சரிதானே ஜி.ரா.? //
உறுதியாக எஸ்.கே. நான் நம்புகிறேன். :-)
September 02, 2006 1:19 PM
--
G.Ragavan said...
// மாலிருங்குன்றம் என்றும் சிலம்பாறு என்றும் திருவின் சோலையடு என்றும் எந்த வித ஐயத்திற்கும் இடமின்றி திருமாலிருஞ்சோலையைப் பற்றிப் பரிபாடல் சொல்கிறதே. பாருங்கள்.
http://www.tamilnation.org/literature/ettuthokai/mp087.htm
சிலப்பதிகாரத்திலும் மதுரை காண்டத்தில் ஆய்ச்சியர் குரவையிலோ எங்கோ திருமாலிருஞ்சோலையைப் பற்றிப் படித்ததாக நினைவு. தேடிப் பார்த்துக் கிடைத்தால் சொல்கிறேன். //
கண்டிப்பாகச் சொல்லுங்கள். காத்திருக்கிறேன் குமரன்.
September 02, 2006 1:20 PM
--
G.Ragavan said...
// பொன்ஸ் said...
ஜெயஸ்ரீக்கும் எஸ்கேவுக்கும் ஆன விவாதம் நன்றாகப் போகிறது..
ராகவன்,
திகிரிக்கும், டிகிரிக்கும் ஏதாவது தொடர்பிருக்குமா? :))
Circle has 360 degrees : ஹி ஹி //
எனக்கு வாரியார் நினைவிற்கு வருகிறார் பொன்ஸ். கிண்டலுக்குச் சொல்லும் பொழுது பத்திரிகைகளில் வரும் editorial என்பது ஏடு இட்டோர் இயல்-னு சொன்னார். அது மாதிரி நீங்க... :-)
September 02, 2006 1:21 PM
--
G.Ragavan said...
// இலவசக்கொத்தனார் said...
இந்த பதிவே ஒரு திகிரி தானே? அதான் திகிரி திகிரி (ஆஹா நானும் உபயோகப்படுத்தியாச்சு) தமிழ்மண முகப்பில் வருதோ! //
ஆகா கொத்ஸ். எல்லாம் நீர் வந்த நேரம். அதான் இந்த அளவுக்குத் திகிரித் திகிரி வருது.
// இலவசக்கொத்தனார் said...
50!! //
நன்றி கொத்ஸ்.
// வெற்றி said...
அன்பின் இராகவன்,
இது வரை நான் இச் சொல்லை அறிந்திலேன். பதிவுக்கு மிக்க நன்றி.
//இலக்கியத்துல இது இருக்குதா? சட்டுன்னு நினைவுக்கு வர்ரது திருப்புகழ்தான். முத்தைத் தரு பத்தித் திருநகை திருப்புகழ் எல்லாருக்கும் தெரியும். அதுல் இப்பிடி வரும். "பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக".
வட்ட வடிவமானவை திகிரி. இங்கு சூரியனும் திகிரிதான். அதுவும் எப்படி? பட்டப்பகல் வட்டத் திகிரி. திகிரின்னா சக்கரம்னு சொன்னேன். பட்டப்பகல்னா பெருவெளிச்சம். பெருவெளிச்சந்தரும் வட்ட வடிவச் சக்கரந்தான் பட்டப்பகல் வட்டத் திகிரி. எப்படி பேரு வெச்சிருக்காரு பாத்தீங்களா அருணகிரிநாதரு.//
ஆகா! அருமையான விளக்கம்.
திகிரி = வட்ட வடிவில் அமைந்த பொருட்கள், இல்லையா? //
சரியாகச் சொன்னீர்கள் வெற்றி.
September 02, 2006 1:24 PM
--
G.Ragavan said...
// கோவி.கண்ணன் [GK] said...
திகிரி மருவி திரிகி ஆகி - சுற்றவதைக் குறிக்க திருகி என்று ஆகியதோ !
தலை திகிரிடிச்சு :)) //
கோவி...அப்படியும் இருக்குமோ!
September 04, 2006 1:40 AM
--
பெடியன்கள் said...
இன்றுதான் இச்சொல்லை அறிந்தேன்.
நல்ல பதிவு இராகவன்.
தொடர்ந்த பின்னூட்ட வாதமும் நன்று.
ஒரு தகவலுக்காக:
ஈழத்தில் சக்கரத்தைக் குறிக்க இன்றும் நாங்கள் பாவிக்கும் சொல் 'சில்' ('Chil' என்ற உச்சரிப்பு).
September 13, 2006 7:28 AM
--
மதுமிதா said...
'ஞாலத்திகிரி முதுநீர்த்திகிரி
நாடாத்தும் அந்தக் காலத்திகிரி
முதலியனயாவும்
கடல்கடந்த நீலத்திகிரி அனையார்
கடைநாளில் இட்ட கோலங்களே'
ஜீரா
இந்தப் பாடல் நினைவுக்கு வந்தது.
யார் எழுதியது?
பாடல் சரிதானா?
என்பதெல்லாம் நினைவில்லை
நினைவில் இருந்ததை கொடுத்துள்ளேன்.
சரியான பாடல் கிடைத்தால் மகிழ்வேன்.
September 14, 2006 12:48 AM
நன்றி ரோஷிணி.
ReplyDeleteபரத நாட்டிய வர்ணம் ஒன்றில் வரும், "திகிரி சங்கேந்தும் திருமலை வாசனடி" அப்படின்னு. இப்பதானே புரியுது :)
ReplyDeleteரொம்ப மகிழ்ச்சி கவிநயா அக்கா. இராகவன் இப்படித் தான் நிறைய இலக்கத் தரம் வாய்ந்த சொற்களை அறிமுகம் செய்வார். எப்பவுமே.
ReplyDeleteமிக்க நன்று.
ReplyDelete