இது ஏறக்குறைய மறுபதிவு போலத் தான். இந்தத் தலைப்பில் பதிவு போடவில்லையே ஒழிய இந்த 'விஷயம்' என்ற சொல்லை பின்னூட்டங்களில் நண்பர்கள் நன்றாக அலசியிருக்கிறார்கள். தருமி ஐயா இந்த 'விஷயம்' என்பதற்கான கருத்துரையாடல்கள் ஒரு தனிப்பதிவாக இருந்தால் அது நன்றாக இருக்கும் என்று சுட்டிக்காட்டியதாலும் பின்னூட்டங்களில் பேசப்பட்ட கருத்துகள் தனிப்பதிவாக இருந்தால் அவற்றைத் தேடிப் படிக்கவேண்டிய தேவை இல்லாமல் எளிதாகப் பதிவுகளின் தலைப்புகளை வைத்துப் படிக்க எளிதாகும் என்பதாலும் இங்கு அதனைத் தனிப்பதிவாகப் போடுகிறேன்.
விஷயத்திற்கு 'செய்தி' 'சேதி' என்ற சொற்களை சில இடங்களில் புழங்கலாம்.
'கருத்து' என்ற சொல்லும் சில இடங்களில் பொருத்தமாக வரும்.
'விடயம்' என்று சிலர் புழங்குகிறார்கள். அது வலிய வரவழைத்துக் கொண்ட சொல் போல் தோன்றுகிறது. அது எப்படி 'விஷயம்' என்ற சொல்லுக்கு நேரான சொல் ஆகிறது என்று யாராவது விளக்குவார்களா?
'சங்கதி' என்ற சொல்லையும் சில இடங்களில் பயன்படுத்தலாம்.
'தகவல்' என்றும் சொல்லலாம்.
இவையெல்லாம் நண்பர்களின் பின்னூட்டங்களில் இருந்து எடுத்துப் போட்டிருக்கிறேன். இவை சரியான சொற்களாகத் தோன்றுகிறதா? எந்த இடங்களில் பயன்படுத்தலாம் என்று எடுத்துக்காட்டுகள் தர முடியுமா? வேறு ஏதேனும் சொற்கள் விஷயம் என்பதற்குப் பதிலாகப் புழங்கலாமா? நண்பர்களே சொல்லுங்கள்.
இந்த இடுகை 'சொல் ஒரு சொல்' பதிவில் 12 ஜூன் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
ReplyDelete29 கருத்துக்கள்:
இலவசக்கொத்தனார் said...
"இந்த விஷயத்திற்கு தொடர்பான உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்." என்று சொல்ல வந்தால் செய்தி, கருத்து, தகவல் என எதுவுமே சரியாக வரவில்லையே? வேறேனும் வார்த்தைகள் இருக்கின்றனவா?
June 12, 2006 11:05 PM
--
துளசி கோபால் said...
என்ன விஷயம் விசேஷமா இருக்கப்போகுது?
தெரிஞ்சாச் சொல்லிறமாட்டேனா?
வச்சுக்கிட்டா வஞ்சனை பண்ணுறேன்?
June 12, 2006 11:08 PM
--
சிவமுருகன் said...
அண்ணா,
சரி விஷயத்திற்க்கு வருவோம், என்பதை 'சரி பேச்சு வருவோம்' என்று சொல்லலாம், (விஷயம்-பேச்சு)
விஷயம் என்பது தலைப்பு என சில சமயங்களில் பொருள் பட்டு வரும். உதாரனமாக "எந்த விஷயத்தில் (தலைப்பில்) எழுதுகிறாய்". (விஷயம் - தலைப்பு)
அதே போல் இன்னும் பல பொருளில் வரும் என்று நினைக்கிறேன் எனக்கு தெரிந்ததை சொல்லிவிட்டேன்.
June 12, 2006 11:38 PM
--
வெற்றி said...
அய்யா இலவசம்,
ஒரு மணி நேரமா என் மண்டையைப் போட்டுக் குழப்பியும் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.
இப்படிச் சொன்னால் என்ன இ.கொ.
"இந்த சங்கதி பற்றி உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்"
இப்படிச் சொல்லலாமா தெரியாது. இனி தமிழ் பண்டிதர்கள் SK அய்யா, இராகவன், குமரன், பொன்ஸ் அக்கா போன்றோர் தான் இதற்குப் பதிலளிக்க வேண்டும்.
நன்றி
அன்புடன்
வெற்றி
June 13, 2006 12:27 AM
--
`மழை` ஷ்ரேயா(Shreya) said...
விடயம்/ விஷயம்: http://valavu.blogspot.com/2005/05/blog-post.html
(3rd paragraph)
June 13, 2006 1:55 AM
--
Dharumi said...
கொத்ஸ் சொல்றதுமாதிரியான சந்தர்ப்பங்கள் (சூழ்நிலைகள்) தான் அடிக்கடி வருது...
June 13, 2006 2:07 AM
--
johan -paris said...
விடயம் என்பது விஷயம் எனும் வடமொழிச் சொல்லின் தமிழ்ப்படுத்தலாக இருக்கலாம்.சேதி,சங்கதி,விஷயம்,விடயம் எல்லாம் ஒத்தகருத்துள்ள; தகவல் என்பதைக் குறிக்கும் சொல்லாக உள்ளது. சேதி என்பது பரகசியமான தகவல்,சங்கதி என்பது சற்று இரகசியமான தகவல்.பாவிக்குமிடத்தைப் பொறுத்தே! அதன் சிறப்புத் தன்மை புலப்படும்.
யோகன் பாரிஸ்
June 13, 2006 3:50 AM
--
பொன்ஸ்~~Poorna said...
//கொத்ஸ் சொல்றதுமாதிரியான சந்தர்ப்பங்கள் (சூழ்நிலைகள்) தான் அடிக்கடி வருது... //
இதுக்குத் தான் சங்கதி நல்லா பொருந்துமே?
//இந்த விஷயத்திற்கு தொடர்பான உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்//
இந்தச் சங்கதியில் உங்கள் கருத்து என்ன?
//என்ன விஷயம் விசேஷமா இருக்கப்போகுது?//
என்ன கருத்து சிறப்பா இருக்கப் போகுது?
//சங்கதி என்பது சற்று இரகசியமான தகவல்//
இது தான் எனக்குப் புது செய்தி :)
June 13, 2006 6:01 AM
--
manu said...
விஷயத்தில் உள்ள ஷ தானே தொந்தரவு? அத்ற்கு மர்மம் என்றும் பொருள் வருவதாகத் தோன்றுகிறது.
மர்மமான விஷயம் தான்.
விசாரணை தேவை.
June 13, 2006 7:43 AM
--
ரங்கா - Ranga said...
ஒரு சந்தேகம்; விஷயத்திற்கு தொடர்பானதா என்று தெரியவில்லை. விஷமத்திற்கும் விஷயத்திற்கும் ஏதேனும் சம்பந்தம்?
ரங்கா.
June 13, 2006 2:55 PM
--
newsintamil said...
விஷயம் என்பதில் உள்ள ஷ என்ற கிரந்த எழுத்தை பயன்படுத்த விரும்பாதவர்கள் விடயம் என்று எழுதி வந்தார்கள். (விபீஷணன் விபீடணன் ஆனது மாதிரி). விடயம் என்பது பொருத்த மானதாக தோன்றா விட்டாலும் பல இடங்களில் அப்படிப் பயன்படுத்த நேர்ந்தது. குறிப்பாக தனித்தமிழில் சில கட்டுரைகளை எழுத நேரும்போது!
பின்னர் வலைப்பதிவில் யாரோ...(பெரியவர் இராமகி என்று நினைக்கிறேன் சரியாக நினைவில்லை...) விதயம் என்ற சொல்லைப் பயன்படுத்தி இருந்தார்கள் அது விடயத்தை விடப் பொருத்தமாக இருந்தது. அவ்வப்போது விதயம் பயன்படுத்தி வந்தாலும் பழக்கதோ...ச?...ஷ? த்தால் பழையபடி விஷயத்துக்கு வந்து விட நேர்கிறது.
June 13, 2006 8:58 PM
--
SK said...
இவையெல்லாம் தாண்டி,
"நிகழ்வு"
எனும் சொல் பல இடங்களில் பொருந்தி வரும்!
'தகவல்', 'செய்தி', இவையும் சில இடங்களில் பொருந்தும்.
சில உதாரணங்கள்;
இங்கு என்ன விஷயம் [நிகழ்வு]?
வேறு என்ன விஷயம் [செய்தி]?
ஒரு விஷயம் [தகவல், செய்தி] சொல்ல வந்தேன்.
விஷயம் [நிகழ்வு, நடப்பு, செய்தி, தகவல்] தெரியாமல் பேசுகிறான்.
எந்த விஷயம் [நிகழ்வு, செய்தி,] பற்றி எழுதலாம்?
இந்த விஷயத்துக்குத்[நிகழ்வுக்குத்[ தொடர்பான கருத்தைச் சொல்லுங்கள்!.
:))
June 13, 2006 9:18 PM
--
குமரன் (Kumaran) said...
உங்க கேள்விக்கு மத்தவங்க பதில் சொல்லியிருக்காங்க பாத்தீங்களா கொத்ஸ்?
June 14, 2006 6:03 AM
--
குமரன் (Kumaran) said...
துளசி அக்கா. நீங்க ரொம்ப நல்ல்ல்ல்லவங்க அக்கா. :-) வச்சிக்கிட்டு வஞ்சனை செய்வீங்களா என்ன? :-)
பொன்ஸ் நீங்க சொன்னதை தமிழ்ப்படுத்தியிருக்காங்க பாத்தீங்களா?
June 14, 2006 6:05 AM
--
குமரன் (Kumaran) said...
சிவமுருகன். இரு சூழ்நிலைகளுக்குப் பொருத்தமான சொற்களைச் சொன்னதற்கு நன்றி. இப்படித் தான் ஒவ்வொரு சூழ்நிலைகளுக்கும் சிந்தித்தால் நல்ல தமிழ்ச் சொற்கள் உறுதியாகக் கிடைக்கும்.
June 14, 2006 6:06 AM
--
குமரன் (Kumaran) said...
வெற்றி, நீங்க சொன்னது சரியாகத் தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். கொத்ஸ் வந்து உறுதிபடுத்தட்டும்.
June 14, 2006 6:07 AM
--
குமரன் (Kumaran) said...
இராம.கி. ஐயாவின் பதிவிற்குச் சுட்டி கொடுத்ததற்கு நன்றி 'மழை' ஷ்ரேயா. அந்தப் பதிவையும் மூன்றாவது பத்தியையும் நான் ஏற்கனவே படித்திருக்கிறேன். அதனால் தான் விஷயம் என்பதற்கு முதல் சொல்லாக விதயம் என்பதைச் சொன்னேன் (தலைப்பைப் பாருங்கள்). விடயம் என்பது எனக்கும் பொருத்தமான சொல்லாகத் தெரியவில்லை. தருமி ஐயாவும் அதனையே கேட்டிருந்தார் அவர் பதிவிலும்.
June 14, 2006 6:10 AM
--
குமரன் (Kumaran) said...
தருமி ஐயா. நீங்க சொல்றது சரி தான். இந்த விஷயம் என்ற சொல்லை நாம் பற்பல சூழ்நிலைகளிலும் பயன்படுத்துகிறோம். அதற்கு நேரான சொல்லாக விதயம் என்பதனை எல்லா இடத்திலும் (எல்லா சூழ்நிலைகளிலும்) புழங்கலாம் என்று நினைக்கிறேன். நான் இப்போதெல்லாம் விஷயம் என்று எழுத வந்துவிட்டு செய்தி, சேதி, சங்கதி போன்ற சொற்களில் ஒன்றைப் பயன்படுத்துகிறேன்; அந்த சூழலுக்கு இந்தச் சொற்களில் எதுவுமே பொருந்தாது என்று தோன்றும் போது விதயம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன்.
June 14, 2006 6:12 AM
--
குமரன் (Kumaran) said...
யோகன் ஐயா. நீங்கள் சொல்லுகின்ற மாதிரி பாவிக்கின்ற இடத்தைப் பொறுத்து இந்தச் சொற்களின் சிறப்புத் தன்மை புலப்படும். சேதி என்பதற்கும் சங்கதி என்பதற்கும் நீங்கள் கூறியுள்ள வேறுபாடு புரியவில்லை. ஏதேனும் எடுத்துக்காட்டுகளுடன் சொல்ல முடியுமா? மிக்க நன்றி.
June 14, 2006 6:14 AM
--
குமரன் (Kumaran) said...
விளக்கம் சொன்னதற்கு மிக்க நன்றி பொன்ஸ்.
பழசோ புதுசோ எல்லாப் பதிவையும் ஒரு பார்வை பார்த்துடுங்க பொன்ஸ் :-)
June 14, 2006 6:15 AM
--
குமரன் (Kumaran) said...
மனு,
விஷயத்தில் இருக்கும் ஷ தொந்தரவு இல்லை. நிறைய பேர் ஷ தான் தொந்தரவு என்று நினைத்துக் கொண்டு அதனை விசயம் என்றோ விடயம் என்றோ எழுதுகிறார்கள். ஆனால் இது வடமொழிச் சொல். அதற்கு நேரான தமிழ்ச்சொல் என்ன என்பதைத் தான் பார்க்க முயல்கிறோம்.
இதற்கு மர்மம் என்ற பொருள் எப்படி வருகிறது? புரியவில்லையே? ஏதேனும் எடுத்துகாட்டுகள் சொல்லுங்களேன்.
June 14, 2006 6:18 AM
--
குமரன் (Kumaran) said...
இல்லை ரங்கா அண்ணா. எனக்குத் தெரிந்தவரை விஷயத்திற்கும் விஷமத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. (சம்பந்தம் - தொடர்பு; நீங்களே முதல் வரியில் தொடர்பு என்ற சொல்லைப் புழங்கியிருக்கிறீர்கள்). :-)
June 14, 2006 6:19 AM
--
குமரன் (Kumaran) said...
வலைஞன். ஏற்றுக் கொள்ளக் கூடிய முறையில் ஏன் விஷயம் விடயம் ஆனது என்று சொல்லியிருக்கிறீர்கள். விபீஷணன் வீடணன் ஆனது போல் விஷயம் விடயம் ஆகலாமா என்று தெரியவில்லை. ஆனால் பொருத்தமானதாகத் தோன்றவில்லை. இராம.கி. ஐயா விதயம் என்பதையே பரிந்துரைத்திருக்கிறார்.
June 14, 2006 6:22 AM
--
குமரன் (Kumaran) said...
ஆமாம் எஸ்.கே. நிகழ்வு என்ற சொல் பல இடங்களில் பொருத்தமாகத் தான் வருகிறது. நல்ல ஆய்வு.மிக்க நன்றி.
June 14, 2006 6:23 AM
--
G.Ragavan said...
விஷயம் என்ற சொல்லே தேவையில்லை.
விஷயம் எங்கெல்லாம் பயன்படுத்துகிறோமோ...அங்கெல்லாம் விஷயம் இல்லாமலும் எழுதலாம். சொல்லலாம்.
எந்த விஷயத்தைப் பேசப் போறோம்? - எதப் பத்திப் பேசப் போறோம்?
என்ன விஷயமாம்? - என்னவாம்? என்ன ஆச்சாம்?
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
June 15, 2006 1:45 AM
--
G.Ragavan said...
// "இந்த சங்கதி பற்றி உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்"
இப்படிச் சொல்லலாமா தெரியாது. இனி தமிழ் பண்டிதர்கள் SK அய்யா, இராகவன், குமரன், பொன்ஸ் அக்கா போன்றோர் தான் இதற்குப் பதிலளிக்க வேண்டும். //
வெற்றி, தமிழ்ப் பண்டிதர்கள் என்று சொல்லி விட்டு என் பெயரைப் போட்ட உள்குத்தை மிகவும் கண்டிக்கிறேன். :-)))))
வெற்றி, இந்த சங்கதி கூட வேண்டியதில்லை.
இதப் பத்தி ஒங்க கருத்தச் சொல்லுங்க - நடைமுறைத் தமிழ் எவ்வளவு லேசாக உதவுகிறது பாருங்கள்.
June 15, 2006 1:47 AM
--
கோவி.கண்ணன் said...
சேதி கேள்விப்பட்டு ஓடிவந்தேன், விசயத்தைப் பற்றி ஏதாவது சங்கதி சொல்லாம்னு பார்த்தால் எங்கிட்ட செய்தி எதுவுமில்லேங்கிற தகவல் எனக்கே இப்பொழுதுதான் தெரியவந்தது. :)
June 15, 2006 5:13 AM
--
குமரன் (Kumaran) said...
இராகவன், நீங்கள் சொல்வதும் உண்மை தான். விஷயம் என்ற சொல்லே இல்லாமல் எழுதலாம்; பேசலாம் தான். ஆனால் விஷயம் என்ற சொல் மிக அதிகமாகப் புழக்கத்தில் இருப்பதால் அது இல்லாமல் எழுதுவதும் பேசுவதும் உடனே நடைபெறாது என்று நினைக்கிறேன். மாற்றுச் சொற்களைப் புழங்கியும் இல்லாமலும் ஒரே நேரத்தில் பயின்றால் விரைவில் விஷயத்தின் தேவையில்லாமல் போகலாம்.
June 15, 2006 8:26 PM
--
குமரன் (Kumaran) said...
கோவி.கண்ணன் ஐயா. நீங்கள் ஒவ்வொரு பதிவிற்கும் வந்து இந்த மாதிரி அந்தப் பதிவில் சொன்ன சொற்களை வைத்தே பின்னூட்டம் இடுவது மிக நன்றாக ரசிக்கத் தக்கதாக இருக்கிறது. மிக்க நன்றி. :-)
June 15, 2006 8:27 PM
//
ReplyDeleteபின்னர் வலைப்பதிவில் யாரோ...(பெரியவர் இராமகி என்று நினைக்கிறேன் சரியாக நினைவில்லை...) விதயம் என்ற சொல்லைப் பயன்படுத்தி இருந்தார்கள் அது விடயத்தை விடப் பொருத்தமாக இருந்தது. அவ்வப்போது விதயம் பயன்படுத்தி வந்தாலும்
//
விடயம் என்பது இலக்கண அடிப்படையில் தமிழ்ப் படுத்தப்பட்ட நெடுங்காலப் பயன்பாடு.
இராம.கி ஐயா விதயம் என்ற சொல்லை தமிழாகவேத் தந்திருக்கிறார். அதைப் பயன்படுத்தும்போது மேலும் இயல்பு கூடுகிறது என்பது எனது துய்ப்பு.
விதயம் சரியான சொல்.
அவரின் விதப்பு என்ற சொல்லையும் காண்க.
அன்புடன்
நாக.இளங்கோவன்
விடயம் என்ற சொல்லை இலக்கியங்களில் கண்டதாக நினைவில்லை இளங்கோவன் ஐயா. ஏதேனும் எடுத்துக்காட்டுகள் தாருங்கள். விபீஷணன் - விபீடணன் - வீடணன் என்று வடவெழுத்து ஒரீஇய வடசொல்லைக் கண்டிருக்கிறேன். அதே போன்ற இலக்கணத்தால் விஷயம் - விடயம் ஆகின்றதா?
ReplyDeleteவிதப்பு என்று இராம.கி. ஐயா புழங்குவதைக் கண்டு அந்தச் சொல்லை ஏற்ற இடங்களில் நானும் புழங்குகிறேன் ஐயா.