Friday, April 18, 2008
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என்
உளமே புகுந்தவதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே!
வேயுறு தோளி பங்கன் - மூங்கிலை ஒத்த தோளினை உடைய உமையன்னைக்கு தன் உடம்பினில் பங்கு கொடுத்திருக்கும் ஐயன்
விடம் உண்ட கண்டன் - தேவர்களும் அசுரர்களும் அமுதம் வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய ஆலகால விஷத்தை உயிர்களைக் காக்கும் பொருட்டுப் பருகி அது அன்னையின் திருக்கரங்களால் தடுக்கப்பட்டு திருக்கழுத்தினில் தங்கிவிட அதனால் கறுத்த கழுத்தினையுடைய கருணை வள்ளல்
மிக நல்ல வீணை தடவி - மிக இனிமையான இசையை எழுப்பும் வீணையைத் தன் திருக்கரங்களால் தடவிக் கொண்டு
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து - களங்கமற்ற பிறையையும் கங்கையையும் தன் திருமுடி மேல் அணிந்து கொண்டு (சந்திரன் இயற்கையாய் களங்கமுள்ளவன். அவன் ஐயன் திருமுடியில் அமர்ந்ததால் அவன் களங்கம் நீங்கி மாசறு திங்களானான்).
என் உளமே புகுந்த அதனால் - அவனாகவே அவன் அருளை முன்னிட்டு என் உள்ளத்தில் புகுந்து நிறைந்ததனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே - சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்னும் ஒன்பது கோள்களும் (பாம்பு இரண்டு ராகுவும் கேதுவும்)
ஆசறு நல்ல நல்ல - ஒரு குற்றமும் இல்லாதவை
அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே - அவையெல்லாம் ஈசன் அடியவர்க்கு மிக மிக நல்லவையாகும்.
இந்த இடுகை 'கோளறு பதிகம்' பதிவில் 1 ஏப்ரல் 2006 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
ReplyDelete23 comments:
Merkondar said...
//(சந்திரன் இயற்கையாய் களங்கமுள்ளவன். அவன் ஐயன் திருமுடியில் அமர்ந்ததால் அவன் களங்கம் நீங்கி மாசறு திங்களானான்).//
சந்திரன்என்றாலே களங்கமுள்ளது தானே அய்யன் தலையில் அமர்ந்து விட்டால் அது எப்படி களங்கமின்றிப் போம்.
April 01, 2006 5:09 PM
--
செல்வன் said...
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிரண்டும் //
இவை வார நாட்களை குறிக்கும் விதமாகவும் உள்ளதே?தற்செயலா அல்லது இன்னொரு மறைபொருளும் இந்த வரிகளுக்கு உண்டோ?
April 01, 2006 5:33 PM
--
Ram.K said...
//மிக நல்ல வீணை தடவி//
அழகான வரிகள்.
இப்பாடலில் இவ்வரிகளின் பங்களிப்பு சற்று விளக்கமாக என்னை யோசிக்க வைக்கிறது.
நன்றி.
April 02, 2006 6:35 AM
--
G.Ragavan said...
இறைவனைப் பணியும் அன்பர்களுக்கு எதனாலும் பிழையில்லை.
எந்த நாளும் எந்த பொழுதும் எந்த வினையும் எந்தத் தீமையும் கெடுதி செய்யாது என்பதைச் சொல்லும் பாடலிது.
வழக்கமான எளிய விளக்கம் குமரன். தொடரட்டும் இந்தத் தமிழ்ப் பணி.
April 02, 2006 10:16 AM
--
G.Ragavan said...
// சந்திரன்என்றாலே களங்கமுள்ளது தானே அய்யன் தலையில் அமர்ந்து விட்டால் அது எப்படி களங்கமின்றிப் போம். //
தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றால் தூயவராகி மேலைத் தொல்கதி அடைவர் - இது தாங்கள் அறியாததா என்னார்....திருமுன்னுற்றாலே இந்நிலை என்றால் ஐயன் திருமுடி கண்டால்....
April 02, 2006 10:17 AM
--
செல்வன் said...
சந்திரன்என்றாலே களங்கமுள்ளது தானே அய்யன் தலையில் அமர்ந்து விட்டால் அது எப்படி களங்கமின்றிப் போம்//
அவன் பெயரை ஒரு தரம் சொன்னாலே 7 ஜென்ம வினையும் பஞ்சாய் பறக்குமே?அவன் தலையில் அமர்ந்தால் என்ன பலன் கிடைக்கும் என கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லையே?களங்கம் போகாமலா இருக்கும்?
கண்பதி என்றாலே கலங்குமாம் வல்வினை.அப்படிப்பட்ட கணபதியே ஒரு தரம் பிறையை தன் தலையில் அணிந்து பாலச்சந்திரன் என பெயர் பெற்றாராம்.பிறை செய்த பாக்கியம் என்னவோ?
April 02, 2006 12:09 PM
--
சிவமுருகன் said...
தங்களின் விளக்கம் அருமையிலும் அருமை.
//ஐயன் திருமுடியில் அமர்ந்ததால் அவன் களங்கம் நீங்கி மாசறு திங்களானான்//
பாதத்தில் விழுந்தவனே பேறு பெரும் பொழுது தலையில் அமர்ந்தவன்.
(ஈசனுடைய)ஞானசம்பந்த பெருமானின் வர்ணனனை அதுவும் உங்களுடய விளக்கம், நேரடியாக உண்ணத்தகுந்த திராக்ஷை பழம்.
April 02, 2006 10:19 PM
--
குமரன் (Kumaran) said...
உண்மை தான் என்னார் ஐயா. அதனால் தான் சீர்காழிப்பிள்ளையார் மாசறு திங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
April 04, 2006 7:33 AM
--
குமரன் (Kumaran) said...
செல்வன், நானும் முதலில் வார நாட்களைக் குறிப்பது போல் இருக்கிறதே என்று தான் எண்ணினேன். ஆனால் 'பாம்பிரண்டும் உடனே' என்று சொல்லியிருப்பதால் இங்கே நாட்களைக் குறிக்கவில்லை; நவ கோள்களைத் தான் குறித்திருக்கிறார் என்று தோன்றியது. முன்னோர்களும் அவ்வாறே பொருள் சொல்லியிருக்கிறார்கள்.
April 04, 2006 7:35 AM
--
குமரன் (Kumaran) said...
இராமபிரசாத் அண்ணா, இந்த வரிகள் உங்களை என்ன யோசிக்க வைக்கிறது என்று சொல்லவில்லையே.
April 04, 2006 7:36 AM
--
குமரன் (Kumaran) said...
நன்றி இராகவன்.
April 04, 2006 7:37 AM
--
குமரன் (Kumaran) said...
நல்ல பாடலைச் சொல்லியிருக்கிறீர்கள் இராகவன். ஐயனின் கருணையே கருணை.
April 04, 2006 7:38 AM
--
குமரன் (Kumaran) said...
செல்வன். மேலே இராகவன் தம்பியின் புகழ் பாடினார்; இங்கே நீங்கள் அண்ணனின் புகழ் பாடிவிட்டீர்கள்; நான் பதிவிலேயே அன்னை தந்தையர் புகழ் பாடிவிட்டேன். இந்தப் பதிவில் அவர்கள் நால்வரும் இருக்கும் படத்தைப் போட்டதாலோ என்னவோ எல்லாரையும் புகழ்ந்தாயிற்று. :-)
April 04, 2006 7:40 AM
--
குமரன் (Kumaran) said...
மிக்க நன்றி சிவமுருகன்.
April 04, 2006 7:41 AM
--
ஜெயஸ்ரீ said...
'கற்றுணை பூட்டியோர் கடலினிற் பாய்ச்சியும் நற்றுணையாவது ' நமச்சிவாயன் நாமமல்லவா?
அவன் உள்ளத்தில் புகுந்த பின் நாள் தான் என்ன செய்யும் ? கோள்கள் தான் என்ன செய்யும்? அவனது அடியார்களுக்கு எல்ல கோள்களும் நன்மையே செய்யும்.
அருணகிரியாரும் இதையே சொல்கிறார்.
நாளென் செயும்? - வினைதானென்செயும்? - யெனை நாடி வந்த
கோளென் செயும்? - கொடுங்கூற்றென் செயும்? - குமரேசர் இரு
தாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும், ஷண்முகமும்,
தோளும், கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே
April 04, 2006 8:16 AM
--
குமரன் (Kumaran) said...
பாடலைச் சொன்னதற்கு நன்றி Jayashree. இந்தப் பாடலுக்கு நான் கூடலிலும் இராகவன் தன் இனியது கேட்கின் பதிவிலும் விளக்கம் சொல்லியிருக்கிறோம். பார்த்தீர்களா?
http://koodal1.blogspot.com/2005/11/55.html
http://iniyathu.blogspot.com/2005/11/blog-post_13.html
April 04, 2006 8:21 AM
--
தி. ரா. ச.(T.R.C.) said...
மிக நல்ல வீணை தடவி - மிக இனிமையான இசையை எழுப்பும் வீணையைத் தன் திருக்கரங்களால் தடவிக் கொண்டு
குமரன்
இரவணன் ஒரு மிகச்சிறந்த வகையில் வீணை வாசிப்பதில் வல்லவன். வீணைக்கொடியுடைய வேந்தன்.சிவனேயே வீணாகாணத்தால் மகிழ்வித்தவன்.அப்பேற்ப்பட்ட இராவணனுக்கே வீணை இசையை கற்பித்தவ்ர் சிவபெருமான். அதனால் இங்கு தடவிக்கொண்டு என்று இருப்பதைவிட வாசித்துக்கொண்டு என்ற பொருளில் எடுத்துக்கொள்ளலாமா தி ரா ச
10:00 AM
April 05, 2006 2:35 AM
--
குமரன் (Kumaran) said...
ஆமாம் தி.ரா.ச. நீங்க சொல்றது மிக்க சரி. மிக நல்ல வீணைதடவிங்கறதைப் படிச்சப்ப எனக்கு வீணைக் கொடியுடைய வேந்தனின் நினைவு தான் வந்தது. தடவி என்பதற்கு வாசித்துக் கொண்டு என்று தான் முன்னோர்கள் பொருள் சொல்லியிருக்கிறார்கள்.
April 05, 2006 4:29 AM
--
சிவா said...
குமரன்! கதை அவ்வளவு தானா..ம்ம்ம் :-(. பாடலை எல்லாம் ரொம்ப எளிமையா அழகா எளிமையா விளக்கி இருக்கீங்க. இதுவும் திருவாசகம் மாதிரி தானா. நல்லா இருக்கும் போலையே..உங்கள் திருவாசக விளக்கத்தை மிகவும் ரசித்தவன் நான். இதுவும் அது போல தான் தெரிகிறது. தொடருங்கள்.
April 05, 2006 7:55 PM
--
குமரன் (Kumaran) said...
ஆமாம் சிவா. கதை அவ்வளவு தான். இதுவும் திருவாசகம் மாதிரி தான். தேவாரத்தில் திருஞானசம்பந்தர் பாடிய பாடல்கள் இவை. தொடர்ந்து படிங்க. ரொம்ப நன்றி.
April 07, 2006 8:38 PM
--
ரங்கா - Ranga said...
குமரன்,
"மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து" என்பதற்கு வேறு விளக்கமும் உண்டு. சந்திரனின் தேய்பிறையை குறைவுடையது; வளர்பிறை குறைவற்றது என்றும் சொல்லப்படும். அதனால் சிவபெருமான் அணிந்திருப்பது வளர்பிறை என்பதை குறிக்க, மாசறு திங்கள் என்று வர்ணிக்கப் படுகிறது.
ரங்கா.
April 08, 2006 5:20 AM
--
குமரன் (Kumaran) said...
தங்கள் விளக்கத்திற்கு நன்றி ரங்கா அண்ணா. அனைத்து மங்கள நிகழ்வுகளையும் வளர்பிறையில் வைத்துக் கொண்டால் நல்லது என்று பெரியவர்கள் சொல்லிக் கேட்டது நினைவிற்கு வருகிறது.
April 13, 2006 4:17 AM
--
குமரன் (Kumaran) said...
மாசறு திங்கள் கங்கை என்பதற்கு இன்னொரு பொருளும் இப்போது தோன்றுகிறது.
மாசறு என்பது வினைத்தொகை என்பதால் மாசு அறுத்த, மாசு அறுத்துக் கொண்டிருக்கும், மாசு அறுக்கப் போகும் என்று மூன்று காலங்களிலும் பொருள் கொள்ளலாம். அதனால் மாசறு என்பதை திங்களுக்கும் அடைமொழியாகக் கொள்ளலாம். கங்கைக்கும் அடைமொழியாகக் கொள்ளலாம்.
திங்களுக்கு அடைமொழியாகக் கொள்ளும் போது மாசு அறுந்த திங்கள் என்ற பொருளினைக் கொள்ளலாம்.
கங்கைக்கு அடைமொழியாகக் கொண்டால், நம் குற்றங்களை (பாவங்களை) அறுத்த, அறுத்துக் கொண்டிருக்கும், அறுக்கப் போகும் கங்கை என்று பொருள் கொள்ளலாம்.
April 13, 2006 4:19 AM
ஏப்.17--வியாழன் பிரதோஷம்.
ReplyDeleteஅதைத் தொடர்ந்து எவ்வளவு சரியாக உங்கள் பதிவு,மறுபதிவாக வந்திருக்கிறது, பாருங்கள்..
அவன் அருளால் அவன் தாள் வணங்கி....
இறையருள் முன்னிற்கட்டும். நன்றிகள் ஜீவி ஐயா.
ReplyDelete