Wednesday, March 05, 2008

அவசியம், அநாவசியம், அத்தியாவசியம்....

இந்த அவசியம் என்ற சொல்லைப் படிக்கும் போதோ கேட்கும் போதோ இது தமிழ்ச்சொல் இல்லை என்று தோன்றுகிறதா? இல்லையல்லவா? இந்தச் சொல் அந்த அளவுக்கு நம் உரையாடல்களில் புழங்குகிறது. ஆனால் சிலர் எப்போதாவது அநாவசியம், அத்தியாவசியம் என்ற சொற்களைப் பயன்படுத்தினால் அப்போது என்ன சொல்கிறார்கள் என்று புரிந்தாலும் இந்த சொற்கள் தமிழல்லவே என்று தோன்றுகிறதா? அநாவசியம், அத்தியாவசியம் என்ற இரண்டும் அவசியம் என்பதில் இருந்து பிறந்தவை தான். அப்படியிருக்க அவை மட்டும் அந்நியமாகத் தோன்றுவதேன்? :-)

அவசியம், அநாவசியம், அத்தியாவசியம் இம்மூன்றும் வடமொழிச் சொற்கள். அவை வடமொழி என்பதையே மறுக்கும் அளவிற்கு இன்று மக்களிடையேயும் தொலைக்காட்சிகளிலும் புழங்குபவை. அவசியம் என்பதற்குத் 'தேவை, தேவையானது/வை,வேண்டியது/வை' போன்றவற்றைப் பயன்படுத்தலாம். அநாவசியம் என்பதற்குத் 'தேவையற்றது/வை, வேண்டாதது/வை' போன்றவற்றைப் பயன்படுத்தலாம். அத்தியாவசியம் என்பதற்கு 'இன்றியமையாதது/வை' என்பதனைப் புழங்கலாம். ஆனால் நம்மவர்கள் தான் மிகத் தெளிவானவர்கள் ஆயிற்றே. க்யூ வரிசை, சாப்புக் (Shop) கடை போன்றவற்றைப் போல இன்றியமையாதது என்று சொல்ல 'அவசியத் தேவை' என்பார்கள். :-)

***
இது 'சொல் ஒரு சொல்' பதிவில் 25 ஏப்ரல் 2006 அன்று இட்ட இடுகை.

3 comments:

  1. இது 'சொல் ஒரு சொல்' பதிவில் 25 ஏப்ரல் 2006 அன்று இட்ட இடுகை.

    அப்போது வந்த பின்னூட்டங்கள்:

    37 கருத்துக்கள்:

    ஜெயக்குமார் said...
    ரொம்ப அவசியம்... மன்னிக்கவும் ரொம்ப தேவை

    April 25, 2006 4:29 PM

    johan-paris said...
    ஈழத்தில்; அவசியம்-என்ற சொல்லுக்குப் பதிலாகக் கட்டாயம்;எனும் சொல்லையும் பாவிப்போம். உ+ம்:- என் திருமணத்துக்குக் கட்டாயம் வரவேண்டும். ;இம் மருந்தைக் கட்டாயம்; சாப்பாட்டுக்குப் பின் போடவும்.
    யோகன்
    பாரிஸ்

    April 25, 2006 5:19 PM

    கோவி.கண்ணன் said...
    புரிஞ்சி போச்.

    ஒரு தேவைக்கு கூட தேவையில்லாமல், இன்றியமையாததாக இருந்தாலும் அவசியத்தையோ, அநாவசியத்தையோ, அத்தியாவசியமாக பயன்படுத்த கூடாதுன்னு சொல்றீக.

    ஹி... ஹி...

    சரியா ?

    April 25, 2006 7:53 PM

    குமரன் (Kumaran) said...
    ஜெயக்குமார். இந்தப் பதிவு ரொம்பத் தேவையா என்று கேட்கிறீர்களா இல்லை ரொம்பத் தேவை என்று சொல்கிறீர்களா? புரியவில்லையே? :-)

    தேவையா இல்லையா என்பதை அவரவர் தான் முடிவு செய்து கொள்ளவேண்டும். இல்லையா?

    April 25, 2006 9:20 PM

    குமரன் (Kumaran) said...
    யோகன் ஐயா. சரியான நேரத்தில் சொன்னீர்கள். கட்டாயம் என்ற பொருளிலும் நாம் 'அவசியம்' என்ற சொல்லைப் புழங்குகிறோம். இனிமேல் அந்த இடங்களில் கட்டாயத்தைப் புழங்கவேண்டும். (சரி. கௌசிகனுக்காக புழங்கலாமே என்று சொல்லிவிடுகிறேன். இல்லையேல் அவர் சினம் கொள்வார்). :)

    April 25, 2006 9:22 PM

    Merkondar said...
    நல்ல ஆராய்ச்சி

    April 25, 2006 9:26 PM

    குமரன் (Kumaran) said...
    புரிஞ்சிப் 'போச்சா'? இல்லை புரிஞ்சி 'இருக்கா' கோவிகண்ணன். உங்க பின்னூட்டத்தைப் பார்த்தா புரிஞ்சி இருக்கிற மாதிரி தான் தெரியுது. :-)

    ஆமாம். நீங்கள் சொல்வது மெத்தச் சரி.

    April 25, 2006 9:29 PM

    குமரன் (Kumaran) said...
    நன்றி என்னார் ஐயா.

    April 25, 2006 9:30 PM

    குமரன் (Kumaran) said...
    ஜெயக்குமார். ஒன்று கேட்க மறந்து விட்டேன். இது வரை யாராவது உங்கள் புன்னகை என்ன விலைன்னு உங்ககிட்ட கேட்டிருக்காங்களா? :-)

    April 25, 2006 9:33 PM

    SK said...
    // குமரன் (Kumaran) said...
    ஜெயக்குமார். ஒன்று கேட்க மறந்து விட்டேன். இது வரை யாராவது உங்கள் புன்னகை என்ன விலைன்னு உங்ககிட்ட கேட்டிருக்காங்களா? :-)//



    இந்தக் கேள்வி ரொம்ப அவசியமா? [தேவையா?, கட்டாயமா?]

    உங்களுக்கே இது அநாவசியமாகத் [தேவையில்லாததாகத், கட்டாயமில்லாததாகத்] தெரியவில்லை?

    அப்படி என்ன அத்தியாவசியமாக [கடுந்தேவையாக, தீராத கட்டாயயமாக] இந்தக் கேள்வி?

    அடிக்க வர்றதுக்குள்ளே, நான் ஜூட்!

    [Pl. remove my earlier post! Tx.]

    April 25, 2006 11:01 PM

    சிவமுருகன் said...
    நல்ல கருத்து.

    தினமும் பேசும், எழுதும் தமிழில் இத்தனை சிந்தனைகளா? நானும் இதை கட்டாயமாக பயன்படுத்துகிறேன்.

    April 25, 2006 11:20 PM

    பொன்ஸ்~~Poorna said...
    அனாவசியம் மேல கூட எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது.. ஆனா இந்த அவசியம் பாருங்க, கொஞ்சம் கூட சந்தேகத்துக்கு இடமில்லாம தமிழ்ல வந்து ஒளிஞ்சிருகு.. இனிமே இன்றியமயாம, கட்டாயத்தை பயன்படுத்திட்டாப் போச்சு..

    ஒரு சந்தேகம் - சந்தேகம் தமிழா இல்லையா? (ஒரு மாதிரி வடமொழி வாசனை வருது.. அதான்.. ஐயந்திரிபற தெரிஞ்சிக்கலாமேன்னு,, )

    April 25, 2006 11:24 PM

    குமரன் (Kumaran) said...
    எனக்கும் அந்த சந்தேகம் வந்தது பொன்ஸ். சந்தேகம் என்பது தமிழ் தானா என்று. அதற்குப் பதிலாக ஐயம் என்பதைப் பயன்படுத்தலாம் என்று தான் நினைவில் வந்ததே ஒழிய சந்தேகம் தமிழா இல்லையா என்ற சந்தேகம் தீரவில்லை. பார்ப்போம். யாராவது வந்து அதனைப் பற்றியும் சொல்கிறார்களா என்று.

    April 25, 2006 11:31 PM

    குமரன் (Kumaran) said...
    என்ன எஸ்.கே. ஐயா (இந்தப் பதிவில் மட்டும் நீங்கள் ஐயா தான் சார் இல்லை)? ஜீட் என்று சொல்லிவிட்டு இங்கேயே இன்னும் இருக்கிறீர்கள்? இரண்டாவது பின்னூட்டமும் போட்டுக் கொண்டு. :-)

    April 25, 2006 11:33 PM

    குமரன் (Kumaran) said...
    ஆமாம் சிவமுருகன். கொஞ்சம் நெருங்கிப் பார்த்தால் நிறைய விஷயம் அகப்படும்.

    அது சரி. விஷயம் நிச்சயமாய் வடமொழிதான். அதற்கு நேரான தமிழ்ச்சொல் என்ன?

    April 25, 2006 11:36 PM

    கோவி.கண்ணன் said...
    //ஆமாம் சிவமுருகன். கொஞ்சம் நெருங்கிப் பார்த்தால் நிறைய விஷயம் அகப்படும்.//
    குமரன் இந்த விசயத்தை ஒரு செய்தியா எடுத்திகிட்டிங்க. எழுதரத்துக்கு நிறைய செய்திகள் அகப்படும். என்ன நாஞ் சொல்றது ?

    April 25, 2006 11:53 PM

    வெற்றி said...
    அன்பின் குமரன் அவர்கட்கு,
    தங்களின் பணி மிகவும் பாராட்டத்தக்கது. நான் தமிழ்மணத்திற்கு வந்ததே என் தமிழ் அறிவை வளர்த்துக் கொள்ளத்தான். சிங்கள வெறியர்களின் கொடுமைகளால் சிறு வயதிலேயே ஈழத்தை விட்டு வெளியேறி மேற்குலக நாட்டில் வசிப்பதால் தமிழ் மொழியை முறையாக கற்க வசதி கிடைக்கவில்லை. தங்களின் இத் தளத்தின் மூலம் என் எண்ணம் நிறைவேறும் என்பதில் எனக்கு சிறிதளவும் ஜயம் இல்லை. நன்றி.

    April 26, 2006 1:01 AM

    பொன்ஸ்~~Poorna said...
    வெற்றி, அது ஜயம் இல்லீங்க.. ஐயம்..

    குமரன், விஷயம்... கருத்து? செய்தி?

    April 26, 2006 6:47 AM

    செந்தில் குமரன் said...
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள். 169 என்பது எதைக் குறிக்கிறது?? அது சொல்லின் எண்ணிக்கையை குறிக்கிறதானால் மீதம் உள்ள 168 சொட்கள் வேறு இடத்தில் உள்ளதா அப்படி உள்ளதெனில் அதன் சுட்டியைக் கொடுக்கவும்

    April 26, 2006 7:59 AM

    G.Ragavan said...
    நல்ல அறிமுகம் குமரன்.

    நான் பொதுவாகவே கட்டாயம் அல்லது தேவையைப் பயன்படுத்துவேன்...

    இது தேவையா - என்று கேட்பது அவசியமா என்பதை விட எளிது.

    ரொம்பத் தேவை இப்போ....இதுவும் நன்றாகவே பொருந்துகிறது.

    அநாவசியம் நம்மை வசியம் செய்துதான் வைத்திருக்கிறது. ஆனாலும் நான் பயன்படுத்துவது வீண்.

    இதெல்லாஞ் செஞ்சாலும் வீண்தான் - என்பதும் மிக எளிதே.

    பாரிஸ்-ஜோகன் குறிப்பிட்டிருப்பது போல, அழைப்புகளில் கட்டாயம் பயன்படுத்துவது மிகச்சரியே. தெற்கிலும் அப்படித்தான் சொல்வார்கள்.

    April 26, 2006 8:31 AM

    tbr.joseph said...
    மலையாளத்தில் அவஸ்யம் உண்டோ என்பார்கள் இது தேவையா என்று பொருள்பட.

    அவஸ்யம் வரணும் கேட்டோ என்பார்கள் கட்டாயம் வரவேண்டும் என்று பொருள்பட.

    தமிழில் இது ரொம்ப அவசியம் என்கிறோம் நக்கலாக.

    ஆனால் உங்களுடைய இந்த பதிவு மிகவம் தேவைதான்..:-)

    April 27, 2006 3:15 AM

    வெற்றி said...
    பொன்ஸ்,
    "வெற்றி, அது ஜயம் இல்லீங்க.. ஐயம்.. "

    தங்களின் தகவலுக்கு நன்றிகள். பொன்ஸ் நான் மேலே குறிப்பிட்டது போல் இது தான் எனது சிக்கல். தமிழ் எழுதும் போது பல எழுத்துப் பிழைகள் இலக்கணப் பிழைகள் வந்து விடுகிறது. தங்களைப் போன்ற அன்பர்களின் உதவியுடன் இச் சிக்கலை சரி செய்யலாம் என்பதில் எனக்கு சிறிதளவும் ஐயம் இல்லை. மிக்க நன்றி.

    April 27, 2006 10:19 AM

    குமரன் (Kumaran) said...
    வெற்றி. உங்களுக்கு ஜயம்ன்னா ரொம்பப் பிடிக்குமோ? பேரே வெற்றின்னு தானே வச்சிருக்கீங்க? அதனால வெற்றிக்கு வடமொழியான ஜயம் ரொம்பப் பிடிக்குதோன்னு நினைச்சேன். :-)

    April 27, 2006 10:35 AM

    வெற்றி said...
    அன்பின் குமரன்,
    //வெற்றி. உங்களுக்கு ஜயம்ன்னா ரொம்பப் பிடிக்குமோ? பேரே வெற்றின்னு தானே வச்சிருக்கீங்க? அதனால வெற்றிக்கு வடமொழியான ஜயம் ரொம்பப் பிடிக்குதோன்னு நினைச்சேன். :-)//

    ஜயம் வடமொழிச் சொல்லா? சொன்னால் நம்ப மாட்டீர்கள். நான் ஜயம் எனும் சொல்லுக்குப் பதிலாக சந்தேகம் எனும் சொல்லைத்தான் பாவிக்க இருந்தேன். ஆனால் சந்தேகம் எனும் சொல் வடமொழியாக இருக்குமோ என சந்தேகமாக இருந்ததால் ஜயம் எனும் சொல்லைப் பாவித்தேன். ஜயம் என்பது சந்தேகம் எனும் வடமொழிச் சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்றே இது வரை நினைத்திருந்தேன். என் பிழையை அன்புடனும் நகைச்சுவையாகவும் சுட்டிக்காட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். எதிர் காலத்திலும் நான் விடும் பிழைகளை சுட்டிக்காட்ட வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    //பேரே வெற்றின்னு தானே வச்சிருக்கீங்க? //
    எனக்கு பெற்றோர் இட்ட பெயர் விஜே. சமீபத்தில் விஜே என்பது வடமொழிச் சொல்லெனெ என் நண்பர் ஒருவர் சொன்னார். அதனால் விஜே எனும் சொல்லுக்கு ஒத்த கருத்துள்ள வெற்றி எனும் பெயரில் இணையத்தில் எழுதுகின்றேன்.

    //அதனால வெற்றிக்கு வடமொழியான ஜயம் ரொம்பப் பிடிக்குதோன்னு நினைச்சேன். ://

    உண்மையில் எது தமிழ்ச் சொல் எது வடமொழிச் சொல் என்று தெரியாத குழப்பம் தான் காரணம். உங்களின் 'சொல் ஒரு சொல்' முயற்சி என் போன்ற தமிழ் அறிவு குறைந்தவர்களுக்கு ஒர் நற்செய்தி. தொடர்ந்தும் வட மொழிக்கு இணையான பல தமிழ் சொற்களைத் தருவீர்கள் என எதிர் பார்க்கிறேன்.

    April 27, 2006 11:48 AM

    குறும்பன் said...
    உ+ம்:- என் திருமணத்துக்குக் கட்டாயம் வரவேண்டும். - johan paris
    உங்க திருமணத்திற்கு கண்டிப்பா வர்ரேன். நாளைக்கு கண்டிப்பா நீங்க வீட்டுக்கு வரனும். "கட்டாயம்", "அவசியம்" வரும் இடங்களில் நான் "கண்டிப்பா" என்ற சொல்லை புழங்குகிறேன்.
    இடத்திற்கு தகுந்தாற் போல் புழங்கவேண்டும். இது அவசியமா? என்று வரும் இடங்களில் இது தேவையா? என்று புழங்குகிறேன்.

    பயன் என்பது தமிழ் சொல்லா? இது தமிழ் சொல்போல் எனக்கு தெரிகிறது. பயன் தமிழ் சொல் எனில் பயன்பாடு, பயன்படுத்துவது என்பது எப்படி தமிழ் அல்லாமல் போகும்?

    April 27, 2006 9:49 PM

    குமரன் (Kumaran) said...
    ஆமாம் கோவிகண்ணன். ஆனா நிறைய இடங்கள்ல விசயத்துக்கு பதிலா செய்தியைப் பயன்படுத்தமுடியலைங்க. அதான் இன்னொரு சொல் இருக்கான்னு பாக்கணும். கட்டாயம் இருக்கும்.

    April 28, 2006 2:08 PM

    குமரன் (Kumaran) said...
    வெற்றி அவர்களே. உங்களின் தன்னடக்கம் மிக்க மெச்சத் தக்கது. தமிழை முறையாகக் கற்க வசதி கிடைக்கவில்லை என்று சொல்லும் நீங்கள் இங்கு தமிழகத்தில் பிறந்து வளர்ந்து தற்போது வலையுலகில் எழுதிக்கொண்டு இருக்கும் பலரை விட அருமையான தமிழில் எழுதியிருக்கிறீர்கள் உங்கள் பின்னூட்டத்தை. உங்கள் பின்னூட்டம் கண்டு மிக மகிழ்ந்தேன். தங்கள் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.

    நிறைய பேருக்கு ஜயம், ஐயம் வேற்றுமை தெரிவதில்லை. இரண்டுமே பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருப்பதால். ஆனால் உச்சரிப்பில் வெவ்வேறு. வெற்றியென்று பொருள் படும் ஜயம் (jayam) ; சந்தேகம் என்று பொருள் படும் ஐயம் (aiyam).

    April 28, 2006 2:11 PM

    குமரன் (Kumaran) said...
    ஆமாம் பொன்ஸ். கருத்து, செய்தி, இவைகளைப் பயன்படுத்தலாம் தான். ஆனாலும் இன்னொரு சொல்லும் வேண்டுமென்று தான் தோன்றுகிறது. எல்லா இடங்களிலும் கருத்து, செய்தி என்பவற்றை விசயத்திற்குப் பதிலாகப் புழங்க முடியவில்லை. விடயம் என்று சொல்லவும் மனமில்லை.

    April 28, 2006 2:13 PM

    குமரன் (Kumaran) said...
    செந்தில் குமரன் (குமரன் எண்ணம்). 169 என்பது இதுவரை தமிழ்மணத்தில் வெளிவந்த என் பதிவுகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. எனது எல்லா வலைப்பூக்களையும் சேர்த்து. அதனால் அதனை சொல்லின் எண்ணிக்கை என்று எண்ண வேண்டாம். இந்தப் பதிவை மூன்று வாரங்களுக்கு முன் தான் தொடங்கினேன்.

    உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

    April 28, 2006 2:15 PM

    குமரன் (Kumaran) said...
    நீங்கள் இந்த சொற்களுக்குப் பதிலாக எந்தச் சொற்களைப் புழங்குகிறீர்கள் என்று சொன்னதற்கு மிக்க நன்றி இராகவன்.

    April 28, 2006 2:16 PM

    குமரன் (Kumaran) said...
    ஜோசஃப் ஐயா. மலையாளத்தார்கள் பயன்படுத்துவது வடமொழிச் சொல் தான். அங்கு அது பிரச்சனை இல்லை; ஏனெனில் மலையாளத்தில் மிகுதியாக வடமொழிச் சொற்கள் உள்ளன.

    //தமிழில் இது ரொம்ப அவசியம் என்கிறோம் நக்கலாக.

    ஆனால் உங்களுடைய இந்த பதிவு மிகவம் தேவைதான்..:-)
    //

    நீங்களும் நக்கலாக சொல்கிறீர்களா இல்லை பாராட்டிச் சொல்கிறீர்களா? புரியவில்லையே :-)

    April 28, 2006 2:18 PM

    குமரன் (Kumaran) said...
    வெற்றி. உண்மையைச் சொல்வதென்றால் எங்கள் எல்லாரையும் விட பிழையில்லாமல் தமிழில் எழுதியிருப்பது நீங்கள் தான். எழுத்துப் பிழைகளும் இல்லை; இலக்கணப் பிழைகளும் இல்லை.

    April 28, 2006 2:20 PM

    குமரன் (Kumaran) said...
    ஆமாம் வெற்றி. விஜய் என்றாலும் ஜயம் என்றாலும் வெற்றி என்று தான் பொருள். இரண்டுமே வடமொழிச் சொற்கள். எனக்குத் தெரிந்து வலைப்பதிவர்களில் பலர் தங்களின் வடமொழிப் பெயருக்கு சரியான தமிழ்ப்பெயரில் தான் எழுதுகிறார்கள், உங்களைப் போல்.

    April 28, 2006 2:22 PM

    குமரன் (Kumaran) said...
    குறும்பன். யோகன் ஐயாவிற்குத் திருமணமாகி பல வருடங்கள் ஆகிவிட்டன. அதனால் அவர் தான் உங்கள் திருமணத்திற்கு (இன்னும் ஆகவில்லை என்றால்) கட்டாயம் / கண்டிப்பா வரவேண்டும். :-) அவரைப் பற்றிய மேல் தகவலுக்கு இந்தப் பதிவைப் பாருங்கள்.

    http://koodal1.blogspot.com/2006/03/156.html

    பயன் என்பது தமிழ்ச் சொல் தான். பயன்படுத்துவது, பயன்பாடு என்பவையும் தமிழே. ஆனால் புழங்குதல் என்ற நல்ல தமிழ்ச் சொல் வழக்கில் மீண்டும் வரவேண்டும் என்பதால் அதனைப் பாவிக்கத் தொடங்கினேன். :-)

    April 28, 2006 2:26 PM

    பொன்ஸ்~~Poorna said...
    விஷயம் = சங்கதி?

    April 30, 2006 4:57 AM

    குமரன் (Kumaran) said...
    நன்றி பொன்ஸ். நல்ல தமிழ்ச்சொல்லை எடுத்துக் கொடுத்ததற்கு.

    April 30, 2006 10:55 AM

    ReplyDelete
  2. தேவையான ஒன்று தான்..சந்தேகமில்லாமல்.....

    ReplyDelete
  3. உண்மை தான் அரவிந்த். ஐயமே இல்லை. நன்றிகள்.

    ReplyDelete