Wednesday, March 05, 2008

தினமலர் சொல்வது உண்மையா?

இப்போது தான் தினமலரில் வந்திருக்கும் இந்தச் செய்தியைக் கண்டேன். செய்தியின் தலைப்பைப் பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இடுகைகளின் தலைப்பில் கவன ஈர்ப்பைச் செய்வது போல் :-) தினமலர் செய்தியின் தலைப்பும் அமைந்திருக்கிறதா என்று ஐயம். படத்தைப் பார்த்தால் ஐயப்படத் தேவையில்லை என்றும் தோன்றுகிறது. அறிந்தவர் சொல்லுங்கள்.

இதோ தினமலர் செய்தி:

05. சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடினர் தமிழ் ஆர்வலர்கள் : மாலை மரியாதையுடன் தீட்சிதர்கள் வரவேற்பு



சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவில் திருச்சிற்றம்பல மேடையில் தமிழ் ஆர்வலர்கள் ஐந்து பேர், 10 நிமிடம் தேவாரம் பாடினர். மாலை மரியாதையுடன் அவர்களுக்கு வரவேற்பு கொடுத்தனர் தீட்சிதர்கள்.



சிதம்பரம், நடராஜர் கோவிலில் திருச்சிற்றபல மேடையில் தேவாரம், திருவாசகம் பாட சிவனடியார் ஆறுமுகசாமி முயற்சித்தார். 2005 ம் ஆண்டு முயற்சித்த போது தாக்கப்பட்டார். சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட தடைவிதிக்கப்பட்டிருந்தது. மேல் முறையீட்டில், பூஜை காலங்களை தவிர பிற நேரங்களில் பாடலாமென கடந்த ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து, அறநிலையத் துறையிடம் தீட்சிதர்கள் மேல் முறையீடு செய்தனர். இதை விசாரித்து, `பாடலாம்' என்று, கடந்த 29ம் தேதி அறநிலையத் துறை செயலர் சந்தானம் உத்தரவிட்டார்.

இதையடுத்து கடந்த 2 ம் தேதி, சிவனடியார் ஆறுமுகசாமி தனது ஆதரவாளர்களுடன் நடராஜர் கோவிலுக்கு தேவாரம் பாடச் சென்றார். அப்போது மோதல் ஏற்பட்டது. தீட்சிதர்கள் தரப்பில் 11 பேரும், ஆறுமுகசாமி தரப்பில் 34 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.தீட்சிதர்களுக்கு கண்டனம் தெரிவித்த தமிழக அரசு, `தமிழ் ஆர்வலர்கள் யார் வேண்டுமானாலும் கோவிலில் தேவாரம் பாடலாம்' என்று, உத்தரவிட்டது. அதை தொடர்ந்து நேற்று காலை 10 மணிக்கு புரட்சிகர மாணவர் முன்னணி, விவசாய விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, மக்கள் கலை இலக்கிய கழகம், மனித உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் சிதம்பரம் தெற்கு வீதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பின்னர் முற்பகல் 11.05 மணிக்கு கோவிலை நோக்கி ஊர்வலமாக வந்தனர். கோவில் தெற்கு வீதி கோபுர நுழைவு வாசலில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, 30 பேரை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்க முடியும். தேவாரம் பாட திருச்சிற்றம்பல மேடை மீது ஐந்து பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று கூறினர். அதனை ஒப்புக் கொண்டனர். 30 பேரையும் `மெட்டல் டிடக்டர்' கருவியால் சோதித்த பின் கோவிலுக்குள் அனுமதித்தனர்.

சிதம்பரம் உதவி எஸ்.பி., செந்தில்வேலன் தலைமையில் இரண்டு சப் -இன்ஸ்பெக்டர் உட்பட 15 போலீசார் சட்டை அணியாமல் திருச்சிற்றம்பல மேடையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். தமிழ் ஆர்வலர்கள் பொய்யூர் முருகன், ஆயுதகளம் சண்முகம் ஆகியோர் தலைமையில் சீர்காழியை சேர்ந்த ஏழுமலை, ரவி, ராஜேந்திரன் ஆகியோர் திருச்சிற்றம்பல மேடைக்கு சென்றனர். வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பினர். தீட்சிதர்கள் தரப்பில் தன்வந்திரி, சிவா ஆகியோர் தலைமையில் எட்டு தீட்சிதர்கள் மட்டுமே சிற்றம்பல மேடைக்குள் அனுமதிக்கப்பட்டனர். திருச்சிற்றம்பல மேடையில் காலை 11.15 மணி முதல் 10 நிமிடங்கள் தேவாரம் பாடினர். மேடைக்கு கீழே நின்ற பக்தர்களும் சேர்ந்து பாடினர். பாடி முடித்ததும் நடராஜருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தேவாரம் பாடிய தமிழ் ஆர்வலர்களுக்கு, தீட்சிதர்கள் தரப்பில் பொன்னாடை மற்றும் மாலை அணிவித்து கவுரவம் செய்யப்பட்டது. போலீசாரும் கவுரவிக்கப்பட்டனர். பாடிமுடித்து திருச்சிற்றம்பல மேடையில் இருந்து இறங்கிய தமிழ் ஆர்வலர்களை, போலீசார் பாதுகாப்புடன் வெளியே அழைத்து வந்தனர். கோவிலைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

நன்றி: தினமலர்

28 comments:

  1. நல்ல செய்திக்கு வாழ்த்துக்கள்!

    நா. கணேசன்

    ReplyDelete
  2. நானும் இது நல்ல செய்தி என்று தான் நினைக்கிறேன் கணேசன் ஐயா. தினகரனையும் பார்த்தேன் - அதில் இந்தச் செய்தி இல்லை. எழுத்துரு இன்மையால் தினமணியில் பார்க்க முடியவில்லை. வேறு ஏதேனும் செய்தித் தாளும் இதனை உறுதி செய்தால் மகிழ்வேன்.

    ReplyDelete
  3. மிகவும் மகிழ்ச்சியான செய்தி...

    ReplyDelete
  4. நல்ல செய்தி......நன்றி குமரன்.

    பெருமாளுக்கு பல நூறு வருடங்களாக கிடைத்த அதிர்ஷ்ட்டம் இன்று நடராஜருக்கும் கிடைத்தது போல :-)

    ReplyDelete
  5. நல்ல செய்தி & தகவல். உள் அரசியல் வராமல் பார்த்துக்கொள்வது அவசியம், இல்லீங்களா?

    ReplyDelete
  6. கெஞ்சினால் மிஞ்சுவதும்
    மிஞ்சினால் கெஞ்சுவதும்
    கொஞ்சியே வாழ்வார்க்கு
    கைவந்த கலையன்றோ!

    ReplyDelete
  7. நல்ல மகிழ்ச்சியான செய்தி.

    ReplyDelete
  8. இந்த நாள் இனிய நாள்!
    சிவராத்திரி அதுவுமாய் சிறப்பாகவே அமைந்து விட்ட நிகழ்ச்சி!

    ஆறுமுகச் சாமி ஐயா அவர்களும் சேதி கேட்டு மகிழ்ந்திருப்பார் என்றே எண்ணுகிறேன்! சிவராத்திரி அன்று நல்லெண்ண நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவித்து கசப்பைக் குறைத்து விட வேண்டும்!

    இனி ஒரு விதி செய்து - அதை எந்த நாளும் காக்க ஈசனருள் கனியட்டும்!

    திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!

    ReplyDelete
  9. செய்தி உண்மையே குமரன்!
    இதோ The Hindu நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தி!
    http://www.hindu.com/2008/03/06/stories/2008030659270800.htm

    அடிதடிச் செய்திகள் முன் பக்கத்தில் வந்து விடுகிறது! இந்த நல்ல செய்தி நாலாம் பக்கத்துக்குச் சென்று விட்டது! :-)

    இந்தச் செய்தியில் முதல்வர் கலைஞர் அனைவரையும் விடுவிக்க ஆணையிட்டுள்ளதாகவும் உள்ளது! முன்பு அடியேன் சொன்ன பின்னூட்டத்தில் போலவே இதுவும் மிகவும் மகிழ்ச்சி!

    ReplyDelete
  10. அது உண்மைதானாம்... ஆனால் பாடி முடித்து விட்டுச் சென்றதும் கோவிலுக்குத் தீட்டும் கழித்தார்களாம்..... :(

    http://thatstamil.oneindia.in/news/2008/03/06/tn-deekshidars-do-it-again.html

    ReplyDelete
  11. எல்லாம் சரிதான். தமிழர்கள் தேவாரம் பாடிய இடத்தை தீட்டு கழிப்பதற்காக கழுவி, பரிகார பூஜைகள் செய்தார்களாம் தீட்சிதர்கள் (thatstamil.com) இதற்கு அவர்களை பாடவிடாமல் தடுத்தே இருக்கலாம்.

    ReplyDelete
  12. தீட்சதர்கள் மிஞ்சவும் இல்லை;கெஞ்சவுமில்லை. தங்கள் மரியாதையையும் கௌரவத்தையும் காப்பாற்றிக் கொண்டார்கள். திருமுறைகள் இசைநிகழ்ச்சிக்குரிய பாடல்கள் அல்ல. ஆனால் ஒதுவார்கள் இசைக்கச்செரியைப் போல மேடையில் பாடுவதையே விரும்புவார்கள். திருமுறைகள் நம்பியாண்டார் நம்பிகள் ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகத்தில் கூறுவதைப் போல,'பன்மறையோர் செய்தொழிலும் பரமசிவா கமவிதியும், நமறையின் விதிமுழுதும் ஒழிவின்றி நவின்ற" தாகும். திருமஞ்சனம் முதியன செய்யும்போது பதிகம் பதிகமாக ஓதவேண்டும். அதற்கு வேதம் அத்தியயணம் செய்வது போலப் பாராயணம் செய்ய வேண்டும். அதற்கு இசையறிவு. பண்ணோடு கூடிய யாப்பறிவு வேண்டும்.கர்நாடக சங்கீத இசைப்பாட்டுக்கு போட்டியான இசைப்பாடல்களாகத் தேவாரப்பாடல்களைக் கருதியிருப்போருக்கு இது பயன்படாது. எப்படி ஒலிபெருக்கி வேண்டாமலும் பத்துப் பேர் நூறுபேர் சேர்ந்தாலும் ஒரே ஒத்திசையில் வேதம் ஓதுகின்றார்களோ அப்படித் திருமுறைகளையும் இசைக்க வேண்டும், திவ்வியப் பிரபந்தத்தை அந்தமுறையில் பெருமாள் கோவிலில் இசைக்கிறார்கள். அதுதால் ஓதுவது.
    திருமுறைகளில் நம்பிக்கையிலாதவர்களின் பலத்தில் திருமுறைகளுக்குப் போராட்டம் நடத்த வேண்டிய அவலநிலை பரிதாபமானது. இதன் விளைவு திருமுறைகளில் குறிப்பாகத் திருஞானசம்பந்தர் , அப்பரடிகள் அருளிய திருப்பதிகங்களில், "கடலிடை மலைகள் தம்மால் அடைத்துமால் கருமம் முற்றித் திடலிடைச் செய்தகோவில்" என இராமர் மகளாலும் குன்ரறுகளாலும் கடலிடை மேடுபடுத்தியதை வெளிப்படப் பேச முடிவதில்லை,உரிய நேரத்தில் உண்மையைக் கூறாமலிருப்பது பொய் கூறுவதாகும்.

    திருமுறைப்பற்றாளர்கள் அவர்களவர்கள் பொறுப்பிலுள்ள அல்லது சார்புள்ல திருக்கோவில்களில் முறையாகத் திருமுறை ஓதுவதற்கு ஆவன செய்தாலே திருமுறை விளங்கும். பார்ப்பனர்க்கும் வடமொழிக்கும் எதிரான போராட்டமெனில் நாத்திகமே வலுக்கும். சைவர்கள் அவர்களுக்குக் நன்றிக்கடன்பட்டுச் சிறுமையடைவர்.

    ReplyDelete
  13. எதிர்ப்பு அதிகம் உள்ள சமயம் அடங்கி போவதும் , நேரம் கிடைக்கும் போது பாய்வதும் பார்பன குள்ள நரித்தனம்.

    ReplyDelete
  14. நல்ல செய்தி என்று என்னுடன் சேர்ந்து மகிழ்ந்த வெட்டிப்பயல் பாலாஜி, மௌலி, இளா, துளசி அக்கா - மிக்க நன்றி.

    ReplyDelete
  15. அதிர்ஷ்டம்ன்னு சொன்னா பரவாயில்லையா மௌலி? நற்பேறு+இன்மைன்னு சொன்னப்ப வருந்துனீங்க? :-)

    தமிழ்நாட்டில் இருக்கும் எல்லாக் கோவில்களிலும் இருக்கும் கடவுளர்களும் தமிழை கருவறையில் கேட்கும் நாள் வர வேண்டும்.

    ReplyDelete
  16. உள் அரசியலும் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு இளா. நானும் முதலில் அப்படித் தான் நினைத்தேன். தீட்சிதர்களுக்குள் பிளவு உண்டாகிவிட்டதோ என்று.

    ReplyDelete
  17. தமிழன். நான் கூட எனக்குப் பிடிஞ்சவங்களைக் கொஞ்சியே தான் வாழ்கிறேன். நீங்க என்னைத் தானே சொல்றீங்க? :-)

    கெஞ்சினால் மிஞ்சுவதும் மிஞ்சினால் கெஞ்சுவதும் எல்லோரும் செய்வது தான். என் ஒரு வயது குழந்தை உட்பட.

    ReplyDelete
  18. திருச்சிற்றம்பலம்.

    இரவிசங்கர். தஙக்ள் வேண்டுதல் ஆண்டவன் காதிலும் ஆள்பவர் காதிலும் விழுந்துவிட்டது போலும். கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டார்கள் என்று செய்தி படித்தேன்.

    ReplyDelete
  19. ஜெகதீசன் & அருண்மொழி,

    அது சிவராத்திரிக்குச் செய்யப்பட்ட ஏற்பாடுகள் என்று இன்னொரு செய்தியில் படித்தேன். அதனால் முழு விவரமும் தெரியும் வரை நான் காத்திருக்கத் தயார்.

    அதே போல் என் வரையில் ஒரு புரிதல் இருக்கிறது - எப்படி தினமலர் ஒரு சார்பாகச் செய்தியை இடுமோ அதே போல் தட்ஸ்தமிழ் பக்கமும் வேறு சார்பாக செய்தியை இடும் என்று. அதனை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றில்லை. என் புரிதலைத் தான் சொன்னேன். :-)

    ReplyDelete
  20. குமரன்,

    உங்கள் ப்ரொபைலைப் பார்க்க முடியவில்லை. அதனால் நீங்கள் யார் என்று அறிய எண்ணிய என் ஆர்வத்தைத் த்ணிக்க இயலவில்லை. :-(

    தீட்சிதர்கள் தங்கள் மரியாதையைக் கடைசியாகக் காப்பாற்றிக் கொண்டார்கள் என்பது சரி தான். தமிழக அரசும் ஏன் இந்த ஆணையை இட இத்தனை நாட்கள் எடுத்துக் கொண்டதோ என்றும் எண்ணுகிறேன்.

    திருமுறைகள் தெய்வீகப் பாடல்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் அவை இசை நிகழ்ச்சிக்குரியவை அல்ல என்ற கருத்துடன் ஒப்புதல் இல்லை. பண்ணோடும் அவற்றைப் பாடலாம்; பாடுகிறார்கள்.

    ஓதுவார்கள் எதனை விரும்புவார்கள் என்பதில் எனக்குத் தெளிவில்லை. அதனால் அதைப் பற்றிச் சொன்ன உங்கள் கருத்தோடு ஒப்பாமலும் வெட்டாமலும் நடுவில் நிற்கிறேன்.

    வேத பாராயணம் செய்வது போல் திருக்கோவில்களில் திருமுறைகளை ஓத வேண்டும் என்ற கருத்துடன் முழுதும் ஒத்துப் போகிறேன். ஆனால் அதே நேரத்தில் கருநாடக இசைப்பாடல்களைப் போல் திருமுறைகளையும் பாட முடியும்; பாடப்படவேண்டும் என்றே விரும்புகிறேன். கோவிலகளில் மட்டும் திருமுறைகளுக்கு முன்னோர்கள் செய்து வைத்த பண்ணிசைப்படி பாடட்டும். திவ்விய பிரபந்தங்களுக்கும் அதே போன்ற கருத்தே.

    திருமுறைகளில் நம்பிக்கை இல்லாதவர் துணையுடன் திருமுறைகளுக்காகப் போராட்டம் நடத்த வேண்டியிருப்பது வருந்தத்தக்கதே. ஆனால் அவர்களுக்கு இதில் வேறு வகையான ஈடுபாடு. அந்த வகையில் அவர்கள் இணைகிறார்கள். அந்த இணைப்பு இறுதியில் எல்லோருக்கும் நல்லதைச் செய்தால் நன்று.

    //இதன் விளைவு திருமுறைகளில் குறிப்பாகத் திருஞானசம்பந்தர் , அப்பரடிகள் அருளிய திருப்பதிகங்களில், "கடலிடை மலைகள் தம்மால் அடைத்துமால் கருமம் முற்றித் திடலிடைச் செய்தகோவில்" என இராமர் மகளாலும் குன்ரறுகளாலும் கடலிடை மேடுபடுத்தியதை வெளிப்படப் பேச முடிவதில்லை,உரிய நேரத்தில் உண்மையைக் கூறாமலிருப்பது பொய் கூறுவதாகும்.

    திருமுறைப்பற்றாளர்கள் அவர்களவர்கள் பொறுப்பிலுள்ள அல்லது சார்புள்ல திருக்கோவில்களில் முறையாகத் திருமுறை ஓதுவதற்கு ஆவன செய்தாலே திருமுறை விளங்கும். பார்ப்பனர்க்கும் வடமொழிக்கும் எதிரான போராட்டமெனில் நாத்திகமே வலுக்கும். சைவர்கள் அவர்களுக்குக் நன்றிக்கடன்பட்டுச் சிறுமையடைவர்.
    //

    இந்தப் பகுதியை நீங்கள் இன்னும் விரித்துக் கூறினால் மகிழ்வேன்.

    ReplyDelete
  21. உதயம்.

    எதிர்ப்பு அதிகம் உள்ள போது அடங்கிப் போவதும், மற்ற நேரங்களில் பாய்வதும் எல்லோருக்கும் இருக்கும் குணம். இதில் பார்ப்பனர்களை மட்டும் தனித்துச் சொல்லி அதிலும் அவர்களைக் குள்ளநரித்தனம் என்றெல்லாம் சொல்வதில் எனக்கு ஒப்புதல் இல்லை. இதனையே நமக்குப் பிடித்தவர்கள் செய்யும் போது அவர்களை 'அரசியல் சாணக்கியர்' என்று வானளாவப் புகழ்வோமே! 'அரசியல் சாணக்கியத்தனம்' என்று சொல்லப்படுவதும் 'குள்ளநரித்தனம்' என்று சொல்லப்படுவதும் ஒன்றே. இது எல்லோருக்கும் பொதுவான குணம்.

    ReplyDelete
  22. உண்மை , நீயாயம், உரிமை எந்த நேரத்திலும் தட்டி கேட்க படவேண்டும்.தன் பக்கம் நியாயம் இல்லை என்பவன்தான் அடங்கி போவான். பின்பு சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதை சாதித்து கொள்ளலாம் நினைப்பது சாணக்கியத்தனம் அல்ல அதை எவன் செய்தாலும் அயோக்கியத்தனம்.

    ReplyDelete
  23. உதயம் நீங்கள் சொல்வது சரி தான். ஆனால் நடைமுறையில் நேரம் பார்த்து காரியம் சாதித்துக் கொள்வதே எல்லோரும் செய்வது. அதனைச் சாணக்கியத்தனம் என்று சொல்வதும் அயோக்கியத்தனம் என்று அவரவர் நிலைபாட்டைப் பொறுத்து அமைகிறது.

    காலம் கருதி இடத்தாற் செயின்னு வள்ளுவரும் சொல்லியிருக்கார்.

    ReplyDelete
  24. அதிர்ஷ்டம்ன்னு சொன்னா பரவாயில்லையா மௌலி? நற்பேறு+இன்மைன்னு சொன்னப்ப வருந்துனீங்க? :-)

    இப்போதான் இந்த பதிலைப் பார்த்தேன் குமரன். நான் இரண்டும் (தமிழ்/வடமொழி) அறைகுறையாக தெரிந்தவன். அதனால என் பின்னூட்டங்களை பெரிது படுத்தாம விட்டுடுங்க. (நற்பேறு இன்மை நல்லாயில்லேன்னு சொன்னேன், அது ஏன்னா சிவனுக்கு நற்பேறு இல்லை என்பதாக வந்ததால்) ஆனா அந்த பின்னூட்டமே ஏன் போட்டேன்னு பின்னாடி வருந்தினேன்... )))

    ReplyDelete
  25. பின்னூட்டம் போட்டுட்டு வருந்துறதுக்கு என்ன இருக்கு மௌலி. யாரையாவது திட்டினீங்களா என்ன? அப்படித் திட்டியிருந்தால் வருத்தப்படலாம். உங்கள் மனத்திற்குத் தோன்றிய கேள்வியைத் தானே கேட்டீர்கள்.

    ReplyDelete
  26. //யாரையாவது திட்டினீங்களா என்ன? அப்படித் திட்டியிருந்தால் வருத்தப்படலாம். உங்கள் மனத்திற்குத் தோன்றிய கேள்வியைத் தானே கேட்டீர்கள்//

    கண்டிப்பா யாரையும் திட்டல்லங்க....ஆனா நான் கொஞ்சம் உரிமையுடன், ஜோவியலா கேட்ட கேள்வி சற்றே விவகாரமாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என்பதை எனக்கான பதிலில் தெரிந்து கொண்டேன். அப்போதுதான் ஏன் பின்னூட்டமிட்டோம்ன்னு தோணித்து. :-)

    ReplyDelete
  27. நீங்க கேட்டது விவகாரமா எல்லாம் புரிந்துகொள்ளப்படாது மௌலி. கவலைவேண்டாம். :-)

    ReplyDelete
  28. //நீங்க கேட்டது விவகாரமா எல்லாம் புரிந்துகொள்ளப்படாது மௌலி. கவலைவேண்டாம். :-)//

    நன்றி குமரன். ஆனால் நான் மனம் வருந்தியது என்னமோ உண்மை. நான் இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். :-)

    ReplyDelete