Monday, March 31, 2008
கல்யானை மீண்டும் கரும்பு தின்றது!!!
மதுரையில் சோமசுந்தரக்கடவுள் செய்த அறுபத்திநான்கு திருவிளையாடல்களைப் பற்றி நிறைய பேருக்குத் தெரிந்திருக்கும். அதிலும் கல்யானைக்கு கரும்பு கொடுத்த திருவிளையாடல் மிகப் பிரபலம். இன்றைக்கும் சோமசுந்தரேஸ்வரர் திருச்சுற்றில் இருக்கும் வெள்ளையானைகளை எல்லோரும் காணலாம். அந்த யானைகளில் ஒன்று தான் கரும்பு தின்றதாகப் புராணம்.
வரலாற்றுக் காலத்தில் மீண்டும் அந்த யானைகளில் ஒன்று கரும்பு தின்றக் கதையைக் கேட்டிருக்கிறீர்களா? செவிவழிச்செய்தி ஒன்று அதனைக் கூறுகிறது.
மாலிக் காபூர் மதுரை வரை படையெடுத்து வந்து எல்லாத் திருக்கோவில்களையும் கொள்ளை அடித்துக் கொண்டு வந்த போது நிகழ்ந்தது இது. மதுரையை முற்றுகையிட்டு மதுரையை வென்று மாலிக் காபூர் ஆண்டு வரும் போது அவரது படைத்தளபதி ஒருவர் திருக்கோவிலைச் சுற்றி வந்துக் கொண்டிருந்தார். அப்போது திருச்சுற்றில் இருக்கும் எட்டு வெள்ளை யானைகளைக் கண்டு வியந்து அருகில் இருந்தவர்களிடம் அவற்றைப் பற்றிக் கேட்டார்.
அங்கிருந்தவர்கள் பலருக்கு அந்த யானைகள் அங்கே காலம் காலமாக இருப்பது தெரியுமே ஒழிய அவற்றைப் பற்றிய மற்ற செய்திகள் தெரியவில்லை. அதனால் அங்கே அமர்ந்திருந்த துறவி ஒருவரிடம் அந்த தளபதியை அழைத்துச் சென்றனர். அந்தத் துறவியும் கல் யானை கரும்பு தின்ற கதையைச் சொன்னார்.
அந்தக் கதையைக் கேட்ட தளபதி உடனே நேராக மாலிக் காபூரிடம் சென்று அந்தக் கதையைச் சொன்னார். கதையைக் கேட்டு 'ஆகா. இந்த இந்துக்கள் எல்லோரும் படு முட்டாள்களாக இருக்கிறார்களே. கல்யானையாவது, கரும்பைத் தின்பதாவது. நல்ல கதை' என்று ஏளனமாகச் சிரித்தார் மாலிக் காபூர். 'அந்தக் கதையைச் சொன்ன முட்டாளைக் காட்டு. இப்போதும் கல்யானை கரும்பைத் தின்னுமா என்று கேட்போம்' என்று சொல்லி திருக்கோவிலுக்கு வந்தார்கள்.
துறவியிடம் வந்து 'எந்தக் கல்யானை கரும்பு தின்றது?' என்று கேட்டார் மாலிக் காபூர். அவர் ஒரு யானையைக் காட்ட, 'இப்போது இந்த யானை கரும்பைத் தின்னுமா?' என்று கேட்க, துறவி 'தின்னும்' என்று சொன்னார். ஏளனமாகப் பார்த்துக் கொண்டே மாலிக் காபூர் ஒரு கரும்பை நீட்ட அந்த கல்யானை கரும்பை வாங்கித் தின்றது. ஆச்சரியப் பட்ட மாலிக் காபூர் திரும்பி அந்தத் துறவியைப் பார்க்க அங்கே யாரும் இல்லை.
கூடியிருந்தவர்கள் எல்லோரும் அது சோமசுந்தரக் கடவுளின் திருவிளையாடலே என்று போற்றினார்கள். வியந்து கொண்டே மாற்று மதத்தவர் திருக்கோவிலை விட்டுச் சென்றனர்.
***
இந்த இடுகை 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் 27 ஏப்ரல் 2007 அன்று இடப்பட்டது.
இந்த இடுகை 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் 27 ஏப்ரல் 2007 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
ReplyDelete30 comments:
பங்காளி... said...
--//ஆகா. இந்த இந்துக்கள் எல்லோரும் படு முட்டாள்களாக இருக்கிறார்களே//--
பதிவில் இந்த ஒருவரிதான் உண்மை...ஒப்புக்கொள்வீர்களென நிணைக்கிறேன்....:-))))
April 27, 2007 9:11 PM
--
சிவமுருகன் said...
அடடா, சித்திரை திருவிழா சமயத்தில் ஒரு நல்ல கதை சொல்லியுள்ளீர்கள் அண்ணா.
பல தடவை கேட்ட செய்தி.
அந்த சித்தர் நினைவாக தான் அங்கு ஒரு சித்தர் சன்னிதி உருவானதாக சொல்வார்கள்.
நன்றி.
April 27, 2007 9:50 PM
--
SP.VR. சுப்பையா said...
ஏ.பி.நாகராஜன் அவர்கள் எடுத்துக் கொடுத்த 4 கதைகள், மற்றும் பிட்டுக்கு மண் சுமந்த கதை - இவைகள் மட்டும்தான் இன்றைய மக்கள் அறிவார்கள்
மற்ற கதைகளை - ஒவ்வொன்றாக பதிவில் இடுங்கள் குமரன். படித்து மகிழ்வோம்!
April 27, 2007 10:19 PM
--
கோவி.கண்ணன் said...
குமரன்,
இது போன்று ஐயப்பன் கதைகளிலும் இஸ்லாமிய அரசர் பற்றி தெரியவருகிறது.
அவர்களெல்லாம் இந்துமத 'திருவிளையாடல்களை' கண்டு வியந்து இந்துமதத்திற்கு மாறவில்லை என்பதும் உண்மை.
மாற்று மதங்களை மதிக்கவேண்டும் என்பதற்கு இந்த கதை சிறந்த உதாரணம். மற்றபடி இது போல் நிறைய திருவிளையாடல்களை புராணங்களாக படித்திருப்பதால் வியப்பு எழவில்லை...என்னளவிலான கருத்து ( டிஸ்கிபோடாமல் கருத்தே சொல்ல முடியவில்லை :) உங்க பதிவுக்கு அது தேவை இல்லை... இருந்தாலும் சொல்ல வேண்டியது நல்லதே )
:))
April 28, 2007 12:03 AM
--
குமரன் (Kumaran) said...
பங்காளி. உண்மைகள் ஒவ்வொருவர் பார்வையிலும் ஒவ்வொரு விதம். உங்கள் பார்வையில் அந்த வரி மட்டுமே உண்மை என்று நினைக்கிறீர்கள். அதனைச் சொன்னீர்கள். சரி. ஆனால் அதனை அடியேன் ஒத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணுவது சரியில்லையே. :-)
முட்டாள்கள் எல்லா மதத்திலும் உண்டு. எல்லா இனத்திலும் உண்டு. ஒரு குழுவினரையோ ஒரு மதத்தினரையோ முழுக்க முழுக்க முட்டாள்கள் என்று சொல்வது என்னவோ ஆத்திகர்கள் எல்லோரும் நல்லவர்கள்; நாத்திகர்கள் எல்லோரும் கெட்டவர்கள்; ஒரு மதத்தவர் எல்லோரும் தீவிரவாதிகள்; இன்னொரு மதத்தவர் எல்லோரும் சாதுக்கள் என்று சொல்வது போன்றது. பங்காளிக்கும் அப்படி சொல்வது தான் முட்டாள்தனமானது என்பது தெரியும் என்று நினைக்கிறேன். :-) பங்காளி பங்காளியாக மட்டுமே இருங்கள். :-)
April 28, 2007 5:05 AM
--
குமரன் (Kumaran) said...
சிவமுருகன். இந்தத் திருவிளையாடல் இரு முறை நடந்ததாகத் தெரிகிறது. முதல் முறை நடந்த திருவிளையாடலைத் தொடர்ந்து தான் நீங்கள் சொன்ன சித்தர் திருமுன் (சன்னிதி) அமைக்கப்பட்டது.
April 28, 2007 5:06 AM
--
குமரன் (Kumaran) said...
வாத்தியார் ஐயா. முடிந்த வரையில் திருவிளையாடல்களை இடுகிறேன். நேற்று இந்தக் கதை நினைவிற்கு வந்தது. உடனே இட்டேன்.
April 28, 2007 5:07 AM
--
குமரன் (Kumaran) said...
கண்ணன் அண்ணா. இறைவனின் திருவிளையாடல்களும் அற்புதங்களும் எல்லா சமயங்களும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. மற்ற சமயங்களில் நடக்கும் அற்புதங்களைக் கண்டு இந்து மதத்தவர் அந்த சமயங்களுக்கு மாறுவதும் உண்டு; மாறாமல் எல்லா கடவுளர்களும் ஒரே இறைவனின் வடிவங்களே என்று இருப்பதும் உண்டு. பெரும்பான்மையான இந்துங்கள் இரண்டாவது வகையே என்பது உங்களுக்கும் தெரியும். அதே போல் மாற்று மதத்தவர்களும் இந்தியத் திருநாட்டில் இருந்திருக்கிறார்கள். எல்லா சமயங்களையும் ஆதரித்த அக்பரும் கடைசி வரை இஸ்லாமியராகத் தான் இருந்திருக்கிறார். உண்மையை வணங்க மதம் மாறத் தேவையில்லை.
இந்தத் திருவிளையாடலைச் சொன்னது இவற்றைக் கண்டு மற்ற மதத்தவர் இந்துக்களாக மாறிவிட வேண்டும் என்பதற்காக இல்லை. நீங்களும் அப்படி சொல்லவில்லை என்று தெரியும். ஒரு சொல்லைப் படிக்கும் போது ஒவ்வொருவருக்கும் அவரவர் அனுபவங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு கருத்து தோன்றும். அப்படி தோன்றிய கருத்தினைத் தான் இங்கே சொல்லியிருக்கிறீர்கள் என்று அறிவேன்.
இவற்றைப் படித்து வியப்பு ஏற்படவேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் இவற்றை அனுபவிக்கும் போது வியப்பு ஏற்படும். அது தான் கதையில் வந்த மாந்தர்களுக்கு நடந்தது. உங்களுக்கும் எனக்கும் இது இன்னொரு புராணப்புளுகு என்று தோன்றுவதில் தவறில்லை. காலம் அப்படி நம்மை வைத்திருக்கிறது. களைகள் பெருகிப் போய் நல்ல பயிர் எது என்றே தெரியாத அளவிற்கு ஆகிவிட்டது.
நல்ல டிஸ்கி. :-)
April 28, 2007 5:14 AM
--
உங்கள் நண்பன் said...
இதுவரை கேள்விப்படாத கதை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!
//மற்ற கதைகளை - ஒவ்வொன்றாக பதிவில் இடுங்கள் குமரன். படித்து மகிழ்வோம்/
ஆசிரியர் சொன்னதுபோல் உங்களின் நினைவிற்க்கு வரும்போது கதைகளை பகிர்ந்துகொள்ளவும்!
நன்றி.
அன்புடன்...
சரவணன்.
April 28, 2007 5:56 AM
--
நாகை சிவா said...
இந்த கதை ஏற்கனவே படித்த ஞாபகம் குமரன். மீண்டும் நினைவூட்டியதற்கு நன்றி
April 28, 2007 6:02 AM
--
நாகை சிவா said...
//முட்டாள்கள் எல்லா மதத்திலும் உண்டு. எல்லா இனத்திலும் உண்டு. ஒரு குழுவினரையோ ஒரு மதத்தினரையோ முழுக்க முழுக்க முட்டாள்கள் என்று சொல்வது என்னவோ ஆத்திகர்கள் எல்லோரும் நல்லவர்கள்; நாத்திகர்கள் எல்லோரும் கெட்டவர்கள்; ஒரு மதத்தவர் எல்லோரும் தீவிரவாதிகள்; இன்னொரு மதத்தவர் எல்லோரும் சாதுக்கள் என்று சொல்வது போன்றது.//
ரீப்பிட்டு......
April 28, 2007 6:06 AM
--
இலவசக்கொத்தனார் said...
சுவாரசியமான கதையை சொன்னதற்கு நன்றி குமரன்.
பங்காளிக்கு நீங்கள் தந்த அழகான, நாகரீகமான பதிலுக்கு என் பாராட்டுக்கள். கண்ணன் அவர்களுக்குச் சொன்னது போல் நல்ல பயிர் தெரியாத அளவு களைகள் இருப்பதை நினைத்தால் கவலைதான்.
உங்கள் நிதானத்திற்கு மேலும் ஒரு சல்யூட்!
April 28, 2007 6:14 AM
--
பங்காளி... said...
அன்பின் குமரன்...
முதலில் நான் இஸ்லாமியன் இல்லை....(தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்க).
நீங்கள் தந்த நாகரீகமான பதிலுக்கு நன்றி....(தமிழ் வலைபதிவுகள்ல இப்படி மாற்றுக் கருத்து சொன்னாலே பாதி பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.)
நம் பார்வைகள் வேறு...அதனால் என் கருத்துகள் உங்களுக்கு கோவம் /வருத்தத்தினை தந்திருக்கலாம்...
நான் கடவுளை நண்பனாக கொண்டாடுகிறவன்...நீங்கள் வழிபடுபவராக இருப்பீர்களென நினைக்கிறேன்.....
கொண்டாடுகிறவன் நண்பனை விமர்சிக்க தயங்கமாட்டான்...வழிபடுகிறவனுக்கு ஆராதிக்கவும் அடிபணியவும், மிகைப்படுத்தி பேசி புளகாங்கிதமடைய மட்டுமே தெரியும்...
ஆராதனைகளும், மிகைப்படுத்துதலும் ஒரு வகை போதை...இதனால் கடவுள் சந்தோஷப்படுகிறாரோ இல்லையோ..ஆராதிக்கிறவர்களுகு போதை நிச்சயம்....
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு....நம் மதத்தில் அமிர்தம் மிஞ்சியிருக்கிறது நண்பரே....
இந்த பின்னூட்டமும் உங்களுக்கு வருத்தத்தினையே தருமென நம்புகிறேன்....சில சமயங்களில் இது தவிர்க்க முடியாது...
No Hard Feelings....
April 28, 2007 7:04 AM
--
குமரன் (Kumaran) said...
இல்லை பங்காளி. நானும் இறைவனை நண்பனாகப் பார்ப்பவன் தான். ஆழ்வார்கள், பாரதி வழி வந்துவிட்டு இறைவனை நண்பனாகப் பார்க்காமல் இருக்க முடியாது. No hard feelings, then and now. Do not worry.
நீங்கள் இஸ்லாமியர் இல்லை என்பதை அறிவேன். அழகு பதிவில் அழகரைப் பற்றி சொல்லியிருந்தீர்கள். அது நினைவிருக்கிறது. அப்படியே இஸ்லாமியராக இருந்தாலும் உங்கள் கருத்தை நீங்கள் சொல்வதில் தவறில்லை. எல்லா இஸ்லாமிய அன்பர்களுக்கும் அது பொருந்தும்.
மாற்றுக் கருத்துகளை எப்போதும் சொல்பவன் தான். ஆனால் எதிர் கருத்துகளைச் சொன்னாலே எதிரியாக எண்ணி என்னையும் என் குடும்பத்தாரையும் திட்டுவதும் பூனை, மடி, வெளியே வந்துவிட்டது என்றெல்லாம் முத்திரை குத்துவதும் நடந்ததால் பல நாட்களில் கருத்து சொல்லாமல் விட்டுவிடுவதுண்டு. :-) நண்பர் இராகவனும் எதற்கு சொ.செ.சூ.வைத்துக்கொள்கிறீர்கள்; வேலியில் போகும் ஓணானை எதற்கு மடியில் கட்டிக் கொள்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டதாலும் மாற்றுக்கருத்துகளைச் சொல்லுவதையே நிறுத்திவிட்டேன். :-)
நான் இறைவனைப் பல நிலைகளில் காண்பவன்; கண்டவன். நண்பனாகக் கொண்டாடுவதும் எளிது. ஆராதித்து, அடி பணிந்து, மிகைப்படுத்திப் புளகாங்கிதப்படுத்தலும் எளிது. இரண்டும் இயற்கையாக அமைகிறது எனக்கு.
நண்பனாக இறைவனைக் காண்பதிலும் போதையைக் கண்டிருக்கிறேன். :-)
பலவகைப்பட்ட மனிதர்கள் எல்லோரும் இறை அனுபவம் பெற்று, ஆன்மிக அனுபவம் பெற்று வாழவேண்டும் என்பதால் பலவிதமான வழிகள் நம் நாட்டில் இருக்கிறது. இந்திய ஆன்மிக வழிமுறைகள் அப்படி பல்கிப்பெருகி இருப்பதால் இது தான் இந்து மதம் என்று வரையறுக்க இயலாது. அப்படி பலவிதமாக இருப்பதால் அளவுக்கு மீறியதாக இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் அவரவர் அளவிற்குத் தான் ஆன்மிகத்தில் அவரவர் ஈடுபடமுடியும். அந்தத் தனிமனித அளவில் இங்கே ஆன்மிகம் அளவுக்கு மிஞ்சி இல்லை. அதனால் நஞ்சாக ஆகவும் இல்லை.
April 28, 2007 7:33 AM
--
கோவி.கண்ணன் said...
பங்காளியின் கடைசி பின்னூட்டம் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது... குமரனின் மறுமொழியில் கொஞ்சம் வெளியில் சென்று வந்தாலும் ... குமரன் பதிவில் குமரன் தான் எழுதுகிறார் ... மாற்றுக் கருத்துச் சொல்வதில் தடையேது ?
ம் வந்ததுக்கு ஒரு கேள்வியை கேட்டு வைக்கிறேன்.
கண்ணனை விட உயர்ந்த தெய்வம் இல்லைன்னு வைணவரான நீங்க சொல்லுவிங்க... அதே போல் வேறு சிலர் சிவன் முதன்மையானவர்... வேறு ஒருவர் பிள்ளையார் தான் மூலாதாரம் என்பார்... இது போன்று ஒன்றை விட மற்றொன்றை உயர்த்திச் சொல்வது மிகைப்படுத்தல் போன்று தெரிகிறது...உருவழிபாட்டுச் சிக்கல் தானே ?
April 28, 2007 7:46 AM
--
குமரன் (Kumaran) said...
ஒவ்வொன்றாக முடிந்த வரை இடுகிறேன் சரவணன். நன்றி.
April 28, 2007 8:13 AM
--
குமரன் (Kumaran) said...
இந்தக் கதையைப் படிச்சிருப்பீங்க சிவா. மிக்க நன்றி.
April 28, 2007 8:14 AM
--
குமரன் (Kumaran) said...
கொத்ஸ். இன்னைக்கு நல்ல மூடுல இருக்கேன்ன்னு நெனைக்கிறேன். அதான் கொஞ்சம் நிதானம் தென்படுது. :-)
பாராட்டுகளுக்கு நன்றி.
April 28, 2007 8:15 AM
--
குமரன் (Kumaran) said...
கண்ணன் அண்ணா. இந்த 'வெளியில் போய் வருவது' எல்லோரும் செய்வது தானே. நீங்களும் நானும் எல்லோரும். நீங்கள் அண்மையில் செய்தவை என்று எனக்குத் தோன்றுவதைப் பட்டியல் இடலாம் தான்; ஆனால் முழுப் பட்டியலும் வேண்டாம் என்று இதோ இரண்டு எடுத்துக்காட்டுகள்.
1. மாற்று மதத்தவர் இந்து மத அற்புதங்களைக் கண்டு மதம் மாறுவதைப் பற்றி இடுகையில் எதுவும் பேசாமல் இருக்க நீங்கள் அதனைக் குறிப்பிட்டது.
2. ஆர்.எஸ்.எஸ். காரர்களைப்பற்றி யாரோ ஒருவர் சொன்னதை வைத்து 'ஆத்திகர்கள் எல்லாம் சாதுக்களா?' என்று ஒரு விவாதத்தை நடத்தியது.
ஆர்.எஸ்.எஸ்.ஐப் பற்றி யாரோ சொன்னால் ஆத்திகர்கள் எல்லாம் சாதுக்கள் என்று ஏன் தோன்றியது? அது போல் தான் மாற்றுக் கருத்துகள் நாகரீகத்துடன் வைத்தால் தமிழ் பதிவுலகில் பல பிர்ச்சனைகள் தீர்ந்துவிடும் என்று படித்தவுடன் தோன்றிய 'வெளியே சென்று வரும்' எண்ணத்தைச் சொன்னேன். இங்கே இது தேவையில்லாதது என்று சொன்னால் பலருடைய மறுமொழிகளும் அப்படியே தான். அப்புறம் சுவையாரமாகவே இல்லாமல் போய்விடுமே கருத்துப்பரிமாற்றங்கள். :-)
April 28, 2007 8:22 AM
--
குமரன் (Kumaran) said...
கடவுளர்களில் யார் பரம்பொருள் என்ற கருத்துகளைப் பற்றி பல முறை பலர் பல இடங்களில் சொல்லிவிட்டார்கள். உங்களுக்கு அந்தக் கருத்துகளில் மனம் நிறைவடையவில்லை என்று நினைக்கிறேன். அதனால் அதே கேள்வியை மீண்டும் கேட்டிருக்கிறீர்கள். என் கருத்துகள் முன்பே பலர் பல முறை சொன்னவை தான். அவற்றைச் சொன்னால் உங்களுக்கு மன நிறைவு ஏற்படும் என்று தோன்றவில்லை கண்ணன் அண்ணா. அதனால் இதனை இன்னொரு நாள் எடுத்துக் கொள்ளலாம்.
April 28, 2007 8:23 AM
--
கோவி.கண்ணன் said...
//1. மாற்று மதத்தவர் இந்து மத அற்புதங்களைக் கண்டு மதம் மாறுவதைப் பற்றி இடுகையில் எதுவும் பேசாமல் இருக்க நீங்கள் அதனைக் குறிப்பிட்டது. //
பதிவில் இஸ்லாமிய அரசர் பற்றி சொல்லி இருந்ததால். இந்த இடத்தில் அதைச் சொல்வது பொருத்தம் என்றே நினைத்தேன். மேலும் உங்கள் பதிவில் உங்களின் ஆக்கங்களை விரும்பிபடிக்கிறவர்கள் பின்னூட்டமிடுகின்றனர் .. நான் உட்பட ... எனவே உங்கள் பதிவில் நீங்கள் மறுமொழியாக மாற்றுக் கருத்துச் சொல்வதில் தடை எதும் இல்லையே என்று தான் சொல்ல வந்தேன். சொன்னவிதம் தவறா ? என்று தெரியவில்லை... சொன்னதன் பொருள் அதுமட்டுமே. வெளியில் சென்று வருதல் என்பது ... கொஞ்சம் தொடர்பற்ற விடயங்களை சொல்வது போல் எனக்கு தோன்றியதால் சொன்னேன். வேறு உகு எதுவும் இல்லை. எதையுமே நேரியாக சொல்வேன்... அதுவும் உங்களைப் போல் நெருக்கமான நண்பர்களிடம் நேரிடையாக் சொல்வதில் என்ன தயக்கம் இருக்கப் போகிறது ?
:)
//2. ஆர்.எஸ்.எஸ். காரர்களைப்பற்றி யாரோ ஒருவர் சொன்னதை வைத்து 'ஆத்திகர்கள் எல்லாம் சாதுக்களா?' என்று ஒரு விவாதத்தை நடத்தியது. //
ஆர்.எஸ்.எஸ் காரார் சொன்னதை வைத்துதான் அந்த பதிவை எழுதினேன் என்பதை மறுக்கவில்லை. ஆனால் பொதுவாகவே எல்லா மதத்தினரும் அதே கருத்தை வைத்திருக்கிறார்கள். தனித்தனியாக சொல்லவதைவிட ஆத்திகர் என்று சொல்வது அங்கே பொருத்தமாக தெரிந்தது. நீங்களே சொல்லுங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவன் தவறு செய்யமாட்டான் என்ற நம்பிக்கை உங்களுக்கும் இருக்கிறதா இல்லையா ? 'உள்ளவன்' என்கிற இடத்தில் 'இல்லாதவன்' என்று போட்டால் மட்டும் தவறு செய்பவன் என்று பொருள் வருமா ?
நம்பிக்கையின் அளவுகோல் தவறு செய்வதில்லை என்ற பொருளில் வருகிறதா ?
இன்னும் ஒரு டிஸ்கி :
:))
பொதுவாக மூத்த பதிவர்களிடம் கேட்டால், நம்பிக்கை குறித்து கேலி செய்கிறேன் என்கிறார்கள் என்பதால் நான் எதுவும் கேட்பதில்லை. கேலி செய்வதற்காக எதுவும் கேட்பதில்லை.
April 28, 2007 8:42 AM
--
கோவி.கண்ணன் said...
//கடவுளர்களில் யார் பரம்பொருள் என்ற கருத்துகளைப் பற்றி பல முறை பலர் பல இடங்களில் சொல்லிவிட்டார்கள். உங்களுக்கு அந்தக் கருத்துகளில் மனம் நிறைவடையவில்லை என்று நினைக்கிறேன். அதனால் அதே கேள்வியை மீண்டும் கேட்டிருக்கிறீர்கள். என் கருத்துகள் முன்பே பலர் பல முறை சொன்னவை தான். அவற்றைச் சொன்னால் உங்களுக்கு மன நிறைவு ஏற்படும் என்று தோன்றவில்லை கண்ணன் அண்ணா. அதனால் இதனை இன்னொரு நாள் எடுத்துக் கொள்ளலாம்.//
இரண்டு பின்னூட்டத்துக்கு... இரண்டு மறுமொழி இப்பதான் 40+ இருக்கே !
:)))
குமரன்,
யார் பரம்பொருள் என்ற யார் சொல்லி இருக்கிறார்கள். எனக்கு சுட்டி தாருங்கள். நான் படித்தேனா என்று நினைவு இல்லை. அப்படி பரம்பொருள் என்று சொல்லப்பட்டவர்களை பிற சமயத்தினர் ஏற்றுக் கொள்கிறார்களா ? என பார்க்கிறேன். அதன்பிறகு பிறமதத்தினர் ஏற்றுக் கொண்டிருக்கின்றனரா ? என்று பார்க்கிறேன். மனநிறைவுக்காக மட்டும் தான் பதில் எதிர்பார்க்கவேண்டுமா ?
தெரிந்து கொள்ளக் கேட்க்கக் கூடாதா ?
வேறு இடுகையில் சொன்னாலும் சரி.
:)))))
April 28, 2007 8:49 AM
--
குமரன் (Kumaran) said...
கண்ணன் அண்ணா. இந்த இடுகையில் மற்றவர்களுக்கு நான் சொன்ன பதில்களையும் படிக்கிறீர்கள் என்று தான் எண்ணுகிறேன். மேலே பங்காளிக்குச் சொன்ன பதிலில் அப்படி ஆத்திகர்கள் எல்லாம் நல்லவர்கள் என்று யாராவது சொன்னால் அது முட்டாள்தனம் என்று சொல்லியிருக்கிறேன். மீண்டும் என்னிடம் அதே கேள்வியைக் கேட்கிறீர்கள். நேரடியாகப் பதில் எதிர்பார்க்கிறீர்கள் என்று எண்ணுகிறேன்.
கடவுள் நம்பிக்கை இருப்பவன் எல்லாம் தவறே செய்யமாட்டான் என்ற நம்பிக்கை எனக்குத் துளி கூட இல்லை. என்னளவில் சிறந்த எடுத்துக்காட்டு அடியேன். கடவுள் நம்பிக்கை இருப்பவன்; தவறுகளும் செய்பவன்; அதனால் நல்லவன் இல்லை. :-)
இராகவன் உங்கள் பதிவில் சொன்ன கருத்து தான் அடியேன் கருத்தும்.
பல கருத்துகளில் எனக்கும் உங்களுக்கும் வேறுபாடு இல்லை என்று நினைக்கிறேன். நான் பல முறை 'உண்டு' என்பவர் பக்கம் நின்று பேசுகிறேன்; நீங்கள் 'இல்லை' என்பவர் பக்கம் நின்று பேசுகிறீர்கள்.
April 28, 2007 8:57 AM
--
குமரன் (Kumaran) said...
//இரண்டு பின்னூட்டத்துக்கு... இரண்டு மறுமொழி இப்பதான் 40+ இருக்கே !
:)))
//
கண்ணன் அண்ணா. என் இடுகைகள் எப்போதாவது தான் 40+ போகும். அதனால் முன்பும் கவலையில்லாமல் தான் இருந்தேன். :-)
April 28, 2007 8:59 AM
--
கோவி.கண்ணன் said...
//பல கருத்துகளில் எனக்கும் உங்களுக்கும் வேறுபாடு இல்லை என்று நினைக்கிறேன். நான் பல முறை 'உண்டு' என்பவர் பக்கம் நின்று பேசுகிறேன்; நீங்கள் 'இல்லை' என்பவர் பக்கம் நின்று பேசுகிறீர்கள்.//
குமரன்,
அடுத்து வரும் பலரின் பின்னூட்டங்களையும், உங்கள் மறுமொழியையும் பார்த்து மீண்டும் வருவேன்... தற்போதைக்கு தற்காலிக துண்டிப்பு !
:)
April 28, 2007 9:13 AM
--
இராமநாதன் said...
அட.. மாற்றுமதத்தவருக்கும் கருணையுடன் காட்சிதரும் பிறப்பில்லா ஈசனின் அளவற்ற கருணை என் மேல் விழாதா என்றுதான் எனக்கு முதலில் பொறாமையாகத் தோன்றியது...
மதம் மாறுவதோ மாற்றுவதோ சத்தியமாக தோன்றவில்லை...
அல்லா என்ற பெயர்தான் பொருந்தாதா அல்லது holy father தான் பொருந்தாதா என் பெருமானுக்கு??
வள்ளலார் சொன்னபடி பித்தனென்றே சொல்லி அர்ச்சித்தாகிவிட்டது.. இனி எப்பெயர்தான் ஒவ்வாதோ?
April 28, 2007 10:56 AM
--
G.Ragavan said...
// கோவி.கண்ணன் said...
ம் வந்ததுக்கு ஒரு கேள்வியை கேட்டு வைக்கிறேன்.
கண்ணனை விட உயர்ந்த தெய்வம் இல்லைன்னு வைணவரான நீங்க சொல்லுவிங்க... அதே போல் வேறு சிலர் சிவன் முதன்மையானவர்... வேறு ஒருவர் பிள்ளையார் தான் மூலாதாரம் என்பார்... இது போன்று ஒன்றை விட மற்றொன்றை உயர்த்திச் சொல்வது மிகைப்படுத்தல் போன்று தெரிகிறது...உருவழிபாட்டுச் சிக்கல் தானே ? //
வந்தத்துக்குக் கேட்டது சொந்தத்துக்குக் கேட்டதாகவே நெனைப்போம்.
கோவி, நீங்கள் சொல்லும் பிரச்சனைக்கும் காரணத்துக்கும் தொடர்பே இல்லை. முருகன் பெரியவன்...கண்ணன் பெரியவன் என்று ஒவ்வொருவர் நினைக்கிறார்கள். சரி. இந்தக் கடவுள்களெல்லாம் கடவுளே அல்ல. ஏசுவே கடவுள். அவரே மிகப்பெரியவர் என்று இன்னொரு நம்பிக்கை. இவர்களை எல்லாம் வணங்கக்கூடாது. இவர்கள் கடவுள்களே இல்லை. இறைவன் ஒருவனே (இது எல்லா மதத்தின் உட்கருத்தும் கூட). அவனை இப்படி மட்டுந்தான் வழிபட வேண்டும் என்பது இன்னொரு நம்பிக்கை. இதுதான் நீங்க சொல்லும் பிரச்சனையின் முழுப்பரிமாணம். நீங்க பாதியில நிப்பாட்டீங்க. நான் பிரச்சனையை முழுசாச் சொல்லீருக்கேன். இதுல உருவ வழிபாடு எங்க வந்தது? மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு என்று எண்ணாத எண்ணமே இந்தப் பிரச்சனைக்குக் காரணம்.
April 28, 2007 5:14 PM
--
குமரன் (Kumaran) said...
இராமநாதன்,
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
என்றல்லவோ அவனை வணங்குகிறோம்.
April 28, 2007 9:23 PM
--
கோவி.கண்ணன் said...
//நீங்க பாதியில நிப்பாட்டீங்க. நான் பிரச்சனையை முழுசாச் சொல்லீருக்கேன். இதுல உருவ வழிபாடு எங்க வந்தது? மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு என்று எண்ணாத எண்ணமே இந்தப் பிரச்சனைக்குக் காரணம்.
//
ஜிரா,
நான் சொன்னதன் பொருள் இந்துமதக் கடவுள் உருவங்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்து அதன் படி இயற்றப்பட்ட அதன் வழி நடப்பவர்கள் குறித்தான கேள்வி, இதில் மாற்று மதத்தினரை கொண்டுவந்து சேர்க்கவில்லை. அது வேறுஒரு பிரச்சனை.
:)
நீங்கள் சொல்லும் மாற்றான் தோட்டத்து மணம் நல்ல உதாரணம்.
எந்த (இந்து) கடவுள் உயர்ந்தது என்ற சர்சையினாலேயே மனிதருக்குள்ளும் ஏற்றத்தாழ்வு வந்திருக்க வேண்டும். நான் வணங்கும் கடவுள் உயர்ந்தவர், நான் வணங்குவதற்கு பயன்படும் மொழி உயர்ந்தது...இது இரண்டை முன் வைக்கும் போது என் இனம்(சாதி)யே உயர்ந்தது என்று சொல்லப்பட்டு, மூன்றாவதாக சொன்ன கருத்தை மட்டும் மேற்கண்ட இரண்டும் தூக்கிப் பிடிக்கிறது என்பது என் எண்ணம்.
நாட்டார் தெய்வங்கள் தீண்டத் தகாதது என்றதற்கும், தமிழ் நீசபாசை என்றதற்கும், இவற்றை கொண்டிருப்பவர்கள் பழிக்கத் தக்கவர்கள் என்ற ரீதியில் தானே சென்றது.
மற்றபடி ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற திருமந்திர சொல்லை போற்றி வணங்குகிறேன்.
April 28, 2007 11:11 PM
--
G.Ragavan said...
// கோவி.கண்ணன் said...
ஜிரா,
நான் சொன்னதன் பொருள் இந்துமதக் கடவுள் உருவங்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்து அதன் படி இயற்றப்பட்ட அதன் வழி நடப்பவர்கள் குறித்தான கேள்வி, இதில் மாற்று மதத்தினரை கொண்டுவந்து சேர்க்கவில்லை. அது வேறுஒரு பிரச்சனை.
:) //
இல்லையில்லை. இதுவும் முழுக்க உண்மையில்லை. எல்லாம் ஒரே பிரச்சனைதான். இந்தப் பிரச்சனைதான் 300 என்ற ஆங்கிலப்படத்தில் கிரேக்கக் கடவுள் வழிபாட்டைச் சாத்தான் வழிபாடு என்று சொல்ல வைத்தது. இன்னும் நிறைய சொல்லலாம் கோவி. ஆனால் பிரச்சனைதான் உண்டாகுமே ஒழிய நல்லது நடக்காது. ஆக அமைதியே நல்ல வழி.
// நீங்கள் சொல்லும் மாற்றான் தோட்டத்து மணம் நல்ல உதாரணம்.
எந்த (இந்து) கடவுள் உயர்ந்தது என்ற சர்சையினாலேயே மனிதருக்குள்ளும் ஏற்றத்தாழ்வு வந்திருக்க வேண்டும். நான் வணங்கும் கடவுள் உயர்ந்தவர், நான் வணங்குவதற்கு பயன்படும் மொழி உயர்ந்தது...இது இரண்டை முன் வைக்கும் போது என் இனம்(சாதி)யே உயர்ந்தது என்று சொல்லப்பட்டு, மூன்றாவதாக சொன்ன கருத்தை மட்டும் மேற்கண்ட இரண்டும் தூக்கிப் பிடிக்கிறது என்பது என் எண்ணம். //
இந்து மதம் என்ற பெயரை மட்டும் வைத்துக் கொண்டு பார்த்தால் அது மிகவும் இளைய மதம். இன்னும் சொல்லப்போனால் முன்பு ஒவ்வொன்றும் ஒவ்வொரு மதமாக இருந்தது. அந்த வகையில் நீங்கள் சொல்லும் உயர்வு தாழ்வு என்பது இரண்டு மதங்களுக்கிடையில் ஏற்பட்டது. அதுதான் உண்மை. கவுந்தியடிகள் சரவணப்பொய்கையில் குளிக்காதே என்று தடுத்ததும் அதனால்தான். அப்படித்தடுத்ததால்தானோ கண்ணகிக்கு இந்த நிலையென்று வடக்கிருந்ததும் அதனால்தான். இன்றைய மதத்தை நேற்றைய அளவுகோல் ஒழுங்காக அளக்க முடியாது. பழைய பக்காப்படியைக் கொண்டு வாருங்கள்.
// நாட்டார் தெய்வங்கள் தீண்டத் தகாதது என்றதற்கும், தமிழ் நீசபாசை என்றதற்கும், இவற்றை கொண்டிருப்பவர்கள் பழிக்கத் தக்கவர்கள் என்ற ரீதியில் தானே சென்றது. //
ஆமாம். அது மதரீதியில். கடவுள் ரீதியில் அல்ல. பலமதங்கள் பண்டு இருந்ததை மறவாதீர். இதே பிரச்சனை இன்றும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது என்பது மறுக்கவே முடியாது. மதங்களுக்குள் இன்று ஏற்றத்தாழ்வு சொல்லாமல் இருக்கின்றார்களா என்ன? கும்புடுலைன்னா உம்மாச்சி கண்ணக் குத்தீரும் போன்ற வறட்டு பயங்கள் ஒழிய வேண்டும்.
// மற்றபடி ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்ற திருமந்திர சொல்லை போற்றி வணங்குகிறேன். //
இது திருமந்திரம் மட்டுமல்ல....எல்லா ஆன்மீக நூல்களும் இதைத்தான் சொல்கின்றன. முன்பே பலமுறை சொல்லியிருக்கிறேன். முருகா முருகா என்று சொல்லி விட்டு மேலை வெளியில் ஒளிரும் பரஞ்சுடர் என்பதுதான் கருத்து. நினைத்தவர்க்கு நினைத்த விதத்தில் நினைத்த பொழுது வந்து காப்பான் இறைவன். அவ்வளவுதாங்க. இதுதான் தமிழ் சொல்றது. மத்த மொழியிலும் சொல்லியிருக்கலாம். ஆனா எனக்கு தமிழ்தான் தெரியும்.
April 29, 2007 7:00 AM
இண்டைக்கும் கரும்பு தின்னுமா.... இல்ல யானை செத்துப் போய்ச்சா??
ReplyDelete8-)
nalla kadhai.
ReplyDeletefirst time visit to ur blog, neriya kutti kadhaigal irukum polarukke ! Will read one by one..
solla marandhutten
ReplyDeleteme the seconddddddddddd..
கட்டயாமா ரூபன். மதுரைக்கு வரும் போது சோதிச்சுப் பாருங்களேன். :-)
ReplyDelete"ஆடல் காணீரோ..திருவிளையாடல் காணீரோ" -மதுரைவீரன் படத்தில் எம்.எல்.வி பாடும் பாட்டு. அதில் "வாய் திறவாத கல்யானைக்கு கரும்பூட்டி.."என்று ஒரு வரி. அந்த திருவிளையாடல் என்ன என்று இன்றுதான் தெரிந்து கொண்டேன். நன்றி
ReplyDeleteசகாதேவன்
முதல் வருகைக்கு நன்றி கிட்டு. தொடர்ந்து வருகை தாருங்கள். இனி மேலும் தொடர்ந்து சின்ன சின்ன கதைகளை இட எண்ணம் உண்டு.
ReplyDeleteநானும் நீங்கள் சொல்லும் பாடலைக் கேட்டிருக்கிறேன்/பார்த்திருக்கிறேன் சகாதேவன். அந்தப் பாடலில் வரும் ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு ஓவியம் என்று நன்றாக இருக்கும்.
ReplyDelete