Monday, March 31, 2008

முல்லைத் திணையின் மரபு மீறல்கள்...

வரலாறு.காம் மின்னிதழில் வரும் கட்டுரைகள் மிகச்சுவையானவை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து வருகிறேன். நேற்று முல்லைத் திணையின் மக்கள் வாழ்க்கையைப் பற்றி ரிஷியா எழுதிய கட்டுரை/கதை ஒன்றைப் படித்தேன். மிகவும் சுவையாக இருந்தது. அதனையும் ரிஷியா திருச்சதய விழாவைப் பற்றி எழுதிய கட்டுரையையும் இங்கே தருகிறேன். முழுக்கட்டுரைகளையும் எடுத்து இங்கே இடலாமா? சுட்டிகளை மட்டும் தந்தால் போதுமா? எது சரி என்ற குழப்பம் இருக்கிறது. முழுக்கட்டுரைகளையும் சுட்டிகளுடன் தருகிறேன். அது முறை இல்லை என்றால் தெரியப்படுத்துங்கள். சுட்டிகளுடன் மட்டும் நிறுத்திக் கொள்கிறேன்.

***

முல்லை மகளே!! வாள் மங்கையே!!
ரிஷியா



மழை மேகப்புறாக்கள் வானவெளியில் குப்பலாய் ஓன்று கூடின. மெல்ல மெல்ல வானம் வெண்மழை பொழிய ஆயத்தமாகிக் கொண்டிருந்த ஆவணித் திங்களின் கார்காலை அது. வைகறை எழுந்து நீராடிய ஆயர்பாடி மங்கையர், தம் இல்லத்துக் கொட்டிலில் மூங்கில்கழியோடு பிணைக்கப்பட்டிருந்த ஆநிரைகளுக்கு நறுமண தூபப்புகை காட்டினர். குளிருக்கு ஓடுங்கிய இளங்கன்றுகளுக்கு இதமாய் இருக்கட்டுமென்று பெரிய மண்சட்டிகளில் காய்ந்த வரட்டிகளோடு, உலர்ந்த சருகுகளைப் போட்டு எரியூட்டினர். ஆயர்குலச் சிறுவர்கள் தம்வீட்டுத் திண்ணையில் அமர்ந்து புல்லாங்குழலை எடுத்துக் காற்றை உள்ளிழுத்துப் பண் இசைக்கத் தொடங்கினர். காலையை வந்தனம் கூறி வரவேற்பதாய் இருந்தது அவர்கள் இசைத்த பூபாளம். சிறுமியர்கள் கொல்லையில் வளர்ந்து நிலம்நோக்கிய வரகுக் கதிர்களைத் தூறல் நனைக்கும் முன் மூங்கில் கூடைகளில் சேமித்தனர். வரகுக் கொல்லையினுடே ஆண்முயல் தன் செவிகளை உயர்த்திக் கொண்டு ஓட, அதன் பின்னே பெண் முயல் ஓட, இதைக் கண்ட சிறுமி ஓருத்தி தன்னிடமிருந்த கூடையைக் கீழே கிடத்திவிட்டு அவைகளைத் துரத்த ஆரம்பித்தாள். சிறுமியர் கூட்டம் கைகொட்டிச் சிரிக்க ஆரம்பித்தது.

அங்கே, அடர்ந்த கானகத்தின் வழியே புறப்பாடியிலிருந்து அந்தணன் ஸ்ரீமன் மாயோன் கோவிலை நோக்கி நடந்தான். ஓங்கி நெடிதுயர்ந்த கொன்றை மரங்கள் பொற்சரங்களெனக் கொன்றைப் பூக்களைச் சூடி ஈரக்காற்றில் களிநடனம் புரிந்தன. தாழ்ந்திருந்த ஓரு மரக்கிளையைப் பிடித்து உலுக்கித் தன் மேல்துண்டால் கொன்றைப் பூக்களைச் சேகரித்துக்கொண்டு மேலே நடந்தான். ஒரு கையில் கிண்டி, மற்றொரு கையில் பூக்குடலை நிறையக் குல்லை (துளசி) மாலைகள். கொன்றையிலை ஒன்றைக் குழல் போலச் சுருட்டி வாயில் வைத்துச் சீழ்க்கையடித்தான். அவன் சீழ்க்கைக்கு எதிர்ச்சீழ்க்கை ஒன்று சற்றுத் தொலைவில் குறுஞ்சுனைக்கு அருகிலிருந்து பறந்து வந்தது. வியந்து ஆவல் மேலிடப் பசும் புதர்களிடையே சென்று ஒரு மரத்தின் பின்நின்று கவனித்தான். சுனையில் எழிலி நீராடிக் கொண்டே இவன் குழல் பாட்டுக்கு எதிர்க்கச்சேரி நடத்தினாள். ஒ! இவளா! கானநாடனின் பெண்.. ம்.. ம்ம்.. , இன்னும் சற்றுநேரம் நின்றால் என்ன என்று தோன்றியது. ம்ஹூம், அது நாகரிகமல்ல என்று எண்ணியபடியே நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு நகர்ந்தான். அவள் விடவில்லை. இழுத்து நீண்ட ஒசையாக ஒரு சீழ்க்கையடித்தாள், அவனை நோக்கியபடியே. திமிர்.. திமிர்.. மனதிற்குள் சொல்லிக்கொண்டே நடந்தான்.

திடீரென்று மா.. மா.. என்று பெரும் சப்தமும், இரைச்சலும் சுனையருகே கேட்டது. திரும்பி நோக்கினான். காட்டெருமைக் கூட்டம் ஒன்று சுனையில் இறங்கி நீரைக்கலக்கி அதம் செய்தன. ஐயோ!! அவளுக்கு என்ன ஆயிற்று? மனம் பதறினான். அவளோ, காட்டெருமைக் கூட்டத்தை மூங்கில் கழியால் விரட்டிவிட்டாள். ஒரு கணம் திகைத்தான். எத்தனை வீரம்!! துணிவு, பயம் என்பதையே இந்தப் பக்கத்துப் பெண்கள் அறியார். அந்தோ பாவம்! மேட்டில் எழிலி வைத்திருந்த ஆடைகளைக் காலில் இழுத்துக்கொண்டு காட்டெருமைகள் ஒடிவிட்டன. ஈர ஆடையுடன் அவன் நின்றாள்; என்ன செய்வது என்று புரியாமல். ஸ்ரீமன் அவளை நோக்கி விரைந்தான். இவனைக் கண்டவுடன் அவள் மறுபடியும் சுனைக்குள் இறங்கிவிட்டாள். அவளருகே சென்றவன் தான் போர்த்தியிருந்த மேல் துண்டையும், மாயோனுக்கு அணிவிக்கயிருந்த பட்டுத்துகிலையும் அவள்மேல் எறிந்துவிட்டு விடுவிடுவென்று நடந்தான். சற்றுத் தொலைவு சென்றபின் சற்றே நின்று நிதானித்து அவளைத் திரும்பி நோக்கினான். நன்றியும், அன்பும் ததும்பிய பார்வையுடன் இவனை நோக்கினாள். சிநேகத்தின் பூக்காலம் விழிவழியே மலரத் தொடங்கியது.

வெண்மழைத் தூறல் செந்நிலமாம், முல்லை நிலத்துடன் இரண்டறக்கலந்தது அந்த கார்காலை வேளையில். கார்கால மழை சற்றே ஓய்ந்திருந்த உச்சிப்பொழுது, கான்யாறு கோவில் புறத்தே சுழித்துக் கொண்டு பிரவாகமெடுத்தது. கோவில் முன்றில் விட்டுக் கீழே இறங்கினான், ஸ்ரீமன் வானத்தை அண்ணாந்து பார்த்தான். வானம் கொஞ்சமாய் வெளுத்திருந்தது. மெல்லத் தன் வீடுநோக்கி நடக்கத் தொடங்கியபோது அவளின் நினைவு மயிற்பீலியின் மென்மையான தொடுதலாய் வருடியது. என்ன துணிச்சலான பெண்! தூரத்தேயிருந்த ஆயர்பாடியின் ஏறுகோட்பறை ஒலி அந்தக் கானகம் முழுவதும் ஊடுருவி எங்கும் பூம்பூம்.. பூம்பூம்பூம் ஒலியால் அதிரவைத்தது. வீரவிளையாட்டைப் பார்க்க வேண்டும் போலிருந்தது. அவளையும்தான். பல கல் தொலைவிலும் மணம்வீசி மயக்கும் பிடவ நறுமலர்கள் நிறைந்த ஆயர்பாடியின் காட்டுவழி. அங்கொன்றும், இங்கொன்றுமாய்க் குருந்தமரங்கள். ஒரு மரத்தடியில் ஆவுரிஞ்சி கல்தூண். ஒரு இளங்கன்று ஆனந்தமாய்த் தன்முதுகை அதில் உரசிக்கொண்டிருந்தது. ஏறுகோட்பறையின் தாளத்திற்கு ஏற்பச் சன்னமாய் ஒரு பாடல் காற்றில் கரைந்து கானகத்தை மதுரமாய் நிறைத்தது.

குடக் கூத்தாடும் கண்ணனே! காயாம்பூ வண்ணனே!
குழல்கான கந்தர்வனே! என்னை ஆளும் என்னவனே!


அவளேதான்! அவளெதிரே சென்று நின்றான். கல்தூணை விடுத்துக் கன்று துள்ளி ஒடிவந்து அவன் முழங்காலில் முகம் வைத்துத் தேய்த்தது. இவள்வீட்டுக் கன்றும் நம்மோடு நட்பு பாராட்டுகிறதே! கிண்டியை நீட்டினான். வாங்கி பாலைப்பருகினாள். துளசி மாலை ஒன்றையும் கொடுத்தான். வாங்கித் தோளில் சாற்றிக் கொண்டாள்.

காலையில் அவன் கொடுத்த வெண்துகில்கள் ஒன்றில் குருந்தம் (எலுமிச்சை) பழங்களைக் கட்டியிருந்தாள். மற்றொன்றில் முதிரை தான்யங்களை முடிந்திருந்தாள். இரண்டையும் அவனிடம் நீட்டினாள். தலையசைத்து மறுத்தான். 'பெற்றுக்கொள்' என்று விழியாலேயே மிரட்டினாள். வேறுவழியின்றி ஏற்றுக்கொண்டான். அவள் ஆயர்பாடி நோக்கி நடந்தாள். அவனும் பின்தொடர்ந்தான். அவனைத் தொடர்ந்து இளங்கன்றும் ஒடியது. அங்கே, ஆயர்பாடியின் வெளிமுற்றத்தில், போருக்குச் செல்லாத இளம் பிள்ளைகள் ஏறுதழுவுதலில் ஈடுபட்டிருந்தனர். ஸ்ரீமன் நின்று ரசித்தான்.

அவ்வழியே, யானைப்பாகர்கள் இருவர், கொம்பன்களை வடமொழிச்சொற்களால் விரட்டிக்கொண்டு சென்றவர்கள், எழிலியும், மூமனும் நிற்பதைக் கண்டு பரிகாசப்பார்வை ஒன்றை வீசினர். ஒரு முரட்டு இளைஞன் பரிக்கோலை மூமனைநோக்கி எறிந்தான். இதைக்கண்ட எழிலி, மூமனை மராமரத்துப் பின்தள்ளிவிட்டுத் தன் இடையில் செருகியிருந்த குறுவாளை வீசிப் பரிக்கோலைத் தட்டிவிட்டாள். கீழே விழுந்த பரிக்கோலைப் பாய்ந்து எடுத்துக் குறி தவறாமல் கொம்பனை நோக்கி எறிய, அவ்யானை பிளிறிக்கொண்டு ஓடியது. பாகர்களும் அதன்பின்னே ஒடினார்கள். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நடந்தவற்றைக் கண்டு திகைத்து உறைந்துப் போனான், ஸ்ரீமன். இந்தப் பெண்ணுக்குள் இத்தனை வீரமா!! மெய்சிலிர்த்தான். அவனை அழைத்துக் கொண்டு தன் இல்லம் நோக்கி நடந்தாள். செஞ்சுடரெனச் செங்காந்தள் மலர்க்கூட்டம் ஒன்றைக் கடந்து செல்லும்போது காலையில் அடித்தச் சீழ்க்கையை அவள் மறுபடியும் எழுப்ப, கீழ் உதட்டைக் கடித்துத் தன் புன்முறுவலை அடக்கிக் கொண்டான்.

அவள் வீட்டுத் திண்ணையில் சிறுமியர் கூடி கண்ணனைப்பாடி, குரவைக் கூத்தாடினர். வீட்டின் உள்ளே பெண்டுகள் தயிர் கடையும் மத்தின் ஒசை ஆய்ச்சியர் குரவைக்குத் தாளமாய் அமைந்தது. அப்போது மெல்லிய சிறு தூறலாய்ப் பெயல் பொழிய, தன் வீட்டு மரக்குடையை அவனிடம் நீட்டினாள். மரக்குடையைப் பிடித்துக் கொண்டு தன் புறப்பாடி நோக்கி நடந்தான். மழை அடர்த்தியாய்ப் பொழிய, பெரும் காற்று மழைத்துளிகளைப் பூத்தூவலாய்ச் சிதறடிக்க, கார்கால உச்சிப்பொழுது அழகாய்க் கடந்தது முல்லை நிலத்தில்.

பெரும்மழைக் காலத்தின் அந்திமாலைப் பொழுது, ஆவணித் திங்கள் மாயோன் திருவோண நன்னாள் அந்திவிழா அன்றைக்கு. மின்னலை எள்ளி நகையாடின நெய்விளக்குகளின் கண்சிமிட்டல்கள். நெல்லும், முல்லையும் தூவி, தெய்வமடை (படையல்) படைத்து வழிபட்டனர், ஆயர்பாடி மக்கள். பெருமுது பெண்டிர் விரிச்சி (நற்சொல்) கேட்கச் சென்றனர். இடிமுழக்கத்துடன் பெயல் பொழிய, அதற்கு இசைந்து மகிழ்ந்தபடியே முல்லைக்கொடிகள் மென்காற்றில் மழைச்சாரலின் தாளகதிக்கு ஏற்ப ஆனந்த நர்த்தனமாடின. நெருங்கிப் பூத்த காயாம்பூக்கள் மழைத்துளிகளைத் தம் இதழ்களில் ஏந்தின. நட்சத்திரப் பூக்கள் மண்ணில் மலர்ந்தாற் போல் வெண்காந்தள்கள் மலர்ந்திருந்தன. மழை வில்லின் அழகை, வாத்சல்யத்தை மண்ணில் கொண்ட அந்த முல்லை கானகம் முழுவதும் எங்கு நோக்கினும் மனோகரமாய் இருந்தது. முறுக்குண்ட கொம்பினை உடைய கலைமான் தன் மடமானுடன் கானகத்தினுடே ஒடி விளையாடியது. தன்னோடு அணைத்தபடியே முல்லையாழில் சாதாரிபண் வாசித்த எழிலி, மாயோன் கோவில் மணியொலி கேட்டு எழுந்தாள். அவள் கோவிலை அடைந்தபொழுது திருஅந்திவிழா நடந்து முடிந்துவிட்டிருந்தது. நெல்லையும், முல்லை பூக்களையும் தூவி வழிப்பட்டாள்.

மரத்தூண் மறைவில் நின்று இவளை கவனித்த ஸ்ரீமன் “முகில் மகளே” என்றழைத்தான். தெய்வமடையை வாழையிலையில் வைத்து அவளிடம் கொடுத்தான். பெற்றுக்கொண்டு வெளியே வந்தாள். அவனும் வெளியே வந்தான். கோவிலை அடுத்த பசும்புதரில் மின்மினிப் பூச்சிகள் வட்டமடித்துப் பறந்தன. அவற்றை வாயில் கவ்விய கன்னல் குருவிகள் அருகே மரக்கிளையில் சுரைக்குடுவை போன்று தொங்கிய கூடுகளின் உள்ளிருந்த மண்கட்டியின் மீது மின்மினிகளை ஒட்டவைத்து இருளை விரட்ட விளக்கேற்றின. அவனும், அவளும் அங்கு தொங்கிய கூடு விளக்குகளை ரசித்தபடியே நின்றனர். மின்னல் ஒளியில் பொன்தூவலாய்ப் பெருமழை பொழிய, சிறுபொழுது மிக ரம்மியமாய்க் கடந்தது.

மேற்கண்டவை, காலை, உச்சி, மாலை மூன்று வேளைகளில் முல்லை நில வாழ்க்கையின் சுகமான கற்பனை. தலைவன் போருக்குச் சென்றுள்ளான். தலைவி அவனை நினைத்து வருந்துகிறாள். இருத்தலும், இருத்தல் நிமித்தமும். இதுவே முல்லைத் திணை ஒழுக்கம். இதை மீறியுள்ளேன். போருக்குச் செல்லாதவர்களின் முல்லை வாழ்க்கையைக் கற்பனையில் கண்டேன். காதலும், வீரமும் தலைவன் தலைவிக்கு மட்டுந்தானா? மற்றவர் வாழ்வில் காதலும், வீரமும் இல்லையா? காடுசார்ந்த வாழ்க்கை வாழ்பவர்கள் வீரமிக்கவர்களாய்த்தான் இருந்திருப்பார்கள். இங்கே காதலர்களுக்குப் பெயர் சூட்டி உள்ளேன். அடுத்த மரபுமீறல் இது. எழிலியும், மூமனும் சாதாரண முல்லைநில மக்கள். இவர்களைச் சார்ந்தே முல்லைத்திணையை வர்ணித்துள்ளேன்.

இத்தகைய மரபுமீறலுக்குக் காரணமாய் அமைந்தது நப்பூதனார் பாடல். இதுகாறும் வாளேந்திப் போருக்குச் சென்ற மகளிர் பற்றி நான் படித்ததில்லை. முல்லைப்பாட்டு போர்க்களம் சென்ற வீரமகளிரை வெளிச்சம் போட்டுக் காட்டியது. இது ஒரு வரலாற்றுச் செய்தியே! என்ன, நப்பூதனார் அப்பெண்கள் பெயரை குறிப்பிடவில்லை. அதனாலென்ன? முகமும், முகவரியும், பெயரும் இல்லாவிட்டால் என்ன? எழிலி, முகிலி, ராதை, நப்பின்னை என்று நாம் பெயர் வைத்தால் என்ன? மரியாதை செய்தால் என்ன? போருக்குச் சென்ற வீரமகளிரில் மேற்கண்ட எழிலியும் ஒருவராக இருக்கலாம். இனி முல்லைபாட்டு.


வேறுபல் பெரும்படை நாப்பண், வேறுஓர்
நெடுங்காழ்க் கண்டம் கோலி, அகம்நேர்பு
குறுந்தொடி முன்கை, கூந்தல் அம் சிறுபுறத்து
இரவுபகல் செய்யும் திண்பிடி ஒள்வாள்
விரவுவரிக் கச்சின் பூண்ட, மங்கையர்
நெய்உமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇ,
கைஅமை விளக்கம் நந்துதொறும் மாட்ட


முல்லைப்பாட்டு(43 - 49)


படைவீரர்களின் பாடிக்கு நடுவே நெடிய கோல்களை நட்டு, வண்ணத்திரையால் அரசனுக்குரிய தனிப்பாசறை அமைந்திருந்தனர். அப்பாசறையின்கண் குறுகிய கையணிகள் (வளையல்கள்) அணிந்த முன்கையினையும், சிறுமுதுகில் புரளும் கூந்தலையும் உடைய முல்லைநில மங்கையர் தம் இடையில் இரவைப் பகலெனச் செய்யும் ஒளிபொருந்திய உறுதியான பிடியுடைய வாளினைத் தம் இடைக்கச்சில் பூண்டிருந்தனர். அம்மங்கையர் விளக்கிற்கு நெய் ஊற்றப் பயன்படும் குழலால் நெய் ஊற்றி, நெடுந்திரியைத் தூண்டி விளக்கினை ஏற்றினர். (அவியும் தோறும்).

இந்த மங்கையர் யார்? மருத்துவம் பார்க்கவும், விளக்கேற்றவும், வீரர்களுக்குச் சமைத்துப் போட மட்டும் போர்க்களத்திற்குச் செல்லவில்லை என்பது திண்ணம். வாளை வீசவும், சுழற்றவும் போதிய பயிற்சி இல்லாமலா வாளை இடையில் பூண்டிருந்தனர்?

போர் முனையில் போராடவும், வாள்முனையில் வீரம் நிலைநாட்டவும் சங்ககாலப் பெண்டிர் பழகியிருந்தனர். முல்லைநிலத்து வீரமகளிர் ஆண்களுக்கு இணையாகப் போர்க்களம் சென்றனர் என்ற செய்தியைப் பறைசாற்றுகிறது, மேற்கண்ட முல்லை வரிகள். வீரச்சமர் புரிந்து, வரலாற்றில் தடம் பதித்து, வீரத்தின் விளைநிலமாய் வாழ்ந்திருக்கிறார்கள். புலியை முறத்தால் அடித்து விரட்டிய வீரமறக்குலத்தின் பரம்பரை இவர்கள்.

பரிசில் பெறும் பாணர்குலமல்ல நப்பூதனார். ஏனெனில், காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் ஆவார். நப்பூதனார் கள் பருகிவிட்டு மேற்கண்ட வரிகளை எழுதவில்லை என்பதும் தேற்றம். மேற்கண்ட பாடலைப்போலத் தமிழரின் வீரவரலாறு நிறையச் சங்கப்பாடல்களில் பேசப்படுகிறது. கூர்ந்து அவதானிப்பது நம்கையில் உள்ளது. தமிழனுக்கா வரலாறு இல்லை? (வளையோசை குலுங்கக் குலுங்க, வாள் ஓசை டண், டண் என்று அதிர, வாட்போரிடும் வீரமங்கையரின் காட்சி மனத்திரையில் ஒடி என்னைக் களிவெறி கொள்ளச்செய்கிறது).

முல்லையே நீ பாடு
வீரத்திருமகளை!
வெற்றித்திருவை!


***

அன்றும் இன்றும் என்றென்றும் திருச்சதயவிழா
ரிஷியா



வாசகர் அறிமுகம்

வரலாறு.காம் மின்னிதழின் நெடுநாளைய வாசகியான திருச்சியைச் சேர்ந்த ரிஷியா அவர்கள் மாமன்னர் இராஜராஜர் மீது தீராக்காதல் கொண்டவர். இராஜராஜரைப் பற்றி ஒரு சிறு குறை சொன்னாலும் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்குப் பற்று வரக்காரணம், இராஜராஜரின் மேலாண்மை மற்றும் நிர்வாகத் திறமைகள் பற்றிச் செய்த ஆய்வின்போது கிடைத்த தகவல்கள் ஏற்படுத்திய பிரமிப்பு. இயற்பியலில் முதுகலை, வாணிப நிர்வாகத்தில் முதுகலை (MBA), கணிணிப் பயன்பாட்டியலில் பட்டயப்படிப்பு எனத் தகுதிகளை வளர்த்துக் கொண்டாலும், வரலாற்றின் மீது கொண்ட காதலால் கல்வெட்டுகளை முழுமையாகப் புரிந்துகொள்ள சமஸ்கிருதத்தில் பட்டயப்படிப்பும் பயின்று வருகிறார். பாரதிதாசன் பல்கலை வழங்கும் திருக்குறள் பட்டயப்படிப்பிலும் சேர்ந்திருக்கிறார். இராஜராஜரைப் பற்றி இவர் மேற்கொண்டிருக்கும் வரலாற்று ஆய்வுகள் மேலும் பற்பல புதிய தகவல்களை வெளிக்கொணர்ந்து அவரது பிரம்மாண்டத்தை உலகுக்கு அறிவிக்க வரலாறு.காம் மனதார வாழ்த்துகிறது.


--------------------------------------------------------------------------------


இனிக்கட்டுரை...

இராஜராஜீசுவரம். நினைத்தாலே தமிழ்மனம் பூரிக்கும், தலை நிமிரும். ஆயிரம் வருடங்களுக்கு முன்னும் சரி, இன்று ஆயிரம் வருடங்களுக்குப் பின்னும் சரி, இனிவரும் ஆயிராமாயிரம் வருடங்களுக்குப் பிறகும் சரி, எத்திசையும் புகழ்மணக்க விளங்கும் தமிழ் அணங்கின் வெற்றித் திருமகுடமாய் விளங்கும் கற்கோயில். காலத்தின் பக்கங்களில் தினம்தினம் ஓரு புதுக்கவிதையை வாரி வழங்கும் நித்யவினோதத் திருக்கோயில். (நித்யவினோதத் திருக்கோயில், ஏனென்றால் ஒவ்வொரு முறை காணும்போதும் விழியில் நுழைந்து, நெஞ்சில் நிறைந்து, கருத்தில் பதிந்து, மனதில் உறைந்து ஓரு புதுக்கவிதையைத் தருகிறது). எடுப்பித்தவர் நம் நித்யவினோதரான மாமன்னர் இராஜராஜசோழர்.

அன்று அவர் காலத்தில் சதயவிழா இராஜராஜீஸ்வரத்தில் எப்படியெல்லாம் கொண்டாடப்பட்டிருக்கும்? சதயவிழா மட்டும்தான் கொண்டாடப்பட்டதா? மற்ற திருவிழாக்கள் என்ன என்ன கொண்டாடப்பட்டன? மகாரசிகரான அவரும் அவரைச் சார்ந்தவர்களும் எப்படி விழா எடுத்தார்கள்? என்மனம் பின்னோக்கிச் செல்ல விழைந்தது, இன்று நடக்கும் வைபவங்களை எல்லா கண்டபின்.

ஆயிரம் வருடங்களுக்கு முன்...

இராஜராஜீஸ்வரத்தில் நடைபெற்ற திருவிழாக்கள்:-

1. திருச்சதயத்திருநாள் : ஒவ்வொரு மாதமும் சதய நட்சத்திரம் அன்று விழா நடைபெற்றது. ஆக, வருடத்தின் 12 சதய நாட்களிலும் இராஜராஜீஸ்வரம் புதுமணம் காணும் மங்கையெனத் திருவிழாக்கோலம் பூண்டது.

2. ஸ்ரீஇராஜஜேஸ்வரமுடையார் ஆட்டை பெரிய திருவிழா : இது வருடம் ஓரு முறை நடக்கும் உற்சவம். (ஆட்டை - ஆண்டு). கொடியேற்றத்துடன் 10 நாட்கள் நடைபெற்றது.

3. சங்கிரமம் அல்லது சங்கிராந்தி : சூரியன் ஓரு இராசியிலிருந்து மற்றொரு இராசிக்குப் பிரவேசிப்பதே சங்கிராந்தி (மாதப்பிறப்பு) எனப்பட்டது. ஆக, 12 மாதப்பிறப்பும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டன.

4. கார்த்திகைத் திருவிழா : கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை நட்சத்திரம் அன்று, ஓரு நாள் உற்சவமாக இவ்விழா நடைபெற்றது.

இவ்விழாக்கள் நடக்கும் நாட்களில் உற்சவத் திருமேனிகளுக்கு, ஒரு நாளில் மூன்றுமுறை திருமஞ்சனம் பாங்குடன் நடைபெற்றது. பெரிய செண்பக மொட்டுக்கள், ஏலவரிசிகள் (ஏலக்காய்) மற்றும் இலாமிச்சை (ஓரு வகையான வாசனை வேர்) வேர்கள் ஆக மூன்று வாசனையூட்டும் பொருட்களால் திருமஞ்சன நீர் சுகந்த மணமூட்டபட்டது. இந்நீர் கொண்டு உற்சவத் திருமேனிகளுக்குத் திருமஞ்சனம் நடைபெற்றது. முற்றிலும் இயற்கை வேதிக்கூறுகளைக் கொண்ட பொருட்கள். இவை மிகுந்த சுகந்த நறுமணம் தரக்கூடியவை. இன்றோ, 47 வகையான பொருட்கள் கொண்ட பேரபிஷேகப்பட்டியலால் நம் இராஜராஜீஸ்வரமுடையார் மூச்சுத்திணறிப்போய் விடுகிறார். பின்னர், அபிஷேகப் பொருட்களெல்லாம் பெரிய பெரிய அண்டாக்களில் கொண்டுவரப்பட்டு, சண்டேஸ்வரர் திருமுன் முன்பாக வைக்கப்பட்டுத் தரையில் கால்பதிக்க இயலாதவாறு இரண்டாம் முறை அபிஷேகிக்கப்பட்டு நம்மைத் தலைதெறிக்க ஓடவைப்பது தனிக்கதை.

திருமஞ்சனநீரை வாசனையூட்ட வேண்டிய மூன்று பொருட்களையும் பெறுவதற்கு நிவந்தங்கள் வழங்கப்பட்டன. சிறுதனத்துப் பணிமகன் அருமொழிதேவவளநாட்டுப் புலியூர்நாட்டு முருகநல்லூருடையான் காடன்கணவதி உடையார் 56 காசு பொலிசையூட்டாகத் (வைப்புநிதி போன்றது) தஞ்சாவூர்க் கூற்றத்துப் புறம்படி திரிபுவனமாதேவி பேரங்காடி வணிகர்கள் சமூகத்திடம் வழங்கியுள்ளார். அவ்வணிகர்கள் 7 காசை வட்டியாகத் தரவேண்டும். வருடந்தோறும் இந்த 7 காசைக் கொண்டு செண்பகமொட்டுக்கள், ஏலவரிசிகள் திருமஞ்சனநீருக்குப் பெறப்பட்டன. மேலும், வடகரை ராஜேந்திரசிங்கவளநாட்டு மிறைக்கூற்றத்துப் பிரம்மதேய இராமனூர் சபையார் 29வது ஆட்சியாண்டு முதல் 30 காசைப் பொலிசையூட்டாகப் பெற்றுக்கொண்டு, வட்டியாகத் தரும் மூணேமுக்கால் காசிற்கு இலாமிச்சைவேருக்கு ஆன செலவுகளைச் செய்யவேண்டும் என்று நிவந்தம் அளிக்கப்பட்டது.

திருவிழா என்றால் மேளதாளம் இல்லாமலா? அதற்கும் நிவந்தம் அளிக்கப்பட்டது. இராஜேந்திரசிங்கவளநாட்டு மண்ணிநாட்டு நாட்டார்மங்கலத்துக் கடிகையான், உடையார் ஸ்ரீராஜராஜேஸ்வர உடையார்க்குத் திருவாய்க்கேள்வி செய்யும் ராஜகேசரி கோதண்டராமனான ஜெயங்கொண்ட சோழகடிகைமாராயன் 29வது ஆண்டுவரை பொலிசையூட்டுக்காக 40 காசு வழங்கியுள்ளார். ஸ்ரீவீரநாராயண சதுர்வேதிமங்கலத்துச் சபையார் 40 காசினை வருடந்தோறும் செலுத்தவேண்டும். அதில் அரைக்காசு வீதம், திருப்பறை அடிக்கும் கடிகையார் ஐவர் ஆட்டைதிருவிழா கொடியேற்று நாளில் பறை கொட்டுவதற்கு கூலியாகப் பெற்றுக்கொண்டனர். மேலும், ஆடவல்லான் திருச்சுற்று வைபவத்தின் போதும் பறைகொட்டுவதற்கு அரைக்காசு வீதம் 5 மேளக்காரர்களும் பெற்றுக்கொண்டனர். ஒருவேளை, முந்தைய ஆட்டைத் திருவிழாவின்போது பறைகொட்டியவர் கிடைக்கவில்லை என்றால், வேறு ஒருவர் இரு உற்சவங்களின்போதும் பறைகொட்டி ஒருகாசு வீதம் பெற்றுக் கொள்ளலாம் என்று நிவந்தமளிக்கப்பட்டது.

அன்னமிடல் என்பது அந்நாளில் இயல்பாய் நடைபெற்ற ஒரு தர்மவழக்கமாக இருந்துள்ளது. (இன்று போல் புகைப்படம் எடுத்து கொள்வதற்கும் போஸ்டர் ஒட்டுவதற்கும் ஏற்படுத்தப்பட்ட சடங்கல்ல). இராஜராஜீஸ்வரத்தில் மாதாந்திர சதயவிழாவின் போதும், வருடாந்திர ஆட்டைத் திருவிழாவின் போதும், சிவயோகிகள் பதின்மரும் உடையார் சாலையிலே உண்ணக்கடவர் என்று பெயர் குறிப்பிடயியலாத (கல்வெட்டு வரிகள் சிதைந்துள்ளன) ஒரு பெருமகனார் நிவந்தமளித்துள்ளார். 25 கலம் நெல் ஒரு வருடத்திற்குத் தேவைப்பட்டது. ஒரு குறுணியும், 2 நாழி நெல்லும், ஆடவல்லான் என்னும் அளவையால் அளந்து சிவயோகிகளுக்கு ஒரு வேளை உணவிற்காகக் கொடுக்கப்பட்டது. திருவிழா நடந்த அத்தனை நாட்களிலும் 240 சிவயோகிகள் வயிறார உண்ண உணவளிக்கப்பட்டது.

பொலிசையூட்டாக 100 காசுகள் இதற்காகப் பெற்றுகொண்டவர்கள் நித்தவினோத வளநாட்டு வெண்ணிக்கூற்றத்துப் பிரம்மதேயத்துப் பெருநங்கைமங்கலத்துச் சபையார். பெற்றுக்கொண்ட பொலிசையூட்டுப் பணத்திற்கு அவர்கள் வட்டிவிகிதமாய் ஒரு காசிற்கு மூன்று குறுணி நெல் வருடந்தோறும் அளிக்க கட்டளையானது.

சூரியன் இருக்கும் திசைநோக்கி முகம் திருப்பும் சூரியகாந்தி மலரெனப் பல பெருந்தனத்து அதிகாரிகள் அன்று செயல்பட்டுள்ளனர். யதா ராஜக: ததா சேவக: என அவர்களில் ஒருவர் தான் ஸ்ரீராஜராஜேஸ்வரமுடையாருக்கு ஸ்ரீகாரியம் செய்த பொய்கை நாடுகிழவன் ஆதித்தன்சூரியனான தென்னவன் மூவேந்தவேளான். இவர் திருவிழாக்களின்போது இறைத்திருமேனிகளுக்குத் திருவமுது படைப்பதற்கான நிவந்தம் அளித்துள்ளார். பொலிசையூட்டாக 78 காசுகள் கொடுத்துள்ளார். இக்காசு ஒன்றுக்கு வட்டியாக மூன்று குறுணி நெல் வருடந்தோறும் தஞ்சைப் பெரிய பண்டாரத்தில் சேர்க்க வேண்டும்.

என்னென்ன திருவமுது படைத்தார்கள் என்றால், அப்பக்காய்க் கறியமுது, கைக்கறியமுது (பழங்களால் ஆனது), பொரிக்கறியமுது, புளியங்கறியமுது ஆகியன. இவற்றைச் சமைக்கத் தேவையான போனகபழவரிசி, பூரிநெல்லு, பருப்பு, மிளகு, கடுகு, சர்க்கரை, ஜீரகம், கொள்ளு, நெய், தயிர், உப்பு, புளியங்காய்கள், பழம் எனப் பலதும் வட்டி நெல்லிற்கு இணையாகப் பெறப்பட்டன. அமுதைப் படைப்பதற்கான வாழைக்குருத்து இலைகள், அடையக்காய் (பாக்கு), வெள்ளியிலை (வெற்றிலை) எல்லாம் பெறப்பட்டன. திருவமுது சமைப்பதற்கான விறகுக்கட்டைகள் பெறவும் வட்டிநெல் நிவந்தமளிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டின்போது தூபமேற்ற உரியுஞ்சிதாரி எனப்பட்ட தோலுடைய தூபப்பண்டம் உபயோகிக்கப்பட்டது. அதைப் பெறுவதற்கும் ஒரு நாழிநெல் ஒரு காசிற்கு வட்டியாகப் பண்டாரத்தில் வைக்கப்பட்டது.

திருவிழாக்களின்போது ஸ்ரீஇராஜராஜீஸ்வரமுடையாருக்கும், தட்சிணமேரு விடங்கருக்கும் விளக்கேற்றவும், தூபமிடவும் வேண்டுமல்லவா? தீபமேற்றக் கற்பூரங்களே உபயோகிக்கப்பட்டன. தீபம், தூபம் ஏற்றவும், திருவமுது படைக்கவும் மொத்தம் 94 காசுகள் தஞ்சைப் பண்டாரத்தில் பெருமகனார் ஆதித்தசூரியனால் பொலிசையூட்டாக வைக்கப்பட்டன. இப்பொலிசையூட்டுப் பணத்தைப் பெற்றுக் கொண்ட நித்தவினோத வளநாட்டு வெண்ணிக் கூற்றத்துப் பிரம்மதேயப் பெருநங்கைமங்கலத்துச் சபையார், வட்டியாக நெல்லும் காசும் வருடந்தோறும் கொடுக்கக் கட்டளையானது.

இவ்வாறாக, அன்று ஸ்ரீஇராஜராஜீஸ்வரத்தில் மாதாந்திர, வருடாந்திரத் திருவிழாக்கள் களைகட்டின. அன்றுமுதல், இன்றுவரை திருச்சதயவிழா தவறாமல் நடைபெற்று வருகிறது. (என்ன, பல வேறுபாடுகள் உள்ளன.) சந்திர ஆதித்தவர் உள்ளவரை இந்தத் தர்மம் நடக்கக்கடவது என்று கல்லில் வெட்டிச் சென்றுள்ளர்கள். ஆதலால், சந்திர ஆதித்தவர் உள்ளவரை திருசதயத் திருநாள் இன்றும், என்றென்றும் கொண்டாடப்படும்.

பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூறாயிரத்தாண்டு இராஜராஜ சோழனின் புகழ் நிலைக்க வேண்டும்.

தமிழ் உள்ளவரை, தமிழ்மண் உள்ளவரை.

நிலவு உள்ளவரை, பிரபஞ்சம் உள்ளவரை.

ஆதித்தன் உள்ளவரை, பொதிகைத் தென்றல் உள்ளவரை.

4 comments:

  1. //பூரிநெல்லு// பொரிநெல் என்றிருந்திருக்க வேண்டுமோ? (நெல்லு - தெலுங்குச்சாயலில்...!)

    ReplyDelete
  2. நானும் வரலாறு.காம் வாசகன்.....

    அக்குழுவின் பணிகள் அருமை. பல சுவையான வரலாற்றுச் செய்திகளை உலகிற்கு அளிக்கும் அவர்களுக்கு இங்கும் ஒரு வாழ்த்தை சொல்லிகறேன்..

    ReplyDelete
  3. ஜீவா. நீங்கள் சொல்லும் அளவிற்கு நான் கூர்ந்து படிக்கவில்லை போலிருக்கிறது. திரண்ட கருத்தை மட்டுமே படித்தேன். இன்னொரு முறை படித்து, படிக்கும் போது தோன்றும் கருத்துகளைப் பின்னூட்டங்களாக இட வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது செய்கிறேன். :-)

    ReplyDelete
  4. உண்மை தான் மௌலி. நானும் உங்களுடன் சேர்ந்து வாழ்த்துகிறேன்.

    ReplyDelete