'காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே' என்று இறைவனார் சுட்டிக்காட்ட அதனால் மனம் மாறி எல்லாச் செல்வத்தையும் துறந்து இடுப்பில் ஒரு முழத் துண்டுடன் துறவியாக வீட்டை விட்டுக் கிளம்பினார் பட்டிணத்து அடிகளான திருவெண்காடர். அவர் அப்படி துறவியாக ஊர் ஊராக அலையும் போது நடந்த நிகழ்ச்சி இது.
ஒரு முறை அசதியின் மிகுதியால் வயல் வரப்பில் தலை வைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தார். அந்த வழியே சென்ற பெண்கள் இருவர் 'இந்தச் சாமியாரைப் பாரேன். எல்லாத்தையும் விட்டுட்டு வந்தும் தலைக்கு தலையணை வேணுங்கற சுகம் மட்டும் போகலையே. தலைக்கு வரப்பு தேவைப்படுது பாரு' என்று சொல்லிக் கொண்டே சென்றனர். அதனைக் கேட்டுத் துணுக்குற்றப் பட்டிணத்தார் உடனே வரப்பில் இருந்து தலையை எடுத்து காய்ந்த வயல் வெளியிலேயே வைத்துக் கொண்டு உறங்கினார்.
அவ்வழியே சென்ற பெண்கள் திரும்பி வந்தனர். அப்போது பட்டிணத்தார் வரப்பிலிருந்து தலையை எடுத்துக் கீழே வைத்திருப்பதைப் பார்த்து, 'ஆகா. இந்தச் சாமியாரைப் பாரடி. ஒரு சொல் பொறுக்க மாட்டேங்கறார். நாம வரப்புச் சுகம் தேவையா இவருக்குன்னு கேட்டோம். உடனே வரப்புல இருந்து தலையை எடுத்துக் கீழ வச்சுட்டாரு. என்ன இருந்தாலும் நான்ங்கற எண்ணம் போகலை பாரு' என்றாள் அந்தப் பெண்.
படிக்காத அந்தப் பெண்களின் அறிவின் பெருமையை எண்ணி வியந்தார் பட்டிணத்தார்.
***
இந்த இடுகை 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் 22 ஜூலை 2006 அன்று இட்டது.
இந்த இடுகை 'சின்ன சின்ன கதைகள்' பதிவில் 22 ஜூலை 2006 அன்று இட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:
ReplyDelete18 comments:
கோவி.கண்ணன் said...
குமரன் அவர்களே !
இதை முன்பே படித்திருக்கிறேன்... நினைவூட்டி இருக்கிறீகள் நன்றி
July 23, 2006 12:07 AM
குமரன் (Kumaran) said...
நன்றி கோவி.கண்ணன் ஐயா.
July 23, 2006 12:14 AM
கோவி.கண்ணன் said...
இப்பொழுதெல்லாம் முற்றும் துறந்து, துறவரமும் துறந்த சாமிகளைத் தான் அதிகம் பார்க்கமுடிகிறது :)))
July 23, 2006 12:17 AM
குமரன் (Kumaran) said...
ஆமாம் கோவி.கண்ணன் ஐயா. காலத்தின் கோலமாக இருக்கலாம். இல்லை நம் கண்பார்வையின் குறைவாக இருக்கலாம். இல்லை உண்மைத் துறவிகள் நம் கண்ணிற்குத் தென்படாமல் இருக்கலாம். துறவறத்தையும் துறந்த துறவிகள் தான் நம்மிடையே அதிகம் தென்படுகிறார்கள் இப்போது. :-)
July 23, 2006 12:19 AM
கோவி.கண்ணன் said...
காலத்தின் கோலமல்ல... அலங்கோலம். நமது கண்ணில் குறையிருந்தால் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடியும். காட்சிகளில் குறை இருந்தால் சிவனே என்று பார்த்தும், ஒதுங்கிக் கொள்ள வேண்டியது தான் போலும்.
July 23, 2006 12:23 AM
சிவமுருகன் said...
அம்மை அகிலாண்டேஸ்வரியையே பட்டிணதார் அப்படி கண்டார்.
அவரிடமிருந்த கொஞ்ச நஞ்ச அறியாமையும், அகம் செய்த பாவமும் இதனால் மறைந்ததாக சொல்வதுண்டு.
நல்ல கருத்துள்ள சம்பவம், நினைவுருத்திய உங்களுக்கு மிக்க நன்றி
July 23, 2006 10:03 PM
SK said...
"உனக்கு என்ன வேண்டுமோ அதைச் செய்து கொள்!
பிறர் கருத்துக்கு செவி சாய்த்தால் கலாய்ப்புதான் மிஞ்சும்"
என்ற உயரிய கருத்தினைச் சொல்லும் கதை!
வரப்பில் தலை வைத்ததும் தவறில்லை!
கீழே படுத்ததும் தவறில்லை!
அடுத்தவர் செவி மடுத்ததே தவறு!
நன்றி!
July 23, 2006 10:21 PM
Muse (# 5279076) said...
குமரன்,
பக்தி விகடனில் படித்து ரஸித்தேன். மீண்டும் ரஸிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
July 23, 2006 11:03 PM
வெற்றி said...
குமரன்,
நல்ல அருமையான கதை. பட்டினத்தாரின் இக் கதை நான் இதுவரை அறிந்திராதது. மிக்க நன்றி.
பி.கு :- பட்டிணத்தாரா? அல்லது பட்டினத்தாரா? நான் இதுவரை பட்டினத்தார் எனத்தான் எழுதி வருகிறேன். தெளிவுபடுத்துவீர்களேயானால், திருத்திக்கொள்வேன். மிக்க நன்றி.
July 23, 2006 11:56 PM
இலவசக்கொத்தனார் said...
நல்ல கதை. ஆனால் இப்படி விமர்சனங்களுக்காக ஒருவன் தன்னை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டுமா? தனக்குச் சரியென பட்டதை செய்யலாகாதா? அதுவும் ஒரு துறவியானவர்?
July 24, 2006 5:36 AM
குமரன் (Kumaran) said...
துறவிகளுக்கான முக்கிய அறிவுரையாகவும் மற்றவர்களும் முடிந்த அளவில் ஏற்று நடக்க வேண்டிய அறிவுரையாகவு ஆதி சங்கரர் பஜகோவிந்தத்தில் சொல்லும் கருத்தைத் தான் இந்த நிகழ்ச்சி வலியுறுத்துவதாகப் பெரியோர்கள் சொல்வார்கள்.
http://bgtamil.blogspot.com/2006/07/25.html
July 24, 2006 5:45 AM
குமரன் (Kumaran) said...
சிவமுருகன். அம்பிகையே அந்தப் பெண்ணாக வந்ததாகச் சொல்லிக் கேட்பது இதுவே முதல் முறை. நான் படித்தப் பட்டினத்தார் வரலாறுகளில் அப்படிச் சொல்லிப் படித்ததாக நினைவில்லை.
பட்டினத்தாரின் அறியாமையையோ அகம்பாவத்தையோ காட்டுவதை விட துறவிகள் சரியான வழியில் சென்று கொண்டிருக்கவேண்டும்; மற்றவர்களின் சொல்லுக்காக எதையும் மாற்றிக் கொள்ள வேண்டாம்; அப்படி மாற்றிக் கொள்ளத் துவங்கினால் அது முடிவின்றிச் செல்லும் என்ற கருத்தை வலியுறுத்துவதே இந்த நிகழ்ச்சி என்று நினைக்கிறேன்.
July 24, 2006 5:48 AM
குமரன் (Kumaran) said...
சரியாகச் சொன்னீர்கள் எஸ்.கே. இப்படி அடுத்தவருக்காக நம் கருத்தினைக் கூறாமல் மனதில் ஒன்றும் வெளியில் சொல்வது ஒன்றுமாக இரட்டை வாழ்க்கை வாழ்வது எத்தனைக் கொடுமையானது என்பதையும் இந்த நிகழ்ச்சி சுட்டுவதாக உணர்கிறேன்.
July 24, 2006 5:50 AM
குமரன் (Kumaran) said...
Muse,
பக்தி விகடனில் இந்த நிகழ்ச்சி பற்றி வந்ததா? ஹும். ஒரு காலத்தில் பக்தி விகடனையும் குமுதம் பக்தியையும் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தேன். வலைப்பதிவுகளில் எழுதத் தொடங்கிய நாள் முதல் அதெல்லாம் மறந்தே போய்விட்டன. :-(
July 24, 2006 5:51 AM
குமரன் (Kumaran) said...
வெற்றி. நல்ல கேள்வி. நானும் இதுவரை பட்டினத்தார் என்றே எழுதிவந்தேன் என்று நினைக்கிறேன். ஆனால் 'தேவிப்பட்டிணம்' என்றும் 'சென்னப்பட்டிணம்' என்றும் படித்ததாக நினைவு. அதனால் கூகிளாண்டவரைச் சரணடைந்தேன். அவர் இரண்டிற்கும் எடுத்துக்காட்டுகள் காட்டினார். அதனால் நானும் குழம்பி 'சரி. பட்டிணத்தார் என்று எழுதுவோம். யாராவது வந்து இது சரியா தவறா என்று சொல்வார்கள்' என்று எண்ணி அப்படி எழுதினேன். :-) நீங்கள் கேட்டுவிட்டீர்கள். எது சரி என்று அறிந்தவர்கள் கொஞ்சம் சொல்லுங்கள்.
July 24, 2006 5:54 AM
குமரன் (Kumaran) said...
கொத்ஸ். உங்கள் கேள்விகளே இந்த நிகழ்ச்சி காட்டும் உண்மைகள். துறவியாக இல்லாதவன் 'விமர்சனங்களில் உண்மை இருந்தால் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் தான் வளர்ச்சி இருக்கும். ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டு. மற்றவருக்காகவும் மற்றவரிடம் நல்ல பெயர் பெறவேண்டும் என்பதற்காகவும் தான் நம்பாத ஒன்றினை ஏற்றுக் கொள்வது போல் காட்டினால் இரட்டை வாழ்க்கை வாழ் நேரிடும். அதே நேரத்தில் விமர்சனங்கள் எல்லாமே நம் நன்மையை மனத்தில் கொண்டு எழுவதில்லை. தங்கள் தங்கள் நோக்கங்களின் (பெரும்பாலும் உள்நோக்கங்கள்) அடிப்படையிலேயே வருகின்றன என்ற உண்மையையும் அறியவேண்டும். அப்படி இருக்கும் போது விமர்சனங்களுக்காக ஒருவன் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை. தனக்குச் சரியெனப் பட்டதைச் செய்யலாம்'.
துறவிகளுக்கு இதெல்லாம் கூட நியதியில்லை. நியதிகள் எல்லாவற்றையும் கடந்தவர்கள் அவர்கள். சித்தன் போக்கு சிவன் போக்கு என்று இருப்பவர்கள். அதனால் விமர்சனம் அவர்களை ஒன்றும் செய்யாது. செய்யக்கூடாது.
July 24, 2006 5:59 AM
johan -paris said...
'ஆகா. இந்தச் சாமியாரைப் பாரடி. ஒரு சொல் பொறுக்க மாட்டேங்கறார். நாம வரப்புச் சுகம் தேவையா இவருக்குன்னு கேட்டோம். உடனே வரப்புல இருந்து தலையை எடுத்துக் கீழ வச்சுட்டாரு. என்ன இருந்தாலும் நான்ங்கற எண்ணம் போகலை பாரு' என்றாள் அந்தப் பெண்
அன்பு குமரா!
இப் பட்டணத்தடிகள் பற்றிய கதையின் முடிவை! மேற்குறிப்பிட்டது போல் நான் பிரசங்கமொன்றில் கேட்கவில்லை. நான் கேட்டது. வரம்பில் இருந்த தலையை எடுத்து விட்டார் -பட்டணத்தார்
முதல் பெண் சொல்கிறாள்." பாரடி; எவ்வளவு பெரிய துறவி! நீ சொன்னதும் ;வரம்பை விட்டு கீழ் இறங்கிப் படுக்கிறாரே" அதற்கு மற்றப் பெண்; "அவர் முழுதும் துறக்கவில்லை" என்கிறாள். ஏனென்றால் இன்னும் அடுத்தவர் "என்ன?சொல்கிறார்கள் என்பதில் அவர் கவனம் செல்கிறது. இதன் மூலம் அடுத்தவர் சொல்வதில் கவனம் செலுத்தாமல் ;மனதுக்குச் சரியெனப்பட்டதைச் செய்! என்கிறார்கள்.
இதையே!!
"உலகம் ஆயிரம் சொல்லட்டுமே! உனக்கு நீ தான் நீதிபதி-
மனிதன் எதையோ பேசட்டுமே! மனதைப் பார்த்துக்க நல்லபடி- என்கிறார். கண்ணதாசன்
யோகன் பாரிஸ்
July 28, 2006 3:35 AM
குமரன் (Kumaran) said...
கதையின் வேறு வடிவத்தைச் சொன்னதற்கு மிக்க நன்றி யோகன் ஐயா. ஆமாம். நீங்கள் சொன்ன மாதிரியும் இந்த நிகழ்ச்சியைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். இரண்டும் ஏறக்குறைய அதே நீதியைத் தான் சொல்கிறது.
இன்னொன்றும் இரண்டு நாட்களுக்கு முன் நினைவில் வந்தது. இந்த நிகழ்ச்சி பட்டினத்தார் வாழ்வில் நடைபெற்றதா இல்லை சதாசிவ ப்ரம்மேந்திரர் என்ற அவதூத சன்யாசியின் வாழ்வில் நடைபெற்றதா என்று தெரியவில்லை. நீங்கள் இது பட்டினத்தார் வாழ்வில் நடந்ததாகக் கேட்டிருந்தால் அது சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
July 28, 2006 5:54 AM
//குமரன் (Kumaran) said...
ReplyDeleteசிவமுருகன். அம்பிகையே அந்தப் பெண்ணாக வந்ததாகச் சொல்லிக் கேட்பது இதுவே முதல் முறை. நான் படித்தப் பட்டினத்தார் வரலாறுகளில் அப்படிச் சொல்லிப் படித்ததாக நினைவில்லை.
பட்டினத்தாரின் அறியாமையையோ அகம்பாவத்தையோ காட்டுவதை விட துறவிகள் சரியான வழியில் சென்று கொண்டிருக்கவேண்டும்; மற்றவர்களின் சொல்லுக்காக எதையும் மாற்றிக் கொள்ள வேண்டாம்; அப்படி மாற்றிக் கொள்ளத் துவங்கினால் அது முடிவின்றிச் செல்லும் என்ற கருத்தை வலியுறுத்துவதே இந்த நிகழ்ச்சி என்று நினைக்கிறேன்.
July 24, 2006 5:48 AM //
சரியாக சொன்னீர்கள்.
அவன் சொல்ல,
இவன் சொல்ல,
நான் ஏன் அங்கு செல்ல?
இருக்கே என்வழி வெல்ல! :)
அருமையான குட்டிக் கதை...நன்றி..:)
ReplyDeleteசிவ்முருகன்,
ReplyDeleteஇராகவன், இரவிசங்கர் இவங்ககிட்ட பழகாதீங்கன்னு சொன்னா கேக்க மாட்டேங்கறீங்க. பாருங்க உங்களுக்கு இந்த அடுக்கு மொழியில பின்னூட்டம் போடற வியாதி வந்திருக்கு. :-)
நன்றிகள் மல்லிகை.
ReplyDelete