Monday, March 17, 2008

இவரது நிறை குறைகளைச் சொல்ல எனக்கு முழுத்தகுதி உண்டு தானே?!!

எளிதாகச் செய்யக் கூடிய செயல் இல்லை இது. நம்மோடு தினம் தினம் வாழ்பவர்கள், வேலைபார்ப்பவர்கள் போன்றவர்களிடம் இதனை எளிதாகச் செய்துவிடலாம். ஆனால் நேரில் ஒரு முறை கூடப் பார்க்காமல் பதிவுகளின் வழியாகவும் மின்னஞ்சல் அரட்டைகளின் வழியாகவும் ஓரிரு முறை தொலைபேசியதையும் வைத்து ஒருவருக்கு எப்படி இந்த 'நிறை குறைகளைச் சுட்டிக் காட்டுதலை'ச் செய்வது?

இந்தக் கோரிக்கை வந்தவுடனே நான் முதலில் செய்தது என் மறுப்பைச் சொன்னது தான். இராகவன் உடனே 'யோவ். நீர் மட்டும் மற்றவர்களிடம் விமரிசனம் கேட்டு நச்சரிப்பீர்கள். அவர்கள் கேட்டால் நீங்கள் செய்ய மாட்டீர்களா? உமக்கொரு நியாயம் மற்றவர்களுக்கு நியாயமா?' என்று சத்தம் போடத் தொடங்கிவிட்டார். சரி இவரைப் பேசவிட்டால் 2005ல் நடந்ததை எல்லாம் சொல்லிச் சத்தம் போடுவார் என்று பேசாமல் இருந்துவிட்டேன்.

மறுநாள் அலுவலகம் சென்ற பின் 'சரி. அப்படி என்ன தான் இவர் எழுதியிருக்கிறார் என்று ஒரு பார்வை தான் பார்ப்போமே' என்று தொடங்கினேன். நான் பதிவுகளில் எழுத வந்த அதே நேரத்தில் தான் அவரும் வந்திருக்கிறார். அவரது முதல் இடுகை அக்டோபர் 2005ல் இடப்பட்டிருக்கிறது. நானும் அந்த மாதத்தில் தான் பதிவுகள் எழுதத் தொடங்கினேன். இப்போது அதனைக் கவனித்தவுடன் 'நல்லவேளை. அவர் தொடர்ந்து எழுதாமல் அடுத்த வருடம் செப்டம்பரில் தான் மீண்டும் பதிவெழுத வந்திருக்கிறார். அவர் 2005லேயே தொடர்ந்து எழுதியிருந்தால் ஆலையில்லாத ஊருக்கு இலுப்பையாக நாம் இருந்திருக்க முடியாது' என்று ஒரு எண்ணம் மனதில் ஓடியது. உண்மை தானே?!!!

2006 ஆகஸ்ட், செப்டம்பரில் ஒளவையாரின் விநாயகர் அகவலுக்குப் பொருள் சொல்ல இன்னொரு பதிவு தொடங்கலாம் என்று எண்ணி 'சீதக்களப செந்தாமரை பூம்பாதச் சிலம்பு...' என்று பொருளை எழுதத் தொடங்கியிருந்தேன். அப்போது வந்தது பாருங்கள் ஒரு இடுகை தமிழ்மணத்தில். உள்ளே சென்று படித்தால் 'அடடா. எவ்வளவு அருமையாக எழுதியிருக்கிறார். நாம் எழுதியிருந்தால் வழக்கம் போல் வெறும் கோனார் உரையாகப் போயிருக்கும். இவர் எழுதியதில் எவ்வளவு சுவை' என்று தோன்றியது. பதிவுலகில் ஒத்த மனம் கொண்ட இன்னொரு நண்பர் எனக்குக் கிடைத்துவிட்டார் என்பது அப்போதே தெரிந்துவிட்டது.

பதிவு எழுத வரும் பலரும் பொது புத்தியுடன் செய்யும் ஒன்றைத் தான் இவரும் செய்திருந்தார். அண்ணனுக்கு வணக்கம் என்பது இடுகையின் தலைப்பு. அதில் நானும் வழக்கம் போல் என் பொது புத்தியின் படி ஒரு பழைய பாட்டை இட அதற்கு அவர் சொன்ன பதிலை இன்று பார்த்தால் 'அடடா. தலைவர் அப்போதே இன்றைக்குப் பதில் சொல்பதைப் போலவே சொல்லியிருக்கிறாரே' என்று தோன்றுகிறது. அந்த பதிலிலேயே அவர் நண்பர் ஆகிவிட்டார் என்று நினைக்கிறேன்.

அடுத்து அவர் இட்ட இடுகையின் தலைப்பே அவர் என்றென்றைக்கும் தமிழ்மணத்தில் ஒளி வீசும் பதிவராக வலம் வருவார் என்று கட்டியம் கூறியது. அது வரை சுவையாகத் தலைப்பையும் இடவேண்டும் என்று எண்ணினாலும் சிலவற்றை இணைத்துக் கூற மாட்டேன். ஆனால் இவரோ எதிர் எதிராக பொது புத்தியில் பதிந்திருக்கும் சிலவற்றை இணைத்தே தலைப்பை இட்டிருந்தார். அது அவர் இட்ட நான்காவது பதிவு என்று இப்போது சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். அவர் தமிழ்மணத்தில் நன்கு அறியப்பட்ட பின்னர் இடப்பட்ட இடுகையைப் போலவே இருக்கும் அந்த இடுகையும் அதில் வந்த பின்னூட்டங்களும்.

திருப்பதியிலும் திருவரங்கத்திலும் நடக்கும் திருவிழாக்களையும் அவற்றின் பின்னணியில் இருக்கும் சுவையான செய்திகளையும் இவர் எழுதிப் படிப்பது தனி இன்பம் தான். எளிமையாக எழுத வேண்டும்; அனைவரும் விரும்பிப் படிக்கும் வண்ணம் எழுத வேண்டும் என்று எண்ணி இந்த இடுகைகளை நீர்த்துப் போகச் செய்துவிடுகிறாரோ என்ற எண்ணம் அவ்வப்போது வருவதுண்டு. ஆனால் 'பொய்யான பேர்வழிகளைக் கண்டு ஆன்மிகம் என்றாலே காத தூரம் ஓடும் நண்பர்கள், அதெல்லாம் நமக்கு புரியாதப்பா என்று விலகும் நண்பர்கள் என்று பலவகையில் ஆன்மிகத்தைக் கண்டு விலகும் நண்பர்களுக்கு ஆன்மிகத்தில் சுவையை ஊட்ட அப்படி எழுதுவது நல்லது தான்; அப்படி வந்து சுவை கண்ட பின்னர் அவர்கள் இன்னும் கனமானவற்றையும் படித்து இன்பம் பெறுவர்' என்ற எண்ணமும் அப்போதே வந்துவிடும்.

சமய இலக்கியங்கள் எதனைப் பற்றிப் பேசினாலும் அதில் இவருக்கு இருக்கும் புலமையைக் கண்டு வியந்ததுண்டு. சமய இலக்கியங்கள் மட்டுமில்லை பழந்தமிழ் இலக்கியங்களிலும் பயிற்சி உண்டு. அந்த வகையில் இவரையும் தமிழறிஞர் என்று சொல்வதில் தட்டில்லை.

யாரைப் பற்றி பேசுகிறேன் என்று தெரிந்திருக்குமே. தெரியாவிட்டால் தமிழ்மணத்தை நீங்கள் அறியாதவர்கள் என்று தெளிவாகச் சொல்லிவிடலாம்.

அவர் திருமலை பிரம்மோற்சவ பதிவுகளை இட்டு பெரும் பெயர் பெற்றவர், புதிரா புனிதமா என்று தலைப்பிட்டு அடிக்கடி தமிழ் இலக்கியங்களை அலசி ஆராய்பவர், பெருமாளைப் பற்றியே நிறைய பேசுபவர் ஆனால் முருகனையும் சிவனையும் மறக்காதவர், இசை இன்பம் என்ற கூட்டுப் பதிவில் இன்ப இசையை அள்ளித் தருபவர், கண்ணன் பாட்டு பாடுபவர், கற்பூர நாயகியாம் கனகவல்லியைப் போற்றுபவர், நமச்சிவாய வாழ்க என்று புகழ்பவர், முருகனருள் பெற்றவர், திருப்பள்ளியெழுச்சி பாடுபவர், கோதையின் தம்பி - அதனால் கோதையின் மாதவிப்பந்தலைச் சொந்தம் கொண்டவர் - இரவிசங்கர் கண்ணபிரான் (KRS).

இப்போது சொல்லுங்கள் இவரிடம் என்ன நிறை குறைகளைக் கண்டு நான் சொல்வது? அப்படிச் சொல்லும் தகுதியும் எனக்கு உண்டா?

***

இரவிசங்கர் கண்ணபிரான் தன் பதிவின் 'நிறைகுறை'களைப் பற்றி இந்த வாரத்தில் எழுதும் படி மூவரிடம் கேட்டிருப்பதாகச் சொன்னார். முதல்வர் நேற்று அந்த இடுகையை இட்டுவிட்டார். இன்று நான். யானைப்படையை நடத்திக் கொண்டிருப்பவர் நாளை இடுவாரோ என்னவோ?

அவர் மூவரிடம் கேட்டால் என்ன? நாம் இதனை ஒரு தொடர் விளையாட்டாக்கி இன்னும் ஒரு மூன்று வாரம் விளையாடக் கூடாதா? அவர் சென்னை சென்று திரும்பி வருவதற்குள் நாம் எல்லோரும் அவருடைய பதிவுகளின் நிறை குறைகளை அலசி ஆராய்ந்துவிடலாம்.

நான் சிலரை இந்தத் தொடருக்கு அழைக்கிறேன். நீங்கள் இன்னும் சிலரை அழையுங்கள். இப்படியே கண்ணபிரான் இரவிசங்கரை அறிந்தவர்கள் எல்லாம் அவரது இடுகைகளை அலசி ஆராயட்டும்.

1. இராகவன்
2. எஸ்.கே (VSK) ஐயா
3. ஓகை ஐயா
4. வல்லி அம்மா
5. கீதா அம்மா
6. ஜீவா
7. மௌலி
8. மலைநாடான்
9. யோகன் ஐயா
10. வெற்றி
11. கானா பிரபா
12. வெட்டிப்பயல்

பன்னிரு ஆழ்வார்களைப் போல் நீங்கள் பன்னிருவரும் இந்தக் கண்ணபிரானைப் பற்றிப் பாடுங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன்.

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திருநாடு

17 comments:

  1. ஏம்ப்பா....தகுதி இருக்கா இல்லையான்றதா இப்பப் பிரச்சனை?:-))))

    எழுதச் சொன்னவர்தானே இதைப் பத்திக் கவலைப்படணும்:-))))

    பூதக் கண்ணாடியைக் கையில் எடுத்தமா....... எழுத்துக்கிடையில்
    (நான் சொல்றது சொற்களுக்கிடையில் வரிகளுக்கிடையில்னு இருப்பதுபோல எ ழு த் து க்கிடையில்) எதாவது குற்றம் இருக்குதான்னு பார்த்துச் சொல்றதுதானே?

    இதுக்குப்போய்...............

    ம்ம்ம்.. நல்லாத்தான் சொல்லி இருக்கீர்.

    ReplyDelete
  2. அட என்னங்க நீங்க....என்னப் போயி? எனக்கு தகுதி இல்லீங்கண்ணா..... :-)

    ReplyDelete
  3. அட, கடவுளே, ஜாம்பவான்களைப் பத்தி எல்லாம் எழுதறதுக்கு எனக்கு என்ன தெரியும்னு என் பேரைப் போட்டிருக்கீங்க? அவரோட பதிவுகளைப் படிச்சுட்டு அசந்து போய் நிக்கிறது மட்டுமில்லாமல், விமரிசனம் வேறேயா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  4. @குமரன் நான் அழையாத விருந்தாளிதான். இருந்தாலும் என் கருத்தையும் சொல்லாமா?
    கேஆர்ஸின் பதிவில்"குறை ஒன்றும் இல்லை கோவிந்தா" அவர் எழுத்தின் ஆக்கம் மற்றவரைப் போய்ச் சேரவில்லை என்றால். அவருக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை. "கடை விரித்தேன் கொள்வாரில்லை" என்று வள்ளாலாரே சொல்லவில்லையா.நீங்கள் வேணுமென்றால் அடுத்த தடவை மதுரைக்குச் செல்லும்போது பொற்றாமரை குளத்தில் இட்டுப் பாருங்களேன் திருமலை விழாப் பற்றிய பதிவை.

    ReplyDelete
  5. கட்டாயம் தகுதி பிரச்சனையே இல்லை தான் துளசி அக்கா. தகுதி கட்டாயம் உண்டு. முழுத்தகுதி இருக்காங்கறது தான் கேள்வி. :-)

    எழுதச் சொன்னவர் அதைப் பத்தி கவலைபட்டமாதிரியே தெரியலை.

    எழுத்துக்கிடையில் குற்றம் கண்டுபிடிக்கிறதா? அப்படி பாத்தா நானும் இராகவனும் நிறைய சொல்லுவோமே. :-) அப்பப்ப பாலாஜியும் சேர்ந்துக்குவாரு. அடுத்து வரப் போற விமர்சனத்திற்கு உங்க பின்னூட்டம் ஒரு முன்னூட்டமா என்ன? :-)

    கடைசியில் நல்லாத் தான் சொல்லியிருக்கேன்னு ஒத்துக்கிட்டீங்களே. ரொம்ப மகிழ்ச்சி துளசி அக்கா. விட்டா விமர்சனத்துக்கு ஒரு விமர்சனம் எழுதணும்ன்னு கிளம்புவீங்க போலிருக்கு. :-)

    ReplyDelete
  6. அத நாங்க சொல்லணும் மௌலியண்ணா. உங்களுக்குக் கட்டாயம் தகுதி உண்டு. இது தான் வாய்ப்புன்னு இரவிசங்கரை ஒரு வாட்டு வாட்டாம இப்படி சொன்னா எப்படி?

    ReplyDelete
  7. கீதா அம்மா. இப்படி எல்லாம் சொல்லாம தலைவிங்கற பேருக்கு ஏத்த மாதிரி ஒரு இடுகை போடுங்க.

    ReplyDelete
  8. தி.ரா.ச. பன்னிரண்டு பேருன்னு பட்டியலைப் போட்டுட்டு பாக்குறப்ப உங்க பேரைப் போடலைன்னு தெரிஞ்சது. சரி. அடுத்து யாராவது உங்களைக் கட்டாயம் கூப்புடுவாங்கன்னு நினைச்சுக்கிட்டேன். கட்டாயம் உங்களுக்கு அழைப்பு உண்டு.

    நல்ல யோசனை. அடுத்த முறை மதுரைக்குப் போகும் போது திருமலை விழாப் பதிவை எடுத்துக்கிட்டு போறேன்.

    ReplyDelete
  9. //அத நாங்க சொல்லணும் மௌலியண்ணா. உங்களுக்குக் கட்டாயம் தகுதி உண்டு. இது தான் வாய்ப்புன்னு இரவிசங்கரை ஒரு வாட்டு வாட்டாம இப்படி சொன்னா எப்படி?//

    என் மேல ஏதோ ஒரு நம்பிக்கை இருக்கு உங்களுக்கு, அதற்கு ஒரு நன்றி. இந்த பதிவுக்கு பதிலா உங்க சார்புல, திராச சொன்ன மாதிரி நான் வேணா மதுரைக்கு திருமலை விழாப் பற்றிய பதிவை எடுத்துட்டு போயிட்டு வந்திடறேன். :-)

    ReplyDelete
  10. ஆமாம், அதென்ன மெளலியண்ணா?....

    வயதை மட்டுமே காரணம் காட்டி கே.ஆர்.எஸ் அப்படிச் சொல்லுறார், உங்களுக்கு அந்த காரணம் கூட கிடையாது...நீங்கதான் என்னை விட 5 மாதம் பெரியவர்....:-)

    ReplyDelete
  11. குமரன்,
    ஏதிலார் நிறையைச் சொல்லலாம். குறை கண்டுபிடிக்க ஒரு தெளிந்த அறிவு வேண்டும் இல்லையா?
    கண்ணபிரான்,விஎஸ்கே சார்,நீங்கள்,ராகவன் எல்லோரும் ஆன்மீகத்தில் திளைத்துக் கொண்டிருப்பவர்கள். கீதாவும் அப்படியே.
    இதில் நான் ராம நாமம் சொல்ல மட்டுமே தகுதியானவள்.
    அதில் ஆராய்ச்சி செய்து ஒரு குழந்தையோட (எனக்குத் தெரியாத)
    குறைகளை விமரிசிக்க முடியாதுமா:)

    ReplyDelete
  12. என் சார்பாகவும் தி.ரா.ச. சார்பாகவும் உங்க சார்பாகவும் எடுத்துக்கிட்டு போங்க மௌலி. :-)

    வயது ஒரு காரணமாகுமா? வயதில் பெரியவர்களும் இருக்கிறார்கள்; அறிவில் பெரியவர்களும் இருக்கிறார்கள். எந்த வகையிலும் அண்ணா என்று அழைக்கலாம். :-)

    நான் உங்களை விட 5 மாதம் தான் பெரியவனா? 1000 வருடம் பெரியவன் என்று நினைத்திருந்தேனே. என் ப்ரொபைலை பார்த்ததில்லையா? :-)

    ReplyDelete
  13. வல்லியம்மா. நீங்களும் இப்படி பின்வாங்கினால் எப்படி? குறைகளே கண்ணுக்குத் தெரியாத தருமராஜ பார்வை உங்களுக்கு. அதே பார்வையில் இரவிசங்கரின் நிறைகளைப் பற்றி எழுதிவிடுங்கள். :-)

    ReplyDelete
  14. அடியேன் இதோ வந்தேன்!
    (மாப்பிள்ளை அழைப்பெல்லாம் ஒன்னும் கிடையாதா? :-)))

    ReplyDelete
  15. //நாம் இதனை ஒரு தொடர் விளையாட்டாக்கி இன்னும் ஒரு மூன்று வாரம் விளையாடக் கூடாதா? அவர் சென்னை சென்று திரும்பி வருவதற்குள்//

    இதுக்குப் பேரு தான் ரவுண்டி கட்டி அடிக்கறதா?
    குமரன், நான் இல்லாத போது என்னைய வச்சி காமெடி கீமெடி எதுவும் இல்லையே? :-)))

    1. இராகவன்
    பன்னிரு ஆழ்வாரில் முதல் ஆழ்வார் ராகவாழ்வாரா? சூப்பர்!
    தமிழ்ப் பொய்கையார் அவர்
    தமிழ் பெய்கையார்!
    12. வெட்டிப்பயல்
    ஓ நம்ம வெட்டி மதுரகவியா? ஹா ஹா ஹா! சங்கப் புலவர்களோட சண்டை போட சரியான ஆளைத் தான் போட்டிருக்கீங்க!

    ReplyDelete
  16. இன்னொன்னு கவனிச்சீங்களா?
    ஆழ்வார் வரிசையில அடுத்து உங்க ரெண்டு பேருக்குத் தான் இடம்-னு நண்பர் ஓட்டித் தள்ளினாரு! :-)

    ஆனா இங்க பன்னிரெண்டு பேர்ல, ஒங்க பேரும் என் பேரும் மட்டும் வராமயே போயிரிச்சி! எலே பெருமாளே! எத்தினி பதிவு போட்டிருப்ப்போம்! இப்பிடிக் கவுத்திட்டியேப்பா! :-))

    ReplyDelete
  17. மாப்பிள்ளை அழைப்பெல்லாம் நல்லா இருந்ததா இரவிசங்கர்? ஒரு வாரம் மாப்பிள்ளை மாதிரி அனுபவிச்சீங்களா? :)

    ஆழ்வார்களின் பட்டியல்லில் நம்ம பேருன்னு நம்ம நண்பர் ஓட்டினாரா? அவர் கோவிச்சுக்கிட்டுத் தானே அப்படி சொன்னார்? அப்புறம் இந்தப் பக்கமே ஆளைக்காணலையே? ஊருக்குப் போனதால வேலை சரியா இருக்கு அதான் காணலைன்னு நம்பிக்கிட்டு இருக்கேன்.

    ReplyDelete