Thursday, March 13, 2008

உடுக்கை இழந்தவன் கை - 8 (பாரி வள்ளலின் கதை)

"கபிலரே. கவிதைக்குப் பொய் அழகு தான். அதற்காக இப்படிப் பெரும் பொய்யைச் சொல்லவும் வேண்டுமா? மூவேந்தர்களாலும் இந்தப் பறம்பு மலை வெல்லுதற்கு அரியது. விறலிக்கு எளிது. இப்படி எல்லாம் பாடினால் கேட்பதற்கு வேண்டுமானால் சுவையாக இருக்கக் கூடும். ஆனால் உண்மையாகாது"

"தமிழ்மாறா. நான் சொல்லும் தமிழ் மாறா. உங்கள் வலிமையின் மேல் உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையாலும் பாரியின் வலிமையின் மேல் உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையின்மையாலும் நான் சொன்னது பொய்யாகத் தோன்றுகிறது உனக்கு"

"புலவரே. நாங்கள் உமது அச்சுறுத்தலுக்கெல்லாம் பணியப் போவதில்லை. பாரி தன் மகளிரை எங்களுக்கு மணம் செய்து தரப்போகிறானா இல்லையா என்பதை மட்டும் சொல்லிவிட்டுச் செல்லுங்கள். அவன் மகண்மறுத்தால் இந்த பறம்பு நாடும் பறம்பு மலையும் அவனும் நீறுபடுவர் என்பதை அவனிடம் சென்று சொல்லுங்கள்"

"வளவா. நான் சொல்வதெல்லாம் வழுவா?! பாரியின் குணத்தையும் வலிமையையும் நீங்கள் அறியவில்லை. அதனால் மீண்டும் சொல்கிறேன் கேளுங்கள். எதிர்ப்பதற்கு கடினமான பெரும்படையுடன் நீங்கள் மூவரும் ஒன்றுபட்டுப் போர் செய்தாலும் பறம்பு வெல்வதற்கு அரியது. பறம்பு நாட்டில் முன்னூறு ஊர்கள் இருக்கின்றன. ஆனால் அவை அனைத்தையும் பரிசிலர் ஏற்கனவே பெற்றுவிட்டனர். நீங்களும் பாடிக் கொண்டு பாணர்களாகச் சென்றால் உங்கள் மூவருக்கும் தருவதற்கு பாரியிடம் மூன்று பொருட்கள் இருக்கின்றன - இந்த குன்றும், பாரியும், நானும் இருக்கிறோம்.

கடந்தடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே
முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நன்னாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
யாமும் பாரியும் உளமே
குன்றும் உண்டு நீர் பாடினர் செலினே
"

"மீண்டும் அதையே சொல்கிறீர்களே கபிலரே. எங்கள் நோக்கம் பறம்பு நாட்டைக் கைப்பற்றுவது இல்லை. எங்கள் வேந்தர் குடிகளைக் குறைத்துப் பேசிக் குலமுறை கூறிப் பெண் தர மறுக்கிறானே பாரி. அதனை எதிர்ப்பது. அவனுக்கு நல்லதை அவனிடம் எடுத்துக் கூறுவதை விட்டுவிட்டு இங்கு வந்து எங்களுக்கு அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறீர்களே?"

"வஞ்சிப்பதி. பெண்ணைப் பெற்றவன் பெண் தர மறுத்தால் அதனால் படை எடுத்து வஞ்சிப்பதா? அவன் கருத்தைத் தான் தெளிவாகச் சொல்லிவிட்டானே. இன்னும் அதனை ஏற்க மறுத்தால் எப்படி?"

"புலவரே. அவன் கருத்து அதுவானால் எங்கள் கருத்து இது தான். அவன் தன் நிலையிலிருந்து இறங்கி வரும் வரை நாங்கள் எங்கள் முற்றுகையைத் தொடருவோம். சேமித்து வைத்திருக்கும் உணவுப்பொருட்கள் எல்லாம் தீர்ந்த பின்னர் அவன் தன்னையும் தன் சுற்றத்தையும் மக்களையும் காக்க இறங்கி வந்து தானே ஆகவேண்டும்'

"மூவேந்தர்களே. பறம்பு மலையின் வளத்தை அவ்வளவு எளிதாக நினைத்துவிடாதீர்கள். பெருமையுடைய போர் முரசுகளைக் கொண்ட நீங்கள் மூவரும் முற்றுகை இட்டாலும், இந்த மலையிலிருக்கும் ஒவ்வொரு மரத்திற்கும் ஒரு யானையும் இருக்கும் இடமெல்லாம் தேர்களும் கொண்டு படை எடுத்தாலும் உங்கள் முயற்சியால் இந்த மலையை வெல்லமுடியாது. உங்கள் வாள்வலிமை கண்டு அவனும் தர மாட்டான். பறம்பு மலையின் வளமும் மிகப்பெரிது. உழவரால் உழப்படாமலேயே அங்கு நான்கு வகை உணவுப்பொருட்கள் விளைகின்றன. தானே விளையும் மூங்கில் நெல்லும், இனிய சுளையையுடைய பலாப் பழங்களும், வள்ளிக்கிழங்குகளும், மலைத் தேனும் என்ற இந்த நான்கும் இருக்கும் வரை உணவுப்பொருட்களுக்கு எந்த குறையும் வராது. உங்களின் முற்றுகையும் நிறைவேறாது. அதனால் முன்பே சொன்னது போல் விறலியர் பின் தொடர பாணர்களாகப் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் சென்றால் நாட்டையும் குன்றையும் எல்லாவற்றையும் உடனே தந்துவிடுவான்.

அளிதோ தானே பாரியது பறம்பே
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே
ஒன்றே சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே
இரண்டே தீஞ்சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே
மூன்றே கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே
நான்கே அணி நிற ஓரி பாய்தலின் மீதழிந்து
திணி நெடும் குன்றம் தேன் சொரியும்மே
வான் கணற்று அவன் மலையே வானத்து
மீன் கணற்று அதன் சுனையே ஆங்கு
மரந்தொறும் பிணித்த களிற்றினர் ஆயினும்
புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்
தாளிற் கொள்ளலிர் வாளில் தாரலன்
யான் அறிகுவன் அவனது கொள்ளும் ஆறே
சுகிர் புரி நரம்பின் சீறி யாழ் பண்ணி
விரை ஒலி கூந்தனும் விறலியர் பின் வர
ஆடினிர் பாடினிர் செலினே
நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே
"

"உழவர் உழாதன நான்கு வகை உணவுப்பொருட்கள் மலையில் விளைகின்றனவா?! நல்லது கபிலரே. அப்படி என்றால் இப்போதே எங்கள் முற்றுகையை நிறுத்திவிட வேண்டியது தான்"

"பாண்டியரே. என்ன சொல்கிறீர்கள்? கபிலரின் மிரட்டலுக்கு நாம் பணிவதா?"

"வேந்தர்களே. முற்றுகையை இத்துடன் நிறுத்திவிட்டு நேரடி போரில் இறங்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பது என் எண்ணம்"

"ஓ. அப்படி சொல்கிறீர்களா?! நான் உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன். சேரலரே. உங்கள் கருத்து என்ன?"

"மூவரும் சேர்ந்து தானே இதில் இறங்கினோம். இதில் மட்டும் மாற்றுக் கருத்து வந்துவிடுமா? நானும் உங்கள் இருவரின் கருத்தோடு உடன்படுகிறேன்"

"கபிலரே. பாரியிடம் சென்று எங்கள் முடிவினைக் கூறுங்கள். இன்னும் இரு நாட்களில் நாங்கள் மலையேறத் தொடங்கிவிடுவோம். அதற்குள் போரில் ஈடுபட முடியாத முதியவர்களையும் பெண்களையும் மலையை விட்டு நகர ஏற்பாடு செய்துவிடும் படி சொல்லுங்கள்."

"வேந்தர்களே. முற்றுகையை நீங்கள் எத்தனை நாள் தொடர்ந்தாலும் பரவாயில்லை; பரிசில் வேண்டி வருபவர்களைத் தடுக்காதீர்கள் என்று எடுத்துச் சொல்லத் தான் பாரி என்னை இங்கே அனுப்பினான். அந்த வேண்டுகோளை வைப்பதற்கே இடமில்லாமல் நீங்கள் செய்துவிட்டீர்கள். உங்கள் கருத்தைப் பாரிக்கு அறிவிக்கிறேன். நான் உங்களுக்குத் தந்த அறிவுரைகளை மீறிச் செயல்படுகிறீர்கள். நான் சொன்னவை உண்மை என்பதை நீங்களே நேரடியாகக் கண்டு கொள்வீர்கள்"

"கபிலர் பெருமானே. தங்கள் அறிவுரையை மீறி நடக்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம் இல்லை. ஆனால் எங்கள் குலத்தைக் குறைத்துப் பேசிய பாரியின் அகந்தையை அடக்காமல் விட்டால் வரலாறு எங்களை மன்னிக்காது. அதனால் தான் இந்த முடிவிற்கு வந்திருக்கிறோம். நீங்கள் சினம் கொள்ளாது எங்கள் தூதுவனாகப் பாரியிடம் சென்று இந்த செய்தியை அறிவிக்க வேண்டும்"

"சேரலா. நீ மிகவும் பணிவானவன். ஆனால் சேரலாக் கூட்டத்துடன் சேர்ந்து செய்யக்கூடாதவற்றைச் செய்யத் தொடங்கிவிட்டாய். நடந்ததைப் பற்றிப் பேசிப் பயனில்லை. இனி நடக்கப் போவதைப் பார்க்கச் செல்கிறேன். வாழ்க தமிழ்"

***

பாடற் குறிப்புகள்:

1. கடந்தடு தானை என்று தொடங்கும் பாடல் புறநானூறு 110ம் பாடல். மூவேந்தரும் பறம்பு முற்றியிருந்தாரைக் கபிலர் பாடியது.

திணை: நொச்சி (அரணைக் காக்கும் வீரர்கள் அணியும் மலர் நொச்சி. இங்கே முற்றுகையைத் தவிர்க்கச் சொல்லுதால் இது நொச்சித் திணையானது). இந்தப் பாடல் காஞ்சித் திணை என்றும் சொல்லப்படுவதுண்டு. சான்றோர் அறிவுரை கூறுவது காஞ்சித் திணையாகும்.

துறை: மகண் மறுத்தல் (குலத்தின் பெருமையைக் கூறி பெண் தர மறுத்தல்)

பாடலின் பொழிப்புரை:

எதிரிப்படைகளை வென்று அவற்றைக் கொல்லும் படைகளையுடைய நீங்கள் மூவரும் கூடி போர் செய்தாலும் பறம்பு கொள்ளுதற்கு அரிதானது. குளிர்ந்த பறம்பு நாடு முன்னூறு ஊர்களை உடையது. அந்த முன்னூறு ஊர்களையும் பரிசிலர் பெற்றார்கள். நீங்கள் பாடிக் கொண்டு சென்றீர்கள் என்றால் பெறுவதற்கு நானும் பாரியும் இருக்கிறோம்; பறம்பு மலையும் உண்டு.

2. அளிதோ தானே என்று தொடங்கும் பாடல் புறநானூறு 109ம் பாடல். மூவேந்தரும் பறம்பு முற்றியிருந்தாரைக் கபிலர் பாடியது

திணையும் துறையும் 110ம் பாடலின் திணையும் துறையுமே.

பாடலின் பொழிப்புரை:

இரங்கத்தக்கது தானோ பாரியின் பறம்பு மலை?! பெருமையுடைய முரசுகளை உடைய நீங்கள் மூவரும் முற்றுகையிட்டாலும், உழவர் உழாமல் விளையும் உணவுப் பொருட்கள் நான்கு வகைகளாய் இருக்கின்றன. முதலாவது சிறிய இலையை உடைய மூங்கிலில் விளையும் நெல். இரண்டாவது இனிய சுளைகளைக் கொண்ட, மரத்தின் மேலிருந்து வேர் வரை விளையும் பலாவின் பழம். மூன்றாவது நன்கு படர்ந்து வளரும் கொடியைக் கொண்ட, நிலத்தின் அடியில் வெகுவாக விளையும் வள்ளிக் கிழங்கு. நான்காவது அழகிய நிறம் கொண்ட நரி பாய்ந்ததால் சிதைந்து தானே மலையிலிருந்து சொரியும் தேன். பறம்பு மலை அகல நீள உயரத்தால் வானத்தைப் போன்றது. அந்த மலையிலிருக்கும் சுனைகள் வானத்திலிருக்கும் விண்மீன்களை ஒத்தன. அந்த மலையில் இருக்கும் மரங்கள் தோறும் கட்டப்பட்ட யானைகளை உடையவராகவும் இருக்கும் புலங்கள் தோறும் நிறுத்தப்பட்டத் தேர்களை உடையவராகவும் உங்கள் முயற்சியால் இந்த மலையை நீங்கள் கொள்ளமாட்டீர்; அவனும் உங்கள் வாள்வலிமைக்குத் தர மாட்டான். அந்த மலையை அடையும் வழியை நான் அறிவேன். முடுக்கப்பட்ட நரம்பினையுடைய சிறிய யாழைப் பண்ணி வாசித்துக் கொண்டு நறுமணம் கொண்ட கூந்தலையுடைய உங்கள் விறலியர்களுடன் சேர்ந்து ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் சென்றீர்கள் என்றால் அவன் உங்களுக்கு நாட்டையும் குன்றையும் ஆளும் உரிமையை உடனே தருவான்.

33 comments:

  1. படிச்சுட்டேன்னு மட்டும் சொல்லிட்டு எஸ்ஸாகிறேன். .

    ReplyDelete
  2. குமரா!

    "தமிழ்மாறா. நான் சொல்லும் தமிழ் மாறா"
    "வளவா. நான் சொல்வதெல்லாம் வழுவா?! "

    தமிழ் படியத் தொடங்கிவிட்டது போல் உள்ளது. நன்று
    விளக்கம் தேவை : மூங்கில் நெல் என்பது ஒருவகை நெல்லா? அல்லது மூங்கிலில் கிடைப்பதா??
    அது சமைக்கக் கூடியதா? இதுவரை அறியவில்லை.

    ReplyDelete
  3. படிச்சதுக்கு நன்றி மௌலி. அதென்ன எஸ்ஸாகுறது? தப்பிச்சு போற அளவுக்கா இந்த இடுகை இருக்கு? :-)

    ReplyDelete
  4. தமிழ் ஒரு பெரும் கடல் அல்லவா? அது அவ்வளவு எளிதாகப் படிந்துவிடுமா யோகன் ஐயா? கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அது போல பாவித்து ஆடுமாம் - அது போல் தமிழமுதை அள்ளித் தரும் நம் நண்பர் ஒருவர் எழுதுவதைப் பார்த்து அதே போல் முயன்றது தான். அந்த நண்பர் யாரென்று மட்டும் சொல்ல மாட்டேன். :-)

    இன்னும் இரு இடங்களில் இந்த மாதிரி முயன்றிருக்கிறேன் இந்த இடுகையில். அவற்றையும் பாருங்கள்.

    மூங்கிலரிசி என்று கேள்விபட்டிருக்கிறேன். மூங்கிலரிசி என்று கேட்டால் கூகிளார் கொஞ்சம் தகவல்கள் தருகிறார். முதன்மைத் தகவல் அது மூங்கிலில் விளையும் ஒரு வகை விதை என்பது. அதனைத் தான் கபிலர் இங்கே மூங்கிலின் நெல் என்று சொல்கிறார் என்று நினைக்கிறேன்.

    குறிஞ்சி நில மக்கள் மூங்கிலரிசி உண்டார்கள் என்று இந்தக் கட்டுரை ஆசிரியரும் சொல்கிறார். http://thatstamil.oneindia.in/visai/aug05/sivasubramanian.html

    ReplyDelete
  5. மூங்கில் நெல் என்று ஒன்று இருக்கிறது. அது 60 வருடங்கள் முன் வரை தமிழகத்தில் விளைந்ததாகவும் பின்னர் விடுபட்டு சமிபத்தில் (1 மாதம் முன்) மீண்டும் விளைவிக்கப்பட்டதாகவும் ஒரு செய்தி இணையத்தில் படித்தேன். ஆனால் அதன் உரல் கிடைத்தால் அனுப்புகிறேன்.

    //அதென்ன எஸ்ஸாகுறது? தப்பிச்சு போற அளவுக்கா இந்த இடுகை இருக்கு? :-)//

    இல்லிங்க குமரன், எல்லாம் ஒரு பயம் தான் :-).

    ReplyDelete
  6. //தமிழமுதை அள்ளித் தரும் நம் நண்பர் ஒருவர் எழுதுவதைப் பார்த்து அதே போல் முயன்றது தான். அந்த நண்பர் யாரென்று மட்டும் சொல்ல மாட்டேன்//
    அந்தப் பிரானைத் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  7. //அந்தப் பிரானைத் தெரிந்து கொண்டேன்//

    யோகன் அண்ணா
    பிரான் அவன் சிறான். அதில் வரான். தமிழ் தரான்! :-)

    குமரன் சொன்ன தகவன். தமிழ் முகவன். அவன் அகவன்.
    "வா" என்பதைத் தெலுங்கில் சொல்லி அகவனை அழையுங்கள்!
    வருவான் அருள் தருவான்! :-)

    ReplyDelete
  8. //பலாப் பழங்களும், வள்ளிக் கிழங்குகளும்//

    எத்தினி நாளுக்கு இதையே மக்கள் தின்பார்கள்? என்ன ஆகும் தெரியும்-ல? :-)

    //வஞ்சிப்பதி. பெண்ணைப் பெற்றவன் பெண் தர மறுத்தால் அதனால் படை எடுத்து வஞ்சி-ப்பதா//
    //தமிழ்மாறா. நான் சொல்லும் தமிழ் மாறா//
    //வளவா. நான் சொல்வதெல்லாம் வழுவா//
    //சேரலா. நீ மிகவும் பணிவானவன். ஆனால் சேரலா-க் கூட்டத்துடன் சேர்ந்து//

    குமரா நீ பதியும் தமிழும் குமுறா! :-)

    //எங்கள் நோக்கம் பறம்பு நாட்டைக் கைப்பற்றுவது இல்லை. எங்கள் வேந்தர் குடிகளைக் குறைத்துப் பேசிக் குலமுறை கூறிப் பெண் தர மறுக்கிறானே பாரி.//

    குமரன் - முக்கியமான கேள்வி
    போர் எதற்கு?
    பெண் தர மறுத்தமைக்கா?
    வேந்தர் குடிகளைக் குறைத்துப் பேசியமைக்கா?

    முன்னது என்றால் இந்தக் கால நியாயங்களின் படி போர் மடத்தனம்!
    பின்னது என்றால்...பாரியும் அறிவுறுத்தப்பட வேண்டியவன்.

    ReplyDelete
  9. இரவிசங்கர். நீங்கள் கேட்ட கேள்விகளுக்குத் தான் கபிலரும் சேரமன்னனும் பதில் சொல்லியிருக்கிறார்களே. ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். பெண்ணைக் கொடுக்க மறுத்தால் நீ படையெடுப்பாயோ என்பது ஒரு பக்கம். நான் பெண் கேட்டால் நீ எப்படி என் குலத்தைக் கேவலமாகப் பேசலாயிற்று என்பது இன்னொரு பக்கம். இந்தக் காலத்தில் (பதிவுலகத்திலும் வெளியிலும்) நடக்கும் பல சர்ச்சைகளிலும் இப்படி இரு பக்கமும் (சில நேரங்களில் பல பக்கங்களும்) இருப்பது போல் தான். :-)

    நீங்கள் இப்போது ஒரு பக்க சார்பாக நிலை கொண்டதைப் போல் தான் நாம் எல்லோரும் ஒவ்வொரு சர்ச்சையிலும் ஒரு நிலையை ஏற்கிறோம். :-)

    இந்தக் கதையைப் பொறுத்த வரையில் நான் இருபக்கத்தையும் எழுத நினைக்கிறேன். அதனை அவர்கள் வார்த்தைகளிலும் சொல்ல முயன்றிருக்கிறேன்.

    ReplyDelete
  10. //நீங்கள் இப்போது ஒரு பக்க சார்பாக நிலை கொண்டதைப் போல் தான்//

    இது என்னாங்க புதுக் கதை?
    எப்போ ஒரு பக்க சார்பு, இரு பக்க நீர்பு எல்லாம் அடியேன் கொண்டேன்? :-))))

    ReplyDelete
  11. தொடர்கதையின் ஒவ்வொரு பகுதியிலும் இதே போன்ற பல செய்திகளைக் கதை போகும் போக்கில் சொல்லிச் செல்கிறேன். எப்போதாவது நீங்கள் கேட்டது போல் யாராவது கேட்டால் அதனை எடுத்துச் சொல்ல வாய்ப்பு கிடைக்கிறது. நன்றிகள் இரவிசங்கர். :-)

    ReplyDelete
  12. //போர் எதற்கு?
    பெண் தர மறுத்தமைக்கா?
    வேந்தர் குடிகளைக் குறைத்துப் பேசியமைக்கா?

    முன்னது என்றால் இந்தக் கால நியாயங்களின் படி போர் மடத்தனம்!
    பின்னது என்றால்...பாரியும் அறிவுறுத்தப்பட வேண்டியவன்.
    //

    இப்படி சொன்னதால் பாரியின் பக்க நியாயத்தை விட வேந்தர்களின் பக்கம் நியாயம் இருப்பதாக நீங்கள் எண்ணுகிறீர்கள் என்று புரிந்து கொண்டேன். :-)

    ReplyDelete
  13. நன்று நன்று என்று தொன்று தமிழை இன்று புகழவும் வழி செய்த குமரனுக்கு நன்றி. சொற்களைக் கூட்டி அவற்றில் அழகினைக் காட்டி கருத்தினையும் உடன் பூட்டிக் கதை சொல்லும் திறமும் சிறப்பு.
    இது அது என எடுத்துக் காட்ட எது சொல்வது? மொத்தமும் சத்தமின்றி உண்டவனுக்கு மெத்தனம்தானே வரும். :)

    ReplyDelete
  14. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    குமரா நீ பதியும் தமிழும் குமுறா! :-)//

    இல்லை இல்லை

    குமரா நீ பதியும் தமிழும் அதில் பொதியும் பொருளும் நொந்து அமரா!

    ReplyDelete
  15. //இப்படி சொன்னதால் பாரியின் பக்க நியாயத்தை விட வேந்தர்களின் பக்கம் நியாயம் இருப்பதாக நீங்கள் எண்ணுகிறீர்கள் என்று புரிந்து கொண்டேன். :-)//

    ஓ..இதைத் தான் புரிதல் புரிதல்-ன்னு சொல்லுறாங்களா? :-)
    அதாச்சும் இரு தரப்பிலும் உள்ள குறை நிறைகளை அலசாமல்...
    குணம் நாடிக் குற்றமும் நாடி, அவற்றுள் மிகை நாடி-ன்னு எல்லாம் கொள்ளக் கூடாது!
    நல்லாவே புரியுது! :-)))))

    ReplyDelete
  16. //இல்லை இல்லை
    குமரா நீ பதியும் தமிழும் அதில் பொதியும் பொருளும் நொந்து அமரா!//

    இல்லை இல்லை
    குமரா அடுக்குச் சொற்கள் உம் தமரா?
    அவை ஒன்றோடொன்று செய்வது சமரா?
    அருந் தமிழால் நீ நம்-மவரா?
    அதையான் உரக்கச் சொல்வதும் தவறா?

    ReplyDelete
  17. போச்சுடா. மின்னஞ்சல்ல இப்படி எல்லாம் பேசி என்னைப் பித்து பிடிக்கச் செய்வது போதாதென்று இப்ப பதிவிலும் தொடங்கிட்டாங்க. முருகா. காப்பாத்து. முருகா. காப்பாத்து.

    ReplyDelete
  18. // kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    இல்லை இல்லை
    குமரா அடுக்குச் சொற்கள் உம் தமரா?
    அவை ஒன்றோடொன்று செய்வது சமரா?
    அருந் தமிழால் நீ நம்-மவரா?
    அதையான் உரக்கச் சொல்வதும் தவறா? //

    ஒப்பேன் ஒப்பேன்
    நீர் சொல்வதை
    நான் மறுப்பதில் தப்பேன்
    நல்மொழி சொல்லாமல் தப்பேன்

    நெல்லும் சொல்லும் பொங்கூர் துள்ளும் குமரன்
    தமிழ்க் கோல் பற்றி நிமிரன்
    எண்ணும் எழுத்தும் நாவில் கொளுத்தும் திமிரன்
    இதை மறுப்பவன் எனக்குச் சமரன்
    அவரை முறியடிக்காமல் நானும் அமரன்

    ReplyDelete
  19. //ஒப்பேன் ஒப்பேன்
    நீர் சொல்வதை
    நான் மறுப்பதில் தப்பேன்
    நல்மொழி சொல்லாமல் தப்பேன்//

    தப்பேன் தப்பேன் என்தமிழ்த் தகவில்?(!)
    ஒப்பேன் ஒப்பேன் ஒண்தமிழ்ப் பதிவில்?(!)
    செப்பேன் செப்பேன் செருமொழி புனைவில்!
    நிப்பேன் நிப்பேன் ராகவன் நினைவில்!

    //நெல்லும் சொல்லும் பொங்கூர் துள்ளும் குமரன்
    தமிழ்க் கோல் பற்றி நிமிரன்
    எண்ணும் எழுத்தும் நாவில் கொளுத்தும் திமிரன்
    இதை மறுப்பவன் எனக்குச் சமரன்
    அவரை முறியடிக்காமல் நானும் அமரன்//

    அமராபுரி வாழ் அமரனும் நீயோ
    சமராபுரி செயும் சமரனும் நீயோ
    திமிராபுரி தம் தீச்(ஞ்)சொற் கவியே
    குமராபுரி எம் மூச்சின் புகலே

    ReplyDelete
  20. அண்ணா,
    உடுக்கை இழக்க போவதற்க்கு இப்பதிவு ஒரு முக்கிய பதிவு என்று எண்ணுகிறேன்.


    KRS,

    // kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //இல்லை இல்லை
    குமரா நீ பதியும் தமிழும் அதில் பொதியும் பொருளும் நொந்து அமரா!//

    இல்லை இல்லை
    குமரா அடுக்குச் சொற்கள் உம் தமரா?
    அவை ஒன்றோடொன்று செய்வது சமரா?
    அருந் தமிழால் நீ நம்-மவரா?
    அதையான் உரக்கச் சொல்வதும் தவறா?
    //

    ஏதோ இருக்கு சுமாரா! :)
    (சும்மா ஒரு எதுகை மோனைக்கு தான் சொன்னேன்)

    ReplyDelete
  21. இன்னிக்கி தேதி மார்ச் 14!
    ஆனா சைட்பார்-ல பார்த்தா, குமரன் மார்ச்சுல 22 பதிவு போட்டிருக்காரு!

    14 நாள்-ல 22 பதிவா?
    குமரன், உண்மையச் சொல்லுங்க! Blogging Machine வச்சிருக்கீங்க தானே! :-))

    ReplyDelete
  22. //ஏதோ இருக்கு சுமாரா! :)
    (சும்மா ஒரு எதுகை மோனைக்கு தான் சொன்னேன்)//

    சிவா
    தளை தட்டுதே!
    குமராக்கு ஈடு கொடுக்க சுமரா-ன்னு குறில் வரணும்!
    ஆனாப் பாவம் சுமரான்னு சொல்லு இல்லை! ஸோ சொல் ஒரு சொல்லுல போய்க் கேளூங்க! இல்லீன்னா ஜிராவிடம் சரணம் அடையுங்கள்! சொல் கிடைக்கும்! :-)))

    ReplyDelete
  23. யப்பா சாமிஹளா ஆள விடுங்கப்பா! :)

    ReplyDelete
  24. KRS,

    //இன்னிக்கி தேதி மார்ச் 14!
    ஆனா சைட்பார்-ல பார்த்தா, குமரன் மார்ச்சுல 22 பதிவு போட்டிருக்காரு!

    14 நாள்-ல 22 பதிவா?
    குமரன், உண்மையச் சொல்லுங்க! Blogging Machine வச்சிருக்கீங்க தானே! :-))//

    நன்பர்களுக்கு மட்டும்ன்னு ஒரு அரிய பதிவை தவறவிட்டு விட்டீர்கள் போல்லிருக்கு. சீக்கிரம் படிங்க.

    ReplyDelete
  25. //நன்பர்களுக்கு மட்டும்ன்னு ஒரு அரிய பதிவை தவறவிட்டு விட்டீர்கள் போல்லிருக்கு. சீக்கிரம் படிங்க.//

    நண்பா சிவா...
    அங்கும் எப்பவோ பின்னூட்டம் போட்டாச்சு!

    இதெல்லாம் மாயக் கண்ணன் வெளையாட்டு! :-)))

    ReplyDelete
  26. மூங்கில்களில் விளையும் அரிசிதானா இது? தெரியலை! ஆனால் மூங்கில் பூப்பதும், அதில் அரிசி விளைவதும் எப்போதோ ஒரு முறை நிகழும் அரிய நிகழ்வு என்று கேள்விப் பட்டிருக்கேன். தேடிப் பார்க்கணும்.
    கதையின் போக்கு ஒரு மாதிரியா இப்போத் தான் என் ம.ம.க்குப் புரிய ஆரம்பிச்சிருக்கு, வரேன், ஆனால் கொஞ்சம் மெதுவாத் தான் வர முடியும், இந்தியாவிலே இருந்து வரத் தாமதம் ஆகுது, ரொம்பவே! :))))))

    ReplyDelete
  27. அழகான தமிழ்ச் சொல்லடுக்கு..வாழ்த்துகள்..பாராட்டுகள்.

    மூவேந்தர்களும் எவ்வளவு சுயநலவாதிகள்...

    ReplyDelete
  28. மூங்கில் அரிசி இன்றும் வளர்ந்து கொண்டிருக்க வேண்டும் மௌலி. நீங்கள் சொன்ன சுட்டி கிடைத்தால் தாருங்கள்.

    ReplyDelete
  29. ஆமாம் சிவமுருகன். நீங்கள் சொல்வது சரி தான். இந்த இடுகை முக்கிய நிகழ்வுகளைச் சொல்கின்றது.

    ReplyDelete
  30. மறுபதிவுகள் செய்வதால் தான் மார்ச் மாதத்தில் இவ்வளவு இடுகைகள் இரவிசங்கர். இல்லாவிட்டால் வாரம் ஒன்று தானே. மிஞ்சிப் போனால் இரண்டு. அவ்வளவு தான் இப்போதைக்கு முடியும். :-)

    ReplyDelete
  31. நீங்க எவ்வளவு மெதுவா வந்து படிச்சாலும் சரி தான் கீதாம்மா. :-)

    ReplyDelete
  32. பாராட்டுகளுக்கு நன்றிகள் பாசமலர்.

    ReplyDelete
  33. சொல்விளையாட்டுகளுக்கு நன்றிகள் இராகவன் & இரவிசங்கர்.

    ReplyDelete