Sunday, January 13, 2008

புல்லாகிப் பூண்டாகி - விமர்சனங்கள்

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

'புல்லாகிப் பூண்டாகி' என்ற தலைப்பில் அடியேன் எழுதிய ஒரு தொடர்கதையைத் தொடர்ந்து படித்து ஊக்குவித்த எல்லா நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். கதையைப் படித்ததோடு நில்லாமல் அந்தக் கதையின் நிறை குறைகளைச் சுட்டிக் காட்டி அடுத்த முறை இப்படியொரு முயற்சி நானோ மற்றவர்களோ எடுக்கும் போது எனக்கும் அவர்களுக்கும் உதவியாக இருக்கும் வண்ணம் விமர்சனங்களை எழுதித் தரும் படி நண்பர்களிடம் கேட்டுக் கொண்டேன். வேண்டுகோளுக்கு இணங்கி சில நண்பர்கள் விமர்சனங்களை எழுதித் தருகிறார்கள். எல்லோருடைய விமர்சனங்களும் வந்த பின்னர் மொத்தமாக இடலாம் என்று எண்ணினேன். ஆனால் விடுமுறைக்காலமாக இருப்பதாலும் வேலைப்பளுவினாலும் சில நண்பர்களிடமிருந்து இன்னும் அவர்களின் விமர்சனம் வரவில்லை. இதுவரை விமர்சனம் எழுதித் தந்தவர்களுக்கு நன்றி சொல்லி அவர்களது கருத்துகளை இங்கே இடுகிறேன். இனிமேல் எழுதித் தரப்போகிறவர்களுக்கும் நன்றி சொல்லி அவர்களது கருத்துகளை அடுத்த இடுகையில் இடுகிறேன். இந்த விமர்சனங்களைப் படிக்கும் நீங்களும் உங்கள் கருத்துகளை இங்கேயோ தனியாக உங்கள் விமர்சனங்களாகவோ எழுதித் தாருங்கள். நன்றிகள். வாழ்க வளமுடன்.

****

திரு ஜீவி ஐயா அவர்களின் விமர்சனம்:

அன்புள்ள குமரன்,

கதையை முடித்து விட்டீர்களே?.. நல்லதொரு முயற்சி நன்றாகவே அமைந்துவிட்டது. வாழ்த்துக்கள்.

சென்ற அத்தியாயதிற்கான பின்னூட்டத்தில் விமர்சனக்கட்டுரை ஒன்றை இந்தக் கதைக்கு எழுத வேண்டி நீங்கள் குறிப்பிட்டிருந்ததைப் படித்தேன்.

முதலில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும்.

நல்ல பல செய்திகளை ஒரு கதையின் மூலமாக வெளிப்படுத்த முயன்றிருக்கும் நண்பர் ஒருவருக்கு, அவரது செயல் நன்கு அமைய வேண்டி, கதைகள் எழுதுவதில் ஓரளவு பரிச்சயம் கொண்டிருந்ததினால், நம் பங்குக்கு நாமும் சில யோசனைகளைச் சொல்லலாம் என்கிற உரிமையில், கதை எழுதும் கலையில் உள்ள சில நெளிவு சுளிவுகளை உங்களுக்குத் தெரியப்படுத்தினேன்; அவ்வளவு தான். நான் உங்களுக்குத் தெரிவித்தது கதையின் உள்ளடக்கம் சம்பந்தப்படாத, வெறும் 'எழுத்து' சம்பந்தப்பட்டதும், அதைச் சொல்லும் முறை சம்பந்தப்பட்டதும் தான். அடுத்த அத்தியாயத்திலேயே நீங்கள் அவற்றைக் கைக்கொண்டதைப் பார்த்தேன். சென்ற அத்தியாயத்தில் என்னை மீறி,'அந்த' வரிகளை சிலாகித்து ஒரு பின்னூட்டம் போட நேரிட்டது. அவ்வளவு தான் இந்தத் தொடரில் என் பங்களிப்பு. ஒரு பெரும் முயற்சியில், ஒரு துளி பங்கேற்ற என்னை, விமரிசனம் எழுதக் கேட்டுக் கொண்டது, உங்கள் பெருந்தன்மையையே காட்டுகிறது. நீங்கள் கேட்டுக்கொண்டபடி இந்தக் கதைக்கு ஒரு விமரிசனம் எழுதப் புகின், இப்படிப்பட்ட சமாச்சாரங்களே எனது விமர்சனத்தில் அதிக இடத்தை அடைத்துக் கொள்ள நேரிடும். இருந்தும், இந்த கதை குறித்து ஆக்கபூர்வமான ஒரு விமரிசனம் தேவையா என்றால் நிச்சயம் தேவைதான். அடுத்த கதை எழுதுவதற்கு அது நிச்சயம் உங்களுக்கு உதவும் என்கிற அடிப்படையில் அது தேவைதான்.

தனது முதல் படைப்பைப் படைத்த ஒருவருக்கு, கறாரான விமரிசன பயமுறுத்தல்களைத் தவிர்த்து, ஊக்குவிக்கும் முறையில் சில பாராட்டுத் தட்டிக் கொடுத்தல்களே உடனடியான தேவை. அதுவும் நீங்கள் எடுத்துக் கொண்ட 'சப்ஜெக்ட்' மனம் போன போக்கில், நினைக்கும் எதையும் கற்பனையில் எழுதும் செய்தி இல்லை. சில ஆன்மீகச் செய்திகளைச் சுவைபடச் சொல்வதற்காக எடுத்துக் கொண்ட உருவம் கதையாக நேரிட்டதால், இயல்பாகவே அப்படிப்பட்ட கதைகள் எழுதுவதில் ஏற்படும் சில சங்கடங்களை நீங்களும் எதிர்கொள்ள நேரிட்டது. வெறும் விவரத் தொகுப்பாகப் போய்விடாமல், படிப்பவர்க்கு சலிப்பேற்படாமல் சொல்ல வேண்டிய அதிகபட்ச ஜாக்கிரதை உணர்வும் கொள்ள வேண்டியிருந்தது. இப்படிப்பட்ட சில இக்கட்டுகள் இருந்தும், நீங்கள் வெற்றியடைந்திருக்கிறீர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

திருவெம்பாவை பாடல்கள், கண்ணன் தூது, அருள்மிகு பழனியாண்டவர் -போகர் சமாச்சாரங்கள்,அருள்மிகு பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு- புள்ளரசன் பொற்காலன் வட்டமிடுதல், நரசிம்மதாசன்,ஜெயதேவர்,கிருஷ்ண சைதன்யர், நித்யானந்தர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டே வந்து ஜகன்மோகனில் நீங்கள் நின்று நிலைகொண்டபொழுது
கதை நன்கு களைகட்டி விட்டது. பின்பு கல்யாண காட்சியில் முடித்தும் சரிதான். பாக்கியை அடுத்துவரும் கதைகளில் வைத்துக் கொள்ளலாம் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

அதற்குள்--- வேறு என்னன்ன நகாசு வேலைகள் கதைகளில் செய்யலாம்,என்னன்ன உத்திகளை கைக்கொள்ளலாம், எங்கெங்கு நீட்டி- எங்கெங்கு குறைத்துக் கொள்ளலாம்,
எழுதுபவன், எங்கெங்கு அடக்கி வாசிக்க வேண்டும், எங்கெங்கு 'தான்' நுழைந்து கொண்டு படிப்பவனை தன்னுடன் கைபிடித்து அழைத்துச்செல்லலாம்--என்கிற சமாச்சாரங்களெல்லாம் உங்களுக்கு அத்துபடி ஆகியிருக்கும்.

கதைகளுக்கு, 'இவைல்லாம் எங்கு இவருக்குக் கிடைத்தன' என்று நாங்கள் மலைக்கும் அளவுக்கு நீங்கள் இட்டிருந்த படங்களைக் குறிப்பிடவில்லையெனில், பெரிய தவறு செய்தவனாவேன்.

கதையை நீங்கள் முடித்த பாங்கும் மிகுந்த நிறைவேற்படுத்தியது.

மேற்குறிப்பிட்டவையெல்லாம், கதையைப் படித்த, ஒரு கதைசொல்லியின் வெறும் குறிப்புகளாகத்தான் இருக்க முடியும்.

ஆனால், நம்மிடையே சீனா சார் போன்ற 'ரசனை' வரம் பெற்ற அருமையான் ரசனையாளர்கள் இருக்கிறார்கள். ஒரு எழுத்தாளனது எழுத்துக்கு 'போஷாக்கு' ஊட்டுவது, இன்னும் இன்னும் எழுதத்தூண்டுவது அப்படிப்பட்ட அப்பழுக்கற்ற ரசனையாளர்களின் ரசிப்பு தான்.

அவர் எழுதப் போவதை நாமெல்லாம் சேர்ந்து படிப்போம்.

குமரன், வாழ்க..வளர்க!

நிறைய எழுதுங்கள்..படிக்கக் காத்திருக்கிறோம்.

***

திரு. யோகன் ஐயா அவர்களின் விமர்சனம்:

புல்லாகிப் பூண்டாகி...குமரன் தொடராக எழுதி; நானும் வாசித்தேன்.

அவருக்குள்ள புராண;இதிகாச அறிவுடன் ஆத்மீகத் தேடலின் பிரதிபலிப்பே இக்கதையின் உள்ளீடு. புராண ;இதிகாசத்தில் ஆர்வமிருந்தாலும் ; போதிய ஞானமற்ற எனக்கு இவை புதிய செய்திகளாக ஆர்வமூட்டுவதாக இருந்தது. ஆத்மீகத்தில் நம்பிக்கை முக்கியபங்கு...." உண்ணும் சோறும்; தின்னும் வெற்றிலையும்" அவனே என நம்புபவர்கள் ஆத்மீக வாதிகள்.

குமரனை ஒருவருடமாக எழுத்தில் தெரியும்; அவர் மிகுந்த நம்பிக்கை மிக்கவர்.
அதனால் அனுமானிச சக்தி என ஆத்மீகத் துறையில் உள்ளோர் கூறும்; நடைமுறைச் சம்பவக் கோர்வைகள்; இறைநம்பிக்கையுடன் கைகோர்த்து இவர் எழுத்தில் சென்றது.
இவற்றை அதிகம் நான் நம்பாவிடிலும்...(என் இறை நம்பிக்கையை-கோவிலைத் தேடி நான் போகாமல் குமரா உனை நான் கும்பிட வழி தா!)..மற்றவர் கூறுவதைக் கேட்கப் பிரியப்படுவேன். அந்த வகையில் இக்கதையில் சில வேளை இவை ;எழுதுபவர் சொந்த அனுபவமோ எனும் ஆவலைத் தூண்டும் படி இருந்ததால் வாசித்து முடித்தேன்.

ஒரு இடத்தில் மலைகள் பற்றிக் குறிப்பிடும் போது; மலைகள் எரிமலையிலிருந்து தோன்றியவை...என்று கூறுகிறார். அதை வாசித்த போது ;நான் அறிந்ததற்கு எதிர் மாறாக இருக்கிறதே இவர் கூற்று என நினைக்க அடுத்த வரிகளில்....எல்லா மலைகளும் எரிமலையில் தோன்றவில்லை. இமயமலை அப்படி தோன்றவில்லை என விஞ்ஞான பூர்வ உண்மையையும் கூறிச் சென்றார். அவர் பல பக்க வாசிப்பின் பிரதிபலிப்பு இது.

அடுத்து கழுகு பற்றி...கூறும் போது....கோவில் கோபுரத்தை வட்டமிடும் நிகழ்வு...இதே போல் தென் அமெரிக்க பழங்குடி; அவுஸ்ரேலியப் பழங்குடி மக்கள் கூட கழுகு ;வட்ட மிடுவதை நற்சகுனமாகக் கொள்ளுவதை படித்துள்ளதால்; இவர் கூற்றைத் தள்ள முடியவில்லை.

கடம்பமரம் பற்றிய பகுதி...நமது ஆத்மீக வாதிகள் எவ்வளவு தொலைநோக்குடன் இந்த மரங்களைப் பாதுகாக்க வேண்டியது பற்றியது பற்றி சிந்தித்துள்ளார்கள் என்பது; பல மரங்கள் தல விருட்சமாக நிர்ணயித்ததில் புலப்படுகிறது. இப்போதும் பல முதியவர்கள் வேம்பு,அரசு மரத்தை அம்மையாகவும் ஈசனாகவும் போற்றுகிறார்கள்.இந்த நம்பிக்கை குறைவு இன்று சுற்று சூழல் மாசாக மாறி நம்மை வதைப்பதையும் நோக்கவேண்டியுள்ளது.

இப்படி காலம் காலமாக ஆத்மீகத்துக்குள்ள ஐயம் கலந்த செய்திகள்; இக்கதையில் இழையோடிய போதும்....ஏன்??? இருக்கக் கூடாது.என்ற எண்ணமும் தலை தூக்கியது.
இதுதான் அவர் எழுத்தின் வெற்றி எனக் கொள்கிறேன்.

கந்தனும்;கேசவனும் உரையாடல் பகுதிகள்...இன்றைய கணனி இளைஞர்கள் இப்படியும் உரையாடுவார்களா?? என ஐயுற வைத்த போதும்...
குமரன்; ராகவன்; ரவிசங்கர் கண்ணபிரான் கூட கணனியுள் தானே காலம் கழிக்கிறார்கள் என்பது என் அந்த ஐயத்தைத் தீர வைத்தது.இன்றைய இளைஞர் சமுதாயத்தின் அங்கத்தவர்கள் இவர்களுமே...

இதைத் தொடராகப் படித்த போது..எனக்கு அப்பப்போ கல்கி;கலைமகள் தீபாவளி மலர் ஞாபகம் வந்தது. அவற்றில் தான் இப்படிக் ஓவியங்களும்;நிழல்படங்களும் கூடிய தெய்வீகக் கதைகள்,திவ்ய தேசக் கதைகள் படிக்கக் கிடைக்கும்.

மிகப் பொருத்தமான படங்கள்;ஓவியங்கள்...இதை வாசிக்கும் போது, மேலதிக செய்திகளைத் தந்தது.கடம்பப்பூ முதல் முதல் குமரன் மூலமே படத்திலாவது பார்த்தேன். நல்ல பொருத்தமான பாடல் தேர்வுகளுடன் ஒரு திருக்கோவில் நாமும் சுற்றி வந்ததுபோல் இருந்தது.

இக்கதை எனக்குப் பிடித்தது போல்; பலருக்குப் பிடித்துள்ளதைப் பின்னூட்டங்கள் வாயிலாக தெரிகிறது.

இவ்வளவு விடயங்களையும் தொகுத்து, யாத்திரையில் கண்ட காட்சியுடன் இணைத்து கதையாக்கிய விதம்; இந்த கதைகூறும் யுக்தி பாராட்டுக்குரியதே...

***

திரு. ஜீவா அவர்களின் விமர்சனம்:

புல்லாகி பூண்டாகி - நிறைவுற்று விட்டது இந்தத்தொடர்.
நிறைவுறாமல் இருப்பது நம்மவர் கந்தனின் பிறவிச்சுழல்.
அச்சுழலில் சிக்குண்டு புல்லாகி பூண்டாகி மானிடப்பிறப்புமாகி
முன்னால் நடந்ததை சொல்லக்கேட்ட கந்தனுமாகி
அவற்றையெல்லாம் கூடலில் படிக்கக்கிடைத்த வாசகனுமாகி
தொடர் தனை இன்னும் ஒருமுறை திரும்பிப் பார்க்கிறேன்.

தன்னை எப்போதும் பார்ப்பவன் யாரென திரும்பிப்
பார்ப்பவர்களின் அருகாமையில் சும்மா இருப்பதே சுகம்
என்றாலும், கந்தனுக்கு அண்ணாமலையாரின் தரிசனமும்,
முற்பிறவியெல்லாம் கனவில் அந்தக் குன்றிலிட்ட ஜோதிபோல
தெள்ளத்தெளிவாக தெரிந்ததற்கு காரணம் என்ன?
சத்சங்கம். ஆம் - சத்சங்கம் - தாத்தாவின் ஆசியுடன்
கேசவனும், குமரனும், மணிகண்டனும் இணைய -
இணைந்து நீந்திக் கடந்திட -
இன்னமும் இருக்குது மிச்சம் - பிறவிச் சாகரம்.

தினம் தினம் வாழ்க்கைச் சிக்கல்களின் அல்லல்களில்
இருந்து விடுதலை பெற்றாலே போதும் என்று
காலம்தனை பிறவி பிறவியாய் கழித்தொழிக்க,
தெரியாமலே போயிருக்கக் கூடும் - நல்லவேளை,
கேசவனும், தாத்தாவும் கந்தனுக்கு கிடைத்தார்கள்.
கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வானா
தெரியவில்லை. இல்லை தன்னை மறுபடியும்
கருவடையும் குழியில் தள்ளி
வருத்தப்படப் போகிறானா தெரியவில்லை.
அல்லல் எனும் மாசறுத்தாட்கொளும் தெய்வமும்
அருகிலேயே இருக்கிறானாமே, பார்க்கலாம் நம்முள்ளே!

***

புல்லாகி பூண்டாகி - காலத்தின் (கோவி.கண்ணனின்) கடைக்கண் பார்வை:

நான் பொதுவாக பக்தி ரசம் சொட்டச் சொட்ட எழுதப்படும் தற்கால கதைகளை அதிகம் படிப்பதில்லை. காரணம் அவற்றில் பல முழுக்க முழுக்க விளம்பர உத்தியில் எழுதப்பட்டிருக்கும், அதுபோல் நூல்கள் தற்பொழுது மிகக் குறைவுதான். இப்படியெல்லாம் நடக்குமா ? என்று கேள்வி எழுப்புபவர்களுக்கு பயந்தே அத்தகைய நூல்கள் அதிகம் வருவதில்லை. கவியரசர் கண்ணதாசன் இன்னும் உயிரோடு இருந்திருந்தால் அர்த்தமுள்ள இந்துமதம் இன்னும் 50 பாகங்களாவது கிடைத்து இருக்கும். தற்பொழுதும் கூட சாமியார் மகிமைகள் குறித்து பக்தர்கள், அடியார்கள் அவர்களிடம் பயன்பெற்ற அனுபவம் என புல்லரிப்பாக எழுதப்பட்டு கடைவிரிக்கும் கதைகள் ஓரளவு குறைந்த விலைக்குக் கிடைக்கிறது. தான் பெற்ற அனுபவம் பிறர் பெற வேண்டுமென்பதற்காகவும், ஒரு பக்தனாக சாமியாருக்கு அதிகம் அடியார்களைப் பெற்றுத் தரவேண்டும் என்ற நல்லெண்ண அடிப்படையில் அவை எழுதப்பட்டிருக்கும். அந்த நேரத்தில் அந்த காக்கையின் கால் சரியாக பனம் பழம் மேல் பட்டு இருக்கிறது என்பதாகத்தான் எனக்கு புரியும். கோ - இன்சிடெண்ட் நடப்பதும் சில சமயம் வியப்புதானே. அதை புரிந்துக்கொள்வதில் பக்தியாளர்கள் உணர்சி வசப்பட்டுவிடுகிறார்கள் என்றே நினைப்பேஎன்

நம்பிக்கை என்ற பெயரில் நம்புவர்களை கடவுள் கைவிடுவதில்லை என்பது போல் தான் ஏறக்குறைய எல்லா நம்பிக்கை சார் கதைகளுமே இருக்கிறது. இல்லை என்றால் கொஞ்சம் பயமுறுத்தல் அதாவது 100 பிட் நோட்டீஸ் அடித்து பலருக்கும் அனுப்பவில்லை என்றால் உன் வீட்டில் துக்கம் நடக்கும், நடந்தது என்ற ரீதியில் எழுதி இருப்பார்கள். 24 x 7 ஆண்டவனுக்கு இவர்களை கண்காணித்துக் கொண்டே நல்லது செய்வதுதான் தொழில் என்றும், தன்னை தூற்றுபவர்களுக்கு தண்டனைத் தருபவராகவும் தான் இறைவனின் திருவுளம் இருக்கிறது என்ற ரீதியில் நம்பிக்கையாளர்கள் புரிந்து வைத்திருக்கின்றனர். இதுபோல் இறைசக்தியை திரித்து கூறுவது தவறு என்றெல்லாம் அவர்கள் புரிந்து கொள்வதே இல்லை. பக்தியின் பெயரால் எதைச் செய்தாலும் புனிதம் தான். இதனாலேயே பக்திசார் கதைகள், அனுபவங்கள் இதையெல்லாம் செவிமடுப்பதோ, கண்ணிடுவதோ இல்லை.

நண்பர் குமரன் 'புல்லாகி பூண்டாகி' என்ற தொடர் எழுதிவருவதாகவும் படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் என்று முதல் அத்யாயம் முடிந்ததும் மின் அஞ்சல் வழி தகவல் அனுப்பினார். 'நான் இதுபோன்ற கதைகளை படிப்பதில்லை, அப்படி படித்தாலும் நான் செய்யும் விமர்சனம் உங்களை புண்படுத்துவதாக அமையும்', என்று சொன்னேன். பதிலுக்கு 'பரவாயில்லை. நீங்கள் சொல்வதும் சரிதான் உங்களுக்கு கிண்டுவதற்காக சிலவிசயங்கள் இருக்கும், முடிந்தால் கருத்து கூறுங்கள் வற்புறுத்தவில்லை' என்றார். ஒருவாரம் சென்று என்ன தான் எழுதி இருக்கிறார் என்று முதல் அத்யாயத்தை திறந்து பார்த்தேன். அண்ணாமலையாரின் கோவில் படம், நான் சிறுவயதில் அப்பா அம்மாவுடன் சென்றதாக நினைவு, தொடர்ந்து படித்தேன். மேல் பூச்சு இல்லாமல் இயல்பான எழுத்து நடையில் எழுதி இருந்தார். கற்பனை என்று சொல்ல முடியாத அளவுக்கு நேரடியாக அவர்காட்டிய இடங்களுக்கெல்லாம் சென்று வருவது போன்று படிக்கும் போது உணர்வூட்டியது.

அவர் அங்கெல்லாம் சென்ற போது, பின்னாளில் எழுதவேண்டும் என்று அப்போது நினைத்தாரா தெரியவில்லை. நேற்று சென்று வந்த இடம் போல் மிகத் தெளிவாக, கோவில் அமைப்பு, அதில் உள்ள தெய்வங்கள், அதற்கான சிறப்புக்கள்,வழிபாடுகள் மற்றும் திருவண்ணாமலையில் மலை வலம் ஆகியவற்றை மிகச் சிறப்பாக எழுதி இருந்தார். சொந்த கற்பனையில் எழுத்துக்கள் மட்டும் இருந்தது அதில் கூறப்பட்ட கதைகள் எல்லாம் தொடர்ந்து கூறப்பட்டு வருபவை என்பதால் இவராக எதையும் இடைச் சொருக வில்லை என்பது புரிந்தது.

வைணவராக இருப்பவர் ஒரு சிவ தலத்தைப் பற்றி சிறப்பாக எழுதுவது பாராட்டத்தக்கது, கூடவே எங்கெல்லாம் கண்ணன் புகழ் பாடமுடியுமோ அதையெல்லாம் சரியாக கையாண்டு இருக்கிறார் :). போகர், நவபாஷன பழனியாண்டவர் சிலை, பழனி மலை, இராமகிருஷ்ணர், தக்ஷிணேஷ்வரம், சாரதா தேவி, காளி மாதா, கருடன் கதை , மகாபாரததில் சில பகுதிகள், அருணகிரி நாதர் என்று சிறு சிறு கதைகளை சேர்ந்திருக்கிறார். இவருடைய தொடரில் பொருத்தமான படங்களை அங்கங்கே சேர்த்திருப்பது தொடருக்கு கூடுதல் சிறப்பு. ஸ்லோகங்களை தேவையான இடத்தில் இட்டு அதற்கான பொருளுரையும் எழுதி இருப்பதால் கதையோடு சேர்த்து படிக்கும் போது, ஸ்லோகங்களும் கவனம் பெறுகிறது.

முதல் முயற்சி என்பதாக தெரியவில்லை, வளமான கற்பனையும், அனுபவத்தை அதில் சேர்த்து எழுதுவது என்பதை சிறப்பாக செய்திருக்கிறார். கதையின் மையப்புள்ளி, மறுபிறவி பற்றிய சிந்தனைகள், அதன் தொடர்புடைய நிகழ்வுகள் ஆகியவற்றில் மாற்றுக் கருத்து இருந்தாலும் அதை விமர்சனம் செய்யவதற்கு ஒன்றும் இல்லை. ஏனென்றால இதுபோன்ற மறுபிறவி கற்பனைகள் பலர் கொண்டிருப்பதால் அதை விமர்சனம் செய்வது, விவாதிப்பது வீண் என்றே நினைக்கிறேன். மற்ற விமர்சனங்களை அவருடைய பதிவில் பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

எந்த நம்பிக்கையும் ஆழமாக இருந்தால், அதன் தொடர்பில் எழுதும் போது எழு(த்)தும், கருத்தும் இயல்பாக வெளிப்படும், அது இவரது தொடரில் நிறையவே இருக்கிறது. அடுத்த தொடராக 'ஊனாகி உயிராகி' விரைவில் எழுத வாழ்த்துகள். :)

அன்புடன்,

கோவி.கண்ணன்

****

புல்லாகி பூண்டாகி - வெட்டிப்பயலின் எண்ணங்கள்:

புல்லாகி பூண்டாகி - நான் ரொம்ப நாளைக்கப்பறம் படிக்கிற ஆன்மீக புனைவு!. இது இந்த கதைக்கான விமர்சனமல்ல. என் எண்ணங்கள். அவ்வளவே!!!

புல்லாகி, பூடாய், புழுவாய், மரமாகி
பல்விருகம் ஆகி, பறவையாய், பாம்பாகி,
கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்
வல் அசுரர் ஆகி, முனிவராய் தேவராய்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்


என்ற மாணிக்கவாசகரின் பாடல் தான் கதையின் கரு.

கலியுகத்தில் திருவண்ணாமலையில் தொடங்கும் கதை நம்மை துவபரயுகத்து கண்ணனிடம் அழைத்து சென்று, அங்கிருந்து பழனி மலையில் குமரனின் நவபாஷான சிலை உருவாவதை அருகிலிருந்து பார்க்கும் பேற்றை கொடுத்து, பெரிய கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைத்து சென்று பிறகு கிருஷ்ண பஜனில் பங்கெடுக்க வைத்து அங்கிருந்து பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரை தரிசிக்கும் பேற்றை கொடுத்து மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே கொண்டு வந்துவிடுகிறது.

புல்லாகி பூண்டாகி என்ற தலைப்பே கதையை ஓரளவு விளக்கிவிடுகிறது.

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றானதும் மலையே இறைவனின் திருமேனி என்று புகழ்பெற்றதுமான திருவண்ணாமலையின் சிறப்புகளை சொல்லி ஆரம்பிக்கிறது கதை.

பொதுவா எனக்கு கோவிலுக்கு போனா அவசரம் கூடாது. பொறுமையா நிதானமா பார்த்துட்டு வரணும். பத்து கோவிலுக்கு வேக வேகமாக செல்வதைவிட ஒரு கோவிலில் அமைதியாக சாமி கும்பிடலாம்னு நினைக்கிற ஆள். இந்த கதையை ஆரம்பிச்சப்ப எனக்கு அது தான் பிரச்சனை, வேகமா ப்ளைட் பிடிக்க போற மாதிரி கோவிலை விட்டு வந்த மாதிரி இருக்கு.

தல வரலாறு (தலயோட வரலாறு படம் இல்லைங்க) கதையா மாறிடுமோனு ஒரு பயத்துல கூட இதை செஞ்ச மாதிரி தெரிஞ்சிது. ஆனா இந்த மாதிரி கதைகள்ல வாசகர்களுக்கு ஆயிரம் கதை கேட்டாலும் அலுக்காது என்றே தோன்றுகிறது. கோவிலை இன்னும் பொறுமையாக சுற்றி காண்பித்திருக்கலாம். ப்ளாஷ் பேக் போகற வரைக்கும் ஒரு பதட்டம் தெரிஞ்சது. ஆனா ஃப்ளாஷ் பேக்ல அந்த பதட்டம் போய் நிதானம் வந்து அருமையாக பயணிக்க தொடங்கியது. அதை எப்படி இணைக்க போகிறார் என்று தெரிந்திருந்தாலும் எப்பொழுது இணைக்க போகிறார் என்ற ஒரு தவிப்புமிருந்தது உண்மையே (இன்னும் எத்தனை பிறவியப்பானு) .

கதை ஒரு விதத்துல பக்தி மார்க்கத்திற்கு முக்கியத்துவம் தருவதாக இருக்கிறது. எனக்கும் அது தான் பிடிச்சதுங்கறதால ஒட்டுதல் ஏற்பட்டுச்சு. அதே சமயம் ராம கிருஷ்ணரோட அருளுரை கேட்கலாம்னு ஆவலோட இருந்த எனக்கு அது கிடைக்காதது ஒரு விதத்துல ஏமாற்றமே :-( (ஆனா அவரை அருகிலிருந்து பார்க்கும் வண்ணம் எழுதியதற்கு என் பாராட்டுக்கள்)

என் மனதில் எழுந்த பல கேள்விகளில் முக்கியமானவற்றை கந்தன் அந்த தத்தாவிடம் கேட்டதும் ஒரு விதத்தில் என்னை திருப்தி படுத்தியது. அதில் முக்கியமானவை
"பாகவதத்தைச் சுகர் வாயாலேயே கேட்ட எனக்கு ஏன் தாத்தா அப்பவே முக்தி கிடைக்கலை?",

"தாத்தா. வந்த கனவு எல்லாம் இந்தியாவுல தான் நடந்ததா இருக்கு. இதெல்லாம் நான் படிச்ச கதைங்களை என் மனசு கனவுங்களா ஏன் காமிச்சிருக்கக் கூடாது? இதெல்லாம் என்னோட முந்தையப் பிறவிங்கன்னா நான் வெளிநாட்டுல பொறக்கவே இல்லையா?"

"அப்ப ஏன் அதெல்லாம் என் கனவுல வரலை?"

"உனக்கு இந்தப் பிறவியில எது புரியுமோ அது மட்டும் தான் வந்திருக்கு. சவுத் அமெரிக்கா பிறவியும் கொஞ்சம் கனவுல வந்தது. ஆனா உனக்கு நினைவில்லை. ஏன்னா அது உனக்குப் புரியலை"


கதையை முடித்த விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதே போல் அவர் தேர்வு செய்த படங்களும் அருமை.

குமரன், அடுத்த கதைக்கு கதையோட ஓட்டத்தை ஒரு முறைக்கு இரு முறை யோசித்து ஆரம்பித்தால் கதை பட்டையை கிளப்பும் என்பது என் எண்ணம் (ஃப்ளாஷ் பேக்கும், நிகழ் காலமும் ஒன்றாக கொண்டு சென்று ஒரு புள்ளியில் இணைத்திருக்கலாம் என்பது என் எண்ணம்)... சரி சீக்கிரமே நெக்ஸ்ட் கதைல மீட் பண்ணலாம் ;)

4 comments:

  1. குமரன் உங்க கதைய எல்லாரும் விரும்பிப் படிச்சிருக்காங்கன்னு தெரியுது. நீங்க எழுதுன மொதக் கதை. அதைப் பத்தி இவ்ளோ சொல்றாங்கன்னா... கதைல ஏதோ இருக்குன்னுதானே பொருள். அதுவுமில்லாம பதிவுலகப் பெரிவங்க எல்லாருமே விமர்சனம் செய்திருக்காங்க. என்னுடைய பாராட்டுகள். அடுத்த கதை எப்போ?

    ReplyDelete
  2. இராகவன்.

    பலருக்கும் இந்தக் கதை பிடித்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி. உங்களுக்கும் பிடித்திருந்தது என்று நம்புகிறேன். :-)

    முதல் தொடர்கதை தான். நான் கோதையின் கதை, விட்டுசித்தர் கதை என்று சில முயற்சிகளை முன்பும் செய்திருக்கிறேன். அதனால் முழுக்க முழுக்க முதல் முயற்சி என்று இதனைச் சொல்ல இயலாது என்று நினைக்கிறேன்.

    பாராட்டுகளுக்கு நன்றி. அடுத்த கதை எப்ப தோணுதோ அப்போ. :-)

    ReplyDelete
  3. Kumaran,
    by chance i have visited your blog and chosen your புல்லாகிப் பூண்டாகி story and completed in one go.Its superb, wish to see more from you,best wishes.
    when is your next one.

    ReplyDelete
  4. Thanks for the kind words Rangaraj. Please read through the other articles in this blog. It may be of interest for you.

    ReplyDelete